முதல்மழைக்குப்பின்…

செல்வது மீளாது

கோடை நடை

குமரிமாவட்டத்தில் பொதுவாக மாமரவளர்ப்பை ஒரு தொழிலாகச் செய்யமுடியாது. கூலியாள் பிரச்சினை வந்தபோது மாந்தோப்பு போடலாம் என்னும் பேச்சு எண்பதுகளில் எழுந்தது. “ஏல, சித்திரயிலே விஷுக்கணி வாங்க வருவாள்லாலே? வெறிபிடிச்ச ஏக்கியாக்கும். பூவும் பிஞ்சுமாக்கும் அவளுக்க இஷ்டம்” என்று பெரிசுகள் சொல்லிவிட்டன.

சொல்மிஞ்சிப்போய் ஒட்டுச்செடி வாங்கிவந்து நட்டு மாந்தோப்பு உருவாக்கி ஐந்துவருடம் காத்தவர்கள் இருந்தனர். விதை நட்ட நாளுக்குப்பின் தோட்டப்பக்கமே செல்லவேண்டியதில்லை என்பதன் கொண்டாட்டம். முதல் பூவில் மாமரங்கள் பூத்து கிளைதாழ நிறைகரு கொண்ட பசுபோல செவிதாழ்த்தி நின்றன. நோக்கி நோக்கி மகிழ்ந்தனர். கொன்றைபூத்தது. சித்திரை வந்தது. விஷு வந்து பத்தாமுதயம் எழுவதற்குள் யக்ஷி வந்தாள். கூந்தலை சுழற்றி ஒரு நான்கு நாள் வெறியாட்டமிட்டாள்.

குழல்தோகை மலைகளை நிலத்தை கூரைகளை அறைந்து அறைந்து சுழல, வானில் அவள் பெருமுழக்கம் நிறைந்திருந்தது. தளிர்களை பூக்களை விரும்புபவள். இளமரங்களை வேருடன் குடைசாய்ப்பவள். புல்லுக்கு இனியவள். அவள் வந்துசென்ற மறுநாள் காய்ந்தபுற்களெல்லாம் பசுமைகொண்டிருக்கும். மூன்றாம்நாள் பல்லாயிரம்கோடி புல்விதைகள் முளைத்தெழும். மாந்தோட்டங்களில் ஒரு பூ எஞ்சவில்லை. தரையில் மஞ்சள் கம்பளம்போல மாம்பூ.

வெறிகொண்டு மாமரங்களை வெட்டி விறகுக்கு விற்றார்கள். “சொன்னேம்ல? மக்களை பாத்தும் மாம்பூ பாத்தும் மாலோகத்திலே யாரும் மதம்கொள்ளாண்டாம்” என்றார் மூத்தநாடார். இங்கேயே தகவமைந்த நாட்டு மாமரங்கள் உண்டு. நூறுக்கு ஒரு பூவை தக்கவைத்துக்கொண்டு ஓரளவு காய்க்கும். மரமாக எழ பதினைந்தாண்டுகளாகும். காய்க்கத்தொடங்கினால் நூறாண்டு பொலியும். ஆனால் அது தொழிலுக்கு உதவாது.

விஷு கொண்டாட்டத்தின் ஒரு பகுதி யக்ஷியின் வருகை. வேனல்காரி என்றும் பிராந்திப்பாறு [கிறுக்கிப் பார்வதி] என்றும் நாங்கள் சொல்வோம். வகைதிரிவு இல்லாதவள். தென்மேற்கிலிருந்து கிளம்பி வடகிழக்காக விரைந்து மலைகளில் மோதிச் சுழன்று மீண்டும் தென்கிழக்காக சென்று ஓய்வாள். பத்தாமுதயத்திற்குள் அவள் வரவில்லை என்றால் அவ்வாண்டு வரட்சி உண்டு. ஆனால் இங்கே வரட்சி என்பது புல்காய்வது மட்டும்தான்.

சித்திரை விஷு தொல்தமிழர்களின் புத்தாண்டு. விஷுக் கொண்டாட்டம் என்பது எங்களூரில் சங்ககாலத்தின் நேர்த்தொடர்ச்சி. இங்கே நாயக்கர் ஆட்சி இருந்ததில்லை என்பதனால் தமிழ்மையநிலத்தில் நிகழ்ந்த பண்பாட்டுமாற்றங்கள் ஏதுமில்லை.ஆண்டின் முதல்விழிப்பை எட்டு மங்கலங்களின் மீது நிகழ்த்துவதை கணிகாண்பது என்கிறோம். கண்திறப்புச் சடங்குதான் கணி..

எட்டு மங்கலங்களில்  நிறைகுடநீர், அகல்சுடர்நெருப்பு ,பொன்,முகம்பார்க்கும் கண்ணாடி, நெல், சித்திரையின் கனிகளான மா பலா வாழை, மங்கலத் தெய்வங்களாகிய திருமகளும் கணபதியும் ஆகியவற்றுடன் மைய இடம்பெறுவது கொன்றை மலர்.

தமிழகத்தின் தொன்மையான பல ஆலயங்களின் ஆலயமரம் கொன்றை. கொன்றையின் வேந்தன் தென்னாடுடைய சிவன். சிவன் கோயில்களிலேயே தொன்மையானது என கேரளத்தார் சொல்லும் திருவஞ்சைக்குளம் [வஞ்சி] கோயில் [இன்றைய கொடுங்கல்லூர் எனும் அன்றைய கொடுங்கோளூர்] கொன்றையடியானை தெய்வமெனக் கொண்டது.

ஆண்டுக்கணக்கை கொன்றையை வைத்தே கணக்கிட்ட காலத்தைச் சேர்ந்தது இவ்விழா. அன்று எல்லா காலக்கணிப்புகளும் தாவரங்களைக் கொண்டே நிகழ்ந்தன. கேரள ஆலயங்களில் எல்லா பருவமாற்றங்களும் அந்தந்தச் செடிகள் மலர்களைக் கொண்டே இன்றும் கணிக்கப்படுகின்றன. இன்றும் முதற்கொன்றை மலர்வது அங்கே நாளிதழ்களின் தலைப்புச்செய்தி.

தொல்பழைமையுடன் இணைந்துகொள்வது ஒரு சிறப்பான உளநிலை. விழாக்கள் இளமையில் வெறும்சடங்காகத் தோன்றுகின்றன. அன்று நாம் நம்மை ஒரு தனிப்பிறவி என நினைத்துக்கொண்டிருக்கிறோம். நானும் உலகமும்  இரு இருப்புகள் என எண்ணுகிறோம். முதிர்கையில் நாம் இவ்வனைத்திலும் ஒரு துளி, ஒரு தொடரின் கண்ணி, எந்நிலையிலும் அதற்கப்பால் ஏதுமில்லை, நம்மை நாம் பொருள்கொள்ள அது ஒன்றே வழி என உணர்கிறோம். அன்று இவையனைத்தும் பிறிதொன்றாகிவிடுகின்றன

விஷுக் கொண்டாட்டங்களை நாம் சங்க இலக்கியங்களில் காணலாம்.  மலராடை அணிவது பழைய வழக்கம். மஞ்சள்நிற ஆடையாக அது பின்னாளில் மாறியது. வேம்பும்தேனும் உண்பது. ஐந்துவகை பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது. இதற்காக புதுநெல்லை சேர்த்து வைத்திருப்பார்கள். பனைக்குருத்தில் வெல்லம் சேர்த்த அரிசிமாவு வைத்து ஆவியில் அவிக்கும் அப்பம் ஒன்றுண்டு. அது சாஸ்தாக்களுக்கு படைக்கப்படும். யக்ஷிகள் அனைவருக்கும் புதுமலர்களால் பூசை உண்டு.

சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு வெவ்வேறுவகை தொல்வானியல் கணக்குகளால் இந்தப் புத்தாண்டுக்குறிப்பு முன்னும் பின்னுமாகச் சிலநாட்கள் தள்ளிப்போய் தனித்தனி விழாக்களாக ஆகிவிட்டது என்று சோதிடரான என் பெரியப்பா சொல்வதுண்டு. [அவருடையது தவிர பிற புத்தாண்டுகள் வானியல்பிழைகளால் உருவானது என வாதிடுவார்].

சித்திரைக்குச் சற்றுமுன்னராக பங்குனியில் வரும் பங்குனி உத்தரம் ஒரு தொன்மையான தமிழ்ப்புத்தாண்டு.  சற்றுப்பிந்தி வரும் பத்தாமுதயம் இன்னொரு தொன்மையான தமிழ்ப்புத்தாண்டு. இவற்றை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இனக்குழுக்கள் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடிவந்தனர். வெவ்வேறு ஆலயங்களில் இவை புத்தாண்டுகளாக கொண்டாடப்பட்டன.

பத்தாம்நூற்றாண்டில் கேரளத்தைக் கைப்பற்றிய சோழர்கள் இவற்றை சீர்ப்படுத்தி சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக ஆக்கினர். மற்ற புத்தாண்டுகள் புத்தாண்டாக அல்லாமல், ஆனால் அதே கொண்டாட்டத்துடன் அவ்வாறே நீடிக்கின்றன.. பங்குனி உத்தரம், பத்தாமுதயம் இரண்டுக்குமே புத்தாண்டின் அதே சடங்குகளுடன் அதே கொண்டாட்டம் உண்டு. மலையாள மாதம் மேஷம் –மேடம்- பத்தாம் தேதி பத்தாமுதயம் வருகிறது. பங்குனிமாதம் உத்தரம் நாளில் பங்குனி உத்தரம் வருகிறது

திருவிதாங்கூர் அரசுக்குக் கீழே இருந்த சிவன் கோயில்களில் பங்குனி உத்தரம், விஷு, பத்தாமுதயம் மூன்றுமே வரிசையாக ஒரேபோல கொண்டாடப்படும். “இதிலே எதுடா புத்தாண்டு… ஒரே வருஷம் எத்தன தடவடா பொறக்கும்? பிக்காலிகளா!” என்று மூவிழியன் சினப்பதாக தோன்றும். “செரி இருக்கட்டும். உமக்கு என்னவே? நீரு காலமில்லா கடுவெளியிலே இருக்கப்பட்டவராக்குமே. இங்கிண கணக்கும் கணக்குகள் தப்புறதும் எல்லாம் எங்கள மாதிரி பாவப்பெட்ட மனுசனுக்குல்லா? எங்க கணக்கு தப்பாத எடமுண்டாவே, நீரே சொல்லும்” என்று பதில்சொல்வோம்.

இதற்கு அப்பால் மலையாளப்புத்தாண்டு. அது பாண்டியர்களிடமிருந்து கேரளம் விடுபட்டபின் உருவாக்கப்பட்ட கொல்லவருஷக் கணக்கு. கிபி 825ல் இது தொடங்குகிறது. இன்றைய ஆங்கில ஆண்டிலிருந்து 825ஐ குறைக்கவேண்டும். அதன்படி சிங்ஙம் [ஆவணி] தான் முதல் மாதம். அதையும் கொண்டாடுவோம். அப்போது சிவன் மலையாளியாக இருப்பார். ரகசியமாக பீஃ ப்ரை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வார். ஆனால் எங்களூர் கோயிலில் போற்றிகள் மிகக்கடுமையானவர்கள். ஆப்பிள் கொய்யா நேந்திரம்பழம் செவ்வாழை என ‘வரத்தன்’ எதையும் உள்ளே விடமாட்டார்கள்.

இம்முறையும் சரியாக யக்ஷி வந்துவிட்டாள். இருட்டி வந்தது. பெய்யுமா என ஒருமணிநேரம் போக்குகாட்டியது. பின்னர் விண்ணிலிருந்து ஒரே அறை. மரங்கள் கொண்டாட்டமிடுவதை பார்த்தபடி நானும் அருண்மொழியும் அஜிதனும் கொல்லையில் அமர்ந்திருந்தோம். கோடைமழையின் உறுமலும் விசையும் பலமடங்கு. காற்றழுத்தவேறுபாடுகளால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடம் நோக்கி செல்லும் பெருக்கு அது.

இன்றுகாலை முதல் மழைக்குப்பின் நனைந்துகிடந்த கணியாகுளம் நோக்கிச் சென்றேன். தாமரைகள் கோடையை அறியாதவை போலிருந்தன. அத்தனை மரங்களும் புற்களும் புதிதாக எழுந்திருந்தன. மலைகள் கழுவிவிடப்பட்டு, நீர்முழுக்காட்டு முடிந்த சிவலிங்கம் போல் தூய்மையும் பொலிவும் கொண்டிருந்தன. சூரியனையே தூசிபோக கழுவிவிட்டதுபோல் சுடர் தெளிந்திருந்தது

ஒளி மிகக்குறைவாக இருந்தது. விண்பரப்பு முகில்களால் மூடப்பட்டிருந்தமையால் மழைக்கான முன்னோட்டம் என தோன்றியது. நீர்ப்பரப்பு இருண்டு தண்மை தெரிந்தது. குறைவான ஒளியில் நாம் வேறு ஒரு நிலக்காட்சியைப் பார்க்கிறோம். நல்ல ஒளிக்கலைஞர்களே அதைப் புகைப்படமாக ஆக்கமுடியும்.

இங்கே ஒவ்வொன்றின்மேலும் ஓர் ஆதிக்கம் எழுந்து நிற்கிறது. மலைகளை கோடிடுகின்றன மின்கம்பிவரிகள். சாலை வயல்களின் மேல் மலைப்பாம்பு போல் எழுந்து சுற்றிவளைத்துக்கொண்டிருக்கிறது. தாமரைகள் மலர்ந்த குளத்தின்மேல் பெரிய இரும்புத் தண்டுடன் எழுந்து நிற்கிறது மின்கோபுரம். அதில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றல் இந்த நீரால் உருவாக்கப்பட்டது. முன்னர் வான்மழையில் இருந்தது. கட்டுண்ட யக்ஷி.

புல்நுனிப் பனித்துளிபோல நடுங்கி நிலைகொண்டிருக்கிறது இப்புவி. இந்நாள் அதில் ஒரு கணம்.

***
பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்
கணியாகுளம்,பாறையடி…
கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி
காலைநடையில்…
பார்வதிபுரம் பாலம்
செவ்வல்லியின் நாள்
முதல் மழை
வரம்பெற்றாள்
குன்றுகள்,பாதைகள்
இடவப்பாதி
குருகு
முந்தைய கட்டுரைபொண்டாட்டி – சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைகோவையில் இன்று உரையாற்றுகிறேன்