கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

எனது பெயர் பாலாஜி, வயது 25. நான் ஒரு கணினி பொறியாளர். எங்களது நிறுவனர் உங்கள் புத்தங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நானும் உங்களது கதைகளை இணைய தளத்தில் படிப்பேன் , அதில் கைதிகள் கதை என்னை மிகவும் பாதித்தது.

 

இக்கதையில் குறிப்பிடப்பட்ட அனைத்து விசயங்களும் மிகவும் யதார்த்தமா இருந்தது. நானும் எட்டு மாதங்களாக அங்கேயே வாழ்வது போன்று இருந்தது. கதா பத்திரமாக மாறிவிட்டேன். குழந்தைகளை பார்க்க வேண்டும் என்ற பெருமாளின் ஏக்கம், எனது முந்தய கால நினைவுகளை அசை போட செய்தது. நானும் எனது தாய் தந்தை மற்றும் தங்கை பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தை நினைவுபடுத்தியது. நான் ஒரு உனவு விரும்பி நீங்கள் குறிப்பிட்ட கல்கண்டுக்கல் மற்றும் உருளை கிழங்கு மசியல் சாப்பிட வேண்டும் என ஆசை ஏற்பட்டுவிட்டது. கருப்பையாவின் உருவம் எனக்கு ஐய்யனார் எல்லைச்சாமி கண்முன் கொண்டுவந்தது.

 

இதில் வரும் கிளை கதை மிகவும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அந்த பெணின் கதறல் இன்னும் என் காதுகளை கிழிக்கிறது. இது கதை தான் என்று என் மனதை ஆறுதல் சொல்லிக்கொண்டேன்.

 

கடினமான சூழ்நிலையிலும் அவர்கள் மூவரும் ஒற்றுமை உடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அப்பு (முனுசாமி ) தன் மக்களுக்காக முன் வந்து பிடிபடும் இடம் நெகிழவைக்கிறது. என் பார்வையில் அவன் போராளியாக தென்படுகிறான்.

 

அப்புவை  (முனுசாமி ) தூக்கி செல்லும் வழியில் இருந்து நான் என்னை சிட்டு குருவியாகவே பாவித்தேன். அப்புவை கொலை செய்ய வேண்டாமென அவர்களை தடுக்க முற்பட்டேன். சிட்டு குருவிக்கு இருக்கும் இறக்க குணம் கூட மனிதர்க்கு இல்லை என்பது புலப்படுகிறது.

 

அப்பு கூறிய ‘இங்க வேல ரொம்ப கஷ்டம்தான் இல்ல தோழர்?, என் மனதை சம்மட்டியால் அடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. தன் உயிரை மாய்க்க போகிறார்கள் என்று தெரிந்தும் அப்படிபட்ட நலம் விசாரிப்பு என்பது மகத்தானது.

 

இக்கதையில் வரும் இரண்டு சாதியின் பெயர்களை குறிப்பிடுவதன் நோக்கம் என்ன ?

 

 

இதுவரை நான் எழுதியதே இல்லை, இதுவே நான் எழுதும் முதல் கடிதம். ஆதலால்  சொல் மற்றும் பொருள் பிழை இருப்பின் மன்னிக்கவும்.

 

 

இப்படிக்கு,

மு. பாலாஜி

 

அன்புள்ள பாலாஜி

 

இலக்கியவாசிப்புக்குள் நுழைகிறீர்கள். வாழ்த்துக்கள். வாசகர் கடிதம் அல்லது வேறு ஏதேனும் வடிவில் வாசித்தவற்றைத் தொகுத்துக்கொள்வதும் நல்லதுதான். அது வாசிப்பைத் தெளிவுபடுத்திக்கொள்ள உதவும். பிழைகளைப் பற்றிக் கவலைவேண்டாம், நேர்மையான தீவிரம் மட்டுமே இங்கே பெறுமதி கொண்டது

பொதுவாக வணிகக் கதைகளில் சாதி சொல்வதில்லை – சாதியை துதிக்கும்போது தவிர. இலக்கியப்படைப்புக்களில் அவற்றுக்கு அக்கதையில் பண்பாட்டுரீதியான இடம் இருக்கும் என்றால் சாதி சொல்லப்பட்டிருக்கும்

கதை உருவாக்கும் உணர்ச்சிகளை எளிய கேள்விகளாக ஆக்கிக்கொள்ளாமல் உள்ளூர வளர்த்து எடுங்கள்.

 

ஜெ

 

வணக்கம் ஜெ,

நான் கடவுள் படத்தில் வரும் வசனம்.

ஐயிரண்டு திங்களாய் அடங்கி நின்ற தூமையே
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டு ஆனதே
உடம்பாவது ஏதடி? உயிர் ஆவது ஏதடி?
உடம்பால் உயிர் எடுத்த உண்மை ஞானி நானடி.

உங்களுக்கு நேரம் இருந்தால் எளிய தமிழில் விளக்கம் சொல்லுங்க.

இன்று உருமாறும் சிவம் படித்தேன் எனக்கு பயனுள்ள புதிய தகவலாக இருந்தது. சில நாட்களாக உங்களின் பதிவுகளை தினசரி படிக்கிறேன் நல்லா இருக்கு.

அன்புடன்

அபிதா

 

அன்புள்ள அபிதா,

 

அது ஒரு சித்தர்பாடலின் இன்னொரு வடிவம். கருவில் அழுக்காகப் புகுந்த உயிர் ஞானம் கொள்வதைப்பற்றியது. உடம்பாக உருவாவது ரத்தம் – விந்து என்னும் தூமைகள்தான். உயிராவது வேறு. அது மெய்ஞானம் வழியாக அடையப்படுவது என்பது கருத்து

 

இத்தகைய வரிகளை ஒட்டி நாமே சிந்திக்கலாம், அதுவே உகந்த பயிற்சி

 

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்

 

பூமேடை அவர்களைப்பற்றி நீங்கள் எழுதி இருப்பது இப்போதுதான் தெரியவந்தது. நாஞ்சில் நாடனிடம் அவரைப்பற்றி எழுதுமாறு இருமுறை சென்னை புத்தக கண்காட்சி யில் கேட்டிருக்கிறேன்.

நான் அஞ்சல் துறை யின் களப்பணியாளனாக 96 _2003 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய போது நாகர்கோவில் தான் தங்குமிடம். அப்போது மாலை நேரங்களில் மணிமேடை அருகில் அவரே அமைத்துக்கொள்ளும் மேடை(?)யில் அவர் உரைகளை பலநாள் கேட்டுள்ளேன். “பூமேடை முழங்குகிறார்” என அவரே எழுதிய விளம்பர போஸ்டர்கள், நிறைய தாள்களை கையில் வைத்துக்கொண்டு பாடலும் சிரிப்புமாக அவர் ஆற்றும் உரை பெரிய அரசியல் தலைவர்களை அவன் இவன் என விளித்தல்! உண்மையில் அவரும் நாகர்கோவிலின் ஒரு”icon” தான்.

ஒருமுறை அவரது விளம்பரத்தில் “திடீர் வாரியலடித்திருவிழா”வை கண்டித்து பூமேடை முழங்குகிறார் என போட்டிருந்ததை பார்த்து நான் குழம்பி விட்டேன். அஞ்சலக நண்பர்களிடம் “வாரியலடி” என்றால் என்ன என்று கேட்டபின்தான் “துடைப்பம்” என தெரிந்து கொண்டேன். எங்கள் ஊர் கிருஷ்ணகிரி என்பதால் “தொடப்பம்” என்பதே வழக்கு.

கடைசியில் அந்த கூட்டத்தில்(இருவர் மூவர் மட்டுமே)  கலந்து கொண்ட போதுதான் அவர் அப்போது அறிவிக்கப்பட்ட “இடைத்தேர்தலை” நய்யாண்டி யாக ” வாரியலடித்திருவிழா” என பெயரிட்டுள்ளார் என தெரிய வந்து!

 

அன்புடன்

நேசராஜ் செல்வம்

கிருஷ்ணகிரி

 

 

அன்புள்ள நேசராஜ்

 

பூமேடையை நினைவுகூர்பவர்கள் இப்படிப் பலர் இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர் வெறும் நையாண்டிக்காரராக இருந்திருந்தால் மறக்கப்பட்டிருப்பார் அல்லவா? அவரிடமிருந்த அறம், இலட்சியவாதமே அவரைi அழியாமல் நிலைகொள்ளச் செய்கிறது

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-20
அடுத்த கட்டுரைகிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை-வெள்ளை யானை பற்றி…