அறம்: சென்னையில் பணிபுரிந்த காலத்தில் எனது சம்பளம் 4000 ரூபாய். முதல் வேலையாதலால் அவ்வளவுதான் தந்தார்கள். ரூம் வாடகையே 1200 ரூபாய். இத்தனைக்கும் பொது குளியல்-கழிப்பறைகள் தான். அலுவலகத்தில் என்னை நிறுவிக்கொள்ளவேணும் தினமும் 18 மணி நேரம் உழைக்கவேண்டியதாக இருக்கும். இரவில் ரூம் திரும்ப 11 மணிக்கு மேலாகிவிடும். திருவல்லிக்கேணி ரோட்டுக்கடையில் ஒரு தள்ளுவண்டியில் அயோத்திக் குப்பத்தைச்சேர்ந்த ஒரு அக்கா இட்லி, தோசை விற்பார்கள். துணைக்கு அவரது கணவனும் நின்று வேலைகள் பார்ப்பார். அவரிடம் தான் தினமும் இரவுணவு. அதுதான எமது பர்ஸுக்கு கட்டுப்படியாகும். தினமும் எனக்காகத் தனியாக இட்லியும் சாம்பாரும் சட்னியும் தனியாக செய்து கொடுப்பார். மற்றவர்களுக்கெல்லாம் சிக்கன் சால்னா. சுமார் இருபது ரூபாய்க்குள் வயிறு நிறைய சாப்பிடலாம். தினமும் கொஞ்சம் சேர்த்து வைத்து வார இறுதியில் ஒருநாள் ரத்னா கபேயில் சாப்பிடலாம். அப்பாவிடம் காசு கேட்பதில்லை என்று வைராக்கியம் வேறு.
படங்கள் : இப்போதைய முபாரக் உணவகம்
போலீஸ்காரர்கள் அந்த அக்காவிடம் வந்து இலவசமாக தின்றுவிட்டு, மாமூல் கேட்டு வாங்கிப்போவதை நானே பலமுறை பார்த்திருக்கிறேன். இரவில் 11 மணிக்கு மேலே கடை போடுவது குற்றம் அதுவுமின்றி ரோட்டோரத்தில் கடை போடுவதும் குற்றமாம். அக்காவும் 20 முதல் 50 ரூபாய் வரை கொடுக்கும். சில சமயம் தினமும் வந்து காசு கேட்கும்போது, சண்டை நடக்கும். என்னை ப்ளாட்பாரத்தில் இருட்டில் நின்று போலீஸ் கண்ணில் படாமல் சாப்பிடு என்று சொல்லிவிடுவார்கள். இரவு 1 மணி சுமாருக்கு அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு போய்விடுவார்கள். அவர்களுக்கும் மீதமிருப்பதை பொட்டலம் கட்டி எடுத்து வைத்துக்கொள்வார்கள்.
ஒரு நாள் இரவு 1 மணியாகிவிட்டது. வேகவேகமாக எக்மோரிலிருந்து (அலுவலகம் அங்கேதான்) நடந்து திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தேன். நேரமாகிவிட்டது என்று வேகமாக ஓடிவந்தேன். நல்ல பசி, கடையை காணோம். அக்கா கடையை மூடிவிட்டார்கள் என்று தெரிந்ததும் மிகவும் சோர்ந்துபோனேன். கையில் 10 ரூபாய் மட்டுமே. அப்போது ஒருவன் “என்ன அக்கா கடையை தேடுறியா, இப்பத்தான் போகுது ஓடு பிடிச்சிடலாம்” என்று சொன்னான்.
விரட்டிக்கொண்டு கண்ணகி சிலை வரை ஓடினேன். அக்கா தூரத்தில் தள்ளுவண்டியை தள்ளிக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். மூச்சிரைக்க அவர் முன்னால் சென்று நின்றேன். “என்னப்பா இன்னைக்கு லேட்டாயிடுச்சா” என்று கேட்டவர், அவருக்கென பொட்டலம் கட்டியதை எடுத்து எனக்கு கொடுத்தார், அவர் கணவர், அப்போ நமக்கு என்ன பன்ன என்று சிலம்பினார், “தே… வீட்டுக்கு வா.. எதுனா பன்னித்தாரேன்.. துன்னு, தம்பி களைச்சு போயி ஓடி வந்திருக்கு அதுக்கு குடுக்காதே” என்று அவரை திட்டிவிட்டு, “நீ சாப்பிடுப்பா” என்று சொல்லி போய்விட்டார். காசு கூட வாங்கவில்லை.
கண்ணகி சிலையருகே உட்கார்ந்து ஒரு அரை மணியாவது அழுதிருப்பேன். உலகத்துக்கே அன்னம் படைப்பதாகச்சொல்லும் அன்னபூரனியைத்தான் அன்று அந்த கரிய பருத்த முகத்தில் பார்த்தேன். நல்ல வேலை கிடைத்து பெங்களூர் போனேன். இரு மாதங்கள் கழித்து இதற்காகவே சென்னை திரும்ப வந்து அக்காவிற்கு ஒரு பேட்டரி லைட்டாவது வாங்கித்தரவேண்டும் என்று தேடினேன். கடையை எடுக்கச்சொல்லிவிட்டார்களாம். அக்கா, சென்னையின் ஜன சமுத்திரத்தில் கரைந்துபோனார். சென்னைக்கு எப்போது போனாலும், அக்காவின் முகமும் அந்த தள்ளுவண்டியும், இட்லியின் வாசனையும் இன்னமும் எனக்கு நினைவில் வருகிறது.
சில சமயங்களில் எல்லா கடன்களும் தீர்த்துவிட முடிவதில்லை. குறிப்பாக அன்னமிட்ட கணக்குகள், அன்னையிடம் பெற்ற கணக்குகள் எல்லாமே..!!
எனக்கு சில சமயம் சில கதைகள் புரிவதில்லைதான்.. இப்படி சொல்லலாம்.. இந்தக்கதையை படிக்கும்தோறும், எனது குற்ற உணர்ச்சி அதிகமாவதால், இதை நான் சிலாகிக்காமலே தாண்டிவிடுகிறேன்.
நன்றி
ராமசந்த்ர சர்மா
==================================
அன்புள்ள ஜெ,
சோற்றுக்கணக்கு அற்புத அனுபவம். தண்ணீர் விட்ட அலுமியத் தட்டுச் சாப்பாட்டுக்கும் ருசியான சிக்கன் சாப்பாட்டின் நன்றிக் கடனைக் கதை நாயகன் செலுத்தும்போது, ரெண்டு ரூபாயும் பதினாறாயிரம் ரூபாயும் ஒன்றெனப் பார்க்கும் கெத்தேல் சாகிபாக அவன் மாறும் உச்சம் தந்த அனுபவமது.
நன்றிகள்,
செல்வ கருப்பையா.
=========================================
அன்பு நிறைந்த ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர்கள் சொல்வதுபோல் இரு கதைகளும் கண்ணீர் வரவைத்துவிட்டன. நான் பலநேரங்களில் அவர்களைபோல் சிறிய அளவேனும் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்று நினைப்பேன், ஆனால் அது முடிவதில்லை அது மிகப்பெரிய தவம். கெத்தேல் சாஹிப் போன்ற ஒரு மனிதரை இதுவரை பார்த்ததில்லை. நல்ல நல்ல மனிதர்களை உங்கள் கதைகள் மூலமாக அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி. நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் கணக்கு பார்பவர்களாக இருகின்றோம். அவ்வாறு கணக்கு பார்க்கும் போது இருவருக்கும் நிறைவிருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கெத்தேல் சாஹிப் கதையில் கணக்கில்லாமல் உணவளித்த அவருக்கும் மனநிறைவு உண்டவர்க்கும் மனநிறைவு. இதுஒரு அற்புதமான கணக்கு.
உங்கள் மூலம் மேலும் பல நல்ல மனிதர்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
செந்தில்குமார்
==========================
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் உங்கள் வாசகன் . சோற்றுக்கணக்கு சிறுகதை படித்த மன எழுச்சியில் கிழக்கு ஆப்ரிக்கா நாட்டில் இருந்து இந்த கடிதத்தை எழுதுகிறேன் .இந்தியாவில் இருக்கும் வரை பசியைப் பற்றி எந்த பிரக்ஞ்சையும் இல்லாமல் வாழும் நடுத்தரவர்க்க வாழ்கையை கடந்து வந்து விட்டேன் .
இங்கே ஆப்ரிக்காவில் ஒரு நாளைக்கு இரண்டு வேலை உருளைக்கிழங்கு அவித்து பசியாறி சிரிக்கும் மக்களை பார்க்கும் போது உள்ளம் பதைப்பதைக்கிறது.
பசி என்னும் புராதன விலங்கின் முன் மண்டி இடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று இந்தச் சிறுகதைக் காட்டும் பேரறம் மெய்சிலிர்க்கவைக்கிறது !
அற்ப காலத்தை அறுத்து ,
அனந்த கோடி யுகமாய் நின்று நிலைக்கும் ,
அறம் அல்லவா ,
அன்னத்தில் அமர்ந்திருக்கிறது .
அன்னத்தை அல்ல ,
அறத்தை அல்லவா , நாம்
தின்று செரிக்கிறோம்…..
நெகிழ்வுடன்,
ஹரிச்சந்திரன் அருண்,
கிழக்கு ஆப்ரிக்க நாடுகள்.
===========================================
மரியாதைக்குரிய ஜெ அவர்களுக்கு வணக்கம்.
கடந்த வாரம் திருச்சிக்குப் புறப்படும் சடுதியில் விறுவிறுவென்று அறம் வாசித்தேன். அப்படி வாசித்திருக்கக்கூடாதென்று பிறகு தெளிந்தேன். வெகுநேரம் மனமெங்கும் நிறைந்து வழிந்து கொண்டேயிருந்தது. அறத்தை வாழ்வு முறையாகக் கொண்ட ஒவ்வொருவனுக்கும் இந்த அசல் வாழ்க்கைச் சூழல், எப்போதும் அவநம்பிக்கையையும் உண்மை மீதான விமர்சனத்தையும் தீராமல் வழங்கிக் கொண்டேயிருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் எப்போதேனும் வாசிக்கும் இலக்கியமும் சில அரிதான உண்மை நிகழ்வுகளுமே நம் அறத்திற்கு உணவாகி நம்மை வழி மாறிப் போகாமல் சரியான பாதையிலேயே பயணிக்கச் செய்கின்றன.
அறம் உண்மையோடு கூடிய ஒரு கதையாக்கமாகையால் அது எல்லா பொய் வாழ்க்கையையும் ஓங்கி அடிக்கிறது. அது இன்னும் வலிமையாக ஓங்கி அடிக்க வேண்டுமென்ற மனதோடு கூடிய ஒருவன் இந்த கதையை வாசித்தால் அவன் உடைந்து அழுகிறான். திரையில் கதாநாயகன் தீமையை அழிக்கையில் உணர்ச்சிவயப்பட்டு கூக்குரலிடும் ஒரு ரசிக மனோபாவம் வந்து விடுகிறது.
Sentimental மதிப்பீடுகளைத் தாண்டி வாழ்வின் அத்தியாவசியத் தேவையான வாழ்வறம் குறித்து பேசுவதால் இந்த கதை உயர்தரமானது.
மிக்க நன்றி ஜெ.
பேரன்புடன்,
நித்யன்.
www.nithyakumaaran.blogspot.com
========================================
அன்புள்ள திரு.ஜெமோ,
இந்தக் கதையின் என்னைக் கவர்ந்த அம்சமாக கருதுவுது பணம்
குடுக்காமல் சாப்பிட மறுக்கும் அந்த இளைஞனின் மனம்..
‘ஏதோ ஒரு குரல் கேட்கும் என முதுகெல்லாம் காதாக ,
கண்ணாக’ இருக்கும் ஒரு மனநிலை.. இப்படி இருப்பவர்களால்தான்
இலக்கியம் படைக்க முடியும்.. படிக்கவும் முடியும்..
நிறைய எழுத நினைக்கிறேன் .. இப்போதுதான் கதை படித்ததால்
கை ஓடவில்லை.. நெகிழ்ச்சியாய் உணர்கிறேன்..
பின்னொரு சமயம் விவரமாக ஒரு கடிதம்..
மகேஷ்
==================================
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். “சோற்றுக்கணக்கு” சிறுகதை படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. இப்படியும் கூட மனிதர் இருக்கிறார்களா ? . பாதி கதையிலேயே ஒரு வித அழுத்தம் என்னைப் பற்றிக்கொண்டது. நாகர்கோவிலில் பல வருடங்கள் வாழ்ந்தும் (தற்போது பெங்களூர் வேலை நிமித்தமாக) இந்த உயர்ந்த மனிதரை பற்றிக் கேள்விப்பட்டதில்லை. தெரிய செய்ததற்கு மிகவும் நன்றி. அடுத்தமுறை நாகர்கோயில் போகும்போது திருவனந்தபுரம் சென்று ஒரு முறை அவர்கடைக்கு சென்று உண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். :).
நான் படித்ததும் மிகவும் உறைந்த போன வரி
=========================================
“என் கனவெல்லாம் சோறு. ஒருநாள் சாலையில் ஒரு நாய் அடிபட்டு செத்துக்கிடந்தது. அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன்” . அதுவும் அந்த “கனவெல்லாம் சோறு ” என்ற இரட்டை சொற்கள் என்னை ஏதோ செய்கிறது . தொடர்ந்து சிறுகதைகளை எதிர்பார்த்து காத்திருக்கும்
உங்கள் எழுத்தின் ரசிகன் ,
பிரவின் சி .
=====================================
அன்பு ஜெ.
ஒரு சிறுகதை அதன் மொழி ஆளுமையால், அது முன் வைக்கும் சமூகத் தரிசனத்தால், சக மனிதனுக்கு நெருக்கமான அனுபவ பகிர்வை ஏற்படுத்துவதனால் வாசகனை உலுக்கி வைக்கிறது. ஒரு வாசகனாக எனக்குக் கிடைக்கும் உணர்வு இது. அது துன்பியல் சுவையைச் சொல்லுவதாக இருப்பினும் சுகம்தான் சிறுகதையின் வெற்றியாக இருக்கிறது.
அந்த வகையில் அறம், மிகுந்த மன நிறைவைத் தந்த சிறுகதை. கும்பகோணத்தைச் சேர்ந்த எழுத்தாளரின் வாழ்வனுபவம் என்பதால் கதையைப் படிக்கப் படிக்க அது தி.ஜானகிராமனா, கரிச்சான் குஞ்சுவா, மௌனியா, எம்.வி. வெங்கட்ராம்-ஆ என மனம் வேகமாக ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருந்தது. தினமணி கதிர் சிவகுமார் சட்டென சொன்னார்: “அட அதுகூடவா தெரியல? எம்.வி. வெங்கட்ராம்டா’
கதை மீண்டும் ஒரு முறை மனதில் திரைப்படமாக ஓடியது. ஒரு ஆண்டில் நூறு புத்தகம் எழுதிய அந்த விரல்களின் வலியும் அவருடைய வாழ்வும் மனதில் கண்ணீர் கசிய வைத்தன.
சரித்திரத்தைக் கால எந்திரம் ஏறி இன்னொரு தரம் பார்த்துவிட்டு வந்த மகத்தான வாய்ப்பைத் தந்ததற்கு நன்றி.
—
-தமிழ்மகன்
www.tamilmagan.in
=================================
ஜெ,
உங்கள் அறம் சிறுகதையை கொஞ்சம் தாமதமாகத்தான் வாசித்தேன். அறம் என்பதற்கான எல்லாவிதப் பொருளையும் கதை சொல்லிவிடுகிறது. யாருக்கு அறம் வேண்டும் படைப்பாளனுக்கா அல்லது பதிப்பாளனுக்கா என்ற பேதமில்லாமல் கதை சொல்லப்பட்டிருக்கிறது. படைப்பாளன் அறம் மீறுவது வயிற்றுக்காகத்தான் என்பதை மன்னித்துவிடாலாம். மலேசிய சஞ்சிகைகளில் எழுதப்படும் எழுத்துக்கும் சன்மானம் ஏதும் வழங்குவதில்லை. கூப்பாடு போட்டால் ‘இந்தா’ என்று பந்தாவாக அறிவிக்கிறார்கள். அந்த அறிவிப்புகூட கண்தூடைப்புதான். மலேசியாவை விடுங்கள் தமிழகத்தில் புத்தகக்கண்காட்சியின் போது விற்பனை விபரம் வரும்போது மலைப்பாக இருக்கிறது. ஆனால் படைப்பாளனைப் போய்ச்சேரும் பங்குதான் பாவப்பட்டதாக இருக்கிறது. ஒரு பிரபல எழுத்தாளர் இங்கே வந்தபோது, உங்களுடைய பழைய புத்தகங்கள் கூட புதிய பதிப்பாக வந்து கொண்டிருக்கிறதே. உங்களுக்குக் கிடைக்கவேண்டிய ராயல்டி கிடைக்கிறதா என்று கேட்டேன். இதுவரை முன்னூறு புத்தகங்கள்தான் விற்றது என்று பொய் சொல்கிறார்கள். சுரண்டல் பற்றி எழுதும் எழுத்தாளனின் நூல்கலையே விற்று பெரும் பணக்காரராகி விடுகிறார்கள். எங்களுக்கான பணம் ஏமாற்றப்பட்டுக்கோண்டே வருகிறது. அங்கேயும் இந்த அவலம்தானா? மிகப் பிரபல எழுத்தாளர்களின்
பொருளாதார பலம் பற்றி நினைக்கும்போது நமக்கு கோபம் எகிறுகிறது. கையாளாகக் கோபம்!
கோ.புண்ணியவான்.