அருணா ராய் பேட்டி 1
அருணா ராய் பேட்டி 2
தகவலறியும் சட்டத்தின் கதை
கொலாபா, மும்பையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதி. அங்கு, கடற்கரையை ஒட்டி, இராணுவத்துக்குச் சொந்தமான நிலம் உள்ளது. கார்கில் போர் முடிந்தவுடன், போரில் இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்னும் நோக்கில், ஆறு மாடிக் கட்டிடம் கட்ட அரசின் அனுமதி பெற்று, ஒரு திட்டம் துவங்கப்பட்டது. திட்டம் துவங்கியபின், நகர் வளர்ச்சி வாரிய விதிகளுக்கும், கடற்கரையோர கட்டிட விதிமுறைகளுக்கும் முரணாக, எந்த அனுமதியுமில்லாமல், அது 31 மாடித் திட்டமாக மாற்றப்பட்டது. அரசியல் வாதிகளும், ராணுவ அதிகாரிகளும், அதில் பல வீடுகளை, தங்களுக்குத் தாங்களே கொடுத்துக் கொண்டார்கள். அந்த ஊழல் வெளிப்பட, ஐந்து முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள் எனப் பலர் சிக்கினர். மாநிலத்தின் அன்றைய முதல்வர் பதவி விலக நேரிட்டது.
2G, காமன் வெல்த், வேதாந்தா பல்கலைக்கழக நில ஒதுக்கீடு எனப் பல முறைகேடுகள் பொதுவெளிக்கு அந்தக் காலகட்டத்தில்தான் வெளிவந்தன. இவை அனைத்தின் பின்னும், மிக முக்கியமான ஒரு சட்டம் இருக்கிறது. அதன் பெயர் தகவல் அறியும் சட்டம். வெறும் 10 ரூபாய் கட்டணம் கட்டி, அரசு அலுவலகங்களில் நடைபெறும் நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்களை எவரும் பெற்றுக் கொள்ள முடியும் என்னும் ஒரு சாத்தியம் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய மக்களுக்குக் கிடைத்தது.
பல அரசாங்கங்களை வீழ்த்திய இந்தச் சட்டம் பெரும் சட்ட மேதைகளாலோ அன்றிப் பெரும் அரசியல் தலைவர்களாலோ இயற்றப்படவில்லை. ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜஸ்மண்ட் மாவட்டத்தில், ஆரவல்லி மலைச் சரிவையொட்டிய தேவ்துங்ரி என்னும் வறண்ட கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் நான்கு லட்சியக் கிறுக்குகளால் உருவாக்கப்பட்டது. அவர்களும், பெரும் அரசாங்கங்களை வீழ்த்த வேண்டும் என இந்தச் சட்டத்தை உருவாக்க வில்லை. தங்கள் கிராம மக்களுக்கு அரசு திட்டங்கள் வழியாக, நேர்மையாகச் சேர வேண்டிய அடிப்படைக் கூலியான 11ரூபாயை வேண்டித்தான் 1987 ஆம் ஆண்டு துவங்கினார்கள்.
அருணா, 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை ஜெயராம், தில்லியில் அரசுப்பணியில் இருந்தார். தன் பள்ளிக் கல்வியை அவர், தில்லி, சென்னை கலாக்ஷேத்ரா, புதுச்சேரி அரவிந்தர் பள்ளி, தில்லி பாரதிய வித்யாபவன் என, பல கல்விநிலையங்களில் பயின்றார். தில்லிப் பல்கலைக்கழகத்தின் இந்திரப்ரஸ்தா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1967 ஆம் ஆண்டு, இந்திய ஆட்சிப் பணித் தேர்வை வென்று, தமிழகத்தில் பணியில் மாவட்ட ஆட்சிப் பணியில் சேர்ந்தார். தன் நண்பரான பங்கர் ராயுடன் திருமணம் நிகழ்ந்தவுடன், தில்லிக்கு மாற்றலாகி வந்தார். அரசு அதிகாரியாக, அந்த விதிகளுக்குட்பட்டு, உண்மையாக மக்கள் பணியாற்றுதல் கடினமாக இருந்தது. 1975 ஆம் ஆண்டு தன் வேலையைத் துறந்து, கணவர் பங்கர் ராயுடன், அவரது வெறும்பாதக் கல்லூரியில், ஊரக முன்னேற்றப்பணிகளில் ஈடுபட்டார். அங்கு பணியாற்றுகையில், அவருடன் ஷங்கர் சிங் என்பவர் நண்பரானார். அவர்களோடு, அமெரிக்காவில் கிடைத்த கல்வி வாய்ப்பை உதறி சமூகப் பணியாற்ற வந்த நிகில் டே என்னும் 21 வயது இளைஞரும் இணைந்து கொண்டார்.
மூவரின் எண்ண அலைவரிசையும், கனவுகளும் ஒன்றாக இருந்தன. மக்களிடையே ஜனநாயக நிறுவனங்கள் பற்றிய அறிதல் மிகக் குறைவாக இருந்தது. தங்களது உரிமைகள் பற்றிய அறிதலும் பெரிதாக இல்லை. இந்த இரண்டு விஷயங்களையும் மக்களிடையே எடுத்துச் செல்லவேண்டும் என்பதே அவர்கள் மூவரின் கனவு. மகாத்மா காந்தி, ஜெயப்ரகாஷ் நாரயண் வழியில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட அரசியல் இயக்கம் ஒன்றைத் துவங்குவோம் என முடிவு செய்தார்கள். அதற்கான நிறுவனம், வழிமுறைகள் அனைத்தும் மக்களோடு பணியாற்றுகையில், இயல்பாக, தானே உருவாகி வரவேண்டும் என்பதே அவர்கள் வழி.
ஏதாவது ஒரு கிராமத்திலிருந்து துவங்க வேண்டும் என அங்கே இங்கே அலைந்து, 1987 ஆம் ஆண்டில், தேவ்துங்ரி என்னும் கிராமத்தில் தங்க முடிவெடுத்தார்கள். அது ஷங்கர் சிங்கின் ஊருக்கு அருகில் இருந்ததும், ஷங்கர் சிங்கின் மனைவி அன்ஷி, சொந்த ஊருக்கு அருகில் வசிக்க ஆசைப்பட்டதும் முக்கிய காரணங்கள். ஷங்கரின் உறவினர் ஹக்குவின் குடிசையை வாடகைக்கு எடுத்து தங்கத் துவங்கினார்கள். அந்தக் குடிலில் நிகழ்ந்த வாதப் ப்ரதிவாதங்களும், அங்கிருந்து திட்டமிடப்பட்ட போராட்டங்களும்தான், பின்னாளில், தகவலறியும் சட்டம் என்னும் மக்கள் நலச் சட்டம் உருவாக அஸ்திவாரமிட்டன. பெரும் தொலைக்காட்சித் திரை போல, தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 8 வழியே வாகனங்கள் விரைந்து கொண்டிருக்க, அதிலிருந்து விலகி அமைந்துள்ள, அமைதியான அவர்களின் தேவ்துங்ரிக் குடிலில், மக்களுக்கான தீர்வுகள் பற்றிய விவாதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்.
மக்களோடு மக்களாக வசிப்பதில் பல முக்கியமான நன்மைகள் இருந்தன. ஏழை மக்களுக்கான தீர்வுகளை, அவர்களின் வாழ்க்கையின் எல்லைகளுக்குள் நின்று அறிந்து கொள்வது. அவர்களது பார்வையிலிருந்து, உலகில் நிகழும் விஷயங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்வது போன்றவை அவை.
தேவ்துங்ரிக் குடிலுக்கு முதலில் வந்தவர், ரஜ்னி பக்ஷி என்னும் பத்திரிகையாளர். ‘வீட்டில் ஏதேனும் சிறுவேலைகள் – பெருக்குதல், ஆட்டுக்குத் தீனி வைத்தல் போன்ற வேலைகளைச் செய்யும் போது, பாபு குடில் (வார்தா) நினைவுக்கு வரும். ஆனால், அதைச் சொன்னால் அருணாவுக்கும், நண்பர்களுக்கும் மிகச் சங்கடமாக இருக்கும். அவர்கள் இயல்பின்படியே மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்’, என எழுதியிருக்கிறார்.
அந்த வீட்டின் எளிமையும், அருணா மற்றும் நண்பர்களின் நட்புணர்வும், அருகில் உள்ள கிராமங்களில் உள்ள மனிதர்களை ஈர்த்தன. பலரும் அவர்களை அணுகி, அவர்களின் பிரச்சினைகளைப் பேசத் துவங்கினார்கள். ஷங்கர் சிங், அதே ஊர்க்காரர் என்பது, மக்களுடன் உரையாடவும், பிரச்சினைகளின் ஊடுபாவுகளை நுட்பமாக அறிந்து கொள்ளவும் உதவியது. அருணாவின், நிகில் டேயின் எண்ணங்களை, உள்ளூர் கலாச்சாரத்தோடு பிணைக்கும் ஒரு சக்தியாக ஷங்கர் விளங்கினார். திட்டங்களை, கருத்துக்களை, போராட்டங்களை, உள்ளூர்க் கதைகளாக, பாடல்களாக, தெரு நாடகங்களாக அவர் மாற்றியது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தக் குடிலுக்கு வந்த அஜித் பட்டாசார்ஜி, ப்ரபாஷ் ஜோஷி என்னும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்களும் ரஜினி பக்ஷியைப் போலவே உணர்ந்திருக்கிறார்கள். ‘தேவ்துங்ரிக்கு வந்தவுடனேயே எனக்கு வார்தாவின் பாபு குடில்தான் நினைவுக்கு வருகிறது. மண் அடுப்பில் எங்களுக்கு ரொட்டி செய்து உணவளித்தார் அருணா. இரவு, வீட்டுக் வெளியே உள்ள மண் தரையில் படுத்துக் கொண்டோம். காலையில், குல்மோகர் மரத்துக்கும், போகன் வில்லாச் செடிகளுக்கும் இடையே எழுந்த சூரியன் எங்களை எழுப்பினான். வீட்டின் பின்னால் அமைந்திருக்கும் குடிசைக் கழிவறை, ஐந்து நட்சத்திர விடுதியின் சுத்தத்தில் இருந்தது’.
ஆனால், நண்பர்களுக்கு இவர்களின் முயற்சிகளில் நம்பிக்கையே இல்லை. மண் குடிசை, ஆட்டுப்பால் என இவர்களின் வழி கற்பனாவாத முயற்சியாகத் தெரிந்தது. ‘விரைவில் நாகரீக உலகுக்கு வந்துவிட்டுவீர்கள்’, என வாழ்த்திச் சென்றார்கள்.
ஜெய்ப்பூரில் உள்ள வளர்ச்சியியல் கல்லூரிக்காக, கள ஆய்வுகளைச் செய்து தங்களது அடிப்படைத் தேவைக்கான பணத்தை ஈட்டிக் கொண்டார்கள். மக்களை, அவர்களின் வாழ்விடங்களில், தனியாகவே அல்லது ஒரு சிறு குழுவாகவோ சந்தித்து உரையாடத் துவங்கினார்கள். முதலில் நகரத்தில் இருந்து வந்த இவர்களை சந்தேகத்துடன் பார்த்த மக்கள், இவர்கள் வாழ்க்கை முறைகளையும், நடவடிக்கைகளையும் கவனித்த பின்னர், நம்பிக்கையுடன் உரையாடத் துவங்கினார்கள்.
1987 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பெரும் வறட்சி நிலவியது. எங்கும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடியது. வறட்சி நிவாரணப் பணிகளில் வேலைக்குச் சேர பெரும் வன்முறை நிகழத்துவங்கியது. திட்டக்கமிஷனின் குழு ராஜஸ்தானுக்கு நேரில் சென்று நிலையை அறிய வந்தது. அருணா ராயின் வற்புறுத்தலில், துணைத்தலைவர் ஹனுமந்த ராவும், திட்டக் கமிஷன் ஆலோசகர் பங்கர் ராயும் தேவ்துங்ரி வந்தார்கள். மக்களிடம் பேசத் துவங்கினார்கள். உணவுக்கு என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, ஒரு பெண், சாலையோர வேலிச் செடிகளின் முட்களை அரைத்து, அதில் சுடப்பட்ட ரொட்டியைக் காட்டினார். புராணக்கதைகளில் மட்டுமே ஒருவர் கேள்விப்பட்டிருக்கக்கூடிய அவல நிலை அது. திட்டக் கமிஷனின் உறுப்பினர்கள் முன்னால், மாவட்டக் கலெக்டர், அவர்களுக்கு உடனடியாகத் தானியங்களை ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். ஆனால், செய்யவில்லை.
மழை பொய்த்தலும், வறட்சியும், ராஜஸ்தான் மக்கள் அடிக்கடி காண்பவை. அருணாவும் நண்பர்களும் செல்லுமிடமெலாம், ஏழை மக்களிடையே இதுவே பேச்சாக இருந்தது. அந்தக் காலத்தில் அரசாங்கம் வழங்கும் வறட்சி நிவாரணத்தை, அவர்கள் ‘ஃபேமைன்’ என்று அழைத்தார்கள். 1878 ஆம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த பெரும் பஞ்சத்துக்குப் பின் உருவாக்கப்பட்ட ஃபேமைன் ரிலீஃப் கோட் (Famine relief Code) என்னும் சட்டத்தின் மரூஉ. உதய்ப்பூரின் பிச்சோலா ஏரி, ஜெய்ப்பூரின் உமைத் பவன் போன்றவை பஞ்சகாலத்தில், ஏழை மக்களுக்கு வேலையும் உணவும் அளிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டவை. ஃபேமைன் எப்போ ஆரம்பிக்கும் என்பது சாதாரண ராஜஸ்தானி ஊரக ஏழையின் வாயில் புழங்கும் சொல்.
1987 ஆம் வருடம், தேவ்துங்ரியின் அருகில் உள்ள ஒரு இடத்தில், ஏரியின் கரையை உயர்த்தும் வேலை, வறட்சி நிவாரணப்பணியாகத் துவங்கப்பட்டது. 8 மணி நேர வேலைக்கு 11 ரூபாய் குறைந்தபட்சக் கூலியாக அளிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், உழைப்பாளிகளுக்குக் கிடைத்ததோ 2 முதல் 4 ரூபாய்கள் மட்டுமே. அருணாவும் நண்பர்களும் சென்று விசாரித்த போது, அவர்கள் உழைப்புக்கு ஏற்ப, கூலி கொடுக்கப்பட்டுள்ளது என்றார் இளநிலைப் பொறியாளர். ஆனால், உழைப்பாளர்களோ, எவ்வளவு வேலை செய்ய வேண்டும் எனச் சொல்லப்படவேயில்லை என்றார்கள். பேச்சு வார்த்தைகள் நடந்து, உழைப்பாளர்கள் செய்ய வேண்டிய வேலையை அளந்து கொடுக்க ஒத்துக் கொண்டார் பொறியாளர். அந்த வேலையைச் செய்து முடித்து, 15 நாட்கள் கழிந்து ஊதியம் வாங்கச் சென்றவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அதிக வேலை செய்தவர்களுக்குக், குறைவாகவும், குறைந்த வேலை செய்தவர்களுக்கு அதிகமாகவும் கூலி கொடுக்கப்பட்டது. விசாரித்தால், அவர் வேலை அளவுகள் ரெஜிஸ்டரில் குறிக்கப்பட்டுள்ள அளவை வைத்துத் தான் கூலி கொடுக்கப்பட்டது என பொறியாளர் கூறினார். வேலை செய்த மக்கள், ரெஜிஸ்டரை காண்பிக்கச் சொல்லிக் கேட்க, பொறியாளர் மறுத்துவிட்டார்.
உண்மை என்னவெனில், 100 பேர் வேலை செய்ததாகக் காண்பிக்கப்பட்டிருக்கும் ரெஜிஸ்டரில், 40 பேர் போலியாகச் சேர்க்கப்பட்டு, ஊதியம் திருடப்பட்டிருக்கும். மற்றவர்களுக்கு இஷ்டப்படி ஒரு கூலி எழுதப்பட்டு கொடுக்கப்படும். வேலையை மேற்பார்வை செய்ய வேண்டிய பொறியாளர் இடத்துக்கே வர மாட்டார். மேட் என அழைக்கப்படும் ஒரு மேஸ்திரி போன்றவர் வேலைகளை பகிர்ந்து கொடுத்தல், செய்த வேலையை அளத்தல், ரெஜிஸ்டரில் குறித்தல் போன்ற வேலைகளைச் செய்வார். அதில் வேலைக்கே வராதவர்களின் பெயரை எழுதி, ஊதியத்தைக் களவாடுவதும், உண்மையிலேயே வேலை செய்பவர்களுக்குக் கூலியைக் குறைத்துக் கொடுத்தல் போன்ற வேலையையும் செய்வார். அருணா, சங்கர், நிகில் மூவரும் அனைத்து உழைப்பாளிகளையும் ஒன்று திரட்டிப் பேசினார்கள். வேலை செய்ய வேண்டிய அளவுகள் குறிக்கப்பட்டன. உழைப்பாளிகள், கொடுக்கப்பட்ட அளவைவிட, அதிக வேலையைச் செய்து முடித்தார்கள். பின்னர், அவை அளக்கப்பட்டன – அனைவருமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை விட அதிகம் செய்திருந்தார்கள். ஆனால், இறுதியில் 5-6 ரூபாய் என்றே கூலி வழங்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அருணா ராயும் நண்பர்களும் உண்மையை நிலை நாட்டி, சரியான கூலியை, மக்களுக்குப் பெற்றுத்தர முடியவில்லை.
அருணா ராய்க்கு இது புதிதல்ல. ஏற்கனவே, டிலோனியாவின் வெறும்பாதக் கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்த போது, அரசு திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, குறைந்த பட்சக் கூலிக்குக் குறைவாக, ராஜஸ்தான் மாநில அரசு கொடுத்த போது, அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் சென்று, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்வைப் பெற்றிருந்தார். ஆனாலும், அது நடைமுறைப்படுத்தப் படவில்லை.
இதையடுத்து, அருணாவும், நண்பர்களும், சோகன்கர் என்னும் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு அநீதியைத் தட்டிக் கேட்கப்போனார்கள். அந்த ஊர் கிராமத்தலைவர் ஒரு பெரும் நிலச்சுவாந்தார். சமூக அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொது நிலங்களை ஆக்கிரமித்திருந்தார். அவற்றை உபயோகிக்க தண்டல் வசூலித்து வந்தார். அதனால், பொதுமக்கள் குறிப்பாகப் பெண்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்கள் அருணாவையும், நண்பர்களையும் அன்போடு வரவேற்றனர். அருணாவும் நண்பர்களும், துவக்கத்தில் சிறு விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தத் துவங்கினர். அதைக் கண்டு கோபம் கொண்ட கிராமத்தலைவர் அனைவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அஞ்சாமல், சோகன் கர் கிராம நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைக் திரட்டத் துவங்கினர் – அந்தத் தகவல்களை உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகள் தர மறுத்தனர். அவர்கள் அருகில் உள்ள பீம் என்னும் வட்டார அலுவலகத்தில் உள்ள துணை நிலை ஆட்சியரை அணுகினார்கள். அவர் உதவியுடன், கிட்டத்தட்ட 450 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு மீட்டார்கள். மகளிர் சங்கம் ஒன்றை அமைத்து, அந்த நிலங்களை, சமூக வனம் உருவாக்கும் அரசுத்திட்டத்தில் பகிர்ந்தளித்தார்கள். அந்தத் திட்டம் துவங்கப்பட்ட பசுமை அமாவாசை என அழைக்கப்பட்ட அந்த நாளில், அருணா ராய் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது. திட்டத்தில், பங்கு கொண்ட காக்கிஜி என்ற பாட்டி, ‘ரகுபதி ராகவ ராஜாராம்’. பாடலைப் பாடினார். அதைக் கேட்ட அருணா ராய், ‘உங்களுக்கு இந்தப் பாடலைச் சொல்லிக் கொடுத்தது யார்?’ எனக் கேட்டார். அதற்கு அவர்.’பாபு (Bapu)’, எனப் பதிலளித்தார். ‘உங்க அப்பாவா?’, எனக் கேட்ட அருணாவுக்கு வந்த பதில், ’இல்லை.. பெரிய பாபு (காந்தி)’. காக்கிஜியின் தந்தை, சபர்மதி ஆசிரமத்தில் மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியைச் செய்து வந்தார். அப்போது சிறுமியாக இருந்த காக்கிஜி, காந்தியிடம் இருந்து இந்தப் பாடலைக் கற்றுக்கொண்டிருந்தார்.
அந்த அரசு திட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்ட அருணாவும் நண்பர்களும், அதில் வேலை செய்த அனைவருக்கும் சரியான ஊதியத்தை வழங்கினர். முதன் முதலாக, அந்த மக்கள், தாங்கள் செய்த வேலைக்கான குறைந்த பட்சக் கூலியைப் பெற்றனர். அதை எதிர்த்த கிராமத் தலைவர் வன்முறை மிரட்டலை விடுத்துக் கொண்டேயிருக்க, மக்கள் வெகுண்டு, அங்கிருந்து ஒரு நடைப்பயணப் போராட்டம் செய்து, அந்த வட்டத் தலைநகரான பீமுக்குச் சென்று துணை ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிராமத் தலைவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட்து. ஒன்றுபட்டால் ஒழிய, அரசும், அதிகாரமும், தங்களுக்கு என்றும் நீதி வழங்கப்போவதில்லை என கிராம மக்களுக்கு புரியத் துவங்கியது. இதை முன்னெடுத்துச் செல்ல ஒரு இயக்கம் தேவை என மக்களும், அருணாவும், நண்பர்களும் உணர்ந்தனர்.
சோகன்கர் போராட்டத்தின் மிக முக்கிய கோஷம், ‘ஹம் ஹமாரா அதிகார் ஜான்தே.. நஹி கிஸிசே பீக் மாங்தே’. (எங்கள் உரிமை எங்களுக்குத் தெரியும்; யாரிடமும் பிச்சை கேட்கவில்லை). போராட்டத்தின் முடிவில், ’உழைப்பாளர், உழவர் சக்திக் கூட்டமைப்பு (மஜ்தூர், கிஸான் சக்தி சங்கடன்)’, என்னும் அமைப்பு உருவாகியது. இதில், தலைவர், தொண்டர், செயலாளர், பொருளாளர் என்னும் அடுக்கு முறை அமைப்பு இல்லை. அனைவரும் சமம். இதன் சின்னத்தை மக்களே வடிவமைத்தார்கள், ஆணும் பெண்ணும் சமம் என்னும் வகையில், ஆண் உருவம் கறுப்பிலும் (போராட்டம்), பெண் உருவம் சிவப்பிலும் (புரட்சி) என உணர்த்தும் ஒரு சின்னம் உருவாக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு மே-1 ஆம் தேதி இந்தக் கூட்டமைப்பு துவங்கப்பட்டது.
அந்த ஆண்டு வறட்சி நிவாரணப் பணிகளுக்கான குறைந்தபட்சக் கூலியான14 ரூபாய்க்குக் குறைவாக, உழைப்பாளிகள் யாரும் வாங்க மாட்டோம் என கூட்டமைப்பு அறிவித்தது. இதற்குப் பின்பும், ராஜஸ்தானின் கொடும் கோடையில் உழைத்த மக்களுக்கு, பொதுப்பணித்துறையும், நீர்ப்பாசனத் துறையும், 8 ரூபாய் மட்டுமே கூலி கொடுக்க முன்வந்தன. 300 தொழிலாளர்கள் கூலியைப் பெற மறுத்து விட்டனர்.
முதற்கட்டமாக, 20 தொழிலாளர்கள், பீம் நகருக்குச் சென்று துணை வட்டாட்சியரைப் பார்த்து, குறைந்த பட்சக் கூலிக்குக் குறைவாக நாங்கள் ஊதியம் பெற்றுக் கொள்ள மாட்டோம் என நோட்டிஸ் கொடுத்தார்கள். நடவடிக்கை எடுக்க மூன்று நாள் அவகாசம் கேட்டார் துணை வட்டாட்சியர். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர்கள் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். ஜூலை மாதன் 18 ஆம் தேதி, 300 உழைப்பாளிகளும் (175 பெண்கள்), ஒரு நாள் தர்ணாவில் ஈடுபட்டார்கள். துணை வட்டாட்சியர் ஊரைவீட்டு வெளியே போய்விட்டார். அவர் வரும்வரை தர்ணா என முடிவு செய்தார்கள். மாலையில், காவலர்கள் வந்து, தர்ணா செய்தவர்களைத் தாக்கத் துவங்கினார்கள். கலவரம் நிகழும் சூழலை நிறுத்தி, மீண்டும், அமைதியைக் கொண்டு வந்தார் ஷங்கர். வேறு வழியின்றி, துணை வட்டாட்சியர் தன் அலுவலகம் வந்து மீண்டும் வந்து அவர்களைச் சந்தித்தார். மாவட்ட ஆட்சியரைக் கலந்து பேச வேண்டும் எனக் காரணம் சொல்லி ஒரு வார கால அவகாசம் கேட்டார்.
ஜூலை 25 ஆம் தேதி தொழிலாளர்கள் மீண்டும் துணை வட்டாட்சியர் அலுவலகம் முன் கூடினார்கள். இந்த முறை பொதுப்பணித்துறைப் பொறியாளர்களும் இருப்பார்கள் எனச் சொல்லப்பட்டது. ஆனால், அன்று, அலுவலகத்தில் ஒருவர் கூட இல்லை. அடுத்த நாளில் இருந்து 17 பேர், உண்ணாவிரதம் துவங்கினார்கள். மாவட்ட நிர்வாகம் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனக் கைவிரித்து விட்டது. உள்ளூர் சட்ட சபை உறுப்பினர், 17 பேர் செத்தால், மக்கள் தொகை குறையும் எனச் சொல்லிவிட்டார்.
ஆனால், பீம் நகரின் முக்கிய மனிதர்கள் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்தார்கள். ஜூலை 30 க்குள் இது தீர்க்கப்படாவிட்டால், போராட்டத்தில் தாங்களும் இணைவதாக, பீம் நகர வியாபாரிகள் குழு அறிவித்தது.
நிலைமை மோசமடைவதை உணர்ந்த, மாவட்ட கலெக்டர், உதய்ப்பூரில் இருந்து வந்து, போராட்டக்காரர்களிடம் பேசினார். அடுத்த 3-4 நாட்களுக்குள், தொழிலாளிகளுக்கு, குறைந்த பட்சக் கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என அறிவித்தார். (குறைந்தபட்சக் கூலி கொடுக்கப் பட்டாக வேண்டும் என உச்ச நீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் இந்த நிலை). இரண்டு நாட்களுக்குப் பிறகு, கூட்டமைப்பின் உறுப்பினர் இருவர், ஜெய்ப்பூர் சென்று, முதல்வரைச் சந்தித்தார்கள். அவரும், மாவட்ட ஆட்சியர் வாக்குறுதிப்படி, ஊதியம் வழங்கப்படும் என உறுதியளித்தார். பத்துநாட்கள் கழித்து, நீர்ப்பாசனத்துறை, ஒத்துக் கொண்ட கூலியைவிடக் குறைவாக அளித்தது. பொதுப்பணித்துறையோ, பழைய கூலியை மட்டுமே தரமுடியும் எனப் பிடிவாதமாக நின்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரு வாக்குறுதியைக் கொடுத்து திசை திருப்பியதை உணர்ந்த கூட்டமைப்பு, இந்தப் போராட்டத்தை எப்படி மேலெடுத்துச் செல்வது என யோசித்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவையும், அரசு இழைத்து வரும் அநீதியையும், பல தளங்கலிலும் எடுத்துரைத்து, போராட்டத்துக்கான ஆதரவைத் திரட்ட வேண்டும் என முடிவெடுத்தனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான, குறைந்த பட்சக் கூலி கொடுக்க முடியாது என்னும் அரசின் கொள்கையும், அதை நிறைவேற்றுவதில் உள்ள அதிகார துஷ்ப்ரயோகமும், ஊழலும் என, பிரச்சினை, பல்வேறு கூறுகளாய்ப் பிரித்து விவாதிக்கப்பட்டது. மிக முக்கியமாக, அரசின் செயல்பாடுகளில் உள்ள வெளிப்படையின்மை இதன் முக்கியக் காரணமாக வெளிப்பட்டது.
இதன் அடுத்தபடியாக, அக்டோபர் மாதம் 24/25 தேதிகளில், மாநில அளவிலான உழைப்பாளர், உழவர் மாநாடு ஒன்று பீம் நகரில் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதுமிருந்தும், அண்டை மாநிலங்களான மத்தியப்பிரதேசம், தில்லியிலிருந்தும் தொழிலளர்களும், பிரதிநிதிகளும் வந்து கலந்து கொண்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான மத்திய அமைச்சரகச் செயலர் பி.டி,ஷர்மா ஐ.ஏ.எஸும், ஊரக அமைச்சரகத் துணைச் செயலர் கே.பி.சாக்சேனா ஐ.ஏ.எஸும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ‘எனது ஆதரவு உங்களுக்கு முழுதும் உண்டு. நீங்கள் கேட்பது குறைவு. நாட்டின் வளங்களின் மீது, ஏழைகளுக்கு முழு உரிமையும் தரப்பட வேண்டும். ஆனால், அது போராடாமல் கிடைக்காது’, என்றார் பி.டி,ஷர்மா.
வேட்டி குர்த்தாவில் வந்திருந்த பி.டி.ஷர்மாவையும், சரியாகத் தலை வாராமல் வந்திருந்த சாக்சேனாவையும், மாநில சி.ஐ.டி போலீஸார் நம்பவில்லை, ‘உண்மையைச் சொல்லுங்கள். அவர்கள் தீவிரவாதிகளா?’, எனக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். உள்ளூர் ஆட்சியர் வந்து, அவர்களுக்கு சல்யூட் வைத்த பின்னரே நம்பினார்கள். மாநாடு, ’அனைவருக்கும் குறைந்த பட்சக் கூலியைக் கட்டாயமாக்க வேண்டும்; வேலைக்கான கூலி, ஒவ்வொருவரின் வேலை அளவின் படிக் கொடுக்க வேண்டும் – குழு அளவில் அல்ல; வேலை என்பதைத் தெளிவாக கால அளவு அல்லது வேலை அளவு என வரையறுத்துக் கொடுக்கப்படவேண்டும்’, என்னும் முடிவுகளை முன் வைத்தது. பி.டி.ஷர்மாவும், சாக்சேனாவும் அவற்றை ஆதரித்துக் கையெழுத்திட்டனர்.
போராட்டத்தை, கல்வி, பொருளாதார, சட்டத் தளங்களில் முன்னெடுக்கத் துவங்கியது கூட்டமைப்பு. ஜெய்ப்பூரில் உள்ள வளர்ச்சியியல் கழகத்தின் இயக்குநர் வியாஸ், இந்தத் தளத்தில் இயங்கும் முக்கிய ஆளுமைகளை அழைத்து ஒரு கருத்தரங்கை நடத்த முன்வந்தார். அரசு திட்டங்களைத் தீட்டுபவர்கள், உயர் அதிகாரிகள், பொருளியல் அறிஞர்கள், சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், தன்னார்வ நிறுவன அதிகாரிகள் என பல்வேறு தரப்பு அறிஞர்களையும் அழைத்து, நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்கள் கருத்தரங்கை நடத்தினார் வியாஸ்.
அஹமதாபாத் மேலாண் கழக இயக்குநர் விஜய் ஷங்கர் வியாஸ், தில்லிப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உபேந்திர பக்ஷி, ஜெய்ப்பூர் வளர்ச்சியியல் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் நாருலா, ஊரக அமைச்சகச் செயலர் எஸ்.ஆர்.சங்கரன் ஐ.ஏ.எஸ், மனித வளத்துறைச் செயலர் அனில் போர்டியா, ராஜஸ்தான் அரசு தலைமைச் செயலர் எம்.எல்.மேத்தா, பொருளியல் அறிஞர் காந்தா அஹூஜா, காந்தி உழைப்பாளர் கழகத்தின் இந்திரா ஹிர்வே, டாக்டர். ஷாரதா ஜெயின் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்ட அந்தக் கருத்தரங்கில், கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:
- எல்லா அரசுப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் (வறட்சி நிவாரணம் உட்பட), குறைந்த பட்சக் கூலி கட்டாயமாக்கப் படவேண்டும்.
- வேலை முடிந்து, மஸ்டர் ரோல் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- வேலை – கால அளவிலோ / வேலை அளவிலோ – தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும்.
- தொழிலாளர்கள் செயல் திறன் மேம்பாட்டில், தொழிற்சங்கங்களும், தன்னார்வல நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்க வேண்டும்
- திட்டங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவை, திட்டம் நடைபெறும் இடங்களில், தெளிவாக, தகவல் பலகைகளில் இடம் பெற வேண்டும். அதன் மதிப்பு, கால அளவு, பயன் பெறும் நபர்கள், கொடுக்கப் பட வேண்டிய குறைந்த பட்சக் கூலி முதலியவை கட்டாயம் இடம் பெற வேண்டும்.
ஆனால், அரசு, அடுத்த ஆண்டு துவங்கிய (1991) ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் மீண்டும் குறைந்த பட்சக் கூலியான 22 ரூபாய்க்குப் பதில் 11 மட்டுமே வழங்க முன்வந்தது. மீண்டும் பீம் நகரில் தர்ணா – உண்ணாவிரதம் துவங்கியது. தர்ணா துவங்கிய ஐந்தாம் நாள், மாநில முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத், தர்ணா பந்தலுக்கு வந்தார். குறைந்தபட்சக் கூலி வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்து விட்டுச் சென்றார்.
ஆனால், அன்றிரவு, போலீஸை உபயோகித்து, தர்ணா செய்பவர்களைக் கலைத்துவிட முதல்வர் ஆணையிட்டுச் சென்றதாக தகவல்கள் வந்தன. நள்ளிரவில், இரண்டு வேன்கள் நிறைய காவலர்கள் வந்து, தர்ணா செய்தவர்களைத் தாக்கி இழுத்துச் சென்றார்கள். தர்ணா செய்தவர்கள் தங்களிடமிருந்த ‘தோல்’ (Dhol) என்னும் ராஜஸ்தானிய பெரும் தோல் வாத்தியத்தை பலமாக முழங்கினார்கள். ஒலிபெருக்கியில், மரண வீடுகளில் அழும் குரலில் பெரும் ஒலி எழுப்பினார்கள். சத்தம் கேட்டு மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடினர்.
அடுத்த நாள் காலை, மக்கள் தர்ணா நிகழ்ந்த இடத்துக்கு முன் மீண்டும் குழுமினர். பீம் நகர முக்கிய மனிதர்களும், பத்திரிகைகளும், நிகழ்வைக் கண்டித்தனர். மத்திய அரசு ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்ட நிதியை நிறுத்தி வைத்தது. இதன் முடிவில், வேறு வழியின்றி, தேவ்துங்க்ரிக்கு அருகில் நடந்த ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பங்கு பெற்ற அனைவருக்கும், தர்ணா பந்தலிலேயே ரூபாய் 22 எனக் கூலி வழங்கப்பட்டது.
இந்தப் போராட்டங்களின் பின்னர் நிகழ்ந்த கூட்டமைப்பின் உரையாடல்களில், மக்கள் பணி தொடர்பாக, ஆவணங்களை அரசும் அதிகாரிகளும் வெளிப்படையாக வைக்கத் தயங்குவது பற்றியே பெரிதும் பேசப்பட்டது. பலமுறை மக்கள் வைக்கும் குற்றச் சாட்டுகளை, திரும்பத் திரும்ப அரசும், அதிகாரிகளும் பொய் என்றே பதிலளித்து வந்தார்கள். அரசு ஆவணங்களைப் பகிர்தல் அரசு ரகசியச் சட்டப்படி ( Official secrets Act 1923) குற்றம் என்னும் பதிலும் வைக்கப்பட்டது. தகவல் என்பது அதிகாரத்தின் ஊற்றுக்கண். அதை அனைவரிடமும் பகிர்தல், அரசு என்னும் அதிகார சாம்ராஜ்யத்தை பலவீனப்படுத்திவிடும் என்பதால் அரசு அதிகாரிகள், எந்த ஒரு தகவலையும், பூதம் போல் காத்துவந்தார்கள். போராட்டங்களில் பெற்ற அனுபவங்களில் இருந்து, தேவ்துங்ரி மக்கள் அதை உணரத் துவங்கினார்கள்; வெளிப்படையாகப் பேசத்துவங்கினார்கள்
கூட்டமைப்பில் நிகழ்ந்த உரையாடல்களின் இடையே, ஒரு கிராமத்துப் பெரியவர், ’அரசு ஆவணங்கள் வெளிப்படையாக வைக்கப்படாதவரை, நாம் பொய்யர்களாகவேதான் இருப்போம்’, எனக் கூறியது ஒரு மந்திரம் போல கூட்டமைப்பின் சொல்லாடல்களை மாற்றியது. தகவலறியும் சட்டத்தின் ஆதி மந்திரம் போல அது ஒலித்துக் கொண்டேயிருந்தது.
அதேபோல, கூட்டமைப்பின் போராட்ட முறைகள் பற்றியும் அவற்றின் சாதக பாதகங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன. முந்தைய உண்ணாவிரதப் போராட்டங்களின் போது, உள்ளூர் சட்டசபை உறுப்பினர் ஒருவர், ’இவர்கள் செத்தால் சாகட்டும்; மக்கள் தொகையாவது குறையும்’, என அலட்சியமாகப் பேசியது அலசப்பட்டது. உண்ணாவிரதம் இருக்கும் போராளிகளின் உடல் நிலை மோசமடைந்தால், திரும்பவும், சிகிச்சைக்காக, இதே அரசு நிறுவனங்களை எதிர்பார்த்து நிற்பதும், ஏற்கனவே உணவில்லாமல் போராடும் மக்கள் உடல் நிலை இன்னும் மோசமாவதும் சரியல்ல என முடிவெடுக்கப்பட்டது. உண்ணாவிரதப் போராட்டங்களை, காலம் தாழ்த்துதல் என்னும் சிறு உத்தி மூலம், அதை சில நாட்களிலேயே அரசு எளிதில் வீழ்த்திவிடுகிறது, எனவே புதிய போராட்ட முறைகளை வடிவமைக்க வேண்டும் என கூட்டமைப்பு முடிவெடுத்தது.
மக்கள் குரல் கேட்டல்: (ஜன் சுன்வாய்):
அருணாவும் நண்பர்களும், உண்ணாவிரதம், போராட்டம் என்னும் வழக்கமான வழிகளை மாற்றி, மக்கள் குரல் கேட்டல் என்னும் ஒரு புதிய வழியை உருவாக்கினார்கள். கிராமத்தில், அனைவரும் கூடி, அங்கே நடந்துள்ள மக்கள் பணிக்கான செலவுகளை, பொதுவில் வைத்து விசாரிப்பது. அந்தப் பணியில் பங்கு பெற்ற உள்ளூர் தொழிலாளர்களும், பொதுமக்களும் ஒரு குறிப்பிட்ட நாளில் கூடி, பஞ்சாயத்துக் கணக்குகளை ஆடிட் செய்வார்கள். செய்யப்பட்ட வேலைகள் என்னென்ன, அதற்கான பொருட்கள் எங்கே வாங்கப்பட்டது. மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கூலி எவ்வளவு என்பதற்கான ரசீதுகள் போன்றவற்றை பரிசீலிப்பார்கள். இந்த நிகழ்வில், சுதந்திரமான பார்வையாளர்கள் 4-5 பேர் கலந்து கொள்வார்கள் (ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளூர் பெரியவர்கள் என). பஞ்சாயத்து பணிகள் பற்றி மக்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் அவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்படும். அதற்கான ரெஜிஸ்டர்கள், பில்கள் முதலியன சரிபார்க்கப்படும். பஞ்சாயத்து தலைவர்கள் / ஊழியர்கள் தவறு செய்திருந்தால், அதற்கான பணம் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். எடுத்துக்காட்டாக, கிராமப் பள்ளிக்கூட்த்துக்கு காம்ப்வுண்ட் சுவர் கட்டியதாக கணக்கெழுதி, பணம் கையாடப்பட்டிருந்தால், அந்தப் பணம் சம்பத்தப்பட்ட ஊழியரிடமிருந்தே திரும்பப் பெறப்படும். ஒரு வேளை மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு தவறாக இருந்தால், எந்த நடவடிக்கையும் இருக்காது.
உழைப்பாளர் உழவர் கூட்டமைப்பு, இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் முன்பு, தெளிவான ஆதாரங்களைத் திரட்டி வந்ததால், பெரும்பான்மையான, குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின. இந்த நிகழ்வுகள், பொதுவான பார்வையாளர்கள் கலந்து கொள்ள ஒரு பெஞ்ச், டேபிள், ஒரு மைக், நிகழ்வுகளைப் படம் பிடிக்க ஒரு விடியோ கேமரா எனக் குறைந்த பட்ச உபகரணங்களோடு துவங்கும். பங்கு கொள்பவர்கள் நிதானமாகவும், மரியாதையாகவும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். தீர்ப்புகள், தரவுகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் தரப்படும் என்பது போன்ற விதிகள், இந்த நிகழ்வுகளின் உணர்வுக் கொந்தளிப்புகளை அடக்கி வைத்தன.
முதல் மக்கள் குரல் கேட்டல் நிகழ்வு, பாலி மாவட்டத்தில் உள்ள கோட் கிரானாவில் நிகழ்ந்தது. அங்கே ஐஏஎஸ் பயிற்சி அதிகாரியாக இருந்த நிர்மல் வாத்வானி, அருணாவுக்கும் சங்கருக்கும் ஏற்கனவே பழக்கமானவர். மிகுந்த தயக்கத்துடன், பலத்த எதிர்ப்புக்கிடையே, வாத்வானி, கோட் கிரானா பஞ்சாயத்து ஆவணங்களைப் பிரதியெடுக்க அனுமதித்திருந்தார். அரசியல்வாதிகள், பெரும் பதற்றத்துக்குள்ளானார்கள். கோட் கிரானா மக்களைக் கடத்திச் சென்று, ஆட்சியர் முன்னிலையில், தவறு எதுவும் நடக்கவில்லை என மனுக்களில் எழுதிக் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார்கள்.
குறித்த நாளில், நேரத்தில் கோட் கிரானா மக்கள் குரல் கேட்டல் நிகழ்வு துவங்கியது. கல்வியாளர் ரேணுகா பமேச்சா, சமுக சேவகர்கள் சவாய் சிங், பங்கர் ராய் முன்னிலையில், ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்வு முடிவில், ஊழல்கள் அடையாளப்படுத்தப்பட்டன. ஐஏஎஸ் அதிகாரி நிர்மல் வாத்வானி, கோட்கிரானா இளநிலைப் பொறியாளர் மற்றும் கிராம சேவகர் மீது, போலீசில் புகார் கொடுத்தார்.
அரசு நிர்வாகம் கொந்தளித்து விட்டது. கிராம சேவகர்கள் யூனியன், தாங்கள் இதற்கு ஒத்துழைப்புத் தரமாட்டோம் என மறியலில் ஈடுபட்டது. ஆனால், பொதுமக்கள், மக்கள் சேவையில் இருப்பவர்கள், பல நேர்மையான அரசு அதிகாரிகளிடையே இதற்கு வரவேற்பு இருந்தது. மக்கள் குரல் கேட்டல் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தன. முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதைச் செய்த அலுவலர்களும், பஞ்சாயத்து மக்கள் பிரதிநிகள் கையாடிய பணத்தைத் திரும்பக் கொடுத்தார்கள். இதற்குக் கிடைத்த வரவேற்பையொட்டி, கூட்டமைப்பு நான்கு முக்கிய வேண்டுகோள்களை அரசின் முன் வைத்தது:
- பஞ்சாயத்து அளவில் எல்லா ஆவணங்களும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்.
- ஊழல் உறுதி செய்யப்பட்டால், அதைச் செய்த பஞ்சாயத்து அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் அவற்றுக்குப் பொறுப்பேற்க வகை செய்யப்பட வேண்டும்.
- ஆவணங்களைச் சமூகம் அல்லது மக்கள் பொதுவில் சரி பார்க்கும் முறை (social / people’s audit) ஒரு அரசு முறையாக ஆக்கப்பட வேண்டும்.
- கையாடப்பட்ட பணத்தை, கையாடியவர்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
மக்கள் குரல் கேட்டல் நிகழ்ச்சிகளுக்குக் கிடைத்த வரவேற்பைக் கண்ட முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத், 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி, பஞ்சாயத்து ஆவணங்கள் மக்களுக்கு எளிதில் கிடைக்க வழி செய்யப்படும் என சட்டசபையில்அறிவித்தார். அது செய்தித் தாள்களிலும் வந்தது. அந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு சென்று ஆவணங்களைக் கேட்ட போது, அரசாங்க ஆணை வரவில்லை என்னும் பதில் கிடைத்தது. ஒரு ஆண்டு காலம் வரை, முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை
கூட்டமைப்பு ஒரு ஆண்டு காலம் காத்திருந்தது. முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அடுத்த ஆண்டு அதே நாள், பேவர் என்னும் நகரில், தர்ணாவைத் துவக்கினார்கள். இது உண்ணாவிரதப் போராட்டமல்ல. தொடர் தர்ணா. துவங்கும் முன்பு, சுற்று வட்டாரத்தில் இருந்த 300 கிராமங்களுக்கும் சென்று, மக்களின் ஆதரவை வேண்டினார்கள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் 4 நாட்கள் தர்ணாவில் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. தர்ணாவுக்காக ஒவ்வொரு வீடும் 1.5 கிலோ தானியங்கள் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள். தர்ணா முடிய 1 மாதத்துக்கும் மேலாகும் எனவே, சரியான தயாரிப்புகளின்றி செல்வது தவறு எனத் தீர்க்க தரிசனத்தோடு கணித்தார்கள். போராட்டத்தில், முன்பே அறிமுகமாகியிருந்த ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தர் கலந்து கொண்டார். பிரபல பத்திரிகையாளர்களாகிய குல்தீப் நய்யார் மற்றும் நிகில் சக்ரவர்த்தி கலந்து கொண்டது, பத்திரிகையுலகில், இந்தப் போராட்டம் பெருமளவில் பரவவும், ஆதரவு பெறவும் வழிவகுத்தது. சமுக சேவகர் மேதா பட்கர், மும்பையில், மிக நேர்மையான அரசு அதிகாரியாக அறியப்பட்டிருந்த சுனீல் கைர்நார் போன்றோர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
முப்பதாவது நாள், போராட்டம் ஆஜ்மீருக்கு நகர்ந்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு, தலைநகர் ஜெய்ப்பூரை அடைந்தது. தலைமைச் செயலகத்துக்கு நூறு அடி தொலைவில், சாலையில் ஓரத்தில் டெண்ட் அடித்து, தர்ணா செய்பவர்கள் அமர்ந்தனர். தர்ணா செய்பவர்களில் பெரும்பாலானோர், ‘காக்ரா’ என்னும் ஒருவகை பாவாடை போன்ற உடையை அணிந்திருப்பவர்கள். அதை அணிந்த முட்டாள்களா அரசை எதிர்ப்பது என நிர்வாகத் தாழ்வாரங்கள் கேலி பேசின.
போராட்டத்தில் கலந்து கொண்ட ப்ரபாஷ் ஜோஷி என்னும் இண்டியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழ் குழுமத்தில், பல்லாணடுகள் பணிபுரிந்த முதுபெரும் பத்திரிகையாளர். அவர், தில்லி சென்று, ‘ஹம் ஜானேங்கே; ஹம் ஜீயேங்கே’, (நாம் அறிந்து கொள்வோம்; நாம் வாழ்வோம்) என்னும் தலைப்பில், மிகவும் புகழ்பெற்ற ஒரு கட்டுரையை எழுதினார். பின்னாளில், தகவலறியும் சட்டப் போராட்டத்தின், போர்க்குரலாக இந்த வார்த்தைகள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அந்தக் கட்டுரையில், அவர், இந்தப் போராட்டத்தின் வெற்றிக்குக் காரணம், வழக்கமான தொழிலாளக் கூட்டமைப்பின் தலைவர்கள் போலல்லாது, அருணா, ஷங்கர், நிகில் மூவரும், ராஜஸ்மண்ட் மாவட்டத்தின் ஏழை மக்கள் திரளில் ஒரு அங்கமாக வாழ்ந்ததே மிக முக்கிய காரணம் என எழுதியிருந்தார்.
இந்தப் போராட்டத்தில், வழக்கமான காந்திய வழிமுறைகளான உண்ணாவிரதம் போன்றவை பயன் தராத போது, புது வழிகளைச் சமைத்தார்கள். தினசரி வரவு செலவுக் கணக்குகளை, உண்ணாவிரதப் பந்தலுக்கு வெளியே எழுதி வைத்தார்கள். தள்ளுவண்டிக் காய்கறி வணிகர்கள் காய்கறிகளை இலவசமாகத் தந்தார்கள். சிறு வணிகர்கள், தானியங்களைத் தந்தார்கள். தேசிய நாடகப் பள்ளியில் இருந்து, கலைஞர்கள் வந்து, உள்ளூர் மக்களுக்கு பயிற்சி தந்து, தெரு நாடகங்களை நடத்தினார்கள். உள்ளூர் கபீர் மற்றும் சுஃபி பாடல்கள் பாடும் கலைஞர்கள் வந்து பாடல்களை புதிதாய்ப் புனைந்து பாடினார்கள். அருணா முதல் அனைத்துத் தொண்டர்களும், தெருக்களில் உணவு தயாரித்து, உண்டு, உறங்கி வாழ்ந்தார்கள். மொத்தத்தில் போராட்டம் ஒரு மக்கள் திருவிழாவாக, கூத்தும் பாட்டுமாய் அமர்க்களப்பட்டது.
போராட்டம், நடந்து கொண்டிருந்த போது, அருணாவின் கணவர் பங்கர் ராய் நடத்தி வரும் வெறும்பாதக் கல்லூரிக்கு வரும் வெளிநாட்டு உதவி பற்றி விசாரிக்க நேரிடும் என, மாநிலத்தின் தலைமைச் செயலர் உழைப்பாளர் உழவர் சக்திக் கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் மிரட்டல் விடுத்தார்.
அடுத்த சில நாட்களில், வெறும்பாதக் கல்லூரியின் எல்லா ஆவணங்களும், ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் முன்னிலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. குறைந்தபட்சக் கூலியை ஊதியமாகப் பெற்று, மக்களுக்காக வாழும் மனிதர்களிடம் மிரட்டிப் பயமுறுத்த உயிரைத் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது?
இந்தப் போராட்டத்தின் விளைவாக, மக்கள் தகவலறியும் உரிமைக்கான தேசிய இயக்கம் ஒன்று துவங்கப்பட்டது. (National Campaign for People’s Right to Information NCPRI). இதன் இலக்குகள் இரண்டு.
அ. தகவலறியும் சட்டத்துக்கான ஒரு வரைவை உருவாக்குவது
ஆ. தகவலறியும் சட்டத்துக்கான ஒரு நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்குவது.
அருணா ராயின் நண்பரும், ஐஏஎஸ் அதிகாரியுமான, ஹர்ஷ்மந்தர் இதை முன்னெடுத்தார். அவர் பணிபுரிந்த, ஐஏஎஸ் அதிகாரிகளைப் பயிற்றுவிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அகதெமியின் இயக்குநர், என்.சி.சக்சேனாவுடன், தகவலறியும் சட்டம் உருவாக்க, தேசிய அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை, ஒருங்கிணைத்து நடத்தினார். அது, ஐஏஎஸ் அதிகாரிகளின் பயிற்சிக் கூடமான, டேராடூனில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அகதெமியில் நிகழ்ந்தது. கூட்டத்தில், ‘பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றத்தில் வைக்கப்படும் எல்லாத் தகவல்களும் மக்கள் முன் வைக்கப்பட வேண்டும்’, என்னும் மிக முக்கியமான ஒரு கருத்தை, அகதெமியின் இயக்குந சக்சேனா முன் வைத்தார். முடிவில், ஒரு மாதிரி முன்வரைவு உருவாக்கப்பட்டது. அந்த மாதிரி முன்வரைவை, இந்தியப் பத்திரிகை கவுன்சிலின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதி சாவந்த் அவர்களிடம் அளித்து, மெருகேற்றக் கேட்டுக் கொண்டார்கள். சாவந்த் இறுதி செய்த அந்த வரைவை, அவர்கள், அரசின் முன் வைக்கப்பட்டது
மக்களுக்காக, மக்களால் முன்மொழியப்பட்டு, மக்கள் சேவகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட வரைவு, மக்களாட்சியின் நான்காம் தூணான இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலால் மெருகேற்றப்பட்டு, செப்டம்பர் 30, 1996 அன்று ஐக்கிய முண்ணணியின் பிரதமர் தேவே கௌடாவிடம் அளிக்கப்பட்டது. அவர் நுகர்வோர் நல உரிமைகளுக்காக போராடி வந்த ஹெச்.டி.ஷோரி தலைமையில், இதை ஆராய ஒரு கமிட்டி அமைத்தார். அவர்கள் 1997 ஆம் ஆண்டு ஒரு சட்ட வரைவை மத்திய அரசு முன்பு வைத்தார்கள்.
இதற்கிடையில், மாநில அளவில், 1997 ஆம் ஆண்டு, தமிழகத்தில் முதலிலும், பின்னர் கோவாவிலும் தகவலறியும் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், தகவல் அறிதலின் முக்கியத்துவத்தை, சாதாரண மனிதர்கள் உணர்ந்த அளவுக்கு, மத்திய அரசும், அதிகாரிகளும், இதை உணர்ந்து கொள்ள வில்லை. எனவே, ஒவ்வொரு நிலையிலும் இது தாமதப்பட்டது.
இறுதியில், பல மத்திய அரசுகளைத் தாண்டி, இது 2002 ஆம் ஆண்டு சட்டமாக வெளிவந்தது. ஆனால், அதை அரசு செயல்படுத்தாமல், கிடப்பில் போட்டது. 2004 ஆம் ஆண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின், குறைந்த பட்சச் செயற்திட்டத்தில், தகவலறியும் சட்டம் மேம்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்தது. குறைந்த பட்சச் செயற்திட்டத்தை நிறைவேற்ற, பிரதமருக்கு உதவியாக தேசிய ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில், டாக்டர் எம்.எஸ்.ஸ்வாமிநாதன், சூழியல் அறிஞர் மாதவ் காட்கில், அருணா ராய், வளர்ச்சிப் பொருளியில் அறிஞர் ஜான் த்ரெஸ் போன்றவர்கள் இடம் பெற்றிருந்தார்கள். தனது முதல் அமர்விலேயே, இந்தக் குழு தகவலறியும் சட்ட வரைவை முன் வைத்தது. இது பாராளுமன்றத்தால், ஜூன் 12, 2005 ல் நிறைவேற்றப்பட்டு, அதே ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்தது.
இப்படியாக, 1987 ஆம் ஆண்டு, வறட்சி நிவாரணப் பணிகளுக்கான அடிப்படைக் கூலியான 11 ரூபாயை ஊழல் செய்யாமல் வழங்க வேண்டும் என தேவ்துங்ரியில் துவங்கிய சிறு போராட்டம், 18 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் தகவலறியும் சட்டமாக வெளிவந்தது. தென் ஆப்பிரிக்காவில் காந்தியின் முதல் சத்யாக்கிரகம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிந்தது. அதன் பின்னர், இந்தியாவில் அவர் ஒவ்வொரு போராட்டத்துக்கும் எட்டிலிருந்து பத்து ஆண்டுகள் வரை உழைத்து, உருவேற்றி, மக்களியக்கமாக நாடெங்கும் வெற்றிகரமாக நிகழ்த்தியது வரலாறு. இந்தப் போராட்டமும், அந்த வகையில், ஒரு சிறு பொறியாகத் துவங்கி, அரசு நிர்வாகத்தை மேம்படுத்த, அதைக் கண்காணிக்க உதவும் ஒரு சட்டமாக மாற 18 ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
2005 ஆம் ஆண்டு, பொருளாதார வளர்ச்சியின் பலன்களை, மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கோடு, ‘மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்’, உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில், வளர்ச்சிப் பொருளியல் நிபுணர் ஜான் த்ரெஸ்ஸும், அருணா ராயும் முக்கியப்பங்களித்தனர். இது தவிர, இந்தக் காலகட்டத்தில், கல்விக்கான உரிமை (right to education), அடிப்படை உணவுப் பாதுகாப்பு (Food security Act) போன்றவையும் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்திலும், அருணா ராயின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.
கணவர் பங்கர் ராய், அஜ்மீர் மாவட்டத்தின் டிலோனியா கிராமத்திலும், அருணா ராய், ராஜஸ்மண்ட் மாவட்டத்தின் தேவ்துங்ரியிலும், ஒவ்வொரு நாளும், ஏழைமக்களின் வாழ்க்கையை ஒரு படி முன்னேற்றும் முயற்சியில் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காந்தி,வாழ்ந்து கொண்டிருக்கிறார்.