1962ல் நடந்த இந்திய சீன யுத்த பின்புலத்தில், எழுதப்பட்ட கதை என்றாலும், காந்திய கொள்கைகளுக்கும், நவீன இந்தியாவை கட்டமைக்க தேவையான தொழில்நுட்ப பாய்சலுக்கும், அன்றைய சமூகத்தில் மனித மனங்களின் போக்குகளுக்கும், உள்ள முரண்களை, கலந்து ஒரு நாடகத்தன்மையுடன் புனையப்பட்ட, நாவல்.
நாடகபாணி கொண்ட நாவலாக இருந்தாலும் , ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகத்துக்குள் நுழையும் மானுட, புதிய, சமூகத்தை காட்ட முற்படும் கதைக்களம். காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அதன் போக்கில் வாழ்வை அமைத்துக்கொண்ட, ஆசிரியர். பபானி பட்டாச்சார்யாவால் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது . மூன்று திரிகளாக பிரிந்தும், ஒன்றோடு ஒன்று இணைந்தும், கதை சொல்லப்படட விதம் இந்த நாவலுக்கான கச்சிதத்தன்மையும் , அதே கச்சிதத்தன்மை தான் , நாவலை Happy Ending,எனும் நாடக தன்மைக்கும் இட்டுச்செல்கிறது.
காந்தியின் கிராம சுயராஜ்ஜிய கொள்கையில் பற்றும் , காந்திய தரிசனங்களில் , உறுதியும் கொண்டு லட்சிய வாழ்வு வாழ்ந்துவரும் சத்யஜித் எனும் காந்தியர் , அவர் கட்டி எழுப்பிய ‘ காந்திகிராம்’ எனும் கிராமம், அதை ஒட்டிய அவர் வாழ்வு என கதையின் முதல் திரியும் சுதந்திரத்திற்கு பின் , இந்தியாவின் வளர்ச்சி , பாதுகாப்பு ,பொருளாதாரம், அனைத்துமே தொழில்துறையை நம்பியே, இருக்கிறது என்கிற நேருவிய சிந்தனையை கொண்ட, நவீன இரும்புயுக இளம் மனிதராக தலைமை பொறியாளர் பாஸ்கர் , மற்றும் அவர் அடைய விரும்பும், ‘காந்திகிராம் ‘ நிலமும் ,அதன் சவால்களும் , என இரண்டாவது திரியும் .இந்த இருவருக்கும் இணையாகவே கதை முழுவதும் வந்து செல்லும் லட்சிய பெண்களும், அவர்தம் காந்திய லட்சியங்களின் மேல் உள்ள காழ்ப்பும் , மேன்மையும் , போதாமையும் என பல்வேறு உளநிலைகள் , என மூன்று சரடும் இணையாகவே பின்னப்பட்டுள்ளது .
தன்னளவில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் காந்திகிராமம் , அதன் ஒழுக்கமான வாழ்வு , அதன் தலைமையாக சத்தியஜித் மற்றும் அவர் மனைவி சுருச்சி , மகள் சுமிதா. எந்தவித ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் இல்லாத அந்த கிராம வாழ்விற்கு அருகிலேயே , இந்திய, இரும்பு எக்கு தேவையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட ஆலை, மற்றும் அதன் விரிவாக்கம், கிராமத்தை கைப்பற்ற என்னும் நிர்வாகம் , அதன் தலைமை பொறியாளர் பாஸ்கர் , அவரின் வியூகங்கள் , அப்போது தொடங்கும் இந்திய சீன போர், மற்றும் இந்திய ராணுவத்திற்கான இரும்பு தேவை அதிகரிப்பு, பாஸ்கருக்கு உற்பத்தியை பெருக்க மேலிடத்தின் அழுத்தம் , காந்தி கிராமம் மேல் அவர் தொடுக்கும், மறைமுகமான ஆக்கிரமிப்பு உக்திகள் அதற்கிடையில் பாஸ்கருக்கு சுமிதா மீதான காதல். ஒரு மாத காலத்தில் போர் முடிவடையும் போது , காந்தியம் ,காதல் , லட்சியம் , இரும்பு உற்பத்தி எல்லாம் என்னவாக மாறி இருக்கிறது என்பதோடு கதையும் முடிகிறது .
சத்யஜித்
நாவலின் நாயகனாக வரும் இவர் , காந்தியை நகலெடுத்த பாத்திரப்படைப்பு. காந்தியுடனும் , தாகூருடனும் நேரடி தொடர்பில் இருந்த, அவர்களால் கூர் தீட்டப்பட்ட தன் வாழ்வை , ஐரோப்பிய கல்விக்கு பின் தேச சேவைக்கு அர்ப்பணித்து கொள்கிறார் . தேசத்தந்தை நிறுவிய ‘ சேவா கிராமிலும்’ , சாந்தி நிகேதனிலும் சேவையாற்றி , தனியாக ”காந்தி கிராம்” எனும் சுயராஜ்ய கிராமத்தை நிறுவுகிறார் ,
நிதானமான இவரது லட்சிய வாழ்வில் , நவீன இந்தியாவை கட்டமைத்த தொழிற்புரட்சி ‘ இரும்பு ஆலை ‘ எனும் வடிவில், மிகப்பெரிய சவாலாக வந்து நிற்கிறது. சுதந்திர கால அறப்போராட்டங்கள் , உண்ண நோன்பு , மக்களை ஈடுபடுத்துதல் என்று மீண்டும் வாழ்க்கை ஒரு போராட்டமாக மாறுகிறது , அவரது போராட்டங்களில் அணுக்க துணையாக , மனைவியும் , மகளும் இருக்க, மக்களில் சிலர் ஆதரவாகவும் சிலர் விலகியும் இருப்பதை கண்டு மனம் வருந்துகிறார் . ஆனாலும் இறுதிவரை விடாபிடியாக போராடிய வண்ணம் இருக்கிறார் .
சத்யஜித்தின் குடும்ப வாழ்வில், காந்தியை போன்றே அத்தனை குழப்பங்களும், குற்ற உணர்வும் இவருக்கும் வருகிறது , காம ஒறுப்பு, அதில் அடையும் தோல்வி , பின் சுய தண்டனை , மனைவி , மற்றும் மகளின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளாமல் , காந்தியம் எனும் கொள்கையை அவர்களுக்கு சூடுதல் . என பல இடங்களில் சறுக்கலும். உறுதியுடனும் ,உத்வேகத்துடனும் லடாக் எல்லைக்கு நடை பயணம் மேற்கொண்டு , சீன அதிகாரிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த கிளம்புவதும். காந்தி கிராமை காப்பாற்ற, உண்ண நோன்பு இருத்தல் , காந்தியின் கைகளால் பெற்ற ‘ ராட்டை ‘ யில் நூல் நூற்றல், அரசுடன் தொடர்ந்து அறவழியில் போராடுதல், தன் கிராம பெண்களை சுதந்திரமாக சிந்திக்கவும் , செயல்படவும் விடுதல் , மனைவியை சர்வதேச அமைதி மாநாட்டிற்கு ரஷ்யா அனுப்புதல் என பல இடங்களில் நிமிரவும் செய்கிறார்.
அறவழி போராட்டங்களுக்கு மக்கள் அனைவரையும் உள்ளிழுத்து கொள்ளுதல் எனும் காந்திய சிந்தனையை , சுதந்திரம் அடைந்த 10-15 வருடங்களுக்கு பின் மீண்டும் முயற்சி செய்கிறார் , காந்தியை போலவே நாளிதழ்களில் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார், லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் அதில் 100 தீவிரமானவர்களை தேர்ந்தெடுத்து லடாக் நோக்கி நடைபயணம் செல்ல திட்டமிடுகிறார் , ஆனால் ஐம்பது பேர் கூட விண்ணாப்பிக்காதது குறித்து மனம் நோகிறார், ஒரு யுகம் மாறுகிறது என்கிற புரிதலை அடைய தடுமாறுகிறார் , மீண்டும் தனி மனிதனாகவே போராடுகிறார்.
காமத்தின் தடுமாற்றத்தின் போதும் , தன்னையே சுயவதை செய்துகொள்ளும் போதும் , அவரின் நிலை உங்களுடைய ”இன்றைய காந்தியின் ” இந்த வரிகள் தான் ஞாபகம் வந்தது.
//காந்தியின் உலகியல் என்பது சுய ஒறுப்பு சார்ந்தது , காமமும் காதலும், சுய மலர்தல் சார்ந்தவை , அவை ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை ,ஆகவே, காந்தியம் அடிப்படையிலேயே காதலுக்கும் , காமத்துக்கும் எதிரான தரிசனம், அதன் ஆகப்பெரிய குறைபாடே அதுதான் // ‘காந்தியை அனைத்து கிறுக்குத்தனங்களுடனும் நான் ஏற்கிறேன் , இப்படித்தான் ஞானிகளும் , மேதைகளும் நமக்கு வரலாற்றால் அளிக்கப்பட்டிருக்கிறார்கள் , என்பதனால் நமக்கு வேறு வழியில்லை .//
தலைமை பொறியாளர் பாஸ்கர்
சுதந்திரத்துக்கு பின் எழுந்த , இந்திய தொழில் மற்றும் வளர்ச்சி யுகத்தின் நாயகனாக, ஐரோப்பிய கல்வியும் சிந்தனையும் கொண்ட , வளர்ச்சி ஒன்றே குறிக்கோள் என தீவிரமாக இயங்கும் பாஸ்கர். புதுப்புது உத்திகளின் மூலம் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கும் ‘ காந்தி கிராமத்தை நோக்கி தன் இரும்பு கரத்தை விரிக்கிறார். சலுகைகளும் , ஆசைகளையும் காந்திகிராம மனிதர்கள் மேல் விதைத்து , அதில் சிறிது வெற்றியும் அடைகிறார் , ஆனால் சுமிதாவின் மேல் பெரும்காதல் கொண்டு தன்னை இழக்கிறார் .
பாஸ்கரின் கார்பொரேட் மூளை , சத்யஜித்தை வென்றால் தான், காந்தி கிராமை வெல்லமுடியும் என்பதை புரிந்து கொள்கிறது , ரூபா எனும் தன் ‘தனி செயலாளரை ‘ வைத்து சத்யஜித்தை மயக்க அனுப்புகிறார், தோல்வியடைகிறார் , ஆனால் தானே நேரடியாக களத்தில் இறங்கி ‘ காந்தி கிராமில் ‘ நுழைந்து அவர்களை நெருங்குகிறார் , காந்திகிராம் அவரை நட்பாய் ஏற்றுக்கொள்கிறது .
இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பு கொண்டு , அவர்களை கொன்ற ஒரு இந்துவிடம், ‘ அனாதை இஸ்லாமிய குழந்தையை வளர்ப்பதன் மூலம் மட்டுமே நீ மீளமுடியும்” என்று காந்தி சொல்லி தன் வாழ்வை மாற்றி அமைத்து கொண்டவரின் சித்திரம் இந்த நாவலில் வேறு வகையில் வருகிறது , சீன போர் தொடங்கிய நிலையில் ,தன் தொழிற்சாலையில் வேலை செய்யும் சீனர் ஒருவர் உளவு பார்க்கும் நபராக , பிடிபட்டு சிறைக்கு செல்ல , அவர் குழந்தைகளை பாஸ்கர் எடுத்து வளர்க்கிறார் , இப்படியான நாடக பாணி காட்சிகளும் நாவலில் அங்கங்கே இருக்கவே செய்கிறது .
//காந்தி தொழில்நுட்பத்தில் உள்ள வன்முறையை உணர்ந்தவர் , நவீன தொழில் நுட்பத்தில் இருந்து பேராசையை தவிர்க்கவே முடியாது என்று எண்ணினார் , மேலும் மேலும் என விரிய துடிப்பதே அதன் இலக்கு , ஆகவே , தொழில்நுட்பம் ஒரு வணிகம் வணிகத்திலிருந்து பேராசையை பிரிக்கவே முடியாது , பேராசை கொண்ட வணிகம் என்பது சுரண்டலே //
காந்தியின் இந்த குரலுக்கான எதிர்தரப்புக் குரல் தான் பாஸ்கருடையது.
நாவலின் மற்ற முக்கியமான பாத்திரங்கள் .
சுருச்சி
சத்யஜித்தின் காதல் மனைவியாக வரும், இவரில் இருந்து தான் நாவலே தொடங்குகிறது , லட்சிய காதல் , காந்திய சிந்தனையாளரான கணவர் , அவரை நகலெடுத்த மகள் சுமிதா , காந்தி கிராம் அதன் மீதான தனது உணர்வுகள் என , நாவல் முழுவதும் வரும் நாயகி , லட்சிய காதலும் அதன் போதாமைகளும் , அது போன்ற காந்திய அடிப்படை கொண்ட வாழ்வு தன் மகளுக்கு அமைந்து விடக்கூடாது என்பதில் இருக்கும் தவிப்பால் , காந்தி கிராமின் எதிர்தரப்பில் இருக்கும் பாஸ்கரோடு நட்பை உருவாக்கி கொள்வதும் அவரை போன்ற நவயுக மனிதன் தன் மகளுக்காவது வாய்க்கவேண்டும் என்கிற உறுதியும் கொண்டிருக்கிறார் . ஆனாலும் கணவர் மேல் உள்ள தூய காதலினால் மரபையும் மீறமுடியாமல் திணறுகிறார் . கிட்டதட்ட , ஜெயகாந்தனின் ‘நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ’ – கதையில் வரும் அதே மாமியின் தவிப்புதான் சுருச்சிக்கும் .
சுமிதா
சத்யஜித்தின் மகளாக , காந்தி கிராமின் செல்லப்பிள்ளையாக வரும் யுவதி , வண்ணங்களே இல்லாத, ராட்டையில் நூற்ற வெள்ளை புடவையுடன் தான் அறிமுகம் ஆகிறார் , தந்தையை போல சுதந்திரமாகவும் , சேவை மனதுடனும் இயங்கி வரும் சுமிதாவின் வாழ்வில் ,நவீன யுகம் பாஸ்கர் எனும் வடிவில் மெதுவாக நுழைகிறது , இரும்பு ஆலையில் இருந்து ,நவீன வாழ்ககைக்கான அழைப்பாக , புல்லாங்குழல் இசைக்கிறார் பாஸ்கர், முதலில் காந்தி கிராமத்திலிருந்து கேட்டுக்கொண்டிருக்கும் சுமிதா , அந்த யுகத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கிறாள் , உடையில் வண்ணங்கள் சேர்த்து கொள்கிறாள் , விரல்களில் சாயம் பூசி கொள்கிறாள் , பாஸ்கருடன் ஜீப்பில் ஊரை சுற்றி வருகிறாள் . காதல் கொள்கிறாள் , அத்தனைக்கு பின்னும் , தந்தையின் லட்சிய நடை பயணம் குறிக்கப்பட்டவுடன் , அனைத்தயும் உதறிவிட்டு தந்தையின் பின் செல்கிறாள் .ஐம்பது அறுபதுகளின் யுவதிகளுக்கான இரட்டை மனநிலையான , மரபை தொடர்வதா , நவீன யுகத்தில் தங்களை பொறுத்திக்கொள்வதா , என்கிற தடுமாற்றத்தை சித்தரிக்கும் பாத்திரமாக சுமிதா படைக்கப்பட்டிருக்கிறாள் .
ரூபா
நவீன யுகத்தின் பெண் பிரதிநிதி.தனிமனித சுதந்திரம் , மற்றும் எந்த கட்டுப்பாடான விதிமுறைகளுக்கும் , தன்னை முழுதும் ஒப்படைத்து விடாத , தன்மை , ஒழுக்கமும் , ஒழுக்கமின்மையும் மாறி மாறி விளையாடும் வாழ்வில், மிதந்து சென்றுகொண்டே இருக்கும் ஒரு நவீன அல்லது மேற்கின் மனம் கொண்ட பெண் . இவளை தன் ஆயுதமாக பயன்படுத்தி சத்யஜித்தை வெல்ல நினைக்கிறார் பாஸ்கர் . பாஸ்கரின் மேல் இருக்கும் காதலால் இந்த கீழான பணிக்கு அரை மனதுடன் உடன்படுகிறாள் , அதில் தோற்று ,பெரிய வருத்தம் எதுவும் இல்லாமல் , பாஸ்கரின் அடுத்த பணிக்கு தன்னை ஒப்பு கொடுக்கிறாள் ,மீண்டும் அங்கிருந்து கிளம்பி , ஆரம்பத்தில் தான் செய்த விமான பணிப்பெண் வேலைக்கே திரும்புகிறார் . பெரிய இழப்புகள் , மன போராட்டங்கள் அற்ற , ஒருவித விலகல் தன்மையுடன் நாவல் முழுவதும் வரும் ரூபா , ஐம்பது அறுபதுகளின் மேலை தாக்கம் கொண்ட பெண்ணிய மனநிலை.
மற்றும் காந்தி கிராமின் , வெள்ளை கதராடை யுவதிகள் அனைவரும் , நவீன தொழில் நகரால் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்க்கப்பட்டு , வண்ண ஆடைகளுக்கு முழுவதுமாக மாறுவதும் ,வண்ணமணி மாலைகளும் , வளையல்களும் ,புதிய காலணிகளும் , என மாற. ஆண்கள் புதிய தொழில் வளர்ச்சியில் தங்களை புகுத்திக்கொண்டு, ‘வளமான வாழ்வு’ என்கிற மேட்டை நோக்கி செல்வதும் , காதல் திருமணங்கள் , இரவில் யாருக்கும் தெரியாமல் பெண்களுடன் நகரத்தில் சென்று திரைப்படங்கள் பார்த்தால் , என ஒரு புதுயுக மனிதர்களாக , ஒவ்வொரு நாளும் மாறியவண்ணம், இருக்கிறது காந்தி கிராம்.
நாவல் முடிக்கையில் , ”இன்றைய காந்தி”யின் இந்த வரிகள் தான் நினைவில் எழுந்தது .
//நாம் இன்று உலகெங்கும் உருவாக்கி வைத்துள்ள அமைப்பு தான் , சாத்தியமான மிகச்சிறந்த அமைப்பு என்றும் இதில் பல பிரச்சனைகள் இருந்தாலும் , எல்லாம் சரியாக இயங்குகின்றன என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம் , இந்த அமைப்பை சார்ந்தே நமக்கு கல்வி அளிக்கப்படுகிறது , ஆகவே கிராம ராஜ்ஜியம் என்பது நமக்கு கையில் இருக்கும் அனைத்தயும் விட்டுவிட்டு முற்றிலும் புதிய ஓர் இடத்துக்கு செல்வது என்றே பொருள் படுகிறது , அது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது //
காந்திய தரிசனத்தை முழுமையான தீர்வு என்றோ , உலகை மாற்றும் கோட்பாடு என்றோ சொல்ல முடியாது , ஆனால் இன்று மானுடம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை அளிக்கும் ஒரு முக்கியமான சாத்தியக்கூறு அது . அதை எவ்விதம் முன்னெடுப்பது என்பதை அறிஞர்கள் , சமூக செயலாளிகள், தங்கள் தொடர்ந்த முயற்சியின் மூலம் இனிமேல் தான் கண்டடைய வேண்டியுள்ளது .//
சா .தேவதாஸ் அவர்களின் மொழிபெயர்ப்பு மிகசரளமாக நாவலை வாசிக்க உதவுகிறது , இந்த மொழிபெயர்ப்புக்காக சாகித்திய அகாடெமி விருதையும் பெற்றுள்ளார் .
சௌந்தர்
***