கோடைநடை -கடிதங்கள்

கோடை நடை

அன்புள்ள ஜெ

கோடை நடை படித்த பிறகு எங்கள் சூழல் கூட இனிமையாய் தெரிய ஆரம்பிக்கிறது. . .நன்றி.

எங்கும் ஒரே புலம்பல் தான் இப்போது – வெயில் தாங்க முடியல, வேத்து ஊத்துது, இப்பவே இப்படி, ண்ணிக்கு என்ன பண்ணப்போறோம். . .

எங்களுக்கும் கோடை பிப்ரவரி மாதமே தொடங்கி விட்டது! செடி கொடிகளெல்லாம்வாடி நிற்க தயாராகி இலைகளை உதிர்க்க ஆரம்பித்தன. காலையில் துயிலெழுப்பும் பறவைக்கூட்டத்தின் கோஷ்டிகானம் சற்று சுருதி இழக்க ஆரம்பித்தது. சில பறவைகள் வேறு கோஷ்டிக்கு ( வேறு ஊருக்கு) சென்றுவிட்டன போலும். சாரைசாரையாய் பல வண்ண எறும்புகள் குடிபெயர்ந்து எங்கோ செல்லத்தொடங்கிவிட்டன. பேருந்துகளில் எஞ்சின் சத்தத்தை விட உஸ் உஸ் என்ற பயணிகளின் மூச்சொலி பெரிதாக ஒலிக்க ஆரம்பித்தது. மூலைக்கு மூலை கறும்பு சாறு ( எங்கள் பக்கம் கறும்புப் பால்) நடைவண்டிக் கடைகள்.(ஐஸ் போடணுமா, வேண்டாமா?). தெருக்களில் முட்டிக் கொள்ளாமல் நடமாட முடிகிறது.

குழாய்களின் முன்னால் தீர்த்தத்திற்காக தவமிருக்கும் குடங்களின் வரிசை அனுமார் வாலாய் நீள ஆரம்பித்து விட்டது. மாட்டுவண்டியிலும், டிராக்டரிலும், லாரிகளிலும் தண்ணீரின் பயணம் தொடங்கிவிட்டிருக்கிறது. துணி தோய்த்த, பாத்திரம் தேய்த்த, தண்ணீர் சேமிக்கப்பட்டு செடிகளிடமோ கழிப்பறையிலோ தஞ்சமடைகிறது. ஆடுமாடுகள் அடிக்கடி நா வரண்டு தண்ணீர் கேட்டு கூப்பாடு போட
ஆரம்பித்துள்ளன. போர் போடனுமா சார் என்று பலர் பைக்கில் சுற்றி வர ஆரம்பித்திருக்கிறார்கள். கிணற்றில் சேறு அள்ளும் கிரேன் வண்டிகள், பாறையைப் பிளக்கும் வெடி மருந்துகளோடு இங்கும் அங்குமாய் ஓடுகின்றன.

பழைய சோறு அமிர்தமாய் இனிக்கிறது. அதோடு புதிதாய் பறித்து போடப்பட்ட மாவடு
ஊறுகாய், விருந்தாய் மணக்கிறது. நடுப்பகலில் குட்டித் தூக்கம் கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. மறந்து போயிருந்த மரத்து நிழல் சொர்க்கமாய் அழைக்கிறது. தெள்ளத்தெளிவான இரவு வானம் அத்தனை வைரங்களையும் காட்சிக்கு வைக்கிறது. இப்படிக் கூட இருக்குமா என்னும் பேரமைதி, சிலரை நடுக்கம் கொள்ள வைத்தாலும், பேரின்பப் பெருநிலையை தொட்டுக்காட்டுகிறது. குடிக்க வைத்திருக்கும் தண்ணீரில் முக்குளித்து சூடு தணித்துக்கொள்ளும் பறவைகள் சிலிர்த்துக்கொள்கின்றன, சிலிர்க்க வைக்கின்றன. பல பொழுது உணரப்படாமல் புறக்கணிக்கப்படும் காற்று, கோடையில் சொற்பமாய் வீசினாலும் அபரிமிதமாய் ஆனந்தம் அளிக்கிறது.

கோடையிலும் இன்பம் இருக்கத்தான் செய்கிறது. . .கண்டுகொள்வோம், மகிழ்வோம்!

அன்புடன்

ராமசுப்ரமணியன்

தேக்கம்பட்டு.

 

கோடை நடை

அன்புள்ள ஜெ

 

கோடைநடை ஓர் அருமையான கட்டுரை. வாசகர்கள் தொடர்ச்சியாக உங்களுடன் மானசீகமாக உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் காலைநடைப் பாதை, வீடு எல்லாமே நன்கு அறிமுமகானவை. இத்தகைய இடங்கள் இங்கே கொஞ்சம் குறைவுதான். மழை வெயில் என பார்வதிபுரம் சாலை மிக நெருக்கமானது. அதைப்பற்றிப் படிக்கையில் உங்களுடன் இருந்த உணர்வை அடைகிறேன். அந்தச்சாலையில் நடந்ததுபோலவே தோன்றுகிறது

 

எல்லா பருவகாலங்களும் அதற்கான அழகைக்கொண்டவைதான். எல்லா பருவகாலங்களிலும் அதற்கான துன்பங்களும் உண்டு. மனநிலையை இயற்கையை விரும்பும்படி அமைத்துக்கொள்வதுதான் முக்கியமானது என நினைக்கிறேன் பழைய பிளாக் ஆண்ட் ஒயிட் படங்களைப் பார்க்கையில் எல்லாமே சாம்பல்தான். ஆனால் எப்படி அதையெல்லாம் பச்சைப்பசுமை என்றும் பூக்களின் நிறங்கள் என்றும் நினைத்துக்கொண்டோம் என்ற ஆச்சரியம் வரும். அந்த மனநிலைதான் காரணம். அதை தக்கவைத்துக்கொள்ளவேண்டும்

 

செல்வராஜ் அமிர்தம்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-15
அடுத்த கட்டுரைடின்னிடஸ் அனுபவத்தின் வழியே…