காலையில் துயில்பவன் – கடிதம்

 

 

 

அன்புள்ள ஜெ,

 

கடிதம் எழுதி அனுப்பிய பிறகு உங்களுக்கு இதை வாசிக்க நேரம் இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பதில் வந்ததும் எனக்கு தோன்றியது,உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள். மிகவும் முக்கியமானவை. கடிதத்தில் நீங்கள் எழுதிய வரிகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்த அளவுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறீர்கள் என்று என்னால் சொல்லமுடியவில்லை.

 

டின்னிடஸ் பதிவில் நண்பர் “Euthanasia” பற்றி எழுதியிருந்தார். நான் வலியோடு இருந்த காலங்களில் Euthanasia ஒரு உரிமையாக இங்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தையே கொண்டிருந்தேன். அதை பற்றி அதிகமாக சிந்தித்தும் நினைவில் இருக்கிறது. வலி நீங்கி உடல் மீண்ட பிறகு நான் அதை மறந்தே விட்டேன்.

 

இவ்வகை சிக்கல்கள் கொண்டவர்கள் ஒரு கட்டத்தில் சமுகத்திலிருந்து முழுவதுமாக அறுபட்ட தனிமையை உணர்கிறார்கள். இத்தனிமையை அவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் நுண்ணுணர்வு வளர்கிறது என்று படுகிறது. நான் தனிமையை உணர்ந்த காலங்களில் எனக்குள் கலையும் இசையும் நுழைவதற்கு உளக்கதவை தாரளமாக திறந்து வைத்திருந்தேன் போல. என் பெரியப்பா அக்கதவை அடைத்துக்கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் யூகமே முழு காரணம் தெரியவில்லை.

 

பொதுவாக நாளிதழ்களில் வரும் உளவியல் கட்டுரைகள் “இரவில் ஒன்பது மணிக்கு படுங்கள். காலை நான்கு மணிக்கு எழுங்கள்.” என்ற வகையை சார்ந்ததாக இருப்பதால், தூக்கமின்மையால் அவதிப்படும் பலருக்கு இந்த வேறுபட்ட தூக்கம் இருப்பதே தெரியாமல் போய்விடுகிறது. இதற்கு இங்குள்ள உளவியலாளர்களும் பொதுச்சமூகமும் உருவாக்கி வைத்திருக்கும் தவறான கருத்துநிலைகள் தான் முதன்மையான காரணம் என்று நினைக்கிறன். இரவு தூங்கினால் மட்டுமே முக்தி. அதுவும் ஒன்பது மணிக்கு படுத்து காலை நான்கு மணிக்கு எழுந்தால் முக்தி பல மடங்காக கிடைக்கும் என்றெல்லாம் வகுத்து  வைத்திருக்கிறார்கள். அதில் உண்மை சிறிதளவு கூட இல்லை என்பதை முப்பது வருடங்களக்கு முன் நடந்த circadian rhythm பற்றிய ஆராய்ச்சிகளிலேயே கண்டறிந்துவிட்டார்கள்.

 

DSPD என்பது “Spectrum” ஆக பார்க்கப்படுகிறது. அதாவுது சிலர் “2am to 10am” தூங்குவது முற்றிலும் இயல்பானதே. அவர்கள் உடலின் ciracadian கடிகாரம் அவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் சிலர் “3am to 11am” தூங்குவதும் இயல்பே. “4am to 12am”, “5am to 1am” ……”9am to 5pm” அனைத்தும் DSPD என்றே வகுக்கப்படுகிறது. அனைத்தும் இயல்பான நிலைகளே. நம் நாட்டு உளவியலாளர்களும் துயில்நிபுணர்களும் இவற்றை கற்றுக்கொள்ள இன்னும் நூறு ஆண்டுகளக்கு மேல் ஆனாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

 

குகையில் வாழ்ந்த மனிதர்களில் ஒரு சாரர் இரவில் விழித்து மற்றவர்களை பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பார்களோ. அந்த மரபணுவின் தொடர்ச்சி தான் இந்த மனிதர்களோ என்ற எண்ணம் எனக்கு எழுவதுண்டு. நான் அன்று எழுதிய கடிதத்தில் என் தனிமையின் காரணமாக இதை “நோய்” என்று அதிகம் குறிப்பிட்டுவிட்டேன் . “DSPD,Non 24” இணைய குழுமத்தில் சிலர் உலகியல் விஷயங்களை விட்டு மேலெழுந்து கலைகளிலும் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டுவதை பார்க்க முடிந்தது. சொல்லப்போனால் அவர்கள் இதை வரமாகவே பார்க்கிறார்கள். எனக்கும் அப்படியே தோன்றுகிறது.

 

DSPD பற்றிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்

“By the time DSPD sufferers receive an accurate diagnosis, they often have been misdiagnosed or labelled as lazy and incompetent workers or students for years. Misdiagnosis of circadian rhythm sleep disorders as psychiatric conditions causes considerable distress to patients and their families, and leads to some patients being inappropriately prescribed psychoactive drugs. For many patients, diagnosis of DSPD is itself a life-changing breakthrough.”

தூக்கமின்மையால் அவதிப்படும் சில வாசகர்களுக்கு இப்படி ஒன்று இருப்பது தெரிந்தால் பெரும் விடுதலையை அடைவார்கள் என்றே தோன்றுகிறது. [உங்கள் தளத்தில் வெளியிட்டால் மிக்க உதவியாக இருக்கும்.]

 

நண்பர் மாதவன் இளங்கோ கடிதத்தில் “எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். எனக்கும் அதையே சொல்லத் தோன்றுகிறது. என்னை தொடர்புகொள்ளுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.

 

அப்பாவிடம் சிகிச்சை நிலையம் தொடுங்குவது குறித்து பேசினேன். இதுநாள் வரை இல்லாத நம்பிக்கையை என் கண்களில் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். மிகுந்த உற்சாகத்துடன் இருவரும் பேசினோம்.
உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் நன்றி.

அன்புடன்,

காலையில் துயில்பவன்.

[email protected]