காலையில் துயில்பவன் -கடிதம்

காலையில் துயில்பவன்

 

 

அன்புள்ள ஜெமோ,

 

 

ஒரு பிரமிப்பூட்டும் குறும்படம் பார்த்தது போல இருந்தது இவர் எழுத்து. அந்த பிரமிப்பு வந்த சில வினாடிகளில், இவர் அனுபவிக்கும் உடல், மற்றும் மனப் போராட்டங்கள் ஒரு வகையில் வருத்தமாகவும் இருந்தது. 23 ஆண்டு காலம் ஒரு தேடல் என்பது ஒரு வகையில், படிக்கும் நமக்கே ஒரு சோர்வைக் கொடுக்கும் போது, இவரின் மனநிலை புரிந்து கொள்ளக் கூடியது.

 

 

இன்னோரு உண்மையும் முகத்தில் அறைகிறது. ஒரு மருத்துவம் படித்த நபருக்கே ஒரு உடல் சார்ந்த பிரச்னையை புரிந்து கொள்ள ஏற்படும் சிரமங்கள் இப்படி என்றால், இது போன்ற சிக்கலான உடல் கோளாறுகளால் அவதியுறும், ஆராய்ச்சி அளவிற்கு திறன் எதுவும் இல்லாத சராசரி மனிதர்களின் நிலை என்ன?

 

 

உங்கள் பதிலில் நீங்கள் குறிப்பிட்டபடி, இன்றைய மிகப் பெரிய பிரச்சனையாக இருப்பது இது.

 

//

ஒன்று, உங்களுக்கு உங்கள் பிரச்சினை என்னவென்று தெரிந்திருக்கிறது. உங்களை நீங்களே ஆய்வுசெய்து அதைக் கண்டடைய முடிந்திருக்கிறது. என்ன பிரச்சினை என்றே தெரியாத சிக்கல்கள் கொண்டவர்களே இங்கே மிகுதி. அதன் தவிப்பு மிகப்பெரிய துன்பம். அது உங்களுக்கு இல்லை.

//

 

 

Holistic Phyiscians  என்று இருப்பவர்கள் இன்று மிகவும் குறைவு. அதுவும், இங்கே அமெரிக்காவில், உடலில் ஒரு பிரச்சனை என்றால், எந்த மருத்துவரிடம் போவது என்பதே ஒரு மிகப் பெரிய தவிப்பு இன்று. மருத்துவர்களை தேடும் நேரம், பட்டியலிடப்பட்டிருக்கும் துறைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி படித்தாலே, மேலும் திகில் ஒட்டிக் கொள்ளும். General Phyiscians பெரும்பாலானவர்கள், மேலோட்டமான தவகல்கள் அடிப்படையிலேயே, Process of elimination என்ற வகையிலேயே, பிரச்னையை அணுகுகிறார்கள். ஆழமான, பிரச்சனையின் அடிப்படை கூறுகளை ஆராய்ந்து, நேரம் எடுத்துக் கொண்டு, தவிர்க்கும் பொருட்டு ஆலோசனைகள் வழங்கும் அளவிற்கெல்லாம், அவர்களுக்கு நேரமும் இல்லை, விருப்பமும் இல்லை. அதனால், நாம் தான் தேடி புரிந்து கொண்டு, எது சரி என்று பல சிகிழ்ச்சை முறைகளை ஆராய்ந்து கண்டு கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால், அதில் உள்ள சிக்கலே, எல்லா நேரமும் நம்மால், சரியான தீர்வுகளை நோக்கி செல்ல முடிவதில்லை. அதற்கான அடிப்படை மருத்துவ அறிவும் இல்லாததும் ஒரு காரணம். இந்த ஆராய்ச்சியின் பொருட்டு, கூகுளை அணுகினால், அதில் வரும் தகவல்கள், நம்மை இன்னும் திகில் அடையச் செய்யும். ஆம். இந்தத் தவிப்பு மிகப் பெரிய துன்பம்.

 

 

“காலையில் துயில்பவன்” க்கு சில வார்த்தைகள்.

 

 

– உங்கள் மனதிற்குள் மட்டுமே வைத்துக் கொண்டிருக்காமல், உங்கள் எண்ணங்களை வெளியே இப்பொது சொல்லி இருக்கிறீர்கள். இந்தப் பகிர்வின் காரணமாக, உங்களுக்கு மிகப் பெரிய ஆறுதல்கள், வழி காட்டுதல்கள், ஆலோசனைகள், மற்றும் தீர்வுகள் கிடைக்க எல்லாம் வல்ல இறை அருளை வேண்டிக் கொள்கிறேன்.

 

 

– சில நாட்களுக்கு முன், ப்ரீத்தி ஸ்ரீனிவாசன் என்ற பெண்ணைப் பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு கட்டுரை படித்தேன். நம் அகந்தையை சற்றேனும் அசைத்துப் பார்க்கும் அளவிலான ஒரு வாழ்க்கைப் பதிவு. மிகத் திறமையான, துடிப்பும், சாதனைகளும் நிறைந்த இளமைக் காலத்தைக் கொண்ட, தமிழ்நாடு ஜூனியர் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆக இருந்த பெண் இவர். மிகச் சிறிய வயதில், புதிரான ஒரு விபத்தில், தன் கழுத்துக்கு கீழே உணர்வற்ற நிலையென்றாகி, இப்பொது, தன் தாய், மற்றும் பாட்டியுடன், வசிப்பவர்.  தன்னைப் போன்ற நிலையினை பெற்ற, வசதியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு, ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருபவர். இந்தக் கட்டுரை வாழ்வின் இரண்டு எல்லைகளை இணைக்கிறது என்பதாகப் பார்க்கிறேன். ஒன்று, நிலையின்மை. அதனால் வரும் விரக்தி. இன்னொன்று அதன் நேர் மாறாக ,இந்த நிலையின்மையினூடே மனிதர்கள் கண்டு கொள்ளும் புதிய பாதைகள். தங்களுக்கான ஒரு தடம், அதை நிறுவ கை கொடுக்கும் பிற மனிதர்கள், என்று, ஒரு நம்பிக்கை. மனிதர்கள், தன்னை மட்டுமே பார்க்கும், உணரும், மறுகும், நிலையில் இருந்து மாறி, தன்னை பிறரில் பார்க்கும் போது, வேறு ஒரு பாதை தென்படுவதாய் எனக்குத் தோன்றுகிறது.

 

 

– உங்களை வெளிப்படுத்திக் கொள்வதனால், பிரச்சனைகளை விட, நல்லன நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று நம்புகிறேன். இன்று, நம் கருத்துக்களை பிறரிடம் எடுத்தப் போகும் ஊடக வழிகள் மிகுந்து விட்டுருக்கின்றன. அதோடு, உங்கள் மருத்துவ அறிவு மிகவும் வலிமையானதும் கூட. ஒரு மருத்துவராக, ஒரு தனித்துவமான உடல் பிரச்னையை எதிர்கொண்டு, கண்டு கொண்ட மனிதராக, இதைப் பற்றிய ஆழமான புரிதல் அற்ற இந்திய மருத்துவத்துறையின் இடைவெளியைப் புரிந்து கொண்டவராக, எண்ணங்களை வெகு கோர்வையாக சொல்லும் திறன் பெற்றவராக உள்ள உங்கள் எல்லா புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால், ஒரு சிறிய அளவிலான மாற்றத்தை பிறருக்கு கொடுக்க முடியுமெனில்,  உங்களுடன் இணைந்து பணியாற்ற பல நல்ல உள்ளங்கள் இருப்பர் என்றும் நம்புகிறேன். நம் கனவுகளை அடுத்து கட்டத்திற்கு நகர்த்த, சிறந்த வழி, நம் வெற்றிக்கு உதவும் விருப்பம் கொண்ட மனிதர்களிடம் துரிதமாக பகிர்ந்து கொள்வது தான் என்று எங்கோ படித்த நினைவு. அதற்குப் பிறகு, அவர்கள், அதையே செய்வார்கள். இதோ, சுமார் ஐந்து அல்லது ஆறு மணி நேரம், முகம் அறியாத உங்களைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருப்பது போல, நீங்கள் ஒரு நல்ல தீர்வை கண்டடைய விரும்புவது போல, இது ஒரு தொடர்ச்சியாக நிகழும்.  நீங்கள் இப்போது பற்ற வைத்திருக்கும் நெருப்பை அணையாமல் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

 

– நீங்கள் தொடர்ந்து எல்லா நாட்களிலும் இருக்க வேண்டும் என்றல்லாத வேலையை தேடலாம். இணையம் வழியாக எதாவது உங்கள் திறமைக்கான சேவை இருப்பின் அதில் பங்கு பெறலாம். அதில் நேரம் விதிகள் அதிகம் இல்லாததாய் இருந்தால் வசதியாக இருக்குமல்லவா. தட்டுங்கள். திறப்பார்கள்.

 

வாழ்த்துக்கள்.

 

அன்புடன்

குமரேசன் ரங்கசாமி