ஒரு மொழியாக்கம்

 

 

ராகுல் காந்தியின் உரையை ஜோதி அழகாக மொழியாக்கம் செய்கிறார். வேண்டுமென்றால் சில இணைப்புச்சொற்கள் மிகுதி என்னும் குறையைச் சுட்டிக்காட்டமுடியும்.

 

முன்னர் தங்கபாலுவும், பி.ஜே.குரியனும் மொழியாக்கம் செய்து நகைப்புக்கு இடமானார்கள். அவர்கள் செய்த பிழைகள் என்னென்ன? முதலில் மொழியாக்கம் என்பது ஒரு மொழித்தொழில்நுட்பம். அதில் தேர்ச்சி கொண்டவர்கல் மொழியாக்கம் செய்யவேண்டும். மாறாக கட்சியில் முக்கியத்துவம் கருதி மொழியாக்கம் செய்ய முன்வருகிறார்கள். ராகுலின் அருகே நின்றிருக்கும் வாய்ப்பு என்பது பெரிதாகத்தெரிகிறது. அதை இன்னொருவருக்கு கொடுக்கும் உளநிலை இல்லை. தங்கபாலுவுக்கு ஆங்கிலம் சிக்கல். பி.ஜெ.குரியனுக்கு செவி சிக்கல்

 

இரண்டாவது, முதற்பேச்சாளர் பேசும்போது திரும்பி அவரைப் பார்க்கக்கூடாது. அவருடைய உடலசைவுகள், முகபாவனைகள் நம்மை திசைதிருப்பு. கூட்டத்தைப் பார்க்கவேகூடாது. அவர்களில் நம்மை கவனம் கலைக்கும் ஏதேனும் நிகழும். குனிந்து பார்ப்பதே நன்று.

 

மூன்றாவது, உறுதியாக குறிப்பேட்டில் பேச்சாளர் சொன்னவற்றை குறித்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் பேச்சாளர் பேசும்போது சொல்லும் கருத்துகளுக்கு நம் உள்ளம் எதிர்வினை ஆற்றுகிறது. ஓர் உரையாடலே அங்கே நிகழ்கிறது. அவர் நான்கு கருத்துக்களைச் சொல்லி முடித்தால் நாம் இறுதியான கருத்தில் வந்து நின்றிருப்போம். அங்கிருந்து முன்னால் சென்று முதல்கருத்திலிருந்து வரிசையாக மொழியாக்கம் செய்வதற்கு இறுதிக்கருத்தில் இருந்து நம் உள்ளத்தை துண்டித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அது எளிதல்ல.

 

நமக்கு சில கருத்துக்கள் நினைவிலிருக்காது. சிலகருத்துக்கள் நமக்கு முக்கியம் எனத் தோன்றும். அந்தக்கருத்துக்களை  நாம் முக்கியத்துவம் கொடுத்து சொல்லிவிடுவோம். ஆகவே வரிசையாக கருத்துக்களை  சுருக்கமாக எழுதியபடியே செவிகூர்வது நல்லது. முழுமையாக எழுதக்கூடாது. முக்கியமான சொற்களை மட்டும் எழுதினால் போது. கலைச்சொற்கள், தரவுகளை கண்டிப்பாக எழுதவேண்டும்

 

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட உரைகளையே பெரும்பாலான தலைவர்கள் பேசுகிறார்கள். அவற்றை முன்னரே மொழியாக்கம்செய்தும் வைத்திருப்பார்கள். ஆனால் ராகுல் காந்தி அடிப்படையான விஷயங்களையே பேசுகிறார். ஆனால் அவற்றை அங்கே அந்தமேடையில் பேசுகிறார். ஆகவே மொழியாக்கச்சிக்கல்கள் எழுகின்றன

 

ஆனால் இந்த குளறுபடி மொழியாக்கங்களை எதிர்கொள்கையில் ராகுலிடம் இருக்கும் இளமைக்குரிய இறுக்கமற்ற நட்பான பாவனையும், இயல்பான சிரிப்பும் ,மனம்கவர்வதாக உள்ளன. தலைவன் என்பவன் மற்ற மனிதர்களை மதிப்பவனாக, பிறருக்குச் செவிகொடுப்பவனாக, நல்லெண்ணம்கொண்டவனாக மட்டும் இருந்தால்போதும். படிப்பு, திறமை, கூர்மதி எதுவுமே தேவையில்லை, அவற்றை அளிக்க ஆயிரம்பேர் வந்து நிற்பார்கள். நாடு நிபுணர்களால் ஆளப்படுகிறது. ஆள்பவன் ஆளப்படுபவர்களுக்கும் அந்நிபுணர்களுக்குமான ஒரு நல்ல ஊடகம் மட்டுமே என்னும் எண்ணம் ஏற்பட்டது.

 

நான் பல மேடைப்பேச்சுக்களை மொழியாக்கம் செய்திருக்கிறேன். மேலே சொன்ன எதையும் கடைப்பிடித்ததில்லை.  நித்யாவின் நீண்ட உரைகளை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறேன். கல்பற்றா நாராயணன் போன்றவர்களின் செறிவான இலக்கிய பேருரைகளையும் மொழியாக்கம் செய்திருக்கிறேன் .வரிக்குவரி, சொல்லுக்குச்சொல் மொழியாக்கம் செய்வேன்.பிழைநிகழ்ந்ததில்லை. காரணம் நான் இலக்கியம், தத்துவம் அல்லாத மொழியாக்கங்களைச் செய்ததில்லை. பொதுவாக நினைவில் அடுக்கிக்கொள்ளும் பயிற்சி உண்டு. அது மிக எளியதுதான். முயற்சி எடுக்கவேண்டும்

முந்தைய கட்டுரைஅருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா
அடுத்த கட்டுரை“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10