அன்புள்ள ஜெ,
நான் கடவுள் எப்படிப்பட்ட படம்? ஆன்மீகப்படமா தத்துவப்படமா?
கெ.எம்.கணேஷ்
இரண்டுமே இல்லை. அடிதடிப்படம். பாலாவின் மனம் வன்முறையால் ஆனது. மனிதமனம் வன்முறையை உச்சகட்டமாகச் சந்திக்கும் கணங்களில்தான் அவரது மனம் ஈடுபடுகிறது. அதைத்தான் அவர் எடுத்திருக்கிறார். நான்கடவுள் விரிந்த காட்சிப்புலம் கொண்ட பரபரப்பான மூர்க்கமான சண்டைப்படம் என்பதே சரி.
சண்டைப்படத்தில் கதாநாயகன் அசாதாரணமான உளவலிமையும் மனவலிமையும் கொண்டவனாக இருந்தாக வேண்டும். பல கோணங்களில் அந்தக் கதாபாத்திரத்தை அமைப்பதே சண்டைப்படத்தின் சவால். ரஜினி, விஜய் படங்களில் அந்த நடிகர்களுக்கே அத்தகைய பிம்பம் உள்ளது.
ஆகவே மையக்கதாபாத்திரத்துக்கு முற்றிலும் வேறுபட்ட ஒரு பின்னணி தேவைப்பட்டது.காசியின் அகோரிகளில் ஒருவராக அவர் உருவாக்கபப்ட்டது அதனால்தான். அவர்களின் வாழ்க்கைமுறை காரணமாகவே அவர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் வழக்கமான சண்டைப்படங்களைப்போல அல்லாமல் நான் கடவுள் படத்தில் உண்மையான வாழ்க்கைப்பின்புலம் ஒன்று உள்ளது. அது வழக்கமான தமிழ் சினிமாவால் ஒருபோதும் தீண்டப்பட முடியாத ஒன்று. நாம் ஒவ்வொரு நாளும் காணும் ஓர் உலகம். நாம் கண்டும் காணாமலும் போகும் ஓர் உலகம் — ‘ஏழாம் உலகம்’.
**
அன்புள்ள ஜெயமோகன்,
நலம்தானே? உயிரெழுத்து ஜனவரி இதழில் காலச்சுவடு கண்ணனின் பேட்டியை பார்த்தீர்களா?
எழுத்தாளர் ஆர்
அன்புள்ள ஆர்,
பார்த்தேன். பேட்டி முழுக்க நிறைந்திருக்கும் கோபமும் வன்மமும் மட்டுமே அதை கவனிக்கச்செய்கிறது. தமிழில் அ.மார்க்ஸ¤ம் காலச்சுவடு கண்ணனும் ஒருவகையில் சமானமானவர்கள். இருவருக்கும் தற்சமயம் அவர்களுடன் இருக்கும் சிலர் தவிர பிற அனைவருமே எதிரிகள். முந்தைய நாள் வரை கூடவே இருந்தவர்கள், பல வருடம் சேர்ந்து பணியாற்றியவர்கள் கூட வெறுக்கத்தக்கவர்கள். அவர்களைப்பற்றி நல்லதாக ஒருவரிகூட சொல்வதற்கு இல்லை. அவர்களின் பங்களிப்புகூட ஒரு பொருட்டல்ல. ஒருவகையில் முற்றிலும் எதிர்மறையாக உறுதிப்பட்டு விட்ட ஆளுமைகள் இவர்கள்.
அ.மார்க்ஸைப்பொறுத்தவரை வெறுப்பு அவரது விற்பனைப்பொருள். கண்ணன் அப்படி அல்ல. இத்தனை வருடங்களாக அவருடன் இருந்த ஒவ்வொருவராக ஏன் அவரை விட்டுச்செல்கிறார்கள் என அவர் கொஞ்சமாவது சிந்தனை செய்யவேண்டும். அவர் தமிழ்ப்பண்பாட்டு உலகுக்கு வந்து பதினைந்து வருடங்களே ஆகின்றன. இதற்குள் இத்தனை வன்மத்தை சக இலக்கியவாதிகள் மேல் சேர்த்து வைத்திருக்கிறார். இந்தச்சுமையுடன் அவர் இனிவரும் அத்தனை வருடங்களையும் கடக்க வேண்டும்மா என்ன?
வன்மங்களைச் சேர்ப்பது நெடுங்காலப்பணி. உதறி விடுபட்டு முன்னகர்வதற்கு ஒருகணம் போதும்.
***
ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்:புதியமாதவி, மும்பை
ஜெயமோகனின் ஏழாம் உலகம்”அ.முத்துலிங்கம்
ஜெயமோகனின் ஏழாம் உலகம் “பொ கருணாகர மூர்த்தி
ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்