‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-18

அர்ஜுனன் தன் புரவியை நோக்கி செல்கையில் அவனை நோக்கிவந்த நகுலன் “மூத்தவரே, நீங்கள் அரசரை வந்து பார்த்துச்செல்லவேண்டும்” என்றான். அர்ஜுனன் புருவம் சுளிக்க “அவர் சென்றதுமே மது வேண்டுமென்று கேட்டார். வழக்கமாக மிகக் குறைந்த அளவுக்கே அருந்துவார். இங்கே குருக்ஷேத்ரத்திற்கு வந்தபின்னர் அது மிகையாகிக்கொண்டே வந்தது. அதை நானும் சகதேவனும் பிறர் அறியாமல் காத்தோம்” என்றான். அர்ஜுனன் “அவர் கண்களே காட்டிக்கொடுக்கின்றன” என்றான். “அவரால் துயில்கொள்ள முடியவில்லை. சில நாட்களில் அகிபீனாவும் தேவையாகும்” என்று நகுலன் சொன்னான். “அவர் வெளியே ஓரு தோற்றத்தை சூடிக்கொள்கிறார். வெளிக்காட்டாத ஒன்று உள்ளே எரிந்துகொண்டிருக்கிறது. அதை எவரிடமும் பகிராமையாலேயே அது அழுகி நோய் என ஆகிவிட்டிருக்கிறது.”

அர்ஜுனன் “அதை அறியாத எவரும் நம்மில் இல்லை” என்றான். “அவர் அதை பொத்தி வைத்திருக்கிறார். மது அருந்துகையிலும் துயில்கையிலும் எவரும் உடனிருப்பதை விரும்புவதில்லை. ஆனால் இரவில் அஞ்சி ஓடி வந்து எங்களை எழுப்புவதுண்டு. அபிமன்யு இறந்த அன்று குடிலில் இருந்து இறங்கி கௌரவப் படை நோக்கி ஓடினார். அவன் காலில் விழுகிறேன், என் அரசை அவனிடமே அளிக்கிறேன், என் மைந்தரை விட்டுவிடும்படி கோருகிறேன் என்று கதறினார். நாங்கள் சென்று அவரை இழுத்துக்கொண்டு வந்தோம். அன்று அவர் உடல் வெம்மைகொண்டிருந்தது. மறுநாள் எழமாட்டார் என்றே நினைத்தோம். மறுநாள் எழுந்தபோது வழக்கம்போல் இருந்தார். போர்வெற்றி என்றும் அறம் நிலைகொள்ளவேண்டும் என்றும் பேசிக்கொண்டிருந்தார்” என்றான் நகுலன்.

அர்ஜுனன் “அவரை இப்போர் என்ன செய்யும் என நான் அறிவேன்” என்று புன்னகைத்தான். “அவருடைய போர் சொற்களில் நிகழ்வது. அவை எவரையும் கழுத்தறுத்து நிலத்தில் இடுவதில்லை. குருதியாடுவதில்லை” என்றான். நகுலன் “அவரிடம் நீங்கள் வந்து பேசுங்கள்… இன்று மிக நிலையழிந்திருக்கிறார்” என்றான். “ஆம், அவர் நிலையழிந்திருப்பதை நான் அப்போதே கண்டேன்” என்றான் அர்ஜுனன். “அவர் கர்ணனை அஞ்சுகிறார் என நான் அறிவேன். நம்மை கர்ணன் கொன்றுவிடக்கூடும் என்னும் பதற்றத்திலேயே இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்கிறார்.” நகுலன் “இன்று அவைக்கு வரும்போதே மது அருந்தியிருந்தார். அகிபீனாவை மூச்சில் இழுத்திருக்கிறார் என சற்றுமுன் ஏவலன் சொன்னான். மீளவும் குடிலுக்குச் சென்றபின் மீண்டும் குடித்து அகிபீனாவை இழுத்தார். சிறிய வலிப்புபோல ஒன்று வந்தது. துயிலப்போகிறார் என நினைத்தோம். ஆனால் எழுந்து கட்டின்றி கூச்சலிட்டுக்கொண்டிருக்கிறார். சிரிப்பும் அழுகையுமாக தவிக்கிறார்” என்றான்.

“அதற்கு நான் என்ன செய்ய இயலும்? எனக்கு அவருடன் என்றுமே இயல்பான பேச்சு இருந்ததில்லை” என்றான் அர்ஜுனன். “நான் இளைய யாதவரிடம் சென்றேன். அவர் வந்து ஒரு சொல் உரைக்கலாகுமா என்று கேட்டேன். இல்லை, இத்தருணத்தில் அவருடன் பேசவேண்டியவன் அர்ஜுனனே என்றார். ஆகவே உங்களை நோக்கி ஓடிவந்தேன். நல்லவேளையாக நீங்கள் புரவியில் ஏறிவிடவில்லை” என்றான் நகுலன். “நான் பேசவேண்டும் என்றாரா?” என்று அர்ஜுனன் கேட்டான். “ஆம்” என்றான் நகுலன். “நீங்கள் அரசருக்கு ஒரு சொல்லுறுதி அளித்தால் போதும் என்றார்.” அர்ஜுனன் “என்ன?” என்றான். “நீங்கள் இன்று உறுதியாகவே கர்ணனை கொல்வீர்கள் என்று. அவர் கர்ணனை அஞ்சி நிலையழிந்திருக்கிறார். அவ்வச்சத்தை உங்கள் உறுதியால் போக்கினால் அவர் அமைவார்.”

அர்ஜுனன் பெருமூச்சுடன் “சொல்லுறுதியை அளிக்கிறேன். நான் அதை அளிக்கலாம் என யாதவர் சொல்லியிருப்பதனால்” என்றான். பின்னர் நகுலனுடன் நடந்தான். “அவரை புரிந்துகொள்வது மிகக் கடினம். அவர் விழைவுகொண்டிருக்கிறார் என ஒரு தருணம் தோன்றும். எக்கணமும் துறக்கச் சித்தமாக இருப்பதாக மறுகணம் தோன்றும். போர்வெற்றிக்காக தவிப்பதாக எண்ணுவேன். போரை அஞ்சி ஒழிகிறார் என உடனே மறுத்து கருதுவேன்” என்றான். “அறம் பேசுபவர் எவரும் அவ்வண்ணமே. அறம் அவர்களை இருசுடர்நிழல் என இரண்டாக பகுத்துவிடுகிறது” என்றான் அர்ஜுனன். நகுலன் “அவர் நம் மீது கொண்டுள்ள பேரன்பு மட்டுமே எந்நிலையிலும் மாறாததாகத் தெரிகிறது” என்றான். அர்ஜுனன் ஒன்றும் சொல்லவில்லை. நகுலன் “இந்தப் போரை தொடங்கியதில் தனக்கு முதன்மைப் பொறுப்பு இருப்பதாக அவர் எண்ணுகிறார் என்று சகதேவன் சொன்னான். இதை அவர் தவிர்த்திருக்கக் கூடும். நாற்களமாடச் சென்றமைந்ததில் இருந்தே அவர் இப்போரை உருவாக்கத் தொடங்கிவிட்டார். அதை பிற எவரைவிடவும் அவர் அறிவார். அதுதான் அவருடைய துயர் என்று சொன்னான்” என்றான்.

அர்ஜுனன் “மெய்” என்றான். “ஆகவே ஒவ்வொரு சாவும் அவரை பெருவிசையோடு அறைகிறது என்று சகதேவன் சொன்னான்” என்று நகுலன் தொடர்ந்தான். “அவர் பலமுறைகளில் அதை எதிர்கொள்கிறார். தான் ஏதுமறியாதவனாக உடன்பிறந்தாரின் ஆடலில் பாவையாக இருப்பதாக காட்டிக்கொள்கிறார். இளைய யாதவரின் வேதம் இங்கு நிலைகொள்ளும்பொருட்டே வாழ்வதாகவும் போரிடுவதாகவும் வெளிப்படுகிறார். மண்விழைவை நடிக்கிறார். இவை எவற்றிலும் பங்கில்லை என எண்ணுகிறார். ஆனால் இவை அனைத்தையும் விலக்கி அவருள் நிறைந்துள்ள பெருந்துயர் வெளிப்படுகிறது. அதை எவ்வகையிலும் அவரால் விசையழியச் செய்ய முடியவில்லை. அவரை இரவுகளில் அது பல்லாயிரம் நச்சுக்கொடுக்குகளுடன் வந்து சூழ்ந்துகொள்கிறது.”

அர்ஜுனன் அவனுடன் குடிலுக்குள் நுழைந்தபோது சகதேவன் வந்து “இளைய யாதவர் வரவில்லையா?” என்றான். “இல்லை, அவர் மூத்தவரை அழைத்துச்செல்லும்படி சொன்னார்” என்றான் நகுலன். “எப்படி இருக்கிறார்?” என்று அர்ஜுனன் கேட்டான். “சற்று துயில்கொண்டுவிட்டார்” என்றான் சகதேவன். “எனில் நான் திரும்புகிறேன்” என்று சொன்னான் அர்ஜுனன். “இல்லை, எக்கணமும் விழிப்புகொள்வார். முனகலுடன் புரண்டுபடுக்கிறார்…” என்றான் சகதேவன். “யார்? யார் அது?” என்று உள்ளே யுதிஷ்டிரன் குழறலாக கேட்டார். அவர் எழும் ஓசை கேட்டது. “யார் அது? சகதேவா, மூடா, யார் அது?” சகதேவன் “இளையவர் உங்களை பார்க்க வந்திருக்கிறார், அரசே” என்றான். “எவரும் என்னை பார்க்கவேண்டியதில்லை. அவனை செல்லும்படி சொல். என் ஆணை இது. அவன் இக்கணமே சென்றுவிடவேண்டும்” என்றார் யுதிஷ்டிரன்.

அர்ஜுனன் “நான் செல்கிறேன்” என மெல்லிய குரலில் சொன்னான். ஆனால் யுதிஷ்டிரன் “அவனை இங்கே வரச்சொல். அந்த வீணனிடம் நான் ஒன்று கேட்கவேண்டும்… இப்போதே கேட்டாகவேண்டும். இக்கணம், இங்கேயே… எங்கே அவன்?” என்றார். “செல்க!” என்றான் சகதேவன். அர்ஜுனன் உள்ளே சென்றான். யுதிஷ்டிரன் எழுந்து தலை முன்னால் தொய்ந்திருக்க மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். அவனை நிமிர்ந்து நோக்கிய விழிகள் சிவந்து பழுத்திருந்தன. “குருதி… எங்கு நோக்கினும் குருதி” என்றார். சற்று குமட்டி உடல் உலுக்கிக்கொண்டு “இந்தக் குடில் போர்முனைக்கு மிக அருகே உள்ளது. அங்கிருந்து குருதிவாடை இங்கே வந்துகொண்டே இருக்கிறது. நான் படுத்தால் கனவுகளுக்குள் செங்குருதி அலையலையாக வருகிறது. அவற்றில் வழுக்கி விழுந்து புரண்டு எழுகிறேன். உடலெங்கும் குருதி” என்றார்.

அவர் கைகளை தூக்கிப் பார்த்து “சற்றுமுன் பார்த்தேன். என் கைகளில் கண்கள்… மண்டையிலிருந்து தெறித்த கண்கள். சூழ்ந்தெடுத்த நுங்குபோல… அவற்றை கீழே போட்டேன். மீன்கள் போல துள்ளித்துள்ளி தாவின. இக்குடிலை மேலும் உள்ளே தள்ளி அமைக்கவேண்டும். இது என் ஆணை” என்றார். அர்ஜுனன் “இக்குடில் உள்ளே விலகித்தான் உள்ளது, மூத்தவரே” என்றான். “எனில் காற்று இவ்வழி அடிக்கிறது” என்று அவர் சொன்னதும் மீண்டும் குமட்டினார். அர்ஜுனன் “இப்போது காற்றே இல்லை” என்றான். அவர் கலங்கிய விழிகளால் அவனை நிமிர்ந்து நோக்கினார். “இங்கே பெண்கள் வருகிறார்கள்… இரவில் இப்படைவீரர்கள் பெண்களை உள்ளே விடுகிறார்கள், தெரியுமா உனக்கு?” என்றார். அர்ஜுனன் “பெண்களா?” என்றான். “ஆம், பெண்கள். நானே அவர்களின் குரல்களை கேட்டேன். இரவில் இருளினூடாக படைகளுக்குள் நுழைகிறார்கள். இங்கே காவலுமில்லை ஒன்றுமில்லை. அனைவரும் கெடுமதியாளர்கள். சோம்பலில் திளைக்கும் கீழ்மக்கள்!”

அவர் முகம் வெறுப்பில் என சுளித்தது. “நிகழ்வதென்ன என்று எனக்குத் தெரியும். நீயும் உன் உடன்பிறந்தாரும் அவர்களுக்கு உதவுகிறீர்கள். உள்ளே வரும் பெண்கள் இங்கே அலறி அழுகிறார்கள். இறந்த தந்தையரையும் கொழுநரையும் மைந்தரையும் எண்ணி நெஞ்சிலறைந்து கூச்சலிடுகிறார்கள். மண்ணை அள்ளி என் குடில்மேல் வீசுகிறார்கள். மண் குடில்மேல் பொழிவதை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். மண்மழை. மழைபோலவே ஒலிக்கிறது அது. அவர்கள் என் குடியை என் மூதாதையரை என் கொடிவழியினரை நாக்கூசும் சொற்களால் பழிக்கிறார்கள். வேண்டுமென்றே இதை செய்கிறீர்கள்.” அவர் சினத்துடன் எழுந்தார். “ஆனால் நான் இதனால் அஞ்சப்போவதில்லை… நான் எவரையும் வணங்கப்போவதுமில்லை. இந்தப் போர் நான் தொடுத்தது. இதில் வென்ற பின்னரே இக்களம்விட்டு செல்வேன்” என்று கூவினார்.

“ஆம் மூத்தவரே, நாம் வெல்வோம்” என்றான் அர்ஜுனன். “நான் வெல்வேன். நான் வெல்வேன். எவர் எதிர்நின்றாலும் சரி, நான் வெல்வேன். என் படைகள் முற்றழிந்தாலும் சரி, நான் வெல்லாமல் நிலைகொள்ளமாட்டேன். சகதேவா, அறிவிலி, எங்கே அவன்?” சகதேவன் உள்ளே வந்து “மூத்தவரே” என்றான். “மது… மது கொண்டுவா” என்றார் யுதிஷ்டிரன். அர்ஜுனன் விழிகாட்ட சகதேவன் வெளியே சென்றான். ஏவலன் மதுக்கோப்பைகளை தாலத்தில் கொண்டுவந்தான். யுதிஷ்டிரன் அவற்றிலொன்றை எடுத்து குடித்து வாயை துடைத்தபடி “போர்வீரர்கள் சாவதில் என்ன? அவர்கள் இறந்தால்தான் நாடு வாழும். புதிய வீரர்கள் எழுவார்கள். படை இளமையுடன் இருக்கும். போரில்லாத நாடு நெருப்பெழாக் காடு. அங்கே குப்பையே பெருகியிருக்கும். எனக்கு எவர் இறந்தாலும் ஒரு பொருட்டு அல்ல” என்றார்.

“ஆம்” என்றான் அர்ஜுனன். “போரில் வெற்றி ஒன்றே பொருட்டு… நாம் போரில் இறங்கியிருக்கிறோம், வெல்வோம்” என்றார் யுதிஷ்டிரன். “ஆம், அங்கன் எதிர்வந்திருக்கிறான். இரக்கமில்லாதவன். பரசுராமரின் படைக்கலங்கள் கொண்டவன். நம்மை வெல்லும்பொருட்டு வஞ்சினம் எடுத்தவன். அதோடு…” அவர் சுட்டுவிரலை காற்றில் நிறுத்தி சிவந்த நீர்விழிகளால் அவனை உறுத்துநோக்கினார். “அவன் என்னை கொல்லவே விழைவான். ஏனென்றால்…” அவர் சிரித்தபோது தெரிந்த கீழ்மை அர்ஜுனனை திகைக்கச் செய்தது. மானுடருக்குள் இருந்து எழும் அறியாத் தெய்வம். “அவன் என்னை நோக்கி எரிந்துகொண்டிருக்கிறான். அவனுக்குரியவளை நான் கொண்டேன் என்பதனால். ஆம். அவன் உள்ளத்தை நான் அறிவேன்.” அவர் மீண்டும் சினம்கொண்டார். “ஆகவேதான் அவன் அவைநடுவே அவளை சிறுமைசெய்தான். அவன் சொன்ன சொற்களை நான் மறவேன். அவன் குருதியை நான் கண்டாகவேண்டும். அவன் களத்தில் விழுந்துகிடப்பதைக் கண்டு நான் நகைப்பேன்.”

யுதிஷ்டிரன் மீண்டும் மதுவுக்காக கைநீட்டினார் “போதும், மூத்தவரே” என்று சகதேவன் சொல்ல அர்ஜுனன் மேலும் கொடுக்கும்படி கைகாட்டினான். சகதேவன் தலையசைக்க ஏவலன் மதுக்கிண்ணங்களை யுதிஷ்டிரனிடம் நீட்டினான். யுதிஷ்டிரன் இரு கைகளாலும் கோப்பையை எடுத்து நீர் அருந்துவதுபோல முழுமையாக அருந்தினார். பிறகு வாயை அழுத்தி தலையைப் பற்றியபடி குனிந்து அமர்ந்திருந்தார். பெருமூச்சுடன் மெல்ல மெல்ல தளர்ந்தார். விழியிமைகள் சரிந்து மூடின. தலை ஆட சரிந்து விழப்போய் கையூன்றி விழித்துக்கொண்டு அவனை நோக்கினார். பின்னர் தனக்கே என “எத்தனை பேரழகன்! எத்தனை பேரழகன்!” என்று முனகினர். எழுந்து “இளையோனே, இத்தனை பேரழகையும் மனிதனுக்கு தெய்வங்கள் அளிக்கையில் அவை நகைத்துக்கொள்கின்றனவா? உன் கோப்பை நிறைந்து வழியுமளவுக்கு ஊற்றுகிறேன் உன்னால் கொள்ள முடிகிறதா பார் என்று சொல்கின்றனவா?” என்றார்.

அவர் முகம் கூர்கொண்டது. காவிய அவைகளில் பேசும் யுதிஷ்டிரன் எழுந்தார். “பேரழகு கொண்டவை இப்புவியில் நிலை ததும்புகின்றன. அவை இப்புவி முழுமையாக தங்களக்கு எதிராக நிற்பதை உணருகின்றன. பாரதவர்ஷத்திலேயே பேரழகு கொண்டது என சொல்லப்பட்ட குதிரை ஒன்றிருந்தது. கேட்டிருப்பாய், அதன் பெயர் சுதேஜஸ். அதை மகதனாகிய பிருஹத்ரதன் வளர்த்தான். அதற்கு ஒரு அகவையாக இருக்கையில் அதன் புகழ் கேட்டு வங்கமன்னன் சமுத்ரசேனன் மகதம் மீது படையெடுத்துச் சென்றான். வங்கனிடமிருந்து அதை பிரக்ஜ்யோதிஷத்தின் மூத்த பகதத்தர் கைப்பற்றினார். பகதத்தரிடமிருந்து அதை கைப்பற்றிச் சென்றான் காமரூபன். ஒருபோதும் அது ஒரு கொட்டிலில் நிலைகொண்டிருக்கவில்லை. ஒருவர் கையிலும் அமையவில்லை. அரிய மணியென அது சென்றுகொண்டே இருந்தது. தன் வாழ்நாள் இறுதி வரை. அருமணிகள் ஒன்று போர்க்களத்தில் நின்றிருக்கின்றன, அல்லது புதைகளத்தில் ஆழத்தில் மறக்கப்பட்டுள்ளன.”

“பேரழகு என்பது ஒரு கொடையல்ல. தீச்சொல்” என்றார் யுதிஷ்டிரன் “என்னை விழைகிறாய் அல்லவா, என் போல் இருந்து பார் என்று தெய்வங்கள் அறைகூவுகின்றன அழகுடையோனை நோக்கி. அங்கன் இப்பேரழகுடன் ஒரு மானுடனாக வாழ்ந்த தருணம் உண்டா என்ன? பேரழகை பெண்கள் அஞ்சுகிறார்கள். அவனுக்கு மெய்க்காதல் என்பதே கிடையாது. பேரழகர்களை ஒவ்வொருவரும் எதிரியென்றே காண்கிறார்கள். அவன் சென்று கை வணங்கி நிற்கையில் கருவறைத்தெய்வம் அவனைப் பார்த்து பொறாமை கொள்கிறது. அவன் தன்னைவிட ஆற்றல்மிக்க அனைத்துக்கும் முன் தனித்து நிற்கவேண்டியவன். இளையோனே, அங்கன் அளியவன். இங்கிருந்து எச்சிறப்பும் அடையப்போவதில்லை அவன். இங்கிருந்து சிறு அன்பைக்கூட பெறப்போவதில்லை. அவன் முற்றிலும் தோற்கடிக்கப்படுவான். அதனூடாக இங்கிருந்து அகற்றப்பட்டு அறியாக் கருவறை ஒன்றில் அமர்த்தப்பட்டு தெய்வமாவான். ஆம், அது ஒன்றுதான் நிகழவிருக்கிறது.”

யுதிஷ்டிரன் நெற்றிப்பொட்டை அழுத்தி கண்மூடி அமர்ந்திருந்தார். தலை முன்னும்பின்னுமென ஆடியது. ஏவலன் அவர் வாயுமிழ்வதற்காக தாலத்தை நீட்டினான். அவர் தலையை பீடத்தின் சாய்வில் சாய்த்து கைகளை தளரவிட்டு மல்லாந்து படுத்தார். ஏவலனிடம் “என்ன இங்கே காற்றே இல்லை? மூச்சுத் திணறுகிறது” என்றார். சகதேவன் கைகாட்ட இரு ஏவலர்கள் வந்து மயிற்பீலி விசிறியால் அவருக்கு விசிறத்தொடங்கினார்கள் மெல்ல அவருடைய இமைகள் தழைந்து மூட வாய்திறந்து குறட்டையொலி கேட்கத்தொடங்கியது. அர்ஜுனன் எழுந்து செல்வதாக நகுலனிடம் கைகாட்டியபோது அவர் கண்களைத் திறந்து “செல்கிறாயா?” என்றார். “ஆம்” என்றான். “இளையோனே, அவனை நீ இன்றே கொல்… இன்றே அவனை கொன்றாகவேண்டும் நீ. அதனால் எப்பழியும் இல்லை. அவன் கொல்லப்பட்டால்தான் முழுமையடைகிறான். அவனைக் கொல்ல அனைத்து தெய்வங்களும் உனக்கு துணையிருக்கும்” என்றார்.

“ஆம், கொல்கிறேன்” என்றான் அர்ஜுனன். “அவனை கொல்… நாளை களத்திலேயே கொல். இல்லையேல் அவன் நம் மைந்தரை கொல்வான். நம் இளையோரை கொல்வான். அவன் மந்தன்மேல் சினம் கொண்டிருக்கிறான். அவன் சொற்கள் எதையும் நான் நம்பப்போவதில்லை. அவனில் குடிகொள்வது நாகநஞ்சு. இளையோனே, சிறுமைசெய்யப்பட்டவனின் வஞ்சம் ஆலகாலத்திற்கு நிகர். அவன் நம்மை முற்றழிப்பான்… நம் மைந்தர் மறைந்தபின் நாம் எதை வென்று என்ன பயன்? பழிநிகர் செய்ததும் அபிமன்யுவை நீ கடந்துவிட்டாய், என்னால் இயலவில்லை. என்னுள் நஞ்சென, நோயென அவன் வளர்கிறான். நம் எஞ்சிய மைந்தர் வாழவேண்டும். நீ அவனை கொன்றேயாகவேண்டும். அபிமன்யுவைக் கொன்ற கர்ணன் பிற மைந்தரைக் கொல்லத் தயங்கமாட்டான்… நீ அவனை கொல்… எனக்கு சொல்லளி. கொல்வாயா?”

அவர் விழிமூடியபடியே திரும்பத்திரும்ப “கொல் கொல்” என்றார். அர்ஜுனன் “ஆம், கொல்கிறேன்” என்றான். அவர் முனகியபடி புரண்டு படுத்தார். “எத்தனை பேரழகன்…” என்றார். அர்ஜுனன் அவரை நோக்கியபடி நின்றான். அவருடைய குறட்டை ஒலிக்கத் தொடங்கியது. சகதேவன் அவனிடம் வெளியே செல்லலாம் என கைகாட்டினான். அர்ஜுனன் யுதிஷ்டிரனை தலைவணங்கிவிட்டு வெளியேறினான். பேரழகு என்னும் சொல்லை மீண்டும் மீண்டும் தன் உள்ளம் சொல்லிக்கொண்டிருப்பதை அப்போது அவன் உணர்ந்தான்.

 

 

 

அன்றிரவு அவன் துயில்கொள்ள முடியாதென்று எண்ணியிருந்தான். துயிலும்பொருட்டு படுக்கும்போதுகூட இரவை வான்நோக்கியே கழிக்கவேண்டியிருக்கும் என எண்ணிக்கொண்டான். வானில் மீன்கள் இல்லை. கொடிகளும் சுடர்களும்கூட நிலைத்து நின்றிருக்கும் காற்றின்மை. இருளின் புழுக்கம். ஓசைகளின் புழுக்கம். மணங்களின் புழுக்கம். அவன் இருட்டை வெறித்துக்கொண்டு கிடந்தான். அறியாமல் கண்கள் மூடியபோது அவன் ஒரு சிறு கனவை கண்டான். கங்கையில் அவனும் இளைய யாதவரும் பாய்ந்தனர். கைவீசி கூச்சலிட்டு நகைத்தபடி ஒருவரை ஒருவர் மிஞ்ச முயன்று நீந்தினர். மறுகரையை அடைந்து ஏறிநின்றவன் மேலும் உயரம்கொண்டிருப்பதை உணர்ந்து அவன் திகைப்புற்று “நீங்களா?” என்றான். “ஆம்” என்று கர்ணன் சொன்னான். “இளைய யாதவர் அல்லவா என்னுடன் நீந்தினார்?” கர்ணன் அவனை நோக்கி காலால் நீரை அறைந்து “அறிவிலி… நான்தான் உன்னுடன் நீந்தினேன்” என்றான். பின்னர் நீரில் அம்பெனப் பாய்ந்தான். சிரித்தபடி அவனை துரத்திச்சென்றான்.

விழித்துக்கொண்டபோது அவன் முகம் மலர்ந்திருந்தது. முகத்தசைகளில் இருந்து அவன் புன்னகைத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து உடலை நீட்டி மீண்டும் கைகளை விரித்து படுத்துக்கொண்டான். அதன்பின் எந்தத் தடையும் இல்லாமல் ஆழ்ந்துறங்கி கருக்கிருளில்தான் விழித்துக்கொண்டான். கரிச்சான் ஒலி கேட்டது என்பதை எழுந்தபின் உணர்ந்தான். முகத்தில் அப்புன்னகை அப்போதும் இருப்பதை கன்னத்தசைகளில் இருந்து உணர்ந்தான். முகம்கழுவி உணவுண்டு கவசங்களை அணிந்துகொண்டிருக்கையிலும் அந்த உவகை அவனிடமிருந்தது. அவனுக்கு கவசங்களை அணிவித்த ஏவலர் அதை விந்தையுடன் நோக்கிக்கொண்டிருந்தனர். அவன் கையுறைகளை இழுத்துவிட்டபடி எழுந்தபோது யுதிஷ்டிரன் வந்து தேரிலிருந்து இறங்குவதை கண்டான். அவர் கவச உடை அணிந்து மணிமுடி சூடியிருந்தார். முகம் தெளிவுகொண்டிருந்தது. அருகணைந்தபடி “உன்னை பார்த்துவிட்டே களம்புகவேண்டுமென எண்ணினேன்” என்றார். அவன் தலைவணங்கினான்.

“நான் நேற்று உன்னிடம் என்னென்ன பேசினேன் எனத் தெரியவில்லை. ஆனால் உன்னிடம் பேசினேன் என்பது நினைவிருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன். “நான் அவனைப்பற்றிய அச்சத்தை சொல்லியிருக்கக்கூடும். அவனைப்பற்றி எண்ணாமல் என் ஒருநாள்கூட கடந்ததில்லை. அவன் என்னை என்ன செய்கிறான் என்பதை எனக்குள் உசாவிக்கொண்டிருக்கிறேன். அவனை நான் அஞ்சுகிறேன். என்றேனும் ஒருநாள் அவன் நமக்கெதிராக கொலைவில்லுடன் வந்து நிற்பான் என்று சிற்றிளமையிலேயே எண்ணியிருக்கிறேன். ஆனால் அதற்கும் அப்பால் ஒன்று உள்ளது, இளையோனே. அவன் என் ஆணவம் ஒன்றை சீண்டுகிறான். இக்குடியில் இக்குருதி வழியில் பிறக்காவிடில் அவன்முன் நான் யார்? எளிய சூதன் அவன். ஆனால் இருபுறமும் கந்தர்வர்கள் கவரி வீசும் தேவன்போல் இருக்கிறான். அவன் முன் நான் ஏவலனாக, இழிந்தோனாக தென்படுகிறேன். குருதியையும் குல அடையாளத்தையும் கொண்டு அவனுக்கு மேல் அமர்ந்திருக்கையில் பெரும்பிழையொன்றை இயற்றுபவனாக அறிகிறேன்.”

“ஆனால் அதை எனக்கு நானேகூட ஒப்புக்கொள்ள இயலாது. ஒப்புக்கொள்வேன் எனில் இந்தப் பட்டாடைகளையும் அணிகலன்களையும் குருதி அடையாளத்தையும் குலத்தையும் துறந்து காடேக வேண்டும். ஒருவேளை அவ்வாறு காடேகினேன் என்றால் இவன் மீதுள்ள அச்சத்திலிருந்தும் ஒவ்வாமையிலிருந்தும் நான் முற்றாக விடுபடுவேன். இப்புவியில் நான் எதிலிருந்தேனும் முழுமையாக விடுபடவேண்டுமெனில் அதிலிருந்துதான். இங்கென்னை கட்டி வைப்பதும் இங்கிருக்கையில் என்னை அலைக்கழிப்பதும் உண்மையில் இவன் மீதான இந்த அச்சமும் ஒவ்வாமையும்தான்.” அர்ஜுனன் “நீங்கள் இவற்றையெல்லாம் வேறு சொற்களில் நேற்றே சொல்லிவிட்டீர்கள், மூத்தவரே” என்றான். “ஆம், இதெல்லாம் வெறும் பிதற்றல்கள். இவ்வாறெல்லாம் எண்ணங்களை ஓட்டிக்கொள்வதில் எந்தப் பொருளுமில்லை. இத்தகைய எண்ணங்களால் ஆகப்போவதொன்றுமில்லை” என்றார் யுதிஷ்டிரன்.

“எதன்பொருட்டு நான் துயருறுகிறேன்? அதை இத்தருணத்தில் என்னால் ஒருவாறாக சொல்லாக வகுத்துக்கொள்ள முடிகிறது. இளையோனே, நான் யார்? நான் மனிதர்களை ஒடுக்கி அவர்களை செங்கற்களாக வெட்டி அடுக்கி எழுப்பப்பட்ட கோட்டையின்மேல் அணி மாளிகையொன்று அமைத்து அதற்குள் வாழ்பவன் அல்லவா? அங்கிருந்துகொண்டு மானுட விடுதலை குறித்தும் மீட்பு குறித்தும் சொற்களை சமைத்துக்கொண்டிருக்கிறேன். இந்த இந்திரப்பிரஸ்தம், இந்தப் படை, இந்தக் குடிநிலை அனைத்தும் அறமின்மையின்மேல் அமைக்கப்பட்டவை. இதன் மேல் இருந்துகொண்டு அறம் பேசுகையில் எனக்குள் ஒன்று என்னை இளிவரல் செய்கிறது. ஒவ்வொரு நாளும் மேலும் அறச்சொற்களை அள்ளி அதில் போட்டு அவ்வாறல்ல என்று எனக்கே சொல்லிக்கொள்கிறேன். அனைத்துத் திரைகளையும் கிழித்து இவன் வந்து நின்றிருக்கிறான். ஆம், அவ்வாறே என்று என்னிடம் சொல்கிறான்” என யுதிஷ்டிரன் தொடர்ந்தார்.

“இவன் விழிகள், தோள்கள், நடை ஒவ்வொன்றும் அதையே எனக்கு சொன்னது. இவன் ஒரு நாள் எனக்கெதிராக வில்லெடுத்து வந்து நிற்பான். அதன் பொருள் ஒன்றே. இத்தனை நாள் இங்கு எவ்வகையிலேனும் வெட்டி அடுக்கப்பட்டவர்கள், செதுக்கி உருமாற்றப்பட்டவர்கள், சிறைப்பட்டோர், வீழ்த்தப்பட்டோர் அனைவரின் சார்பாகவும்தான் அவன் வில்லுடன் வந்து நிற்கிறான். காலம் செல்லுந்தோறும் விசை கூடும் ஒன்று அவனிடம் இருக்கிறது. காலம் செல்லும்தோறும் ஆற்றல் கொள்வது ஒன்றே. நஞ்சு. மானுட உடலில் நோயென்றும் மலைகளில் கந்தகம் என்றும் நஞ்சு உறைகிறது. என்னை அச்சுறுத்துவது அதுதான். அவன் அறத்தின் தேவன், நாம் ஆள்வோர்.” அர்ஜுனன் “நாம் போருக்கு எழும் பொழுது” என்று நிலைகொள்ளாமையுடன் சொன்னான்.

“யானையின் அருகே செல்கையில் எல்லாம் இதை நீ உணர்ந்ததில்லையா என்ன? அது நமக்கு ஊர்தியாகிறது, நமது கோட்டைகளை கட்டுகிறது, மரங்களை இழுத்து வருகிறது, நமது ஊர்வலங்களில் அணிகொண்டு அமைகிறது, அரிதாக நமது தெய்வ வடிவமாக வந்து நின்றிருக்கிறது. ஆயினும் அதன் அருகே செல்கையில் அதன் மீது நாம் சுமத்திய அனைத்திற்கும் அடியில் அது பிறிதொன்று என்று தோன்றுகிறது. அதன் விழிகளை அருகில் சென்று கண்டால் உள்ளிருந்து ஒன்று திடுக்கிடுகிறது. அத்தனை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு கந்துகளில் தளைக்கப்பட்டாலும் எக்கணமும் அறுத்துக்கொண்டு சீறிஎழும் வாய்ப்புள்ளது யானை. இளையோனே, என்றேனும் ஒருநாள் இப்புவியில் பெரும் யானையொன்று தோன்றும். அந்த வடமலைகள் அளவுக்கு பேருருவம் கொண்டது. விண்ணில் உரசும் மத்தகம் கொண்டது. அது நிலமதிர எழுந்து நம் நகர்களை நோக்கி வருகையில் நமது கோட்டையின் பெருங்கற்கள் ஒவ்வொன்றும் கூழாங்கற்களாக அதிரும். ஒரு கல் இன்னொரு கல்லுடன் உறவை முறித்துக்கொண்டு சரியும்.”

“ஆம், இங்கிருக்கும் அனைத்தும் சரியும். இங்கிருக்கும் அனைத்தும் வெறும் புழுதி என்றாகும். அந்த யானை நம்மை நோக்காது. நாம் ஒரு பொருட்டாகத் தெரியாத அளவுக்கு அது பேருருக்கொண்டது. அது நம்மைக் கடந்து செல்லும்போது அதன் கால்பட்டு கூழாங்கல் தொகையென இந்திரப்பிரஸ்தமும் அஸ்தினபுரியும் சிதைந்து அழியும். மகதம் மறையும். அங்கமும் வங்கமும் கலிங்கமும் இல்லாமலாகும். அது வடமலையிலிருந்து தென்கடல் வரைக்கும் செல்லும். இங்குள்ள ஒவ்வொன்றும் சிதைந்து கிடக்கும். அந்த யானையை நான் பலமுறை கனவில் கண்டிருக்கிறேன்.” கைதூக்கி மேலும் ஏதோ சொல்ல வந்த யுதிஷ்டிரன் அச்சொற்களை அப்படியே மறந்து தன்னுள் ஆழ்ந்தார். அவர் சொல்லவந்ததை சொல்லவில்லை என அர்ஜுனன் உணர்ந்தான். அது ஓர் உணர்வு. அதை அவர் கருத்துக்களாக ஆக்க முயல்கிறார். ஒவ்வொருமுறையும் அது ஒரு குறையுடன் வெளிப்படுகிறது. ஆகவே அதை மீண்டும் சொல்கிறார்.

யுதிஷ்டிரன் இனிய நினைவெழுந்ததுபோல் முகம் மலர்ந்து “பேரழகன்! அவன் அழகைப்பற்றி ஒவ்வொரு நாளும் நான் எண்ணுவேன். நம் ஐவரில் அவன் அழகைப்பற்றி எண்ணாத எவரேனும் இருக்கிறோமா? அந்த அழகிலிருந்து நம் ஐவருக்கும் மீட்பில்லை. ஏனெனில் நாம் அனைவரும் இணைந்தது, நாம் அனைவரும் விழைவது அவ்வழகு. இளையோனே, என்றும் நான் கனவு கண்டது நீயும் பீமனும் ஒன்றாக இணைந்த பேருடலை. நகுலனின் தேர்த்திறமும் சகதேவனின் நூல்திறமும் ஒன்றாக சேர்ந்த ஒருவனை. என்னைப்போல், அல்ல நான் விழைவதைப்போல் அறத்தில் அமைந்த ஒரு நெஞ்சை. நாம் ஐவரும் ஒன்றாக இணைந்து உருவானவனல்லவா அவன்?” என்றார்.

யுதிஷ்டிரன் பித்துக்குரிய விழியொளி கொண்டிருந்தார். “விண்ணிலிருந்து அவனைப் போன்ற ஒருவன் எப்போதோ பேரோசையுடன் மண்ணில் அறைந்து விழுந்து ஐந்து துண்டுகளானான். அவன் விழிகளே நீ. அவன் தோள்களும் நெஞ்சும் பீமன். அவன் கால்கள் நகுலனும் சகதேவனும். அவன் நாக்கு மட்டுமே நானாயிற்று. அவனில் இருந்த ஏதோ ஒன்று நம்மனைவரிலுமிருந்தும் பிரிந்து அவனாகவே எஞ்சுகிறது.” அவர் சிரித்து “பொருளிலாப் பேச்சு எனத் தெரிகிறது. ஆயினும் அவனைப்பற்றி பேசும்போது மீண்டும் மீண்டும் என்னை கண்டடைகிறேன்” என்றார். அர்ஜுனன் “நாம் கிளம்பும் பொழுது, மூத்தவரே” என்றான்.

அதை கேட்காததுபோல் யுதிஷ்டிரன் சொன்னார் “தோள்முதல் கால்வரை ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் முழு இசைவுகொண்ட பிற உடல் இப்புவியில் நிகழ்ந்ததில்லை என்கிறார்கள் சமையர். விசையும் அமைப்பும் ஒன்றையொன்று மறுக்காமல் இவ்வண்ணம் முயங்கியதில்லை என்கிறார்கள் சிற்பிகள். நின்றிருக்கையில் அழகன் என்றால் அமர்ந்திருக்கையில் அவ்வழகை இழக்கிறான். அமர்ந்திருப்பவன் எழுந்திருக்கையில் பிறிதொருவனாகிறான். எந்நிலையிலும் எக்கோணத்திலும் எவ்வுணர்விலும் பேரழகன் என்று ஒருவன் இப்புவியில் உண்டு என்றால் அவன் இவன்.”

“தெய்வங்கள் நம்மை இளிவரல் வடிவுகளாக காட்டுவதற்கென்றே அவனை இப்புவியில் அளித்திருக்கின்றன. நாம் ஒவ்வொருவரும் அவன் முன் நின்று எளிய மானுடனாக உணர்கிறோம். சிறியவர்களாக, பொருளற்றவர்களாக நம்மை அறிகிறோம். அரிய உடல், முழுமை கொண்ட உடல். ஆயினும் அவ்வுடலுக்கு மேல் அந்தத் தலை அமர்ந்திருக்கையிலேயே ஒவ்வொன்றும் முழுமைப்பொருள் கொள்கின்றன. அந்த முகமோ தேர்ந்த கலிங்கச் சிற்பி தன் கைகளால் செதுக்கி எடுத்த கற்சிலை. அந்த முகத்தில் அந்த விழிகள் இல்லையெனில் இவையனைத்திற்கும் எந்தப் பொருளும் இல்லை. அவன் கால் சுட்டுவிரல் நகத்திற்கும் அழகூட்டுவன அந்த விழிகளே. ஆலயக்கற்கள் அனைத்திலும் இறைவனே அமைந்திருப்பதுபோல.”

“அவன் எங்கேனும் எவரையேனும் கூர்ந்து நோக்கியதுபோல் நீ உணர்ந்ததுண்டா? அவன் எவர் சொற்களையாவது கேட்பதாக அவ்விழிகள் காட்டியதுண்டா? நானறிந்தவரையில் நோக்குகையில் நோக்காததாக உணர்வது இளைய யாதவரின் விழிகளில் உள்ளது. அது தெய்வம் மானுடனாகி வந்த நோக்கு என்று எனக்குத் தோன்றுவதுண்டு. இது அதற்கிணையான நோக்கு. மானுடன் தெய்வமாக எழும் தருணத்தின் நோக்கு. அள்ளிக்கொடுக்கும் வள்ளலின் கண்கள் அவை என்கிறார்கள். நான் அத்தகைய எவரையும் பார்த்ததில்லை. ஆனால் முலையூட்டுகையில் குனிந்து நோக்கும் அன்னையின் விழிகளை கண்டதுண்டு. முதல்முறை அவற்றை உள்ளுணர்ந்த நாள் நான் மெய்ப்பு கொண்டு நடுச்சாலையில் நின்றுவிட்டேன். என் முன் ஒரு சிற்றாலயப் படியில் அமர்ந்து அந்த குறவர்குலத்து அன்னை முலையூட்டிக்கொண்டிருந்தாள். விழிசரித்து முகம் கனிந்து…”

“நூறு முறை ஓடிச்சென்று அவள் கால்களில் விழுந்து அன்னையே அன்னையே என்று அரற்றியது என் உள்ளம். அதே விழிகள் இவனுடையவை. அதே விழிச்சரிவு. இவன் தன் கண்களினூடாக தன்னை தேவனாக்கிக்கொள்கிறான். அவன் கண்கள் அளிகொண்டவை. எவரையும் நோக்கும் கணமே உட்புகுந்து உளம் அறிபவை. நோக்குபவனாகவே மாறிநின்று அவன் துயரை தானே அடைபவை. அதன்பெயரே பேரளி. இக்கணம் இவ்வாறு தோன்றுகிறது, அறிவும் வீரமும் குடிப்பிறப்பும் எதுவும் ஒரு பொருட்டல்ல. கண்ணோட்டம் ஒன்றே மானுடனை தெய்வமாக்குகிறது. அளிநிறைந்தவனுக்கு மட்டுமே தெய்வங்கள் இருபுறமும் சாமரம் வீசுகின்றன. அளி என்பது உருகி நெகிழ்ந்து நீர்மை கொள்வது. உருகாது எஞ்சுவது ஆணவம் மட்டுமல்ல, அறிவும் மெய்ஞானமும் கூடத்தான்.”

“அவன் சூரியனின் மைந்தன் என்று சொன்னவன் பிறிது எதையோ உணர்ந்திருக்கிறான். எத்தருணத்தில் அவனுக்கு அப்படி தோன்றியிருக்கும்? சிற்றிளமையில் அவனை யாரோ அவ்வாறு அடையாளம் கண்டிருக்கிறார்கள். அங்கநாட்டின் ஏதோ ஒரு சிற்றூரின் நிமித்திகன். அவன் அத்தனை சிறியவனாக இருந்ததனால்தான் அவனைவிட பெரியன பல்லாயிரவற்றை எளிதில் கடந்து சென்று உண்மையை கண்டடைய முடிந்தது. கோட்டையை, படைக்கலங்களை, கதவுகளையும் கடந்து வரும் சிறு ஈபோல அவன் கருவறை தெய்வத்தின் மேலமர்ந்தான். அவன் மொழிகளில் இருந்தது உண்மை. அவன் கதிரவன் மைந்தனேதான்.”

“நான் அவனைப்பற்றி நேற்று உன்னிடம் சொன்னதென்ன என்று தெரியவில்லை. எதுவாயினும் அவை என்னை ஆட்டிவைக்கும் சிறுமையின் சொற்கள். அவையல்ல நான். அதை சொல்லவே வந்தேன். இளையோனே, அவன் ஏற்பான் என்று ஒரு உறுதி எனக்கு அமையட்டும், அவன் காலடியில் என் மணிமுடியை வைப்பேன். இப்பாரதவர்ஷத்தை முழுதாளும் தகுதி கொண்டவன் அவன் ஒருவனே, பிறவியிலேயே மும்முடி சூடி வந்த சக்ரவர்த்தி அவன். நான் எளியவன். என் விழைவால் மட்டுமே இக்குடியை, இவ்வுறவுகளை பற்றிக்கொண்டு கிடப்பவன். சிறியவன். அச்சிறுமையை உணர்ந்து மேலும் சிறுமை கொள்கிறேன். அச்சிறுமையை துறக்க இயலாது இவ்வாழ்நாள் முழுக்க இவ்வண்ணம் உழன்றலைகிறேன்.”

அர்ஜுனன் “புலரியில் கனவு கண்டீர்களா?” என்றான். அவனை நோக்காமல் திரும்பிக்கொண்ட யுதிஷ்டிரன் “ஆம்” என்றார். அர்ஜுனன் மேலும் ஏதும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் “இனிய கனவு, இளையோனே” என்றார். பின் தன் விரல்களால் விழிகளை அழுத்திக்கொண்டார். அப்பால் நகுலன் புரவியில் வந்து இறங்குவதைக் கண்டு இருவரும் திரும்பி நோக்கினர். அத்தருணத்தை அவ்வண்ணம் முடித்துவைக்க அவன் வந்ததை எண்ணி அர்ஜுனன் நிறைவடைந்தான். அப்போதும் தன் முகம் புன்னகையுடன் மலர்ந்திருப்பதை உணர்ந்தான்.

முந்தைய கட்டுரைஸ்ரீலங்காவின் குரல்கள்
அடுத்த கட்டுரைஎம்.எல்- கடிதங்கள்