சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா

லடாக், ஜம்மு கஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி. இதன் பரப்பளவு அறுபதினாயிரம் சதுர கிலோமீட்டர் (தமிழகத்தில் பாதி). மக்கள் தொகை 2.75 லட்சம். உலகின் மிக உயர்ந்த பனிப்பாலைவனம்.  இந்தியாவின் மிகப் பெரும் நதிகளுள் ஒன்றான சிந்து நதியின் பிறப்பிடம். அதையொட்டியே பெரும்பாலும் லடாக்கிய மக்கள் வசிக்கிறார்கள். சிந்து நதி நீர் அவர்களின் உயிர்நாடி.

சோனம் வாங்ச்சுக் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர். லடாக்கில் பெரிதாகப் பள்ளி வசதிகள் இல்லாததால், அவர் அம்மா அவருக்கு வீட்டிலேயே ஒன்பது வயது வரை லடாக்கிய மொழியில் பாடம் கற்பித்தார். அவரது அப்பா சோனம் வாங்யால், ஜம்மு கஷ்மீர் அரசில் ஒரு அமைச்சராக ஆனார். அதனால், சோனம் வாங்ச்சுக்கை ஸ்ரீநகர் அழைத்துச் சென்று ஒரு பள்ளியில் சேர்த்தார். அங்கே அவருக்கு அந்நியமான மொழிகளில் – ஆங்கிலத்திலும், உருதுவிலும் பாடம் நடத்தப்பட்டது. அதை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் அவர் திணறினார். அதனால், சக மாணவர்களால் இழிவு செய்யப்பட்டார். எதற்கும் பதில் சொல்லமுடியாமல் அமைதியாக இருப்பதால் முட்டாள் என அழைக்கப்பட்டார். தன் வாழ்க்கையின் இருண்ட காலம் என இதை அழைக்கிறார். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், தில்லி ஓடிப்போனார். அங்கே உள்ள விஷேஷ கேந்திரிய வித்யாலயாவின் முதல்வரை அணுகிக் கெஞ்சி மீண்டும் பள்ளியில் சேர்ந்தார்.

பின்னர், ஸ்ரீநகரில் உள்ள தேசியத் தொழில்நுட்பக் கழகத்தில், மெக்கானிக்கல் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். இங்கே படிக்கையில், அவருக்கும், அவர் தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. அவர் தந்தை, அவரை கட்டுமானப் பொறியியல் படிக்கச் சொன்னார். வாங்ச்சுக் மறுத்து அவருக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்தார். அதனால், கோபித்துக் கொண்ட அவர் தந்தை, கல்லூரிச் செலவுக்குப் பணம் தர மறுத்துவிட்டார். கல்லூரிச் செலவுக்கான பணத்தை ஈட்ட வழிதேடிய போது, லடாக்கிய மாணவர்களுக்கு மெட்ரிக் தேர்வுக்குப் பாடம் சொல்லித்தரும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவருக்குப் போதிய வருவாயைத் தந்தது.

மெட்ரிக் தேர்வில், லடாக்கிய மாணவர்களில் 5% மட்டுமே தேறினார்கள். அது அவருக்குப் பெரும் துயரத்தைத் தந்தது. ஏனெனில், அவர் பார்த்த லடாக்கியர்கள் முட்டாள்களில்லை. அவர்கள், பனிப்பாலைவனத்தில், கிடைக்கும் குறைந்த பட்ச வளங்களை மிகவும் புத்திசாலித்தனமாக உபயோகிக்கத் தெரிந்தவர்கள். நவீனத் தொழில்நுட்பத்தை கல்வியறிவில்லாமலேயே உள்வாங்கிக் கொள்ளக் கூடியவர்கள். ஆனால், பள்ளிக்கல்வியின் அடிப்படைத் தேர்வான பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் ஏன் வெற்றி பெறுவதில்லை என யோசித்தார்.

ஐந்து வயது வரை வீட்டில் லடாக்கிய மொழி பேசும் குழந்தை, பள்ளியில், அதற்குச் சற்றும் தொடர்பே இல்லாத உருது மொழியை எதிர்கொள்ள இயலாமல் திகைக்கிறது. லடாக்கிய மொழி தெரியாத, உருது பேசும் ஆசிரியர்களால், குழந்தைகளுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்க இயலாத நிலை. உருது மொழி பேசும் ஆசிரியர்கள் பலரும் லடாக்கில் வசிக்க விரும்புவதில்லை. எனவே, பள்ளிகளுக்குச் சரியாக ஆசிரியர்கள் வராமல் போனார்கள். மொத்தத்தில், லடாக்கில் பள்ளிக் கல்வி முறை சரியாக இயங்காமல் இருந்தது. அவரது வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ‘லடாக்கியர்கள், ஒரு அந்நியக் கல்விமுறைக்குப் பலியானவர்கள்’.

இதைப் போக்க, லடாக்கிய மாணவர்கள் கல்வி, கலாச்சார இயக்கம் (Student’s Educational and Cultural Movement of Ladakh (SECMOL)) என்னும் அமைப்பை அவர் 1988 ஆம் ஆண்டு துவங்கினார். 1994 ஆம் ஆண்டு, ஜம்மு கஷ்மீர் அரசுடன் இணைந்து, ‘புதிய நம்பிக்கை’ (Operation New Hope) என்னும் ஒரு பள்ளிக் கல்வித் திட்டத்தைத் துவங்கினார். புனிதர் தலாய் லாமா, இந்தத் திட்டத்துக்காக, 1.5 லட்சம் நன்கொடை அளித்தார். அரசு பள்ளிக் கல்வித்துறை, உள்ளூர் மக்கள், தன்னார்வ நிறுவன்ங்கள் ஆகிய மூன்று சக்திகளை இணைத்து, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், சரியான ஆசிரியர்களை நியமித்தல், பாடமுறையை, லடாக்கியச் சூழலுக்கு ஏற்ப மாற்றுதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி போன்றவற்றைச் செய்தார். துவக்கப்பள்ளிப் பாடபுத்தகங்களில் வரும் படங்கள், வார்த்தைகள் போன்றவற்றை, லடாக்கில் இருக்கும் வார்த்தைகளாக, படங்களாக மாற்றினார்.  இதனால், லடாக்கில் பள்ளிக் குழந்தைகளின் தகுதி மேம்பட்டது. 90 களில் 5% ஆக இருந்த தேர்ச்சி, 2015 ல், 75% ஆக உயர்ந்தது. ஆனால், இது போதாது என அவருக்கும் தெரியும். பத்தாம் வகுப்புத் தேர்வு என்பது, ஒரு அடிப்படைக் கல்வித் தேர்வு – இதில் தேர்வு பெறுவதே உலக சாதனை என்னும் அளவுக்கு, கல்விமுறை மிகவும் கடினமானதாகவும், மக்களின் மொழியைப் பேசாததாகவும் இருப்பதாகவும் உணர்ந்த அவர், இதை மாற்ற வேண்டும் என்னும் முயற்சியில் இறங்கினார்.

பள்ளியிறுதித் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்காக என்றே ஒரு பள்ளியைத் தொடங்கினார். அந்தப் பள்ளியின் அனைத்துச் செயல்பாடுகளையும், மாணவர்களே திட்டமிடுகிறார்கள். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவரின் கீழ், கல்வி, உணவு உற்பத்தி, சமையல், விளையாட்டு எனப்  பள்ளி நிர்வாகத்துக்கான குழுக்கள் அமைக்கப்பட்டு, வேலைகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. பள்ளியின் கல்வித்திட்டம், வகுப்பு நேரங்கள் போன்றவை இந்தக் குழுவால் திட்டமிடப்பட்டு இயக்கப்படுகின்றன. முழுக்க முழுக்க மாணவர்களால், மாணவர்களுக்காக நடத்தப்படும் பள்ளி

இந்தப் பள்ளியை நிறுவும் முன்பு, வாங்ச்சுக், ஃப்ரான்ஸ் நாட்டில், க்ரினோபிள் என்னும் இடத்தில் இயங்கும் ஒரு கட்டிட வரைகலைப்பள்ளியில், மண்ணை உபயோகித்து உருவாக்கப்படும் கட்டிடக்கலையைப் பயின்று வந்தார். பின்னர், மாணவர்கள் உதவியோடு, வடிவமைத்து, அந்தப் பள்ளிக்கான கட்டிடத்தை எழுப்பினார்.  பள்ளிக்கு அடிப்படைத் தேவைகளான மின்சாரம், நீராதாரம் போன்றவை கிடையாது. எனவே, பள்ளிக்கான தேவைகளை அவர்களே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்னும் நிலை.

லடாக் ஒரு குளிர்ப் பாலைவனம் என்றாலும், சூரிய ஒளி தாரளமாகக் கிடைக்கும் இடம். வருடம் 300 நாட்கள் வரை, தெளிவான சூரிய ஒளி கிடைக்கும். எனவே, சூரிய ஒளியை உபயோகித்து, தங்களுக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்து கொள்ள முடிவெடுத்தார்கள். பள்ளிக் கட்டிடத்தை அதற்கேற்றார்போல வடிவமைத்தார்கள். கட்டிடத்தின் தெற்குப்புறம், கண்ணாடிகள் கொண்டதாக, அதிக பட்ச சூரிய ஒளியை உள்வாங்கும் முகமாக அமைத்தார்கள். கட்டிடத்தின் சுவர்கள், தளங்கள் கெட்டிக்கப்பட்ட மண்ணாலும், மரம், மரத்தூள் போன்ற அரிதிற் கடத்திகளாலும் அமைக்கப்பட்டது. குளிர் காலத்தில், நெகிழியால் ஆன, பசுங்குடிலை ஏற்படுத்தி, அதன் மூலம், சூரிய ஒளியை உள்வாங்கி, காற்றைச் சூடுபடுத்திக் கொண்டார்கள். சூடான காற்று, கட்டிடத்தின் உள்ளே சென்று அறைகளைச் சூடுபடுத்த உதவியது. குளிர்காலத்தில், வெளியே குளிர் -15 டிகிரி இருக்கையில், கட்டிடத்தின் உள்ளே வெப்பம் +15 டிகிரியாக வைத்துக் கொள்ள உதவியது.

பாரபோலிக் ரிஃப்ளெக்டர்களை உபயோகித்து, சூரிய ஒளி அடுப்பில் உணவைச் சமைத்துக் கொள்கிறார்கள். சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் உபயோகித்து, நீர் எடுக்கிறார்கள். பள்ளிக்கான மின்சாரமும் சூரிய ஒளி செல்கள் மூலம் உற்பத்தி செய்து கொள்ளப்படுகிறது. இப்படி அனைத்துத் தேவைகளுக்கும் சூரிய ஒளியே ஆதாரம்.

இந்தக் காலகட்டத்தில், லடாக்கின் இன்னும் ஒரு பிரச்சினையில் அவர் கவனம் சென்றது. அது நீர்ப்பற்றாக்குறை. பருவநிலை மாற்றங்கள் காரணமாக, இமயமலையின் பனிப்பாளப்  போர்வையின் (Glacial cover) பரப்பளவு குறையத் துவங்கியது. இதனால், கோடைக் காலங்களில் பெரும் வறட்சி, திடீர் வெள்ளம் போன்றவை நிகழத் துவங்கின. இதற்கு ஒரு தொழில்நுட்பத் தீர்வைத் தேடினார் வாங்ச்சுக்.  குளிர் காலத்தில், சிந்து நதியின் நீர் பயன்படுத்தப்படாமல் ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இதில் ஒரு பகுதியைச் சேமித்து, வசந்த /கோடை காலத்தில் உபயோகிக்க ஒரு செலவு குறைந்த வழியை யோசித்தார். அதில் பிறந்தது தான் பனி ஸ்தூபி என்னும் கண்டுபிடிப்பு.

தன் கிராமத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட 60 அடி உயரத்தில் இருந்து, குழாய்கள் மூலம், சிந்துநதி நீரை தாழ்வான ஒரு இடத்துக்குப் புவியீர்ப்பு விசை மூலமாகக் கொண்டு வந்தார். நதி நீர் வந்து சேரும் இடத்தில், ஒரு நீரூற்றை உருவாக்கினார்.  தாழ்வான இடத்திலிருந்து மேல்நோக்கிப் பீரிட்ட நீர், குளிர்காலத்தின் -20% டிகிரியில், உடனே பனிக்கட்டியாகியது.  இயற்பியல் விதிகளின் படி அது ஒரு கூம்பு வடிவமான பெரும் பனிப்பாறையாக உருவானது. அதை அவர் பனி ஸ்தூபி என அழைத்தார். உயரமான இடத்திலிருந்து, நீர், குழாய்களின் மூலம் கொண்டு வரப்படும்போது உறைந்து விடாமல் இருக்க, தரையில் 5 அடி ஆழக் குழி வெட்டி, குழாய்கள் புதைக்கப்பட்டன. மண்ணில், நான்கடிக்குக் கீழ் குளிர் செல்வதில்லை, எனவே, ஐந்து அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட குழாய்களில் வரும் நீர் உறைவதில்லை.  பரிசோதனை முயற்சியில் வெற்றி பெற்ற பின்பு, புத்த மதத்தைலைவரான, சேத்செங் ரின்போச்சே (தலாய் லாமாவுக்கு அடுத்தநிலைத் தலைவர்) அவர்களின் மடாலயத்துக்கு முன்பு ஒரு பெரும் பனி ஸ்தூபியை நிறுவும் ஒரு திட்டத்தைத் துவங்கினார். அதற்கு 1.2 லட்சம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டபோது, சமூக நிதிதிரட்டல் ( crowd sourcing) மூலம் பணம் திரட்டினார். 2014 டிசம்பரில் துவங்கி, 2015 மார்ச் 5 ஆம் நாள் அன்று,  65 அடி உயரமான, மனிதனால் உருவாக்கப்பட்ட மிக உயர்ந்த பனி ஸ்தூபியாக உருவானது. மதத்தலைவர் ரின்போச்சே வருகை தந்து, அவர்கள் பணியை ஆசீர்வதித்தார்.  15 லட்சம் லிட்டர் நீர்க் கொள்ளளவு கொண்ட அந்த ஸ்தூபியின் கீழ், 5000 மரங்கள் நடப்பட்டன.

இது பற்றிக் கேள்விப்பட்ட ஸ்விட்சர்லாந்த் நாடு, இவர்களை அழைத்து, அவர்கள் நாட்டில் பனி ஸ்தூபிகளை, சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கச் சொன்னது.  இந்தப் பனி ஸ்தூபித் திட்டம்,  2016 ஆம் ஆண்டு,  உலக நாடுகளுக்கிடையே நடந்த தொழில் முனைப்புக்கான போட்டியில் வென்று, ரோலக்ஸ் விருது பெற்றது.

இமயமலையில் படர்ந்திருக்கும், பனிப்பாளங்கள் உருகி, பல நதிகளுக்கு வற்றாத நீராதாரமாகத் திகழ்கின்றன. அதன் இடுக்குகளில், பல ஏரிகள் உருவாகியுள்ளன. ஆனால், சமீப காலங்களில், பருவநிலை மாறுதல்கள் காரணமாக, இந்தப் பனிப்பாளங்கள் வேகமாக உருகி, அதிகமான நீர் இந்த ஏரிகளை அடைகின்றன. இதனால், பல ஏரிகள் வெடித்துச் சிதறி, பெரும் வெள்ள அபாயத்தை உருவாக்குகின்றன. இமயமலைத் தொடர் முழுதும் இது போலப் பல ஏரிகள் உள்ளன. அதில் ஒன்று சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் என்னும் பனிப்பாள ஏரி (Glacial lake). இது திபெத்/ சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது, இமய மலைத்தொடரில், 17000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், இந்த அபாயத்தைத் தீர்க்க, சிக்கிம் மாநில அரசு, சோனம் வாங்ச்சுக் உள்ளிட்ட பல வல்லுநர்களை அழைத்தது.

சிக்கிம் மாநிலத்தின் அறிவியல் தொழில்நுட்பக் கழகம், மாநிலப் பேரிடர் நிர்வாகம், மத்திய அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, நீர் வளத்துறை, இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய ராணுவம் எனப் பல நிறுவனங்களில் இருந்து,  வல்லுநர்களை இணைத்து வாங்ச்சுக் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. காங்டாக்கில் இருந்து ஒரு நாள் பயணம், அதன் பின்னர் நான்கு நாட்கள் கால்நடையாக மலையேறி, லோனாக் ஏரியை அடைந்தது குழு. ஏரியில் இருந்து, குழாய்கள் மூலம், ஏரியின் உபரி நீரை பாதுகாப்பாக வெளியேற்றுவதே திட்டம். குழாய்கள் ஜெயின் நீர்ப்பாசன நிறுவனம் மூலம் இதற்காகத் தயாரிக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டன. அவை பின்னர் யாக் எருமைகள் மூலம் லோனாக் ஏரியை அடைந்தன. ஆனால், 17000 அடி உயரத்தில், அந்த மலைச்சரிவில், பனிப்பொழிவுக்கிடையில் குழாய்களை இணைப்பது அவ்வளவு எளிதாக இல்லை.  ஏரியில் சென்ஸர்கள் அமைக்கப்பட்டு, ஏரியின் நீர்நிலை அளவுகள் செயற்கைக் கோள் வழியாகக் கண்காணிக்கப்பட்டன. பல்வேறு சிரமங்களுக்கிடையே, குழாய்கள் இணைக்கப்பட்டு, பாதுகாப்பாக நீர் வெளியேற்றும் கட்டமைப்பு நிறுவப்பட்டது.

ஆனால், இது முழுமையான தீர்வு அல்ல. இது ஒரு பேரிடரைத் தவிர்க்கும் வழி மட்டுமே. உண்மையான தீர்வு, பேரிடர் உருவாகாமல் பார்த்துக் கொள்வதே. வாங்ச்சுக், தனது பயணத்தின் அடுத்த படியாக,  மலைவாழ் பகுதிக்காக ஒரு உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக லடாக்கிய மலை மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து 200 ஏக்கர் பாலை நிலத்தை நன்கொடையாகப் பெற்றிருக்கிறார்.

இந்த உயர் கல்வி நிறுவனம், ஒரு மாற்று முறைக் கல்வி நிறுவனமாக இருக்கும். இது லடாக் மற்றும் இமயமலையில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வையும், அவர்கள் வாழ்க்கை மேம்பாட்டுத்திட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லும். ரோலக்ஸ் தொழில் முனைப்பு விருதில் கிடைத்த பணம் முழுவதும் துவக்க  முதலீடாகச் செய்யப்பட்டு, இந்தப் பல்கலைக்கழக வேலைகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்தத் தருணத்தில், வாங்ச்சுக் தனது பெருங்கனவை மக்கள் முன்வைக்கிறார்.  அது, பல நூறு பனி ஸ்தூபிகளை உருவாக்கி, அவற்றை இணைத்து, இமய மலையில் பெரும் பனிப்பாளத்தை செயற்கையாக உருவாக்குவது. கோடையில் அந்த பனி ஸ்தூபிகளில் இருந்து நீர் உருகி மக்களுக்கும், நதிகளுக்கும் தேவையான நீரை அளிக்கும். ஆனால், முழுவதுமாக உருகிவிடாது. அடுத்த குளிர்காலத்தில், அந்த ஸ்தூபிகள் மீண்டும் உயரும். இப்படிப் பலநூறு ஸ்தூபிகள் உருவாகி இணைந்து, பெரும் பனிப்பாளமாக மாறும். அது, பருவநிலை மாறுதல்களால் உலகம் இழந்துவரும் பனிப்பாளங்களை மீட்டெடுக்க அது முதற்படியாக இருக்கும் என்கிறார்.

லடாக்கிய மாணவர்களால் ஏன், பள்ளிக் கல்வியின் அடிப்படையான, பத்தாம் வகுப்புத் தேர்வை வெல்ல முடியவில்லை, என அவர்களுக்காக வாங்ச்சுக் துவங்கிய பயணம், இன்று, பூமியை மிரட்டிவரும் மாபெரும் பிரச்சினைகளுள் ஒன்றுக்கான தீர்வைத் தேடும் பயணத்தின் முதற்படியில் நிற்கிறது.

லடாக் பாலைவனத்தில், அடிப்படை அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் கொண்டு மக்களுக்காக அவர் இதுவரை நிர்மாணித்துள்ள கல்வி, நீராதாரக் கட்டமைப்புகளை பார்க்கும்போது, பனிப்பாள மீட்டெடுப்பு (Glacial regeneration) என்னும் கனவு மெய்ப்படும் சாத்தியங்கள் உள்ளன எனத் தோன்றுகிறது. அந்தப் பயணத்தில், இந்தியப் பள்ளிக் கல்வித்துறையின் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதி வெற்றி பெற முடியாத பலநூறு லடாக்கியர்கள் அவருடன் இருப்பார்கள் என்பதே இக்கனவை மேலும் இனிமையாக்குகிறது.

https://www.youtube.com/watch?v=uaPMmTmtJ4k&t=427s

https://www.youtube.com/watch?v=pPM72gMQtRA

 

 

 

 

முந்தைய கட்டுரைம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-24