அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய திரு ஜெயமோஹன் அவர்களுக்கு,
நீண்ட நாட்களாகத் தங்கள் இணைய தளத்தினைப் படித்து வருகிறேன்.
சொல்லப் போனால் என் இணைய வாசிப்பிற்கே நீங்கள்தான் துவக்க நாயகன்.
தியானம் பற்றி உங்களின் இந்தக் கட்டுரை முற்றிலும் என் கருத்துக்கும் அனுபவத்துக்கும் இதமாய், சுகமாய் ருசித்தது.
நான் என் ரசனையையும் அனுபவத்தையுமே படித்துப் பார்த்ததைப் போல் இருந்தது உங்கள் எழுத்து.
உங்கள் எழுத்துக்களின் ஆழமும் அழகும் என்னை உங்கள் எழுத்தின் தீவிர ரசிகனாக்கியதில் நான் உண்மையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
முடிந்தால் எனது கீழ்க் கண்ட இணைய தளத்தை வாசித்துப் பாருங்கள்.
http://shanmughapriyan.blogspot.com/
Ever in Love With Your Beautiful Writings,–
SHANMUGHAPRIYAN
**
வணக்கம். தங்களுடைய ‘நானே (கிட்டத்தட்ட) கடவுள்’ கட்டுரையை படித்தேன். ஒரு சந்தேகம். ‘அஹம் ப்ரம்மாஸ்மி’ என்றால் ‘நான் ப்ரம்ம்த்தினுடையவன் (நான் கடவுளின் சொத்து அதாவது, ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் சொத்து)’ என்று அர்த்தமா, இல்லை, ‘நானே ப்ரம்மம்’ என்று அர்த்தமா? வேதம் ‘அஹம் ப்ரம்மம்’ என்று சொல்லவில்லை, அந்த ‘அஸ்மி’ என்ற விகுதி முக்கியமெனவும், அதை சர்வ சுலபமாக எல்லோரும் விட்டுவிடுகிறார்கள் எனவும் கேட்டதாக ஞாபகம்.
அன்புள்ள சரவணன்,
அகம் பிரம்மாஸ்மி என்பதற்கு ஒரே அர்த்தம்தாந்-நான் கடவுள். அல்லது நானே கடவுள். அது பற்பல நூல்களில் மிக விரிவாக மீண்டும் மீண்டும் பேசப்பட்டதுதான். அகோரிகளின் சிவோகமும் அதே பொருள் கொன்டதுதான். சிவமே அகம். சிவமே நான்.
சம்ஸ்கிருதம் மிகவும் பழமையான , பல அடுக்குகள் கொன்ட மொழி. அதன் புணர்ச்சிவிதிகளை பொருட்டாகக் கருதாமல் இச்டகத்துக்குப் பிரித்து தங்களுக்குப் பிரியமனா அர்த்தங்களை அளிக்கும் பண்டிதர்கள் பலர் உண்டு. ஒருவர் சம்ச்கிருதச்சொல்லை பிரித்து பொருள்தந்து ‘உண்மையான அர்த்தம் என்னன்னாக்கா’ என்று பேசவந்தால் ஓடிவிடுங்கள். அது ஒஉ அபத்தமான மூளை விளையாட்டு. எப்போதும் மூலநூல்களை நீங்களே படியுங்கள். நம் சிந்தனைத்துறையில் சிந்தனைகளை விடச் சிந்தனைப்புரட்டுகளே அளவில் அதிகம். அகம் பிரம்மம் என்பது சம்ஸ்கிருத இலக்கணமல்ல, நவீனத்தமிழிலக்கணம்.
கொஞ்சநாள் முன்னர் ஒரு ஒலிநாடாவில் ஒரு அய்யங்கார் பேசுவதைக் கேட்டேன். கிருஷ்ணன் என்றால் கறுப்பன் என்றல்ல பொருள் என. கிரு என்ற சொல்துளிக்கு பரவுதல் என்று பொருள். பரவுபவன் என்றே அதற்கு பொருள் என்றார். கிருஷ்ணன் கறுப்பனே அல்ல என்று வாதிட்டார். கறுப்பு மீது அந்த அளவுக்கு அவருக்கு வெறுப்பு. இம்மாதிரியான பேச்சுகளை நிராகரித்தால் மட்டுமே நம்மால் நம் மூலநூல்களை கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடியும்
ஜெ
**
நான் [கிட்டத்தட்ட] கடவுள்’