«

»


Print this Post

யூத்து -கடிதம்


யூத்து’

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு

 

உங்களது யூத்து பற்றிய கட்டுரைக்கும் அதற்க்கு பதிலாக வந்த சில கடிதங்களையும் படித்தேன். எனது கருத்துக்கள். (நாம் இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள்).

 

ஒவ்வொரு தலைமுறையினரும் அதற்கடுத்த தலைமுறையினர் வெட்டி என நினைக்கிறார்கள்.  எனது பெரியப்பா (நான் மிகவும் நேசித்த, மரியாதை வைத்திருந்த மனிதர் – தங்கமான குணமுடையவர்). 1980களில், நான் தலைமுடி அதிகமாக வைத்திருந்த ஒரே காரணத்திற்க்காக நான் உருப்பட போவதில்லை என்று நினைத்தவர். அதை பலமுறை எல்லோரிடமும் கூறியுள்ளார். இந்த ஐம்பதுகளில் தொடங்கி மனிதர்களுக்கு பொதுவாக ஒரு cynicism வந்துவிடுகிறது.

 

நீங்கள் சொன்ன பல கூற்றுகளை நான் அப்படியே ஒப்புக்கொள்கிறேன். சத்தமான music, மோசமான civic சென்ஸ் etc. ஆனால் எத்தனை பேர்கள் அப்படி இருக்கிறார்கள். ஒரு சிலர்? அனேகமாக எல்லோரும்? இதே யூத் மக்களில் பலர், வார விடுமுறையில் மலையேறுகிறார்கள். சைக்கிள் ஓட்டுகிறார்கள். பறவைகளை காணச் செல்கிறார்கள். மாரத்தான் ஓட்டத்திற்க்கு  பயிற்சி எடுக்கிறார்கள். என் சகோதரன் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் பணி புரிகிறான். அவனுடன் பணிபுரியும் ஆயிரக்கணக்கான சக ஊழியர்கள் (யூத்) ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கார்பொரேஷன் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு beer குடிக்கிறார்களா என்பது தேவையற்ற விவாதம்.

 

இரண்டு விஷயங்களில் எனக்கு இன்றயை இளைய தலைமுறையினரோடு கருத்து வேற்றுமை இருக்கிறது. பொதுவாக யாருக்கும் அரசியலில் நாட்டமோ அக்கறையோ இருப்பதில்லை. நாட்டு நடப்பும் தெரிவதில்லை. ஒரு வேளை மோடியை பற்றி தெரிந்திருக்காது. Trump, May மற்றும் Angela Merkal பற்றி தெரிந்திருக்கலாம் – வெளிநாட்டில் குடியேறி பணிசெய்யும் ஆசையினால். ஆனால் சரித்திர அறிவு பூஜ்ஜியம். என்னுடன் பணிபுரியும் இருபது பேரிடம் (20 – 22 வயதினர்) வீர பாண்டிய கட்டபொம்மன் பற்றி ஐந்து வாக்கியங்கள் கூறும்படி சொன்னேன். ஒருத்தருக்கும் தெரியவில்லை – இத்தனைக்கும், எல்லோரும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ் மீடியத்தில் பயின்றவர்கள். சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியே தெரியாவார்கள் இருப்பார்களா என்று எனக்கு கோபம் வருகிறது.

 

அடுத்தது யாருக்கும் அவர்களது தாய்மொழியின் சிறந்த இலக்கியங்களைப் பற்றி ஒன்றும் தெரிவதில்லை. நான் முதலில் எழுத ஆரம்பித்ததே, சிறந்த தமிழாசிரியர்களின் சில சிறுகதைகளை ஆங்கிலிலத்தில் மொழிபெயர்த்ததுதான், எனது குடும்பத்தினருக்காக.

 

அப்புறம் நமது இசை. அது கர்நாடக சங்கீதமாக இருக்கட்டும் அல்லது இந்துஸ்தானி இசையாக இருக்கட்டும். யூத்து அதைக் கேட்பதில்லை. அவர்கள் கேட்பது Hindi சினிமா பாட்டுக்கள் மற்றும் மேற்க்கத்திய இரைச்சல் மட்டும்  தான்

 

அதற்க்காக, யூத் அனைவரும் வேஸ்ட் என்பது, என் பெரியப்பா நினைத்தது போல் ஒரு தவறான கருத்தாகி விடும்.

 

https://kaveripak.com

 

 

 

ரமேஷ்
https://www.kaveripak.com

 

 

அன்புள்ள ரமேஷ்

 

இந்த இணையதளத்தின் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் மிகமிக இளைய தலைமுறையினர். பலர் மாணவர்கள். அவர்கள் எவருமே வழக்கமான யூத்துகள் அல்ல. அவர்கள் வாசிப்பவர்கள், பயணம்செய்பவர்கள், பெரிய கனவுகளைக் கொண்டவர்கள், மாற்றுவாழ்க்கைகளைத் தெரிவுசெய்பவர்கள். அதை இந்தத்தளத்தை பொதுவாக வாசிப்பவர் புரிந்துகொள்ளமுடியும்.

 

நான் விமர்சிப்பது யூத்து என்னும் அந்த கருத்தை. அறிவுத்திறன், நுண்ணுணர்வு, கனவுகள் ஏதுமில்லாமல் மொண்ணையாக உலகியல்வெறியுடன் இருப்பதை இளைஞர்களுக்குரிய இயல்பான பண்பாக வரையறைசெய்யும் உளநிலையை மட்டுமே

 

ஜெ

யூத்து- கடிதம்

யூத்து- இரு கடிதங்கள்

யூத்து-சிரிப்பு-கடிதங்கள்

யூத்து-கடிதங்கள்

 

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/120925