காலையில் துயில்பவன்

Tinnitus

அன்புள்ள  ஜெயமோகனுக்கு,

எழுதுவது என்னை நான் முழுவதுமாக வெளிப்படுத்த உதவும் என்று நம்புகிறேன். எனது உடல் சார்ந்த போராட்டங்களையும் மனம் சார்ந்த போராட்டங்களையும் முழுவதுமாக வெளிப்படுத்துவதில் எனக்கு இது நாள் வரை தயக்கம் இருந்தது. இப்போதும் இருக்கிறது. ஆனால் இப்போது சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. நான் பகிர்ந்து கொள்ளப் போவது ஒரு அறிவியக்கத்திடம் என்பதனால் ஏற்பட்ட நம்பிக்கை இது.

பெயரை சொல்ல தயக்கமாக இருக்கிறது. சில முறை இலக்கியக் கூட்டங்ககளுக்கு வந்து என் பெயரையும் ஊரையும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதனால் இப்போது சொன்னால் கண்டுகொள்வீர்களோ என்ற தயக்கம். எனது பெயரை “காலையில் துயில்பவன்” என்று வைத்துக் கொள்வோம்.

சிறு வயது முதலே எனக்கு தூக்கம் மிகவும் கம்மி.  இரவில் ஆறு மணிநேரம் தூங்கி விட்டால் அது சாதனை. அந்த சாதனையை மாதத்திற்கு நான்கு அல்லது ஐந்து தடவை செய்வேன். ஒவ்வொரு முறை காலையில் விழிக்கும் போதும் ஆழ்ந்த அயர்ச்சி உடலின் ஒவ்வொரு பாகத்திலும் பரவியிருக்கும். மற்ற பாகங்களில் எழும் அயர்ச்சியை ஆடைகளால் மூடிக்கொண்டு பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்வேன். ஆனால் முகத்தில் தெரியும் அயர்ச்சியை மூட வழியில்லை. பள்ளியிலும் கல்லூரியிலும் யார் என்னை பார்த்தாலும் என் முகத்திலும் கண்ணிலும் இருக்கும் தூக்கமின்மையைத் தான் பார்க்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன். ஒரு நாளுக்கு பத்து முறைக்கு மேல் சோப்பு போட்டு கழுவி முகத்தை பொலிவாக்க முயல்வேன். ஆனால் முகம் கழுவிய அடுத்த ஐந்து நிமிடங்களில் பழைய நிலைக்கு மாறியிருக்கும். எப்போதும் முகத்துக்கும் பூசும் பவுடரை கர்ச்சீப்பில் கொட்டி வைத்திருப்பேன்.

எனக்கு பெரும்பாலும் பசிக்கவே செய்யாது. என் உடலை கண்ணாடியில் பார்ப்பேன். எனக்கே அருவருப்பாக இருக்கும். அவ்வளவு ஒல்லியாக இருப்பேன். உணவு வேளைகளில் உணவை எடுத்து வாயில் போட்டு அடைத்துக்கொள்வேன். நிறைய உணவை வாயில் போட்டு அடைத்துக்கொண்டால் தான் எடை கூட முடியும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். எப்போதாவுது அரிதாக பசிக்கும்.

பள்ளியின் இறுதி ஆண்டுகளில் பத்து மணிக்கு படுக்கைக்கு சென்று படுத்தால், விடியகற்காலை மூன்று மணிவரை தூங்க முயற்சி செய்து தூங்காமல் புரண்டுகொண்டிருப்பேன். மூன்று மணிக்கு மேல் சிறிது நேரம் தூங்குவேன். மறுபடியும் காலை எட்டு மணிக்கு பள்ளி. ஏழு மணிக்கு எந்திரிக்க வேண்டும். பெரும் பாடு பட்டு எந்திரிப்பேன். உடல் என்னை மீண்டும் படுத்துகொள் என்று கெஞ்சும். ஆனால் தினமும் அம்மாவும் அப்பாவும் சொல்வது நினைவுக்கு வரும் “தம்பி நம்ம unreserved category டா. எப்டியாவுது படிச்சு நல்ல மார்க் எடுத்தா தான் வேலையே கிடைக்கும். எங்களால பணம் லாம் கட்டி காலேஜ் ல சேர்க்க முடியாது பாரு. உன் தம்பிக்கு வேற Autism இருக்கு. நீயாவுது நல்லா வந்தா தான் எங்களுக்கு சந்தோஷமே”.

அப்போது நான் தினமும் தூக்கம் இல்லாமல் படுக்கையில் சராசரியாக நான்கு மணிநேரம் புரண்டுகொண்டிருப்பேன். சில நாட்கள் ஐந்து மணிநேரம். தூங்காமல் படுத்திருக்கும் நேரம் என்ன நடந்திருக்கிறது என்று இப்போது யோசித்து பார்த்தால், எவ்வளவு முயன்றும் தூங்க முடியாமையால் தோன்றும் விரக்தி ஒரு பக்கம் . மறு பக்கம் என் மீதி ஆற்றலை பயன்படுத்தி கற்பனை உலகில் மிதந்துகொண்டிருப்பேன். அதில் காமத்திற்கும் பங்கு உண்டு. எதையாவுது கற்பனை செய்து கொண்டே இருந்தால் எப்படியாவுது தூக்கம் வந்துவிடும் என்று நம்பியிருந்தேன்.

பதினொன்றாம் வகுப்பு வரை பள்ளியிலும் வீட்டிலும் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பதற்காக பல கட்டங்களில் அவமானபடுத்தப்பட்டிருக்கிறேன். பாதி நேரங்களில் இதயம்  படபடவென்று வேகமாக அடித்துக்கொண்டிருக்கும். அவமானங்கள் ஏதும் இல்லாத தினங்களிலும் இதயம் அதே வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கும். நான் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பயப்படுவதால் தான் இப்படி நடக்கிறது என்று நினைத்துக்கொள்வேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கிய போது இரவு பத்து மணிக்கு படுக்கைக்கு செல்வதை நிறுத்திக்கொண்டேன். இரண்டு அல்லது மூன்று மணி வரை தூங்க முயற்சி செய்யாமல் விழித்திருக்க தொடங்கினேன். அப்படி விழித்திருப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. சொல்லப்போனால் இது நாள் வரை இல்லாத ஒரு விழிப்புநிலையை இரவின் அந்நேரங்களில் அடைந்தேன். இந்த விழிப்புநிலையை படிப்பதற்கு(அதாவுது மனப்பாடம் செய்வதற்கு) பயன்படுத்திக்கொண்டேன். வீட்டிலும் பள்ளியிலும் என் நிலை சற்று உயர்ந்தது. இறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து மருத்துவக்கல்லூரியில் நுழைந்தேன். கேட்பதற்க்கு எளிதாகத் தோன்றலாம். தூக்கம் தானே இல்லை வேறு என்ன பிரச்சனை என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் நடந்துகொண்டிருப்பது என்ன என்று எனக்கு புரிவதற்குள் மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்து விட்டேன்.

கல்லூரியில் நுழைந்த பிறகு தூக்கம் மேலும் குறைந்து விட்டது. மாதத்தில் பாதி நாட்கள் துயில் என்பது முழுவதுமாக இல்லாமல் ஆகியது. பல நாட்கள் தொடர்ந்து தூங்காமல் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தேன்.  ஒரு முறை எனது அருகில் வந்த கல்லூரி நண்பன் ஒருவன் என் கண்களின் அருகில் வரை சென்று உற்று நோக்கிவிட்டு “ப்பா ..என்ன டா இப்டி கன்றாவியா இருக்கு?” என்று கேட்டு விட்டு நகர்ந்தான்.

கல்லூரியின் இரண்டாம் ஆண்டில் நிலைமை இன்னும் மோசமானது. தலை பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. அடர்த்தியான முதுகு வலி எடுக்க தொடங்கியது. இதயத்தின் வேகத்துடிப்பு நிமிடத்திற்கு 100 க்கு மேல் எப்பவும் இருந்துக்கொண்டிருந்தது. மூச்சு பலமாக வாங்கத் தொடங்கியது. உடலுக்குள் உள்ள அணைத்து பாகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக்கொண்டிருப்பது போல் இருந்தது. நானே எனது உடலை மிகவும் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு கல்லூரிக்கு தினமும் சென்று வந்தேன்.

மருத்துவ பேராசிரியர்களிடம் தொடர்ந்து ஆலோசனை பெற்று வந்தேன். எல்லாம் சரியாகத் தான் உள்ளது, நீ தான் ஏதோ போட்டு குழப்பிக் கொள்கிறாய் என்றார்கள். தலைவலிக்கு CT PNS, முதுகுவலிக்கு MRI, மூச்சு வாங்குவதற்கு CHEST X- RAY , நெஞ்சு படபப்பிற்க்கு ECHO என்று எல்லாம் எடுத்து பார்த்தார்கள். நானும் மருத்துவம் படித்துக் கொண்டிருந்ததால் எல்லா Test Report களையும் ஆவலுடன் வாங்கி பார்ப்பேன். ஏதாவுது ஒரு report இல் TUMOR(cancer) என்று வந்துவிடாதா என்ற ஏக்கம். அவ்வளவு உடல் வலியை தினமும் சுமந்து கொண்டு கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தேன். ஆனால் எல்லா ரிப்போர்ட்டும் clean ஆக வரும். ஒவ்வொருமுறை ரிப்போர்ட் normal ஆக வரும் போதும் மனம் உடைந்து விடுவேன். இன்னும் எவ்வளவு நாள் இதே உடலுடன் வலியுடன் போராடி வாழ்வது என்று புரியாமல்.

நண்பர்கள் மற்ற மாணவர்களின் கேலிக்கு பயந்து பக்கத்து மருத்துவக்கல்லூரிக்கு சென்று Psychiatrist ஐ பார்த்தேன். தூக்கத்தில் தான் பிரச்சனை, அதனால் தான் உடலின் அணைத்து சிக்கல்களும் என்ற கணிப்பு எனக்கு இருந்தது. ஆனால் அவர்கள்(Psychiatrist + Psychologist combo) எனது சிறுவயதை ஆராய முற்பட்டார்கள். சிறுவயதில் ஏற்பட்ட Traumatic incidents என் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்கள். Cognitive Behavioral Therpay ஐ தொடங்கினார்கள்.  முதலில் ஒரு வாரம் தூங்குவதற்கு தூக்கமாத்திரையை  பரிந்துரைத்தார்கள். பிறகு “காலையில் சீக்கிரம் எழுந்து  உடற்பயிற்சி செய், இரவில் ஒன்பது மணிக்கு தினமும் தூங்கச்செல்” போன்ற கட்டளைகளை இட்டார்கள்.

கல்லூரியின் நான்காம் வருடம் அது. ஒரு மாதத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் தூக்கம் கிடைக்கும்.  மீதி நாட்கள் கட்டிலுக்கும் எனக்கும் போர் நடக்கும். அனேகமாக நான் முழுவதுமாக தோற்று அடுத்த நாளை தொடர்வேன். தலைவலியும் முதுகுவலியும் மூச்சுவாங்குவதும் நெஞ்சுபடபடப்பும் ஜோராக இருக்கும். ஒரு Zombie அங்கும் இங்கும் நடப்பதை போல் கல்லூரிக்குள் சுற்றுவேன். இன்னும் நான் எப்படி உயிரோடிருக்கிறேன் என்ற வியப்பு. கல்லூரியின் இறுதி ஆண்டு ஆதலால் எனக்கு எல்லா மருந்துகளை பற்றியும் ஓரளவு தெரிந்துவிட்டது. ஆனால் என் பிரச்சனை தீர்ந்த பாடில்லை.வழக்கமாக பார்க்கும் உளவியலாளரிடம் எனக்கு “Melatonin” பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதெல்லாம் இன்னும் இந்தியாவுக்கு வரவே இல்லை, நீ எப்போதும் எடுத்துக்கொள்ளும் “Fluoxetine(Prozac)” e எடுத்துக் கொள் என்றார்.

மருத்துவக்கல்லூரி நூலகத்திலும் இணையத்திலும் தூக்கத்தை பற்றி என்னால் முடிந்த வரை ஆராய்ந்து கொண்டிருந்தேன். தூக்கத்தை பற்றிய மருத்துவ புத்தகங்களிலும் தூக்க மருத்துவம் சார்ந்த இணைய பக்கங்களிலும் சில தூக்கம் சார்ந்த நோய்கள்(Sleep apnea, Narcolepsy) பற்றி மட்டும் மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவை எதுவும் இல்லை என்று தெளிவாகவே தெரிந்தது.மேலும் மேலும் ஆராய்ச்சி செய்வதை தவிற வேறு வழி இல்லை.

எனது தூக்கத்திலும் உடலிலும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஏதாவுது accident ல் இறந்துவிட்டால் இந்த வலியெல்லாம் இத்துடன் முடிந்துவிடுமே என்ற எண்ணம் தோன்றும். தற்கொலையை பற்றி தினமும் எண்ணத்தொடங்கினேன். உடல்வலியையும் மூச்சுவாங்குவததையும் மார்பில் வேகமாக அறைந்து கொண்டிருக்கும் இதயத்தையும் மீறி நான் சிந்திப்பதே பெரும் பாடாக இருந்தது.

தினசரி மனப்போரட்டங்களுடனும் உடல்வலியுடனும் மருத்துவப்படிப்பை படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். சில மாதங்கள் சென்றன. Recent Sleep journals எல்லாவற்றையும் புரட்டி முடித்தேன். அப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்தன. வலியை தினமும் அனுபவித்துக்கொண்டும் பெற்றோர்களிடம் புலம்பிக்கொண்டும் இருந்தேன். ஆனால் மாதத்தில் சில நாட்கள் நல்ல தூக்கம் கிடைக்கும். அப்போது வலி சற்று குறைந்திருக்கும். அது மட்டும் எப்படி என்று புரியாமல் இருந்தது. நன்றாக தூக்கம் கிடைத்த நாட்களில் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் என்று குறித்துவைத்துக் கொண்டு அதை எல்லா நாட்களும் செய்வேன். ஆனால் பயன் இருக்காது. தூக்கம் இல்லாத நாட்கள் தொடர்ச்சியாக வரும். இன்னும் எவ்வளவு நாள் இப்படி, இன்னும் எவ்வளவு நாள்..என்னை கொன்றுவிடுங்கள் என்று சொல்லத் தோன்றும்.

வீட்டில் அனைவரும் ஒரே அறையில் தான் தூங்குவோம். அதாவுது மற்றவர்கள் தூங்குவார்கள். நான் ஏக்கத்தோடும் பொறாமையோடும் தூங்க முயற்சி செய்துகொண்டிருப்பேன். ஒரு நாள் வேறு அறைக்கு வந்து  தலைவலியுடனும் மற்ற உடல் வலிகளுடனும் இணையத்தில் வரிசையாக படங்கள் பார்த்துகொண்டே காலை வரை விழித்திருந்தேன். மணி ஆறாகிவிட்டிருந்தது. எனக்கு பயம் ஏற்பட்டது. இப்படியே தூங்க முயற்சி செய்யாமல் இனிமேல் இருந்துவிடுவோம். எவ்வளவு நாள் உடல் தாங்கும். அப்படியே இறந்து விட்டாலும் நிம்மதி. Laptop க்கு அருகில் சரிந்து இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருந்த எனக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. எந்திரித்த போது அறையில் வெளிச்சம் இருந்தது. நேரம் என்ன என்கிற குழப்பம். பக்கத்தில் laptop on ஆகியே இருந்தது. அதில் நேரம் பார்த்தேன். மதியம் இரண்டு மணி.

அறை கதவை திறந்து வெளியே வந்தேன். உடல் எப்போதையும் விட சற்று சுறுசுறுப்பாக இருப்பதை உணர்ந்தேன். பசி எடுத்துக்கொண்டிருந்தது. மதிய உணவை ருசித்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் அந்த அறைக்கு வந்தேன். அறைக் கதவை பூட்டிக்கொண்டு என்ன நடக்கிறது என்று பொறுமையாக ஆராய்ந்தேன். வெறும் தரையில் படுத்து எட்டு மணிநேரம் தூங்கியிருக்கிறேன். எனக்கு பசி எடுப்பது மிகவும் அபூர்வம். முதுகு வலி குறைந்திருந்தது. Stethescope ல் heart rate ஐ பார்த்தேன். என்பது தான் இருந்தது. ஆச்சரியம். எப்போதும் நூறுக்கு மேல் இருக்கும்( Normal 60 to 100).

மூளையில் அந்த எண்ணம் மின்னியது. உடனே இணையத்தில் “People who can sleep only at daytime” என்று அடித்து தேடினேன். முதல் பக்கமாக “DELAYED SLEEP PHASE DISORDER(DSPD)” என்கிற விக்கிபீடியா page வந்தது. உள்ளே நுழைந்து வாசிக்க ஆரம்பித்தேன். என் 23 வருட zombie வாழ்க்கைக்கு  விடை கிடைத்து விட்டது என்று தோன்றியது.  உலகத்தில் இந்த வகை மனிதர்களால் இரவு எவ்வளவு முயன்றாலும் தூங்க முடியாது. ஆனால் காலையில் இவர்களால் நிம்மதியாக எட்டு மணிநேரம் தூங்கமுடியும். Melatonin, light therapy போன்றவை சிலருக்கு உதவலாம். ஆனால் இவர்கள் ஆரோக்கியமாக இருக்க ஒரே வழி இவ்வாறு தினமும் காலையில் தூங்குவது தான். இல்லை என்றால் பல உடல் சார்ந்த சிக்கல்களையும் உளச்சிக்கல்களையும் அனுபவிக்க நேரும்.

நான் என்னிடம் இருந்த World Health Organisation “International Classification of Diseases(ICD)” booklet ஐ எடுத்து உண்மையிலேயே இப்படி ஒரு பிரிவு இருக்கிறதா என்று தேடினேன். Circadian Rhythm Disorders என்ற பிரிவின் கீழ் DSPD இருந்தது.

என் இவ்வளவு வருட போராட்டங்களுக்கு உண்மையிலயே விடை கிடைத்து விட்டது  என்று  நம்பினேன். ஆனால் அடுத்த சிக்கல் ஓரிரு நாட்களிலேயே வந்தது. காலை ஆறுமணிக்கு தனியறையில் படுக்கை விரித்து படுத்து தூக்கத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எட்டு மணி, ஒன்பது மணி, பத்து மணி என்று தூக்கம் வரும் நேரம் ஒவ்வொரு நாளும் தள்ளி சென்று கொண்டிருந்தது. சுதாரித்துக்கொண்டேன். மேலும் DSPD பற்றி ஆராய்ச்சி செய்த போது “Non 24” என்கிற பெயர் திரும்ப திரும்ப அடிபட்டது.

Non 24 Sleep wake disorder/Free running disorder/ hypernychthemeral syndrome பற்றி வாசிக்க வாசிக்க எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. இந்த மனிதர்கள் தூங்கும் நேரம் தினமும் சராசரியாக ஒரு மணிநேரம் தள்ளிப்போகும். இந்த Rare disorder எனக்கு விதிக்கப்படிருக்கிறது. மூளையில்  தூக்கத்தை கட்டுபடுத்தும் கடிகாரப் பகுதி (circadian rhythm – supra chiasmatic nucleus)  எனக்கு பிறப்பிலிருந்தே இவ்வாறாக உருவாகிவிட்டிருக்கிறது.

இன்னொரு தகவல் Autism உள்ள குடும்பங்களில் இந்த Non 24 அதிகமாகக் காணப்படுகிறது.

பின் தினமும் ஒரு மணிநேரம் தள்ளி தூங்கினேன். காலை, மதியம், மாலை, இரவு என்று மாறி மாறி தூங்க ஆரம்பித்தேன். மூளையின் circadian சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. அருமையான எட்டு மணிநேர தூக்கம். உடல் மீண்டது. வலி எதுவும் இல்லாமல் ஆகியது. ஆச்சர்யமாக தினமும் பசி எடுத்தது. உடல் எடை கூடி பார்ப்பதற்கு மனிதன் போல் மெல்ல மெல்ல ஆகினேன்.ஐம்பது கிலோ இருந்த நான் எழுபது கிலோவுக்கு முன்னேறினேன்.முகம் பொலிவு பெற்றது. ஆனால் பிரச்சனை என்னவென்று சொல்லதேவையில்லை. இதை வைத்துக் கொண்டு எப்படி வேலைக்கு செல்வது.

Melatonin, Ramelteon, Tasimelteon என்று அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன். Light therapy ஐயும் முயற்சி செய்து பார்த்தேன். எந்த மருந்தாலும் சரி செய்துகொள்ள கூடிய நிலை அல்ல இது.

ஆனாலும் தினமும் எட்டு மணி நேரம் தூக்கம் கிடைத்தது. அதுவும் ஆச்சரியமாக தொடர்ந்து பல நாட்கள் இப்படி தூங்கினேன். இன்று மதியம் பன்னிரண்டு மணிக்கு தூக்கம் வந்தால் நாளை மதியம் ஒரு மணிக்கு தூக்கம் வரும். அடுத்த நாள் மதியம் இரண்டு, மூன்று, நான்கு என்று ஒவ்வொருநாளும் முன் சென்று கொண்டிருக்கும் தூங்கும் நேரம். இந்த நோயின் விசித்திரம் என்னவென்றால் நான் தூங்கும் நேரத்தை தவற விட்டுவிட்டால் அடுத்த நாள் எனது நேரம் வரும் வரை காத்திருக்கவேண்டும். அதற்க்கு இடையில் எவ்வளவு முயன்றாலும் தூங்க முடியாது. ஒரு எடுத்துக்காட்டுக்கு இன்று நான் தூங்க வேண்டிய நேரம் காலை ஆறிலிருந்து மதியம் இரண்டு வரை என வைத்துக்கொள்வோம். ஆனால் எனக்கு காலையில் வேறு ஏதோ வேலை வந்துவிடுகிறது. தூங்கும் நேரத்தை தவற விட்டு விடுகிறேன் என்றால் அடுத்த நாள் காலை ஏழு மணி வரை காத்திருக்க வேண்டும் தூக்கத்திற்காக. அதற்கு நடுவில் தலைவலி, முதுகுவலி, மூச்சுவாங்குதல் போன்றவை என் உடலில் ஏறிக்கொள்ளும்.

பெற்றோர்களும் நண்பர்களும் “இப்படி ஒரு நோய் உண்மையில் இல்லை. நான் பொய் சொல்கிறேன். நான் ஒரு சோம்பேறி” என்று நினைத்தார்கள். Non 24 பற்றிய அணைத்து மருத்துவக்கட்டுரைகளையும் ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் எடுத்துக்கொண்டு அப்பாவை அழைத்துக்கொண்டு உளவியலாளரிடம் சென்றேன். அவர் என் கண்களை சந்திக்க விரும்பாதவராக “திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மருத்துவக்கல்லூரி” அல்லது “NIMHANS” க்கு செல்லுமாறு கூறி துரத்தினார். அவர் இதற்க்கு முன் DPSD மற்றும் Non 24  போன்ற வார்த்தைகளை கேட்டதே இல்லை போல. அப்பா சித்திரை திருநாளுக்கு அழைத்து சென்றார். அங்கு நடக்கப்போவதை நான் முன்பே கணித்துவிட்டேன். Neurology department ல் முழு Medical History எடுத்துவிட்டு அவர்கள் செய்த செயல் நான் முன்பே கணித்தது தான். ஒரு Neurology Intern என் கண் முன்னே மொபைலின் Neurology book pdf ல் “Non 24 sleep wake disorder” என்று சொடுக்கி தேடினார்.  இரண்டு paragraph அளவு மட்டுமே அவர் புத்தகத்தில் Non 24 பற்றி இருந்தது. மேலும் கூகுளில் சென்று “Non 24” என்று சொடுக்க முற்பட்டார். நான் என் கையில் இருந்த World Health Organisation ICD யின்  Non 24 பற்றிய கட்டுரையை அவருக்கு கொடுத்தேன். அவர் என் கண்களை சந்திக்காதவராக “These kind of rare disorders……” என்று வார்த்தையை முழுங்கினார். Neurology department இன் HOD எனது மெடிக்கல் ஹிஸ்டரியை திரும்ப முதலிலிருந்து கேட்டுவிட்டு சிரித்துக்கொண்டே “நான் DSPD பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் Non 24 பற்றி எனக்கு தெரியாது” என்று கூறிவிட்டு diagnosis sheet ல் “Free running disorder. The patient has researched his condition and aware of its guarded prognosis. He can consult NIMHANS or AIIMS for further consultation” என்று எழுதினார்(Free running disorder என்பதை மருத்துவ உலகம் Non 24 sleep wake disorder என மாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டது).

நான் Tasimelteon பற்றி கேட்டேன்(இதுவரை non 24 நோய்க்கு என்றே கண்டுபிடிக்கப் பட்ட ஒரே மருந்து- Orphan drug- FDA வால் 2014 ல் இருந்தே அனுமதிக்கப்பட்டிருந்தது). அவர் அந்த மருந்தின் பெயரை இது வரை கேட்டதே இல்லையாம். நிம்ஹான்ஸிலும் இதே தான் நடக்க போகிறது என்று எனக்கும் அப்பாவுக்கும் புரிந்துவிட்டது. எனக்கு இந்த Psychiatry Neurology படித்தவர்கள் மேல் தாங்க முடியாத கோபம் வந்தது. தூக்கமில்லை என்று வரும் அனைவரிடமும்  “Insomnia”, “Sleep apnea” என்று தாங்கள் அறிந்த சில நோய்களை மட்டுமே தேடுகிறார்கள். சம்பளத்திற்க்காக மட்டும் நுனிப்புல் மேய்கிறார்கள்.

இணையத்தின் உதவியோடு Harvard ல் biochemistry படித்துவிட்டு Circadian rhythm மற்றும் Non 24 பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் James fadden என்பவரை தொடர்பு கொண்டேன். அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இந்த நோய்க்கு “disability benefit” தரப்படுகிறது என்றார். Tasimelteon எல்லாம் பெரிதாக யாருக்கும் உதவவில்லை என்றார். International Sleep Conferences க்கு வரும் இந்திய தூக்கமருத்துவ நிபுணர்களின் மந்த நிலையை சொல்லி சலித்துக்கொண்டார். Online support group ஒன்றில் சேர்த்துவிட்டார். உலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்த நோயோடு போராடும் மனிதர்களிடம் பேசினேன். அனைவரும் வாழ்கையை முழுவதுமாக இழந்தவர்கள். சிலர் பிசினஸ் செய்கிறார்கள். வேலைக்கு சென்றவர்கள் அனைவரும் வேலை செய்ய முடியாமல் இப்போது வீட்டில் இருக்கிறார்கள். இந்த நோயோடு போராடி 9 to 5 வேலைக்கு இன்னும் சென்றுகொண்டிருப்பவர்களின் நிலை மிகவும் பரிதாபம். தினமும் மண்ணிலே நரகத்தை அனுபவிக்கிறார்கள். பெற்றோரிடமும் நண்பர்களிடமும் இந்த நோயை விளக்க முயன்று தோற்று  “சோம்பேறி”, “சுயநலவாதி” என்று பெயர்கள் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனிமை மட்டுமே இவர்கள் வாழ்க்கையை முழுவதுமாக ஆக்கிரமித்திருக்கிறது.

நான் எதையும் பற்றி யோசிக்காமல் தினமும் என் உடல் கடிகாரம் சொல்லும் நேரத்தில் தூங்க ஆரம்பித்தேன். தூங்கி எழுந்த பிறகு இதுநாள் வரை இல்லாத பெரும் விழிப்போடு இருந்தேன். அப்படி ஒரு நாள் காலையில் தூங்கிவிட்டு இரவில் விழித்திருக்கையில் இணையத்தில் உங்கள் தளத்தை வாசிக்க ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை உங்கள் தளத்தை வாசித்துக்கொண்டிருக்கிறேன். 23 வயது வரை எனக்கு இலக்கியம் என்று ஒன்றிருப்பதே தெரியாது. முதலில் அறம்,காடு,ஏழாம் உலகம், கன்னியாகுமரி, கட்டுரைத் தொகுதிகள், குறுநாவல்கள் என்று வாசித்தேன்.

என் உறவுகள், நண்பர்களை ஒவ்வொருவராக இழந்து வந்தேன். நான் சுற்றிக் கொண்டிருக்கும் துயில் சக்கரத்தில் யாரும் என்னுடன் இணைய முடியாத நிலை உண்டாகியது. ஆனால் எனக்கு கிடைத்த தனிமையையும் சுதந்திரத்தையும் கொண்டாடிக்கொண்டிருந்தேன்.  உங்கள் எழுத்தும் இலக்கியங்களும் அக்கொண்டாட்டங்களில் பெரும்பங்காற்றின. ஒரு கட்டத்தில் தூங்கி எழுந்தவுடன் உங்கள் நினைவு தான். தூங்குவதற்கு முன்னும் உங்கள் எழுத்தின் நினைவு தான். இப்போதும் அப்படித் தான் இருக்கிறது. இதுவரை செல்ல விரும்பி செல்லாத இடங்களுக்கு எல்லாம் தனியாக சென்று வந்தேன். கடற்கரைகளில், முட்காடுகளில் நேரத்தை செலவிட்டேன்.  இதுநாள் வரை எனது சிந்தனை முழுவதும் தற்கொலை என்றிருந்த நிலை மாறி வாழ ஆசை ஏற்ப்பட்டது.ஆனால் நாட்கள் செல்ல செல்ல தனிமை கசக்கத்  தொடங்கியது.

“இரவு” நாவலை தற்செயலாகத் தான் வாங்கினேன். வாசிக்க தொடங்கிய போது எனக்கு ஆச்சரியம். நீங்கள் கற்பனையால் தான் இந்த படைப்பை எழுதியிருக்கிறீர்கள்  என்று மனதின் ஒரு பகுதி சொல்லும். ஆனால் இக்கதை உண்மையாக இருக்க கூடாதா? இது போன்றும் இரவில் வாழும் மனிதர்கள் உண்மையிலேயே இருக்கக் கூடாதா ? என்று மனதின் இன்னொரு பகுதி வேண்டிக்கொள்ளும். தனிமையின் பாதாளத்திற்குள் நீந்திக் கொண்டிருந்தேன். இரவில் மட்டும் வாழும் அல்லது இரவில் விழித்திருக்கும் நண்பன் ஒருவனாவுது கிடைத்து விடமாட்டானா என்று மனம் தினமும் ஏங்கிக் கொண்டிருந்தது. இப்போதும் ஏங்கிக்கொண்டிருக்கிறது.

ஒரு ஹாஸ்பிடலில் “night duty” டாக்டராக வேலைக்கு சேர்ந்தேன். ஆனால் தூங்காமல் இருந்தால் எனது உடலில் ஏறிக்கொள்ளும் வலி பூதங்கள் என்னை மீண்டும் தற்கொலைக்கு தள்ளின. இரண்டு மாதத்திற்கு பிறகு வேலையை விட்டுவிட்டேன்.  இப்போது மாதகணக்கில் முழு தனிமையில் இருக்கிறேன். அவ்வப்போது support group ல் பேசுவேன். அது சாவு வீடு போல் இருக்கிறது. எல்லாரும் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறார்கள். வேலைக்கு செல்லாமல் பணம் சம்பாதிக்காமல் வீட்டிலயே இருக்கிறேன். இருபத்தி ஐந்து வயதான பிறகும் உணவிற்கு அடுத்தவர்களை நம்பியிருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி ஒவ்வொரு நாளும் என்னை கொன்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே autism உள்ள தம்பி இருக்கிறான். அவனுக்காக அப்பாவும் அம்மாவும் படாதபாடு பட்டுவிட்டார்கள். இப்போது என் நிலைமையும் இப்படி ஆகிவிட்டதால் நானும் அவர்களுக்கு சுமையாய் இருக்கிறேன் என்று தினமும் தோன்றுகிறது.

என் பெரியப்பாவிற்கும் இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று முன்பே கணித்து வைத்திருந்தேன். அவரது சோர்வுற்ற முகமும் கண்களும், சதை கொழுப்பு எதுவும் இல்லாத உடலும் எனக்கு இச்சந்தேகத்தை அளித்தது. ஒரு கல்யாணத்தில் அவரை பார்த்த போது மிகவும் சிரத்தை எடுத்து பிராணயாமா செய்து கொண்டிருந்தார். ஏன் இதை தினமும் செய்கிறீர்கள் என்று கேட்டேன். உடலுக்கு நல்லது மனதுக்கு நல்லது என்று அடுக்கிக்கொண்டிருந்தார். அவரை நிறுத்தி “இதை செய்த பிறகு தூக்கம் நன்றாக வருகிறதா?” என்று கேட்டேன். நான் தூக்கத்தை பற்றி கேட்டதை அவர் எதிர்பார்க்கவில்லை. எழுந்து வந்து என்னருகில் அமர்ந்தார். சுற்றி வேறு யாராவுது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு “இருபது வருஷமா நைட் தூக்கம் ரொம்ப கம்மி பா. எப்பையாவுது தான் தூங்குவேன் …..” என்று ஆரம்பித்தவர் இருபது வருடங்களுக்கு மேலாக அவர் அனுபவித்து வரும் நரகத்தை பற்றி முழுவதும் சொல்ல மிகவும் சிரமப்படுவதை புரிந்து கொள்ள முடிந்தது. பல மருத்துவர்களிடம் சென்றிருக்கிறார். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் என்று ஒன்று விடாமல் அலைந்திருக்கிறார். கடைசியில் உளவியலாளர் Psychiartic problem என்று முத்திரை குத்தியிருக்கிறார். அவரும் ஏற்று கொண்டு இவ்வளவு வருடம் வாழ்ந்துவிட்டார். DSPD, Non 24 பற்றி கூறினேன். ஆழ்ந்த அமைதிக்கு பிறகு இதோட எப்படி வேலைக்கு போவது என்று கேட்டார். பின் விலகி சென்று விட்டார். அடுத்த நாள் கல்யாண வீட்டின் நடுவில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் தரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார். இருபது வருடத்திற்கும் மேலான வாழ்க்கையை மறுமதிப்பீடு செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

கல்யாணத்தை பற்றியெல்லாம் நான் யோசிக்கவே கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரத்தில் தூங்கும் இந்த நோயை பற்றி எந்த பெண்ணிடம் கூறுவது. டார்த்தீனியம் போன்றொரு வலையில் சிக்கிக்கொண்டு விட்டேன் என்று தோன்றுகிறது. என்னையும் என் குடும்பத்தையும் சேர்த்து அழித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது டார்த்தீனியம்  இல்லை. எனது உடலே எனக்கு எதிரி ஆகிவிட்ட நிலை. நீங்கள் “நோய்” பற்றி முன் ஒரு வாசகருக்கு எழுதிய கடிதம் எனக்கு பைபிள். “சிலுவையின் பெயரால்” வாசித்த போது என்னாலும் கிறிஸ்துவை மிக அருகில் உணர்ந்துகொள்ள முடிந்தது. அதை விட மேலும் நெருக்கமாக அல்போன்ஸம்மாவை உணர்ந்து கொள்ள முடிந்தது.

சலிப்பூட்டும் நேர்வாழ்க்கை நுண்ணுணர்வு கொண்டவனுக்கு போதாது. அவன் கற்பனையில் விரும்பிய வாழ்க்கை அனைத்தையும் வாழ முற்படுவான். படைப்பூக்கமே அவனுக்கு நிறைவை அளிக்கும் என்று உங்கள் எழுத்து உணர்த்தியிருக்கிறது. என் வாழ்கையையில் நான் இதுவரை அடைந்த உச்சங்கள் அனைத்தும் கற்பனையிலும் படைப்பூக்கத்திலும் தான் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் இப்போது மீண்டும் அனைவராலும் கைவிடப்பட்ட தனிமையை உணர்கிறேன். ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இப்படி ஒரு வாழ்க்கையை வாழத் தான் வேண்டுமா என்று தோன்றுகிறது.

எழுத எழுத கடிதம் நீண்டுகொண்டே போகிறது. சொல்ல வேண்டும் என எண்ணியதில் சிறிதளவு தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். செறிவாக எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் துக்கமும் தனிமையும் நெஞ்சை அடைக்கிறது . சீக்கிரம் இதை பகிர்ந்து கொண்டு விடுவோம் என்று வேகமாக எழுதிவிட்டேன்.

இப்படிக்கு,

காலையில் துயில்பவன்.

***

அன்புள்ள நண்பருக்கு

சிலகாலம் முன்னர் நண்பர் மாதவன் இளங்கோ டின்னிடஸ் என்னும் நோய் பற்றி எழுதியிருந்தார். விசித்திரமாக இருந்தது. ஆனால் அதன்பின் ஒன்று தெரிந்தது, வாசகர்களில் ஒருசிறு சாராருக்கு உண்மையில் அந்நோய் இருந்தது. அது என்ன நோய் எனத்தெரியவில்லை. அதைவைத்துக்கொண்டு என்ன செய்வது எனத்தெரியவில்லை. அந்தக்கட்டுரை மிக உதவியாக இருந்தது, அதைக்கொண்டே தன்னை அடையாளம் காணமுடிந்தது என சிலர் சொன்னார்கள். இக்கடிதத்தையும் அப்படியே உணர்கிறேன்

இதில் கவனத்திற்குரிய ஒன்று உண்டு. இத்தகைய சிக்கல்கள் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கூர்மையான மனம் கொண்டவர்கள். ஆகவேதான் இலக்கியவாசிப்புக்குள் வருகிறார்கள். அவர்களே இதை எழுதுகிறார்கள். சற்று கூர் மழுங்கியவர்களுக்கு இத்தகைய சிக்கல்கள் இல்லையா? அல்லது அவர்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா? உங்கள் பெரியப்பாவைப்பொல?

உங்கள் பிரச்சினையில் ஆறுதலான விஷயங்கள் சில உள்ளன.

ஒன்று, உங்களுக்கு உங்கள் பிரச்சினை என்னவென்று தெரிந்திருக்கிறது. உங்களை நீங்களே ஆய்வுசெய்து அதைக் கண்டடைய முடிந்திருக்கிறது. என்ன பிரச்சினை என்றே தெரியாத சிக்கல்கள் கொண்டவர்களே இங்கே மிகுதி. அதன் தவிப்பு மிகப்பெரிய துன்பம். அது உங்களுக்கு இல்லை. இதன் விளைவுகள் என்ன இனிமேல் என்ன ஆகும் எல்லாமே தெளிவாகியிருக்கின்றன. மிகப்பெரிய நல்லூழ் இது. இனி இதைப்பற்றி எண்ணிப் பதறவேண்டியதில்லை. விதவிதமாக கற்பனைசெய்து கவலைகொள்ளவேண்டியதுமில்லை. இதுவே மிகச்சிறந்த விஷயம் அல்லவா?

இரண்டு, உங்கள் படிப்பு. வேறெந்த படிப்பும் ஏதேனும் நிறுவனத்தைச் சார்ந்தே செயல்பட்டாகவேண்டிய நிலையில் உள்ளது. உங்கள் படிப்பு அப்படி அல்ல. நீங்கள் சுயமாகவே தொழில் செய்ய முடியும். ஆரம்பத்தில் உங்களுக்குப் பெரிய வெற்றி இல்லாமலிருக்கலாம். ஆனால் சீராக முயன்றால் ஒரு வருமானமுள்ளதொழிலைச் செய்யமுடியும்.மருத்துவப் படிப்பை முடித்திருக்கிறீர்கள். ஒரு சுதந்திர மருத்துவராகச் சிறிய அளவில் தொழில்செய்யலாம். அதன் நேரத்தை நீங்களே வகுத்துக்கொள்ளலாம். உங்களால் முடிந்தபோது மருத்துவம் செய்யலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் விந்தையாக இருக்கும். ஆனால் நீங்கள் கூர்ந்துநோக்கி மருத்துவம்செய்தால் எந்தச்சிக்கலும் இல்லை. சிலசமயம் அதை ஒரு சாதக அம்சமாகவேகூட எடுத்துக்கொள்வார்கள். டாக்டர்களின் சில்லறைக் கிறுக்குத்தனங்கள் மக்களுக்குப் பிடிக்கும் சிறிய அளவில் சுயமாகச் சிகிச்சை நிலையத்தைத் தொடங்குக. அப்பாவிடம் அதைப்பற்றிப் பேசுங்கள்.

மூன்று, நீங்கள் ஒரு தனியுலகை உருவாக்கிக் கொள்ளும் ரசனையும் அறிவுத்திறனும் கொண்டிருக்கிறீர்கள். உங்களால் வாசிக்கமுடியும். எழுதமுடியும். இலக்கியம் துணையிருக்கும். ஒரு இரண்டாவது உலகை, ரசனையின் உலகை உருவாக்கிக்கொள்ளுங்கள். அது ஒரு மீட்பு. ஓர் இளைப்பாறல் பகுதி .உங்கள் மொழிநடை சிறப்பாக உள்ளது. உங்களால் முக்கியமான படைப்ப்புகளை எழுதமுடியும். கூர்ந்த கவனிப்பும் உடன் இணையும் மொழியும் பெரிய இறைக்கொடை. அதை வீணடிக்கவேண்டாம். அது உங்களுக்கு ஓர் நோக்கத்துடனேயே அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் தனிப்பட்ட சாதனைகள் அதில் அமையலாம்.  பின்னாளில் திரும்பிநோக்க அது உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது என்று அறிவீர்கள்

இந்தச் சிக்கல்கூட ஒரு தனித்துவம்தானோ என்னவோ? அது உங்களுக்கு பிறர் உணரவியலாத ஓர் உலகுக்குச் செல்ல வழிகாட்டுகிறதோ என்னவோ? இதுவே உங்களுக்கு சிந்தனையில் – இலக்கியத்தில் தனியான உலகை, தனிநோக்கை உருவாக்கி அளிக்கலாம்.

நீங்கள் கற்பனைசெய்வதுபோல பெரிய பிரச்சினை ஒன்றுமில்லை என்றே எனக்குப் படுகிறது. புறவுலகை ஒழுங்குபடுத்திக்கொண்டால்போதும். சிறிய அளவில் சில உலகியல்சிக்கல்கள் மட்டுமே இருக்கும். திருமணம் செய்துகொள்வதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. இதைச் சொல்லியேகூட திருமணம் செய்துகொள்ளலாம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத பெண்ணாக இருந்தால்போதும்

வாழ்த்துக்கள்

ஜெ

***

டின்னிடஸ் – கடிதங்கள் 2
டின்னிடஸ் -கடிதங்கள்
மாதவன் இளங்கோ பக்கம்
முந்தைய கட்டுரைகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14