பாண்டவப் படைமுகப்பில், எங்கிருந்தோ என ஒழுகிவந்து தழுவிக் கடந்துசென்ற காலைக்குளிர்காற்றில் கொடிகள் மட்டுமே படபடக்கும் ஓசை நிறைந்திருந்த வெளிக்குக் கீழ் மணியொலிகள் எழாத தேர்நிரையின் முகப்பில் அர்ஜுனனின் தேர் நின்றிருந்தது. இளைய யாதவர் கடிவாளங்களை தளரப்பற்றி, தலையில் சூடிய பீலி மெல்ல நலுங்க, வண்ணம் கொள்ளாத மஞ்சள் ஆடையுடன் அமர்ந்திருந்தார். அர்ஜுனன் காண்டீபத்தை தோழன் என அருகே நிறுத்தி தொடையில் கைவைத்து எதிர்த்திசை நோக்கி விழி நாட்டி காத்து நின்றிருந்தான்.
கருக்கிருட்டோ என ஐயம் எழும் அளவிற்கு வானும் மண்ணும் இருள் மூடியிருந்தன. மிக அப்பால் குருக்ஷேத்ரத்தின் குறுங்காடுகளில் இருந்து பறவைகளின் ஒலிகள் செவி கூர்ந்தால் மட்டும் மெல்லிய ஒலித்தீற்றல்களாக கேட்கும் அளவுக்கு எழுந்துகொண்டிருந்தன. அச்சில நாட்களுக்குள் பறவைகள் மானுடர் பெருகிச் செறிந்திருந்த அவ்வெளியை முற்றிலும் ஒழிந்து அப்பால் செல்ல பயின்றுவிட்டிருந்தன. மாறாக ஒவ்வொரு நாளும் அந்தியில் முற்றிலும் புதிய பறவைகள் வேறெங்கிருந்தோ வந்து குருக்ஷேத்ரத்தில் இறங்கின. போர்முடிவதற்காக அவை காத்திருப்பதுபோல் தோன்றின. முதல்நாள் போர் முடிந்தபின்னர் ஓரிரு பறவைகள் வந்தன. பின்னர் நாள்தோறும் அவை பெருகின. அவற்றை முன்னர் கண்டதே இல்லை என்றனர் கணியர்.
இருளுக்குள் இருந்து அம்புகள் என வந்திறங்கியபோது அம்புகளை எண்ணி எச்சரிக்கையை பயின்றிருந்த படைவீரர்களின் உடல்கள் நடுங்கி ஒழிந்தன. அவை மானுடரை பொருட்டெனக் கருதவில்லை. அவர்களின் தூக்கிய வேல்முனைக்கூர்களில் கூட அமர்ந்து எழுந்தன. கால்கள் நடுவே மண்ணிலிறங்கின. அவற்றின் கண்கள் வஞ்சம்கொண்ட மலைத்தெய்வங்கள்போல சிவந்து அனல்கொண்டிருந்தன. கூரிய சிறு அலகுகளில் இருந்து மெல்லிய குரலில் ஒரு சொல் எழுந்துகொண்டே இருந்தது. பின்னர் ஒரு வீரன் கனவில் அச்சொல்லை கேட்டான். அவை “ரக்தஹ!” என சொல்லிக்கொண்டிருந்தன.
குருதியின் அன்னையான மகாரக்தையின் படைத்திரள்கள் அவை என்றனர் சூதர். எட்டு தலைகளும் பதினாறு கைகளும் கொண்டவள். எட்டு வாய்களிலிருந்தும் நீள்நாக்குகள் எழுந்தவள். முப்புரிவேலும், உடுக்கையும், வாளும், கேடயமும், பாசமும், அங்குசமும், மண்டைக்கொப்பரையும், மின்படையும், வில்லும், அம்பும், உழலைத்தடியும், படையாழியும், கதையும், சங்கும், மானும், மழுவும் கொண்ட கைகள் விரித்து அனல்விழிகள் துறித்து வருபவள். செந்நிற அலைபோல் ஆடைகள் உலைய குருதிவிடாய்கொண்ட ஓநாய் மேல் ஊர்பவள். போர்க்களங்களில் எழுபவள். நீரே அனலென்று ஆனவள். அனல் நீரென ஒழுகுபவள். விண்ணவர்க்கு இனிய கொழுங்குருதிப் பலிகளை கொண்டுசெல்பவள். மண்ணுக்கு அடியில் வாழும் தெய்வங்களுக்கு நிணமொழுகு உடல்களை அளிப்பவள்.
தசைப்பரப்பென்றாகி பல்லாயிரம் கோடி நுண்ணுயிரிகளை பிறப்பித்த குருக்ஷேத்ர மண்ணில் இறங்கி அச்சிறுபறவைகள் நுண்சொற்களில் பேசியபடி கொண்டை சிலுப்பி வால் பிரித்தடுக்கி சிறுகால்களால் நடந்து சட்டென்று எழுந்தமைந்து ஓயாது கொத்திப்பொறுக்கி உண்டு உடல்பெருக்கின. இருளில் சிறகடித்து சென்று மறைந்தன. அவற்றின் மூதாதையர் முன்பு அங்கு அவ்வண்ணம் வந்து குருதியில் உயிர்கொண்ட நுண்ணுயிர்த் திரளை உண்டு மீண்டதாக அவற்றின் நினைவுகள் கூறின. தங்கள் தலைமுறைச் சங்கிலியில் பிறிதொரு காலத்தில் அங்கு மீண்டும் வருவதற்காக அவை அந்நினைவை சேர்த்து புதைத்து வைத்துக்கொண்டன.
பேரழகு என்னும் சொல்லை மீண்டும் மீண்டும் தன் உள்ளம் சொல்லிக்கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். நேற்று முதல் அச்சொல் நாவிலும் சித்தத்திலும் இருந்தது. அதே சொல் யுதிஷ்டிரனை இரவெல்லாம் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. பாண்டவ ஐவரும் நேற்று இரவு துயில்கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை பீமன் துயின்றிருக்கலாம். இவையனைத்துக்கும் அப்பாலிருப்பவர் அவர். இந்தக் கொந்தளிப்புக்கு என்ன பொருள்? கடல்மேல் எழுந்த நிலவென எங்கள் சித்தம்மீது தோன்றியது என்ன?
மிகத் தொலைவில் ஒரு பறவையின் சிறகடிப்பை அவன் கண்டான். பின்னர் அது ஒரு கொடி என தெளிந்தான். யானைச்சங்கிலி பொறிக்கப்பட்ட அங்கநாட்டுக் கொடி. அது அணுகி வரும் வழியெங்கும் கௌரவப் படைகள் அலைகொண்டு பிரிந்தன. வாழ்த்தொலிகள் ஊமைமுழக்கம் என கேட்டன. பந்தங்களின் ஒளி அத்தனை உயரத்துக்கு சென்றுசேரவில்லை. எனில் எப்படி அதை அவன் காண்கிறான்? அத்தனை தொலைவிலும் அந்தத் தேரை எவ்வண்ணம் அறிகிறது விழி? அவன் நெடுங்காலமாக அங்கு நின்று அதை நோக்கிக்கொண்டிருப்பதுபோல் உணர்ந்தான்.
புதர்களிடையே இருந்து வேங்கை மெல்ல மெல்ல காலெடுத்துவைத்து அணுகுவதுபோல ஓசையின்றி அது வந்தது. காட்டில் இருட்டுக்குள் புலியைப் பார்த்தபின் அதன் பொன்வண்ணமும் தெளியத் தொடங்குவதுபோல. புலியின் விழிகள் என அவனும் தேர்ப்பாகனும் தெரிந்தார்கள். அவன் பொற்கவசம் அணிந்திருந்தான். சற்றே திரும்பியபோது கவசம் அனலென எரிந்தது. இரு விண்மீன்கள் என காதில் குண்டலங்கள் மின்னின. அர்ஜுனன் நோக்கிக்கொண்டே நின்றான். சூதர்கள் பாடும் கவசமும் குண்டலங்களும்தானா அவை? சூரியனால் தன் மைந்தனுக்கு அளிக்கப்பட்டவை. மானுடரின் அம்புகள் அக்கவசத்தை அணுகமுடியாது. மானுட வாள் அவன் கழுத்தை நெருங்காது. அது மெய்தான் போலும். சூரியன் அளித்த கவசமும் குண்டலமும்தான் அது. இல்லையேல் அந்தக் கருக்கிருளில் அவற்றுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது ஒளி?
கர்ணனை வாழ்த்தி எழும் குரல்கள் பெருகிக்கொண்டே இருந்தன. அவன் தேர் வந்து படைமுகப்பில் நின்றது. அதைச் சூழ்ந்து விருஷசேனனும் திவிபதனும் சத்ருஞ்சயனும் பிரசேனனும் சுஷேணனும் சுதமனும் தேர்களில் அரைவட்டமென அணிவகுத்தனர். அவர்களும் கர்ணனைப்போலவே அணிகளும் கவசங்களும் அணிந்து அவனே ஆடிப்பாவைகள் என பெருகியதுபோலத் தெரிந்தனர். அவர்கள் முகங்களின் உணர்வுகளும் ஒன்றுபோலவே இருந்தன.
கர்ணன் படைமுகப்பில் நின்று ஒருகணம் பாண்டவ விரிவை நோக்கினான். எவரையும் குறிப்பாக அவன் விழிகள் தொடவில்லை. பின்னர் அவன் இமைகள் மெல்ல சரிந்தன. ஊழ்கத்திலென அவன் அமர்ந்திருந்தான். போர்க்களத்தில் அப்போது புலரிமுரசுக்கென காத்துநின்றிருந்த அனைவரும் உடலை வெவ்வேறு நிலைகளில் தளர்த்தி நின்றனர். தோள்கள் குழைந்திருந்தன. ஒற்றைக்கால் மேலெழுந்திருந்தது. கைகள் தழைந்திருந்தன. அவன் மட்டும் ஆலயக்கருவறையின் சூரியன்சிலை என முற்றிலும் நிகர்நிலைகொண்ட உடலுடன் தேரில் நின்றிருந்தான்.
கர்ணனின் காலடிகளிலிருந்து அர்ஜுனனின் பார்வை மேலெழுந்தது. ஐந்து கால்விரல்களிலும் கணையாழிகள். அருமணிகள் பதித்த கழல்கள், முழங்கால் காப்புகள், தொடைச்செறிகள், தோள்வளைகள், கச்சை, சல்லடம், ஒன்றன்மேல் ஒன்றென அமைந்த ஆரங்கள். ஒளிகொண்ட கவசம், மாந்தளிர்நிறத் தோளிலைகள், புயவளைகள், முழங்கைக்காப்புகள், கங்கணங்கள், விரலாழிகள். ஒளிரும் செம்மணிக் குண்டலங்கள் அவன் முகத்தை இருசுடர்கள் என ஏந்தியிருந்தன. தலைக்கவசத்தில் எழுந்த செம்பருந்தின் இறகு தழலென நெளிந்தது. தழைப்பது தழல். அழகே அழல். அச்சொற்கள் ஒன்றின் வெவ்வேறு ஒலிகள்.
எத்தனை பேரழகு! இச்சொல்லை சொல்லிச் சொல்லி என் இவ்விரவு ஓய்ந்தது. இந்நாள் எழுகிறது. இத்தருணத்தில் இக்களத்தில் இவன் கையால் உயிர்விடுவேன் எனில் அதுவும் ஒரு பேறே. அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் திடுக்கிட்டான். தன்னில் ஒலித்ததா அது? அவ்வெண்ணம் தன்னுள் இருந்ததா என்ன? வெறுப்பினூடாக ஒருவனை வழிபடக்கூடுமா என்ன? தெய்வமென, ஆசிரியர் என, தோழர் என இத்தேர்முனையில் கடிவாளம்பற்றி அமர்ந்திருக்கும் இவரை பெருவிருப்பின் அடியில் ஒரு துளி வெறுப்பாக அறிந்திருக்கிறேன். வெறுப்பின் அலைகளுக்கடியில் கூர்கொண்டமைந்த அன்பென இவனிடம் நான் உணர்ந்தேனா என்ன?
இந்த முழுதுரு. என்றென்றும் என் கனவுவிழைவு என் மூத்தவரின் பெருந்தோள்களை அடைதல். அடைந்தெழுந்த நான் இவன். என் மூத்தவரின் அறம் திகழும் நெஞ்சு. என் இளையோரின் அன்பு நிறைந்த கைகள். விழிகளால் தொட்டுக்கொண்டே இருக்கிறேன். எண்ணங்களால் தழுவிக்கொண்டிருக்கிறேன். ஒருபோதும் அணுகித் தொட்டதில்லை. கர்ணனை எப்போதேனும் தொட்டிருக்கிறோமா என்று அர்ஜுனன் எண்ணிக்கொண்டான். ஒருமுறையும் தொட்டதில்லை என்று நினைவுக்கு வந்தது. ஒருமுறைகூடவா என்று திகைப்புடன் திரும்பிப் பார்த்தான். தொட்டதாகவும் தோன்றியது, இல்லை என உள்ளம் மறுத்தது.
முதல்முறையாக கர்ணனை எப்போது பார்த்தோம் என்று அவன் உள்ளம் துழாவியது. எப்போதுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவனையறியாமல் சித்தம் இருந்த கணமே இல்லை. மீண்டும் மீண்டும் அவன் தன் இளமை நினைவுகளை எடுத்து எடுத்து பார்த்தான். கைக்குழவியாக இருக்கையில் கர்ணன் உடனிருந்ததாகவே உள்ளம் கூறியது. பின்னர் சிறு அதிர்ச்சியுடன் அவன் உணர்ந்தான். தன்னை தான் ஆடியில் பார்த்ததையே கர்ணனை பார்த்தது என உள்ளம் பதிவு செய்து வைத்திருக்கிறது. அவன் உடலில் விந்தையானதோர் பரபரப்பு ஏற்பட்டது. நரம்புகளினூடாக இசை ஒன்று அதிர்ந்து செல்வதுபோல. பற்கள் கூசி விழி நீர் கசிந்தன. காண்டீபத்தை சற்றே தாழ்த்தி தலைகுனிந்து கண்களை மூடி திறந்தான்.
முதிரா இளமையில். அல்லது பிறிதெப்போதோ. எங்கு அவனை முதலில் பார்த்தேன்? படைக்கலப் பயிற்சிநிலையத்திற்கு கிருபர் முன் அவன் வந்து நின்றபோதா? பின்னர் துரோணரின் படைக்கலநிலையில் அவன் வந்தபோது பிறிதொருவனாக ஆகிவிட்டிருந்தான். அப்போது எரிச்சலுடனும் எழும் சினத்துடனும் எப்போதுமிருக்கும் ஆற்றாமையுடனும் அவன் கர்ணனை நினைத்துக்கொண்டிருந்தான்.
நெடுநாட்களுக்குப் பின்னரே அந்த உணர்வுகள் ஏன் என்று எண்ணி எண்ணி தெளிவடைந்தான். தன்னை பிறிதொரு வடிவில் பார்த்த திகைப்பு, மறுகணம் அது தானல்ல என்றுணர்ந்த அதிர்ச்சி. அதன் பின் தன்னைவிட ஆற்றலும் அழகும் கொண்ட தனது வடிவம் என்னும் ஆற்றாமை. அது அளித்த பதற்றம். அந்தச் சீற்றத்தை அவன் புரிந்துகொண்டதேயில்லை. ஏனென்றால் அதை நேருக்குநேர் நோக்கியதில்லை. பின்னர் அச்சீற்றமே என்றுமென நிலைகொண்டது. ஆனால் அதற்கப்பால் ஒன்றுள்ளது. அதற்கும் அப்பால். அத்தனை நுண்ணிய தேடலும் சென்றடையாத ஒன்று என்றால் அது இருண்டது, மிகமிக ஆழத்தில் உறைவது, ஒளியே படாதது. ஒளிபடாதவை அழுகிவிடுகின்றன. நாற்றம் கொள்கின்றன. நஞ்சாகின்றன. அங்கு வாழ்கின்றன இருளை ஆளும் தெய்வங்கள்.
கர்ணன் தன்னை நோக்கவேயில்லை என்று கண்டான். அது உளமயக்கு அல்ல, மெய்யாகவே முதற்கணத்திற்குப் பின் கர்ணன் அவனை நோக்கவில்லை. ஆனால் அவன் தன் அகவிழிகளால் கர்ணனின் தோளையும் நெஞ்சையும் தொடாத நாளொன்று இருந்ததில்லை. நேர்நோக்குகையில் வெறுமனே விழிமலைத்து அகன்று நின்றிருப்பான். ஆனால் ஒருமுறைகூட அருகணைந்ததில்லை. ஒரு சொல்கூட உரையாடியதில்லை. ஒருமுறை வெறுமனே அவன் உடலை தொட்டிருந்தால்கூட இவையனைத்தும் அன்றே முடிந்திருக்கும்.
எவர் சொல்வது அதை? எவரோ அருகே நின்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். மீளமீள, விந்தையான ஓர் வஞ்சத்துடன். விளையாட்டாக தீண்டியிருக்கலாம். நீர் விளையாடுகையில். அம்பு பயில்கையில். எங்கேனும் அவன் உடல் மெலிதாக என் மேல் பட்டிருந்தால் அக்கணமே திரும்பி அவன் காலடி நோக்கி சரிந்திருப்பேன். என்னை தன் கரங்களால் அள்ளி எடுத்து அவன் நெஞ்சோடு சேர்த்திருந்தால் அதன் பின் ஒருதுளியும் எஞ்சாமல் அவனடியில் விழுந்திருப்பேன். அர்ஜுனன் கூச்சமும் சினமும் கொண்டு அச்சொற்களை தன்னிடமிருந்து அகற்றுபவன்போல் தலையை அசைத்தான். நோக்கை விலக்கிக்கொண்டான்.
பின்னர் நெடுந்தொலைவிலிருந்து கேட்கும் குரல்போல பிறிதொன்று அவன் உள்ளில் எழுந்தது. அவனிலிருந்து என்னை விலக்கிக்கொள்வது எது? ஒருகணம்கூட, ஒரு சொல்கூட, அவனைப்பற்றி உயர்ந்ததென எதையும் இளைய யாதவர் சொன்னதில்லை. அவனுடைய பேரழகைப் பற்றி ஒருமுறை அவன் சொன்னபோது ‘ஆம் அழகன். அழகென்பது ஓர் உலகியல் நிகழ்வு. பொருட்களில் எழும் பொருள் கடந்த ஒன்றை பொருளென்றே நாம் மயங்குவதற்குப் பெயர் அழகு’ என்று கூறி அகன்றார். விலக்கும் இரு முனைகள். அம்முனையில் கர்ணன், இம்முனையில் யாதவர். நான் இவரை நோக்கி வந்தது அவன் மீது கொண்ட விலக்கத்தால்தான். அல்லது இவர்மேல்கொண்ட அணுக்கம் அவனை விலக்கியதா? ஐயமில்லை, அவனை நோக்கி சென்றிருந்தால் இவரை முற்றிழந்திருப்பேன்.
இது என்ன? இவ்வுலகு அவன். கடந்த ஒன்று இவர். இங்கு நான் அடைய விழைவன அனைத்தும் அங்கு அவ்வடிவில் உள்ளன. அந்த ஒவ்வொன்றையும் துறந்தாலொழிய இங்கு இவர் காலடியில் நான் அமர்ந்திருக்க முடியாது போலும். ஒரு உலுக்கலுடன் அவ்வெண்ணம் அவனில் எழுந்தது, என்னை நான் கொன்றாலொழிய எய்த முடியாத ஒன்று இவர் காலடியில் எனக்கு கிடைக்கவிருக்கிறது. என்னை நான் கொல்வது மிக எளிது. நூறு நூறு இடங்களில் என்னை நான் கடந்திருக்கிறேன். என்னில் நான் வெறுப்பனவற்றைத் திரட்டி படைக்கலம் செலுத்தி கொன்றிருக்கிறேன். இப்போது என்னில் நான் வெறுப்பன ஒரு துளிகூட இல்லையா? நான் என என்னுள் பெருகியவை மட்டுமேயான ஒருவன் என் முன் எழுந்து நின்றிருக்கையில் அவனுக்கு எதிராக என்னிடம் ஒரு படைக்கலம்கூட இல்லையா?
தன் ஆவநாழியை அவன் எண்ணிக்கொண்டான். அவன் உள்ளம் அதை துழாவித்துழாவிச் சலித்தது. ஓர் அம்புகூட அகப்படவில்லை. இவனை கொல்வதற்கான அம்பு என்று என்னில் எஞ்சுவதென்ன? வெறுப்பின் நச்சு தீட்டிய அம்புகளே மானுடரை கொல்ல முடியும். ஒவ்வாமையை, காழ்ப்பை, கசப்பை அம்புகளாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் பெருவிருப்பையேகூட வெறுப்பென மாற்றிக்கொள்ளலாம் என கற்பிக்கிறது இக்களம். இன்று என் நெஞ்சு அம்பென ஆகுமெனில் அது சென்று அக்காலடியில் பணியும். முன்பு முதல் அம்புகளை பீஷ்மருக்கும் துரோணருக்கும் எதிராக நான் செலுத்தியபோது என் பணிவு அனைத்தையும், என் அன்பு முழுமையையும் திரட்டி அவற்றில் அமைத்திருந்தேன். அவர்களின் காலடியில் அது சென்று தைத்த மறுகணமே அவற்றிலிருந்து விடுபட்டேன். என் ஆழத்தில் திரண்டிருந்த நச்சை பெருக்கி பேருருக் கொள்ளச்செய்து அவர்களின் நெஞ்சை பிளந்தேன்.
இவனுக்கெதிராக எழுவது எந்த அம்பு? இவன் என் குலமகளை அவைச்சிறுமை செய்கையில் உடனிருந்தான். இவன் சொல் கேட்டு எங்களை பதினான்காண்டுகாலம் காட்டில் உழல வைத்தான் துரியோதனன். இவன் அளித்த நம்பிக்கையால்தான் அஸ்தினபுரியின் உடன்பிறந்தான் இத்தனை பெரிய பூசலுக்கு வந்து நின்றான். எங்களை பதினான்காண்டுகள் மைந்தரையும் மகளிரையும் அரசையும் பிரிந்து அடர்கானகத்தில் அலையச்செய்தான். இங்கிருக்கும் அனைத்து அழிவுகளுக்கும் ஒருநிலையில் இவனே அடிப்படை. இவனில்லையெனில் இவையனைத்தும் இல்லை.
ஆனால் இச்சொற்கள் அனைத்தையும் இதற்கு முன்னரும் பலமுறை நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கசப்புடன், வெறுப்புடன். கசப்பும் வெறுப்பும் கொள்ளலாகாதென்று எச்சரிக்கைகொண்டு எண்ணுகையிலும் இச்சொற்களையே வந்தடைந்திருக்கிறேன். இவன் பாரதவர்ஷத்தை அழிக்கும் நஞ்சு. செவியில் அதை அறியாக் குரலின் சொல் என அர்ஜுனன் உணர்ந்தான். அதே சொற்களை இளைய யாதவரைப் பற்றியும் சொல்ல முடியும். இரு ஆணவங்கள் இருவரும். இந்தப் போரே இவர்கள் இருவரும் நிகழ்த்திக்கொள்வதுதானா?
தன்னை உந்தி அவ்வெண்ணத்தை அர்ஜுனன் ஒழிந்தான். ஆனால் எண்ணம் அங்கே சென்றுகொண்டே இருந்தது. இந்தப் போர் இவர்களில் எவர் ஒருகணம் எண்ணியிருந்தாலும் ஒழிந்திருக்கக் கூடியது. ஒருவன் தன் கொடையால், அளியால் இதை நோக்கி அனைவரையும் செலுத்தினான். பிறிதொருவன் தன் மெய்யறிதலால், கனவால் இதை நோக்கி அனைவரையும் இழுத்தான். அரியவைக்காகவே இத்தகைய பெரும்போர் நிகழமுடியும். இத்தனை பெரிய விலையை எளியவற்றுக்காக எவரும் அளிக்கமாட்டார்கள். எத்தனை உயிர்கள்! எவ்வளவு குருதி! விழிநீர்ப்பெருக்கு. வீழும் பேரரசுகள். அனைத்தும் தெய்வங்களும் உகக்கும் சிலவற்றுக்காகவே. எண்ணங்கள் வெறுமைநிறைந்த வெளியொன்றில் சென்று மறைய விந்தையானதோர் சொல்லின்மை அர்ஜுனனில் கூடியது.
இப்போரில் அனைவரும் நாற்களக் காய்களே என்னும் சொற்களுடன் அவன் மீண்டு வந்தான். அச்சொற்களை எவரேனும் ஒவ்வொருநாளும் சொல்வதுண்டு. அது அங்கிருந்த அனைவரிலும் திகழும் எண்ணம் என ஆகிவிட்டிருந்தது. அத்தனைமுறை சொல்லப்பட்ட சொற்கள் ஐயமற்றவையாக, மறுப்பற்றவையாக, வடமலைகளைப்போல பருவுருக்கொண்டவையாக ஆகிவிடுகின்றன. அச்சொற்களை பற்றிக்கொண்டு மீள முடிந்தது. அச்சொற்களைச் சூடி மறுநாள் எழ முடிந்தது. அச்சொற்களுடன் விண் சென்றால் அங்கே மூதாதையரை நேர்விழிகொண்டு நோக்கமுடியும். அறத்துக்கும் நெறிக்கும் கணக்கு சொல்லி துலாவுடனும் வாளுடனும் வரும் தெய்வங்களை எதிர்கொள்ளமுடியும்.
எழுக, இதோ எழுந்து நின்றிருக்கும் உன் பேருருவை நீயே கடந்து செல்க! உன் குருதியினூடாக நீ மறுபக்கம் செல்கையில் உனக்கென்று இதுவரை மறைந்திருந்த பாதை திறக்கும். இதுவரை நீ காணாத ஒரு தெய்வம் அங்கு எழக்கூடும். இதுவரை நீ அணிந்த அனைத்துச் சொற்களும் புத்தொளியுடன் அங்கு திரண்டு நின்றிருக்கலாகும். உன்னைக் கொன்று நீ அடைந்தனவே அனைத்தும். நீ விழைந்த இப்பெருவடிவு நீ விண்ணுலகில் சூடும் உன் தோற்றம். தன்னைக் கடப்பது எளிது, தன் கனவுகளைக் கடப்பது அரிதினும் அரிது. உன் பேருரு. உன் தெய்வத்தின் தோற்றம்.
அர்ஜுனன் இளைய யாதவரை பார்த்தான். அவர் புன்னகையுடன் திரும்பி அவனைப் பார்த்து “பார்த்தா, உனக்கு நான் உரைத்த அந்தத் தொல்நூலை நினைவுறுகிறாயா?” என்றார். “ஆம், அதை உமது பாடல் என என் உள்ளம் ஒவ்வொரு சொல்லாக நினைவுகூர்கிறது” என்று அர்ஜுனன் சொன்னான். “அச்சொற்கள் அனைத்தும் பொருள் கொள்ள வேண்டுமெனில் இதோ எழுந்து நின்றிருக்கும் இவனுக்கெதிராக எழுக உன் வில்!” என்று இளைய யாதவர் சொன்னார். அர்ஜுனன் காண்டீபத்தை இறுகப் பற்றிக்கொண்டு சொல்லின்றி நின்றான். கைசுட்டி “இவனை வென்றாலொழிய நீ கடக்கமுடியாது” என்றார் இளைய யாதவர். மெய்யாகவே அவர் அதை சொன்னாரா?
காற்று விசையுடன் இல்லை என்றாலும் அதில் நடுங்கவைக்கும் குளிர் இருந்தது. மேலே முகில்நிரைகள் வானை மூடியிருக்கும் என அர்ஜுனன் எண்ணினான். இடியோசைகள் இரவு முழுக்க மிகத் தொலைவிலென ஒலித்துக்கொண்டிருந்தன. படைவீரர்கள் மழையில் துயில்வதற்குரிய தேன்மெழுகும் அரக்கும் வெண்சுண்ணத்துடன் கலந்து பூசப்பட்ட தட்டிகளை வளைத்து நிலத்தில் ஊன்றி அதற்குள் பலகைகளை அமைத்து உள்ளே புகுந்துகொண்டனர். படைப்பரப்பு கரையொதுங்கிய மீன்களாலும் ஆமைகளாலும் ஆன வெளிபோல மின்னல்களில் துலங்கி அணைந்துகொண்டிருந்தது. யானைகளுக்கும் புரவிகளுக்கும் முதுகின்மேல் மெழுகுத்தட்டிகள் அமைக்கப்பட்டன.
ஆனால் காற்றில் நீர்வெம்மையே நிறைந்திருந்தது. மழைத்துளி விழுந்தபின் குடிலுக்குள் செல்லலாம் என அவன் படுத்திருந்தான். உடல் வியர்வையில் எரிய விடாய் எழுந்தபடியே இருந்தது. பலமுறை எழுந்துசெல்ல எண்ணியும் உள்ளச்சலிப்பு எழவிடவில்லை. எப்போதோ துயின்று மிகமிக அப்பால் எங்கோ அறியா நிலங்களில் இளைஞனாக அவன் அலைந்துகொண்டிருந்தான். பின்னர் மூங்கில்செறிந்த நிலமொன்றில் இளங்கன்னியாக விளையாடினான். வேர்கள்செறிந்த நீராழத்தில் நீந்தித் திளைத்தான். மின்னும் கண்கள்கொண்ட இளைஞன் ஒருவனிடம் காதல்கொண்டான். அவனை மணந்து அழகிய இளங்குழவி ஒன்றுக்கு அன்னையானான். விழித்துக்கொண்டபோது நீர்வெம்மை மறைந்து குளிர்காற்று ஒழுகிக்கொண்டிருந்தது. வானில் இடியோசைகளும் குறுமின்னல்துடிப்புகளும் நிறைந்திருந்தன.
இடியும் மின்னலும் நிறைந்த வானை அவன் நிமிர்ந்து நோக்கினான். முகில்களுக்கு அடியில் வானில் கதிர் எழுந்திருக்கக்கூடுமோ என ஐயம்கொண்டான். ஆனால் கதிர் விழிகளில் தோன்றவில்லை என்றால் கதிரவனின் பாதையை கணித்து காலையை அறிவிக்க நிமித்திகர் முடிவெடுப்பார்கள். எக்கணமும் முரசின் ஒலி எழக்கூடும். அவன் நெடுநேரமாக காத்திருப்பதாக உணர்ந்தான். ஆனால் சற்றுநேரமே ஆகியிருக்கிறதென்பதையும் உணர்ந்திருந்தான். அவ்வண்ணம் ஊசிமுனைத் தவம் எனக் காத்திருக்கும் பிறிதொரு பொழுது இனி வரப்போவதில்லை. இந்தக் கணங்களை மேலும் மேலும் என விரித்து நாட்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக, முழுவாழ்நாளாக என்னுள் மாற்றிக்கொள்ளவிருக்கிறேன். இத்தருணத்திற்குப் பின் நான் பிறிதொருவன்.
இடியோசை முழங்கி உள்ளத்தில் ஓடிய சொற்சரடை திடுக்கிட்டு குலையச் செய்தது. அவை எறும்புக் கூட்டமென சிதறி மீண்டும் ஒருங்கிணைந்தன. ஆனால் அவற்றின் திசையும் இலக்கும் மாறிவிட்டிருந்தது. மின்னல்கள் விழிகளை ஒளியால் குருடாக்கி, செஞ்சுழிக் கொந்தளிப்பாக்கின. மீண்டும் புறத்தோற்றம் எழுகையில் ஒவ்வொன்றும் அடுத்த மின்னலில் துடிதுடித்துத் தோன்றின. மென்மழை பொழியத் தொடங்கியது. மெல்லிய நீர்த்துளிகள் விசையில்லாமல் பொழிந்து இளங்காற்றில் பீலிபோல் அசைந்தன. யானைகள் மேலும் கருமைகொண்டன. வெண்கலத் தேர்மகுட வளைவுகளில் நீர்த்துளிகள் பொற்துளிகளாயின. குருக்ஷேத்ரத்தின் பூழிமண்ணில் மென்துளிகள் படிந்து அது மெய்ப்புகொண்டதுபோலத் தோன்றியது.
படைகளெங்கும் எழுந்த குரல்கள் இணைந்து முழக்கமாயின. பாண்டவப் படையில் அனைவரும் திரும்பி கீழ்வானை நோக்கினர். அர்ஜுனன் திரும்புவதற்குள் தன் முன் இருந்த தேர்த்தூண்களின் உலோகவளைவில் அனலென எழுந்த முகில்தொகையை பார்த்தான். தேர்மகுட வளைவுகளில், யானைக்கவசங்களில், வேல்முனைகளில் அந்தச் செம்முகில் சுடரென எழுந்தது. திரும்பி அதை நோக்கியபோது முன்னரே எதிர்பார்த்திருந்தபோதிலும்கூட அந்த முகில்மலையின் பெருந்தோற்றம் அவனை திகைக்கச்செய்தது. நூற்றுக்கணக்கான பாறைமுடிகளும் சரிவுகளும் கரவுகளும் கொண்ட மலை அனல்பற்றி எரிய வானில் மிதந்து நின்றது. மேலும் மேலுமென அதனுடன் முகில்கள் இணைந்துகொண்டன.
மீண்டும் பாண்டவப் படைகள் முழக்கமிட்டன. அவன் திரும்பி நேர்முன்னால் எழுந்த விண்வில்லை நோக்கி சொல்லிழந்தான். அதன் முழுமையும் தெளிவும் அது விண்வில்தானா என்றே ஐயம்கொள்ளச் செய்தன. ஒவ்வொரு வண்ணமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து துலங்க அது ஒரு பட்டுத்துகில் அணிவளைவு என நின்றது. பாண்டவப் படை “விண்ணவர்கோன் வாழ்க! வெல்க விண்ணோன் மைந்தன்! வெல்க இடித்தொடர்களின் தலைவன்! வெல்க மின்னொளியின் வேந்தன்! வெல்க மின்கொடி! வெல்க பார்த்தர்! வெல்க பாண்டவப் பேரரசர்!” என்று முழக்கமிட்டது. ஆடைகளும் படைக்கலங்களும் விண்ணிலெழுந்து அமைந்து அவனைச் சூழ்ந்து அலையடித்தன. மழையின் இருளுக்குள் அவ்வோசை கார்வைகொண்டு சூழ்ந்தது.
ஆனால் மெல்லமெல்ல நீரிருள் மிளிர்வு கொண்டது. ஒவ்வொரு மழைத்துளியிலும் ஓர் ஒளித்துளி இணைந்துகொண்டது. மழையே குளிரொளி சூடி அப்பகுதியை துலங்கச்செய்தது. விண்முகில்கள் வெடித்து அகல செவ்வொளி வானிலெழுந்து களம் மீது பரவியது. அதன் முதற்கதிர் வந்து கர்ணனை தொட்டது. கர்ணனின் நெஞ்சக்கவசமும் குண்டலங்களும் சுடரொளி கொண்டன. பின்னர் ஒவ்வொரு அணிகலனாக ஒளி பற்றிக்கொள்ள அவன் சுடர்ந்தெழுந்து அப்படைநிலையின் முன்னிலையில் நின்றான். கௌரவப் படை மாபெரும் அகல்விளக்கெனத் தோன்ற அதில் எழுந்த திரிச்சுடர் என்று அவன் பொலிந்தான்.
அவன் தேர் ஒளி கொண்டது. அதன் மேல் படபடத்த யானைச்சங்கிலிக்கொடி அனல்நெளிவு கொண்டது. அவன் அணிந்த கவசமும் குண்டலங்களும் கருமுகில் பிளந்து பீறிடும் காலைச்செவ்வொளி என சுடர்ந்தன. அக்கவசங்களை கௌரவ வீரர்கள் அனைவரும் கண்டுவிட்டிருந்தனர். “அங்கர் வெல்க! வாழ்க கதிர்க்கவசம்! அணிகொள்க மணிக்குண்டலம்! வெல்க கதிர்மைந்தர்! வெல்க விண்ணொளியின் அரசர்! வெல்க கௌரவப் பெரும்படை! வெல்க அமுதகலக்கொடி! வெல்க கௌரவப் பேரரசர்!” என கௌரவப் படை ஓசையிட்டது.
எப்போதென்றறியாமல் பாண்டவப் படையிலிருந்து “அங்கர் வாழ்க! கதிர்மைந்தன் வாழ்க!” என்னும் தனிக்குரல் எழுந்தது. அதன் மாபெரும் எதிரொலி என பாண்டவப் படை முழக்கமிட்டது. “அங்கர் வாழ்க! மண்ணெழுந்த விண்ணுலாவி வாழ்க! பேரழகர் வாழ்க!” அர்ஜுனன் முகம் மலர்ந்தான். இளைய யாதவர் அவனை திரும்பி நோக்கி அவன் புன்னகையைக் கண்டு தானும் புன்னகைத்தார்.