கங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்

 

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

அன்புள்ள ஜெ,

 

தங்கள் கங்கைக்காக ஓர் உயிர்ப்போர், கட்டுரையை தொடர்ந்து அதற்கான மனு மற்றும் அது தொடர்பான செய்திகளை இணையத்தில் தேடிய போது எண்ண முடியாத அளவு மனுக்களும், அதிரவைக்கும் செய்திகளுமே கண்ணில் பட்டன, இதில் கொடூரமான ஒரு செய்தி என்னவென்றால் அதன் 70 மையங்களில் 5 மட்டுமே குடிப்பதற்கும், 7 மட்டுமே குளிப்பதற்கும் சாதியமானது மற்ற இடங்களில் குளிப்பது கூட நஞ்சை விளைவிப்பன,

 

https://www.downtoearth.org.in/coverage/water/namami-gange-5-reasons-why-ganga-will-not-be-clean-by-2020-61891

 

அதன் மனுக்களை உள்ளே சென்று வாசித்த போது மாத்ரி சதன் அமைப்பிற்கு ஆதாரவாக சுவாமி கியான் சுவரூப் சனானந் பாரத பிரதமருக்கு எழுதிய கடிதங்களும், அவர் உண்ணாவிரதத்தை முறிக்க செய்த அராஜகங்களுமே கண்ணில் பட்டன, உத்ராகண்ட் மாநிலத்தில் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்திற்கு பன்னிரெண்டாயிரம் கோடி செலவாகியுள்ளது மறுசீரமைப்பு செய்ய, இதற்கு காரணமாக சொல்லப்பட்டது அங்கே கங்கையில் ஏற்படுத்திய ஹைட்ரா-எலக்டிரிக் பிளாண்ட். இந்த பிளாண்ட்டை கேட்ட ஆகிய செலவு ஒன்பதாயிரம் கோடி.  நாட்டின் மின் வளர்ச்சி முக்கியமே ஆனால் அழிவை சந்திக்கும் வளர்ச்சிகள் சில பல லாபங்களுக்காக இங்கே அரங்கேறி கொண்டே இருக்கின்றன இங்கே ஒரு அழிவில் ஏற்பட்ட செலவு இந்த பிளாண்ட்டை உருவாக்க தேவையான செலவை விட பன்மடங்கு அதிகம் இன்னும் யாரும் இதனை மூடும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, கங்கை தன்னை இயற்கையாகவே சுத்திகரிக்கும் தன்மை கொண்டது ஆனால் அதன் கனிம வளங்கள்  தெகிரி அணையிலேயே தேக்கிவைக்கப்படுவதால் அதன் ஓட்டத்தில் சுத்திகரிக்கும் தன்மை இழக்கப்படுகிறது. மேலும் கங்கை மண்ணின் வளத்தை அழிக்கவும், காடுகளை அழிக்கவுமே ஒவ்வொரு திட்டங்களாக நடந்தவண்ணம் இருந்திருக்கின்றன. சுவாமி சனானந்தின் மொத்த 111 உண்ணாவிரத்ததையும் காட்சியக படுத்தப்படுள்ளது அதனுள் நடந்த கேவலங்களும் வெளிப்படையாகவே உள்ளன சுட்டி கீழே, ஆனால் இதற்கெதிராக எந்த எதிர்ப்பும் நிகழவில்லை என்பது கேவலத்திலும் கேவலம்,

 

https://www.youtube.com/watch?v=sdcTRJrqsIc&feature=youtu.be

 

இதற்கு எதிராக படித்தும் நாம் எதுவும் செய்யாமல் தானிருக்கிறோம், இதற்கு அயறாத வாசிப்பும், பல கட்ட ஆராய்ச்சிகளும் தேவையில்லை.மேலுள்ள கானொலியை பார்த்தாலே நமக்கு புரியும். மாத்ரி சதன் அமைப்பிலிருந்தும் இன்னும் பலரும் இதற்காக உண்ணாவிரதமிருந்து தங்கள் உயிர் நீத்துள்ளனர்.

 

இது வெறும் யாரோ ஒருவர் தன் முன் முடிவுகளாலோ, தான் கொண்டுள்ள நிலைப்பாட்டை சொல்லவோ நடந்துவரும் போராட்டமில்லை சிறந்த அறிவியலாளர்களால் பல தரப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு கிட்டதட்ட நூறு பக்க அளவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு பொது தளத்தில் மக்கள் ஆதரவுக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

https://peoplegangaact.wordpress.com/

 

கடந்த மூன்று வருடங்களாக மனுக்கள் மட்டுமே அதிகரித்த வண்ணமுள்ளன, எல்லா மனுக்களும் ஐம்பது பேர், நூறு பேர் அதிகமாக ஐநூறு பேர் வரை மட்டுமே ஆதரவு தரப்பட்டு இப்போது நிராதரவான நிலையில் உள்ளது. இவையில் முக்கியமான மனு ஒன்றினை கண்டடைந்து அதில் என் பதிவை இட்டுவிட்டேன்.

 

https://www.change.org/p/pmo-people-s-ganga-act 

 

இதுவும் நூறுடன் ஒன்றாக போவதும், மாற்றத்தை ஏற்படுத்தபோவதும் எல்லோர் கையிலும் உள்ளது. குறைந்தது ஒரு லட்சம் ஆதரவு வந்தால் மட்டுமே இது ஒர் இயக்கமாக மாறும், இங்கே லட்சமென்பது தமிழக மக்கள் தொகையில் 0.1 சதவீதம் மட்டுமே இந்திய அளவில் நோக்கினால் 0.01 சதவீகிதம் கூட வராது. ஆராய்ந்து நோக்கும் போது 0.01 சதவீதம் ஒத்துழைப்பு இருந்தாலே இங்கே மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, அந்த அளவு கூட ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் தான் எல்லா போராட்டங்களும் தோல்வியில் முடிந்த வண்ணமுள்ளன, எல்லா மனுக்களும் குப்பைகளுக்கு சென்ற வண்ணமுள்ளன. இங்கே ஒரு தரப்பை எதிர்கிறோமென்றால் அது பொது திரளாக நடந்தால் மட்டுமே முடியும் ஒன்று, இரண்டு பேர் உண்ணாவிரதத்தாலள்ள. அது கங்கை தூய்மையென்பது சாதாரண விஷயமல்ல மேலுள்ள அறிக்கையை படித்தால் அதிலிள்ளதை வாசித்தால் புரியும். இதற்காக லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டால் கூட தீர்வு எட்டபடாது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒருவனாக இந்த மனுவில் எனது பெயரை இணைத்துள்ளேன். இப்போதும் காலம் தாமதித்துவிட வில்லை, இனி முயற்சித்தாலும் இந்த போராட்டத்திற்கான ஒரு பொருளை ஏற்படுத்த முடியும். அதற்கான ஒரு புள்ளி வாய்ப்பை நான் தொடங்கிவிட்டேன் வெற்றி பெற செய்வது அனைவரின் கையிலுமுள்ளது.

 

நன்றி,

நவின்.ஜி.எஸ்.எஸ்.வி

 

அன்புள்ள ஜெ

மாத்ரி சதனின் சாதுக்கள் கங்கையைக் காப்பதற்காக நடத்தும் உண்ணாநோன்பு மற்றும் உயிர்நீத்தலைச் சுட்டி, அதுகுறித்து எதிர்வினைகள் வரவில்லை என எழுதி  இருந்தீர்கள்

இது எதிர்பதில் தான். வினைத்திட்பம் இல்லாதவனிடமிருந்து

நீங்கள் வெண்முரசில் பல்வேறு இடங்களில் பரவக் காண்பித்துள்ளது போல பொது மானுடனின் சாமானிய தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை ஒதுக்கிச் செல்வதே அவனது தன்முனைப்பை அழுகாமல் காக்கும் வழி.

நான் ஒரு பொது சாமானியன். எனது சுயநலம் கள்ளத்தனமானது. போலிக்குடிமகனாக வேடமிட்டு, பிறர் பிழைகளை பெரிதுபடுத்தி என்னைப் புனிதப் படுத்தி அதிகார வர்க்கத்திற்கு இடர் தராத கருத்துச் சங்கிலிகளை சுழற்றி, எனது அழுக்குப் பொதியைக் காப்பாற்றிக் கொள்ள வைக்கிறது

அந்த அழுகும் சுயநலம், பல்வேறு தர்க்கக் கேள்விகளைக் கண்டடைகிறது 1 தற்கொலை செய்து கொள்ள எவருக்கும் உரிமையில்லை. உண்ணாநோன்பு ஒரு நிலையில் சமரசம் காண வேண்டும்.

2 துறவிகள் தற்கொலைசெய்து கொள்வது சமூகத்திற்கு தீராத பழியை ஏற்படுத்தும். அதன்மூலம் அந்தப் பாவத்திற்கு அவர்கள் ஆளாகலாம்

3 எவ்வளவோ பிரச்னைகள் உள்ள நாட்டில் இதுவும் ஒரு பிரச்னை

4 தொடர் அழுத்தம் மூலம் இயக்கமாக உருவாக்கித் தான் இது போன்ற செயல்களை செய்யமுடியும். அவசரம் கூடாது

5 தீவிர துறவு மனப்பான்மை என்பது ஒரு நிலையில் தன்வதையாக மாறுகிறது. இது உள்நோக்கித் திரும்பிய லிபிடோவாக, சமுதாயத்தின் மீதான எதிர்மறை விமர்சனமாக பரிணமிக்கிறது

6 அந்த தொழில் முனைவுகள் பெருமுதலாளிகளுக்கு துணைபோகலாம். ஆயினும் அதனால் பயன் பெற்ற சாமானியர்களும் இருக்கலாம்

 

இதுபோன்ற கருத்துக் கண்டுபிடிப்புகள் மூலம் என் மனச் சான்றை சரிக்கட்டி விட்டு அலுவலகம் சென்று ‘கடமை’யை ச் செய்யும் குடியாவேன்.

சிறு வயதில் மழையில் நனைந்தால் அம்மா திட்டும்; பள்ளி செல்கையில் விளையாடினால் டீச்சர் பேசும்; அதிகம் கேள்விகேட்டால் தலைமை ஆசிரியர் பிரம்பால் கவனிப்பார். எங்கு பார்த்தாலும் காக்கிச் சட்டை அச்சம் தரும். ரத்தம், வெள்ளம், மழை, இரயில், யானை எதைப்பார்த்தாலும் நின்று பார்க்க, “நமக்கேன் வம்பு; வீட்டுக்குப் போகணும் ” அணுகுமுறை . அலுவலகத்தில் மேலதிகாரிக்கு கேள்வியின்றி அடிபணிதல். ஓய்வு பெற்றதும் அனைவருக்கும் அடிபணிதல். இப்படி உண்டுறங்கி இடர்செய்து சாவதே எனது போக்கு. நீங்கள் மனசாட்சியைக் கிளறுகிறீர்கள். கங்கையைக் கொல்வதையும் கங்கையிலேயே கருமஞ்செய்து கரைத்து மகிழ்வேன்.

ஊடகத்தைப் பொறுத்தவரை , மீம் உருவாக்கும் பொதுக்குடிமகன் அளவிற்குக்கூட விவரமான செய்திகள் வெளியாவதில்லை. அசல்தன்மை காணக்கிடைப்பதில்லை.  ஒரு சான்று.  ஒரே நாளில் முதல்பக்கச் செய்தி தமிழகம் தேர்தல் கால பணம், நகை கைப்பற்றலில் முதலிடம் பெற்றது. கீழே உள்ள செய்தி கைப்பற்றப்பட்ட பல கோடி ரூபாய் நகை திரும்ப ஒப்படைக்கப் பட்டது. திரும்ப ஒப்படைக்கப்படக்கூடிய பணம் / நகைகள் மொத்த கைப்பற்றுத் தொகையிலிருந்து கழிக்கப்படவேண்டும் என்றோ, எதற்காக முதலில் அவை கைப்பற்றப்பட்டன என்றோ தினசரிகள் அலசியதாகத் தெரியவில்லை. புல்நுனியின் மீச்சிறு துளியை நக்கும் என்போன்றவனுக்கு இந்தச் செய்தி தான் அறிவுப் பெட்டகம்.

ஒரு மாதமாக வெப்பம் தகித்த கோவையில் புலன்களெல்லாம் எரிந்தன. உதிரமே சுட்டது. மரங்கள் அக்னிதவம் செய்தன. மண் கொதித்தது. காற்று கனன்றது. இன்று முகில் திரண்டு கருணை வானம் கிழிந்து சுரந்தது. பேரருளின் பொழிவு. முழுதாய் நனைந்து பைக்கில் பயணித்து குளிர்ந்தேன். மாத்ரி சதன் மகான்கள் போன்றவர்கள் எங்கோ வானில்  நின்று அளிபொழிகிறார்கள். என் போன்ற சாமானியர்கள் அந்தக் குளிர்நீரில் அழுது கொண்டே குளிக்கமட்டுமே இயன்றவர்கள். ஏனெனில் நான் ஒரு கலகமானிடப் பூச்சி

அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

 

முந்தைய கட்டுரைமண்ணும் மனிதரும் பற்றி…
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14