அரூ அறிபுனை விமர்சனம்-4 ,எல்லைகளும் வாய்ப்புகளும்

அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம்.  உமா ரமணன்

அரூவின் இனைய இதழில் வெளியான பத்து கதைகளையும் வாசித்தேன்.  இந்த கதைகளை தொடர்ந்து வாசித்த பொழுது அரூப வெளியில் கொஞ்சம் கொந்தளிப்போடும் அதே சமயம் அக விடுதலையுடனும் உலாவுவதை போலிருந்தது. அது ஏற்படுத்திய உணர்வுகள் என் இருப்பின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பியது. அதற்கான விடைகளை மிக எளிமையாக ஏற்றுக்கொள்ள வைத்தது மரணத்தை ஏற்றுக்கொள்வதை போல. இந்த கதைகளை படித்த பின்னே என்னையும் வெறும் கருவி அல்லது இயந்திரமெனவே உணர்ந்தேன்.

ஒருவனுடைய நான் என்பது அவனது மனம் மட்டுமே. மனம் என்பது அவன் இதுவரை பெற்ற அனுபவங்களின் மூட்டை. அந்த மூட்டையிளிருந்தே அவன் வாழ்வதற்கான விழுமியங்களை வழிகளை வகுத்துக்கொள்கிறான். மனதில் உள்ள தகவல்களை வைத்து கொஞ்சம் சிந்திக்கவும் செய்கிறான். அவனின் சிந்தனைகளுக்கு எல்லைகள் எதுவும் இல்லை ஆனால் ஒரு எல்லைக்கு மேல் அவனால் செல்ல முடிவதில்லை. அதற்கு தடையாக நிற்பதும் அந்த அனுபவங்களின் மூட்டைதான். இந்த தத்தளிப்பிலிருந்து தப்பிக்க அவன் கண்டடையும் சாத்தியங்களும் வழிமுறைகளும் இதுவரை எண்ணற்ற கருவிகளையும் இப்பிரபஞ்சத்தை போர்த்தியிருந்த இரகசியங்களையும் கண்டடைந்திருக்கிறது. இயற்கை தன்னையறிய கண்டுபிடித்த கருவி மனிதனென்றால் மனிதன் தன்னையறிய கண்டுபிடித்த கருவிகள்தான் இன்று வரை நீண்டிருக்கும் அறிவியல் போலும்.

இன்று நாம் ஞான மார்கத்தில் போராடி பெரும் ஞானத்தை, எதிர்காலத்தில் சில கருவிகளே கொடுத்துவிடும் வாய்ப்புகள் வியப்பாகவும் அதே நேரம் ஏமாற்றாமாகவும் இருக்கிறது. பெரும்பாலான கதைகள் இதில் நிறுவுவது மனிதனின் உள்ளுணர்வை இயந்திரங்களுக்கு ஊட்டும் சாத்தியங்களை. அது தானாக சிந்திக்கும் தகமையை சாத்தியப்படுத்துவதை. மனிதன் அமரத்துவத்தை விஞ்ஞானத்தின் மூலம் சீக்கிரமே எட்டிவிடுவான் என்றே இந்த கதைகளை படித்த பின் தோன்றுகிறது. மனித மனதை ஒரு மெமரி  சிப்புக்குள் அடைத்துவிடும் காலம் நெருங்கிக்கொண்டிருப்பது போல தோன்றுகிறது. சிம் கார்டை சொருகி அலைபேசியில் இயங்குவதை போல நம் தாத்தாக்களின்  அப்பாக்களின் மெமரி சிப்புக்களை வைத்துக்கொள்ளும் காலம் வியப்பாக இருக்கிறது. இன்றைய காலத்திலேயே மனிதனின் இருப்பு பெரும்பாலும் சர்வர்களுக்கும், க்ளொவ்டுகளுக்கும் இடம்பெயர்ந்து விட்டது. வருங்காலத்தில் எல்லோருக்கும் ஒரு க்லோன் அங்கே இருக்குமென நினைக்கிறேன்.

அறிவியல் கதைகளை எழுதுவதில் உள்ள சிக்கல்கள் என நான் நினைப்பது

நேரடியான வாழ்வனுபத்திலிருந்து கதைக்கான கருவை பெற முடியாதது. சாதாரணமாக எழுதும் சிறுகதைகள் நம் வாழ்விலிருந்து எழுவதால் அதற்கான மொழியும் காட்சிகளும் தானாகவே உருபெற்றுவிடும். ஆனால் அறிவியல் சிறுகதைகளுக்கு அது ஒரு சவால்.

அறிவியல் கதைகளுக்கான கருவை நாமே தேடி பிடிப்பிப்பதால் அதை விளக்கும் தொனியில் கதைகள் அமைந்துவிடக்கூடும் . அதனால் அது பெரிய தாக்கத்தை வாசகனின் மனதில் ஏற்படுத்த முடியாது.

முழுமையான அறிவியல் அறிவு அறிவியல் அறிஞர்களை தவிற பிறருக்கு சாத்தியமில்லை. நாம் எடுத்துக்கொள்ளும் அறிவியல் கோட்ப்பாட்டை பற்றியோ கருவியை பற்றியோ முழுமையான அறிவு நமக்கு சாத்தியமில்லை. அப்படியே அதை முழுமையாக புரிந்துகொண்டாலும் அது புனைவின் சாத்தியத்தை கட்டுப்படுத்த கூடும்.

ஆனால் இந்த கதைகள் அனைத்தும் அந்த சிக்கல்களை கடந்து ஒரு வாழ்வனுபவத்தை நம்முள் நிகழ்த்துவதாகவே நான் உணர்கிறேன். காலத்தின் மாற்றத்தின் முன் மல்லுக்கட்டடாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை தூண்டுவதாக கருதுகிறேன்.

அரூ இதழ் ஒவ்வொரு கதைக்கு முன்பும் எத்தனை நிமிட வாசிப்பு என்று குறிப்பிட்டுருப்பது மிகவும் உதவியாக இருந்தது. நம் வாசிப்பை எளிதாக திட்டமிட உதவியது.

நிறமாலைமானி

பெரு விஷ்ணுகுமாரின் கவிதைகளை முன்பு வாசித்திருக்கிறேன். அதனால் அவருடைய கதையை முதலாக வாசித்தேன். சிறுகதையிலும் கவித்துவம் மிகுந்திருந்தது. இயற்பியல் சோதனை ஆய்வகத்தில் பனி புரியும் ஒருவன் தன் வாழ்க்கையின் சோதனை ஒன்றை தான் அறிந்த இயற்பியலின் மூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கும் ஒரு கதை. நிறமாலைமானியை பற்றி நான் இதற்கு முன்பு பெரிதாக அறிந்துகொண்டதில்லை. இந்த கதையை படித்த பின்னரே அதைபற்றி தேடி கொஞ்சம் தெரிந்துக்கொன்டேன்.

நிறமாலைமானியை(Spectrometre) பற்றி படிக்க தொடங்கினால் ஒளியை பற்றியும், ஒளியின் ஊடுருவல் பற்றியும், நிறங்களை பற்றியும் படிக்க வேண்டியிருக்கிறது. அது படிக்க படிக்க தெடர்ந்துகொண்டே போகிறது. ஒன்றை அறிய பலவற்றை அறிய வேண்டிய அறிவியலின் கட்டாயம் என்னை போன்ற சோம்பேறிகளுக்கு பெரிய சவால். ஒரு பொருளின் உட்கூறுகளை கண்டறிய நிறமாலைமானி பயன்படுகிறது என்பது தெரிகிறது. ஒரு பொருளின் மீது ஒளியை பாய்ச்சி, அந்த பொருளில் ஒளி ஊடுருவி, வெளியே சிதறும் ஒளி சிதறல்களிலிருந்து அந்த பொருளின் தன்மையை அதன் உட்கூறுகளை அதன் வடிவமைப்பை கண்டறிய நிறமாலைமானி உதவுகிறது. இன்றைய MRI ஸ்கேன் தொழில்நுட்பமும் அதன் நீட்சியே என்று நினைக்கிறன்.

நிறமாலைமானியின் இந்த ஒளி ஊடுருவல் அது ஊடுருவும் பொருளில் எந்த பாதிப்பையும் விளைவிப்பதில்லை. இன்னும் சில தகவல்களில் நிறமாலைமானியை கொண்டு molecular restructuring  சாத்தியம் என்பது போலவும் படித்தேன். இவையெல்லாம் தெரியாதற்கு முன்புக்கூட இந்த கதை மனித உணர்வுகளின் ஊடே அதன் தாக்கத்தை மனதில் நிகழ்த்தியது. படிக்கும் போது அதை பின்தொடர்வதும் புரிந்துகொள்வதும் கடினமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒருவனின் கையறு நிலை வழியே அது மனதில் பதிந்தது.

பரிதி அந்த ஆய்வகத்தில் என்னவாக பணி புரிகிறான் என்பதை ஆசிரியர் கூறவில்லை. நான் கதையை வாசித்த போது அவன் ஏனோ அந்த ஆய்வகத்தின் காவலனாகவோ அல்லது உதவியாளனாகவோ மனதில் பதிந்தான். பாத்திரத்தின் தமிழ் பெயர் அப்படி நினைக்க தூண்டியிருக்கிறதோ என்று பின்புதான் யோசித்தேன். கடவுளின் முன்பு மன்றாடி ஒரு வரத்தை பெறுவது போல தானறிந்த நிறமாலைமானியின் மூலம் தன் மனைவியின் குறையை தீர்க்க நினைக்கிறான். கடவுளிடம் கூட சில வரங்கள் எளிதில் கிடைத்துவிடும். ஆனால் அறிவியல் கறாரானது. எந்த ஒரு முடிவான வெற்றியும் பலப்பல தோல்விகளிலிருந்தும் கற்றறிதல்களிலிருந்துமே சாத்தியம். இதில் பரிதயின் உணர்ச்ச்சி பெருக்கின் வழியே எழுந்த முயற்சி அறிவியலின் கறார் தன்மையின் முன்னே தோற்கிறது. அணுக்களை மறுகட்டமைப்பு செய்வதை போல கால்களின் ஏற்றத்தாழ்வையும் சரி செய்துவிட நினைக்கும் அவனின் அறிவின் திறனே அறிவியலின் மூலக்கூறு. எல்லா கண்டுபிடிப்புக்களும் ஒரு வாழ்க்கை தேவையின் வழியேவே நிகழ்ந்திருக்கிறது. பரிதியின் வாழ்க்கை தேவை வழியே இந்த புனைவை ஆசிரியர் புனைந்திருப்பது  இயல்பாக வெளிப்படுகிறது.

இந்த கதை மீள் வாசிப்புகளை கோரும் கதை. ஓரளவுக்கு புரிந்தாலும் தவறாக புரிந்துகொண்டுவிட்டோமோ என்னும் அச்சம் அறிவியல் கோட்பாடுகளை போலவே அறிவியல் புனைவுகளுக்கும் பொருந்துமென்றே நினைக்கிறேன். மற்ற கதைகள் மனித மனதையும் எந்திரங்களுக்கு உள்ளுணர்வை கடத்துவதை பற்றியும் பேசுவது நேரடியாக புரிகிறது. இந்த கதை ஒரு அறிவியல் கருவியின் வழியே மனித இருப்பின் வலி, ஆன்மிகம், அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பேசியிருக்கிறது. உன்மையில் எனக்கு தெரிந்து இந்த கதைத்தான் மிகவும் சவாலான கதைக்களத்தையும் அறிவியல் அறிவையும் கொண்டிருக்கிறது. பெரு விஷ்ணுகுமார் அதில்  வென்றிருக்கிறார்.

கதையின் மொழிநடை பல இடங்களில் கவித்துவத்தோடு ஒளிர்கிறது. தவறி விழுந்த ரசாயன கோப்பையின் சத்தத்தை பற்றிய  இடத்தில ஒரு கவிஞனின் மொழி வெளிப்படுகிறது. அது கவிதையை போலவே மனதில் அரைந்து பேசுகிறது.

“நீர்மம் நிச்சயம் ஓசையிட்டிருக்காது. அத்தகைய இழிவான நாக்கு அதற்கில்லை. எதற்கெடுத்தாலும் கூச்சலிடுவது, அகக்குரலுக்கு ஒலியூட்டுவதென்று சித்த வெளியில் உலவும் மனிதர்களின் அதிகப்பிரசங்கித்தனம். அவர்களைப் போன்றவர்கள்தான் இதுபோன்ற நனவெளியில் பருப்பொருட்களின் ஓசைகளை அதிலும் நீர்மத்தின் ஓசையைக் கேட்க அதை ஒரு குப்பிக்குள்ளிட்டு நிரப்பி வைப்பர். “

அதை போலவே தொலைவை பற்றி கூறும்போதும்

“தொலைவு பெரும்பாலும் ஒரு பூதாகரமானவொன்றாக நம்ப வைத்தே நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். தொலைவு என்பது ஏதுமற்ற வெளி. இன்னுமும் கூறினால் ஏதுமில்லாதிருப்பதே தொலைவுக்கான அடையாளமாகும்.”

அதே போல காத்தாடியின் மையத்தையும் மனித ஆண்மாவையும் ஒப்பீட்டு பேசும் வரிகள் ஆன்மீகத்தை பேசுகின்றன. முடிவில் கயிற்றின் இறுக்களில் வெளிப்படும் வெளிச்சமும் ஆண்மாவின் வெளிச்சம் என்றே கூறுகிறார். மையம் உடையும் போது அதன் செய்லகளும் முடிகிறது என்றே நினைக்கிறன். இந்த கதையை இன்னும் புரியும் படி கூற முயன்றிருந்தால் அது புனைவை விட்டு வெளியேறி விளக்க உரையாக விலகியிருக்க கூடும். ஆசிரியர் அதில் ஜெயித்திருக்கிறார்.

கோதார்டின் குறிப்பேடு

கமலக்கண்ணனின் இந்த கதை எளிமையான நடையில் தேவையான காட்சி சித்திகரிப்புக்களுடன் கூற விளைந்த கருவை அழகாக கதையாக்கிருக்கிறது. மனித மனத்தின் விசித்திரமான கூறுகளை அலசும் கதையாக இருக்கிறது. அகத்துக்கும் புறத்துக்குமான இடைவெளியில் சிக்கி தவிக்கும் மனம் நடத்தும் நாடகங்களையும் பேசியிருக்கிறது. கதையின் தொடக்கத்திலேயே மனோலயத்தையும்  மனோநாசத்தையம்  பற்றி ஆசிரியர் பேசிவிடுகிறார். மனோலயம் செயலாற்ற தேவையானதாக இருக்கிறது ஆனால் மனோநாசமே அக விடுதலைக்கான வழியாக இருக்கிறது. இவையிரண்டுக்கும் இடையே மனிதன் சிக்கி தவிக்கும் தவிப்புகளே மன சிக்கல்கள் என நினைக்கிறேன்.

ராம்சேவின் கசப்பான தனிமையான இளமை வாழ்க்கை அவனை மன அழுத்தத்தில் தள்ளுகிறது. அவனின் வேக பயணங்களின் மூலம் அவன் தனக்குத்தானே நிரூபித்து அந்த அழுத்தத்திலுருந்து வெளியே வர முயற்சிக்கிறான். கணக்கு பாடம் வராததால் தாழ்மையுணர்வு கொண்டு மனம் நோகும் ராமசேவின் மனமோ வேகத்தையும் அதனை கடக்கும் சூட்சமத்தையும் அறிந்ததாகவே இருக்கிறது. அவன் அகத்தில் இருக்கும் கணித திறன் புறத்தில் வெளிப்படாமல் சிக்கிகொள்கிறது தலையிலிருக்கும் சொல் கைக்கு இறங்காதது போல. அதனை மனதியல் ஆய்வாளர் அவனுக்கே சுட்டிக்காட்டும் போது அவனுக்கு ஒரு திறப்பாக அமைகிறது. அவன் உயிரோடிருந்தாலும் அதை நம்ப மறுப்பதும் அப்படி யார் சொன்னாலும் அவமானம் கொள்வதும் மன சிதைவின் அறிகுறிகள். அதிலிருந்து அவனை மீட்க கேத்ரினின் கதையை அவனுக்கு உரைப்பதன் மூலம் அவனை மீட்க முயல்கிறார் ஆய்வாளர். மனசிதைவுகளையும் அதிலிருந்து வெளிவர உதவும் உளவியல் வழிமுறைகளையும் கதை ஆராய்கிறது.

ஃபிராய்டு ஆழ்மனம் அல்லது நனவிலி மனத்தை  (அன்கான்ஷியஸ்) ‘இத் ‘ என்கிறார். இங்குதான் அடக்கி வைக்கப்ட்ட  ஆசைகள் யாவும் திமுறிக் கொண்டிருக்கின்றன. சமநிலைப்படுத்தப்பட்ட சராசரி மனத்தை ‘ஈகோ ‘ என்கிறார். அடுத்தாக உயர் மனக்கூறு (சூப்பர் ஈகோ) பற்றி கூறுகிறார். இந்த சூப்பர் ஈகோதான் நனவிலியில் பொங்கி வளியும் ஆசைகளை கட்டுப்படுத்தி சராசரி மனம் இயல்பாக இருக்க உதவுகிறது. இந்த சூப்பர்  ஈகோ சிலசமயங்களில் நனவிலியை கட்டுப்படுத்த  முடியாத நிலைகளில் அது உளவியல் சிக்கலைகளை உண்டுபண்ணுகின்றன. அத்தகைய உளவியல் சிக்கல்களையே இந்த கதை பேசுகிறது என நினைக்கிறன். யெய்மீ  என்ற பெண் நாவலாசிரியை பிரான்சில் புகழ்பெற்ற ஒரு நடிகையை கொல்ல முயற்சி செய்கிறாள். ஆனால் அந்த ஆசிரியைக்கும் நடிகைக்கும் எந்த தொடர்பும் நிஜ வாழ்வில் இல்லை. இதை ஆராய்ந்த லக்கான் யெய்மீ தனது எழுத்தின் மூலம் அடைய நினைத்த பேரும் புகழும் வாய்க்காத போது அது ஒரு நடிகைக்கு எளிதாக வாய்த்திருப்பது கண்டு அவளை கொல்ல முயற்சிக்கிறாள். இதன் காரணம் யெய்மயின் லட்சிய படிமமே  (ஐடியல் இமேஜ் ) அவளது வெறுப்பிற்கு உரிய படிமமாகவும் மாறியது. அதனால் அவள் சுயமறுப்பு மனப்பிறழ்விற்கு (self punishment ) தள்ளப்படுகிறாள் என்கிறார். இந்த கதையில் ராம்சே தான் உயிரோடு இருப்பதை நம்ப மறுப்பதும் கேத்ரின் தன்  கணவனை கணவன் என நம்ப மறுப்பதும் இத்தகைய மனப்பிறழ்வின் காரணம் என்றே நினைக்கிறன். மனநல மருத்துவர் என்பாதாலேயே ஒருவர் தௌ¤வான மனதோடுதான் இருப்பார் என்ற கற்பனையையும் இந்த கதை உடைத்து பேசுகிறது என்றே நினைக்கிறேன். ப்ரேசில் எழுத்தாளர் மச்சோ டீ க்ரூஸ் எழுதிய ‘மனநலமருத்துவர் ‘ என்ற நாவலை வாசித்திருக்கிறேன். அதில் மனப்பிறழ்வு இல்லாத மனிதர்களே உண்மையில் மன நோயாளிகள் என்று படித்ததாக ஞாபகம்.

மூக்குத் துறவு

கே.பாலமுருகனின் இந்த கதை அரூவிற்கு ஜெயமோகன் அளித்திருந்த பேட்டியில் குறிப்பிட்டுருந்த சில அறிவியல் புனைவுக்கான கருக்கலாக கூறியிருந்த ஒன்றை எடுத்து கையாண்டிருக்கிறது. உலகில் நாளை ஆக்சிஜென் இல்லையென்றால் என்னவாகும் என்ற கருவை நான் வாசித்த போது அதை புனைவாக்கும் சாத்தியங்கள் குறைவு என்றே நினைத்தேன். அதனை பாலமுருகன் அழகிய புனைவாக உருக்கொள்ள செய்திருக்கிறார்.

ஆக்சிஜென் தட்டுப்பாடான உலகம் எப்படியிருக்கும் மக்களின் வாழ்க்கை முறை எப்படி மாறியிருக்கும் அந்த உலகிலும் வாழ மக்கள் எப்படி தங்களை தயார் செய்துகொள்கிறார்கள் என்னும் கற்பனை எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அப்படியே காட்சியாக்கி இருக்கிறது. கதையில் ஒரு இடத்தில மூக்கு துறவு செய்து கொண்ட நாயகன் இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறான் “இதுக்குலாம் என்ன காரணம்? நம்ம ஏன் இதை அனுபவிக்கறோம்?” இந்த கேள்வி நம் வருங்கால தலைமுறை நம்மை நோக்கி எழுப்பும் கேள்வி. இயற்கையை பேணி காக்க தவறிவிட்ட அவர்களின்மூதாதையரான நம்மை நோக்கி எழுப்பும் கேள்வி. மரங்களின் தேவையை நீராதாரங்களை காக்க தவறும் இன்றைய அரசாங்கத்தை நோக்கி எழுப்பும் கேள்வி.

சமீபத்தில் பார்த்த குறும்படம் ஒன்று வருங்காலத்தில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்க பட்டிருக்கும். ஒரு பெண் நிச்சயம் இரு ஆண்களுடன் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கமே ஆணை பிறப்பித்திருக்கும். தன் கணவனோடு சேர்ந்து இன்னொருவனை மாப்பிள்ளை பார்க்க செல்வது, அவனுடனும் திருமணம் முடிந்த பின்னர் முதலிரவில் அவள் மனம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒத்துழைக்க மறுக்கும் போது புதிய கணவன் பழைய கணவனின் உதவியை நாடுவான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு போலீ¦ஸ் பாதுகாப்பு தேவையாகியிருக்கும். அதன் சாத்தியங்கள் சந்தேகத்திற்குரியது என்றாலும் நம் வாழ்க்கைமுறை அதனை ஒட்டி எப்படி மாறியிருக்கும் என்று பேசியிருக்கும் அப்படம். அதை போலவே இக்கதையும்

அந்த வாழ்க்கை முறை மாற்றத்தை கண் முன்னே கொண்டு வந்து திகிலுற செய்கிறது. படிக்கும் போது ஒரு மெல்லிய நகையுணர்வு தோன்றினாலும் அப்படிப்பட்ட வாழ்வில் நம்மை நினைக்கும் போது மனம் அஞ்சுகிறது. மூக்கு துறவு என்ற சொல் அழகிய கோர்ப்பு. இன்று நாம் நினைக்கும் துறவு எதிர்காலத்தில் வேறொரு பரிமாணத்தில் நிகழ்கிறது. சன்யாசம் ஏற்பதை போல அதுவும் ஒரு சடங்காக கையாளப்படுகிறது. மனதிற்கும் மூச்சிற்கும் நேரடி தொடர்பு இருப்பதை இந்திய மெய்ஞானம் கண்டுகொண்டிருக்கிறது. மூச்சின் அளவு குறையும் போது மனதின் எண்ணங்களும் குறையும். அது தலைகீழாகவும் நிகழும். மூச்சை கவனிக்க கவனிக்க மனம் கொள்ளும் அமைதி மனதை இல்லாமலாக்கி அதன் மூலமான வெளியோடு கலக்கவல்லது. புற வழியே மூச்சை விடாமல் உடலுக்குள்ளேயே மூச்சை அடக்கி சமாதியுறும் கலை நம்மிடமுள்ளது. இந்த கதையில் வரும் மூச்சு கட்டுப்பாடுகள் மெய்ஞானத்தோடு தொடார்புற்று வாழ முடிந்தால் அதை துறவாக்கி ஞான பாதையில் செல்லலாம். ஆனால் எளிய மனதிற்கு அது மிக பெரும் வலி. கடைசியில் பைபிளின் வசனத்தை பேசி தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் ஒருவனை போலதான் எல்லோரும் சாகவேண்டியிருக்கும்.

ம்

கிரிதரன் கவிராஜாவின் இந்த கதை விஞ்ஞானத்தை கொண்டு மெய்ஞானத்தையும் மெய்ஞானத்தை கொண்டு விஞ்ஞானத்தையும் அறியும் அனுபவத்தை தருகிறது. கதையின் மொழிநடை எல்லையற்ற பெருவெளியின் முன் வியப்பில் ஒளிரும் ஒருவனின் சொற்களாக வெளிவந்திருக்கிறது. உடல் மனம் எல்லாவற்றையும் கடந்துவிட்ட பின்பும் நாம் ஏதோ ஒன்றாக எஞ்சுவதையும்  அந்த இருப்பை நாமே உணர்வதையும் ஒரு ஆன்மீக திணறலாக கதை வெளிப்படுத்தியிருக்கிறது.

துரியாதீத தவம் என்றொரு தவத்தை சொல்வர். அதில் மனிதன் புருவமத்தியில் மனதை நிறுத்தி, பின்பு துரியத்திற்கு சென்று, அப்படியே தலைக்கு மேலே எழும்பி, பிறகு சந்திரனை அடைந்து, அடுத்து சூரியனை அடைந்து, பின்பு சக்தி களத்தை  அடைந்து, கடைசியாக சிவக்களம் என்னும் வெட்டவெளியில் கலந்து தியானம் செய்யும் போது வெட்டவெளியில் கலந்து மனம் அமைதி பெற்று ஓர்மை நிலையை அடையும். இது மெய்ஞானத்தின் வழி. அது கடினமானதும் கூட. ஆனால் விஞ்ஞானத்தில் விண்களத்தில் சென்று வெளியின் இறுக்கம் தாளாமல் விண்களமே சிதறி ஒரு கருந்துளைக்குள் பிரயாணம் செய்யும் மனிதனை கற்பனை செய்யும்போது திகிலாக இருக்கிறது. ஆனால் மெய்ஞானமென அதை தானே தேடி தீர்க்கிறோம். கதை அம்சம் இந்த கதையில் குறைவாக இருந்தாலும் பெரும்பாலான கதைகள் அலுக்காமல் பேசிக்கொண்டிருக்கும் கதை இதுதானே. அழகிய மொழிநடையும், கவித்துவமும், விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணையும் புள்ளியும் இக்கதையின் சிறப்பென கருதுகிறேன்.

தியானி ௲ கிபி 2500

அஜீக்கின் இந்த கதை மிகவும் எளிமையான நடையில் ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு இந்த கதை மிகவும் பிடித்தமான கதையாகவும் இருந்தது. காலத்தின் மாற்றத்தில் மனிதன் பரிணாம வளர்ச்சியை அடைவதை போலவே மனிதன் ஞானம் அடைவதற்கான எல்லைகளும் பரிணாம வளர்ச்சியடைகின்றன.

காகிதத்தில் எழுதும் பழக்கம் இந்த தலைமுறையோடே முடிந்துவிட போவதாக நான் நினைக்கிறன். கணினியில் எழுதினாலும் மனிதன் எழுத்துக்களோடு இன்னும் பயணித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் எதிர்காலத்தில் மனிதனுக்கு கட்டாயம் எழுதும் பழக்கத்தின் தேவை இருக்காது. மனிதனின் அன்றாட வாழ்விற்கு மனிதன் சொல்ல சொல்ல கணினியே தட்டச்சு செய்துகொள்வது பெரிய வரமாக இருந்தாலும் கலை இலக்கிய பங்களிப்புகளுக்கு அது பெரிய ஆபத்து. கதைகளும் கவிதைகளும் வெறும் வாய்மொழி வழியே எழுதிவிட முடியுமா என்பது பெரும் கேள்விக்குறியே.

மனிதனின் சிந்தனை ஓட்டம் விரல்களின் வழியில் வளியும் போது நிகழும் ஒரு ரசவாதம் வாய்மொழி வழியே சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன். எழுதும் பழக்கமே மனிதனின் ஆழ்மனதிலிருருக்கும் படிமங்களை வெளியே கொண்டுவருகிறது. வாய் மொழி வழியே அது நிகழுமா என தெரியவில்லை. பல எழுத்தாளர்கள் சொல்ல சொல்ல இன்னொருவர் எழுதும் முறையை கேள்விப்பட்டிருந்தாலும் தானே எழுதும்போதே உண்மையான வெளிப்பாடு நிகழுமென தோன்றுகிறது.

தியானி அவ்வகையில் எடுத்துக்கொண்டிருக்கும் கருவும் அதனை பதிவு செய்திருக்கும் விதமம் நன்றாகவே உள்ளது. எழுதுவது என்பது ஒரு இரகசிய அமைப்பாகவும் தண்டனைக்கு உரியதாகவும் பிற்காலத்தில் மாறப்போகும் நிலை விந்தையாக உள்ளது. எஸ்.ரா ஒரு உரையில் ஒரு திரைப்படத்தை குறிப்பிட்டார். அதில் ஒரு ஊரில் மனிதர்கள் சிந்திக்க கூடாது என்பதற்காக எல்லா புத்தகங்களையும் அரசாங்கமே எரித்துவிடும். அனைவரும் தொலைக்காட்சி மட்டுமே பார்க்க முடியும் அதுவும் அரசாங்கத்தின் பிடியில்தான் இருக்கும். புத்தகம் வைத்திருப்பது கஞ்சா வைத்திருப்பது போன்ற குற்றமாக பார்க்கப்படும். அங்கே ஒருவனின் வீட்டில் இரகசியமாக இருந்த நூலகத்தை கண்டுபிடித்து ஒட்டுமொத்தமாக அரசாங்கம் எரித்துவிடும். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்பிவிடும். ஊருக்கு வெளியே இருக்கும் நதிக்கரைக்கு செல்லும் போது  அங்கே பல மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எல்லோருமே மனித நூல். ஒவ்வொருவரும் ஒரு நூலை படித்து வைத்திருப்பார்கள். அதை மற்றவர்களுக்கு வாய் வழியே உரைப்பார்கள். வாசிப்பு அப்படி அழியாமல் அங்கே காக்கப்படும். அதே போன்றதொரு அனுபவத்தை இந்த கதையும் ஏற்படுத்தியது. பரிணாம வளர்ச்சியில் பழமையை மீண்டும் கண்டடைவதுவே ஞானம் என்றும் தோன்றுகிறது.

மற்ற ஐந்து கதைகளை பற்றிய எனது எண்ணங்களை இன்னும் சிறிது நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

உமா ரமணன்

அரூ அறிபுனை விமர்சனம்-1 ,புதுப்படிமங்களின் வெளி
அரூ அறிபுனை விமர்சனம்-2 ,அன்னியக் கனவுகள்
அரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்
முந்தைய கட்டுரைபாரதியும் வரலாற்றுக்குரலும்
அடுத்த கட்டுரைஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை பற்றி… கிருஷ்ணன்