அதிரதனின் இல்லத்திலிருந்து தன் அரண்மனை நோக்கி செல்கையில் தேரில் உடனிருந்த விருஷசேனனும் விருஷகேதுவும் கர்ணனிடமிருந்த ஆழ்ந்த அமைதியை அறிந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் விழிநோக்கிக் கொண்டார்கள். சம்பாபுரியின் தெருக்கள் உச்சிவெயிலுக்கு அடங்கி ஓயத்தொடங்கிவிட்டிருந்தன. கர்ணனின் தேர் செல்வதை மக்கள் அறிந்ததாகத் தெரியவில்லை. எந்த அணியுமில்லாத விரைவுத்தேர் அது. அதன் செம்பட்டுத் திரைச்சீலைகளை காணநேர்ந்த சிலர் உள்ளிருப்பவர் எவர் என நோக்கி அது கர்ணன் என அடையாளம் காண்பதற்குள் தேர் அவர்களை கடந்துசென்றது.
அரண்மனையை தேர் சென்றடைந்தபோது கர்ணன் பெருமூச்சுடன் ஒன்றும் சொல்லாமல் இறங்கி நடைவாயிலை நோக்கி சென்றான். விருஷகேதுவும் விருஷசேனனும் இறங்கி நிற்க அவர்களின் உடையின் வண்ண அசைவை வெண்பளிங்குச் சுவரில் கண்டு கர்ணன் திரும்பி நோக்கினான். அவர்களை எவர் என்பதுபோல விழிசுருக்கி பார்ப்பதாகத் தோன்றியது. பின்னர் கைவீசி அவர்களை தன்னைத் தொடரும்படி ஆணையிட்டுவிட்டு நடந்தான். மெய்யாகவே அவன் தன்னை தொடரும்படி ஆணையிட்டானா என்னும் ஐயத்துடன் மூத்தவனை விருஷகேது நோக்கினான். விருஷசேனன் “செல்க!” என்றபடி நடக்க அவனும் தொடர்ந்தான்.
கர்ணன் பட்டம் ஏற்றபின் கட்டிய பெரிய அரண்மனையின் நீண்ட இடைநாழி தேவதாரு மரத்தாலான தரைகொண்டது. மெழுகு தேய்க்கப்பட்ட அப்பரப்பின்மேல் கர்ணனின் வண்ண உடல்தோற்றம் நீண்டு சென்றது. விருஷகேது அதை நோக்கியபடி நடந்தான். யானைகளுக்குரிய நடை. ஆனால் உடல்தசைகளின் அசைவு சிம்மங்களுக்குரியது. தசைகள் இயல்பாக தளர்ந்திருப்பவை என்றும், பேராற்றல் கொண்டவை என்றும் ஒரே தருணத்தில் தோன்றச்செய்பவை. முன்னால் சென்ற விருஷசேனன் தந்தையின் இன்னொரு உருவம் எனத் தோன்ற விருஷகேது விழிதிகைத்தான். முதிய கர்ணனை இளைய கர்ணன் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தான்.
அவன் தன் முகத்தை ஆடியில் நோக்க விழைந்தான். அவன் தன் அன்னையின் தோற்றத்தை கொண்டிருந்தான். கர்ணனின் உயரமும் கருநிறமும் அவனுக்கு அமையவில்லை. இளமையிலேயே அன்னையின் மடியிலிருந்து வளர்ந்தமையால் அவன் விற்கலையிலும் வாட்கலையிலும் பயிற்சி கொள்ளவில்லை. சேடியராலும் செவிலியராலும் அவன் வளர்க்கப்பட்டான். அரண்மனையின் குளிர்ந்து விரிந்த அமைதிநிறைந்த மாற்றமின்மையை, மீள மீள ஒன்றே நிகழும் வெறுமையை விரும்பினான். இளமையின் தனிமை அவனை கற்பனைகளுக்கு கொண்டுசென்றது. மொழியை அவன் பற்றிக்கொண்டான். நூல்நவில்வதில் ஆர்வம் கொண்டிருந்தான்.
மூத்தவர்களின் எந்தக் களியாட்டிலும் அவன் கலந்துகொண்டதில்லை. கர்ணனைப்போலவே அணிகள் பூண்டு, அவனைப்போலவே சற்றே தாழ்ந்த விழிகளுடன் நீளுடலை சாய்த்து பீடத்தில் அமர்ந்திருக்கும் விருஷசேனனையும் அவனுடைய மாற்றுரு என்றே தோன்றும் பிற மூத்தவர்களையும் பார்க்கையில் அவர்களின் குருதி அல்ல தன்னுடையது என்று அவன் உணர்ந்தான். அவர்கள் முழங்கும் ஆழ்ந்த குரல் கொண்டிருந்தார்கள். இயல்பாக பேருடல் கொண்டவர்களிடமிருக்கும் தளர்வசைவுகள் கொண்டவர்களாகவும் பயிற்சி என்றும் விளையாட்டென்றும் போரென்றும் எழுகையில் நாண் இழுபட்ட வில் என நின்றிருப்பவர்களாகவும் இருந்தனர். அங்கர் நான்கு பக்கமும் சூழ்ந்த ஆடிகளில் தன்னை நோக்கிக்கொண்டார். மைந்தர்களெனப் பெருகிச்சூழ்ந்தார் என பாடினர் சூதர்.
பாண்டவ, கௌரவ மைந்தர்கள் எவருடனும் அவனுக்கு அணுக்கத் தொடர்பு இருக்கவில்லை. பாண்டவ மைந்தர்களும் கௌரவ மைந்தர்களும் இணைந்தே அஸ்தினபுரியிலும் பின்னர் துரோணரின் குருநிலையிலும் பயின்றனர். அவன் மூத்தாரும் அங்கே பயின்றனர். அஸ்தினபுரிக்கு உரிய அணிக்காட்டில் வேட்டையாடினர். கங்கையில் நீர்விளையாடினர். அவன் எப்போதும் அகன்றிருந்து நோக்குபவனாகவே இருந்தான். அதனால் அவர்களால் அவன் ஏளனம் செய்யப்பட்டான். ஆனால் அவன் உடன்பிறந்தார் அவனை எப்போதும் சிறுவன் என, அரியவன் என எண்ணிப் பேணினர். ஏளனம் இளிவரலாக ஒருபோதும் மாறியதில்லை. விருஷசேனன் அவனை தன் மைந்தன் என்றே எண்ணினான். அவனைவிட இளையவரான சுசேஷணனும் சுதமனும் அவனை இளையவனாகவே நடத்தினர்.
அவர்களில் பிரதிவிந்தியனும் யௌதேயனும் மட்டுமே அவனுக்கு அணுக்கமானவர்கள். அவர்களும் விளையாட்டுக்களில் கலந்துகொள்வதில்லை. ஒதுங்கியிருந்து நோக்கி மகிழ்வார்கள். அவ்விளையாட்டுக்கள் பற்றிய கருத்துக்களை உருவாக்கிக் கொள்வார்கள். அவற்றையே சொல்லாடலாக ஆக்கிக்கொண்டு அதில் நெடுந்தொலைவு செல்வார்கள். சில தருணங்களில் அவர்கள் விளையாடி முடித்து மீண்டு வரும்போதுகூட அவர்களின் சொல்லாடல் முடிவுற்றிருக்காது. லக்ஷ்மணன் எப்போதுமே இளிவரலாடுவான். உடன் துருமசேனனும் சேர்ந்துகொள்வான். சுதசோமனும் சர்வதனும் மூத்தோருக்கு துணைநிற்பார்கள். பூசலின் எல்லைக்கோடு வரை சென்று சென்று மீளும் ஓர் ஆடலாக அது நிகழும்.
அறைவாயிலில் நின்று திரும்பி நோக்கிய கர்ணன் விருஷசேனனிடம் “பிற மைந்தரும் உடனே வரவேண்டும்… அவர்கள் இங்கிருக்கிறார்கள் அல்லவா?” என்றான். “ஆம், அனைவருமே அரண்மனையில்தான் உள்ளனர். இன்று படைப்புறப்பாடு இருக்கும் என்பதனால் இங்கேயே இருக்கவேண்டும் என நான் ஆணையிட்டேன்” என்றான் விருஷசேனன். “நன்று, அவர்கள் வரட்டும்” என்றபின் கர்ணன் உள்ளே சென்றான். விருஷசேனன் விருஷகேதுவிடம் “சென்று உடன்பிறந்தார் அனைவரையும் வரச்சொல். நான் அதுவரை அமைச்சரிடம் சொல்லாடிக்கொண்டிருக்கிறேன்” என்றான். அருகிருந்த அறையிலிருந்து சிவதர் வெளிவந்து விருஷசேனனை நோக்கி தலைவணங்கினார்.
விருஷகேது நேராக அமைச்சர்நிலைக்குச் சென்று அங்கிருந்த ஏவலர்களிடம் உடன்பிறந்தார் அனைவரையும் உடனே அரசரைப் பார்க்கவரும்படி ஆணையிட்டு அனுப்பினான். அவன் திரும்பி அங்கே சென்றபோது விருஷசேனன் சிவதரிடம் பேசிக்கொண்டிருந்தான். அவர்கள் சிரித்துக்கொண்டிருப்பதை தொலைவிலேயே அவன் கண்டான். அருகணையும்தோறும் அவன் நோக்கு கூர்கொள்ள நடை தளர்ந்தது. அவர்கள் பேசிக்கொள்வனவற்றில் காதில் விழும் முதல் சொல்லில் இருந்து அவ்வுரையாடலை உய்த்தறியவேண்டும் என அவன் முடிவு செய்தான். விருஷசேனன் “அவர்கள் அறிவதில்லை” என்று சொல்லி திரும்பி நோக்கி “வருகிறார்களா?” என்றான். “ஆம்” என்றான் விருஷகேது. அவனால் உரையாடலை உணர முடியவில்லை.
“அவர்கள் வந்தபின் பேசுவோம்” என்றார் சிவதர். ஆனால் அவர்கள் பேசிக்கொண்டது உடன்பிறந்தாரைப் பற்றி அல்ல என்று விருஷகேதுவுக்கு தோன்றியது. அவர்களைப் பற்றி அத்தனை சிரிப்புடன் பேச என்ன இருக்கிறது? அவர்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். திவிபதனும் சத்ருஞ்ஜயனும் பிரசேனனும் சேர்ந்து வந்தார்கள். தொடர்ந்து இன்னொரு சிறிய குழுவாக சத்யசேனனும் சித்ரசேனனும் சுசேஷணனும் வந்தனர். வாழ்த்துச் சொல் ஏதுமின்றி அவர்கள் விருஷசேனனை வணங்கி விருஷகேதுவை நோக்கி புன்னகை புரிந்தனர். சிவதர் எழுந்து அறைக்குள் போய் மீண்டுவந்து “அழைக்கிறார்” என்றார். அவர்கள் தங்கள் ஆடைகளை சீரமைத்து நீள்மூச்செறிந்தனர்.
விருஷசேனன் உள்ளே செல்ல பின்னர் பிறர் தொடர்ந்தனர். அறைக்குள் கர்ணன் மஞ்சத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்கு முன் நான்கு இருக்கைகளே இருந்தன. விருஷசேனன் மட்டும் தந்தையை வணங்கிவிட்டு ஒன்றில் அமர்ந்தான். மற்றவர்கள் வணங்கிவிட்டு கைகட்டி நின்றனர். விருஷகேது தந்தையை வணங்கிவிட்டு அவர்களுக்குப் பின்னால் நின்றான். அது எப்போதும் அவன் வழக்கம். அவன் கர்ணனின் விழிமுன் நிற்பது அரிது. அது பொறுப்புகளை ஏற்பதற்கான தயக்கத்தால்தான் என்று பிறர் கூறுவதுண்டு. அவன் அவ்வாறு சென்று நிற்கையில் நோக்கப்படுபவனாக உணர்ந்தான், நோக்குபவனாகவே நின்றிருக்க விழைந்தான்.
கர்ணன் “நான் இன்று மாலை கிளம்புகிறேன். வடபுலத்தில் உள்ள சிபிரம் என்னும் கோட்டைக்குச் சென்று அங்கே வேட்டையாடுவதாகக் காட்டி தங்கியிருக்க திட்டமிட்டிருக்கிறேன். எனக்கு போருக்கான அழைப்பு வரும். அப்போது நான் அகன்று இருக்கலாகாது. மேலும் இத்தருணத்தில் தொலைவிலிருப்பது என்னை தளர்த்துகிறது. எத்தனை அணுக்கமாக இருக்க இயலுமோ அத்தனை அணுக விழைகிறேன்” என்றான். விருஷசேனன் “ஆம், அது நன்று. அதை முன்னரே பேசிவிட்டோம்” என்றான். கர்ணன் “இதில் எவருக்கேனும் மாற்றுச் சொல் உள்ளதா?” என்றான். எவரும் ஒன்றும் சொல்லவில்லை. விருஷகேது அவர்களை மாறிமாறி நோக்கினான். பின்னர் மெல்ல உடலை அசைத்தான்.
அவனை நோக்கி கர்ணன் திரும்பினான். “தந்தையே, சேய்மையை உருவாக்கியவர்கள் அவர்கள். நாம் எத்தனை அணுகினாலும் அச்சேய்மை குறைவதில்லை. நீங்கள் ஒருபோதும் அணுவிடைகூட அகன்றவருமல்ல” என்றான் விருஷகேது. கர்ணன் “ஆம், ஆனால் போர்க்களம் நாமறியா விசைகளின் ஆடுகளம். அங்கே என்ன நிகழுமென நம்மால் கணிக்க முடியாது. நான் அழைக்கப்படுவேன். அமைச்சர்களும் அதையே சொல்கிறார்கள். நிமித்திகர்கூற்றும் அதுவே” என்றான். விருஷசேனன் சிறு எரிச்சலுடன் விருஷகேதுவை நோக்கி திரும்பி “நாம் முடிவெடுத்துவிட்டோம், இளையோனே. நம் படைகள் கிளம்ப சித்தமாகவும் உள்ளன. இனி இதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றான்.
கர்ணன் புன்னகைத்து “அவன் எந்நிலையிலும் பேசவிழைபவன்…” என்றபின் விருஷசேனனை நோக்கி “இன்று நீ உடனிருந்தாய். தந்தை அன்னையிடம் சொன்னதை கேட்டாய்” என்றான். “ஆம்” என்றான் விருஷசேனன். “அச்செய்தியை முன்னரே அறிந்திருப்பாய்” என்று கர்ணன் சொன்னான். “அது உங்கள் இருவரிலும் எந்த விளைவையும் உருவாக்கவில்லை என்பதை கண்டேன்.” விருஷசேனன் புன்னகைத்து “ஆம், முன்னரே அறிவோம். அரண்மனையில் சேடியர் நடுவே பூடகமாக பேசப்பட்டு வருவது இச்செய்தி. நாங்களனைவரும் சொல்லறியத் தொடங்குகையில் அறிவோம். புரியாமல் குழம்பி ஒருவாறாகத் தெளிந்து எண்ணி எண்ணி வியந்து பின்னர் அவ்வாறே என அமைவோம்” என்றான். விருஷகேது “இப்போதுதான் அதை நேர்ச்சொல்லாக்கி பிறர் செவிகேட்க முன்வைக்கலாமென்னும் எண்ணம் வந்தது” என்றான்.
கர்ணன் “அவர்கள் சொன்னது உண்மை என என்னிடமிருந்து ஓர் ஒப்புதல் வந்தது உங்களுக்கு” என்றான். “ஆம்” என்றான் விருஷசேனன். திவிபதன் “போருக்குச் செல்வதற்கு முன் எல்லாவற்றையும் பேசிவிடும் வழக்கம் உண்டு. தாதை நெடுங்காலமாக உளமொதுக்கி வைத்திருந்ததாக அது இருக்கலாம்” என்றான். கர்ணன் “ஆம், அவரும் நிமித்தநூல் நோக்கியிருப்பார், நான் மீள்வேனா என்று” என்றான். விருஷசேனன் “எவ்வாறாயினும் சொல்லப்படவேண்டியவை சொல்லப்பட்டுவிட்டன” என்றான். “ஆம், அதுவும் நன்று என்றே உணர்கிறேன். ஆகவேதான் உங்களிடம் பேசத்துணிந்தேன்.” அவன் சொல்வதற்காக அவர்கள் காத்துநின்றிருந்தனர்.
“ஒரு சூதர்கதை உண்டு. நம் அவையில் முன்பு ஒரு தென்னகச் சூதர் அணிச்சொல் என பாடியது. கதிரவன் எதையும் பெற்றுக்கொள்வதில்லை. மண்ணிலுள்ளவர்களின் வேண்டுதலுக்கு இணங்க தன் மைந்தனாகிய என்னை மானுடரிடமிருந்து பெற்றுக்கொள்க என ஆணையிட்டு இங்கே அனுப்பினான். ஆனால் இங்கு எவராலும் எனக்கு எதுவும் அளிக்க இயலவில்லை. நான் எதையும் பெற்றுக்கொள்ளாதவனாக விண்மீண்டேன்.” கர்ணன் புன்னகைத்து “சூதர்களுக்கு எவரிடம் எதை பாடவேண்டும் என தெரியும். அவர்களின் தோற்றத்தையும் பழக்கத்தையும் கடந்து ஆழ்கனவிலிருந்து அவர்களுக்கு உகந்ததை கண்டெடுக்கிறார்கள். அதை அவர்கள் முன் பாடுகிறார்கள். மகிழ்விப்பதன் கலையை பல்லாயிரம் ஆண்டுகளாகப் பயின்றவர்கள்” என்றான்.
“அவர்களால் மானுடர் மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறார்கள்” என்று விருஷகேது சொன்னான். கர்ணன் அவனை நோக்கி “ஆம், இப்போது நானும் நீ எண்ணியதையேதான் எண்ணினேன். மானுடர் விழைவதை அவர்கள் எனச்சொல்லி நிலைநிறுத்துகிறார்கள் எனில் இவர்கள் இங்கே நிலைநிறுத்துவது எதை? மானுடர் காணும் கனவுகளைத்தானா?” என்றபின் கைவீசி அவ்வெண்ணத்தைத் தவிர்த்து “விந்தைதான்” என்றான். “தந்தையே, கனவுகளையே மெய்யான மானுடர் என்று சொல்லவேண்டும். மானுடரின் தோற்றமும் நடத்தையும் சொற்களும் அவர்களின் கனவு என்னும் கடலின் அலையும் துளியும் துமியும் என்றே சொல்லவேண்டும்” என்றான் விருஷகேது.
கர்ணன் நிமிர்ந்து நோக்க “எது உண்மையான மானுடனோ அதை அவர்கள் நிலைநிறுத்துகிறார்கள். தந்தையே, பெரும்பாலான கனவுகள் வெறும் விழைவுகளோ அச்சங்களோதான். விழைவும் அச்சமும் அற்ற கனவே அம்மானுடன். இன்று பாரதவர்ஷத்தில் மும்முடி சூடிய பேரரசர்கள் பிறர் இருக்கலாம். தங்கள் கனவுகளில் அவர்கள் அதை மெய்யாகவே எய்தவில்லை. தாங்கள் எய்தியிருக்கிறீர்கள். ஆகவே சூதர் உங்களையே மும்முடிசூடிய பேரரசர் என்று சொல்வார்கள்” என்றான் விருஷகேது. கர்ணன் உரக்க நகைத்து “இசைச்சூதனின் நா கொண்டிருக்கிறான், நன்று” என்றான்.
பின்னர் விருஷசேனனிடம் “நான் அச்சூதரின் கதையையே என் உள்ளமெனக் கொண்டிருந்தேன் என்பதை சொல்லவந்தேன்” என்றான். “இங்கிருந்து எதையுமே பெற்றுக்கொள்ளலாகாது என நான் கருதினேன். எவர் எனக்கு எதையேனும் அளிக்க முற்பட்டாலும் அதை பெற்றுக்கொள்ளா தொலைவுக்கு அகன்றேன். எந்தையும் அன்னையும் அளித்த அன்பு என்னை வந்தடையாத இடத்தில் இருந்தேன். அஸ்தினபுரியின் அரசர் எனக்கு இந்நாட்டையும் குடியடையாளத்தையும் அளித்தபோது நூறுமடங்கென திருப்பிக்கொடுத்து அவரும் அணுகமுடியாதவனானேன். அதை ஆணவம் என்று சொல்லலாம். ஆனால் ஒருவகை தன்னுணர்வு என்றே சொல்வேன்” என்றான்.
“வஞ்சத்தால், கசப்பால் அவ்வண்ணம் இருக்கிறேனா? அன்னை என்னை அகற்றியமையால் இனி எவரும் எனக்கு எதையும் அளிக்கவேண்டியதில்லை என முடிவெடுத்தேனா? நானே உழன்று உழன்று அதை வினவிக்கொண்ட காலம் உண்டு. அவ்வாறல்ல என இன்று நன்கறிவேன். மெய்யாகவே எனக்கு எவர்மேலும் சற்றும் வஞ்சம் இல்லை. என் அன்னையைக்கூட அவர் நின்ற இடத்திற்குச் சென்றே புரிந்துகொள்கிறேன். ஆகவேதான் அவருடைய தன்மதிப்பு எந்நிலையிலும் குலையலாகாது என எண்ணினேன். அன்னை பிழையுணர்வும் தனிமையும் கொண்டு உளம்குமைகிறார் என நான் அறிவேன். அவர் சற்று இடம்கொடுத்தால் சென்று அவரை அணைத்து ஆறுதல்சொல்லி அத்துயரிலிருந்து ஆற்றவேண்டும் என்றே உள்ளம் எழுகிறது.”
“நான் எப்போதுமே துயரம்கொண்டவன், தனித்தவன். என்னுள் ஓர் ஆற்றாமை கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலத்தை முழுதும் தழுவி எழுகிறது என் உள்ளம். உடனே தன்னுணர்வுகொண்டு சுருங்கி உள்ளொடுங்கிக் கொள்கிறது. இவ்விரு அலைக்கழிப்புகளிலிருந்து எனக்கு விடுதலை இல்லை” என்று கர்ணன் சொன்னான். ”எரிந்துகொண்டே இருந்தாகவேண்டியவன் நான் என்கின்றனர் என் நாள் நோக்கிய நிமித்திகர்கள். அதை அவர்கள் சொல்லச்சொல்ல நான் அதுவே மெய் என ஏற்றுக்கொண்டேன். அந்நிலையில் இயல்பாக இருக்கவும் பழகிக்கொண்டேன்.” அவன் தன்னுள் சென்று சுட்டுவிரலைச் சுழித்து காற்றில் எதையோ எழுதி அழித்துக்கொண்டிருந்தான். பின்னர் மீண்டு நீள்மூச்சுடன் “ஆம்” என்றான்.
“தங்களை நாங்கள் நன்கு அறிவோம், தந்தையே” என்றான் விருஷகேது. விருஷசேனன் அவனை திரும்பிநோக்கி விழிகளை உறுத்தான். ஆனால் அத்தருணத்தில் எதையேனும் அப்படி பேசினால்தான் கர்ணன் மீள்வான் என விருஷகேது அறிந்திருந்தான். “ஆம், என்னை நீங்கள் கூர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறீர்கள்” என்று சொன்ன கர்ணன் புன்னகைத்து “அந்நம்பிக்கையில்தான் பேச விழைகிறேன்” என்றான். பின்னர் விருஷகேதுவிடம் “நீ நூல்நவில்பவன். நீ சொல். நான் வள்ளல் என்கிறார்கள். தன்னுள் தான் சுழன்று ஓயாது எரிந்துகொண்டிருப்பவன் எப்படி கொடைத்திறன் கொள்கிறான்?” என்றான்.
“ஒப்புமை என்பது அறிதல்களுக்கான மிகச்சிறந்த வழி. அளவைமுறை சென்றடையாத ஆழத்திற்கும் நுண்மைக்கும் ஒப்புமை சென்று சேர்ந்துவிடும். ஆகவேதான் அறிநெறிகளில் நேர்காட்சி, உய்த்தல், முன்னறிவுக்கு பின் அதை வைக்கின்றனர் கணாதகௌதம நெறியினர்” என்றான். விருஷகேது “தந்தையே, தங்களைப்போல நேரடியாக காவியமோ அளவையியலோ கற்காதவர்கள் ஒப்புமைகளை எளிய அணிவிளையாட்டென்று எண்ணுகிறீர்கள். காவியமும் அளவைநூலும் கற்காமலேயே ஒப்புமையின் ஆற்றலை இசைச்சூதர்கள் அறிவார்கள். வில்வேதம் கற்காது கைத்திறனாலேயே அம்புகளை மலைவேடர் அறிந்திருப்பதுபோல” என்றான்.
“உங்களை சூரியனுடன் ஒப்பிடுவதே உங்களை அறிவதற்கான மிகச்சிறந்த வழி. வேறெந்த பாதையும் உங்களுள் வாழும் மெய்யுருவை வந்தடையாது” என விருஷகேது தொடர்ந்தான். “நிமித்திகர்களின் அறிதல்முறையும் ஒப்புமைகளால் ஆனதே. சூதர்கள்போல் முடிவிலாத ஒப்புமைகளை அவர்கள் கையாள்வதில்லை. ராசிக்குறிகள் போன்று நன்கு வகுக்கப்பட்டு அனைவருக்கும் பொதுவான ஒப்புமைகளை மட்டும் கையாள்கிறார்கள். ஒருவனை ஒரு ராசியில் நிறுத்தி அவ்வடையாளங்களினூடாக அவனை அறிவதைப்போல் எளிய வழி ஒன்றில்லை. அவனை வகுத்துக்கொண்டு, பிறழ்வுகளையும் பிசிறுகளையும் குறித்துக்கொண்டு கூர்கொண்டு முன்செல்வதே அவனைச் சென்றடைய எளிய வழி. அவர்கள் அதை சித்தத்தாலும் கற்பனையாலும் கனவாலும் நிகழ்த்திப் பயின்று தலைமுறைகள்தோறும் கைமாறி விரித்து கால மடிப்புகளையே பிரித்து நோக்கும் ஆற்றல்கொண்டவர்களாக ஆகியிருக்கிறார்கள்.”
“கதிரவனின் அனைத்தியல்புகளும் உங்களுக்கு அமைந்துள்ளன. நீங்கள் கதிரவனின் மானுடவடிவமென்பதைப்போல் பொருந்தும் வரையறை வேறேதுமில்லை” என்றான் விருஷகேது. “எரிந்துகொண்டே இருக்கிறீர்கள். அவ்வெரிதலே பிற அனைவருக்கும் ஒளியென்றாகிறது. கோடி கைகளால் இப்புவியையும் வானையும் தழுவிக்கொண்டிருக்கிறீர்கள். அள்ளிக் கொடுக்கிறீர்கள். அமுது விளைவிக்கிறீர்கள். சுடரச் செய்கிறீர்கள். ஆகவேதான் உங்களை விழியறியும் தெய்வமென இங்குளோர் வணங்குகிறார்கள். அது என்றும் அவ்வண்ணமே இருக்கும்.”
அவன் சொற்கள் அவன் உடன்பிறந்தாரை உணர்வெழுச்சி கொள்ளச்செய்தன. கர்ணனின் விழிகளும் கூர்கொண்டு மின்னணிந்திருந்தன. “ஏன் கதிரவன் வள்ளல் ஆகிறான்? கதிரோனின் தன்னியல்பு ஒன்றினால்தான். தான் நோக்கும், தன்னை நோக்கும் எதையும் தானே என்றாக்குகிறான். ஆடிகள் சுடரோன் ஆகின்றன. கற்கள், உலோகங்கள், தளிர்கள், மலர்கள் அனைத்தும் அவனே என மாறிவிடுகின்றன. கடல்கள், ஓடைகள், பனித்துளிகள் அவன் வடிவு கொள்கின்றன. இங்கே விளையும் நெற்கதிரும் இன்கனியும் அவன் ஒளியே அல்லவா? பொன்னும் மணியும் அவனல்லவா? மானுடர் முகத்தில் விழிகளெனத் திகழ்பவை அவனாக தானே மாறிய இரு ஊன்குமிழிகள் அல்லவா?”
“நீங்கள் எவரை நோக்கினாலும் ஒருகணத்தில் இடம்மாறி அவரே என ஆவதை கண்டிருக்கிறேன். அவர்களின் வலியையும் துயரையும் முழுமையாகவே வாங்கிக்கொள்கிறீர்கள். அவர்களின் தனிமையையும் சீற்றத்தையும் நீங்கள் அடைகிறீர்கள். மறுபக்கம் அவர்கள் நீங்களென்றாகிறார்கள். நிமிர்வும் நம்பிக்கையும் கொண்டவர்களாக. உலகை விழிநோக்கும் ஆற்றல்கொண்டவர்களாக. தந்தையே பெருவள்ளல்கள் பிறருக்கு வழங்குபவர்கள் அல்ல. பிறர் என எண்ணுபவர் அளிக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பிறரை மதிப்பிடுகிறார்கள். அம்மதிப்புக்கு நிகராக அளிக்கவேண்டும் என கணக்கிடுகிறார்கள். பிறனில் தன்னைக் காண்பவர், பிறர் நோய் தன்நோய்போல் நோக்குபவர் மட்டுமே அள்ளிக்கொடுத்து வள்ளலென எழுகிறார்கள். அவர்கள் அனைத்தையும் தனக்கே அளித்துக்கொள்பவர்கள்.”
“கொடுப்பதனூடாக வள்ளல்கள் நூறுநூறு வடிவுகளில் எழுந்து பெற்றுக்கொள்கிறார்கள். தெய்வங்கள் கோடிநாவுகளால் தங்களையே பாடிக்கொள்வதுபோல” என்றான் விருஷகேது. அவன் குரல் உணர்வெழுச்சியால் தாழ்ந்தது. “வெங்கதிரோன் அள்ளி வழங்குவனவற்றை அவனுக்கே படைக்கிறோம். தன் ஒளிவிரல்களால் தொட்டு வாழ்த்தி கடந்துசெல்கிறான். நீங்கள் பிறிதொருவர் அல்ல. உங்கள் உடலை நீங்கள் என நீங்கள் எண்ணலாம். உங்கள் உள்ளமே நீங்களெனக் கருதலாம். இங்கே உங்களைச் சூழ்ந்துள்ள எங்களுக்கு உங்கள் கனவே நீங்கள். நாங்கள் அதை எங்கள் கொடிவழியின் நினைவுகளில் அவ்வண்ணமே அணையா விளக்கென நிலைநிறுத்துவோம்.”
அறைக்குள் ஆழ்ந்த அமைதி நிலவியது. கர்ணன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான். விருஷசேனன் பெருமூச்சுவிட அவ்வொலியில் அனைவரும் கலைந்தார்கள். கர்ணன் எழுந்து கைகளை நீட்டி உடலை நெளித்தான். அறைக்குள் சில எட்டுகள் நடந்தபின் நின்று “நன்று, நான் கேட்கவிருப்பதை இனி விரித்துரைக்க இயலாது என்னால். மைந்தரே, நான் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாகாதென்று எண்ணியவன். கருதாது வழங்கியவன். ஆனால் உங்களுக்கு மட்டும் எதையும் வழங்கியதில்லை. இவ்வரசை நான் விரிவாக்கவில்லை. என் கொடிவழியினருக்கு பேரரசு ஒன்றை விட்டுச்செல்லவில்லை” என்றான். அவன் குரல் தழைந்தது. “நான் துறந்த அஸ்தினபுரியின் மணிமுடி உங்களுக்கும் உரியது” என்றான்.
விருஷசேனனின் தோளைத் தொட்டு “என்னை எண்ணாது உங்களை நான் எண்ணியிருந்தேன் என்றால் நீ அஸ்தினபுரிக்கு அரசனாகியிருப்பாய். இப்புவியே புகழ்பாடும் பேரரசனாகவும் அமர்ந்திருப்பாய்” என்றான். அப்போது கொள்ளவேண்டிய உணர்வென்ன என்று அறியாதவன்போல் அவன் முகம் குழம்பி விந்தையானதொரு கசப்புப்புன்னகையை அணிந்துகொண்டது. விருஷசேனன் நிமிர்ந்து தந்தையை நோக்கி “அவ்வண்ணம் ஒன்றை நான் விரும்பினேன் என்றால், ஒரு துளியேனும் அக்கனவு என்னுள் இருந்தால் என் பொருட்டு இப்போது உங்கள் உள்ளத்தில் தோன்றும் கனிவை நீங்கள் அடைவீர்களா, தந்தையே?” என்றான்.
கர்ணன் திகைத்து “அறியேன். ஆனால் இப்போது உன்னை தொட்டபோது நீயே நான் என உணர்ந்தேன்” என்றான். புன்னகைத்து “இதற்கு அப்பால் இப்புவியில் மைந்தனாக நான் எதையேனும் விழைவேன் என்று எண்ணுகிறீர்களா?” என்றான் விருஷசேனன். கர்ணன் நீர்பரவி ஒளிகொண்ட விழிகளுடன் நோக்கி நின்றான். “இதோ இவர் நான் என எண்ணி மைந்தன் தந்தையை நோக்கி அடையும் பெருமிதம் ஒன்று உண்டு. பெருந்தந்தையரை அடைந்த மைந்தருக்கு மட்டுமே தெய்வங்கள் அளிக்கும் நற்கொடை அது. கோடியினரில் ஒருவருக்கு மட்டுமே அமைவது. அதை அடைந்தவர்கள் நாங்கள். அதற்கிணையாக வேறெதை நீங்கள் எங்களுக்கு அளிக்கவியலும்?”
உணர்வற்றதென ஒலித்த குரலில், விழிகளில் ஒளி கூர்கொண்டிருக்க விருஷசேனன் சொன்னான் “உங்கள் உருவை அல்லவா நோக்கி நோக்கி மகிழ்ந்தோம்? உங்கள் அணிகலன் ஒன்றைக் கண்டாலே விழிநிறைந்து நெஞ்சு அதிர்பவர்களாக இருக்கிறோம். அழகோ பெருமையோ வெற்றியோ உங்களால்தான் பொருள்பெறும் சொற்கள் எங்களுக்கு” என்ற விருஷசேனன் திரும்பி “இங்கிருக்கும் என் இளையோர் சொல்க, ஒருநாளேனும் தந்தையின் நினைப்பன்றி ஏதேனும் உங்கள் முதல் விழிப்பில் உள்ளத்தில் எழுந்துள்ளதா? தந்தையை அன்றி பிற எதையேனும் எண்ணி துயில்கொண்டிருக்கிறீர்களா?”
அவர்கள் விழிகளில் நீருடன் உடல்விம்ம அசையாது நின்றனர். “நீங்கள் இப்புவியிலிருந்து எதையும் கொள்ளவில்லை, தந்தையே. ஆனால் எங்களிடமிருந்து நீங்கள் அவ்வண்ணம் ஒழிய முடியாது. நாங்கள் அளிப்பதை நீங்கள் மறுக்கவே இயலாது” என்றான் விருஷசேனன். “உங்களுடன் சேர்ந்து போருக்கெழுவோம். உங்களுக்காக உயிர்கொடுப்போம். நாம் வென்று மீண்டு நாடாண்டால் உங்களுக்கு அன்னமும் நீரும் அளிப்போம். உங்களுக்கு கொடுக்கும் நிலையில் இருப்பவர் நாங்கள் மட்டுமே. எந்த தந்தையும் மைந்தரிடமிருந்து கொள்ளமாட்டேன் என்று சொல்ல இயலாது. அது தெய்வ ஆணை!” என்ற விருஷசேனன் புன்னகைத்து “கொள்க, தந்தையே!” என்றான்.
கர்ணன் விழிகளில் நீர் வழிய சிரித்தபடி இரு கைகளையும் விரித்தான். விருஷசேனன் எழுந்து அவனை தழுவிக்கொண்டான். மைந்தர்கள் அனைவரும் சேர்ந்து தந்தையை தழுவிக்கொண்டார்கள். சொற்களில்லாதவர்களாக பொருளில்லாது நகைத்தவர்களாக ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும் ஒருவரோடொருவர் முந்தியும் ஒருவரை ஒருவர் தழுவியும் ஓருடலென அங்கே நின்றிருந்தனர்.
முதற்களத்தில் அமர்ந்த சூதரான அஜர் பாடினார். “கூறுக, தோழரே! மண்ணுலகு முழுதுமாகப் பரப்பிய அனைத்துக் கைகளையும் இழுத்துக்கொண்டு மேற்கே அணையும் கதிரவன் துயர்கொண்டிருக்கிறானா மகிழ்கிறானா? துயர்போலும் உவகையும் உவகையெனும் துயருமல்லவா மானுடன் அடையும் உச்சமென வகுக்கப்பட்டுள்ளது? தெய்வங்களை வாழ்த்துக! அவை மானுடரை நடிக்கின்றன, அதனூடாக மானுடனை அழிவற்றவனாக்குகின்றன. கதிரவனை வாழ்த்துக, அவன் கர்ணன் என இப்புவிக்கு இறங்கி வந்தான்! ஆம்! ஆம்! ஆம்!”