மத்துறு தயிர் [சிறுகதை] – 2

[தொடர்ச்சி]

பேராசிரியர் குளித்துவிட்டு வந்தார். தலையை நன்றாகத் துவட்டாமல் ஈரம் ஜிப்பாமேல் சொட்டி அதில் சொட்டுநீலத்தின் புள்ளிகள் துலங்கின. ‘தலைய தொடைக்கப்பிடாதா?’ என்று குமார் எழுந்து சென்று அருகே இருந்த துண்டால் அவர் தலையை துடைத்தார். ’குமாரு எனக்க பர்ஸை காணல்ல கேட்டியா?’. ‘அது எதுக்கு இப்ப? கண்ணாடி இருக்குல்ல?’ ‘இருக்குடே’ ‘போரும் வாங்க..’ பேராசிரியர் மெல்ல படி இறங்கி ‘ஏசுவே கர்த்தாவே’ என்று கண்மூடி ஜெபித்து வேனில் ஏறிக்கொண்டார். குமார் ஓட்டினார். நான் பேராசிரியர் அருகே அமர்ந்துகொண்டேன். பேராசிரியர் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிப்பது போல் கம்பராமயணப்பாடலைச் சொல்ல ஆரம்பித்தார்

’ஆவி உண்டு என்னும் ஈது உண்டு, உன் ஆருயிர்
சேவகன் திருவுரு தீண்ட தீய்ந்திலா
பூ இலை தளிர் இலை. பொரிந்து வெந்திலா
கா இலை, கொடி இலை, நெடிய கான் எலாம்’

முதுமையில் தளர்ந்த குரலில் அந்த பாடல் ஏதோ புராதன மந்திரம் போல ஒலித்தது. அதன் அர்த்தம் நெஞ்சுக்கு வருவதற்குள்ளேயே என் மனம் சிலிர்த்தது. ‘ அப்ப நீங்க சொன்ன பாட்டுக்கு ரெண்டுபாட்டு முன்னால உள்ளதாக்கும். ராமன் சீதைய பிரிஞ்சு இருக்கான். அப்ப அவன் படுற துக்கத்த அனுமன் சீதைக்கிட்ட வந்து சொல்லுகான். உயிர் இருக்குன்னு சொல்லப்படுற அந்த உடல் மட்டும் இருக்கு. அவ்ளவுதான். உயிரு இருக்கு, உடலும் இருக்கு. அதுக்கும் மேலே மனுஷன் இருக்கான்னு சொல்ல ஒண்ணு வேணுமே, அது இல்லை. என்னா ஒரு துக்கம்! அந்த நெடியகாட்டிலே உன் கணவனோட திருவுருவத்தை தீண்டினதால காயாத பூவும் இலையும் இல்லை. அவன் துக்கத்தோட சூடு பட்டு பொரிந்து வேகாத காயோ கொடியோ இல்லை..காடே வாடிப்போச்சு… காடே வாடிப்போற துக்கம். நினைச்சுப்பாருடே குமாரு’

குமார் ஓட்டும்போது சாலையில் இருந்து பிரக்ஞையை விலக்குவதில்லை. நான் ‘அவ்ளவு பெரிய துக்கத்தை இயற்கையே தாங்காதுதான்’ என்றேன். பேராசிரியர் பெருமூச்சு விட்டு ‘என்னமா எழுதியிருக்கான். இன்னைக்கு கம்பனை படிக்க ஆளில்லாம ஆயிட்டிருக்கு. ஒரு கல்ச்சருக்கு உச்சம்னா அது மகாகாவியம்தான். கம்பன் நம்ம சமூகத்தோட கோபுரகலசம். ஆனா நம்மாளுக்கு புரிய மாட்டேங்குது. என்ன கருத்துன்னு கேக்கான். அர்த்ததைச் சொல்லுங்கிறான்… அர்த்தம்னா என்னது? துக்கத்துக்கு ஏது அர்த்தம்? துக்கத்தைப் புரிஞ்சவனுக்கு கவிதையிலே மேக்கொண்டு என்னத்தை புரிஞ்சுகிடதுக்கு இருக்கு?’

நான் அண்ணாச்சியைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். பேராசிரியர் ‘கம்பராமாயணத்தை புஸ்தகம் வச்சு வாசிக்கப்படாது. ஒண்ணும் கெடைக்காது, சும்மா போட்டு வர்ணிக்கிறான்னுகூட தோணிடும். குரு வேணும். காவியத்தையும் வாழ்க்கையையும் ஒண்ணாச்சேத்து அவரு சொல்லிக்கொடுக்கணும்…எல்லாருக்கும் வாய்ச்சுக்கிடாது‘ என்றார். அவர் நினைவுகளில் ஆழ்வது போலிருந்தது. ‘பூர்வசென்மமோ என்னமோ, குரு அமைஞ்சார் கவிதை அமைஞ்சுது. மனம் அமைஞ்சுது…எளுதி கொண்டுட்டு வரணும்..வேறென்னத்தச் சொல்ல?’

பேராசிரியர் சட்டென்று கைகூப்பினார் ‘எங்க இருக்காரோ…ஒரு நாளு நாலுதடவயாவது கோட்டாறு குமாரபிள்ளை பேரைச் சொல்லாம இருக்கறதில்லை…மகாரஜன் கண்ணுபாக்கலேண்ணா எங்க இருந்திருப்பேன், என்ன செஞ்சிருப்பேன் ஏசுவே’ கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து சுருக்கம் விழுந்த கன்னங்களின் விரிசல்களில் பரவி தாடையில் உருண்டு மடியில் சொட்டியது. கூப்பிய கையுடன் அப்படியே அமர்ந்திருந்தார். நான் குமார் காரை கொஞ்சம் வேகம் குறைக்கலாமே என்று நினைத்தேன். ஆனால் அவர் பின்னால் நிகழ்வதை கவனிக்கவே இல்லை என்று தோன்றியது.

கண்ணீரை துடைத்துக்கொண்டு பேராசிரியர் மெல்ல விசும்பினார். நான் அவரை சந்தித்தபோதெல்லாம் எதற்காகவோ அவர் அழுவதைக் கண்டிருக்கிறேன். கம்பனை நினைத்து , ஏசுவை நினைத்து. முதுமை கனியும்தோறும் மனம் இளகி நெகிழ்ந்து விட்டது போல. இளநுங்குக்குள் குளிர்ந்த பாகு போல ஆன்மா உள்ளே நிறைந்திருக்கிறது. பேராசிரியர் கண்களை துடைத்துக்கொண்டு ‘ஏசுவே, எம்பெருமானே’ என்றார். பின் என்னைப்பார்த்து புன்னகை செய்தார். மிட்டாய்க்கு அழுத குழந்தை அது கிடைத்ததும் கண்ணீருடன் சிரிப்பது போல் இருந்தது. நானும் புன்னகைசெய்தேன்.

‘கோட்டாறு குமாரபிள்ளைய பத்தி சொல்லியிருக்கேனா?’ என்றார். ‘ஆம்’ என்றேன். அது அவருக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. அவர் ஏற்கனவே சொல்ல ஆரம்பித்துவிட்டிருந்தார்.’அண்ணைக்கெல்லாம் டிவிடி ஸ்கூலிலே ஒரு அட்மிஷன்னாக்க சாதாரணப்பட்ட விசயம் இல்லை. பலபேரு ஃபீஸு குடுக்கமாட்டாங்கன்னு ஆரம்பத்திலேயே ஃபீஸ வாங்கிடுவாங்க. எனக்க அப்பா ஒரு மேஸன். கொத்தவேலைண்ணா இன்னைக்குள்ள மாதிரி இல்லை. ஆறணா சம்பளமும் உச்சைக்கஞ்சியும். நான் ஸ்கூளிலே இருந்து அப்பன் வேலைசெய்ற எடத்துக்கு போவேன். அந்தக் கஞ்சியிலே பாதிய எனக்கு குடுப்பாரு. எப்பமும் சோலி கிடைக்காது. அப்ப நெய்யூர் ஆஸ்பத்திரிக்குப் போயி ஒரு நேரம் அங்க குடுக்கிற கஞ்சிய வேங்கிட்டு வந்து குடிப்போம். ஆனா நான் படிச்சாகணும்னு அப்பன் நெனைச்சுப்போட்டாரு. அவர மாதிரி ஆளுக ஒரு முடிவெடுத்தா அதை எப்டியும் செய்வாங்க. ஜீவிதத்துக்க ஆழம் வரைக்கும் கண்டவங்களாக்கும்… ’

‘நான் மெட்ரிக் பாஸானதே ஊரிலே ஒரு பெரிய ஆச்சரியம். கொத்தனுக்க மவன் மெட்ரிக் ஜெயிச்சுப்போட்டானே. இனி வெள்ளையும் சட்டையுமா வந்து நிப்பானே? மேல்சாதிக்காரங்க மட்டுமில்ல எங்க சாதியிலேயே பணக்காரனுகளுக்கு எரிஞ்சுது… ‘என்னடே ஞானம், பய எங்க சர்க்காரு வேலைக்கா’ன்னு கேக்காங்க. எனக்க அம்மைக்க நடையே மாறிப்போச்சு. ஆனா அப்பன் அடுத்த தீருமானத்தை எடுத்தாரு. ‘லே, படிக்கியாலே’ன்னாரு. ‘படிக்கேன்’னு சொன்னேன். கூட்டிக்கிட்டு நாகருகோயிலுக்கு போனாரு. எங்க வேதக்கார பள்ளிக்கூடம் நாலு இருக்கு. ஒரிடத்திலயும் முன்பணம் குடுக்காம சீட்டு இல்லேன்னு சொல்லிட்டாங்க. செரி பாப்பமேண்ணு நேரா டிவிடிக்கு போனோம். அங்கயும் அதே கதைதான்.’

பேராசிரியரின் முகத்தின் மாற்றங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ’அப்ப நேரா எதிரிலே பிள்ளைவாள் வாறாரு… வெயிலும் நெழலுமா மாறிமாறி அடிக்க அவரு நடந்துவாறத இப்பமும் நான் பாக்கேன். நல்ல கறுப்பு நெறம். வழுக்கை. காலர் இலலாத வெள்ளை ஜிப்பாதான் போடுவாரு.ரெட்டை மல்லு வேட்டி. ஈரிழை துண்டு ஒண்ணு தோளிலே போட்டிருப்பாரு. சட்டையிலே பேனாவும் ஒரு சின்ன புக்கும். நெத்தி நெறைய விபூதி. தோல்செருப்பு றக்கு றக்குன்னு கேக்கும். அவரு வேட்டி நுனிய இடது கையால புடிச்சுட்டு நிமுந்து நடந்து வாறத பாத்து அப்டியே நின்னுட்டேன். இப்ப, கோடி ரூவா சொத்திருக்கவனுக்கு ஒரு இது இருக்கும். ஆனா ஞானவானுக்கு ஒரு கெம்பீரம் உண்டு பாருங்க, அதை இவன் ஜென்மம் முழுக்க பாத்தாலும் அடைஞ்சுகிட முடியாது

‘நேராட்டு போயி கும்பிட்டுட்டு நின்னேன். அதுக்குள்ள காலிலே நூறு தடவ மானசீகமா விளுந்தாச்சு. ’என்னலே’ன்னாரு. ’அட்மிஷன் வேணும்’னேன். ’அதுக்கு எனக்க கிட்ட எதுக்கு சொல்லுதே. போயி ஹெட்மாஸ்டர்கிட்ட சொல்லு’ன்னாரு. ’நீங்கதான் எனக்கு குரு’ன்னேன். எப்டி அப்டி சொன்னேன்னு இண்ணைக்கும் தெரியாது. ஒரு குட்டிய பாத்ததுமே இவ போனசென்மத்துல சொந்தம்னு தோணுதும்பாக இல்ல. அதை மாதிரித்தான். நின்னு அப்டியே பாக்காரு.. ஒரு நிமிசம். பிறவு வான்னு கூட்டிட்டுபோயி ‘இந்தா எனக்க பையன்’ன்னு சொல்லி சேத்து விட்டாரு. பீசுக்கும் பைசாவுக்கும் அவரு கேரண்டி, அவருதான் கார்டியன்’.

‘அப்டி அவருகிட்ட சேந்துகிட்டேன். குருவுண்ணா அது வேற மாதிரி உறவாக்கும். இப்ப அறுபத்துநாலு வருசம் தாண்டியாச்சு. பிள்ளைவாள் போயிச்சேந்து நாப்பது வருசம் ஆயாச்சு. இத்தனை காலம் ஒருநாளாவது அவர நெனைக்காம இருந்ததில்லை. இன்னைக்கு அவ மக இருக்கா. என்னைவிட பத்து வயசு குறவு அவளுக்கு. அவமுன்னாடி நான் இருந்து பேசமாட்டேன். அவளுக்க மகன் இருக்கான். இருபது வயசாகேல்ல. பாத்தா குமாரபிள்ளைக்க அதே மொகம். அவன் நிக்க நான் இருந்து பேசுகதில்லை. அப்பம்லாம் காலம்பற கண்ணு முழுச்சா உடனே பிள்ளை ஞாபகம்தான். நேரா போயி நிப்பேன். மனசுவிட்டு அவரு பேச கொஞ்ச நாள் ஆச்சு. பேச ஆரம்பிச்சபின்னே பேச்சோட பேச்சுதான். .காலம்ப்ற ஏழரைக்கு நான் போயி வாசலிலே நிப்பேன். சிவபூசே உண்டு. எட்டுமணிக்கு குளிக்கப்போவாரு .துண்டுதுணி சோப்போட பின்னாலே போவேன். கம்பராமாயணத்த சொல்லிட்டே போவாரு… நல்ல கொரலு. பாடினா மதுரை சோமு மாதிரி இருக்கும். ஆனா சங்கீதத்திலே இஷ்டம் இல்ல. செய்யுளைப்பாடுறதுக்கு மட்டும்தான் ராகஞானம்…’

அந்த வகுப்புகள் வழியாக அவர் மனம் கடந்து செல்வதை உணர முடிந்தது. ‘எல்லாம் சொல்லுவாரு. எலக்கணம், காப்பியம், சாஸ்திரம். கூடவே அவருக்க அனுபவங்கள சொல்லிக்குடுப்பாரு. கருணை இல்லாம கவிதை புரியாதுடான்னு சொல்லுவாரு. சொல்லிச்சொல்லி மனச நெறைய வைச்சிருவாரு…’ சட்டென்று குரல் கிரீச்சிட்டு வழுக்கியது. ‘இருக்கதெல்லாம், அடைஞ்சதெல்லாம் என் தெய்வம் போட்ட பிச்சையல்லோ…வாங்குறதுக்கெல்லாம் என்னமாம் திருப்பிக் குடுக்கோம். குருவுக்கு என்ன குடுக்கோம்? வேறெ என்ன, இந்தா இங்க நெஞ்சுக்குள்ள கோயில கெட்டி வச்சிருக்கோமே. அதுதான். எங்க இருந்தாலும் இப்ப இந்த வார்த்தைய மகராஜன் கேக்காமயா இருப்பாரு? இந்த ஏழை சங்கு உருகி அவரை நெனைக்குதேன்னு அய்யனுக்கு தெரியாமலா போயிரும்…’ பேராசிரியர் மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

சுங்கான்கடை தாண்டியிருந்தது. ‘குமாரு, சுங்கான்கடையாடே? ‘ குமார் ஒன்றும் சொல்லவில்லை. ‘சுங்கான்கடையாடே வந்திருக்கு?’ குமார் ‘ம்க்ம்’ என்று ஒரு ஒலி எழுப்பினார். அவர் தொண்டை அடைத்திருக்கலாமென நினைத்தேன் ‘ஒண்ணுக்கு வருதுடே குமாரு’ குமார் வண்டியை நிறுத்தினார். பேராசிரியர் இறங்கி சாலையோரமாக அமர்ந்து சிறுநீர் கழித்தார். அவருக்கு முப்பத்தைந்து வருடங்களாக சர்க்கரை நோய் உண்டு.

மீண்டும் கிளம்பும்போது பேராசிரியர் சொன்னார். ’ஒருமாசம் கழிஞ்சு ஒருநாளு அடுக்களையிலே போயி காப்பி கொண்டுவரச்சொன்னாரு. நானும் அவரு சொன்னதனால போனேன். அவரு ரொம்ப ஆசாரமான ஆளாக்கும். நாஞ்சிநாட்டு பிள்ளமாரு இண்ணைக்குள்ளது மாதிரி இல்ல அப்ப. அவ வீட்டு ஆச்சி அதுக்கும் மேலே. அது எனக்கும் தெரியும். ஆனா நான் சொன்ன சொல்ல அப்டியே செய்யுறவன். ஆச்சி கோவமா முன்வாசலுக்கு வந்து ‘என்ன சொல்லி அனுப்பினியோ? நாடாப்பய அடுக்களையிலே கேறுதானே’ன்னு கேட்டா. அவரு நிதானமா ‘அவனுக்கு இல்லாத எடம்னு ஒண்ணு எனக்க கிட்ட இல்ல’ன்னு சொன்னாரு. ஆச்சி அப்டியே நின்னா. என்னன்னு புரிஞ்சுதோ என்னை ஒரு பார்வை பாத்தா. சட்டுண்ணு உள்ள போயிட்டா. அதுக்கு மறுநாள் முதல் நான் அவளுக்க மகனாக்கும். கறிக்கு அரைச்சு குடுப்பேன். பாத்திரம் களுவிக்குடுப்பேன். அவளுக்கு சேலை துவைச்சு போட்டிருக்கேன். அவளுக்க சகல மனக்குறைகளையும் நிண்ணு கேப்பேன். பிள்ளைவாள் போனபிறவு பதினாறு வருஷம் இருந்தா. அனேகமா வாரம் ஒருக்க போயி பாத்து கையையும் காலையும் பிடிச்சு தடவிவிட்டு சொல்லுகது எல்லாத்தையும் கேட்டுட்டு வருவேன்.. ’ பேராசிரியர் சிரித்தார். ‘அவளுக்கு நான் செவத்த பெண்ண கெட்டேல்லன்னு பயங்கர வருத்தம்…எனக்கு நாலுபிள்ளை பிறந்து மூத்தவ பத்தாம்கிளாஸ் போனதுக்கு பிறவும் வருத்தம் போகல்ல’

‘இங்க படிப்பு முடிஞ்சப்ப கா.சு.பிள்ளைக்கு ஒரு லெட்டரும் குடுத்து என்னைய அண்ணாமலைக்கு அனுப்பினாரு. அங்க பீஏ படிச்சேன். பின்னே எம்.ஏ. பாதி ஃபீசு பிள்ளைவாள் கட்டினதாக்கும். படிப்பு முடிஞ்சப்ப மதுரையிலே எங்க மதத்து காலேஜிலே வேலை கிடைச்சது. ஆனா மூணுமாசம் இருக்க முடியல்லை. நான் சாதாரண நாடான். மூப்புகூடிய குலநாடாருங்க அங்க மதுரைய ஆண்டுகிட்டிருந்தாங்க. மனசுடைஞ்சுபோயி ஒரு லெட்டர் பிள்ளைக்கு எளுதினேன். ‘கெளம்பி வந்திடு, நான் இருக்கேன்’ன்னு எனக்கு ஒரு லெட்டர் போட்டாரு. அந்த லெட்டர் கையில் கிடைச்ச அன்னைக்கு நான் அழுதேன். பெட்டியோட கெளம்பி வந்து வருக்க வீட்டுக்காக்கும் பொயி நிண்ணேன். அவரே திருவனந்தபுரத்துக்கு கூட்டிக்கிட்டு போயி வையாபுரிப்பிள்ளைகிட்ட சேத்து விட்டாரு. ‘வேலை இல்லேன்னூ சொல்லாதே, இவன் எனக்க பையனாக்கும்’னு சொன்னாரு.அப்படி ஆரம்பிச்ச தொளிலு…இது எனக்க தர்மமாக்கும் கேட்டியளா? அவரு சொல்லிக்குடுத்தத முழுக்க நான் இன்னும் எனக்க ஸ்டூடன்ஸுக்கு சொல்லி முடிக்கல்லை..’

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சம்பந்தமில்லாமல் மீண்டும் மீண்டும் ‘மத்துறு தயிர்’ என்ற சொல்லாட்சி நினைவுக்கு வந்துகொண்டிருந்தது. ‘அந்த கம்ப ராமாயணப்பாட்டிலே காடே எரியற துக்கம் பத்தி வருதே…அப்டிப்பட்ட துக்கம் உண்டா என்ன? எல்லா துக்கமும் காலப்போக்கிலே கரைஞ்சிரும்தானே?’ என்றேன். பேராசிரியர் ‘காயம்பட்டா ஆறும். அது உடம்புக்க இயல்பு. ஆனா என்ன மருந்து போட்டாலும் ராஜபிளவை ஆறாது. ஆளையும் கொண்டுட்டுதான் போகும்’ என்றார். எனக்கு சிறு அதிர்ச்சி ஏற்பட்டது. ‘அப்டி ஒரு துக்கம் எப்டி வருது?’ பேராசிரியர் என்னை ஏறிட்டு பார்த்து ‘அது எனக்கும் தெரியல்லை. எதை நம்பி வாழ்க்கைய வச்சுருக்கோமோ அது உடைஞ்சா அந்த துக்கம் வரும்னு குமாரபிள்ளை ஒரு தடவை சொன்னாரு…’

நகருக்குள் நுழைந்ததும் பேராசிரியர் அவரது மனநிலை மாறி வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். சின்னக்குழந்தைகள் பார்ப்பது போல ஒவ்வொரு தாண்டிச்செல்லும் வண்டியையும் அது மறைவது வரை தலை திருப்பி பார்த்தார். உயரமான கட்டிடங்களை நிமிர்ந்து பார்த்தார். அஸிசி தேவாலயத்துக்குள் வண்டி நுழைந்ததும் பச்சைமால் கைகூப்பி வந்து கதவை திறந்தார். பேராசிரியர் இறங்கி ‘என்ன பச்சைமாலு…நல்லா இருக்கியா? வாயிலே பல்லு ஒண்ணையும் காணமே’ என்றார். ‘சொல்லு இருக்கு அய்யா’ என்றார் பச்சைமால். பேராசிரியர் சிரித்தார்.

உள்ளே கலைசலான கூட்டம். சற்று அப்பால் வேறு ஏதோ கூட்டம் நடந்துகொண்டிருந்தது போல தோன்றியது. அவர்கள் சத்தம்போட்டு பேசிக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக இலக்கியக்கூட்டம் போல் அல்லாமல் பச்சைமால் வாழைமரமெல்லம் நட்டு கொடிகள் கட்டி அலங்காரம் செய்திருந்தார். பெருமாள் வந்து கைகூப்பி ஓரமாக நின்றார். கார்லோஸ் வந்து கைகூப்பி விலகி நின்றார். ‘பெருமாளு’ என்று அவர் கையைத் தொட்டபின் கார்லோஸின் தோளில் கை வைத்து ‘பெங்களூரிலேயாலே இருக்கே?’ என்றார். ’இல்ல, ஆந்திராவிலே.. குப்பம்’

பேராசிரியர் மனைவி டெய்சிபாய் நீளமான குடையும் கைப்பையுமாக வந்து ‘எங்க போனிய? மருந்து எடுத்தியளா?’ என்றார் . குமார் ‘இருக்கு…எல்லா மருந்தும் இருக்கு’ என்றார். ‘பிஸ்கட்டு இருக்கா? சுகர் இறங்கிரும்லா?’ ‘அதுவும் இருக்கு.’ ‘வாங்க நேரமாயாச்சு… இது என்ன சட்டை? வேற நான் எடுத்து வச்சிருந்தேனே? ’ டெய்சிபாய் அவரை இடைவேளையில்லாமல் செல்லமாகத் திட்டிக்கொண்டே இருப்பார். பெருமாள் ‘போலாமே சார்’ என்று பேராசிரியரின் கையைப் பற்றினார்.அவரை அவர்கள் சேர்ந்து மேடைக்கு கொண்டு சென்றார்கள்.

குமார் மெல்ல என்னருகே வந்து ‘ஜெயன், ஒரு சின்ன பிரச்சினை’ என்றார். ‘என்ன?’ என்றேன். ‘ராஜம் சறுவிட்டாரு. சஜின் ஒரு டெஸ்கை தூக்கிப் போடப்போயிருக்கான். அந்த நேரம் பாத்து போயிட்டாரு…’ நான் ‘எங்க போகப்போறாரு? பக்கத்திலே எங்காவது கடையிலே நிப்பாரு’ என்றேன். ‘அப்டி இல்லை…இவரோட எடங்களே வேற…இவரு பட்டை தேடிப் போறவரு. அது எங்க கெடைக்கும்னு யாருக்கு தெரியும்…’ நான் ‘அது தெரிஞ்ச யாரையாவது அனுப்பித் தேடினா என்ன?’ என்றேன். ‘ஏன் அவனுக்கும் நான் குடிக்க காசு குடுக்கணுமா?’ என்றார்

மேடையில் விழா ஆரம்பித்தது. நானும் மேடைக்குச் சென்றேன். ஓரமாக என் இருக்கையில் அமர்ந்துகொண்டேன். குமரிமாவட்டத்தில் அத்தனை எழுத்தாளர்கள் இருப்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. பேராசிரியர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். குமாரைத் தேடுகிறார் என்று தெரிந்தது. குமார் தலைமறைவாகி விட்டார். பச்சைமால் என்னிடம் வந்து குனிந்து ‘பேராசிரியர் ராஜத்தை கேக்கிறார். எங்க இருக்கார்னு தெரியுமா?’ நான் குரூரதிருப்தியுடன் ‘குமாருக்குத்தான் தெரியும்…அவர்கிட்ட கேளுங்க’ என்றேன். ‘முதல்ல குமார் எங்க? ‘. ‘அதை சஜின் கிட்ட கேளுங்க’ பச்சைமால் முகத்தில் பரிதவிப்பு தெரிந்தது.

மேடைக்குப்பின்புறம் உலவி விட்டு பச்சைமால் தொய்ந்து திரும்பி வந்தார். ராஜம் பற்றிய தகவலே இல்லை என்று தோன்றியது. நடுவே பேராசிரியர் கழிப்பறை சென்றார். கூடவே சென்ற பச்சைமால் குமாரை அழைத்து வந்து விட்டுவிட்டார். அவர்கள் பேசிக்கொள்வதை தூரத்தில் இருந்தே பார்த்தேன். பேராசிரியர் குமாரை கடிந்துகொண்டு திரும்பி வந்து அமர்ந்தார். மேடையில் பேச்சுக்கள் நீண்டுகொண்டே சென்றன. பாராட்டுக்கள் மேலும் பாராட்டுக்கள். சம்பிரதாயங்கள் மேலும் சம்பிரதாயங்கள்.

நான் சிறுநீர் கழிக்கச் சென்று செல்பேசியை எடுத்து பார்த்தபோது இரண்டு தவறியஅழைப்புகள் இருந்தன. அவற்றில் ஒன்றை அழைத்து பேசிக்கொண்டே விலகிச்சென்றேன். பக்கவாட்டில் ஓர் அறைக்குள் அனிச்சையாக கண் திரும்பியபோது அங்கே ஒருவர் இருப்பது போல தோன்றியது. பேசியபடியே பின்னால் நகர்ந்து மீண்டும் உள்ளே பார்த்தேன். கொஞ்சம் அதிர்ந்து பேச்சை விட்டுவிட்டேன். அது அண்ணாச்சிதான். தரையில் சுவரோடு சேர்ந்து குந்தி அமர்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.

பழைய உடைசல்களை வைக்கும் அறை அது. கொடிகளும் அட்டைப்பெட்டிகளும் நிறைந்த அடைசல் நடுவே ஒரு மேஜைநாற்காலி. மறுபக்கம் திறக்கும் சன்னல். நான் அறைக்குள் நுழைந்தேன். அண்ணாச்சி போதை போட்டிருப்பார் என்று நினைத்தேன். அவரை மெல்ல அழைத்துச் சென்று உடைமாற்றிக் கூட்டிவரலாம் என்று எண்ணினேன். அவர் நிமிர்ந்து என்னைப்பார்த்தார். கண்கள் மினுமினுவென்றிருந்தன. தாளமுடியாதபடி வலிக்கும்போது மிருகங்களின் கண்கள் அப்படி இருக்கும். ‘அண்ணாச்சி’ என்றேன்

அவர் ‘..ம்’ என்றார். ‘என்ன இங்க இருந்திட்டீங்க..’ அவர் குடிக்கவில்லை என்று உடனே எனக்கு தெரிந்தது. சட்டை வேட்டி எல்லாமே சுத்தமாக மடிப்பு கலையாமல் இருந்தன. தாடியும் தலைமயிரும் நன்றாகச் சீவப்பட்டிருந்தன. ’என்ன ஆச்சு?’ என்றேன். ‘நல்ல சொகமில்லை…’ என்றார். ’ஏன்? என்ன செய்யுது?’ ‘ஒத்தைத்தலைவலி…அதாக்கும் இருட்டுலே இருந்தேன்…நீங்க போங்க.  ஸ்டேஜிலே விளிப்பாவ’

நான் வெளியே வந்தேன். குமாரை செல்லில் அழைத்து வரச்சொன்னேன். நான் நகர்ந்தால் அண்ணாச்சி சென்றுவிடுவார் என எனக்கு தெரியும். குமார் பாய்ந்து வந்தார். ‘என்ன செய்யுதாரு?’ ‘சும்மா இருக்காரு. தலைவலியாம்’ ‘தண்ணியா?’. ‘இல்ல. வாடை இல்ல’ .‘கஞ்சாவா இருக்குமோ?’. ‘அப்டி தெரியலை…பாருங்க’ என்றபின் நான் மேடைக்குச் சென்றேன். வயதில் நான் தான் இளையவன். கடைசி மரியாதைக்காக என்னை அழைக்க பச்சைமால் பதறிக்கொண்டிருந்தார்.

மேடையில் இருந்து இறங்கி பெருமாளின் கைகளைப்பிடித்து நடக்கும்போது பேராசிரியர் திரும்பித் திரும்பிப் பார்த்தார். குமார் என்னிடம் வந்து ‘ராஜத்தை கூப்பிட்டேன். வரமாட்டேன்னு சொல்லுதார். ஒரு நிமிஷம் வந்து தலையக் காட்டிட்டு போங்கன்னா கேக்க மாட்டேங்குதார். ஒரு வார்த்தை பேசி பாக்குதீங்களா?’ என்றார். நான் அறைக்குச் சென்றேன். அதே இடத்தில் அப்படியே ராஜம் அமர்ந்திருந்தார்

‘அண்ணாச்சி, நீங்க ஒண்ணுமே செய்ய வேண்டாம். ஒரு நிமிஷம் முன்னாடி வந்து நில்லுங்க. அவரு என்னடே ராஜம்னு கேப்பாரு. கெளம்பிருவாங்க…அவரால இனி அதிக நேரம் நிக்கமுடியாது…’ என்றேன். ‘இல்ல, வேண்டாம். கட்டாயப்படுத்தாதீங்க’ என்றார். நான் அந்த நாற்காலியில் அமர்ந்தேன். ‘’நாலஞ்சு மாசமா உங்களைப்பத்தி கேட்டுட்டே இருக்காராம். இப்பகூட கேட்டார்’ ராஜம் ஒன்றும் சொல்லவில்லை.

நான் மேலும் முன்னகர்ந்தேன். ‘ஒருவேளை இதாக்கும் கடைசி சந்திப்புன்னு சொன்னாரு. அவரை மாதிரி ஒருத்தர் ஒண்ணும் காணாம அப்டி சொல்ல மாட்டார்… நீங்க இப்ப வந்து பாக்காம போனா ஒருவேளை உங்க வாழ்க்கை முழுக்க வருத்தப்படுவீங்க’ அண்ணாச்சியிடம் அசைவே இல்லை. தலையை கொஞ்சம் சரித்து தரையையே பார்த்துக்கொண்டிருந்தார். ‘வாங்க வந்து பாத்துட்டு போங்க…இப்ப நீங்க பாக்கிறதுதான் கடைசி பார்வை…சொன்னா கேளுங்க’

அண்ணாச்சி நிமிர்ந்து ‘அது எனக்கும் தெரியும்’ என்றார். நான் அதிர்ச்சி அடைந்தேன். அந்த வார்த்தைகளை அவரை அதிரச்செய்வதற்காகவே சொல்லியிருந்தேன். அண்ணாச்சி ‘வேண்டாம். நான் வரமாட்டேன். என்னை விட்டிருங்க’ என்றார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை அசைக்க முடியாது என்று தெரிந்துவிட்டது. பெருமூச்சுடன் எழுந்து வெளியே வந்தேன். குமார் ஓடிவந்தார். ‘என்ன சொல்லுகாரு?’ என்றார் ‘அவரு வரமாட்டாரு. அவர கட்டாயப்படுத்துறதில அர்த்தமில்லை’ என்றேன்.

சஜின் ஓடிவந்து ‘பேராசிரியர் கெளம்பறாரு’ என்று குமாரிடம் சொன்னார். குமார் ஓட நான் பின்னால் சென்றேன். டெய்சிபாய் காரில் ஏறி அமர்ந்து சன்னல் வழியாகத் தலை நீட்டி ‘அங்க என்ன செய்யுதாரு? நேரமாகுதுல்லா?’ என்றார். பேராசிரியர் வாசலில் நிற்க அவரது முன்னாள் மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து நின்றார்க்ள். ‘எல்லாருக்கும் நல்லது வரட்டும். கர்த்தாவு அனுக்ரகிப்பாரு. இனி ஆரைத் திரும்பப் பாப்பேனோ தெரியல்லை… அக்கரை கண்ணுல பட்டாச்சு… பாப்பம்’ அவர் தொண்டை இடறியது. திரும்பிக் குமாரைப் பார்த்தார்

குமார் அவருடன் காரை நோக்கி நடந்தார். ‘ராஜம் வரேல்லியா?’ என்றார் பேராசிரியர். குமார் ‘வந்தாரு… இப்பம் எங்க போனாருண்ணு தெரியல்ல’ என்றார். ‘குடிக்கப்போயிருப்பான்…அவனுக்க விதி இப்படி ஆச்சே? இருந்ததிலேயே நல்ல வித்துண்ணு நெனைச்சேனே. கர்த்தருக்க கணக்க அறியாம எனக்க கணக்க வச்சேனே…’ பேராசிரியர் மெல்ல விசும்பினார். பின் கழுத்தின் தொங்குசதைகளும் தொங்கிய கன்னங்களும் இழுபட்டு அதிர தேம்பி அழ ஆரம்பித்தார்.

‘உள்ள கேறுங்க…நேரம் ஆச்சு…’ என்றார் டெய்சிபாய். குமார் கதவைத் திறக்க பேராசிரியர் குமாரின் தோளைப்பற்றிக்கொண்டு நின்று ‘நான் சங்கு பொட்டி சொன்ன ஜெபத்தையெல்லாம் கர்த்தாவு கேக்கல்ல. ஆனாலும் எனக்க சீவனுள்ள வரை நான் ஜெபிப்பேன் குமாரு…எனக்க பயலுக்கு ஒரு கொறையும் வரப்பிடாது…அவன் கர்த்தாவுக்க பிள்ளையாக்கும். அவனுக்க வலியெல்லாம் கர்த்தாவு எடுக்கணும்..’ குமார் அவரை கிட்டத்தட்ட தூக்கிக் காரில் ஏற்றினார். கதவை சாத்தியதும் கார் உறுமி முன்னால் சென்றது.

கார் சென்றபின் குமார் என்னிடம் திரும்பி ‘இது திமிரு. இளுத்துப்போட்டு செவிளுலே நாலு அப்பு அப்பினா செரியாயிரும்…’ என்றார். நான் ஒன்றும் சொல்லவில்லை. குமார் சஜினிடம் ‘நீ எனக்க வண்டிய எடுத்திட்டு வாடே.. நான் எல்லாரையும் விளிச்சிட்டு வாறேன். எல்லாத்தயும் சொன்னாத்தான் செய்வியா? ’ என்று அதே கோபத்துடன் சொல்லி ‘நீங்க எப்டி போறிய?’ என்றார் கோபமாக. ‘நான் பஸ்சிலே போயிருவேன். நேரமாகலைல்லா?’ என்றேன்.

குமார் சென்றதும் நான் அங்கேயே நின்றேன். மெல்ல கூட்டம் கலைந்தது. பின்பக்கம் சிலர் உரக்க இலக்கிய விவாதம் செய்யும் ஓசை. அவர்களில் சிலர் போதையில் இருந்தார்கள் என்று தோன்றியது. உள்ளே போய் அருணாவை அழைத்துக்கொண்டு கிளம்பலாம் என நான் திரும்பிய போது போர்ட்டிகோவின் இடதுபக்கம்தூணின் நிழலில் இருளுக்குள் ஒண்டியவராக அண்ணாச்சியைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்க்கவில்லை. விளக்குகள் ஒளிவிட வண்டிகள் சென்றுகொண்டிருந்த சாலையையே பார்த்துக்கொண்டிருந்தார்

அந்த காட்சியின் ஈர்ப்பினால் நான் அசையாமல் நின்றுகொண்டிருந்தேன். இருள் பரவிய முற்றத்தில் சாலையில் திரும்பும் கார்களின் ஒளிகள் வருடி வருடிக்கடந்து சென்றுகொண்டிருந்தன. அண்ணாச்சியின் முகத்தில் செவ்வொளி பரவிச்சென்றபோது அவர் கழுத்தில் தசைகள் இறுகி இருக்க ,தாடியை சற்றே மேலே தூக்கி, உடல் நடுங்க நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பின்னர் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னால் சென்று பேராசிரியர் மிதித்துச் சென்ற மண்ணை குனிந்து நடுநடுங்கும் கரங்களால் மெல்லத்தொட்டார். குனிந்த தலையுடன் இருட்டுக்குள் சென்று மறைந்தார்

முந்தைய கட்டுரைமத்துறு தயிர் [சிறுகதை] – 1
அடுத்த கட்டுரைவேளாண்மை ஒரு கடிதம்