அறம் -கடிதங்கள்

அறம் ஜெய்யமோகன்

அறம் விக்கி

பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் உருப்படியாக பலமுறை வாசித்து மீள்வாசிப்பு செய்து கற்றுக்கொண்டது ராஜாஜியின் வியாசர் விருந்து.

 

கல்லூரியிலும் சரியான தேடுதலும் வழிகாட்டுதலும் இல்லாததால் சில வார இதழ்களும் துப்பறியும் கதைகளும் படித்து நேரத்தை வீணடித்தேன். பிறகு என் நண்பன் ராமசாமி மூலம் கல்கியும் சாண்டில்யனும் அறிமுகம் ஆயினர். பிறகு சுஜாதா. அப்போது எல்லாரையும் போல இலக்கியம் என்பது இவையே என கிடந்தேன். இவற்றினால் நடந்த ஒரே நன்மை, என்னுடைய வாசிப்பு வேகத்தை கூட்டியது மட்டுமே.

 

வேலைக்கு புனே சென்று பிறகு வாசிப்பு அறவே நின்றுபோனது. பிறகு மீண்டும் வாசிப்பை தொடங்க நான்கு  ஆண்டுகள் ஆனது. தொடங்கியபோது முற்றிலும் புதிய இடத்தில தொடங்கினேன். தொடங்கிய இடம் உங்கள் இணையத்தளம்.

 

சில கதைகள் மற்றும் பதிவுகள் படித்தபின் தொடங்கியதுதான் அறம் சிறுகதைகள். முதல்முறை படிக்க நான் எடுத்துக்கொண்டது 180 நிமிடங்கள். ஆனால் அவை ஏற்படுத்திய பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.

 

செட்டியாரின் மனைவியும், கெத்தேல் சாஹிப்பும், வணங்கான் நாடாரும் என்னை முழுவதுமாக உள்ளிழுத்துக்கொண்டனர். கீதையின் சாராம்சமான கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதை யானை டாக்டர் தவிர யாரும் இவ்வளவு எளிதாக கூற முடியாது. இந்நாள்வரை மனம் நெகிழாமல், கண் கலங்காமல் நூறு நாற்காலிகள் கதையை நான் படித்தது கிடையாது.

 

எந்த ஒரு அறத்தையும் உணர்ச்சிகள் வழியாக கூறினால் அதன் நேர்மறை பாதிப்பு பல நாட்கள் இருக்கும். பாதிப்பு இருக்கும்வரை நம் மனது அதை பற்றி யோசித்து யோசித்து கருத்தை தொகுத்துக்கொள்ளும்.

எப்போதெல்லாம் மனோதைரியம் குன்றி, தன்னம்பிக்கையற்று இருந்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நான் வணங்கானையும், அதீத வெறுப்பு பெருகும் காலங்களில் நூறு நாற்காலிகளையும் படிக்க வைத்து மீள்வாசிப்பு செய்யவைத்தது. அலுவலகத்தில் ஏதோ ஒரு பெரிய காரியம் செய்து பிறர் அதை கவனிக்காமல் போனால் யானை டாக்டர் மனதில் வராமல் போனதில்லை.

 

இப்போது அதே கதைகளை என் எட்டு வயது  மகளுக்கு சொல்லும்போது அவைகளே முற்றிலும் வேறொரு தரிசனத்தை தந்தன. குழந்தையின் பார்வையில் அறம் என்பது சரி அல்லது தவறு என்னும் இருமைக்குள் அடங்கிவிடும். அதை மீறி பரந்த விசாலமான பார்வைக்கு அறம் சிறுகதைகள் மிகவும் தகுந்தவை. முதல்முறை செட்டியாரின் மனைவி தார்ச்சாலையில் அமர்ந்து அவளை தூக்கியபோது சேலையுடன் தோலும் கிழிந்தது என சொல்ல என்னுடைய மகள் கண் கலங்கி, அடுத்தவர்களை எப்போதும் நான் ஏமாற்றமாட்டேன் என சொன்னது என் தரிசனங்களுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

 

உங்கள் கதைகளுள் அறம் சிறுகதை தொகுப்பு மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

அன்புடன்,

கோ வீரராகவன்

 

 

அன்புள்ள ஜெ

 

நான் இதுவரை இலக்கியம் என எதையும் வாசித்ததில்லை. பள்ளிக்கூடப் பாடத்தில் யானை டாக்டரை வாசித்தேன். இப்போதுதான் இலக்கியநூல்களை வாசிக்க ஆரம்பிக்கிறேன். நான் வாசித்த முதல் நாவல் யானைடாக்டர். அதை விரிவாக ஒரு புக்கில்வாசித்தேன். அதன்பிறகு அறம் நூலை வாங்கி வாசித்தேன். சோற்றுக்கணக்கு வணங்கான் நூறுநாற்காலிகள் ஆகிய கதைகள் என்னை கண்ணீர்விடச்செய்தன. உயர்ந்த மனிதர்களின் கதைகள் அவை. அவற்றை வாசிப்பது மனதை விசாலமாக ஆக்கியது. நானும் கதைகட்டுரைகள் அவ்வப்போது எழுதுவேன். எதுவும் வெளிப்படவில்லை. ஆனால் எழுதினால் இதேபோல இலட்சியவாத தாகத்துடன் எழுதவேண்டும் என நினைக்கிறே

 

எஸ்.வேல்முருகன்

 

முந்தைய கட்டுரைசிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்
அடுத்த கட்டுரைலகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை