திருமூலம்
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடன் பற்றிய உங்கள் கட்டுரை அருமையான ஒரு இலக்கியப் படைப்பின் சுவாரசியத்தைக் கொண்டிருந்தது. இலக்கியவிமர்சனமே இலக்கியமாக ஆவதை இதில் காணமுடிந்தது. நையாண்டியும் நுட்பமான நகைச்சுவையும் கொண்ட பல பகுதிகள். தொடக்கத்தில் வரும் வாட்ச்மேனின் காக்காய் உவமை நையாண்டி என்றால் உள்ளே பல்குத்துவதற்கு ராமபாணம் ஏன் தேவைப்படுகிறது என்பது நுண்ணிய கிண்டல். சிரித்துக்கொண்டே வாசித்தேன், கடைசி வரி வரை.
இதிலுள்ள பல உவமைகளை எண்ணிக்கொண்டே இருந்தேன். நாஞ்சில்நாடனின் கதைகளில் ஊடுகுரலாக வரும் அவருடைய பேச்சை மடியில் குழந்தையை அமரச்செய்து அதற்கும் ஊட்டிக்கொண்டே சாப்பிடுதல் என்று சொல்லியிருப்பதை நினைத்து வியந்தேன். [நாஞ்சிலைப்பற்றி பந்திச்சாப்பாடு இல்லாமல் பேசமுடியுமா என்ன?] அந்த உவமை ஒரு கவிதை போல் இருந்தது. திறனாய்வு என்பது நினைவில் நிற்பதாக ஆவது இதைப்போன்ற அழகான படிமங்கள் வழியாகவே. டி.எஸ்.எலியட் முதல் ப்ளூம் வரை இத்தகைய மெட்டஃபர்கள் வழியாகவே பேசுகிறார்கள். வாழ்த்துக்கள்
டி.ஆர்.ஜனார்த்தனன்
அன்புள்ள ஜெ
நாஞ்சில்நாடன் பற்றிய கட்டுரை அருமை. நாஞ்சில் பற்றி நீங்கள் ஒரு நூல் அளவுக்கே எழுதியிருக்கிறீர்கள்.கமண்டலநதி நாஞ்சிலைப்பற்றி எல்லாக் கோணங்களிலும் பேசுகிறது. இனி என்ன பேசமுடியும் என எண்ணியபோது நீங்கள் எழுதிய நாஞ்சில்நாடனின் கும்பமுனி என்னும் கட்டுரை அதுவரை பேசாத ஒரு கோணத்தை திறந்தது. கும்பமுனி என்பவர் கவிமணியும் நகுலனும் நாஞ்சிலும் கலந்த கலவை என்ற கோணம் முற்றிலும் புதிதாக இருந்தது. மொத்தக்கதைகளையும் வேறுவேறு கோணங்களில் திறந்தது
அதன்பின் இப்போது என்ன எழுதமுடியும் என பார்த்தபோது மீண்டும் ஆச்சரியம். இதுவரை திறக்காத ஒரு கோணம். நாஞ்சிலின் கும்பமுனி பிராந்து முதலிய வெவ்வேறு கதாபாத்திரங்கள் வழியாக உருவாகி வருவதை எழுதியிருந்தீர்கள். இப்போது அது அந்த ஊடுகுரல்தன்மை வழியாக எப்படி உருவாகியிருக்கிறது என்பதை காட்டுகிறீர்கள். அந்த ஊடுகுரல்தன்மை எப்படியெல்லாம் நாஞ்சிலின் கதைகளில் ஓர் அழகியலாக வெளிப்படுகிறது என்றும், தமிழில் புதுமைப்பித்தன் முதல் அந்த ஊடுகுரல் என்ற புனைவு அம்சம் எப்படியெல்லாம் வளர்ந்து வந்து நாஞ்சிலை அடைந்துள்ளது என்றும் சொல்கிறீர்கள். இந்தக் கோணம் புதிய ஒரு பார்வையை உருவாக்குவதாக உள்ளது
நாஞ்சிலைப் பற்றி இதுவரை சொல்லாத ஒரு பார்வையுடன் அடுத்த கட்டுரையை எதிர்பார்க்கிறேன்
ஆர். மாதவன்
நாஞ்சில் நாடனின் கும்பமுனி
கும்பமுனி யார்?
கும்பமுனியின் காதல்
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)