சேர்ந்து முதிர்தல்

 

1991  மே மாதம் நான் ஊட்டிக்குச் சென்றிருந்தேன். அவ்வாண்டுதான் எனக்குத் திருமணமாகியிருந்தது. அருண்மொழி பட்டுக்கோட்டைக்குச் சென்றிருந்தாள். இன்றும் தொடரும் ஒரு நட்புவட்டத்தினரை ஒரே கொத்தாகச் சந்தித்த நாள் அது. தமிழகச் சூழியல் இயக்கத்தின் முன்னோடியும் காந்தியவாதியுமான ஈரோடு டாக்டர் வி. ஜீவானந்தம் அவர்கள் ஊட்டியில் ஒரு எழுத்தாளர்கூடுகையை ஒருங்கிணைத்திருந்தார். சூழியல் சார்ந்து எழுத்தாளர்களுக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்குவது அதன் திட்டம். அன்று சூத்ரதாரி என்று பெயர்சூட்டிக்கொண்டிருந்த எம்.கோபாலகிருஷ்ணன், பசலை என்னும் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருந்தவரும் அன்று இடதுசாரி இதழான மனஓசையின் எழுத்தாளரும் இடதுசாரித் தீவிர இயக்க உறுப்பினருமான கோவிந்தராஜ், பெருமாள் முருகன், மகுடேஸ்வரன், க.மோகனரங்கன் என பலர் அதில் பங்கெடுத்தனர். வெவ்வேறு இடங்களில் கானுலாவும், இயற்கையைப் பேணுவது குறித்த வகுப்புகளும் நிகழ்ந்தன.

அப்போதுதான் நான் நிர்மால்யாவைச் சந்தித்தேன். என்னை நோக்கி பதற்றமாக வந்து மேலும் பதற்றமாக “நான் நிர்மால்யா, மணின்னு பேரு” என்றார். முன்னரே எங்களுக்குள் கடிதப்போக்குவரது இருந்தது. தற்கால மலையாளக் கவிதைகள் என்னும் நூலில் நான் கே.சச்சிதானந்தனின் மழையின் பல அர்த்தங்கள் என்ற கவிதையை [ஆற்றூர் ரவிவர்மாவால் வழிகாட்டப்பட்டு] சுருக்கினேன். அதைப்பற்றி தன் கடும் எதிர்ப்பை அவர் தெரிவித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அன்று சச்சிதானந்தனின் ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர். அவரும் அன்று மன ஓசை குழுதான். நான் முதலில் காட்டெருது ஏதோ வந்துவிட்டது என்று பயந்தேன். அல்லது காட்டுத்தீ. அல்லது ஏதாவது கவிஞர்கள் கலாட்டா செய்கிறார்கள். ஒன்றுமில்லை, அது நிர்மால்யாவின் இயல்பு. அவர் எப்போதுமே பதற்ற நிலையில்தான் இருப்பார். ஏறத்தாழ முப்பதாண்டுகளாக அப்படியே தொடர்கிறார்.

நிர்மால்யாவுடன் அன்று பேசிக்கொண்டிருந்தேன். பெரும்பாலும் மலையாள மொழியாக்கங்களில் செய்யப்படும் குளறுபடிகளைப் பற்றி. அவருக்கு ஒட்டுமொத்தமாக அதிருப்தி இருந்தது. ஊட்டியில் அந்தச் சூழியல்வகுப்புகளை நடத்தியவர்கள் மேல் அதைவிட பெரிய அதிருப்தி. அவர்களில் பலர் கிளப்களில் வாழும் பெரியமனிதர்கள். கால்ஃப் வாழ்க்கைக்காக சூழல் அழியக்கூடாது என நினைப்பவர்கள். நான் அப்போது நிகழ் இதழில் எழுதிய ஒரு குறிப்பில் மலைகளில் மிதமிஞ்சி பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுவதைப் பற்றி அவர்களில் ஒருவர் எழுதியிருந்த குறிப்பை மேற்கோளாக்கியிருந்தேன். நிர்மால்யா அவர் பெரிய தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் பற்றி வாய் திறக்காமல் சிறுவிவசாயிகள் பயன்படுத்துவதைப்பற்றி மட்டும் எழுதுவதாகக் கொதித்தார். அவர் எஸ்டேட் உரிமையாளர், நிர்மால்யா அரை ஏக்கரில் உருளைக்கிழங்கும் காரட்டும் பயிரிடுபவர்.

ஆக மொத்தம் கொஞ்சம்கூட சுமுகமான சந்திப்பு இல்லை. கூட்டத்தில் மெல்லமெல்ல பிரம்மராஜனைப் பற்றிப் பேச்சு வந்தது. பிரம்ம.ராஜனைப்பற்றி நான் அப்போது கடுமையான கருத்தை நிகழ் சிற்றிதழில் எழுதி அவருடைய கசப்புக்கு ஆளாகியிருந்தேன். பிரம்மராஜனின் வீட்டுக்குச் செல்லலாம்  என கவிஞர்கள் முடிவெடுத்தனர். அவர் அப்போது சேரிங் கிராஸ் என்னுமிடத்தில் தங்கியிருந்தார். நிர்மால்யா பிரம்மராஜனுக்கு நண்பர். இன்றும் மானசீகமான நண்பர், அவரைப்பற்றிய என் விமர்சனங்கள் மேல் முப்பதாண்டுகளாக முற்றி வரும் கடும்மறுப்பு கொண்டவர். நிர்மால்யா மலர்ந்தார். எங்களை அழைத்துச்சென்றார்.நானும் பிரம்மராஜனின் வீட்டுக்குச் சென்றேன். அவர் என்னை கண்டுகொஞ்சம் முகம்சுளித்தாலும் நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் திரும்ம்பும் போது நிர்மால்யா எனக்கு அணுக்கமாகிவிட்டிருந்தார். நான் பிரம்மராஜனைப் பார்க்கச்சென்றது நல்ல விஷயம் என்று சொன்னார்

அவ்வாறு நான் அவருடன் அணுக்கமானேன். பின்னர் ஆறுமாதம் கழித்து மீண்டும் ஊட்டிக்குச் செல்ல நேர்ந்தது. நிர்மால்யாவைப் பார்த்தேன். அவர் நித்யசைதன்ய யதியைப் பற்றிச் சொன்னார். எனக்கு பெரிய ஆர்வமில்லை, ஊர் ஊராகப் போய் பலவகையான சாமியார்களைப் பார்த்துச் சலித்துவிட்டேன் என்றேன். அவர் “இவர் வேறுமாதிரி… நீங்க பாக்கவேண்டியவர்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார். ஊட்டிகுருகுலம் ‘பக்தர்களுக்கு’ உரியது அல்ல. அது ஓர் அறிஞர்கூடுகை மையம் மட்டுமே என அப்போது நான் அறிந்திருக்கவில்லை. நிர்மால்யா அப்போது நித்ய சைதன்ய யதியின் மானுட மைந்தன் ஏசு என்னும் சிறிய நூலை மொழியாக்கம் செய்திருந்தார். எனக்கு அதைத் தந்தார். நான் அதை வாசித்து மொழியாக்கம் இன்னும் மேம்பட்டிருக்கலாம் என்னும் கருத்தைச் சொன்னேன். நித்ய சைதன்ய யதியை அடுத்தமுறை சந்திப்பதாகச் சொன்னேன், ஆனால் அந்த நோக்கம் இருக்கவில்லை.

அதற்குள் என் ஆன்மிகநிலையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. நான் பவாவுடன் அணுக்கமாகியிருந்தேன்.1992ல் அவரைப் பார்க்கத்  திருவண்ணாமலைக்குச் சென்றேன். அங்கே  யோகி ராம்சுரத்குமாரைச் சந்திக்க பவா என்னை அழைத்துச்சென்றார். அவரைச் சந்தித்தது என் ஆழத்திற்கு நான் தள்ளிவிட்டிருந்த ஆன்மிகத்தேடல்களை மீண்டும் தூண்டியது. நான் யோகியிடம் அணுக நினைக்கவில்லை, அவரை அறிந்துகொண்டேன், ஆனால் அவர் வேறொருவர் என தோன்றியது. அந்நாளில் ஊட்டிக்குச் செல்வது தற்செயலாகவே நிகழ்ந்தது. இம்முறையும் நிர்மால்யா நித்யாவைச் சந்திக்க அழைத்தார். நான் அவருடன் சென்றேன். ஆச்சரியம் என்னவென்றால் இந்த முப்பதாண்டுகளில் நிர்மால்யா ஒருவரைக்கூட நித்யாவையோ பிற துறவிகளையோ சந்திக்க அழைத்ததோ  கூட்டிச்சென்றதோ இல்லை. பொதுவாக அவர் குருகுலம், நித்யா பற்றி பேசுவதே இல்லை. எவரேனும் கேட்டாலும் தவிர்க்கும் நோக்குடன் சுருக்கமான பதில்களையே சொல்வார். என்னை ஏன் கட்டாயப்படுத்தினார் என்பதும் அவருக்குத்தெரியாது .

செல்லும்போது நான் மறுக்கவில்லை என்றாலும் மெல்லிய குறுகுறுப்பும் தயக்கமும்தான் ஓங்கியிருந்தன. நான் செல்லும்போது காலை எட்டுமணி. ஊட்டிக்கு அது விடிகாலை. நித்யா தன் மாணவர்களுடன் வெளியே வந்து காலைமலர்களை நோக்கிக் கொண்டிருந்தார். உடன் ஆரோன் என்னும் ஜெர்மானிய இளைஞன். சுவாமி தன்மயாவாக பின்னர் மாறிய டாக்டர் தம்பான். சுவாமி தியாகீசன் ஆகியொர் இருந்தனர். நான் நித்யாவை பதினைந்து அடி தொலைவில் பார்த்து அந்த முதற்கணத்திலேயே அவருடைய மாணவனானேன். இன்றும் ஒருநாள்கூட அவருடைய மாணவனாக , அவரிடமிருந்து கற்காதவனாக, இருந்ததில்லை. அன்றிலிருந்து இன்றுவரை மாணவனாக குருகுலத்திற்குச் சென்றுகொண்டே இருக்கிறேன்

அன்றெல்லாம் ஊட்டிக்கு மாதம் ஒருமுறையேனும் நான் செல்வேன். தர்மபுரியில் அப்போது பணியாற்றிக்கொண்டிருந்தேன். மாலையில் சேலம் வந்து அங்கிருந்து பின்னிரவில் கோவை வந்து விடியற்காலையில் ஊட்டி பேருந்தைப் பிடித்து ஏழுமணிக்கு ஊட்டியில் வந்திறங்குவேன். பெரும்பாலான பொழுதுகளில் நிர்மால்யா பேருந்துநிலையத்தில் காத்து நின்றிருப்பார். பார்த்ததுமே நாங்கள் ஒரு சங்கடமான புன்னகையை பரிமாறிக்கொள்வோம். நிர்மால்யா பதற்றத்துடன் இலக்கியம்பேசத் தொடங்குவார். ஆட்டோவில் குருகுலம் வருவோம். அவரைப் பார்த்ததும் குரு “இவர் வந்தால்தான் நீயும் வருவாயா?” என நிர்மால்யாவை புன்னகையுடன் கடிந்துகொள்வார். ஓராண்டுக்குப்பின் சேலம் குப்புசாமியும் என்னுடன் ஊட்டிக்கு வரத்தொடங்கினார்.

நித்யா என்னிடம் தமிழ்க்கவிஞர்களைச் சந்திக்க விழைவதாகச் சொன்னார். 1994 ல் நான் என் நண்பர்களான எம்.கோபாலகிருஷ்ணன், க.மோகனரங்கன், கோவிந்தராஜ் பின்னாளில் ஐபிஎஸ் அதிகாரியாக ஆன செங்கதிர் போன்றோரைக் கூட்டிவந்து ஊட்டியில் ஒரு சிறிய கவிஞர் சந்திப்பை நடத்தினேன். நான், குப்புசாமி உட்பட மொத்தம் எட்டுபேர். கவிதைகளை கவிஞர்கள் வாசிக்க நான் அவற்றின் மொழியாக்கத்தை நித்யாவுக்கு வாசித்துக்காட்டினேன். நித்யா அவற்றின்மேல் தன் கருத்துக்களைச் சொன்னார். இயல்பாகத் தொடங்கிய அந்தச் சந்திப்பு ஒரு சீரான தொடர்நிகழ்வாக ஆகியது. ஆண்டுக்கு மூன்று அல்லது நான்குமுறை கவிஞர்கள் நித்யாவை வந்து சந்தித்துச் சென்றார்கள். தமிழின் பல இளம்கவிஞர்கள் வந்திருக்கிறார்கள்

நித்யா சமாதியானபின்னர் ஓராண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. அதன்பின்னர் நான் கலாப்ரியா உதவியுடன் குற்றாலத்தில் தமிழ் -மலையாளக் கவிஞர்களின் ஒரு சந்திப்புநிகழ்ச்சியை ஒருங்கிணைத்தேன்.  அது மலையாளச் சூழலில் பெரிய அதிர்வுகளை உருவாக்கியது. இன்றுகூட அதைப்பற்றிய பேச்சுக்கள் உள்ளன. குற்றாலம் எஃபக்ட் என்பது வசையாகவும் பாராட்டாகவும் சொல்லப்படுகிறது. அடுத்த நிகழ்ச்சிகள் மீண்டும்  குற்றாலத்தில். அதற்கு அடுத்தது நண்பர் மொரப்பூர் தங்கமணி உதவியுடன் ஒ்கேனேக்கலில். அவ்வாண்டு நான் ஊட்டிக்கு குருநித்யா நினைவுச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்தேன். நித்யா நினைவாக நிகழும் சந்திப்பைப் பற்றிச் சொன்னபோது “வேறு எங்கும் நடத்தவேண்டியதில்லை. இங்கேயே நிகழட்டும்” என்று சொன்னார்

அதன்பின் நிர்மால்யா உதவியுடன் குரு கவியரங்கு ஊட்டியில் தொடங்கியது. 2002 முதல். நிர்மால்யா முழுமையாகவே இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பெரும்பாலும் இது ஒரு தனிநபர் முயற்சி. குருகுலத்தைத் தூய்மைசெய்வது முதல் கடைசியில் குப்பை பொறுக்கிப்போடுவதுவரை நிர்மால்யாதான். அவரைப்பொறுத்தவரை இது குருவுக்கு அவர் செய்யும் பணி. நான் பெரும்பாலும் எந்த வேலையும் அன்றும் இன்றும் செய்வதில்லை. ஒருங்கிணைப்பு தவிர. ஆரம்பத்தில் ஆண்டுக்கு மூன்று சந்திப்புகள் வரை ஊட்டியில் நிகழ்ந்தன. பின்னர் அதில் ஒரு தொய்வு. ஓராண்டு அது நிகழவில்லை. 2006ல் நிகழ்ந்த சந்திப்புக்கு ஈரோடு கிருஷ்ணனும் கோஷ்டியும் வந்திருந்தார்கள். இதைப்போல இத்தனைப் படைப்பூக்கத்துடன் ஒரு நிகழ்வு நடக்கமுடியுமா என்று வியந்தேன் என கிருஷ்ணன் சொல்வதுண்டு. அன்றெல்லாம் விவாத அரங்கில் கவிஞர்கள் மட்டுமே பேசமுடியும். பிறருக்கு பார்வையாளராக மட்டுமே இடம்.

குருகுலம் நித்யாவுக்குப் பின் சிதிலமாகத் தொடங்கியது. வருகையாளர்கள் இல்லை. கொடையாளர்கள் முற்றிலும் இல்லை. பெரிய அமைப்பு. ஆகவே நாங்கள் ஓராண்டு இடைவெளி விட்டோம். ஓரளவு தூய்மைசெய்து மீண்டும் தொடங்கினோம். ஆனால் அடுத்த ஆண்டு ஏற்காட்டில் நடத்தவேண்டியதாயிற்று. அதனால் மிகவும் உளம்வருந்தியவர் நிர்மால்யா. மாதம் ஒருமுறை கூப்பிட்டு வருந்திக்கொண்டே இருந்தார். “ஊட்டியிலேதான் நடத்தணும். குருவோட சமாதி இங்கேதான் இருக்கு” என்று சொல்வார். ஊட்டி குருகுலத்தை நித்யாவின் மாணவி ஒருவர் சொந்தச்செலவில் சீரமைத்தார். அதன்பின்னர் இப்போது தொடர்ச்சியாக ஊட்டி குருநித்யா காவிய அரங்கு நிகழ்கிறது. இம்முறை மேமாதம் 3,4,5 தேதிகளில்

இப்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஆகிவிட்டது. நூறுபேருக்குமேல் கலந்துகொள்கிறார்கள். நூறுபேரையாவது இடமில்லை என தவிர்க்கவும் நேர்கிறது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து அரங்கை நிறைத்திருக்கிறார்கள். நிர்மால்யா பெரும்பாலும் அதே பதற்றத்துடன் அதே சொற்களுடன் கண்ணுக்குத்தெரியாதவராக நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். தமிழகத்தில் இவ்வளவுகாலம் இவ்வளவு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த இன்னொரு இலக்கியவாதி உண்டா எனத் தெரியவில்லை. இதன்பொருட்டு அவருக்கு எந்தச் சமூக இடமும் எந்த புகழும் கிடைக்கவில்லை.

நிர்மால்யா ஒரு டீத்தூள் கடையின் பங்காளராக இருந்தார். அதன்பின் மிட்டாய் வினியோகம் செய்தார். இப்போதும் சிறுவணிகம்தான். விவசாயம் உண்டு. மொழியாக்கம் செய்து அதற்கான சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றிருக்கிறார். மகன் படித்து நல்ல வேலைக்குச் சென்றபின் கொஞ்சம் தெளிந்து அவ்வப்போது சிரிக்கிறார். அடுத்தமகன் படித்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் இப்போதும் அதேபோல குறைவான பேச்சு கொண்ட நண்பர்கள்தான். “உன் நண்பர்களிலேயே ரெண்டும் ரெண்டு துருவம். ஒண்ணு பேசிட்டே இருக்கும். ஒண்ணு வாயே திறக்காது. லெச்சணம்தான்” என்று அருண்மொழி சொல்வாள் – கிருஷ்ணனையும் நிர்மால்யாவையும் பற்றி. எங்கள் இருவருக்கும் சேர்ந்தே வயதாகிவிட்டதை ஊட்டியில் நித்யாவின் அரிய புகைப்படங்களை எடுத்த தத்தன் புனலூர் அனுப்பிய இந்தப் புகைப்படம் காட்டுகிறது.

நிர்மால்யாவுக்கு விருது

ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.

முந்தைய கட்டுரைகங்கைப்போர்- கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-13