அருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்

 

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

அன்புள்ள ஜெ

 

அரசியல் இல்லாத இடமே இல்லை. அரசியல் இல்லாத ஆளே இல்லை. அரசியல் பேசாதவர்கள் எல்லாரும் சொம்பை . இது இன்றைக்கு பலர் கூச்சலிட்டுக்கொண்டிருப்பது. முகநூல் முழுக்க இதுதான். இவர்கள் அரசியல் என்பது கட்சிகட்டி சண்டைபோடுவது. வெறுப்பைக் கக்குவது. அவதூறு பொழிவது. தலைமைவழிபாடு. வேறு எதுவுமே தெரியாது. எதையுமே கவனிப்பதில்லை. இன்னொரு அரசியல் இருக்கிறது. ஆக்கபூர்வமான அரசியல். சத்தம்போடாத வெறுப்பை உருவாக்காத  கட்டி எழுப்பும் அரசியல்.அதை நீங்கள் வெளியிடும் கட்டுரைகள் வழியாக அறிகிறேன். அருணா ராய், பங்கர் ராய் கட்டுரைகளை அவற்றின் உச்சம் என்று சொல்வேன். பாலா அவர்களுக்கு நன்றி

 

டி.பிரபாகர்

 

 

அன்புள்ள ஜெ,

 

திரு.பாலா அவர்களது “அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும் !” கட்டுரை மிகுந்த மன மகிழ்ச்சியையும், துயரத்தையும் ஒருங்கே தந்த ஒன்று. அவருக்கு எனது மனமார்ந்த நன்றி.

 

பதினெட்டு ஆண்டுகள் சோர்வோ தளர்ச்சியோ அச்சமோ இல்லாமல் நமது கருங்கல்லாலான அரசியல் அதிகார அமைப்போடு மோதும் மனவலிமை கொண்ட ஒரு குழுவினர் பெரும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தருகின்றனர். மானசீகமாக அவர்களது பாதம் தொட்டு வணங்குகிறேன். அதே சமயம் ஒரு தகவல் அறியும் சட்டம் கொண்டு வர இவ்வளவு நெடிய போராட்டம் தேவைப்படுமளவுக்கு நமது அரசியல் அதிகார வர்க்கம் தோல் தடித்து சொரணையற்றுப்போய் இருப்பதை நினைத்து அருவருப்படையாமல் இருக்க இயலவில்லை. அதுவும் நீதிமன்றம் ஆணையிட்டும் அசைந்துகொடுக்காமல் இருக்கிறது என்றால் இந்த அதிகாரவர்க்கம் நமது நீதிமன்றத்தின்மீது வைத்திருக்கும் மரியாதைதான் என்ன ?

 

உடனடியாக, பாரதியையும் சத்தியமூர்த்தி ஐயரையும் பற்றி ஒரு கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. (யதார்த்தவாதியான திரு.சத்தியமூர்த்தி ஐயர், நாம் நமது ஜனநாயகத்தூண்களை வலுப்படுத்திக்கொள்ளாமல் பெறும் சுதந்தரம் சுதந்தர இந்தியாவில் ஊழல் பெருகவே வழி வகுக்கும் என்று கருத, ஆங்கில அரசில் அவர் நீதிபதி பதவி பெற்றதைக்குறித்து ‘நாயும் பிழைக்குமோ இப்பிழைப்பு’ என்று பாரதி கொள்ளும் சீற்றம் குறித்து) சர்வநிச்சயமாக ஐயர் தீர்க்கதரிசிதான். அரசியல், அதிகாரவர்க்கத்தின் பொறுப்பேற்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கும் தமது பிழைகளுக்கு கடுமையான தண்டனை அடைவதற்குமான வலுவான அமைப்பை ஆங்கிலேயே ஆட்சியிலேயே கட்டியெழுப்பியிருந்திருக்க முடியுமோ / வேண்டுமோ என்று தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை.

 

இப்படி ஒவ்வொரு சீர்த்திருத்தத்துக்காகவும் பாரதப்போர் மாதிரி பதினெட்டு ஆண்டுகள் போராடிக்கொண்டிருக்க முடியுமா ?

 

இப்போது கங்கைக்காக ஒரு உயிர்துறப்புப்போராட்டம் கட்டுரை குறித்து. ஒப்பு நோக்க பெரும் துயரமளித்த கட்டுரை.

 

திருமதி அருணாராய் மாதிரி அல்லாமல் மென்மேலும் பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் துறவியர் மட்டும் தங்களது உயிரை இப்படி பணயம் வைப்பது சரியில்லையோ, விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ என்ற பதைப்பு என்று தோன்றுகிறது. ஏற்கனவே சிலர் உயிர் நீத்தும் அசைந்து கொடுக்காத நமது உறைந்துபோன சமூகத்திற்காக இத்தனை தியாகம் அவசியமா என்றுகூட தோன்றுகிறது.

 

 

 

அன்புடன்

பொன்.முத்துக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

பாலா எழுதும் கட்டுரைகள் மிகமிக முக்கியமானவை. இன்றைக்கு இங்கே காந்தியம் எவ்வளவு உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இங்கே இதுவரை அடையப்பட்ட எல்லாமே காந்தியத்தால் கிடைத்தவைதான். மற்ற எல்லா போராட்டங்களும் வெறும் இழப்புகளையே உருவாக்குகின்றன. ஏனென்றால் காந்திய இயக்கம் சிறிய அளவில் தொடர்ந்து நடக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதன் வழியாக செயல்படுகிறது

 

பங்கர் ராய், அருணா ராய் ஆகியோரைப்பற்றிய கட்டுரைகளை நெகிழ்ச்சியுடன் வாசித்தேன். அவற்றில் உள்ள தகவல்தொகுப்பும் பாலாவின் பார்வையும் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றன. இன்று அரசியல்தரப்புகள் சார்ந்து கூச்சல்போடுபவர்கள் மக்களுக்கு ஏதோ நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். சேவைக்கார்ர்கள் என சொல்கிறார்கள். ஆனால் அவர்களால் எந்த நன்மையும் இல்லை. சமூகத்தில் பகைமையை வளர்ப்பது மட்டுமே அவர்களால் செய்யப்படுகிறது. அவர்கள் போராடுவதெல்லாம் அவர்களின் தலைவர்கள் அதிகாரத்தை அடைய மட்டுமே. அதை நாட்டுக்கான போரட்டம் இலட்சியவாழ்வு என நம்பிக்கொள்கிறார்கள். அல்லது பாவ்லா காட்டுகிறார்கள்

 

உண்மையில் மக்களுக்கான வாழ்வு, இலட்சியப்போராட்டம் எல்லாம் அருணா ராய் பங்கர் ராய் போன்றவர்களிடமே உள்ளது. அதை உங்காள் தளம் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகிறது.

 

எம். முத்துக்குமார்

பாலாவின் கட்டுரைகள்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-12
அடுத்த கட்டுரைகங்கைப்போர்- கடிதங்கள்