அறிபுனை- விமர்சனப்போட்டி
அரூ இணையதளத்தில் அறிபுனை கதைகள் போட்டியில் வென்ற கதைகளைப் பற்றிய விமர்சனம். பாலாஜி பிருத்விராஜ்
அறிபுனைவுகள் குறித்து நவீன தமிழிலக்கிய வாசகனுக்கு ஒரு கற்பிதம் உண்டு. அது அன்றாடத்தில் காலூன்றாததாலேயே அதன் நிகழ்களம் இதுவரை நம் இலக்கியச் சூழலிலிருந்து வெளியே இருப்பதாலேயே உண்டாகும் சிக்கல் அது. அத்தகைய படைப்புகள் ஒரு வகை கேளிக்கையாகவோ அல்லது அதில் பேசப்படும் அறிவியல் கருத்துக்களால் அது தீவிர இலக்கியத்தின் வெளியே பாடத்திட்டத்தின் மனநிலையை கொண்டுள்ளதாகவும் அவன் நினைக்கிறான். மேலும் அதில் தர்கத்தின் ஒழுங்கு இல்லாததால் அது வாசகனை ஏமாற்றி வெறும் சுவாரஸ்யத்தை மட்டுமே தரும் ஒரு சராசரிப் பிரிவில் அதை அட்டவணை படுத்திக் கொள்கிறான். இந்த மனநிலைக்கு அதுபோன்ற காத்திரமான படைப்புகள் தமிழில் நிறைய இல்லாததும் அதை ஒரு மரபாக வைத்து இங்கே பேசப்படாததும் காரணமாக இருக்கலாம். அதேசமயத்தில் ஹாலிவுட் அறிமிகைபுனைவுகள் தொடர்ந்து நமக்கு அறிமுகவாவதும் அந்த கருத்து நிலைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. உண்மையில் இங்கு அறிபுனைவுகளின் தேவையும் படைப்பிலக்கியத்துல் அது மட்டுமே உருவாக்கக்கூடிய சாத்தியக் கூறுகளும் இங்கு விவாதிக்கப் படவில்லை.
அரூ இதழில் வெளியான இந்த பத்து சிறுகதைகளையும் வாசிக்கும் முன்பு எனக்கும் அப்படியான மனநிலையே இருந்தது. இப்போது இதுகுறித்து யோசிக்கும் போது கீழ்கண்ட எண்ணங்கள் உருவாகின்றன.
- இப்படைப்புகள் நிகழ்த்தும் கற்பனைப் பாய்ச்சல் அபாரமானது. ஏனென்றால் இவை ஒரு அறிவியல் அடிப்படையை எடுத்துக் கொண்டு அதிலிருந்து கற்பனை கொண்டு தாவித் தாவி மேல் செல்கிறது. அத்தகைய தாவல்களுடன் வாசகன் பின்தொடரும்போது அவன் பெரும் புனைவுத் திருப்தி பன்மடங்காகிறது. கதையின் சூழல் அன்றாடத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதலேயே அது கொள்ளும் புனைவு சாத்தியங்கள் விரிந்து கொண்டே செல்பவை.
- இவ்வகையான புனைவுப் பாய்ச்சல்கள் நிகழும் அதே சமயத்தில் அத்தனையும் குறீயீட்டுத் தன்மையும் கொண்டு விடுகிறது. இந்த அம்சமே மேற்சொன்னதை வெறும் கேளிக்கையாக மாற்றாமல் தீவிர இலக்கியத்திற்குள் நிறுத்துகிறது. இதுகாறும் நம் நவீன இலக்கியம் அறிவியலுக்கு வெளியேயுள்ள விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதால் நம் அறிவியலுக்கும் கலைக்கும் பெரிய இடைவெளி விழுந்து விட்டது. அறிவியல் வெறும் லௌகீகத் தேவைக்கான ஒரு கருவியாக மட்டும் நின்று விட்டது. எண்ணிப் பாருங்கள் நாம் பள்ளிகளில் கற்ற ஒரு கருத்து நம் வாழ்வை விளக்கும் ஒரு படிமமாகும் போது நமக்கு முன்னே திறக்கும் சாத்தியங்கள் எவ்வளவென. மேற்குலகில் பேரிலக்கியவாதிகள் பெரும்பாலும் அறிவியல் அறிஞர்களாகவும் இருந்துள்ளனர். அவர்களின் படைப்புகளில் பௌதிகம் தொடங்கி உடற்கூறியல் வரை அனைத்தும் கச்சா பொருட்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதன் மூலம் ஒரு புனைவு கொள்ளும் வீரியம் பலபடிகள் மேற்செல்கிறது.
- இத்தகைய புனைவுகளின் கவனம் ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறை அடித்தளமாக கொண்டுள்ளதால் இதில் பேசப்படுபவைகளும் ஒரு உயரம் கொள்கிறது. யதார்த்தக் கதைகளில் பேசமுடியாத அதன் அழகியல்களுக்குள் சிக்காதவை இதில் பயின்று வருகிறது. உயர்தத்துவமும் பெருவெடிப்பும் பேசப்பட இப்படியான ஒரு விலகிய கட்டமைப்பின் தேவையுள்ளது.
- அன்றாடத்தை ஒட்டிய கதைகளில் கதையோட்டத்தை தாங்கிப் பிடிக்க பல உபகரணங்கள் உள்ளன. வாசகனை அவனுக்குரியப் புள்ளியில் கொக்கித் தூக்கி தன்னுடைய மைய்யத்தை நோக்கி கொண்டுவர பல ஊடுவழிகள் உள்ளன. ஆனால் இத்தகைய அறிபுனைவுகளில் அதற்கான சாத்தியப்பாடுகள் ஒப்புநோக்க குறைவு. தன்னுடைய கவித்துவ மொழியாலும் கற்பனை வளத்தாலுமே இவை கலைவெற்றிகளாகின்றன.
வெளியான பத்து கதைகளும் என் தனிப்பட்ட ரசனைக்கேற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் ஐந்து கதைகளும் ஏறக்குறைய சம அளவில் முதன்மையானவை. அனைத்தையும் ஒரேசமயம் எழுதமுடியாததால் ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. J
யாமத்தும் யானே உளேன் – சுசித்ரா:
இதன் முதன்மை சிறப்பம்சமென்பது இதில் பயின்று வரும் பல விஷயங்கள் கதையின் முடிவில் குறீயீட்டுத்தன்மை கொள்வது தான். அந்த சிவப்பு பொத்தானும், மரத் திருகுகளும், பறவை செயலிகளும் கதையைத் தாண்டி நம் வாழ்வுக்கான சொந்த படிமங்களாக மாற்றம் கொள்கின்றன. அடுத்து எந்த அளவு கதையில் அறிவியல் கூறுகள் பேசப்படுகிறதோ அதேயளவு தனிமனித உளவியல் சிக்கல்களும் பேசப்படுகின்றன. வலியால் கௌதமன் கொள்ளும் உளவியல் மாற்றங்களுக்கும் இதில் இடம் தரப்பட்டுள்ளது. மேலும் இதிலுள்ள கதைத்தன்மை மிக வலுவானது. கௌதமனுக்கும் அவனது தாய்க்கும் இடையிலிருக்கும் நாடகத் தருணங்களும் அதை படிப்படியாக அவிழ்த்துச் செல்லும் லாவகமும் ஒரு தேர்ந்த புனைவாசிரியனுக்கானவை. இது அனைத்திற்கும் மேலாக இதை ஒரு மிகச்சிறந்த படைப்பாக்குவது இதிலுள்ள புராண இணைப்பு அம்சம்தான். கௌதமனுக்கு சொல்லத் தொடங்கும் புராண கதையில் துவங்கி அவனுடைய புராணக் கதை சொல்லலில் நிறைவுறுகிறது. அவனும் கர்ணனும் புராணவெளியில் கொள்ளும் இணைப்பு இக்கதை கொள்ளும் உச்சம். ஒரு விழுமியத்தின் இரு வேறு வடிவங்களாகின்றனர். அதேபோல் தலைப்பு கதையில் கொள்ளும் தொடர்பு அபாரமானது. இரு நித்யத் தனிமைகள். ஒருத்தி நிலமகள். ஆதிப்புராதனமானவள். இன்னொருவன் தானியங்கி. அதிபுதியவன்.
இக்கதையின் வடிவத்தை எண்ணும் போது ஒரு மைய்யத்தைக் கொண்ட சிறிதும் பெரிதுமான இரு வட்டங்கள் நினைவிலெழுகின்றன. கர்ணன் கதை தொடங்கி கௌதமனின் பின்புலம் தெரியும் வரையிலான சிறிய வட்டம். இதன் உள்ளடக்கம் இறப்பு மற்றும் வலி வாழ்வுடன் கொள்ளும் உறவு. இன்னொன்று புராணக் கதைசொல்லியின் குரலில் தொடங்கி கௌதமனின் முடிவு வரையிலான பெரிய வட்டம். இரண்டும் அதற்கான வடிவ ஒருமையோடு இரு சிறந்த தனிக்கதைகளாக மாற்றலாமென எண்ணுகிறேன். எனினும் இதை ஒரு குறையாக கூறமுடியாது.
பல்கலனும் யாம் அணிவோம் – ரா.கிரிதரன்:
ஒரு அறிபுனைவு எப்படி இருக்கவேண்டுமென்பதற்கான சிறந்த உதாரணம் இக்கதை. இதில் காட்டப்படும் அந்த பிரத்யேக உலகின் எண்ணற்ற நுண்தகவல்கள் ஒரு பெரும் நாவலின் ஒரு அத்தியாயத்தை படிக்கும் ஒரு பிரமிப்பைத் தந்தது. ஐசக் அசிமோவின் விதிகள், ஆல்ஃபாக்களின் தலைமுறைகள், மைய இந்திய நிலத்திலிருந்து துண்படுத்தப்பட்ட புதுமதுரை மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகள், அப்பல்லோ மையம், பியேர்ட்டொ ரீக்கா ஒப்பந்தம் என வரிசையாக வரும் குறிப்புகளை வைத்து வாசகன் தனக்கேயான ஒரு உலகை புனைந்து கொள்ளலாம். இத்தகைய தகவல்களை அடுக்கும் ஒரு அறிவியல் ஆர்வலரின் மனநிலைக்கு நேரெதிராக இக்கதையின் மையம் வைக்கும் விழுமியம் அமைந்துள்ளதே இதை ஒரு அகச்சிறந்ததாக ஆக்குகிறது. மனிதன் அதன் எல்லைகளைக் கடந்து அவனது கூட்டு நனவிலியின் அதிசாத்தியங்கள் கிடைப்பினும் அது ஒரு குறைபட்ட மானுடத்தை நம்பி படைக்கப்பட்ட சகமனிதனின் பலியால் நிகழுமென்றால் அதை உதறித் தள்ளி அம்முன்னேற்றத்திற்கு எதிர் நிலையெடுக்கும் தருணத்தோடு இக்கதை முடிகிறது. அம்மனநிலையின் வெளிச்சத்தில் இக்கதையின் தலைப்பு இணைந்து கொள்ளும் போது ஏற்படும் நெகிழ்வு தான் இதன் உச்சப்புள்ளி.
இதில் எனக்குப் பட்ட குறைபாடென்பது அங்கங்கு கதையின் ஒழுக்கு முட்டி நின்று மீண்டும் நகர்கிறது. மொத்தக் கதையும் ஒற்றையோட்டமாக மாறாமல் தடைபட்டு தயங்கி மீள்கிறது.
கடவுளும் கேண்டியும் – நகுல்வசன்:
சில கதைகள் அதன் சூழலை சரியாகத் தொட்டாலே பாதி வென்றுவிடும். அப்படியான கதையிது. ஆரம்பித்த இரண்டாவது பத்தியிலேயே அதன் வெற்றி நிகழ்ந்துவிடுகிறது. கந்தசாமிப் பிள்ளை கேண்டியாவதும் அவன் தாத்தாவின் சந்தாதாரரான கடவுள் பிரசன்னமாவதும் முடிவில் நூறு டாலர் டேபிளில் இருப்பதும் அந்த மாபெரும் மேதையை மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டு ஒரு புன்சிரிப்போடு தான் கதையை படிக்க முடிகிறது. அதேசமயம் இதன் உள்ளடக்கத்தில் உள்ள தீவிரம் சற்றும் மட்டுப்படவில்லை. பிரபஞ்ச உருவாக்கத்தின் முதற்கணமும் அதே போல் மனிதன் பிரபஞ்ச சாரத்தின் இருப்பை உணரும் முதற்கணமும் அடுத்தடுத்து வருகிறது. முன்னது படைப்பாளன் தன்னை உணரும் கணம். பின்னது படைப்பு படைப்பாளனை உணரும் கணம். இடையே விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஆன்ம விடுதலைக்குமான ஒரு மெல்லிய தொடு குறிப்பும் வந்து செல்கிறது. மனித மனதின் எல்லைகளை விரிவுபடுத்த நினைக்கும் தலைமுறைக்குப் பின்னால் அனைத்தையும் உட்சுருக்கி மெய்தரிசனத்தை தேடிய ஒரு காலம் இருந்துள்ளது. இதன் அனைத்துக்கும் அடியில் நம் முதல் மூதாதை அந்த பேரிப்பை நோக்கி வெளிப்படுத்திய திகைப்பு நிலத்தடி வேராக உள்ளது. இம்மூன்று காலகட்டங்களை இணைத்துப் பின்னிய ஒரு முடைவு இக்கதையின் உடற்சதை.
கோதார்த்தின் குறிப்பேடு – கமலக்கண்ணன்:
இந்த சிறுகதை வரிசையில் மொழியும் கவித்துவமும் கூடி உச்சம் பெற்ற கதையென்றால் இதுதான். தேவையானயளவு கலங்கலும் தெளிவும் கைகூடிய அபூர்வ படைப்புகளில் ஒன்று. மொத்தக் கதையும் ஒரு மங்கிய கனவுபோல நிகழ்கிறது. கோதார்த்தின் மனநிலையும் ராம்சேயின் உளச்சிக்கலும் பின்னிருக்க அந்த புலத்தில் கதாப்பாத்திரங்களின் கைவிரல்கள் கொள்ளும் பின்னலும், ஒருவரை தொற்றி மற்றவர் மேல் படர்ந்தேருவதும், கோதார்த்தின் தாடையை தீண்டும் நாகமும் ஒன்றின் பற்பல முகங்கள் அல்லவா? நம்மை மீறி சூழலிலிருந்து நம்மை தொற்றி பரவும் ஒன்றைத் தானே தொடந்து அது குறிக்கிறது. அது நம்மை பற்றியிருக்கும் போது நிஜத்திற்கும் நிழலிற்குமான வேறுபாட்டை, கனவிற்கும் நனவிற்குமான பிரிவினையை, உண்மைக்கும் பொய்க்குமிடையான எல்லைக்கோட்டை காணும் கண் இல்லாதவர்களாகிறோம். அத்தகையவர்கள் சில பக்கங்களை காட்டும் குறிப்பேடு இக்கதை.
மின்னெச்சம் – ரூபியா ரிஷி:
மிக சுவாரஸ்யமான எதிரீடுகள் கொண்ட கதை. கதை நாயகன் உலகின் நலனுக்காக தன்னைத் தியாகம் செய்கிறான். தன்னை அழித்து தன் மனதை மட்டும் கணிணியில் இருத்தி மானுடத்திற்கு அழிவற்ற இருப்பிற்கான ஒரு சாத்தியத்தை திறந்து காட்டுகிறான். அவன் இறப்பால் துயருரும் தன் மனைவிற்கு தன் தியாகத்தின் பெருமதியை விளக்குகிறான். உலகில் அனைத்து மகத்தானவைகளுக்குப் பின்னாலும் இத்தகைய துயரங்கள் இருப்பதாக தன் பக்கத்தை விளக்குகிறான். கதை இத்தகைய மனநிலை கொண்டவர்களை சீண்டும் தன்மை கொண்டது. உங்கள் தியாகம் உண்மையில் சுயநலமற்றதா எனக் கேட்கிறது. அதில் புகழிற்கான அகங்காரம் எவ்வளவென வினவுகிறது. தன் பெருஞ்செயல்களுக்கான தியாகங்கள் எனக் கூறப்படுபவை உண்மையில் அவனால் கடந்து செல்லப்பட்டவை தானா என உசாவுகிறது. தன் மனைவி இன்னொருவனுடன் உறவு கொள்வதை பார்த்து துடிப்பதன் மூலம் அவனின் இடம் உணர்த்தப்படுகிறது. உண்மையில் காலங்காலமாக வீட்டை விட்டு வெளியேறும் துறவிகள் முதல் பலருக்கான எதிர்நிலையை இக்கதை எடுக்கிறது. வெளிசென்று ஊர்சுற்றி அவர்கள் கடக்க முடியாத சில எல்லைகளை ஒருவகையில் உள்ளிருப்பவர்கள் கடந்து விடுகின்றனர். அதனுடன் மட்டும் முடிந்திருந்தால் இக்கதையின் எல்லை மட்டுப்பட்டிருக்கும். இறுதியில் அவனின் அந்தப் பகுதி மட்டும் அழிக்கப்பட்டு அனுக்கு மீட்பு கிடைக்குமிடத்தில் ஒரு வித கருணையும் அதே சமயம் அவ்வழிற்குப் பிறகு அவன் நிலை மீண்டு சொல்லும் முந்தைய கண்ணியங்களை ஒருவித எள்ளலும் செய்கிறது. ஒரு வகையில் நம் மனம் நமக்கு சங்கடமானவற்றை வசதியாக புறந்தள்ளி மூலையில் ஒதுக்கி வைத்து நம் இருப்பை முன் நகர்த்தும் கணத்தை சுட்டி நிற்கு அந்த இறுதி சம்பவம் மூலம் ஒரு தனித்துவத்தை இக்கதை அடைகிறது.
நிறமாலைமானி – பெரு.விஷ்ணுகுமார்:
இக்கதை அதன் தலைப்பின் வீரியத்தில் தான் பலம் பெற்று நிலை கொள்கிறது. ஒரு மைய படிமம் அதை சுற்றி நடக்கும் ஒரு சம்பவமும் அதில் கதாப்பாத்திரங்கள் கொள்ளும் உதிரி எண்ணங்களுமானது இக்கதை. இதன் வெற்றியென்பது முப்பட்டயை ஒளியில் திருப்பி திருப்பி கொள்ளும் நிறஒளி மாற்றங்களைப் போல் நிறமாலைமானி மூலம் சக மனிதர்களை உறவுச் சமன்பாடுகளை திருப்பி பல்வேறு கோணங்களை காட்டுகிறது. சமமில்லாக் கால்களும் விட்டத்தில் கட்டப்பட்ட சுறுக்குக் கயிறும் இருவரை ஒருவராக மாற்ற முயல்வதும் மூலம் வாழ்வின் அபத்தத்தை அவலத்தை மீட்பின் வழியின்மையை குரூரத்தை என வெவ்வேறாக இதைபுரிந்துகொள்ளலாம்.
கதையின் தொழில் நுட்பக் குறைபாடு இதை கொஞ்சம் கீழிறக்குகிறது. யதார்த்ததிற்கும் அரூபத்திற்கும் இடையிலான வழுக்கல்களை இன்னும் கவனத்துடன் செய்திருக்கலாம். அதேபோல் கதையின் முடிவு குழப்பமாக உள்ளது. சக வாசக நண்பர்கள் யாரேனும் அதை விளக்கி எழுதலாம்.
அவன் – தன்ராஜ் மணி:
கதை சுவாரஸ்யத்தின் கண்ணோட்டத்தில் முதலிடம் வகிக்கும் கதை. கிட்டத்தட்ட வார நாளிதழ்களின் நடைக்கு அருகே இருப்பது. ஆனால் இதன் இதன் கலைத்தன்மை என்பது இது எடுத்துக் கொண்டுள்ள நுட்பமான மானுடத் தருணம் தான். மனிதன் தன் போத அறிவின் துணையில்லாமலே தனக்கான பாதுகாப்பு வளையத்தை கொண்டுள்ள நுட்பத்தை சுட்டுவது எந்த வணிக படைப்புகளிலும் காணமுடியாத அம்சம்.
ம் – கிரிதரன் கவிராஜா:
ஒரு அரூப ஓவியத்திற்கிணையான தன்மையுடன் இக்கதை எழுதப்பட்டுள்ளது. சில காட்சிகள் மட்டும் விவரிக்கப்படுகிறது அதை தொடர்ச்சியாக எண்ணி அந்த உணர்ச்சி நிலையை ஒட்டி ஒரு மையத்தை எழுப்பி கொள்ள வேண்டியுள்ளது. தொடக்கத்தில் கால இடமில்லாமல் பிரஞ்கையில் ஆரம்பித்து அந்த ஒன்று தன்னைப் பலவாறாக சிதறி துளிகளாக மாறி முடிகிறது. புலத்தில் நித்ய ஒலியாக ம் என்ற ஓங்காரத்தில் அனைத்தும் நிகழ்கிறது. கிட்டத்தட்ட புடவியின் ஆரம்பம் போல. ஆனால் கதை நிகழும் எதிர்காலத்தன்மையும் அந்த கருந்துளையும் இரண்டாம் பெருவெடிப்பிற்கான குறிப்பாக இருக்கிறது. இறந்த ஒன்றின் முறுபிறப்புத் தருணம். ஜெ கூறியது போல நாதபிந்துக்கலையின் தொடர்புப் பற்றியும் அதை யாரேனும் விளக்கலாம்.
மூக்குத்துறவு – கே.பாலமுருகன்:
சமூக விமர்சனத்தன்மை மேலோங்கிய படைப்பிது. கால முன்னேற்றத்தில் அடிப்படைக் கூறுகளின் அழிவுகளைப் பற்றி பேசும் கதை. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப்போக்கில் நாம் அறியாமலே நம் கட்டுப்பாட்டை மீறி நாம் அழிப்பவற்றின் அவலத்தை சொல்கிறது. ஆனால் அங்கேயே இது நின்றுவிடுகிறது. மேற்சொன்ன முந்தைய கதைகளிலுள்ள அடுத்த கட்ட நகர்வு இதில் உருவாகவில்லை. இத்தகைய கதைகளில் கதையின் முடிச்சை மேலெடுத்து செல்லும் அம்சமென்பது அது தொடர்ந்து கொள்ளும் உருமாறுதல்கள் தான். அது அந்த மூக்குத்துறவை ஒற்றி கோர்க்கப்படும் பல்வேறு சம்பவங்களாலோ அல்லது அது தொடர்ந்து உருமாறி வேறொன்றாகி மாற்றம் கொண்டு முடிந்திருந்தால் கதை இன்னும் ஒரு தளம் மேலேறியிருக்கும் என நினைக்கிறேன்.
தியானி – கிபி 2500 – அஜீக்:
ஒப்புநோக்க மிகக் குறைந்த படைப்பூக்கம் கொண்ட கதை. நாம் இழந்தவைகளின் ஏக்கமாக அதனாலேயே அதை உன்னதப்படுத்தி மேலேற்ற நினைக்கும் கதை என எண்ண வைக்கிறது. இருந்தாலும் எழுதுவதையும் தியானத்தையும் இணைக்கும் அந்த புள்ளி ஒரு அழகிய தருணம்.
தாமஸ் மன்னின் “மாய மலை”-ல் ஒரு பகுதி வரும். கதையின் நாயகன் அவனிருக்கும் சானிடோரியத்தின் மருத்துவர் வரைந்த ஒரு ஓவியத்தின் தனித்தன்மையை கண்டு வியப்புற்று அதைப் பற்றி கேட்கிறான். அவர் மானுடத் தோலின் பல்வேறு அடுக்குகளைப் பற்றிய அறிவே அதிலிருக்கும் மேலதிகப் புதுமையை உருவாக்கியது என்கிறார். சருமத்தின் வாளிப்பும் மினுமினுப்பும் அதன் அழகுத் தன்மையை ரசிக்கும் கலைமனத்துடன் அதைப் பற்றிய அறிவார்த்தமும் இணையும் போது அதிலேற்படும் பாய்ச்சல் அபரிபிதமானதென உணர்கிறான். அங்கிருந்து பூமிக்குக் கீழுள்ள அனைத்தையும் அறியும் ஆர்வம் கொண்டு பௌதீகம், மருத்துவம் முதலிய அனைத்தையும் ராப்பகலாக வாசிக்கிறான். நாவலில் அப்பகுதி அற்புதமான மொழி நடையில் அபாரக் கவித்துவத்துடன் விவரிக்கப்படும். அதன் உள்ளடக்கமென்பது நாம் பள்ளிகளில் படித்த அடிப்படைகள் தான். ஆனால் அதை விளக்குவதில் ஆசிரியரின் பார்வையும் ஒவ்வொரு சிறு கருத்தையும் பிரபஞ்சத்துடன் இணைக்கும் அவரின் தரிசனமும் உள்ளம் கொந்தளிக்காமல் கை நடுங்காமல் படிக்க முடியாது. உயிரற்ற வறட்டு ஜடங்கள் பிரபஞ்ச நடனத்துடன் ஒத்திசைந்து கொள்ளும் லயத்தை கண்டுகொள்ளும் முதல் தருணம் அது. நம் அருகிலேயே இருந்த படிமங்களின் புத்துலகை காண்பதற்காக திரை விலகும் கணம் அது.
இந்தக் கதைகள் அனைத்தும் தமிழில் அத்தகைய உலகை திறந்து விடும் முக்கிய தொடக்க நிகழ்வு. இதிலிருந்து மேல்செல்லவும் அதன் மூலம் இதுவரை நாம் பொருட்படுத்தாத உலகியலென ஒதிக்கியதை கவனிக்கவும் அதன் படிமச்சாரத்தை தொட்டுணரணவும் முயலும் புதிய படைப்புகள் எழுந்து வரவேண்டும்.
பாலாஜி பிருத்விராஜ்