அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம். விக்ரம், கோவை
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
எழுத முற்படுபவர்களுக்கும் வாசகர்களுக்கும் நல்ல சாத்தியங்களை எப்போதும் ஏற்படுத்தி தரும் தங்களுக்கு நன்றி. எது அறிவியல் புனைவு எது அதுவல்ல என்று விளக்கி இருக்கிறீர்கள்.
கலை மனித உறவுகள், இயற்கை, அரசியல், வரலாறு, மதம், அறிவியல் என்று எதையும் தன் கையில் எடுத்துப் பார்க்கும்போது அது தனக்கே உரித்தான நோக்கையும், உள்வாங்கு-வெளிப்பாட்டு முறைகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலிந்தும் அகவயமான அது தனக்கான கேள்விகளை உருவாக்கிக் கொண்டு தேடல் கொள்கிறது, தேடலின் விளைவாக ஏதேனும் விடைகள் எட்டப்படும் ஆயின் அவ்விடைகள் அதனுடையதே அல்லாமல் சம்மந்தப்பட்ட துறைகளுடையவை அல்ல. புறவயமான பிறதுறைகளின் கேள்விகளையும் அது எடுத்துக்கொள்வது இல்லை.
இங்கு அறிவியலைக் கையில் எடுத்து புனைவுக்கலை தன் கேள்விகளை உருவாக்கிக் கொண்டு தேடலை நிகழ்த்த, விடை காண முற்படுகிறது. விடைகளை எட்டி ஆகவேண்டும் என்ற கட்டாயம் கலைக்கு ஒருபோதும் இல்லை, எட்டப்பட்டும் விடைகள் என்பவை அதன் நோக்கில் தூலப்பொருட்கள் ஆகிவிடுன்றன. தூலப் பொருட்களை அவி இட்டு அப்பாலான ஒன்றை சென்றடைய முற்படுகிறது. நீர் போன்று தளும்பும் கலையின் வரையறைகள் அறிவியலின் வரையறைகள் போன்று உறுதியானவை அல்ல.
அறிவியலுடனான சந்திப்பில் மனிதரின் புனைவுக்கலை எழுப்பும் உச்சபட்சக் கேள்வி இருப்பு சார்ந்ததாகவே இருக்க முடியும். மனித இருப்பு குறித்து கலையிடம் வரையறை இல்லை அது மனவுணர்வுகள், கற்பனை, கனவுகள், மௌனம், உள்ளணர்வு என்று உள்ளும் புறமுமாக எல்லையில்லாமல் விரிய விரும்புகிறது, புற இயற்கையின் மீது தன் கற்பிதங்களை வைத்து அதனுடன் தொடர்பு கொள்கிறது. அறிவியல் திரவமானது அல்ல அது அறிந்துவிட்டவரை திட்டவட்டமானது எல்லைக்கு உட்பட்டது, இன்னும் தான் அறிந்திராதவை பற்றி அகவயமான தவிப்பு அதற்கு இல்லை.
இந்த பத்து அறிபுனை கதைகளையும் என் புரிதலுக்கும் ரசனைக்கும் ஏற்ப ஆறாக வரிசை செய்கிறேன்.
1. ம் – கடவுளும் கேண்டியும். விண்கலத்தில் பிரிந்து கருந்துளையில் மறைந்து, அழிந்து பிரபஞ்ச படைப்பின் கணத்தில் படைப்பவன் ஆகி படைப்பாக எழும் மனிதன். தனி ஒருவன் ஒட்டுமொத்தமும் ஆகிறான். சிறு இருப்பு பேரிருப்பாகத் தன்னை உணர்கிறது. மனிதன் கடவுள் ஆகிறான். படைப்பு தொடங்குகிறது, பகுத்து உலகாகிறது, எல்லாவற்றுக்குமான வேர் அவன். அழித்தலும் ஆக்கலும் ஆன கருந்துளை தன் ‘ம்’ ஒலியால், அங்கே விழுந்துவிட்டவருக்கு ‘தத்வமஸி’ அருள்கிறது. மாறாக கடவுளும் கேண்டியும், மனித கூட்டு நனவிலியில் பயணம் மேற்கொண்டு படைப்பின் கணத்தில் ஆதிமனிதனாக தன்னை கண்டுகொள்கிறார் கடவுள். தனக்கே ‘தத்வமஸி’ நினைவூட்டிக் கொள்கிறார், நான் மட்டும் தானா நீயும் தான்.
2. அவன் – பல்கலனும் யாம் அறிவோம். அவன் – மரபு அணுவைக் கொண்டு புறத்திலிருந்து பெரும் புள்ளிவிவரங்கள் கொண்டு செய்யும் கணிப்புக்கு அப்பால் உள்ளுணர்வினால் ஓர் அறிதல், ஒன்றை புறத்தின் கண்காணிப்பிற்கு அப்பால் வைத்திருக்க முடியும். பல்கலனும் யாம் அறிவோம் – மனம் பிரதி செய்யப்படாத ஆல்பாக்கள் நனவிலியைப் பகுத்து ஆராயக்கூடியவை, மனித உறவுகள் சிதையும் விதமாக தனித்த பிரஞ்ஞையை அழித்துவிட முற்பட தன் தம்பியுடையதை தன்னுடையதுடன் இணைத்து பிரித்து அறியமுடியாதவாறு தன் தனித்த ஒன்றை காப்பாற்றிக் கொள்ள முடிகிறது. பெரியதும் ஆழமானதுமாக கருதப்படுகிற கூட்டு நனவிலிருந்து தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் தற்காத்துக் கொள்ள இயலும். முதல் இரண்டு கதைகள் ஒட்டுமொத்தம் என்றால் இவை இரண்டும் தனித்த இருப்பு சார்ந்தது எனக்கொள்கிறேன், என் இருப்பு என்பது எது அல்லது அதிகம் நான் இதுதான் என்று எதைக் கொள்வேன்? உள்ளுணர்வா? பிரஞ்ஞையா?
3. யாமத்தும் யானே உளன். இப்படி புரிந்து கொள்கிறேன். பெரும் போரினால் புவியியல் பேரழிவை உண்டாக்கி விடுகிறார்கள் மனிதர்கள், பூமியையே பிளந்து விடுகிறார்கள். போரின் காரணமாக அதில் கலந்து கொண்டவர்கள், ஊக்கியவர்கள் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது வாழ்வில் பிடிப்பு அற்று பேருக்கு உயிரோடு இருக்கிறார்கள். போர் வீரனான அவன் அண்ணன் தற்கொலை செய்து கொள்கிறான். அவர்கள் போரை நோக்கி ஏன் சென்றார்கள்? அவர்களிடம் மனதின் அலுப்பை வெல்ல, பெரும் போர்கள் கொள்ளாதிருக்க, வாழ்வில் பிடிப்பை நிலைநிறுத்த கதைகள் இல்லை. கெளதமன் வலியால் மனிதன் போல் ஆகிறான் அவள் அளிக்கும் கதைகளை புரிந்து கொள்கிறான், அவள் உணர்வை புரிந்து ஏற்கிறான். அவனது தந்தை வலி இன்மையால் அவள் அளிப்பவற்றை புரிந்து கொள்ளமுடியாமல் தன்னை அழித்துக் கொள்கிறார். மனிதர்கள் மனம் சலிப்படைந்தால் தானியங்கி ஆகிவிடுவார்கள், உடல் வைத்திருக்கும் வலி என்ற கோடு அவர்களை முற்றும் கட்டுப்படுத்தி விடக்கூடியது அல்ல. தானியங்கி வலியால் மனித உணர்வு பெருகிறது. கெளதமனின் தந்தையும் அப்பெண்ணின் அண்ணனும் ஒரே விதமான முடிவைச் சென்றடைகிறார்கள். இருவருக்கும் பொதுவாக சொல்லப்படும் ஒன்று வலி, ஒருவருக்கு அது என்னவென்று தெரியாது மற்றவருக்கு அது தெரியும் ஆனால் அதற்கு மதிப்பு அளிக்கும் மனநிலையில் இல்லை. அண்ணனின் தற்கொலையை புரிந்து கொள்ளமுடிகிறது. கெளதமனின் தந்தை எனப்படும் தானியங்கியின் தற்கொலையின் நியாயம் என்னவென்று எனக்கு விளங்கவில்லை. இருவரில் ஒருவர் கதையில் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன். பிளவுண்ட புவியின் வலியை தனது என்று உணர்ந்து தன் படைப்பான கெளதமனை உலகின் உயிரோட்டதிற்கென கொடையென அனுப்புகிறாள். வெண்முரசின் மொழிச்சாயலுடன் பயணித்து கனவின் காட்சி போல் சென்று நடுவே பிளந்து பொன் உருகி வழியும் முழுமையை இழந்து தோன்றும் பூமியைப் போலவே கதையும் தன் முழுமையில் சற்று குறைவு கொண்டது என்று தோன்றியது, எனினும் பிளவுண்ட புவியைப் போன்றே இதுவும் அழகானது.
4. கோதார்ட்டின் குறிப்பேடு – மின்னெச்சம். இவை இரண்டின் மையப் பாத்திரங்களும் மனதைக் கொண்டு தம் இருப்பை வகுத்துக் கொள்கின்றன. மனப்பிறழ்வினால் தான் உயிரோடு இல்லை என்று கருதுகிறான் ராம்சே. கணிப்பொறியை தன் உடலாக்கிக் கொண்டு மரணத்தை வெல்லவும், தேவையற்ற பதிவுகளை நீக்கிகொள்ளவும் முயல்கிறான் பார்த்தீ. நிலைத்ததும் துயர் அற்றதும் ஆன வாழ்வு இலக்காகிறது. இறுதியில் இரண்டுமே அவனுக்கு கிடைக்கிறது. துயர் தரும் நினைவுகள் நீக்கப்படுகின்றன. ஆனால் அது அபத்தம் அது வாழ்வே அல்ல என்று தோன்றச் செய்கிறது. கணிப்பொறியை தன் உடலாக்கிக் கொண்டு மேற்கொள்ளப்படும் உடலின் அழிவின்மை என்பதை நீக்கிப்பார்த்தால், மனப்பிறழ்வின் காரணமாக கொள்ளும் எண்ணங்களும் கத்தரித்து நீக்கப்படும் நினைவுகளும் ஒன்று போன்றவையே எனக் கொள்கிறேன். தான் நினைத்துக் கொள்வதே தான், அப்படித்தானா? என்ற கேள்வியை இரு கதைகளில் இருந்தும் எழுப்பிக் கொள்ளமுடியும்.
6. மூக்குத்துறவு – மூக்குத்துறவு எதிர்காலத்தில் நேர வாய்ப்புள்ளது என்று ஒரு அழிவை கற்பனை செய்து நின்றுகொள்கிறது. அந்த அழிவைத் எதிர்கொண்டு தவிர்க்க தீர்வுகளை முன் வைக்கத் தேவையில்லை, சாத்தியங்களை நோக்கி வாசிப்பவரை தேடித்தவிக்க விட்டிருக்கலாம். தம்மை சுருக்கி மனிதர்கள் முடித்துக்கொள்கிறார்கள் என்பது மதத்துடையது அறிவியலினுடையது அல்ல, அதனால் தானோ பைபிளின் வசனம் கூறப்படுகிறது. அறிவியல் தோற்று மதம் வெல்கிறது?
5 தியானி – நிறமணிமாலை. என் நோக்கில் இவை இரண்டும் அறிவியல் புனைவு அல்ல. தியானியில் கடந்தகாலத்தின் கைவிடப்பட்ட ஒன்று எடுத்துக்கொள்ளப்பட்டு அரிதென கொண்டு போற்றப்படுகிறது. காரில் செல்பவர்கள் புரவியில் ஊர்வதை தியானமாக கொள்ளலாம். பழையது என்பதால் அதற்கு புனித மதிப்பை அளிக்கலாம். நிறமணிமாலை, ஒரு மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக வேறு அறிவியல் சிகிச்சை முயலப்பட்டு தோல்வியில் முடிகிறது. பொருட்களும் கலைச்சொற்களும் அறிவியல் புனைவை உருவாக்குபவை அல்ல. இது எடுத்துக்கொண்டு துவங்கும் சிக்கலும் சென்று சேருமிடமும் அறிவியலை அகவயமாக புனைவுடன் பிணைக்கவில்லை என்று எண்ணுகிறேன். முடிவு ஒரு துப்பறியும் மர்மக்கதையை சென்று தொடுகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இவை என் புரிதலின் அடிப்படையில் எல்லைக்கு உட்பட்டு கொண்டவை. ரசனையின் அடிப்படையில் பிளவுண்டு பொன் உருகி வழியும் புவியின் ஓவியமே என் கண்முன் இருக்கிறது. பெரும் சாத்தியங்கள் கொண்ட இந்த பத்து பேருக்கும் என் வாழ்த்துக்கள். நீங்கள் விரிவடைந்து செல்லச் செல்ல நானும் உங்களிடம் கற்றுக் கொண்டே வாசகனாக விரிவடைகிறேன் என்பது என் மகிழ்ச்சி.
அன்புடன்
விக்ரம்
கோவை