«

»


Print this Post

சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது


2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கும், பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரனுக்கும் வழங்கப்படுகின்றன. கோவையை மையமாக்கி வழங்கப்படும் இவ்விருது தொடர்ச்சியாக விருது அளிக்கப்படும் ஆளுமைகளால் முக்கியமானதாக மாறிவிட்டிருக்கும் ஒன்று

சாரு நிவேதிதா தொடர்ச்சியாக தமிழில் ஓர் இலக்கிய மையமாக விளங்கி வருகிறார். உலக இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்வது, இலக்கிய இயக்கங்களை அடையாளம் காட்டுவது என முப்பதாண்டுக்காலப் பங்களிப்பு அவருடையது. தமிழின் புனைவிலக்கியத்தில் புதிய வழிப்பாதைகளை உருவாக்கியவை அவருடைய படைப்புக்கள். சினிமா, இசை சார்ந்தும் தொடர்ச்சியான மதிப்பீடுகளையும் அறிமுகங்களையும் நிகழ்த்துகிறார்

பாடகர் ஜெயச்சந்திரன் 1944 ல் கேரள அரசகுடும்பத்தில் பிறந்தார். இளமையில் பாடகராகவும் மிருதங்கக் கலைஞராகவும் அறியப்பட்டார். 1958ல் மாணவர்களுக்கான ஒரு இசைப்போட்டியில் ஏசுதாஸ் பாடகருக்கான விருதைப் பெற ஜெயச்சந்திரன் மிருதங்கத்திற்கான விருதைப் பெற்றார். களித்தோழன் என்றபடத்திற்காக 1967ல் பாடிய ‘மஞ்ஞலயில் முங்ஙி தோர்த்தி’ என்றபாடல் வழியாக பாடகராக அறிமுகமானார்.

 

மஞ்ஞலயில் முங்ஙிதோர்த்தி

தனுமாச சந்த்ரிக வந்நு

நீ மாத்ரம் வந்நில்லல்லொ நின்னெ மாத்ரம் கண்டில்லல்லோ

ப்ரேம சகோரி சகோரி

 

கர்ணிகாரம் பூத்து தளிர்த்து

கல்பனகள் தாலமெடுத்து

கண்மணியே கண்டில்லலோ

என்றே சகி வந்நில்லல்லோ

கண்டவருண்டோ? உண்டோ?

 

கதமுழுவன் தீரும் முன்பே

யவனிக வீழும் முன்பே

கவிளத்து கண்ணீரோடே

கதனத்தின் கண்ணீரோடே

கடந்நுவல்லோ அவள் நடந்நுவல்லோ

 

வேதனதன் ஓடக்குழலாய்

பாடிப்பாடி ஞான் நடந்நு

மூடுபடம் மாற்றி வரு நீ

ராஜகுமாரி குமாரி…

 

இறந்த காதலியை எண்ணிப்பாடும் பாடல் இது

 

பனியலைகளில் மூழ்கி துவட்டி

மார்கழி மாத நிலவு வந்தது

நீ மட்டும் வரவில்லை உன்னை மட்டும் காணவில்லை

காதல்கிளியே.

 

கனகச் சம்பா மரம் பூத்து தளிர்விட்டது

கற்பனைகள் மலர்த்தட்டுகள் ஏந்தின

கண்மணியை காணவில்லை

என் தோழி வரவில்லை

கண்டவர்கள் எவரேனும் உண்டா?

 

கதை முழுக்க தீரும் முன்பு

திரை விழுவதற்கு முன்பு

கன்னங்களில் கண்ணீருடன்

துயரத்தின் கண்ணீருடன்

அவள் கடந்துசென்றாள்

 

துயரத்தின் புல்லாங்குழலாக

நான் பாடி அலைந்தேன்

முகத்திரையை மாற்றி

வருவாயா நீ ராஜகுமாரி

 

[கர்ணிகாரம் என்பது குமரிமாவட்டத்தில் கனகச்சம்பா என்றும் தமிழகத்தில் வெண்ணங்கு என்றும் சொல்லப்படும் மரம்.  விளக்கு மலர்கள் ஆகியவற்றுடன் வரவேற்பளிக்கும் தாலப்பொலி என்னும் சடங்குக்கு தாலமாக [தட்டாக]  இதுபயன்படுகிறது]

முதல்காலகட்டத்தில் ஜெயச்சந்திரனின் குரல் ‘பையன்பாட்டு’ என ரசிக்கப்பட்டது. இளமைததும்பும் குரல். ஏசுதாஸின் ஆழமான அழுத்தமான உச்சரிப்பு இல்லை. ஆனால் அந்தரங்கமான உணர்ச்சிகரம் இருந்தது. அவருடைய பாடல்கள் தொடர்ந்து புகழ்பெற்றன. ஐந்தாண்டுக்குப்பின் தமிழில் ‘பொன்னென்ன பூவென்ன பெண்ணே’ என்னும் பாடல் வழியாக அறிமுகமானார்

ஐம்பதாண்டுகளாகப் பாடிக்கொண்டிருக்கிறார் ஜெயச்சந்திரன். அவருடைய குரல் ஆழ்ந்த ஆண்குரலாக மாறியது. இன்று உணர்ச்சிகரமான இன்னொரு வடிவை அடைந்துள்ளது இப்போதும் மலையாளத் திரையிசையின் முதன்மைக்குரல்களில் ஒன்று  மலையாள திரையிசையின் தொன்மம்நிகர் ஆளுமைகளில் ஒருவர். ஒரு தலைமுறை அவர் குரல்வழியாக உருவாகி வந்திருக்கிறது

 

சாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் வாழ்த்துக்கள்;

 

கண்ணதாசன் விருது அறிவிப்பு

 

கோவை கண்ணதாசன் கழகம் கவியரசர் பிறந்தநாளையொட்டி கலைத்துறையிலும் இலக்கியத் துறையிலும் முத்திரை பதிப்போருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்பட்டு  வருகின்றன.

விருதுகள் இரண்டு பெருமக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் ரொக்கத் தொகை மற்றும் பட்டயம் கொண்டதாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால்நிறுவப்பட்டுள்ளது.

 

2019 ஆம்  ஆண்டுக்கான விருது எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா, பின்னணிப்பாடகர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது

 

16.09.2019 அன்று கோவையில் இவ்விழா நிகழ்கிறது.இதற்கு முன் கண்ணதாசன் விருதுகள் பெற்றோர் விபரம்:

இதற்கு முன்னர் எழுத்தாளர்கள் திரு.அசோகமித்திரன், திரு.வண்ணதாசன், திரு.ஜெயமோகன், கவிஞர் சிற்பி, திரு.கலாப்ரியா, திரு.நாஞ்சில்நாடன்,

திரு.எஸ்.ராமகிருஷ்ணன், திரு.மாலன் ஆகியோரும், கலைத்துறையில் பாடலாசிரியர் முத்துலிங்கம், பாடகர்கள் திருமதி.பி.சுசீலா,  திருமதி .வாணி ஜெயராம், திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம்திரு.சீர்காழி சிவசிதம்பரம்,திருமதி. டி.ஆர்.எம்.சாவித்திரி பதிப்பாளர் திரு பி.ஆர்.சங்கரன்,கவிஞரின் உதவியாளர் திரு.இராம.முத்தையா ஆகியோரும் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர்

-மரபின் மைந்தன்முத்தையா

செயலாளர் -கண்ணதாசன் கழகம்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/121227/