இலட்சியவாதம் அன்றும் இன்றும் -ஒரு கடிதம்

 

அன்புள்ள ஆசிரியருக்கு,

இந்த வருடம் முழுக்க உங்களை சந்திக்க முடியாமல் ஆகி விட்டது என்று நினைக்கும்போது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. விஷ்ணுபுரம் விருது விழா நேரத்தில் தவிர்க்கமுடியாத காரணத்தால் அமெரிக்கா செல்லவேண்டிவிட்டது. சரி ஊட்டி முகாம் எப்படியும் பார்த்துவிடலாம் என்றால் எனக்கு அனுமதி இல்லாமல் ஆகிவிட்டது. சரி என்ன நேரில் பார்த்தால் தான் உண்டா??? எப்படியும் தினமும் யோசிக்கும்போதெல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அடுத்தமுறை கண்டிப்பாக வாய்ப்பு வரும்போது வந்துவிடுவேன்.

 

மற்றபடி அனைத்தும் நலம்.

 

நேற்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து 100 வது வருட நிறைவு. எங்கள் குடியிருப்பில் அதைப்பற்றி ஒரு திரைப்படம் திரை இடலாம் என்று நினைத்து கடைசியில் திரையிட்டும்விட்டேன். ஆனால் கூட்டமே இல்லை. எதற்க்கு இந்த படம் என்றும், இப்போது என்ன வந்தது என்றும் ஒரே பொருமல்கள்.

 

சிறியவர்களின் பொருமல்கள் உணரமுடிகிறது. ஆனால் பெரியவர்களும் இதில் வரும்போது ஒரு விதமான மன அலைச்சல்களுக்கு ஆளாகிறேன். பின் தொடரும் நிழலின் குரலைபோன்று சற்று ஒரு 100 வருடத்திற்குமுன் 23 வயது இளைஞன் சுதந்தரத்தையே தன் வாழ்நாள் லட்சியமாக நினைத்து தன் உயிரை அர்பணித்த அந்த அபலைகளை நினைத்து கண்ணீர் உகுக்கவேண்டாம் ஆனால் என்ன இப்போது என்று சொல்ல வேண்டுமா!!! அவர்களின் தியாகத்திற்க்கும், உழைப்பிற்க்கும் என்னதான் பொருள். ஏன் அந்த ஏமாளிகள் தன் வாழ் நாளை இப்படி இந்த வீணர்களுக்கு அர்பணித்தனர். ஒரே எரிச்சலும் ஆற்றாமையும்தான் வருகிறது.

 

-திருமலை.பச்சமுத்து

 

 

 

அன்புள்ள திருமலை

 

பாரதிகுறித்த நினைவுகளில் ஓர் இடம்.  வரா எழுதியது என நினைவு. 1919 ல் பாரதி கடற்கரைக்கு நடை செல்கிறார். அங்கே ஒரு வழக்கறிஞர் பாரதியைப் பார்த்து அடையாளம் கண்டுகொள்கிறார். “ஏன் பாரதி உங்க டிலக் இப்ப என்ன பண்றான்?” என்று கேட்கிறார். பாரதி சீறிவிடுகிறார். அவன் குரல்வளையைக் கடிக்க நிற்க மற்றவர்கள் இழுத்து வருகிறார்கள் ‘ஏண்டா டேய், உனக்கு திலகர் டிலக்காடா?” என்று கூச்சலிடுகிறார்

 

விடுதலைப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது. ஜாலியன் வாலாபாக் நடந்த அதே ஆண்டு. அதைத்தவிர வேறு பேச்சே இல்லாமலிருந்த சந்தர்ப்பம். அன்றைக்கு மனிதர்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். எளிய மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள். வறுமையால் சிறுமைகொண்டிருப்பார்கள். அல்லது செல்வத்தால் சிறுமைகொண்டிருப்பார்கள்.

 

நீங்கள் ஜாலியன் வாலாபாக்கை ஒரு வெறுப்புகோஷத்துடன், ஓர் எதிரியைச் சுட்டிக்காட்டி, முன்வைத்துப்பாருங்கள். கூட்டம் திரள்வார்கள். நேர்நிலை இலட்சியவாதம் அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் அரசியல் முழுக்கமுழுக்க எதிரியை முன்னால் கண்டு உருவாக்கிக் கொள்ளும் திரள் உளநிலை மட்டுமே

 

கனவுகள், இலட்சியங்கள், பொதுநலன் ஆகியவை ஆயிரத்தில் ஒருவருக்கே. தத்துவமும் ஆன்மிகத்தேடலும் லட்சத்தில் ஒருவருக்கே..அவர்கள் அப்படி இல்லையே என வருந்துவதை விட நாம் அவர்களைப்போல் இல்லையே என மகிழ்வதே சரியான உளநிலை

 

 

ஜெ

முந்தைய கட்டுரைகங்கைக்கான போர் – ஓர் ஆவணப்படம்
அடுத்த கட்டுரைகங்கைக்காக ஒர் உயிர்ப்போர்