Tinnitus
அன்புள்ள ஜெயமோகன் அண்ணாவிற்கு,
டின்னிடஸ் பற்றி, ‘காலையில் துயில்பவன்’ கட்டுரை வழியாக அறிந்தேன். எனக்கு இப்பிரச்சனை 2012ஆம் ஆண்டில் பள்ளியின் போட்டி விளையாட்டிற்கு மறுநாள் காலையில் ஏற்பட்டது. காதில் ஏதோ அடைத்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது என்று காது மருத்துவர்களிடம் சென்று செலவு செய்து ஓய்ந்தும் விட்டேன். நான்கு நாள் முழு இரவு உறக்கமில்லாமல் தவித்தேன். என்ன நோய் இதுவென்று புரியாமல் தவித்தேன். கடைசியாக ஒரு மலாய் காது நிபுணர்தான் இது ‘டின்னிடஸ்’ என்றும் மூளை சுயமாக சத்தத்தை எழுப்புவதாகவும் இதற்கு மருந்து இல்லை என்றும் சொல்லிக் கைவிரித்தார்.
அதன் பிறகு இணையத்தில் தேடித் தேடி டின்னிடஸ் பற்றி விரிவாகப் புரிந்து கொண்டேன். அப்பிரச்சனைக்குப் பல தீர்வுகள் பரிந்துரைக்கப்பட்ட பல கட்டுரைகள் இருப்பினும் கடந்த ஏழு ஆண்டுகள் அது என்னை விட்டு நீங்கவில்லை. எனக்கு இருவர் டின்னிடஸ் குறித்து சொன்ன விடயங்கள் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியாக அமைந்துவிட்டிருந்தது.
ஒருவர், மலேசிய கல்வி அமைச்சில் பணியாற்றிய இலக்கிய ஈடுபாடும் கொண்ட திரு.பி.எம் மூர்த்தி. தண்டவாளத்தின் அருகில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லித் தொடங்கினார். எனக்கொரு நண்பன் அப்படி இரயில் தண்டவாளத்தின் அருகில் வாழ்ந்தவன் இருந்திருக்கிறான். தினம் பலமுறை இரயில் கடக்கும்போது பெரும் சத்தமும் வீடு அதிர்வும் இருக்கும். ஒருநாள் இரவில் அங்குப் படுத்து அதனால் தூக்கம் பாதிக்கப்பட்ட அனுபவத்தை நினைவு கூர்ந்து பார்த்தேன். ஆனால், என் நண்பன் வாழ்நாளில் அதனுடன் பழகியவன். அந்த இரயில் சத்தம் அவனை ஒன்றுமே செய்யவில்லை. அவ்வீட்டில் உள்ளவர்கள் ஏதும் நடவாததைப் போல நிம்மதியாக உறங்கினார்கள். இதையேத்தான் மூர்த்தி அவர்களும் சொல்லிக் காட்டினார். உனக்கு ஏற்பட்டுள்ள சத்தத்தையும் அப்படியே நினைத்துக் கொள். ஒருநாள் பழகிவிடும் என்றார்.
அதே போல, அடுத்தவர் டாக்டர் சண்முக சிவா. காதில் உருவான சத்தம் பற்றி அவரிடம் சொன்னபோது பின்னர் விசாரித்துவிட்டு மீண்டும் அழைத்தார். டின்னிடஸ் பற்றி சொல்லிவிட்டு இன்னொன்றும் சொன்னார். அச்சத்தத்துடன் போராடாதீர்கள்; தோல்வியே மிஞ்சும். அதனைப் பழகிக் கொள்ளுங்கள் என்றார். வாழ்வில் உருவாகும் எத்தனையோ தடைகளை, அவமானங்களை, பிரச்சனைகளை நாம் பழகிக் கொண்டு நகர்ந்து போவதில்லையா? அப்படித்தான் ஏழு ஆண்டுகள் அதனைத் தாண்டி பழகி வந்துவிட்டேன்.
மாதவன் இளங்கோ கடிதம் 2016இல் எழுதப்பட்டது. நான் வாசிக்கத் தவறிவிட்டேன். இன்று வாசித்தபோது நான் எந்த மனநிலையில் எனக்கு நேர்ந்த பெரும் சிக்கலைக் கடந்து வாழ்வதற்கான பாதையைத் தேர்ந்தெடுத்தேனோ அதேபோன்றுத்தான் மாதவன் இளங்கோவோம் என்று நினைத்து மகிழ்ந்தேன்.
டின்னிடஸ் நோய் அல்ல; அதுவே முடிவும் அல்ல. அது குணமடையலாம்; அல்லது வாழ்நாள் முழுவதும் உடன் இருக்கலாம். ஒன்றை மட்டுமே ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உலகில் டின்னிடஸால் பாதிக்கப்பட்டவர்கள் கோடி பேர் உள்ளார்கள். அதிலிருந்து மீண்டும் வந்தவர்கள் சொற்பமானவர்கள்; அதனோடு வாழப் பழகிக் கொண்டவர்கள் ஏராளம். ஆகவே, டின்னிடஸ் என்பதை அனுபவத்தால் எதிர்கொண்டு கடக்க முடியும் என்பதே நான் கற்றுக் கொண்டது. இதனைப் பற்றி நானும் இதுவரை எழுதியதில்லை.
என்ன ஆச்சர்யம் என்றால் டின்னிடஸ் ஏற்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன் ‘சத்தம்’ என்கிற ஒரு சிறுகதையை எழுதி முடிக்காமல் மடிக்கணினியிலேயே வைத்திருந்தேன். அதில் வரும் கதாப்பாத்திரத்திற்கு வீட்டில் நீர் ஒழுகும் சத்தம் கேட்கத் துவங்கி வீட்டை முழுவதும் ஆராய்ந்து பார்த்தும் விடையறியாமல் தவித்துக் கொண்டிருப்பான். இறுதியில் அது வீட்டில் கேட்கும் சத்தம் அல்ல அவன் காதில் கேட்கும் சத்தம் என்று தெரியும்போது கதை மர்மத்துடன் முடியும். அச்சிறுகதை அபத்தமாக உள்ளது என்று நானே பிரசுரிக்காமல் விட்டுவிட்டேன். அதே போன்று சிக்கல் எனக்கு ஒரு வாரம் கழித்து காதில் வேறுவகை சத்தம் கேட்கும்போது அதை பிரமை என்று நிராகரிக்க முடியவில்லை. இலக்கியம் முன்னமே தன்னை என் வழியே நிகழ்த்திக் காட்டிக் கொள்கிறதோ என்றும் தோன்றியது. அதுவொரு பேரதியத்தின் உச்சத் தருணம் அல்லவா?
எதையும் கடந்துவிடலாம் என்கிற பேரனுபவத்தை ஆச்சர்யமாக முன்னும் பின்னும் ஆழ்மனத்தில் உருவாக்க வல்லது இலக்கியமும் வாசிப்புமே. டின்னிடஸ்க்கு இதுவும்கூட ஒரு விடுதலைத்தான். இச்சிக்கல் தொடர்பாக பேச நினைக்கும் உலகில் ஏதோ ஒரு மூலையில் தவித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
நான் பேசத் தயங்கியதை மாதவன் இளங்கோ மிக இயல்பாகப் பேசிச் சென்றதை வாசித்து மகிழ்ந்தேன். தன்னம்பிக்கை இல்லாவிட்டால் நாம் இலக்கியம் வாசித்து ஏது பயன் என்று மட்டுமே என்னை நானே கேட்டுக் கொள்வேன்.
கே.பாலமுருகன்