வாசகர் கடிதமும் திறனாய்வும்

 

இரவு – திறனாய்வு

ஜெ

 

இதற்கு‌  பதிலையும் நானே கண்டடைய வேண்டுமா என தெரியவில்லை. இருந்தாலும், கேள்வியை உங்களிடம்  கேட்டு வைக்கிறேன்.

 

நான் இரவு நாவலை வாசித்துவிட்டு, அதைப்பற்றி எழுத நினைத்த நேரத்தில் தான் ஸ்டீபன் ரான் குலசேகரனின் ‘இரவு – திறனாய்வு’ பிரசுரம் ஆனது.

 

அ. அவரது வாசிப்பனுபவம் திறனாய்வா? அந்த தலைப்பு தாங்கள் அளித்ததா? ஆம் என்றால் அந்த வாசிப்பு முறையின் பயன் என்ன? அத்தியாயம் அத்தியாயமாக வாசித்து அதை பற்றி ஒரு கருத்து / அனுபவத்தை எழுதுவது. இதன் மூலம் அவர் நாவலை  முழுமையாக அனுகவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது.  கடைசி அத்தியாயத்தில் வருவது தான் தரிசனமா? அது தான் அவரது தரிசனம் என்றாலுமே, முழு நாவலில் அந்த தரிசனம் எப்படி எழுகிறது என்றல்லவா பேச வேண்டும்?

 

ஆ. ஒருவேளை,  இது  textual readingஆ?

என்னைக் கேட்டால், சரவணன் கூறும் “ஆறுவருடம் இங்கே இருந்தால் நான் மலையாளத்தில் மரபுக்கவிதை எழுதுவேன்” என்பதைக் கொண்டு, அவனை புரிந்துக்கொள்ள முயல்வதையே  textual reading என கூறுவேன். இதுப்போல், பல விஷயங்கள்  நாவலில் ஒளிந்துள்ளது. அவர் எதையும் தேடி அடைந்தது போலும் தெரியவில்லை.

 

3) ஏதேனும் புதிய திறப்பை தந்ததா?  பிற அனைத்து வாசிப்பு பதிவுகளையும் வாசித்தால் தான் இதற்கு அறுதியாக பதில் கூற இயலும். ஆனால் அவர்  ஒரு திறப்பை முன் வைப்பதுப்போலவே எனக்கு தெரியவில்லை.

 

4) மொத்ததில் அவரது பதிவின் / விமர்சனத்தின் முக்கியத்துவம் என்ன? அல்லது, இதை ஒரு வாசகர் கடிதம் என கடந்து போகலாமா?

அன்புடன்,
சந்தோஷ்.

 

பிகு: நான் ஒரு கட்டுரை எழுதிவிட்டு தான் இப்படி விமர்சிக்க வேண்டுமா? இரவை பற்றி எழுத அதை மேலும் இரு முறையேனும் வாசிக்க வேண்டும். உங்கள் ‘எனது பெயர்’ சிறுகதைக் குறித்த குறிப்பையே பல நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பத்மா பெண்ணாக பெற்ற அனைத்து வெற்றியையும் பெண் என்ற அடையாளத்தை கடக்க முயலும் பொழுது இழக்கிறாள். இதை வாசகர்கள் ஏற்கனவே ஓரளவிற்கு வந்தடைந்து விட்டனர்.‌ அதைத் தா‌ண்டி நான் அளிக்கக்கூடியது என்ன என்று தான் கேட்டுக்கொண்டுருக்கிறேன்.

 

அன்புள்ள சந்தோஷ்

 

அது திறனாய்வு அல்ல, வாசகர் கடிதம் . திறனாய்வு என தற்செயலாக ஒரு தலைப்பு அமைந்துள்ளது. அதுதான் உங்களைக் குழப்பிவிட்டது என நினைக்கிறேன்.  அது ஒரு கட்டுரை அளவுக்கு நீளமாக இருந்தமையால் அத்தலைப்பு போடப்பட்டது. அது அப்படைப்பு உருவாக்கிய உளப்பதிவுகளை எழுதுவதற்கான முயற்சி மட்டுமே.

 

பொதுவாக நான் புனைவை வாசித்துவிட்டு எவ்வகையிலேலும் அதைப்புரிந்துகொள்ள முயலும் வாசகர்கடிதங்களை ஏற்கிறேன், அம்முயற்சியை ஊக்குவிக்கிறேன். ஏனென்றால் அது இங்கே மிகமிகக் குறைவு. இங்கே இணையத்தில் எழுதிக்குவிக்கப்படுவன சினிமா, அடுத்தபடியாக அரசியல், அடுத்தபடியாக தனிநபர் வம்புகள், பாலியல் உரையாடல்கள். பல்லாயிரத்தில் ஒரு பகுதிகூட இலக்கியம், அறிவுத்துறை சார்ந்தது அல்ல. ஆகவே எல்லாவகை எழுத்தும் நன்றே.அது உண்மையான முயற்சியாக இருக்கவேண்டும், பொறுப்பாகச் செய்யப்படவேண்டும். செயற்கை விளையாட்டுத்தனம் கொண்ட எழுத்து , அரசியல் மற்றும் தனிநபர் வன்மங்களும் சாதி மதக்காழ்ப்புகளும் கொண்ட எழுத்து ஆகியவை மட்டுமே புறக்கணிக்கப்படவேண்டியவை.

 

ஒரு நூலை வாசித்தபின் அதைப்பற்றி ஏதேனும் எழுதுவது நன்று. அது நம் வாசிப்பை நாம் தொகுத்துக்கொள்ள உதவும். நாம் எழுதியது நமக்கு மறக்காது. ஆகவே வாசித்தது வீணாகாது. இவ்வகை வாசகர்கடிதங்களும் அத்தகைய தொகுப்பு முயற்சிகளே. அவற்றில் வாசித்தவற்றை சுருக்கமாக தனக்கே சொல்லிக்கொள்ளும் கூறுதான் மிகுந்திருக்கும். அரிதாக வாசித்தவற்றில் இருந்து ஒரு நினைவுகூர்தல், இன்னொன்றுடன் ஒப்பிடுதல் ஆகியவை நோக்கிச் செல்லும். மதிப்பிடுதல் அடுத்தகட்ட வளர்ச்சியால்தான் உருவாகும்

 

இந்தவகையான வாசகர் கடிதங்களில் செய்யக்கூடாதன சில உண்டு

 

அ. ஒருபோதும் சம்பந்தமற்ற ஒரு நினைவுகூர்தலை இணைத்துக்கொள்ளக் கூடாது. இதை வாசிக்கையில் இது நினைவுக்கு வந்தது என்ற வகை எழுத்து பெரும்பிழை. நினைவுக்கு வருவதில் எந்த ஒழுங்கும் இருப்பதில்லை. இலக்கியப்பேச்சு என்பது ஒழுங்கை உருவாக்குவதுதான். ஆகவே ஒன்றை இணைத்துப்பேசுகிறோம் என்றால் அதற்கான நோக்கம் இருக்கவேண்டும். அது அந்தப் படைப்பை மேலும் துலங்கவைக்கவேண்டும். சொல்லும் கருத்துக்கு வலு சேர்க்கவேண்டும்

 

ஆ. ஒரு படைப்பை வாசித்து அடையும் முடிவு அல்லது தெளிவு அப்படைப்புக்குள் இருந்து பெற்றதாக இருக்கவேண்டும். படைப்பிலிருந்து உணர்வாலும் நினைவாலும் எங்கோ சென்று அங்கே பெற்றவற்றை படைப்பின் மேல் சுமத்தக் கூடாது.

 

இ. படைப்பை சிறுமைசெய்யும்படியான பேச்சு எவ்வகையிலும் நம்மில் எழக்கூடாது. செயற்கையான விளையாட்டுத்தனம் படைப்பைச் சிறுமைசெய்யும் செயல்தான். நம் பதிவு நேர்மையாக இருக்கவேண்டும்

 

உ. ஒற்றைவரி கருத்து – அதை comment என்பார்கள்- இலக்கிய தத்துவ விமர்சனத்தில் எவ்வகையிலும் பயனுள்ளது அல்ல. எந்த ஒரு கருத்தும் அதற்குப்பின்னாலுள்ள புரிதலால், தர்க்கத்தால் வலுவூட்டப்பட்டிருக்கவேண்டும். கிண்டல் நக்கல் மட்டுமல்ல மேம்போக்கான கருத்தும்கூட இவ்வகைப்பட்டதே. உதாரணமாக ஒரு படைப்பைப் படித்துவிட்டு ‘ரஜினிகாந்த் படம் போலிருக்கிறது’ என்பது ஒரு ஒற்றைவரிக்கருத்து. சொல்பவரின் கீழ்த்தர அறிவுநிலைக்கு மட்டுமே அது சான்று. ரஜினிகாந்த் படம் என்னும்போது அவர் எண்ணும் கூறுகள் என்ன, அது ஏன் இப்படைப்பில் உள்ளது என அவர் விளக்கும்போது மட்டுமே அது கருத்து. அதேபோல மிக அபத்தமான கருத்து ‘வாசிக்கவே முடியவில்லை’ என்பது

 

இலக்கியவிமர்சனம் என்பது அடுத்தகட்டம். அதற்கு விரிவான பின்புல வாசிப்பும் அதிலிருந்து பெற்ற தெளிவான அளவுகோல்களும் அவ்வளவுகோல்களை படைப்பின்மேல் போடுவதற்கான தர்க்கமுறையும் தேவை. அது முற்றிலும் இன்னொரு களம். ஆனால் திறனாய்வு வாசகர் கடிதம் வழியாகவே தொடங்குகிறது.

 

திறனாய்வு என்பதே மூன்று வகையானது. மதிப்புரை, [ review  நயமுரைத்தல் [Book Appreciation] திறனாய்வுக் கட்டுரை [Critical analysis]   என மூன்றுவகை.

 

மதிப்புரை என்பது எப்போதும் குறிப்பு என்னும் வடிவம் கொண்டது. நூலின் உள்ளடக்கம் பற்றிய தொகுப்பு, நூலின் மதிப்பு மற்றும் இடம் பற்றிய விளக்கம், நூல் மீதான சுருக்கமான மதிப்பீடு ஆகியவை அடங்கியது அது.

 

நயமுரைத்தல் என்பது எப்போதும் குறுங்கட்டுரை [essay] வகையானது. அதில் சிறுகதைக்குரிய எடுப்பும் முடிப்பும் இருக்கவேண்டும். ஒரு நூலைப்பற்றிய மதிப்பீடும் அம்மதிப்பீட்டை நிறுவும் தர்க்கமும், அதை ஒட்டிய பிறசெய்திகளும் அடங்கியது.

 

திறனாய்வுக்கட்டுரை என்பது ஆய்வுக்கட்டுரை [article] வடிவம் கொண்டது.  உள்ளுறையைச் சுருக்கமாகச் சொல்லும் முகவுரை, விரிவான ஆய்வும் மதிப்பீடும் அதற்கான தர்க்கமும் சான்றுகளும் கொண்ட உடல், தொகுத்துச்சொல்லும் முடிவுரை ஆகியவை கொண்டது அதன் வடிவம்.

 

இவற்றை நம் சந்திப்புகளில் விரிவாகவே பேசியிருக்கிறோம்.

 

 

ஜெ

 

இரவு – அனுபவங்கள்

இரவு ஒரு கடிதம்

இரவு பற்றி…

இரவும் எழுத்தெனும் யட்சியும்

இரவு – நாவல் குறித்து.

இரவு எனும் தொடக்கம்

 

முந்தைய கட்டுரைதிராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னை கண்டனக்கூட்டத்தில்…