“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10

அங்கநாட்டு அரசன் கர்ணனின் உடல் கிடந்த வட்டத்தைச் சுற்றி அமர்ந்திருந்த பன்னிரண்டு சூதர்களில் இரண்டாமவரான காளையர் சொன்னார் “தோழரே கேளுங்கள், பதினைந்தாம் நாள் போர்முடிந்த அன்று மாலை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனின் அவைக்கூடலில் அவர் என்றுமிலாத பதற்றத்தையும் தளர்வையும் கொண்டிருந்தார். அவரை எப்போதும் கூர்ந்துநோக்கிக் கொண்டிருக்கும் வழக்கம்கொண்ட துச்சாதனன் அந்தப் பதற்றத்தை தானும் அடைந்தார். பீஷ்மரின் படுகளத்திற்குச் சென்றபோது இருந்த நிமிர்நடையை அவர் இழந்துவிட்டிருந்தார். அங்கிருந்து திரும்பும்போதே ‘நான் ஓய்வெடுக்கவேண்டும். மதுவுடன் ஏவலரை அனுப்பு’ என்று துச்சாதனனிடம் சொன்னார்.”

துச்சாதனன் அவைக்கூடத்திற்கு வந்தபோது அங்கே கிருபரும் சல்யரும் இருந்தனர். கிருபர் “கர்ணன் வந்துகொண்டிருக்கிறான். நாம் முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கிறது” என்றார். துச்சாதனன் “முடிவுகளை நாமே எடுப்போம். மூத்தவர் அதற்கான உளநிலையில் இல்லை” என்றான். “ஆணையை இடவேண்டியவர் அவர். அவரில்லாது அவை கூடமுடியாது” என்றார் சல்யர். கர்ணன் வந்து சல்யருக்கும் கிருபருக்கும் தலைவணங்கி முகமன் உரைத்து அமர்ந்தான். கிருபர் “அஸ்வத்தாமன் தந்தையை எரியூட்டும்பொருட்டு சென்றிருக்கிறார். அச்சடங்குகள் முடிந்து அவர் இங்கே வர பொழுது பிந்துமென எண்ணுகிறேன். அவர் இல்லாமலேயே இன்றைய முடிவுகளை நாம் எடுத்தாகவேண்டும்” என்றார்.

“ஏன் இன்றிரவே முடிவை எடுத்தாகவேண்டும்?” என்று துச்சாதனன் கேட்டான். “நாளை முதற்புலரியில் நம் படைகள் எழுகையில் போருக்கென உளம் அமைந்திருக்கவேண்டும். இன்று அவர்கள் துயில்வதற்குள் இங்கே அடுத்த படைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு படைசூழ்கை அமைக்கப்படும் செய்தி சென்று சேர்ந்திருக்கவேண்டும்” என்றார் சல்யர். “அரசர் உளம்சோர்ந்திருப்பார் என்றும் படையெழுவதுகூட நிகழாதாகலாம் என்றும் நம் வீரர்கள் எண்ணுவார்கள். இரவில் எஞ்சிய எண்ணமே காலையில் முளைக்கிறது… அச்சோர்வுடன் அவர்கள் எழுவார்களென்றால் படைசூழ்கையை அமைத்து அவர்களை களம்நிற்கச் செய்ய இயலாது.” துச்சாதனன் “அவர்களில் பெரும்பாலானவர்கள் துயில்கொண்டுவிட்டனர்” என்றான். “ஆம், ஆனால் இறுதியாகத் துயில்பவரே காலையில் எழுபவர். அவர்கள் அறியட்டும் அரசரின் உள்ளத்தை” என்றார் சல்யர்.

“நாம் நம் படையின் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும். படைசூழ்கையை இறுதிசெய்யவேண்டும்” என்று கிருபர் மீண்டும் சொன்னார். “அரசரை அழைத்துவர ஏவலர் செல்லட்டும்.” துச்சாதனன் “மூத்தவர் முன்னரே சொல்லிவிட்டார், அங்கர் படைத்தலைமை கொள்ளட்டும் என்று. நம் தரப்பின் முதன்மை வீரர் என்று அங்கரை மூத்தவர் சொன்னார். ஒருவேளை இவ்வெற்றி அவருக்குரியதென முன்னரே தெய்வங்கள் வகுத்திருக்கும் போலும். ஆகவேதான் பீஷ்மரும் துரோணரும் களம்பட்டார்கள். அங்கர் கையால் பாண்டவர்கள் கொல்லப்படவும் எனக்கு மணிமுடி சூட்டப்படவும் ஊழ் பாதை வகுத்துள்ளது என்றார். நாமனைவரும் கேட்டது அது” என்றான். “நான் வணங்கும் தெய்வங்களே என்னை கையொழிந்தாலும் சரி, உளம் சோரப்போவதில்லை. என் தெய்வமே வில்லெடுத்து எனக்கெதிராக வந்து நின்றாலும் சரி, களம் நில்லாதொழியப்போவதில்லை என்றார் மூத்தவர். அவருடைய அச்சொற்களே போதும்.”

சகுனி “அரசர் வரட்டும். அவருடைய சொல் நமக்குத் தேவை. இந்த அவையில் அவரும் இருந்தாகவேண்டும்” என்றார். “அவர்…” என்று துச்சாதனன் சொல்லத்தொடங்க “அவரில்லாமல் எடுத்த முடிவு என எந்நிலையிலும் எவரும் சொல்லலாகாது. நமக்கே அவ்வண்ணம் தோன்றுதலும் கூடாது” என்றார் சகுனி. துச்சாதனன் மேற்கொண்டு பேசாமல் தலைவணங்கி வெளியே சென்று ஏவலனிடம் அரசரை அழைத்துவரும்படி ஆணையிட்டுவிட்டு வாயிலிலேயே நின்றிருந்தான். துரியோதனன் எந்நிலையில் இருக்கிறான் என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டு நின்றிருந்தபோது ஒருகணம் குண்டாசி நினைவிலெழுந்தான். எத்தனை அவைகளிலிருந்து குண்டாசியை தூக்கிக்கொண்டு சென்று வெளியேற்றியிருக்கிறோம் என எண்ணி அவ்வெண்ணம் ஏன் வந்தது என தன்னை கடிந்துகொண்டான்.

துரியோதனன் வரும்போதே மூக்கில் வழியுமளவுக்கு மது குடித்து நிலையழிந்திருந்தான். தள்ளாடியபடி தேரிலிருந்து இறங்கி இரு கைகளையும் வீசியபடி நடந்து வந்தான். “ஏன் வழியில் நின்றிருக்கிறாய், அறிவிலி!” என காவலனை அறைய கை தூக்கினான். துச்சாதனன் “மூத்தவரே” என்றான். “அறிவிலிகள்” என்று துரியோதனன் வசைபாடினான். புளித்த ஏப்பத்துடன் “அனைவரும் அறிவிலிகள்… கீழ்மக்கள்” என்றான். பீடத்தில் சென்று அமர்ந்தபோது அவன் இமைகள் தடித்து சரிந்துகொண்டிருந்தன. வாயை இறுக்கி தாடையில் பற்கள் நெரிபடும் அசைவு தெரிய சிவந்த விழிகளால் அவையை கூர்ந்து நோக்கினான். “அவை கூடிவிட்டது” என்று கிருபர் சொன்னபோது “ஆம்… அது தெரிகிறது” என்று உறுமினான்.

அவன் உடல் மிக வெளிறியிருந்தது. மெல்லிய நடுக்கும் தெரிந்தது. வெளித்தெரியாத புண் ஏதேனும் அமைந்திருக்குமோ, நோய் கொண்டிருப்பானோ என துச்சாதனன் அஞ்சினான். சகுனி தன் காலை இழுத்து வந்து இருக்கையில் அமர்ந்ததும் கிருபர் “நாம் தொடங்கலாம். இப்போது முறைமையெல்லாம் தேவையில்லை. நாம் சிலரே இருக்கிறோம்” என்றார். “ஆம், மிகச் சிலரே எஞ்சுகிறோம்” என்று கூறி துரியோதனன் புன்னகைத்தான். பின்னர் திரும்பி வாய்மணம் கொண்டுவர கைகளால் ஆணையிட்டான். ஏவலன் அப்பால் சென்றதும் அவன் துச்சாதனனை நோக்கி புன்னகைத்தான். அறிவின்மை துலங்கிய அப்புன்னகை துச்சாதனனை திடுக்கிடச் செய்தது. அவன் விழிகளை விலக்கிக்கொண்டான்.

கிருபர் துரியோதனனை நோக்கியபின் “நாம் முடிவெடுக்கவேண்டிய பொழுது இது. நமக்கு பேரிழப்பு நிகழ்ந்துள்ளது. நம் படைத்தலைவரும் ஆசிரியருமான துரோணர் மறைந்துவிட்டார்” என்றார். துரியோதனன் வாய்மணத்தை கைகளில் வைத்தபடி “என்ன?” என்றான். “துரோணரின் மறைவு குறித்து சொல்லப்பட்டது” என்றார் கிருபர். “ஆம், ஆசிரியர் மறைந்தார்… அவர் களம்பட்டார்” என்றான் துரியோதனன். “அவர் முழு வீரத்தை வெளிப்படுத்தி விண்புகுந்தார்” என்றார் சல்யர். துரியோதனன் “என்ன நிகழ்ந்தது? என்ன நிகழ்ந்தது… விரிவாகக் கூறுங்கள் என்ன நிகழ்ந்தது?” என்றான். சற்றே எரிச்சலுடன் துச்சாதனன் “மூத்தவரே, என்ன நிகழ்ந்ததென்று பலமுறை பலர் கூறிவிட்டனர். மீள மீள அதை கேட்பதில் பொருள் இல்லை. இன்றைய போர் முடிந்துவிட்டது. இனி நிகழவிருப்பதென்னவென்று நாம் எண்ணவேண்டிய தருணம் இது” என்றான்.

துச்சாதனனை பொருளற்ற விழிகளுடன் வெறித்து நோக்கிய துரியோதனன் “ஆம், நாம் என்ன செய்யவேண்டுமென்பதை இப்போது எண்ணவேண்டும். உடனே திட்டங்களை வகுக்க வேண்டும். நாம் போருக்கெழுகிறோம். ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என்றான். எழுந்து இரு கைகளையும் விரித்து “என்ன நிகழ்ந்தாலும் சரி, தெய்வங்களே நமக்கெதிர் வந்தாலும் சரி, நாம் வெல்வோம்! நின்று பொருதுவோம்! இந்த மண் எனக்குரியது! இந்த முடி என் முன்னோர் சூடியது! இப்பாரதவர்ஷம் நான் ஆளும்பொருட்டு விரிந்திருப்பது! கடல் சூழ் இந்த ஞாலம் என் புகழ்பாடக் காத்திருக்கிறது” என்றான். எங்கிருந்து அச்சொற்களை அவன் பெற்றான் என்று துச்சாதனன் எண்ணினான். அவை சூதர்களின் மொழியில் எழுந்து வந்தவை போலிருந்தன. அத்தருணத்தை அவை இளிவரல் நாடகம்போல் ஆக்கின.

“நான் எழுயுகத்தின் மைந்தன்! என் தெய்வத்தால் வழிகாட்டி அழைத்துச்செல்லப்படவிருப்பவன். விழைவொன்றே அறமென்றாகும் கலியுகத்தின் தலைவன். என்னை வெல்ல எவராலும் இயலாது. நான் இங்கு இன்று மும்முடி சூடிய பேரரசனாகத் திகழ்கிறேன். என்றும் என் கொடிவழியினர் நாவிலிருப்பேன். சூதர்களின் எண்ணத்தில் இருப்பேன். என்றும் அழியாதவன், அக்கதிரவனைப்போல!” அவன் கைகள் நிலைத்திருக்க ஒருமுறை விக்கலெடுத்து “ஆம், கதிரவனைப்போல. அல்லது வடமலைகளைப்போல” என்றான். அச்சொற்களால் மூச்சிளைத்து மீண்டும் அமர்ந்து தன் தலையை பற்றிக்கொண்டான். கிருபர் அவனுடைய சொல்வதை பொறுமையின்மையுடன் நோக்கியபின் “நாம் பேசவேண்டியதை தொடங்குவோம்” என்றார். “நான் வெற்றியை மட்டுமே ஏற்றுக்கொள்வேன்” என தலையைப் பிடித்து குனிந்து அமர்ந்தபடி துரியோதனன் சொன்னான். எவரும் மறுமொழி உரைக்கவில்லை.

வாயிற்காவலன் வந்து வணங்கி “உத்தரபாஞ்சாலரான அஸ்வத்தாமன்” என அறிவித்தான். துரியோதனன் “அவர் எங்கே?” என்று முனகினான். சகுனி கைகாட்ட காவலன் சென்று அஸ்வத்தாமனை உள்ளே அனுப்பினான். அஸ்வத்தாமன் துரியோதனனை நோக்கி தலைவணங்கிவிட்டு பீடத்தில் அமர்ந்தான். “ஆசிரியர் விண்ணேகிவிட்டாரா?” என்றார் சல்யர். அதை அவ்வண்ணம் அவர் கேட்டிருக்கலாகாது என துச்சாதனன் உணர்ந்தபோதே கிருபர் எரிச்சலுடன் “நாம் இங்கே நாளைய போர்சூழ்கையைப் பற்றியும் படைத்தலைமை குறித்தும் பேசுவதற்காக கூடியிருக்கிறோம்” என்றார். அஸ்வத்தாமன் “அவை பற்றிய முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. இறுதிச்சொல் எடுப்பது மட்டுமே எஞ்சுகிறது” என்றான்.

துரியோதனன் உள்ளிருந்து எழுந்த எண்ணத்தால் துரட்டி குத்தப்பட்ட யானையென திடுக்கிட்டு எழுந்து துச்சாதனனிடம் “என்ன நிகழ்ந்தது? எவ்வாறு கொல்லப்பட்டார் ஆசிரியர் துரோணர்?” என்றான். துச்சாதனன் “நாம் இந்த அவை நிகழ்வுகள் என்ன என்பதை பார்ப்போம் மூத்தவரே, நமக்கு பொழுதில்லை” என்றான். “ஆம், அவை நிகழ்வுகளை நாம் பார்க்கவேண்டியுள்ளது. நமக்கு பொழுதில்லை” என்ற துரியோதனன் “அங்கரே, அவை நிகழ்வுகள் என்ன? அஸ்வத்தாமன் எங்கே?” என்றான். “இங்கிருக்கிறேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “சொல்லுங்கள்! நாம் என்ன செய்யவிருக்கிறோம்? நமது படைசூழ்கை என்ன?” என்றான் துரியோதனன். அஸ்வத்தாமன் “முதலில் நாம் படைத்தலைவரை தேர்ந்தெடுத்தாகவேண்டிய இடத்திலிருக்கிறோம், அரசே” என்றான். சல்யர் “ஆம், முதலில் அதைப்பற்றிய ஆணை எழுக!” என்றார்.

“நமது படைத்தலைமை துரோணருக்கு உரியதல்லவா? வழக்கம்போல் அவர் வழிநடத்தட்டும் நமது படைகளை” என்று துரியோதனன் சொன்னான். திரட்டிக்கொண்ட பொறுமையுடன் துச்சாதனன் “மூத்தவரே, இன்று மாலை துரோணர் களம்பட்டார். அதன் பொருட்டே இங்கு அவை கூடியிருக்கிறோம்” என்றான். “ஆம், அவர் புகழுடல் அடைந்தார். களம்நின்று எதிரிகளை முற்றழிக்கப்போகும் தருணத்தில் வஞ்சத்தால் கொல்லப்பட்டார். அறிவேன். நாம் என்ன செய்யவிருக்கிறோம்? ஏன் நாம் இங்கு வெறுமனே அமர்ந்திருக்கிறோம்? நமது திட்டங்கள் என்ன? திட்டங்களை உடனடியாக இங்கு கூறுக! திட்டங்கள் மட்டும் போதும், வேறெந்தப் பேச்சும் வேண்டாம்” என்று துரியோதனன் சொன்னான். சல்யர் ஏதோ சொல்ல முயல கைநீட்டி “பேச்சு வேண்டாம்… திட்டங்கள்… போர்த்திட்டங்கள்” என்று கூவினான்.

அஸ்வத்தாமன் “அரசே, தாங்கள் உணர்வுகளை அடக்கி எங்களை சற்று செவிகூருங்கள். என் படைசூழ்கைத் திட்டத்தை நான் இங்கு விளக்குகிறேன். அதற்குமுன் நமது படைத்தலைவர் எவரென்று முடிவு செய்ய வேண்டியுள்ளது” என்றான். துரியோதனன் சீற்றத்துடன் இரு கைகளாலும் இருக்கையின் இரு பிடிகளையும் ஓங்கி அறைந்து “நான் படைத்தலைமை கொள்கிறேன்! ஆம், நானே படை நடத்துகிறேன். நான் எவருக்கு அஞ்ச வேண்டும்? இப்படைத்தலைமையை நான் கொள்கிறேன்! அதன்பொருட்டே இக்களம் வந்துள்ளேன்” என்று கூவினான். எழுந்து இரு கைகளையும் விரித்து “தெய்வங்கள் அறிக, சொல்லுங்கள்! என் படைகளுக்கு சொல்லுங்கள்! இனி இப்படைகளை நானே நடத்துகிறேன்” என்றான்.

சல்யர் “முடிக்குரிய அரசர்கள் நேரடியாக படைத்தலைமை கொள்வதில்லை” என்றார். “ஏன்? எவர் சொன்னது? இந்த மணிமுடியும் நிலமும் எனக்குரியது. இதன்பொருட்டு பொருதிநின்றிருக்க எழுந்தவன் நான்…” என்றான். “என் நிலத்தின்பொருட்டு போரிட எனக்கு எவர் ஒப்புதலும் தேவையில்லை.” துச்சாதனன் பெருமூச்சுடன் தன் பீடத்தில் அமர்ந்தான். அமர்கையில் அதன் கைப்பிடிமேல் கைகளை ஊன்றியதை அவனே விந்தையென எண்ணிக்கொண்டான். அவன் உடல் தளர்ந்திருந்தது. தசைகளில் ஒரு பகுதி ஏற்கெனவே இறந்துவிட்டிருப்பதைப்போலத் தோன்றியது. சல்யர் “அரசே, படைத்தலைவன் பொறுமை கொண்டிருக்க வேண்டும். எளிய இலக்காக அவன் படைமுகப்பில் நின்றிருக்கவும்கூடாது. அவனை நம்பி இருக்கின்றன படைகள். அரசன் படைத்தலைவன் ஆகுகையில் படைமுகத்தில் அமைதி இழக்கிறான்” என்றார்.

“நான் அமைதியிழக்கவில்லை. நான் அறிவேன், நான் வென்றே தீர்வேன் என. ஊழ் என்னை எங்கு கொண்டு செல்கிறது என்று எனக்குத் தெரியும். ஒவ்வொரு இழப்பும் எனது வெற்றியை உறுதி செய்கின்றது. எனது வெற்றியின் பெறுமதியென்ன என்று எனக்குச் சொல்வதற்கே இவ்விழப்புகள் நிகழ்கின்றன. என் உடன்பிறந்தார் இறக்கத்தொடங்குகையிலேயே நான் உணர்ந்துவிட்டேன், நான் முற்றிழக்கப் போகிறேன். ஒன்று மிஞ்சாது இக்களத்தில் நின்று வெற்றி ஒன்றையே தெய்வக்கொடை எனச் சூடுவேன். பிறகு அவ்வெற்றியைத் தூக்கி என் தெய்வத்தின் காலடியில் வீசி எறிவேன். அவ்வெற்றியும் எனக்கொரு பொருட்டல்ல என்று அதனிடம் சொல்வேன். ஆம்!”

துரியோதனன் வெறியுடன் ஓங்கி சிரித்தான். “ஆம்! என் தெய்வம் துணுக்குற வேண்டும். அதன் கண்களில் எவன் இவன் என்னும் திகைப்பு எழ வேண்டும். நான் செய்வதற்கு எஞ்சியிருப்பது அது ஒன்றே. ஐயமே இல்லை, வெற்றி என்னுடையதே. ஆகவே எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. நான் நிலைகொண்டிருக்கிறேன், மலையுச்சியில் அமர்ந்த பெரும்பாறை போலிருக்கிறேன். எனக்கு ஐயமில்லை. அமைதி மட்டுமே. விண் தொடும் அமைதி மட்டுமே.”

“சற்று செவி கொள்ளுங்கள், அரசே!” என்று உரத்த குரலில் சல்யர் சொல்ல திடுக்கிட்ட துரியோதனன் “ஆம், ஆம், செவி கொள்கிறேன்” என்றான். இரு கைகளையும் கூப்புவதுபோல் நெஞ்சருகே வைத்துக்கொண்டு கண்களை மூடி “சொல்லுங்கள், செவிகொள்கிறேன். சொல்லுங்கள் முதியோரே, உங்களை எல்லாம் நம்பித்தான் இருக்கிறேன்” என்றான். “அஸ்வத்தாமன் பேசட்டும்” என்றபின் சல்யர் அமர்ந்தார். அஸ்வத்தாமன் “நாம் நமது படைத்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்” என்று மீண்டும் சொன்னான். “படைத்தலைமை கொள்ள இனி தகுதியானவர் அங்கர் மட்டுமே.” கிருபர் “மெய், அரசரும் அதை உரைத்துள்ளார்” என்றார்.

“நமது படைகளின் முதன்மைப் பெருவீரர் எவரென்று கேட்டால் நாம் அங்கரைத்தான் சொல்வோம். பயிற்சியால், மூப்பினால் பீஷ்மரும் துரோணரும் நமது படையை நடத்தினார்கள். இப்போர் தொடங்கவிருக்கும்போது உண்மையில் நாம் எண்ணிய படைத்தலைவர் அங்கரே. பீஷ்மருக்கும் துரோணருக்கும் மேல் என அவர் வந்து படைமுகம் நின்றிருக்க வேண்டாமென்று தயங்கினோம். ஷத்ரியர்களின் அச்சத்தையும் தயக்கத்தையும் கருத்தில் கொண்டோம். இனி நமக்கு வேறு வழியில்லை. களம்பட்ட இருவரும் அவரை வாழ்த்தினார்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே அங்கர் படைமுகப்புக்குச் செல்வதில் எப்பிழையும் இல்லை. அங்கர் படைத்தலைமை கொள்ளட்டும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

துச்சாதனன் “ஆம், இனி நமக்கு வேறு வழியில்லை. இனி அங்கரே நம்மை காக்க வேண்டும்” என்றான். துரியோதனன் விழிதிறந்து கர்ணனை பார்த்தான். பின்னர் “நான் எவரிடமும் எதையும் கோர வேண்டியதில்லை. ஆனால் அங்கர் படைத்தலைமை கொள்வாரென்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் என்னை அறிவார்” என்றான். கர்ணன் கைதூக்கி “இதில் கோருவதற்கும் ஒப்புவதற்கும் ஏதுமில்லை. இயல்பாகவே படைத்தலைமை என்னை வந்து சேர்ந்திருக்கிறது. படையை நான் நடத்துகிறேன். களம்வென்று அரசருக்கு முடியை அளிக்கிறேன். இது என் தெய்வங்கள் மேல் ஆணை!” என்றான்.

துரியோதனன் “ஆம், அதுவே நிகழவிருக்கிறது. ஊழின் நெறி அது. என் தோழருக்கு நெடுங்காலத்துக்கு முன் நான் அங்கநாட்டு மணிமுடியை அளித்தேன். அது எனக்கு நானே சூட்டிக்கொண்ட மணிமுடி. இன்று அவர் எனக்கு அஸ்தினபுரியின் மணிமுடியை அளிப்பார். அது அவர் தனக்கு சூட்டிக்கொள்வது” என்றான். “அவர் வெல்வார். வென்றாகவேண்டும். ஏனென்றால் அவர் கதிரோன் மைந்தர். கதிரோன் நிலைபிறழ்ந்தால் விண்ணகம் அடுக்கு குலையும்…” சொல்லிவந்து வேறேதோ எண்ணம் ஊடுருவ நிலைகுலைந்து இரு கைகளையும் விரித்தபடி உரக்க நகைத்து “இதை நோக்கித்தானா வந்துகொண்டிருந்தோம்? நாம் நூறு ஆயிரம் வழிகளில் முட்டிமோதி இப்போதுதான் கண்டடைந்திருக்கிறோமா? இதுதானா? இவ்வளவுதானா?” என்றான்.

“அரசே, சற்று அமருங்கள். இதை நாம் முடிவெடுப்போம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். பின்னர் கர்ணனிடம் “அரசாணை எழுந்துவிட்டது. அங்கரே, நீங்கள் படைநடத்துகிறீர்கள். நமது படைகளில் சிறு பகுதியே எஞ்சியிருக்கிறதென்று அறிவீர்கள். அவை முன்பு இருந்ததுபோல பயின்று முற்றும் ஒருங்கமைந்தவையும் அல்ல. அடுமனையாளர்களும் ஏவலர்களும்கூட படைக்கலமேந்தி உள்ளே வந்திருக்கிறார்கள். பெருவில்லவர்களும் முகப்பில் நின்று போரிடும் நீள்வேலர்களும் இன்றில்லை. நமது யானைகளும் புரவிகளும் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கின்றன. எஞ்சியிருப்பவர்களும் நம்பிக்கையிழந்தவர்கள். உடைந்த படைக்கலத்துடன் களமிறங்குகிறீர்கள்” என்றான்.

சல்யர் உரத்த குரலில் “ஆம், ஆனால் மறுபுறமிருக்கும் பாண்டவப் படையும் அவ்வாறே உள்ளது. அப்படை இன்று நமது படையை விட மூன்றில் ஒன்றே” என்றார். “துரோணர் விண்செல்லும்போது பாண்டவப் படையில் பெரும்பகுதியை எரித்தும் கொன்றும் இடிமின்னால் பொசுக்கியும் அழித்துவிட்டே சென்றிருக்கிறார். நமக்கு அவர் அளித்த பெருங்கொடை இது. ஓங்கி அறைந்தால் ஒரு நொடியில் நொறுங்கிவிடும் அமைப்பாகவே பாண்டவப் படை எனக்குத் தெரிகிறது” என்றார். அஸ்வத்தாமன் பேச நாவெடுக்க கையமர்த்தி மேலும் சொன்னார் “அவர்களும் அடுமனைச்சூதரையும் புரவிச்சூதரையும் போர்வீரர் என திரட்டி வைத்திருக்கிறார்கள். சூதர்களின் போர் நிகழவிருக்கிறது.”

துச்சாதனன் சீற்றத்துடன் கைநீட்டி ஏதோ சொல்ல எழுந்தபோது துரியோதனன் வாய்திறந்து கோட்டுவாயிட்டு “பிறகென்ன? இப்போதே நமது படைகள் கிளம்பட்டும். இரவுப்போரெனில் அதுவும் ஆகுக! நாம் வென்றாகவேண்டும். வெல்வோம் என்ற என் தெய்வத்தின் ஆணையை அருகே கேட்கிறேன்” என்றான். துச்சாதனன் “அமருங்கள், மூத்தவரே. இதை நாம் பேசி முடிப்போம். தாங்கள் சொல்லெடுக்க வேண்டியதில்லை. சற்று பொழுதேனும் தாங்கள் அமர்ந்திருங்கள்” என்றான். துரியோதனன் அமர்ந்து திரும்பி ஏவலனிடம் மது கொண்டுவரும்படி கைகாட்டினான். ஏவலன் குனிந்து கொண்டு வந்து நீட்டிய யவன மதுவை வாங்கி மும்முறை அருந்தி வாயை மேலாடையால் துடைத்தபின் கண்களை மூடிக்கொண்டான். அவன் நெற்றியில் நரம்புகள் புடைத்து அதிர்ந்தன. கழுத்து அசைந்து தசைகள் இறுகி நெகிழ்ந்துகொண்டிருந்தன.

அஸ்வத்தாமன் “ஆகவே அரசாணைப்படி இது முடிவெடுக்கப்பட்டது. அங்கர் படை நடத்துவது உறுதியாயிற்று. அங்கருக்கு இப்படை நடத்துவதற்கு தேவையென்ன என்பதை இந்த அவையிலே கூறட்டும்” என்றான். கர்ணன் “தேவையென ஏதுமில்லை. எனது தேர், எனது வில், நான் பெற்ற அம்புகள் போதும். இக்களத்தில் வெற்றியை ஈட்டி அரசருக்கு அளிக்கிறேன்” என்றான். “தாங்கள் நாளை அர்ஜுனனை களம்நின்று எதிர்க்கப் போகிறீர்கள்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இக்களவெற்றி இன்றியமையாதது. அர்ஜுனன் இறக்காமல், பீமன் களத்தில் சரியாமல் நாம் வெற்றியென்னும் சொல்லையே உரைக்க இயலாது” என்றான். கர்ணன் “ஆம், நாளை அர்ஜுனனை நான் வெல்வேன்” என்றான்.

சல்யர் “அதற்கு தேவையென்ன என்று கூறுக! ஷத்ரியர்களும் துணைவருவது நன்று. அர்ஜுனன் ஷத்ரியன் என்பதை கருத்தில் கொள்க!” என்றார். கர்ணன் சல்யரை நோக்கிவிட்டுத் திரும்பி அஸ்வத்தாமனிடம் “நான் என் விழியில் நாளை நிகழும் போரை ஓட்டிப்பார்க்கிறேன். எனது தேர் நிகரற்றது. விஜயம் காண்டீபத்தைவிட ஆற்றலும் வடிவும் கொண்டது. எனது அம்புகள் அரியவை. நான் பெற்ற பயிற்சி மேலானது. எனது ஆசிரியர்கள் புவியில் நிகரற்றவர்கள். மறுபக்கம் அவன் வில்லுடன் நின்றிருக்கிறான். என்னை வந்தடைய விழைந்தவன். எனக்கு நிகர்நிற்க இன்றும் இயலாதவன், ஆயினும் ஒன்றில் அவன் என்னை விஞ்சியிருக்கிறான். அவன் தேரை ஓட்டுபவன் யாதவ கிருஷ்ணன்” என்றான்.

“இந்தப் பதினைந்து நாள் போரில் நாம் கண்டது அவன் கைத்திறனையே. அவன் எண்ணமென ஓடின புரவிகள். அர்ஜுனன் எண்ணுவதற்கு முன்பே அதை அறிந்தான். அவன் தேரினூடாக அவன் உள்ளமென்றாகி நின்றான் அர்ஜுனன். அவர்களின் இணைப்பினால் அத்தேர் ஓர் போர்த்தெய்வம் என்று ஆகி களத்தில் திகழ்ந்தது. அவனுக்கு நிகரான தேர்ப்பாகன் என்னிடம் இல்லை என்ற குறையை மீண்டும் மீண்டும் களத்தில் உணர்ந்துகொண்டிருந்தேன். அதை அவர்களும் அறிந்தனர். என் தேர்ப்பாகன்களையே குறிவைத்தனர். அவை அறியும், தேர்ப்பாகர்களாக அமர்ந்திருந்த எனது உடன்பிறந்தார் அனைவரும் கொல்லப்பட்டனர். நாளை போரில் எனக்கு இளைய யாதவனுக்கு இணையான தேர்ப்பாகன் தேவை. அவ்வண்ணம் ஒருவர் அமைந்தால் வென்றேன் என்றே கொள்க!” என்றான் கர்ணன்.

துச்சாதனன் “இளைய யாதவருக்கு நிகரானவர் என எவரும் இங்கு இல்லை” என்றான். அஸ்வத்தாமன் அவனை நோக்கி கையமர்த்திவிட்டு “நீங்கள் எவரை எண்ணுகிறீர்கள்?” என்றான். கர்ணன் “சல்யர் எனக்கு பாகனாக வரட்டும். அவர் எல்லாவகையிலும் இளைய யாதவனுக்கு நிகரானவர்” என்றான். அதை முதலில் சல்யர் புரிந்துகொள்ளவில்லை. கிருபர் “சல்யரா?” என்றார். “ஆம், அவர் புரவிதேர்வதில் திறனாளர். தேர்நுண்மை அறிந்தவர்” என்று கர்ணன் சொன்னான். சல்யர் ஒருகணத்தில் பற்றிக்கொண்டு ஓங்கி தன் கைகளை பீடத்தில் அறைந்தபடி எழுந்தார். “என்ன சொல்கிறாய்? கிருபரே, இங்கே என்ன பேசப்படுகிறது? சூதனுக்கு சூதனாகவா? நான் சூதன் காலடியில் அமர்ந்து தேரோட்ட வேண்டுமா? மலைமகன் என்றால் அத்தனை இழிவா?” என்று கூவினார்.

“இங்குள்ளோர் உணர்க! நான் எங்கும் அடிபணியவில்லை. எவருக்கும் ஏவல்செய்யவுமில்லை. பாண்டவர்களுக்கு பெண் கொடுத்த குடியை சார்ந்தவன். இன்று விழைந்தாலும் மறுபுறம் சென்று நின்று படை நடத்தி உங்களை வெல்லும் ஆற்றல் கொண்டவன். நான் அஸ்தினபுரியின் ஷத்ரியப் படைக்கூட்டாளியாகவே இங்கே வந்தேன். எனக்கு எவருடைய பாகனாகவும் இருக்கவேண்டிய இழிவு இன்னும் அமையவில்லை” என்றார். “இளைய யாதவரைவிட குடிமேன்மை எதுவும் உங்களுக்கு இல்லை அல்லவா?” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம்! அவன் குடி என்னைவிட குறைந்ததே. யார் அவர்கள்? கன்றோட்டி வாழ்பவர்கள், வளைதடிகொண்டு காடுகளில் அலைபவர்கள். நாங்கள் அரசப்பெருங்குடி. சௌவீர மணிமுடி எங்கள் குடிக்கு வந்து நூறு தலைமுறைகளாகிறது. அன்று அஸ்தினபுரி என ஒரு நாடு இருந்ததா? சொல்க!”

“பால்ஹிகப் படைக்கூட்டை எவரும் குறைத்து மதிப்பிடவேண்டாம். நாங்கள் படைதிரட்டிக் களம்வென்று நிலம் சேர்க்காமல் இருக்கலாம். எங்கள் மலைநகர்கள் சிறியவையாக இருக்கலாம். எங்கள் கருவூலங்கள் இன்னும் நிறையாமலிருக்கலாம். ஆனால் விரிநிலத்திலிருக்கும் எந்த ஷத்ரியரைவிடவும் ஆற்றலும் விசையும் கொண்டவை எங்கள் விற்கள். இங்கிருக்கும் எந்த அரசகுடியை விடவும் தொன்மையானது எங்கள் குடி” என்று சல்யர் கூவினார். “நாம் இங்கு குடிப்பெருமை பேச வரவில்லை, மத்ரரே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நான் வந்தது அதற்காக மட்டுமே. நான் அன்றும் இன்றும் பேசிக்கொண்டிருப்பது அதுவே. அவை நடுவே என் குலப்பெருமை நிலைகொள்வது மட்டுமே எனக்கு இலக்கு” என்று சல்யர் கூவினார்.

“அவை நிகழட்டும். வெற்று உணர்ச்சிகள் வேண்டாம்” என்றார் கிருபர். “நீங்களும் இவர்களுடன்தானா? நன்று கிருபரே, நன்று. துரோணர் மறைந்ததும் நான் தனியனானேன்” என்றார் சல்யர். “இந்தச் சூதன்மகன் செய்யும் சூழ்ச்சி என்ன என்றறியாதவன் அல்ல நான். இவன் உளம்செல்லும் தொலைவை நானும் சென்றடைந்தேன். சொல்க, நான் எதன் பொருட்டு மலையிறங்கி வந்தேன்? எதன் பொருட்டு பாண்டவரை உதறி இங்கு சேர்ந்தேன்? எனது குடிப்பெருமை இங்கு களத்தில் நிறுவப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே. யாதவருடன் இணைந்தால் நாளை அவர்கள் வென்றாலும் எங்கள் குடி யாதவக்குடியுடன் இணைத்து பேசப்படும் என்பதற்காகவே ஷத்ரியராகிய அஸ்தினபுரியுடன் வந்து இணைந்தேன். ஷத்ரியப் பேரவை முன் நாங்கள் என்றென்றும் நிமிர்ந்து நின்றிருக்க வேண்டும் என்பதற்காகவே என் குருதியையும் தாண்டினேன்.”

“இன்று என்னை இவன் தனக்கு தேர்ப்பாகனாக அமர்ந்திருக்கக் கோருகிறான்… சூதனுக்குத் தேரோட்டியபின் இருநிலம் வென்று அமைந்தாலும் என் குடிகளுக்கு இழிவே எஞ்சும் என அறிந்தே அதை கோருகிறான்… நான் என்ன செய்யவேண்டும்? சொல்க, நான் என்ன செய்யவேண்டும்? என் நாவால் இவனை சூதன் என இகழ்ந்தேன். அதே நாவால் இவனுக்கு வணக்கம் சொல்லவும் இவன் ஆணைப்படி வார்பற்றவும் வேண்டும் அல்லவா? இயலாது. அவ்விழிவைச் சூட எந்நிலையிலும் என்னால் இயலாது. இதோ எஞ்சிய பால்ஹிகர்களுடன் நான் கிளம்புகிறேன். இனி இப்போரில் நாங்கள் கலந்துகொள்ள இயலாது” என்ற சல்யர் பீடத்தில் கிடந்த தன் மேலாடையை எடுத்து தோளிலிட்டபின் வெளியேறினார்.

முந்தைய கட்டுரைஒரு மொழியாக்கம்
அடுத்த கட்டுரைபழந்தமிழர்களின் அறிவியல்!