‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-14

துச்சாதனன் கர்ணனின் குடில் நோக்கி சென்று உளவிசையால் தொலைவிலிருந்து பாய்ந்திறங்கி, உடற்தசைகள் கொந்தளிக்க மூச்சு வாங்க அவன் குடில் வாயிலை அடைந்து, அங்கிருந்த ஏவலன் தலைவணங்குவதை பொருட்படுத்தாமல் கடந்து சென்று, கதவை ஓங்கி ஓங்கி மாறி மாறி தட்டினான். “மூத்தவரே! மூத்தவரே!” என்று கூச்சலிட்டான். அவன் பின்னால் நின்று காவலன் சொல்லெடுக்க தவித்தான். உள்ளிருந்து கர்ணன் “கதவை உடைக்காதே. உள்ளே வா” என்றான். துச்சாதனன் உள்ளே சென்று படுத்திருந்த கர்ணனை அணுகி அவன் காலடியில் நின்று “நான் சல்யரை சந்தித்துவிட்டு வருகிறேன்” என்றான்.

கர்ணன் ஒருகணம் அவனை கூர்ந்து நோக்கிவிட்டு “சொல்” என்றான். “உங்களிடம் அவர் சில கேள்விகளைக் கேட்கச் சொன்னார்” என்றான் துச்சாதனன். கர்ணன் இரு கைகளையும் தூக்கி தலைக்கு அணை வைத்தபடி “கூறுக!” என்றான். அவனுடைய திரண்ட தோள்தசைகள் இரு ஆமைகள் என எழுந்தன. துச்சாதனன் “மூத்தவரே, நீங்கள் கை தழையா வள்ளல் என்று நாங்கள் அனைவரும் அறிவோம். நீங்கள் எவருக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள்? அக்கொடை வழியாக எங்கெல்லாம் கட்டுண்டிருக்கிறீர்கள்? அதை நீங்கள் கூறியாகவேண்டும்” என்றான்.

கர்ணன் “நீ அறியவேண்டியதென்ன? அதை மட்டும் கூறு. என் நினைவறிந்த நாள்முதல் நான் ஒவ்வொருநாளும் எவருக்கேனும் எதையேனும் அளித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அக்கொடை அனைத்துக்கும் கட்டுண்டிருக்கிறேன்” என்று சொன்னான். துச்சாதனன் “நீங்கள் களத்தில் அர்ஜுனனை கொல்வதில்லை என்று எவருக்கேனும் சொல்லுறுதி அளித்தீர்களா? பாண்டவர்கள் உயிரை பேணுவேன் என்று எவருக்கேனும் கூறினீர்களா?” என்றான். “ஏனென்றால் களத்தில் நீங்கள் அர்ஜுனனை கொல்லவில்லை. பாண்டவர்களை நீங்கள் பலமுறை தப்பிச் செல்லவிட்டீர்கள்.”

அவனை நோக்கி விழிநட்டு கர்ணன் சொன்னான் “அர்ஜுனனை கொல்வதில்லை என்று சொல்லுறுதி அளிக்கவில்லை. ஆனால் நாகவாளியை ஒருமுறைக்குமேல் செலுத்தமாட்டேன் என்று சொல்லுறுதி அளித்தேன். பாண்டவர் நால்வரையும் எந்நிலையிலும் கொல்வதில்லை என்று கூறினேன்.” நடுக்குகொண்ட குரலில் “எவரிடம்?” என்று துச்சாதனன் கேட்டான். கர்ணன் ஓங்காக் குரலில் “என் குருதியன்னையிடம். யாதவ அரசி குந்தி என் குடிலுக்கு வந்து என்னை தன் மைந்தன் என ஏற்று அன்னைக்கு மைந்தனின் கொடையென அதை கேட்டார். அவர் என் அன்னை என நான் முன்னரே அறிவேன். பிற அனைவருக்கும் எதையேனும் அளித்திருக்கிறேன். ஈன்ற அன்னைக்கு அளிக்க அப்போது அது ஒன்றே என்னிடம் இருந்தது. அவரும் அதுவன்றி வேறெதையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை” என்றான்.

துச்சாதனன் பெருமூச்சுடன் தளர்ந்து பின்நோக்கி நகர்ந்து குடிலின் மூங்கில் தூணை பற்றிக்கொண்டான். பின்னர் “ஏன், மூத்தவரே?” என்று கேட்டான். அதில் இருந்த துயரத்தின் ஒலியைக் கேட்டு அவனே மேலும் துயர்கொண்டான். “மூத்தவரே, அந்தச் சொல்லுறுதியின் வழியாக நீங்கள் என் தமையனை கைவிட்டீர்கள். அதை நீங்கள் உணரவில்லையா?” என்றான். “இல்லை. உண்மையில் நான் உன் தமையனைப்பற்றி எண்ணுவதே இல்லை. நான் எண்ணுவதற்கு அப்பால் அவருக்கு ஓர் உள்ளமும் விழைவும் உண்டு என்று கருதியதே இல்லை” என்றான் கர்ணன். “இக்களத்தில் அவர்களைக் கொன்று செருவென்று தமையனை அரசராக்குவதாக சொன்னீர்கள்” என்றான் துச்சாதனன்.

“உன் தமையனுக்காக என் உயிரை, என் மைந்தர்களை, என் குடியை அளிக்க சித்தமாக இருக்கிறேன். களத்தில் அர்ஜுனனை கொல்ல எனக்கு நாகஅம்போ பிற அரிய அம்புகளோ தேவையில்லை. பாண்டவ ஐவரில் அவனை மட்டுமே கொன்றால் போதும், இப்போர் முடிந்துவிடும். எழும் நாளில் எனது அம்பில் அர்ஜுனன் உயிர் நீப்பான். அதில் உறுதி கொண்டிருக்கிறேன். இப்போரை அர்ஜுனனை கொல்லும்பொருட்டு மட்டுமே என நிகழ்த்துவதாகவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்று கர்ணன் சொன்னான். எண்ணியிராது எழுந்த சீற்றத்துடன் “அர்ஜுனன் அத்தனை எளிதில் கொல்லப்படக்கூடியவனல்ல” என்று துச்சாதனன் கூவினான். “உங்கள் நாகஅம்பையே அவன் ஒழிந்தான். அனைத்து அம்புகளிலிருந்தும் தப்பும் நுட்பத்தை அவனுக்கு கற்பிக்கும் ஆசிரியன் கையில் கடிவாளங்களுடன் புரவிமேடையில் அமர்ந்திருக்கிறான்.”

கர்ணன் “நாகவாளியை அவன் ஒழிந்தது திறனால் அல்ல, ஒரு சிறு சூழ்ச்சியினால், ஒருமுறை ஒரு சூழ்ச்சியை செய்கையிலேயே சூழ்ச்சி செய்யக்கூடியவன் என்பதை பிறருக்கு உணர்த்துகிறோம். சூழ்ச்சிகள் எல்லையற்றவை அல்ல. இம்முறை அவன் செய்யவிருக்கும் சூழ்ச்சியையும் கருத்தில் கொண்டே அம்புகளை தொடுக்கவிருக்கிறேன். இதிலிருந்து அவன் எந்நிலையிலும் தப்ப இயலாது. பரசுராமரின் வில்லை வெல்லும் ஆற்றல் அவனுக்கில்லை. பரசுராமரின் சொல் பெற்ற அம்பை அவனால் தடுக்கவும் இயலாது” என்றான் கர்ணன். துச்சாதனன் கைகளை நெஞ்சில் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். “அஞ்சவேண்டாம் இளையோனே, இப்போரில் நாம் வெல்வோம்” என்றான் கர்ணன்.

“இவ்வண்ணம் ஒரு சொற்கொடையை நீங்கள் நிகழ்த்தியதை உங்கள் நாவிலிருந்து மூத்தவர் அறிந்திருக்கிறாரா?” என்றான் துச்சாதனன். “இல்லை. நான் என் கொடைகளைப்பற்றி அவ்வாறு பிறரிடம் சொல்லிக்கொள்வதில்லை” என்றான் கர்ணன். “இது கொடை மட்டும் அல்ல. இது படைசூழ்கையை முற்றாகவே மாற்றும் ஒரு செய்தி. இதை நீங்கள் கூறியிருக்கவேண்டும்” என்றான் துச்சாதனன். “இதை இனி அவர் அறிந்தால் எவ்வண்ணம் உணர்வார் என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா?” கர்ணன் புன்னகைத்து “இன்றுவரை உன் தமையன் என்ன எண்ணுவார் எப்படி புரிந்துகொள்வார் என்று ஒருகணம்கூட நான் கருதியதில்லை. இப்புவியில் என்னைப்பற்றி என்ன எண்ணுவார் என்று எந்நிலையிலும் கருதாமல் பழகும் ஒரே நட்பு அவருடையது. அதனால்தான் அதை நட்பென்று எண்ணுகிறேன்” என்றான்.

“அவர் உளம் குமைவார். இன்றிருக்கும் கசந்த நிலையில் உங்களை வெறுப்பார். போர்முனையில் நட்புக்கு மேல் குருதிப்பற்றை நிறுத்தி தன்னை கைவிட்டீர்கள் என்று எண்ணுவார். ஐயமில்லை” என்றான் துச்சாதனன். “இன்று அவர் தன் நல்லியல்பு அனைத்தையும் இழந்துவிட்டிருக்கிறார். இந்த அளவு நிலையில்லாதவராக அவரை முன்பு கண்டதே இல்லை. இளையோர் களம்பட்டு, பிதாமகர்களும் ஆசிரியர்களும் இறந்து, சுற்றமென வந்த அரசர்கள் ஒவ்வொருவராக மறைந்து தன்னந்தனியனாக நின்றிருக்கிறார். இந்தப் பெருவெள்ளத்தில் பற்றுக்கோடென உங்களை எண்ணியிருக்கிறார், நீங்களும் அவரை கைவிட்டீர்கள் எனும் இச்செய்தியை அவரால் தாள இயலாது.”

கர்ணன் “இத்தனை சொற்களுக்குப் பின்னரும்கூட அவர் என்னைப்பற்றி என்ன எண்ணுவார் என்பது எனக்கு ஒரு பொருட்டெனத் தோன்றவில்லை. அவர் என்ன எண்ணினாலும் அது என் உளநிலையில் மாற்றத்தையும் உருவாக்காது” என்றான். “மூத்தவரே, நீங்கள் கொடையென அளித்தது உங்களுக்கு உரிமைப்பட்ட ஒன்றை அல்ல. அதை மட்டும் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்கள் அளித்தது எங்கள் உயிரை, எங்கள் தன்மானத்தை, என் மூத்தவரின் பெருமையை. உங்கள் அன்னையின் காலடியில் எங்களை பலியிட்டுவிட்டீர்கள்” என்றான் துச்சாதனன். “அளிக்கையில் அவ்வாறு எண்ணிச் சூழ்வது என் வழக்கம் அல்ல” என்றபின் கர்ணன் சிலகணங்கள் கழித்து “நீ கூறுவது உண்மை. ஆனால் உன் தமையனின் உடைமையை, அவர் பெருமையை ஒருபோதும் என் உடைமையோ என் பெருமையோ அன்று என நான் எண்ணியதில்லை” என்றான். இதழ் கோணலாக புன்னகைத்து “எவரேனும் முனிவர் வந்து கேட்டால் அஸ்தினபுரியையும் அவரையும்கூட நான் கொடையளித்திருக்கக்கூடும்” என்றான்.

“இப்போரை முடித்துவிட்டீர்கள். இனி நாம் ஒவ்வொருவரும் நிரையாக நடந்து இறப்பின் முன் சென்று நின்றிருப்பதொன்றே எஞ்சியுள்ளது. அவ்வளவுதான். இனி ஒரு சொல்லும் உங்களுக்குச் சொல்வதற்கு என என்னிடமில்லை” என்றபின் திரும்பி துச்சாதனன் குடிலைவிட்டு வெளியே சென்றான்.

துரியோதனனின் அவைக்கூடத்தை துச்சாதனன் சென்றடைந்தபோது அங்கு இரு படைத்தலைவர்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். துச்சாதனன் அவர்களில் ஒருவரை நோக்கி “மூத்தவர் வந்தாரா?” என்றான். துரியோதனன் துயிலச்சென்றதை நினைவுகூர்ந்தான். ஆனால் அவன் சகுனியுடன் அங்கே இருப்பான் என்றே தோன்றிக்கொண்டிருந்தது. படைத்தலைவர்களில் ஒருவர் எழுந்து துச்சாதனனிடம் வந்து “அரசர் துயில்கொள்ளச் சென்றுவிட்டார். தாங்களே அறிவீர்கள், அவர் மயிர்க்கால்களும் நனைந்து குளிருமளவுக்கு மது அருந்தியிருக்கிறார். இந்நிலையில் அவருக்கு தன்னுணர்வென ஏதும் இருக்க வாய்ப்பில்லை” என்றார். “நான் அவரை பார்த்தாகவேண்டும்” என்று துச்சாதனன் சொன்னான்.

“தாங்கள் கூறுவது எதையும் இப்போது அவரிடம் சென்று சேர்க்க இயலாது. தாங்கள் இப்போது தங்கள் மாதுலரிடம் பேசலாம். அவர் தெளிந்திருக்கிறார்” என்றார் படைத்தலைவர். “இல்லை, இது என் மூத்தவரிடம் மட்டுமே சொல்வதற்குரியது” என்று துச்சாதனன் சொன்னான். “அதனால் பயனில்லை” என்றார் படைத்தலைவர். “தெய்வச்சிலையிடம் என்று எண்ணிச்சொல்கிறேன், போதுமா?” என்று திரும்பி உரத்த குரலில் துச்சாதனன் கேட்டான். அவர்கள் சொல்லடைந்து நிற்க ஒருவர் “அங்கே இருக்கிறார்” என்றார். “குடிலுக்குள்ளா?” என்றான். “இல்லை, வெட்டவெளியில் துயில விரும்பினார். ஆகவே மரத்தடியில் மஞ்சம் அமைத்தோம்” என்றான் ஒரு ஏவலன்.

துச்சாதனன் வெளியே வந்து சில அடிகள் நடந்தபோதே அங்கு நின்றிருந்த சாலமரத்தின் அடியில் இலைப்படுக்கையில் இரு கைகளையும் தலைக்கு வைத்து அண்ணாந்து வானைப் பார்த்து படுத்து துயின்றுகொண்டிருப்பதை கண்டான். ஒருகணம் அவன் துயில்வதை கலைக்கவேண்டாம் என்று தோன்றியது. துரியோதனன் ஆழ்ந்துறங்குவதே இல்லை என்று அவன் அறிந்திருந்தான். பெரும்பாலான தருணங்களில் சிறுபொழுது துயின்று, உடனே உள்ளிருந்து தொட்டு உசுப்பப்பட்டு விழித்துக்கொண்டு நீள்மூச்சுகளும் பொருளிலா முனகல்களுமாக படுக்கையில் படுத்திருப்பான். அப்பால் படுத்திருக்கும் துச்சாதனன் அவன் விழித்துக்கொண்ட கணமே தானும் உணர்வு பெற்று அவன் அசைவுகளை செவிகளால் அறிந்துகொண்டிருப்பான். ஆனால் மெல்லிய அசைவாகக்கூட தன் விழிப்பை துரியோதனன் அறியலாகாது என எண்ணுவான்.

புரண்டு புரண்டு படுத்து, “இளையோனே” என முனகி, தம்பியர் எவர் பெயரையேனும் சொல்லி, அரிதான சில தருணங்களில் மெல்ல விம்மி, அவ்வொலியை தானே கேட்டு எழுந்து, மீண்டும் மதுவருந்தி, அதை நிறுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் அருந்தி, உள்ளிருந்து குமட்டலெழுந்து உடல் உலுக்க சற்றே வாயுமிழ்ந்து, இரு கைகளையும் மஞ்சத்தில் ஊன்றி தலை குனிந்து அமர்ந்திருப்பான். குருதி எடைகொண்டு குமிழியிட்டு தலைக்குள் நிறைந்து, தலை பெருத்து முன் தள்ள, உடல் சற்று அசைந்து, அவ்வண்ணமே மஞ்சத்தில் விழுந்து மீண்டும் துயிலத்தொடங்குவான். மீண்டும் அவன் குறட்டை ஒலி கேட்பது வரை துச்சாதனன் உளம் பதைக்க அங்கே அசைவிலாது அமர்ந்திருப்பான்.

“இளையோனே” எனும் குரல் தன்னை அழைக்கையில் துச்சாதனனுக்கு அது தெரியும். பிற அனைத்துக் குரல்களும் விண்புகுந்த தம்பியருக்கு என்று அவன் அறிந்திருந்தான். அவன் குறட்டையொலி கேட்கத் தொடங்குகையில் நெஞ்சில் ஆறுதல் பரவும் நீள்மூச்சுடன் கைகளைக் கூப்பி தெய்வங்களை வாழ்த்திவிட்டு தானும் உடலமைத்து ஓசையில்லாமல் படுத்துக்கொள்வான். துரியோதனனின் குறட்டையொலியை கேட்டுக்கொண்டிருக்கையில் உள்ளம் அமைதியடையும். அது ஓர் ஆறுதல்மொழி, ஓர் உறுதிகூறல். மெல்ல துயிலெழுந்து உடலெங்கும் பரவி மெல்ல சித்தம் அழிந்து மூழ்கத்தொடங்குவான்.

அப்போது துரியோதனன் ஆழ்துயில் கொண்டிருக்கிறான் என்னும் உணர்வே அவனுக்கு அமைதியை அளிப்பதாக இருந்தது. துச்சாதனன் திரும்பிச் செல்வதற்காக ஒரு காலடி எடுத்து வைத்தான். ஆனால் அங்கிருந்து செல்ல இயலாதென்று தோன்றியது. விசைமிக்க கைகள் அவனைப்பற்றி அங்கே நிறுத்தியிருந்தன. தன்னால் வேறெங்கும் சென்றமைய முடியாதென்று  தெரிந்தபின் அவன் மெல்ல காலெடுத்து வைத்து துரியோதனனை அணுகினான். அவன் துயில்கையில் அவ்வாறே விட்டுவிடலாம் என்றுதான் எண்ணியிருந்தான். எவ்வண்ணமாயினும் துரியோதனன் நெடும்பொழுது துயிலப்போவதில்லை. மது கூடிப்போனால் இரு நாழிகைகூட துயில வைப்பதில்லை. உடலுக்குள் அதன் செறிவு குறைந்ததுமே சித்தம் விழித்துக்கொள்கிறது. இறகு உலர்ந்த ஈ என அதிலிருந்து விடுவித்துக்கொண்டு தன்னைத்தானே சுற்றி சிறகுவிரித்து எழுந்து பறக்கத்தொடங்கிவிடுகிறது.

அவன் எழும்போது அருகிருக்கலாம். அப்போது அதை சொல்லலாம். அதுவரை காத்திருக்கலாம். காத்திருப்பது ஒன்றும் எனக்கு புதிதல்ல. இவ்வாழ்நாள் முழுக்க தமையனின் அருகே காத்திருப்பதையே தவமென செய்திருக்கிறேன். குழவிப்பருவத்தில் இளையஅன்னை சத்யசேனை அவன் கைபற்றி மூத்தவனை சுட்டிக்காட்டி “உன் தமையனை நோக்கு. அவன் சென்றதே வழி இனி உனக்கு” என்றாள். அச்சொற்களை அவன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் கண்டு கேட்டு அக்கணம் நிகழ்ந்ததுபோல் தெளிவுபடுத்திக்கொண்டே வந்தான். அன்றிருந்த துரியோதனன் அவனுடனே வளர்ந்து பேருருக்கொண்டவனாக ஆனான். அரியணை அமர்ந்தவனாக, அவையமர்ந்து சுற்றத்துடன் நகையாடுபவனாக, மைந்தருடன் களிக்கும் தந்தையாக, ஒவ்வொருவரையாக இழந்து துயரடைந்து தனித்தவனாக மாறிக்கொண்டே இருந்தான். அச்சொற்கள் அவ்வாறே மாறாமல் ஒலித்தன.

துச்சாதனன் அருகே சென்றதும் துரியோதனன் விழித்திருப்பதை உணர்ந்தான். துரியோதனன் திரும்பிப்பார்க்கவோ ஒலியெழுப்பவோ செய்யவில்லை. ஆயினும் அவ்வுடல் படுத்திருந்ததிலிருந்த தன்னுணர்வு அவன் துயிலவில்லை என்று காட்டியது. உள்ளம் அனைத்துக் கடிவாளங்களையும் இழுத்து அமரத்தில் அமர்ந்திருக்கும் பாகன். துயிலில் உடல் கடிவாளங்கள் தளர விடுதலை கொள்கிறது. உள்ளத்திலிருந்து ஓய்வு பெற உடல் ஏங்கிக்கொண்டிருக்கிறது. அஞ்சிய உள்ளம், துயர் கொண்ட உள்ளம், ஐயம்நிறைந்த உள்ளம் உடலை சற்றும் அமைதி கொள்ள விடுவதில்லை. சவுக்கை சொடுக்கி ஆணையிட்டுக்கொண்டே இருக்கிறது. உள்ளம் அடையும் துயரில் பெரும்பகுதியை உடலும் அடைகிறது. துயருற்றவன் உடல் தொலைவிலேயே துயர் துயர் என்று கூவிக்கொண்டிருக்கிறது. துயருற்றவன் எப்பெருக்கிலும் தனித்து தெரிகிறான்.

தன் முகத்தை துச்சாதனன் ஆடியில் பார்ப்பதில்லை. ஒரே ஒரு முறை மட்டும் தன்னியல்பாக தீட்டப்பட்ட கேடயத்தில் அதை பார்த்தபோது திடுக்கிட்டு கேடயத்தை தாழ்த்திக்கொண்டு தன்னுள்ளத்தை அதிலிருந்து அகற்ற முயன்றான். அது பிறிதொருவனின் முகமாகத் தோன்றியது. ஒரு போதும் அதில் இல்லாத பதைப்பும் தனிமையும் துயரும் நிறைந்திருந்தது. அந்த முகத்தை நோக்கி இளமையிலிருந்து வந்துகொண்டிருந்தோமா? அந்த முகத்துடன்தான் இப்புவியிலிருந்து அகலப்போகிறோமா? அந்த முகம் என்னுள் குழவிப்பருவத்திலேயே இருந்திருக்க வேண்டும். அலையற்ற நீரில் தோன்றி மறையும் பாவையென துயில்கையிலோ தனித்திருக்கையிலோ துயர்கொள்கையிலோ அது வந்து மறைந்திருக்கவேண்டும். என்னை வளர்த்த செவிலியரிடமோ அன்னையரிடமோ சென்று கேட்டால் தெரியும். “அன்னையே, இம்முகத்தை எப்போதேனும் பார்த்திருக்கிறீர்களா?” தயங்கி விழிதாழ்த்தி “ஆம், அரிதாக” என்று அவர்கள் சொல்லக்கூடும். அரிதாக என்பதனாலேயே அவர்கள் அதை மறக்காமலும் இருப்பார்கள். ஒருவேளை அதுவே அவன் என்று அவர்களின் உள்ளம் எண்ணியிருக்கவும் கூடும். ஆனால் அவர்கள் அனைவருமே அரசவையில் திரௌபதி துகிலுரியப்பட்டபின் அவனை ஏறிட்டும் நோக்குவதில்லை.

ஒரு முறை அவன் அன்னையரில் ஒருத்தி சுவரில் தெரிந்த அவன் நிழலை நோக்கி நின்றிருப்பதை சேடி ஒருத்தி கண்டாளாம். அதைப்பற்றி உசாவியபோது “அவனை நோக்குவதில்லை என வஞ்சினம் உரைத்திருக்கிறேன். நோக்காமலும் இருக்க இயலவில்லை. நிழல்நோக்கி அவனை அறிகிறேன்” என்றாளாம். அச்சேடி அதை சொன்னபோது அவன் நெஞ்சு அதிர எழுந்துகொண்டான். அசலை துருமசேனனில் அவனை கண்டாள். அவனை அரண்மனை மகளிர் அனைவரும் துச்சாதனனாக ஏற்றுக்கொண்டனர். நிழல்நோக்கியவள் என்ன கண்டாள்? மைந்தனை நோக்கியவர்கள் பிறிதொன்றை உணர்ந்தனரா என்ன?

அவன் அமர்ந்ததும் “எங்கு சென்றிருந்தாய்?” என்று துரியோதனன் கேட்டான். துச்சாதனன் “மூத்தவரின் குடிலுக்கு” என்றான். “அவன் துயின்றுவிட்டானா?” என்று துரியோதனன் கேட்டான். “படுத்திருந்தார். நான் அவரை எழுப்பினேன்” என்றான் துச்சாதனன். அவன் மேலே சொல்லும்பொருட்டு துரியோதனன் செவிகாத்திருந்தான். “மூத்தவரே, அதற்குமுன் நான் சல்யரைச் சென்று பார்த்தேன்” என்றான் துச்சாதனன். “என்ன சொன்னார்?” என்று துரியோதனன் கேட்டான். ஆனால் ஒருகணத்திற்குப் பின்னர்தான் அவ்வினாவை துரியோதனன் கேட்கவில்லை என்று துச்சாதனன் உணர்ந்தான். கேட்டதாக அத்தனை தெளிவாக தான் உணர்ந்தது எவ்வாறு என வியந்தான். அவன் மேலும் சிலகணங்களுக்கு அந்த அமைதியை உணர்ந்தபின் சொன்னான்.

“அங்கர் தன் பெருங்கொடைத் திறனாலேயே ஒவ்வாச் சொல்லுறுதிகளை பலருக்கும் அளித்திருக்கலாம், ஆகவே அவர் பல சரடுகளால் கட்டுண்டவர், நமக்கு மட்டுமென தன்னை அளிக்கும் உரிமையை இழந்தவர் என்கிறார் சல்யர். ஆகவேதான் போர்க்களத்தில் அவர் அர்ஜுனனை கொல்லாமல் தவிர்க்கிறார். பாண்டவர்களை அவர் வெல்வதுகூட இல்லை. அவர் எவருக்கோ அவ்வண்ணம் சொல்லுறுதி அளித்ததுபோல் தோன்றுகிறது என்றார். அது மெய்யென்று எனக்குத் தோன்றியது. ஆகவே நான் நேரில் சென்று அவரிடம் கேட்டேன். மெய்யென்று அவர் கூறினார்.”

துரியோதனனிடமிருந்து ஏதாவது எதிர்வினை வருமென்று துச்சாதனன் எதிர்பார்த்தான். ஒருகணம் காத்திருந்துவிட்டு “நம் படைகளுக்குள் நுழைந்து மூத்தவரின் பாடிவீட்டிற்குள் சென்று யாதவப் பேரரசி அச்சொல்லுறுதியை பெற்றிருக்கிறார்” என்றான். மீண்டும் ஒருகணம் காத்திருந்துவிட்டு “யாதவப் பேரரசிக்கு முதிரா அகவையில் பிறந்த மைந்தரே அங்கர். அதைச் சொல்லி அன்னையென நின்று அவர் அச்சொல்லுறுதியை பெற்றிருக்கிறார்” என்றான். கர்ணனைப் பற்றி முன்னரே துரியோதனன் அறிந்திருப்பதுபோல் தோன்றியது. அவன் உடலில் ஏதேனும் அசைவு தோன்றுமென்று துச்சாதனன் கூர்ந்து பார்த்தான்.

“எனக்கும் அங்கரைப்பற்றி அந்த ஐயம் இருந்தது. எவ்வகையிலோ குந்தியன்னையின் குருதி அவரில் ஓடுவதாகத் தோன்றியிருக்கிறது” என துச்சாதனன் தொடர்ந்து சொன்னான். “அவருக்கும் அர்ஜுனனுக்குமான முகஒற்றுமையும் தோற்றப் பொருத்தமும் என்னுள் எப்போதும் தெரிந்தது. ஆனால் மதுவனத்தின் யாதவக்குடியில் எவரோ அங்கரைப் பெற்றிருக்கலாம் என்றே இதுவரை எண்ணினேன். அல்லது முயன்று அவ்வாறு எண்ணிக்கொண்டேன் என்று படுகிறது” என்றான். “அன்னையென நின்றிருந்தபோது அங்கர் அச்சொல்லுறுதியை அவருக்கு அளித்திருக்கிறார்” என மீண்டும் சொன்னான். துரியோதனனின் குரலை செவிகூர்ந்து இருளில் அமர்ந்திருந்தான்.

துரியோதனன் “ஆம், நான் அறிவேன்” என்றான். “அறிவீர்களா?” என்று உரத்த குரலில் கேட்டபடி துச்சாதனன் எழுந்தான். “இப்படைக்குள் நிகழும் ஒன்றை தெரியாதிருக்கும் அளவுக்கு உளவுத்திறனோ ஆட்சித்திறனோ அற்றிருப்பேன் என்று எண்ணுகிறாயா?” என்று துரியோதனன் கேட்டான். “அவர் யாதவ அரசியின் மைந்தன் என்று முன்னரே அறிவீர்களா?” என்றான் துச்சாதனன். “இளமைந்தனாக அங்கர் என் முன் வந்து நின்ற அன்றே மாதுலருக்குத் தெரியும். நான் அன்று அதை உளம்கொள்பவனாக இல்லை. பின்னர் அது என் கனவிலும் கள்மயக்கிலும் மெல்லிய தொல்நினைவென தோன்றி மறையும் ஒன்றாக மட்டுமே இருந்தது. அது என் உள்ளத்தில் எழுவதற்குக்கூட நான் ஒப்பியதில்லை” என்றான் துரியோதனன். “ஒருவேளை அதை நான் ஏற்றிருந்தால் வாரணவதத்திற்கு துணிந்திருக்க மாட்டேன்…” என முனகிக்கொண்டான்.

“மூத்தவரே, எனில் அவரை நாம் ஏன் அங்கநாட்டுக்கு சிற்றரசராக அமரவைத்தோம்? அவர் இருந்திருக்க வேண்டிய இடம் தங்கள் அரியணை அல்லவா?” என்று துச்சாதனன் கேட்டான். “ஆம், என் அரியணை அவருக்குரியது. அது எனக்கு அவர் அளித்த கொடை” என்று துரியோதனன் சொன்னான். “அவர் மணிமுடிசூடவேண்டும் என்றால் குந்திதேவி அதை அவையில் எழுந்து சொல்லியிருக்கவேண்டும். அதை நம் ஷத்ரியக் குடிகள் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும். அவ்வாறு அவர் கூறிவிடுவார் என பீஷ்ம பிதாமகர் அஞ்சினார். அதனூடாக அஸ்தினபுரியின் ஷத்ரியரும் யாதவரும் பூசலிட்டுக்கொள்வார்கள் என்றும் அஸ்தினபுரிக்கு எதிராக ஷத்ரிய அரசர்களின் கூட்டு அமையும் என்றும் கருதினார். ஆகவே அவர் அங்கரை எப்போதும் சூதன் என அவைச்சிறுமை செய்தார். அவர்மேல் வெறுப்பை உமிழ்ந்துகொண்டே இருந்தார்.”

“நமக்கும் பாண்டவர்களுக்குமான பூசல் முதிர்ந்து அவர்கள் கானேகும்போதும் மீண்டுவந்து நிலம் கோரும்போதும் எத்தருணத்தில் வேண்டுமென்றாலும் அஸ்தினபுரியின் குடியவையில் குந்திதேவி எழுந்து அங்கரை தன் மைந்தன் எனச் சொல்லி அரியணை கோரக்கூடும் என எண்ணினார் பிதாமகர். அதற்கு யாதவர் முதன்மைகொண்ட நம் குடிகள் ஒப்புதலும் அளிக்கக்கூடும். ஆனால் பீஷ்மரின் ஒப்புதல் இன்றி குடியவை அங்கரை பாண்டவர் என ஏற்காது, அவருடைய சொல் மட்டுமே ஷத்ரியரின் எதிர்ப்பை நிறுத்தும். அதை குந்திதேவி அறிவார். எந்நிலையிலும் அங்கரை ஏற்கமாட்டேன் என்றே பிதாமகர் காட்டிக்கொண்டிருந்தார்” என்று துரியோதனன் சொன்னான்.

“அங்கர் என்ன உணர்ந்திருப்பார்? தன் அன்னையின் தன்மதிப்பை குறைக்கலாகாதென்று ஒதுங்கியிருக்கலாம். இளையோருக்காக தன்னை ஒடுக்கிக்கொண்டிருக்கலாம். அன்னை அவராக எழுந்து தன்னைப்பற்றி பிறருக்கு அறிவிக்க வேண்டுமென்றும் அல்லது இளையோரே அறிந்து தன்னிடம் வந்து கோரவேண்டுமென்றும் எண்ணியிருக்கலாம். அவையெல்லாம் உண்மைதான். ஆனால் அறுதியுண்மை அது அல்ல. அவர் எதையும் கொடையெனப் பெற விழையவில்லை. அங்கநாட்டு மணிமுடியை அவர் தாள்பணிந்து நான் அளித்தேன். அவருடன் அக்கணமே ஒன்றாகி நின்றேன். எனக்கு ஒரு கொடையென்றே அவர் அதை பெற்றுக்கொண்டார். ஈகை என இந்த மணிமுடியும் குலக்குறியும் அல்ல பாரதவர்ஷமே அளிக்கப்பட்டாலும் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்று துரியோதனன் சொன்னான்.

“இதெல்லாம் இங்கே இக்களத்திற்கு வந்தபின் என் உள்ளத்தில் தெளிவது” என துரியோதனன் தொடர்ந்தான். “இங்கே ஒவ்வொரு இரவும் எனக்கு ஓர் ஊழ்கம். என் உள்ளத்தின் ஆழங்கள் அனைத்தும் திறந்துகொள்கின்றன. இங்கு வரும்வரை எதையுமே நான் எண்ணியதில்லை. என் அகம் அறிந்தவற்றைக்கூட மறக்கவே முயன்றேன். இல்லையென்றே ஆக்கிக் கொண்டேன். அங்கர் என் தோள்தோழர் அல்ல, எனக்கு குருதிமூத்தவர். ஆனால் என் தோழர் என்றே எப்போதும் தன்னை காட்டிக்கொண்டிருந்தார். அவர் அவ்வாறு தன்னை காட்டுந்தோறும் நான் அவ்வாறே ஆனேன்.”

துச்சாதனன் “ஆனால் இச்சொல்லுறுதியை அளித்ததினூடாக அவர் இப்போரின் அனைத்து நிகர்நிலையையும் அழித்துவிட்டார். பாண்டவர்களை அவர் கொல்லமாட்டாரெனில் இப்போர் எப்போது முடியும்? இச்சொல்லுறுதியை அவர் உங்களைக் கேட்காமல் எப்படி அளிக்க முடியும்?” என்றான். “இளையோனே, எப்போது வேண்டுமானாலும் அங்கர் எழுந்து அவைநின்று இந்த மணிமுடி எனது, இவர் எனது இளையோர், எனது அன்னை இவர் என சொல்லியிருக்கலாமே? இல்லை எனில் பாண்டுவின் பெயர்சொல்லி அனல்தொட்டு மறுக்கட்டும் என்று கேட்டால் யாதவ அரசி என்ன சொல்லியிருக்க முடியும்?”

“உண்மையில் அவர் அவ்வண்ணம் ஒரு சொல் உரைத்திருந்தால் என் தந்தை மறுசொல் இன்றி மணிமுடியையும் இளையோரையும் கொண்டுசென்று அவர் காலடியில் வைப்பதற்கு தயங்கியிருக்கமாட்டார். அரைக்கணம் அவர் தயங்குவாரெனில்கூட என் அன்னை ஒருபோதும் பிறிதொன்றை எண்ணியிருக்கமாட்டார். இந்த மணிமுடியும் நாடும் அவர் கொடையென்கையில் அதிலொரு சிறு பகுதியை எடுத்து தன் அன்னைக்கு அவர் கொடுப்பதில் என்ன பிழை?” என்று துரியோதனன் கேட்டான். “அவர் மீண்டும் தன் அன்னை முன் தன் மணிமுடியையும் உறவையும் அல்லவா துறந்திருக்கிறார்?”

துச்சாதனன் “எந்நிலையிலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் இந்நாட்டையும் முடியையும் உங்களுக்கு அளித்தாரெனில்கூட அக்கொடையை காத்து நிற்பது அவருடைய பொறுப்பு. அன்னைக்கு அளித்த சொல்லுறுதியினூடாக அவர் உங்களை கைவிட்டிருக்கிறார்” என்றான். துரியோதனன் “இது அவருடைய நிலம். இதில் அவர் உகந்து எனக்கு அளிப்பதே என்னுடையது. இவ்வண்ணமேனும் அவர் எனக்கு அளித்தாரென்பது எனக்குப் பெருமை. அன்னையைக் கடந்து என்னை ஏற்றார் என்பது என் பிறவிப்பயன்” என்று துரியோதனன் சொன்னான்.

துச்சாதனன் கசப்புடன் “அவர் நாளை அர்ஜுனனை கொல்வதாக வஞ்சினம் உரைக்கிறார். அது நிகழப்போவதில்லை. மீண்டும் அவரது கொடையை நம்பியே அவர்கள் வருவார்கள். அர்ஜுனனின் உயிரை வேறு எவ்வகையிலேனும் மன்றாடி பெறுவார்கள். அதையும் அவர் கொடுப்பார். தன்னிடம் இரப்பவனிடம் இல்லையென்று சொல்ல அவரால் இயலாது என்று அறிந்திருக்கிறார்கள். அவ்வாயிலினூடாகவே உள்நுழைவார்கள். அவரை அழித்து நம்மை வெல்வார்கள்” என்று சொன்னான்.

துரியோதனன் “நான் ஊழுடன் விளையாடிக்கொண்டிருக்கிறேன். ஊழின் கருநீக்கங்கள் என்ன என்பதை கணக்கிடுவதை கைவிட்டுவிட்டேன். ஊழுடன் ஒப்ப நின்று பொருதுவதற்கான ஆற்றலையும் உளநிலையையும் மட்டுமே திரட்டிக்கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாள் இப்போர் தொடருமென்று தெரியவில்லை. வென்றவருக்கு என்ன எஞ்சுமென்றும் இப்போது சொல்லக்கூடவில்லை. வென்றவரும் தோற்றவரும் நிகரென்று தெய்வங்கள் முன் நின்றிருக்கும் நிலையை இப்போதே நாம் வந்து அடைந்துவிட்டோம்” என்றான். “இளையோனே, என் முதல் தம்பி களம்பட்ட அன்றே நான் முற்றிழந்தவனாகிவிட்டேன். எஞ்சியிருப்பது வந்த நிலையை தக்க வைத்துக்கொள்ளும் முனைப்பும், பொருத எழுந்தபின் ஒருபோதும் தணியவில்லை என்னும் இறுமாப்பும் மட்டுமே. பிறிதொன்றும் என்னிடம் சொல்லத் தேவையில்லை.”

துரியோதனன் உடலை நீட்டி கைவிரித்து அலுப்பொலி எழுப்பி “என் வாழ்வை இன்று இக்களத்தில் அங்கர் கையில் அளிக்கவில்லை. வில்லுடன் அவர் அக்களத்தில் எழுந்த அன்றே அளித்துவிட்டேன். இதுவரை அவர் அளித்த அனைத்தும் அவரது கொடை. இனியும் அவர் அளிப்பது எதுவோ அதுவே என் வாழ்வு” என்றபின் கண்களை மூடிக்கொண்டான். துச்சாதனன் திகைப்புடன் துரியோதனனை நோக்கியபடி அசைவற்று நின்றான்.

முந்தைய கட்டுரைகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிட இயக்கம் -கடிதம்