டமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா

நாள் ஏப்ரல் 14,  2019 

இடம் சிவராம் நகர் கோவை

கோவை ராக் அமைப்பு மற்றும் குக்கூ

தொடர்புக்கு 9842213012

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்திய தீபகற்பத்தின் நிலப்பரப்பு எங்கும் நடந்தே அலைந்துதிரிந்து, நிலமற்ற ஏழையெளிய மக்களுக்கு நிலம் பெற்றுத்தருவதற்காக தன்னுடைய வாழ்வுமுழுமையையும் அர்ப்பணித்த வினோபாவுடன் தனது கைக்குழந்தையை ஏந்திக்கொண்டு உடன்பயணித்த கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு நோபல் பரிசுக்கு இணையான விருதான ‘மாற்று நோபல்பரிசு’ வழங்கப்பட்டது. அந்த பரிசுவழங்கும் நிகழ்வில் வைத்து அம்மாவிடம் சில கேள்விகள் கேட்டார்கள், “ உங்களுக்கு வயது தொண்ணூறைக் கடந்துவிட்டது. இவ்வளவு வயதிலும் எப்படி உங்களால் மனம் தளராமல் நம்பிக்கையாகப் பயணிக்க முடிகிறது? எண்ணத்தை எப்படி இவ்வளவு வலுவாகப் பற்றிக்கொள்கிறீர்கள்? இப்பவரை எவ்வளவோ மக்களின் நிராகரிப்பும், நீங்கள் நிலம் பெற்றுத்தந்த மக்களே உங்களுக்கு எதிராக மாறிப்போகும் சூழலிலும், இக்கணம்வரை நீங்கள் கொண்டிருக்கும் அறத்தின் மீது எப்படி நம்பிக்கை நீங்காதிருக்கிறது? இதற்கான ஊற்றுக்கண் எது? இதனுள் பொதிந்திருக்கும் ரகசியம் என்ன?” என்று.

அதற்கு கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், “இதுவரைக்கும் அந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொன்னதில்லை. ஆனால், அதை இப்பொழுது சொல்ல நினைக்கிறேன். வேறெதுவுமில்லை, என்னுடைய சிறுவயதில் என் தந்தை விடியற்காலை மூன்றுமணிக்கே எழுந்துவிடுவார். இருள்விலகாத அந்த அதிகாலையில் ஏதோவொரு வானத்து திசையில் தெரியும் விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பார்த்து ‘அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை’ எனச்சொல்லி பிரார்த்திப்பார். வள்ளலாரின் அந்த அகவற்பாவை கண்ணீரோடு முனுமுனுத்துக் கொண்டிருப்பார். கருணையின் ஒட்டுமொத்தமாக திரண்டு நிற்கும் இந்தப் பிரபஞ்சத்திடம் தன்னை ஒப்படைத்து அழுது கண்ணீர் கசிகிற அந்தக் குரல்தான், இப்பவரை வாழ்வின் நம்பிக்கையாக எனக்குள் ஒலிக்கிறது” என்றார்.

அத்தந்தை சுமந்திருந்த குரலினுடைய ஜீவ நம்பிக்கையாகத்தான் ஜான்சுந்தர் அண்ணனின் தவிப்பையும் கனவையும் நாங்கள் அனைவருமே மனமுணர்கிறோம். அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு திக்குவாய்க் குழந்தை, எல்லோரும் சேர்ந்து பாடுகிற ஒருமித்த சேர்ந்திசையில் தன்னுடைய குரலையும் இணைத்துக்கொள்வதைப் போலதான்… இந்த டமருகம் இசைப்பள்ளி மற்றும் கற்றல் மையம் திறவுகொள்கிறது. குழந்தைகள், இசையின் கருணையை அகமறிகிற பயிற்சிவெளியாக இதன் செயல்பாடுகள் அமையப்போகிறது. தொடர்ச்சியாக குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான சந்திப்புகள் வெவ்வேறு வடிவங்களில் மாதம் இரண்டுமுறை நடக்கவிருக்கிறது.

மரங்களைப் பெத்தெடுக்கிற முதுமரமான திம்மக்காள் பாட்டியின் கனிவுக்கரங்களால் டமருகம் இசைப்பள்ளி திறப்படைய இருக்கிறது. வித்துகளை முளைப்பிக்கும் அத்தாயுள்ளத்தின் அருகாமையையும் அகச்சொல்லும் இத்துவக்கத்தை ஒளியேற்றி வெளிச்சப்படுத்தும் என நம்புகிறோம்.

இதே நற்துவக்க நிகழ்வோடு இணைந்து… குக்கூ குழந்தைகள் வெளியின் ‘முகம்’ விருதும் அளிக்கப்படவிருக்கிறது. எளிமையோடு தன் வாழ்வை கரைத்துக்கொண்டு, செயல்களின் வழியாக சமூகத்தின் சாட்சியாக மாறிப்போன அறமனிதர்களுக்கு முகம் விருதினை வழங்கிவருகிறோம் இதுவரையில். வி.பி.குணசேகரன், சுபீத், மரம்தாத்தா நாகராஜன்  மற்றும் உங்களுக்கும் … இத்தகைய சாட்சிவரிசையின் நீட்சியாக காதுகேளாதோர் பள்ளிக்கூடப் பிள்ளைகளின் தாயுமானவர் முருகசாமி அய்யாவுக்கு முகம் விருதினை வழங்குகிறோம் இம்முறை.

காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத குழந்தைகளின் வாழ்வுமீட்சிக்காக தனது வாழ்வையே அழித்துக்கொண்டு, இன்று… சில எதிர்மறையான மனிதர்களின் கீழ்மையான, பொய்தோய்ந்த குற்றச்சாட்டுகளால் நிலைமாறி நின்றாலும், இக்கணம்வரை அவர்கொண்ட கொள்கையிலிருந்தும் நம்பிக்கையிலிருந்தும் சிறிதும் பிறழவேயில்லை. அவ்வளவு வசவுகள்! அவ்வளவு நிராகரிப்புகள்! அவ்வளவு மறுதலிப்புகள்! எல்லாவற்றையும் தாண்டியும் தாங்கியும் அவர் அவராகவே இருக்கிறார்.

தரைமுதல் உச்சிக்கலசம் வரை தானேயுருவாக்கிய கோபுரத்திலிருந்து துளியும் தொடர்பற்று வெளியேற்றப்பட்டு தனித்து விலகி… ஏதோவொரு மூலையில் ஏதுமற்ற புள்ளியில் இன்று நின்றிருக்கிறார். ஆதரவற்ற புள்ளியில் அவரிருக்கும் அந்நிலையிலும்கூட அவர் வளர்த்தெடுத்த பத்துப்பதினைந்து காதுகேளாப் பிள்ளைகள் அவரோடு இணைந்து நிற்கிறார்கள். அவர்தந்த வாழ்வு அவருக்கானதாக ஆகுதலே அறம் என நீர்விழி கசியச் சொல்லிக்கொண்டு அவரையே சுற்றிச்சுற்றி வருகிறார்கள். தமிழகம் முழுவதிலுமிருந்து பிள்ளைகள் அவரைத்தேடி வந்து அடைக்கலம் அடைகிறார்கள். இரவு பகலாக அவருடனே தங்கி, உணவு உண்டு உரையாடுகிறார்கள். தன்னைப்போலவே வாழ்வுவாய்த்த காதுகேளா வாய்பேசா பிள்ளைகளுக்கான ஒரு பெருங்கனவின் மையமாக அவர் இன்னொரு செயல்சாத்தியத்தை நிகழ்த்தும் பணியில் தன்னை ஈடுபடுத்தி நகரத்துவங்கிவிட்டார்.

தன்னிடம் எஞ்சியிருக்கும் தன்னுடைய இருப்பைக்கூட தன்னை நம்பிய பிள்ளைகளுக்கான நம்பிக்கையாக மாற்றுகிற அந்தப் பெருந்தாய் மனதுபடைத்த அய்யா முருகசாமிக்கு இம்முகம் விருது திம்மக்காள் பாட்டியின் அறக்கரங்களால் அளிக்கப்படுகிறது. இது அவரைப் புனிதப்படுத்த அல்ல, இந்தச் சமூகம் அவரிடம் முன்வைக்கிற ஒரு மன்னிப்புக்கோரல் என்று நாங்கள் இதனை நினைத்துக்கொள்கிறோம்.

நிறைநெகிழ்வு நெஞ்சுறையும் கணமிது. ஆயிரம் பிரார்த்தனைகளின் பலித்தல்தான் இந்நிகழ்வு. இதனோடு இணைந்தே ‘பிளாஸ்டிக் காலம்’ சிறுநூலின் மறுபதிப்பு புத்தகவெளியீடும், கரமிணைந்த மனிதர்களை கெளரவித்தல், இசைப்பாடல், நாடகம் மற்றும் அனுபவப்பகிர்தல்களும் நிகழவிருக்கிறது. மாறுதலுக்கான வாசலாக நிலைகொள்ளப்போகும் இந்நிகழ்விற்கு அனைத்து உள்ளங்களையும் கரம்கூப்பி அழைக்கிறோம்.

இத்திறப்பினை சாத்தியப்படுத்திய கோவை ராக் அமைப்பு ரவீந்திரன் சார், சித்ரா அக்கா, மணியன் சார், அரவிந்த், மனோகர் தேவதாஸ், தியாகராஜன், பழனியப்பன், சுதா என எண்ணற்ற மனிதர்களின் கனவும் ஏராளமான உழைப்பும்தான் இன்று நிஜப்பட்டு நிற்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த இசைப்பள்ளி என்பது ஜான்சுந்தர் அண்ணாவின் பெரும் அகத்தவிப்புதான். தன்னுடைய மகள் ரோஜாவைக் குறித்த கவலையைக் காட்டிலும், அரசுப் பள்ளிக்கூடத்தில் படிக்கிற பிரியதர்ஷினி குறித்துதான் கவலை அதிகம் ஜான்சுந்தர் அண்ணாவுக்கு. எல்லா மழலைகளின் கவலைக்கும் செவிகொடுத்து, இசையால் அவர்களை அரவணைக்கும் மகத்துவத்தை இப்பள்ளிக்கூடம் செயலால் நிகழ்த்தும். இது எங்களது  ஜீவசத்தியம்.

ஸ்டாலின் கள்ளிப்பட்டி

முந்தைய கட்டுரைநாஞ்சில் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபாதி – தடைசெய்யப்பட்ட சிங்களச் சிறுகதை