செல்வது மீளாது

பார்வதிபுரம் கணியாகுளம் பாறையடி ஓர் ஏக்கம்
கணியாகுளம்,பாறையடி…
கணியாகுளம்-ஆலம்பாறை:என் மாலைநடை வழி
காலைநடையில்…
பார்வதிபுரம் பாலம்
செவ்வல்லியின் நாள்
முதல் மழை
வரம்பெற்றாள்
குன்றுகள்,பாதைகள்
இடவப்பாதி
குருகு

இன்று காலை நடை வந்தபோது திடீரென்று ஓர் எண்ணம், நாம் பார்க்கும் காட்சிகள் எப்போதும் இங்கிருக்கும் என நினைத்துக்கொள்கிறோம். ஒவ்வொருநாளும் ஒரே காட்சியைக் காண்பதாக எண்ணி மயங்குகிறோம். நடக்க வந்து மரங்களை, கட்டிடங்களை, சாலைகளை பார்த்து இருக்கிறாயா என உளமுசாவிக்கொள்கிறோம். உண்மையில் இந்தக்காட்சி மிகமிக விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். நகரங்களின் புறநகர்கள், அண்மைச்சிற்றூர்களைப் போல விரைவாக உருமாறும் இடங்கள் வேறில்லை. எல்லா இந்திய நகரங்களும் வீங்கிப்பெருக்கின்றன.

ஏனென்றால் இங்கே கிராமங்கள் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளன. இன்று தமிழ்நாட்டின் முதன்மையான பிரச்சினையே கைவிடப்படும் சிற்றூர்கள்தான். எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் ஒன்றைக் காணமுடிகிறது, அங்கே கொஞ்சம் பணமுள்ளவர்கள் வாழ்வதில்லை. பல ஊர்களில் பழைமையான பெரிய வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. நிலக்கிழார்கள்கூட சிற்றூர்களில் வாழ்வதில்லை. நிலத்தை பிறரிடம் விட்டுவிட்டு நகர்களுக்குச் சென்றுவிடுகிறார்கள். நிலத்தை நம்பிவாழும் கூலித்தொழிலாளர்கள் மட்டுமே ஊர்களில் இருக்கிறார்கள். சிற்றூர்களில் அரசு ஊதியம் பெறுபவர்களே சற்றேனும் பணமுள்ளவர்கள். அவர்களில்கூட பெரும்பாலானவர்கள் நகர்களில் அல்லது சிறுநகர்களிலிருந்து அன்றாடம் வந்துசெல்பவர்கள்.

நகரங்களில்தான் பிள்ளைகளுக்குக் கல்விவசதி உள்ளது என்பதே பெரும்பாலானவர்கள் சொல்லும் காரணம்.அது உண்மை. ஆனால் அவ்வாறு கல்வி- தனிப்பயிற்சி வசதிகளேதும் கிராமத்தில் இல்லாமகிருப்பதற்குக் காரணமே இந்தக் கூட்டம் கூட்டமான இடப்பெயர்வுதான். கைவிடப்பட்ட கிராமங்கள் அனைத்தும் நகர்களைச் சுற்றிப் புறநகர்களாகின்றன. எந்தத் திட்டமிடலும் இல்லாமல், எந்த வசதியுமில்லாமல் பெருகிநீள்கின்றன. அதன்பின் வெவ்வேறு போராட்டங்கள். குடிநீருக்கு.மின்வசதிக்கு. சாலைக்கு. புறநகர்கள் என்பவை ஒருவகை கான்கிரீட் கிராமங்கள்.

2000- த்தில் நான் குடிவந்தபோது சாரதாநகர் மிக ஒதுக்குபுறமான புறநகர். உண்மையில் நாகர்கோயிலே அல்ல, கணியாகுளம் கிராமப்பஞ்சாயத்து அது. என் வீட்டில் நின்றால் கொல்லைப்பக்கம் வேளிமலை அடுக்கு தெரியும். இன்றைக்கு நெரிசலான நகர்ப்பகுதியாக ஆகிவிட்டது. வேளிமலை நோக்கி பாறையடிவரை நடைசெல்வோம்.

அன்றெல்லாம் வேளிமலை அடிவாரம் ‘ஆபத்தான’ பகுதி என்பது உளப்பதிவு. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அது உண்மையும்கூட. ஆளில்லாத மலைப்பகுதி கள்ளச்சாராய மையமாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்புகூட ஒவ்வொருநாளும் அந்தியில் போலீஸ் ரோந்துசெல்லும்.நானும் அருண்மொழியும் மட்டுமே சாரதா நகரிலிருந்து அப்பகுதிக்கு நடைசெல்பவர்கள். “அங்கேயா? எதுக்குப் போனீங்க?” என்று கேள்விப்படுபவர்கள் துணுக்குறுவார்கள்.

ஆனால் அங்கே பொறியியல்கல்லூரிகள் வந்தன. அவை பேருருக்கொண்டன. வீடுகள் முளைத்தன. அவை பெருகிச்செறிந்தன.சாலை வந்து விரிந்து போக்குவரத்து கூடியது. காலையில் எப்படியும் நூறுபேர் மலையடிவாரம் நோக்கி நடைசெல்கிறார்கள். இப்போது வெளியே இருந்து வருபவருக்கு இப்பகுதி அழகிய வயல்வெளிகளும் மலையும் நிறைந்த கண்நிறைக் காட்சி. ஆனால் எங்களுக்கு நாளுக்கு நாள் மறைந்துகொண்டே இருக்கும் கனவு.

இப்போது மிகப்பெரிய நான்குவழிச்சாலை ஒன்று பார்வதிபுரத்தையும் கணியாகுளத்தையும் இருபக்கமும் தள்ளியபடி உருவாகிக் கொண்டிருக்கிறது. அளவுகள் எடுத்தார்கள் எனத் தெரியும். இத்தனை விரைவாக இப்பெரிய வேலையைச் செய்வார்கள் என நினைக்கவே இல்லை. லாரிகள் மண்ணைக்கொண்டுவந்து கொட்டிக்கொண்டே இருக்கின்றன. வட இந்தியத் தொழிலாளர்கள் எறும்புகள் போல வேலைசெய்கிறார்கள். வயல்களை நிரப்பி, ஏரிகளை தூர்த்து சாலை எழுகிறது. இன்னும் ஓராண்டில் இப்பகுதி முற்றிலும் பிறிதொன்றாக இருக்கும். இப்படியொரு காட்சி எங்கள் நினைவில்தான் எஞ்சியிருக்கும். நினைவை நம்பமுடியாது, அது உருமாறிக்கொண்டே இருக்கும். சென்றது சென்றதுதான்

இப்பகுதி நீர்ப்பறவைகள் நிறைந்தது. ஒவ்வொருநாளும் காலையில் நான் கூட்டம்கூட்டமாக நாரைகளை, கூழைக்கடாக்களை, நீர்க்கோழிகளை, கொக்குகளைப் பார்ப்பேன். பொதுவாக மனித – வண்டி நடமாட்டம் குறைவு என்பதனாலும் ஆண்டு முழுக்க மண்ணில் ஈரம் இருப்பதனாலும் அவை இங்கிருந்து அகல்வதே இல்லை. இங்கே  சோழர்காலத்து பெரிய ஏரிகள் மூன்ற்ய் உள்ளன மூன்றுமே ஐம்பதாண்டுகளாகக் கைவிடப்பட்டு தூர்வாரப்படாமல் சுற்றுக்கரை உடைந்து சதுப்புகளாக மாறிவிட்டன.ஆனால் சேற்றுப்புதர் மண்டிய அந்நிலம் பறவைக்கூட்டங்களுக்கு மிக உகந்தது.

அந்த ஏரிகளில் இரண்டு ஏரிகளுக்குள் புகுந்து செல்கிறது இந்த மாபெரும் சாலை. ஏற்கனவே ஓர் ஏரியைச்சுற்றி ஏராளமான வீடுகள் வந்துவிட்டன. ஆகவே அவர்கள் அதில் நீர் தேங்கவிடுவதில்லை. அந்த ஏரியும் கரையோரமாக சாலைவிரிவாக்கம் நிகழ்ந்து குறுகிக்கொண்டிருக்கிறது. பத்தாண்டுகளில் இங்கே ஏரிகள் இருந்தன, நீர்ப்பறவைக்குலம் பெருகியிருந்தது என்று சொன்னால் புனைவுபோலத்தெரியும்

இதைப்பற்றி புலம்பிப் பயனில்லை. ஒவ்வொருவருக்கும் இந்த நுகர்வுப்பண்பாட்டின் எல்லாமே தேவையாகிறது. நிலம் மட்டும் எழில்கொஞ்ச இருந்தாகவேண்டும் என்று எப்படிச் சொல்லமுடியும்? இருக்குமிடம் தேடிப்போகவேண்டியதுதான்.

ஆனால் இந்த மண்ணில் தெரியும் மண்ணள்ளி இயந்திரங்களின் பெரிய டயர்தடங்கள் வருத்தமளிக்கின்றன. மென்தோலின்மேல்  சாட்டைத்தடம்போல.

முந்தைய கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-5 ,எல்லைகளும் வாய்ப்புகளும்-2
அடுத்த கட்டுரைஎம்.கோபாலகிருஷ்ணன் படைப்புகள்- கருத்தரங்கு