கட்டண உரை,பிறந்தநாள்,கோவை

கோவையில் மூன்றுநாட்கள் இருந்தேன். திட்டமிட்டிருந்தது இரண்டுநாட்கள்தான். கோவை கட்டண உரை ஏப்ரல் 20 ஆம் தேதிதான் திட்டமிடப்பட்டது. பலரிடமும் பணமும் பெற்றுவிட்டோம். ஆனால் அதேநாளில் எம்.கோபாலகிருஷ்ணன் படைப்புக்கள் பற்றிய முழுநாள் கருத்தரங்கை கோவையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆகவே ஒருநாள் கட்டணஉரையை தள்ளிவைத்தோம்.முன்பதிவுசெய்த அரங்கத்தை கைவிடவேண்டியிருந்தது. ஒருநாள் கூடுதலாக தங்கநேர்ந்தது

21 அன்று ஞாயிறு ஆதலால் அரங்கு கிடைக்கவில்லை. சேம்பர் ஆஃப் காமர்ஸின் அரங்கை பெற்று நிகழ்ச்சியை முடிவுசெய்தோம். நான் ரயிலுக்கு முன்பதிவு செய்திருந்தேன். அதை மாற்றவேண்டியதில்லை என முடிவுசெய்தேன். எம்.கோபாலகிருஷ்ணன் விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். அங்கும் செல்லவேண்டியிருந்தது

21 அன்று காலை கோவைசென்று அங்கே விடுதியில் தங்கினேன். நண்பர்கள் வந்துகொண்டிருந்தார்கள். பகல் முழுக்க பேச்சு. மதியம் கிளம்பி எம்.கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்குச் சென்றேன்.போகன், சுனீல்கிருஷ்ணன், சு.வேணுகோபால், ‘பசலை’ கோவிந்தராஜ் என  பெரும்பாலான நண்பர்கள் அங்கேதான் இருந்தனர். பி.ஏ.கிருஷ்ணன் இப்போதெல்லாம் ஆண்டில் மூன்றுமாதம் கோவையில் இருக்கிறார். அவர் விழாவுக்கு வந்திருந்தார்.

நான் சென்றபோது நாஞ்சில்நாடன் பேசிக்கொண்டிருந்தார். நாஞ்சில்நாடன் கோபாலகிருஷ்ணனுடன் தனக்கிருக்கும் உறவையும் கோபாலகிருஷ்ணனின் குறைத்துச்சொல்லிச் செல்லும் அழகியலையும் பற்றிப் பேசினார். விஜயா வேலாயுதம் எம்.கோபாலகிருஷ்ணனின் சமீபத்தைய நாவலான மனைமாட்சி பற்றிப் பேசினார். க.மோகனரங்கன் கோபாலகிருஷ்ணனுக்கும் அவருக்குமான நெடுங்கால நட்பைப்பற்றிப் பேசினார். நாங்கள் அனைவருமே சந்தித்துக்கொண்ட 1991 ல் ஊட்டியில் நடந்த பசுமைநடைச் சந்திப்பைப் பற்றி அனைவருமே சொன்னார்கள்.  பாவண்ணன் கோபாலகிருஷ்ணனின் முக்கியமான கதைமாந்தர்களைப் பற்றிப் பேசினார்.

 

முன்னரே இசை, கே.என்.செந்தில், சு.வேணுகோபால், சுனில் கிருஷ்ணன் என பலர் பேசியிருந்தார்கள். இவ்வரங்கு இலக்கிய ஆர்வலரான லாவண்யா சுந்தரராஜன் முயற்சியால் எழுத்தாளர்களான நண்பர்களின் நிதியுதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது.

ஒரு படைப்பாளியைப் பற்றிய முழுநாள் கருத்தரங்கு என்பது ஒர் அரிய செயல். அவர்மீதான நோக்கைக் குவிக்கவும், ஒட்டுமொத்தமான ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக்கொள்ளவும் உதவுவது அது. இங்கே அது இலக்கியவாசகர்கள், எழுத்தாளர்களால்தான் பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படுகிறது. முன்னர் பாவண்ணன் பற்றி அமெரிக்க நண்பர்களான பி.கெ.சிவக்குமார் முயற்சியில் சென்னையில் ஒரு முழுநாள் கருத்தரங்கு நிகழ்ந்துள்ளது. சமீபத்தில் மனோன்மணியம் பற்கலையில் சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றி ஒருநாள் கருத்தரங்கு அ.ராமசாமி முயற்சியில் நடைபெற்றது. பூமணி பற்றிய ஒருநாள் கருத்தரங்கு பெருந்தேவி முயற்சியால் முழுநாள் கருத்தரங்கு ஒன்று சென்னையில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

மாலை அறைக்குத்திரும்பியபோது மீண்டும் நண்பர்கூட்டம். ஒவ்வொருவராகப் பிரிந்துசெல்ல இரவு 12 மணி ஆகிவிட்டது. நான் என் உரையைத் தயாரிக்கத் தொடங்கினேன். என் உரைகள் எவையும் இயல்பாக ஒழுக்காக வெளிப்படுவன அல்ல. அதற்குப்பின்னால் தயாரிப்பு உள்ளது, அதைக் கடந்து மேடையில் ஒன்று புதிதாக வெளிப்படும். அது அளிக்கும் எழுச்சியே மீண்டும் மேடையில் பேசவைக்கிறது.

21 ஆம் தேதி காலைமுதல் நண்பர்கள் அறைக்கு வரத்தொடங்கினர். பேச்சு நிகழும் நாளில் நான் கூடுமானவரை பகலில் பேசுவதில்லை. எனக்கு மேடைப்பேச்சில் சற்றே குரல்திணறல் இருக்கிறது. அதற்கு ஏதாவது செய்தாகவேண்டும். பகலில் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் தேர்தல் சார்ந்த விவாதம். கொஞ்சம் தத்துவம் கொஞ்சம் இலக்கியம் என்று சென்றுகொண்டே இருந்தது.

 

உரைக்கு அணியவேண்டிய உடையை கொண்டுவந்திருந்தேன், வழக்கமான சட்டைதான். ஆனால் பாண்டிச்சேரி நண்பர் மணிமாறன் ஒரு சட்டையை பிறந்தநாள் பரிசாகக் கொண்டுவந்து தந்தார். வெண்பா வேட்டி பரிசளித்தார். சரி, புத்தாடையுடன் மேடை ஏறுவோம் என நினைத்தேன். மாப்பிளை போலிருப்பதாக எவரோ சொன்னார்கள். எனக்கே வாசலில் வருகையாளர் பட்டியலுடன் அமர்ந்துகொண்டிருந்த ஈரோடு கிருஷ்ணன் மொய் வசூலிக்கிறாரோ என ஐயம் எழுந்தது.

விழா நிகழ்ந்த அரங்கு இறுதிநேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது 160 இருக்கைகள். சற்றே ‘விரிவுபடுத்தி’ 190 ஆக்கப்பட்டது. ஒலியமைப்பு சிறப்பானது என்பதனால் அதனால் இடர் ஏதும் உருவாகவில்லை. ஆனால் உரை அறிவிக்கப்பட்ட சிலநாட்களிலேயே அரங்கம் நிறைந்துவிட்டது. ஐம்பதுபேருக்குமேல் வரவிரும்பினர்,இடமில்லை எனச் சொல்லும்படி ஆகிவிட்டது.

 

ஏற்கனவே ஆற்றிய உரைகளின் தொடர்ச்சியாக இவ்வுரையைச் சொல்லலாம். இந்தியாவின் இன்றைய எண்ணங்கள், தன்னிலைகள் சென்ற இருநூறாண்டுகளில் உருவாகிவந்ததை விவாதித்து   வெவ்வேறு போக்குகள அடையாளப்படுத்தும் முயற்சி. ஒருபகுதி அறியப்பட்ட வரலாற்று, இலக்கியச்செய்திகள். இன்னொரு பகுதி அவற்றிலிருந்து நீளும் என் உளம்கூர்தல்கள், புரிதல்கள், வினாக்கள். கேட்பவர்களுக்கு சில அடிப்படைவினாக்களை எழுப்பி முன்செல்ல உதவுவன இவ்வுரைகள் என நினைக்கிறேன்

மாலையில் உரைகுறித்த விவாதம் என் அறையில் நிகழ்ந்தது. அறைநிறைய நண்பர்கள். இரவு 12 மணிக்கு கதிர் “ஒரு ஐந்துநிமிடம் வெளியே செல்லலாமா?” என்றார். ஏதோ தனிப்பட்டமுறையில் பேசப்போகிறார் என நினைத்தேன். வெளியே சென்றபின்னர்தான் என் பிறந்தநாள் கொண்டாட்டம் என தெரிந்தது. கேக்கில் மெழுகுவத்திகள், மா,பலா,வாழை என கனிகள் என அனைத்தும் ஒருங்கியிருந்தன. நான் இளமையிலிருந்தே இவ்வகை கொண்டாட்டங்களைச் செய்வதில்லை. ஆகவே கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன் [2017] பவா என் வீட்டுக்கு ஒரு நண்பர்குழாமுடன் வந்து என் பிறந்தநாளை கொண்டாடிவிட்டுச் சென்றார். சென்ற ஆண்டு கொண்டாட்டம் ஏதுமில்லை. மின்னஞ்சல்கள் வழியாகவே பிறந்தநாளை அறிந்தேன். இம்முறை கோவையில் தற்செயலாக இருக்கநேரிட்டமையால் இக்கொண்டாட்டம்.

இரவு ஒருமணிவரை நண்பர்கள் இருந்தனர். மறுநாள் காலையில் மீண்டும் நண்பர்கூட்டம். விஜய் சூரியனின் மனைவி பிரதமன் சமைத்து கொடுத்தனுப்பியிருந்தார்கள். செல்வேந்திரன் பரிசுப்பொருளுடன் வந்தார். வெவ்வேறு வாழ்த்துக்கள், பரிசுகள்.

 

பழைய நண்பரார வ.ஸ்ரீனிவாசன் சிறுவாணி இலக்கியவட்டம் நடத்தும் பிரகாஷ் என்னும் நண்பருடன் வந்தார். அவர்கள் வெளியிட்ட நூலை அளித்தார். ஸ்ரீனிவாசன் முதன்மையாக ஜெயகாந்தனின் நண்பர். சுகா, பாரதிமணி அனைவரும் ஒருகாலத்தில் ஒருவட்டமாக அணுக்கமானவர்களாக இருந்தார்கள். வ.ஸ்ரீனிவாசன் எழுதிய கட்டுரைகள் ’எதுமாதிரியும் இல்லாமல்’ என்னும் தலைப்பில் நூலாகியிருக்கின்றன

சிறுவாணி இலக்கியவட்டம் முன்னர் சத்தியமூர்த்தி அவர்களின் மகள் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர்வட்டம் என்னும் அமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டது. அன்று பதிப்பகங்கள் இலக்கியநூல்களை பதிப்பிக்காத நிலை இருந்தது. கைப்பிரதிகள் ஆண்டுக்கணக்கில் கிடந்து பல மறைந்தும்போயின. ஆசிரியரே சொந்தச்செலவில் அச்சிடநேர்ந்தது. வாசகர்வட்டம் இலக்கியவாசகர்களைக்கொண்டு ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நூல்களை வெளியிட்டு அவற்றைப் பகிர்ந்துகொண்டது. அதாவது குறைந்தது 200 பிரதிகளை வாங்கிக்கொள்ளும் ஒரு வாசகர்களின் குழுதான் அது. ஆனால் பெரிய இழப்புக்குப்பின் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி நிறுத்திக்கொண்டார்.

இது எழுபதுகளில் நிகழ்ந்தது. ஆனால் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்குப்பின்னரும் வாசகர்வட்டம் இலக்கியச்சூழலில் நினைவுகூரப்படுகிறது. அவர்கள் வெளியிட்ட நூல்கள் மிக அழகிய கட்டமைப்பு கொண்டவை. மிகமுக்கியமான இலக்கிய ஆக்கங்கள். என்னிடம் வாசகர்வட்ட நூல்கள் பல இன்றும் உள்ளன. தமிழிலக்கியத்திலேயே ஒரு திறப்பை உருவாக்க வாசகர்வட்டத்தால் முடிந்தது.

சிறுவாணி வாசகர்வட்டம் நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் போன்றவர்களின் நூல்களை வெளியிட்டிருக்கிறது. க.நா.சுவின் நூல்களை மறுபதிப்பு செய்துள்ளது. ஆனால் இன்றையசூழல் வேறு. இன்று பதிப்பகம் மலிந்து எல்லாமே அச்சில்வந்துகொண்டிருக்கின்றன. இச்சூழலில் எதைவேண்டுமென்றாலும் வெளியிடலாம் என்பது காலப்போக்கில் பொருளிழந்ததாக ஆகிவிடும். அதற்கு ஒரு திட்டமும் நெறியும் வேண்டும்.

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி [வாசகர்வட்டம்]

எடுத்துக்காட்டாக, படைப்பாளிகளின் முதல்நூல்களை வெளியிடலாம். அல்லது இந்தியாவின் பிறமொழிகளில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட நூல்களை வெளியிடலாம், கிடைப்பதற்கு அரியவற்றை வெளியிடலாம். பிறபதிப்பகங்கள் செய்யாத, விட்டுப்போன ஒன்றைச் செய்யும்போதுதான் இத்தகைய முயற்சிகளுக்கு மதிப்பு

மாலையில் கோவையிலிருந்து நாகர்கோயிலுக்குக் கிளம்பியபோது துயில்களைப்பு. ரயில்நிலையத்திற்கு வெண்பா கீதாயன்,ஸ்வேதா, ஜி.எஸ்.வி.நவீன் ஆகியோர் வந்திருந்தார்கள். ரயிலில் ஏறியபோது எப்போதும் கோவை வந்து திரும்பும்போது உணரும் நிறைவை அடைந்தேன்.

 

பிறந்தநாள் கணக்கு

பிறந்தநாள்-2018

பிறந்தநாள் 2017

பிறந்தநாள் 2016

பிறந்தநாள் 2011

பிறந்தநாள் 2009

பிறந்தநாள் 2008

லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி பற்றி…

 

முந்தைய கட்டுரைஎம்.எல்.நாவல்-விமர்சனம்-உஷாதீபன்
அடுத்த கட்டுரைசாரு நிவேதிதாவுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் விருது