கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

ஏன் எதிர்வினையாற்றவில்லை, ஏன் சுரனையற்று போனது என்ற உங்களின் கேள்விக்கு முட்டி கொண்ட தன்மை தான்.  இன்று வந்த நவீன் கடிதம் ஆசுவாசம் தந்தது. ஆம் ராகவேந்திரன் சொன்னது போல சாமனியர்களின் சூன்யவாழ்க்கையில் இவைகளை எடுத்த செல்ல முடியவில்லை.இந்த சுழல் உழல் வாழ்வின் ஒட்டங்களில், ஸ்டாலின் போன்றவர்களின் தேடல், அவர்களின் பயணம்-பதிவு- புத்தகம் என்பவைகளும் இத்தகைய இறப்புகளும் தூரமாக, எட்ட முடியாத லட்சிய வாழ்வாக மின்னுகிறது. ஆற்றாமையை எட்டிப்பார்க்க வைக்கின்றன்.

இத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்த்தும் கூட, மாசு ஆவது திருப்பூரில் கட்டுபடுத்தபட்டு தான் உள்ளது. மழை வந்தால், ஆறுகளில் கழிவுகளின் போக்குவரத்து அதிகரிக்கும்., இந்த சில வருடங்களில் தான் கான்பூர் போன்ற முக்கிய தொழிற்சாலை ஏரியாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றியும் முடிவாகி ( மட்டும் ) உள்ளது – அதிக திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட. தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய 5ல் ஒரு மடங்கு அளவுக்கு கூட நிலையங்களின் திறன் இல்லை  ( ஒரு நாளைக்கு மட்டும் ) எனும் செய்திகள் படிக்கிறேன். இது ஒரு புறம் இருக்க, க்ரோமியம் போன்றவைகளின் அளவை பார்க்கையில், இருக்கும் நிலைங்களின் சுத்திகரிப்பு நுட்பத்திற்கு மிக மிகுதி எனவும், மீந்து விடப்படும் அதிக அளவு மாசின் தன்மை, விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் ஏற்படுத்தும் பாதிப்பு மறுபுறம்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே தானே இருக்கிறோம். எழுதியும் பகிர்ந்தும்… சமீபத்தில் கூட உங்கள் ஊரின் ஏரி மேல் புதிய ரோடுகள் போல வந்த கொண்டே தான் இருக்கின்றன. கோவையில் அவிநாசி ரோடு, படிபடியாக சக்தி ரோடு, பின் கடைசி பொள்ளாச்சி ரோடும், இப்போது திருச்சி ரோடும் மீதி இருந்த முதிர் மரங்களை காணாமல் செய்து விட்டன. ஒட்டன்சத்திரம் திருப்பூர் சாலை விஸ்தரிப்பு சில ஆயிர மரங்களை எடுத்து விட்டது. ஒரு சின்ன குளத்தின் பாதிக்கு மேல் தான் சுங்கவசூல் இடம்.சின்ன ஊர்களில் இல்லாத நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதைகளை கண்டு கொள்ளாத மரத்த தன்மை அப்படியே பெரிய ஊர்களிலும் இன்னும் பெரிய அளவில் இருக்கும். சென்னை மறந்து விட்டது. வீரானம் ஏரியில் அளவு சிறுத்து போனதை பற்றி பல வருடங்களுக்கு முன் எழுதியாதாக நினைவு. போன வருடம் ஏரி மராமத்து பணிகளில் எவ்வளவு மீட்டெடுத்தார்கள்? எல்லா ஆறுகளும் 40,50 வருடங்கள் முன் வெயில் காலத்தில் கூட முற்றிலும் வற்றாமல் ஒடிய காலம் இருந்தது என்பது கூட மறக்க துவங்கி விட்டன. காலை மாலை என இரண்டு நேரமும் குடிநீர் பைப்புகளில் வரும் நீரை அப்படியே புழங்கிய அனுபவம் உண்டு என்பதை நம்ப முடியவில்லை.

அகர்வால் போன்றோர் கடிதம் எழுதி கோரிக்கைக்களாக உண்ணாநோன்பு ஒரு பக்கம் மறு பக்கம் அரசு தான் பிண்ணிய வலைகளால் தானே சிக்கிகொண்டு எந்த புதிய பழைய திட்டங்களையும் செயல் படுத்த முடியாத நிலை. நீர்மின் நிலையம் இயற்கையானவை பசுமை சக்தி ( green energy ) என்கிறவை மாறி ஆறுகளின் கொலைகள் பற்றிய வெளிச்சம் மேலோங்கி விட்டது. ஆனால் இயங்கி கொண்டு இருப்பவைகளை மூடும் அளவுக்கு நாம் அடைந்து விட்டோமா?  மலைகளில் ஆற்றின் பாதைகள் போடப்பட வேண்டிய ரோடுகளால் மறிக்கபட்டு, 5,6 மாநிலங்கள் வழி சென்று, இத்தனை வருட மனித, தொழிற்சாலை கழிவுகளின் கூடல்களை தாண்டி அந்நதி வழி இருக்கும் பாசன ஹெக்டர்களை தாண்டி, கங்கையை மீண்டும் தன் போக்கில் விட்டு தூய்மையாக்க வேண்டும் என்கிற அந்த லட்சிய இறப்புகள் மிகுந்த வெறுமையை தருகின்றன.

இப்பவும் கூட ஆறுகளின் இணைப்பு எனும் பெரிய கனவுகளை விதைக்க தொடங்கி விட்டோம். மழை நீரை எடுத்து வைத்து கொள்ள ஏரி, ஆறு என தேக்கி காப்பாற்றி கொள்ளாமல், “வீணாக கடலில் கலக்கும்” நீரை பற்றி தான் பேசுவோம். ஆறு என்பது வெறும் தண்ணீர் தான். நாம் இயற்கையை அழிக்கவில்லை. அது மனிதனை வைத்து தன்னை அழித்து கொள்ள முடிவு செய்து கொண்டு வெகு காலமாகிறது என்று தோன்றுகிறது.

லிங்கராஜ்

 

கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40
அடுத்த கட்டுரைலோகி பற்றி…