அறிபுனை- இரு கடிதங்கள்

மூக்குத் துறவு –கேபாலமுருகன்

வணக்கம் அண்ணா,

 

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பேசுவதற்குரிய சூழலை அல்லது வாய்ப்பை இயற்கை ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக நாம் பேசாமல் இருந்த இடைவெளியை மீண்டும் குறைப்பது சிறுகதையாகவே உள்ளது. முன்பு ‘பேபிகுட்டி’, ‘தங்கவேலுவின் பத்தாம் எண் மலக்கூடம்’, இப்பொழுது ‘மூக்குத்துறவு’.

 

அரூவில் வெளிவந்த உங்களுடைய விரிவான நேர்காணலே அறிவியல் புனைவுகள் பற்றி ஒரு தீவிரமான புரிதலை உண்டாக்கியது. எனது கவிதை ஒன்றை ( காற்றடைப்பு விழா) சிறுகதையாக விரிவாக்கிக் கொண்டதன் விளைவே மூக்குத்துறவு.

 

//நான் வாசிக்க நேர்ந்த இறுதிப் பத்து கதைகளுமே தமிழில் இன்று எழுதப்படும் பொதுவான கதைகளிலிருந்து மிக உயரத்தில் நிற்பவை, தமிழின் அறிவியல்புனைகதை உலகுக்கு முற்றிலும் புதிய அருநிகழ்வுகள் என உறுதியாகச் சொல்வேன். சென்ற இருபதாண்டுகளில் இலக்கியம் சார்ந்து எனக்குப் பெருமிதமும் பரவசமும் உருவான தருணம் இது. //

 

//மூக்குத்துறவு அறிவியலின் கூரறிவுத்தன்மை எப்போதுமே அதிகாரத்துடன் இணைவதைச் சுட்டும் ஒரு படைப்பு.//

 

http://aroo.space/2019/04/05/மூக்குத்-துறவு/

 

திடீரென்று ஒர் உற்சாகம் கிடைத்து விரிவாக இயங்க மீண்டும் மீண்டும் ஜெயமோகன் வருவதே என் படைப்புலகில் நேர்ந்துவிடும் அதிசயம் என்றே  சொல்லலாம். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியும் இதனைப் பலமுறை சொல்லியிருக்கிறார். உங்களை யாரும் பாராட்டவோ விமர்சிக்கவோ தேவையிருக்காது. ஒரு பெரும் வெறுமை வரும் பின்னர் நீங்கும். சரியான தொடுதல் நிகழும் என்பார். மிக்க நன்றி அண்ணா.

 

பத்தாண்டுகளுக்கு முன்பு  ‘மனித பிளவும் இரண்டாவது நகர்வும் எனும் என்னுடைய முதல் அறிவியல் சிறுகதையை உங்கள் தளத்தில் அதிலுள்ள நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி நீங்கள் எழுதியதும் இப்பொழுது இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் அறிவியலையும் அதன் ஊகநெறிகளைக் கொண்டு இலக்கியமாக்குவதன்  நுட்பங்களையும் அறிய, பழக, அரூ அறிவியல் இதழ் சாத்தியப்படுத்தியுள்ளது. மேலும், அரூவில் உங்களுடைய வருகையும் உரையாடலும், போட்டிக்கான முன்மொழிதலும் இன்று தமிழில் நல்ல பத்து அறிவியல் புனைவுகள் உருவாகவும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், உரையாடுவோம். நன்றி.

 

கே.பாலமுருகன்

கோதார்டின் குறிப்பேடு  கமலக்கண்ணன்

அன்புள்ள பாலமுருகன்

 

ஓர் எழுத்தாளனுக்கு உளச்சோர்வு தவிர்க்கமுடியாதது. ‘பேக்கேஜில்’ ஒரு பகுதி அது. ஆனால் அதிலிருந்து வெளியேவர, அதை எழுத்தினூடாக நிகழ்த்த, அதை எழுத்தின் ஆற்றலாகவே உருமாற்றிக்கொள்ள, அவன் எப்போதுமே முயலவேண்டும். அது நிகழ்ந்துள்ளது என நினைக்கிறேன். எழுதுங்கள்

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

அரூ நிகழ்த்திய அறிவியல் சிறுகதை போட்டிக்குத் தாங்கள் அளித்துள்ள ஆதரவும் பார்வையும் அரியது; தேவையானது.

 

ஏற்கனவே எனது கோதார்டின் குறிப்பேடு சிறுகதையை ஒரு பதிப்பாளர் நண்பர் வாசித்து ‘ கதையின் சொற்புழக்கம் அதீத வெளிச்சத்துடன் இருக்கிறது. அதீத வெளிச்சம் கண்களைக் கூச வைக்கும் அல்லவா? ‘ என்றொரு விமர்சனத்தை வைத்தார்.

 

அத்தகைய நோக்கில் சற்றெ எனக்கும் ஒரு தயக்கம் ஏற்பட்டது தான். ஆயினும், தங்களது பார்வை மிக முக்கியமானது என்று தோன்றவே, தாங்கள் வழங்கிய சுட்டி மூலம் அரூவின் சிறுகதைப் போட்டிக்கு இந்த கதையை அனுப்பினேன். அருஞ்சொற்கள் வாசிப்பிற்கு தடையாக இருப்பதாகவும் அதன் விளைவாக வாசிப்பு நிகழவில்லையெனில் கதை தோல்வியுறும் என்றும் சொன்னார்.

 

இதே கதை முதன்மையான பத்து கதைகளுக்குள் தேர்வாகி இருந்ததில் வந்த வியப்பை விட தங்களது குறிப்பினை வாசித்ததும் எழுந்த மகிழ்ச்சி பன்மடங்கானது. சில நண்பர்களும் பாராட்டினர். எழுத்தாளர் கலைச்செல்வி அவர்கள் ‘ சமீபத்தில் தான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதை’ என்று சொன்னார்.

 

இலக்கிய வகைமைகள் பலவற்றையும் கருத்தில் கொள்கையில் ’நம் அகத்தின், மூளைகளின், நரம்பியக்கங்களின் விசித்திரங்களையும்,  ஆழியென விரிந்துநிற்கும் வரும்காலத்தின் மீதான கணிப்புகளையும் கற்பனை செய்யும் ஜன்னல்களாக அறிவியல் புனைவுகளே இருக்கின்றன.

 

ஆர்தர் சி. க்ளார்க் ‘அரசியல்வாதிகள் டிடெக்டிவ் கதைகளை வாசிக்காமல், அறிபுனைவுகளை வாசிக்க வேண்டும்’ என்று சொல்லி இருக்கிறார். அவர்கள் வருங்காலத்தை புரிந்து கொள்ள அது உதவும் என்பது அவர் நிலைப்பாடு. தமிழுலகில் போதுமான அறிபுனைவுகளும் இல்லை; வாசிக்கின்ற அரசியல்வாதிகளும் இல்லை. ஆனால் விரைவில் இது மாறலாம். அதற்கு இது போன்ற போட்டிகளும் தங்களது சுட்டலும் பெரிதும் உதவும்.

 

நிலைத்து யோசித்துப் பார்த்தால் இந்த பத்து கதைகளிலும் (நிச்சயமாக என் கதையில்) உங்கள் விசும்பு தொகுப்பின் கதைகளின் மீதான பாதிப்பு (Pattern, Vocabulary) இருக்கிறது. ஒரு புள்ளியிலிருந்து புனைவு உருவாகி விரிவதன் நுட்பம் அங்கிருந்தே எங்களுக்குப் புரிந்திருக்கிறது.

 

நீங்கள் சொன்னவாறு அறிவியல் புனைவு வெறும் தொழில்நுட்பத்திலிருந்து மட்டும் எழுத்துறாது. ஆனால் எதிர்பாராத பல இடங்களிலிருந்து, ஒற்றைச் சொல்லிலிருந்து, ஒரு படிமத்திலிருந்து, ஒரு உவமையிலிருந்து, அரூபத்திலிருந்து கூட அறிவியல் புனைவு எழ முடியும்.

 

2666 நாவலில் ஒரு  தேடல் முடிந்து பதில் கிடைக்காத சல்லையான பொழுது வரும். அந்த கதாபாத்திரங்களின் மனநிலையை சொல்ல ‘Sky looked like a Carnivorous Flower’  என்றொரு சொற்றொடரை பொலானோ பயன்படுத்தியிருப்பார். ஊன் உண்ணி மலர் என்பது எத்தனை அறிபுனைவு கதைகளுக்கான விரிவைக் கொண்டது என்று எண்ணி திகைப்பு கொண்டேன்.

 

தங்களது வார்த்தைகள் தரும் தெளிவையும் உத்வேகத்தையும் எந்த ஒரு பரிசும் தந்துவிட முடியாது.

 

நன்றி.

 

அன்புடன்

கோ.கமலக்கண்ணன்.

 

அன்புள்ள கமலக்கண்ணன்

 

அறிவியல்புனைகதைக்கு பொதுவான கதைகளுக்குரிய வரையறைகள் சில பொருந்தாது. உதாரணமாக கதைக்குள் சிலவற்றை விளக்கிஉரைத்தல் அதன் இயல்பு. அது கலைக்குறைபாடு அல்ல. அதற்கு நம்பகத்தன்மை என்ற கேள்வியே இல்லை. அதன் மொழி புழக்கமொழியாக இருக்கவேண்டியதில்லை. அறிவியல்புனைகதைகளை படிக்கும் வழக்கமில்லாதவர்கள் அவற்றுக்குள் நுழைவது கொஞ்சம் கடினம்

 

தொடர்ந்து எழுதுங்கள். இது ஒரு தொடக்கமாக அமைக

 

ஜெ

 

 

அவன்  தன்ராஜ் மணி

கடவுளும் கேண்டியும்    நகுல் வாசன்

கோதார்டின் குறிப்பேடு  கமலக்கண்ணன்

தியானி – கிபி 2500 அஜீக்

நிறமாலைமானி பெருவிஷ்ணுகுமார்

பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன்

ம் –கிரிதரன் கவிராஜா

மின்னெச்சம் –ரூபியா ரிஷி

மூக்குத் துறவு –கேபாலமுருகன்

யாமத்தும் யானே உளேன் –சுசித்ரா

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27
அடுத்த கட்டுரைகுரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்