அறம்,சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இது நான் எழுதும் முதல் கடிதம். கெத்தேல் சாகிப்பை பற்றிய கதையை படித்துவிட்டு கண்ணீர் சிந்தினேன். ஏனென்றால் எனக்கு கெத்தேல்சாகிப்பை தெரியும். அவர் கையால் நானும் மூன்றுவருடம் வயிறார உண்டிருக்கிறேன். நானும் திருவனந்தபுரத்திலே மாணவனாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோதுதான் அவரது ஓட்டலிலே சாப்பிட்டேன். அவர் மனமார அள்ளி அள்ளி வைப்பார். அவரது கறிசோறின் ருசிக்கு காரணம் என்ன என்று இந்தக்கதை வாசித்தபோதுதான் தெரிந்தது. சாகிப் கணக்கே பார்ப்பதில்லை. நம்முடைய பசி மட்டும்தான் அவருக்கு கணக்கு. அவர் ஒரு ஞானி. அவர் வாழ்ந்த போதே நிறையபேர் அப்படி நினைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே நான் கெத்தேல்சாகிப் ஓட்டலிலே கௌமுதி பாலகிருஷ்ணனையும் எம்.என்.கோவிந்தன்நாயரையும் பார்த்திருக்கிறேன்.

கெத்தேல் சாகிப் ஓட்டல் இல்லை என்று சொன்னீர்கள். அவரது வாரிசுகள் இருக்கிறார்களா? தகவலுக்காக கேட்டேன். நினைவுகளிலே மூழ்க வைத்து விட்டீர்கள். எவ்வளவு பெரிய ஆத்மாவிடம் பழகியிருக்கிறேன் என்று நினைத்து அழவைத்துவிட்டீர்கள். நன்றி

சங்கரவேல்

அன்புள்ள சங்கரவேல்

நான் கெத்தேல்சாகிப்பை பார்த்ததில்லை. கேள்விப்பட்டதுடன் சரி. எப்படியும் இருபது பேராவது அவரைப்பற்றிச் சொல்லியிருபபார்கள். இந்தக்கதையில் எவ்வளவு கற்பனை எவ்வளவு நிஜம் என என்னால் சொல்லிவிட முடியாது

பார்க்கவும் : கெத்தேல் சாகிப்

ஜெ

*

அன்புள்ள ஜெயமோகன்,

சோற்றுக்கணக்கு கதையை வாசித்து அடைந்த மன எழுச்சியை என்னால் சொல்ல முடியாது. கெத்தேல் சாகிபை தன் அம்மா என்று அவன் நினைக்கும் இடம், அவரிடம் முலையுண்டேன் என்று நினைக்கிற வரி என்னை அப்படியே அழ வைத்துவிட்டது. அற்புதமான கதை. தமிழிலே சிறுகதைக்குள் வந்த பெரிய கதாபாத்திரங்களில் கெத்தேல்சாகிபுக்கு அழியாத இடம் உண்டு. எத்தனை முறை வாசித்தாலும் தீராத கதை. இதுப்போல ஈரம் நிறைந்த கதைகள் இனிமேலும் வரவேண்டும். நம்முடைய இலக்கியச்சூழலே வெறும் வரட்டு அரசியலால் பாழ்பட்டு கிடக்கிறது. அந்நிலை மாற வேண்டும்

சங்கரன்
சென்னை

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? உங்களுடைய தளத்தில் சமீபத்தில் வெளியிட்ட இரண்டு சிறுகதைகளைப் படித்தேன். மிக அற்புதமான அனுபவம். அதற்கு மிக்க நன்றி. நீங்கள் எழுதும் எத்தனையோ விஷயங்களில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை. ஆயினும் இது போன்ற சிறுகதைகள் உங்களைத் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. உங்களுடைய தமிழ்/மலையாள மொழிநடையும், காட்சி விவரிப்பும் எனக்கு மிக உவப்பானதாக இருக்கிறது. எத்தனையோ பேர் உங்களுக்கு கடிதம் எழுதி பாராட்டி இருப்பார்கள். இந்த கதைகளை விமர்சித்து, அவரவர்களுக்குப் பிடித்தது பற்றி பேசி இருப்பார்கள். இதிலே நான் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னால் முடிந்தது, உங்களால் எங்கேயோ இருக்கும் ஒருவன் சில மணித்துளிகள் ஒரு நல்ல அனுபவத்தை அடைந்தான் என்று உங்களுக்குத் தெரிவிப்பதே. நன்றி.

சரவணன்.

அன்புள்ள சரவணன்

நான் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம் உண்டு, நான் எழுத்தாளன். எழுத்தாளனாக என் கருத்தை பிறவிஷயங்களுக்கும் முன்வைக்கிறேன். அவற்றை நீங்கள் யோசிக்கலாம், அவை அதற்கான தூண்டுதல்கள் அவ்வளவே. நான் எந்நிலையிலும் உறுதியான கருத்து தரப்புகளை முன்வைப்பதில்லை. என் வாசகர்கள் என் புனைவுகளின் வழியாக என்னை அணுகிய பின்னர் என் கருத்துக்களை நோக்குவதே சரியான வழியாக இருக்கும்

ஜெ

*

திரு ஜெ,

அறம் கதை எனக்கு சரியாகப் படவில்லை. அதில் மனிதர்களின் சுயம் தான் தெரிகிறது. அந்த செட்டி பெண் தன் வம்சம் பற்றின கவலையும் அவளின் மூட நம்பிக்கையையுமே சுயத்தை அதீதம் ஆக்கி விட்டு இருக்கிறது. அந்த புலவர் தப்பானவனாக இருந்தாலும் அவள் இந்த முடிவையே எடுத்து இருக்க கூடும். இங்கே எங்கே அறச்சிந்தனை தோன்றியது.

முத்துகுமார்

முத்துக்குமார்,

தெரியவில்லை. நான் அந்த அளவுக்கு பகுத்தறிவுடன் சிந்திப்பதில்லை. கொஞ்சம் மூடநம்பிக்கை உண்டு. பொதுவாக இலக்கியம் வாசிக்க கொஞ்சம் மூடநம்பிக்கை தேவை. நீங்கள் செய்தித்தாள்கள் வாசிக்கலாமே

ஜெ

*

அன்பின் ஜெ.எம்.,
எதைச் சொல்ல எதை விட….
போடாத சோற்றுக்குப் பெண்கட்ட வைத்த மாமியும்,போட்ட சோற்றுக்குக் கணக்கே பார்க்காத சாகேபும் இரு துருவ சித்திரங்கள்.
இரண்டு வகை மனிதரும் உண்டுதானே.ஆனாலும் சாகேபு போன்ற மனிதர்கள் அபூர்வமாகத்தான் இந்த மண்ணில் ஜனிக்கிறார்கள்.
அப்படி ஒருவர் உங்கள் கண்ணில் பட்டதால் அது இங்கே கதையாய்ப் பதிவாகியிருக்கிறது.இல்லாவிட்டால் பத்தோடு பதினொன்று…
அடுத்த கதை வரும் வரை சோற்றுக் கணக்கு உள்ளுக்குள் சுழன்று கொண்டே இருக்கும்.
அன்புடன்,
எம்.ஏ.சுசீலா,

*

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களது சோற்றுக்கணக்கு சிறுகதையை படித்து பிரமித்துப் போய் விட்டேன்!

மாமி அநாதரவாய் வந்து தாங்கும் மருமகனிடம் வைக்கும் கொடுமையானச் சோற்றுக் கணக்கு, தாய் தன் சொந்த மகன்களுக்கு பரிமாறும் போது கூட ஏழ்மையின் விதியால் அளவாக பரிமாறப் பழகிய சோற்றுக் கணக்கு, தானே முதலில் சாகிபிடம் மனதளவில் கொண்ட இயலாமையின் விளைவாய் கோபத்தோடு வைக்கும் சோற்றுக் கணக்கு, இவையனைத்தையும் சாகிபிடம் இருந்து கற்றுக் கொள்ளும் கருணையெனும் சோற்றுக் கணக்கு எளிமையாய் உடைத்துப் போட்டு விடுகிறது.

கொடும் சம்பவங்களைச் சந்தித்தவர்கள் பின்னால் வாழ்க்கையில் வளம் பெற்ற பின்னரும், பழைய கொடுமைகளின் விளைவாக, கஞ்சர்களாக, கொடூரர்களாக, பணம் சேர்க்கும் இயந்திரங்களாக, ‘எனக்கு, என்னடா இந்த உலகம் செய்தது?’, என்ற வெறியுடனே வாழ்ந்து மடிவது தானே அடிக்கடி நிகழ்கிறது? நம்முள் இருக்கும் சாகிபுகளைக் கண்டுணரத் தூண்டும் அற்புதமான கதை.

மிக்க நன்றி,

ராஜா

அன்புள்ள ராஜா

சோற்றுக்கணக்குக்குள்தான் அன்றாட உலகமே இயங்குகிறது. எப்போதோ ஒருவன் வெளியே செல்கிறான். அவனை ஞானி என்றும் சூஃபி என்றும் கொண்டாடுகிறோம்

ஜெ

அன்புள்ள ஜெ,

இப்போதுதான் சோற்றுக்கணக்குப் படித்து கண்ணீரைக் கொட்டினேன். இரு நாள் முன்பு labல் ‘அறம்’ படித்த போதும் அப்படியே.. அருகிலிருந்த வெள்ளைக்கார தோழி பயந்து என்னவென்று விசாரித்தார். எதோ சொல்லி சமாளித்தேன்.

இன்னும் வேறு வர இருப்பதாக சொல்லிவிட்டீர்கள். இனிமேல் உங்கள் சிறுகதைகள் படிப்பதென்றால் தனிமையில் தான் படிக்கவேண்டும் என மனதிற்குள் முடிவு செய்துகொண்டேன்.

செந்தில்குமார் தேவன்

*

முந்தைய கட்டுரைசோற்றுக்கணக்கு [சிறுகதை]
அடுத்த கட்டுரைஇணையதளம் உடைப்பு