திராவிட இயக்க இலக்கியமும் நவீன இலக்கியமும்- கடிதங்கள்

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்

திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்

வணக்கம் ஜெ

 

தங்களுடைய இணையதளம் இன்று ஒரு அறிவுத்தளமாக இயங்கி வருகிறது. அதில் இலக்கியம், மதம், பண்பாடு, சமூகம், கலை போன்ற பல விஷயங்களில் பல விவாதங்கள் நிகழ்கின்றன. சில வகை கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வந்துள்ளன. குறிப்பாக மதம், பண்பாடு விஷயங்களில் ‘கலாச்சார இந்து’, ‘இந்திய ஞானம்’. காந்தி பற்றிய சமீபத்தில் வெளிவந்த கட்டுரை தொகுப்பு நூல். மேலும் உங்களது பயண இலக்கியம் போன்றவை . அன்றாடம் நீங்கள் பதிவேற்றும் கட்டுரைகள் அவ்வப்போது தொகுக்கப்பட்டு நூலாக வருவது மிக பயனுள்ளதாக இருக்கிறது.

 

அதேபோன்று திராவிட இயக்கம், ஈ.வே.ரா. குறித்த கட்டுரைகளையும் தொகுத்து நூலாக வெளியிடவேண்டும் என்பது என் வேண்டுகோள். இன்றைய தமிழ்ச் சூழலில் திராவிட இயக்கம், அதன் அரசியல், அதன் இலக்கியம்   போன்றவைகளை பற்றியும், ஈ.வே.ரா குறித்தும்  தெளிவான பார்வைமுறை அவசியம். அதுகுறித்த உங்களது முழு கட்டுரைகள், வாசகர்களின் கேள்விகளுக்கு  நீங்கள் அளித்த பதில்கள் போன்றவற்றை தொகுத்து ஒரு நூலாக வந்தால் அது மிக பயனுள்ளதாக இருக்கும்.

 

நன்றி

 

விவேக்.

அன்புள்ள ஜெ

 

ஒரு சூழலில் ஒரு மையப்போக்கு அரசியல் – கலாச்சார இயக்கத்திற்கு எதிர்ப்பு பரவலாக இருக்காது, விமர்சனமும் பரவலாக இருக்காது. ஆனால் மிகக்கூரிய விமர்சனம் சிறிய வட்டத்திலிருந்து எழுதுகொண்டேதான் இருக்கும். அதிலும் அது மாற்று அரசியலாக இல்லாமல் மாற்றுப் பண்பாட்டுச் செயல்பாடாக இருக்கும்போது அது பண்பாட்டுப் பங்களிப்பைப் பற்றி மட்டுமே கவனிக்கும்.

 

அதிலும் நவீன இலக்கியம் என்பது மனிதனை அகவயமாகப் பார்ப்பது. ஆகவே அந்தப் பண்பாட்டுப் பங்களிப்பு எப்படி தனிமனிதனிலும் அவன் வாழும் சமூகச்சூழலிலும் வெளிப்படும் என்று மட்டுமே அதுஎழுதும். அதை நவீன இலக்கியம் மிகமிக வலுவாகவே எழுதியிருக்கிறது. [சுந்தர ராமசாமி சொன்னார். பனியிலும் பனைத்துளி தெரியும் என்பார்கள். தெரியும், ரொம்பச் சின்னப்பனையாகத் தெரியும்]

 

இதை ஓரளவு நவீன இலக்கியம் வாசிக்கும் வழக்கம் உள்ள எவரும் அறிவார்கள். அதை புதியவாசகர்களும் வாசிக்க ஆரம்பித்தால் உணரமுடியும். இதை விரித்துவிரித்துச் சொல்லவேண்டிய தேவை இல்லை. ஆனால் எங்கே சிக்கல் வருகிறது என்றால் இலக்கிய அறிமுகம் இல்லாத பத்திரிக்கையாளர்கள் தங்களை ஆல் இன் ஆல் என கற்பனைசெய்துகொண்டு நவீன இலக்கியத்தை விமர்சிக்கவும் நவீன எழுத்தாளர்களுக்கு இலக்கியவரலாற்றைக் கற்பிக்கவும் முற்படும்போதுதான்.

 

இவர்கள் ஊடகவல்லமையால் வாயைப்பிடுங்கியும் வெட்டி ஒட்டியும் உருவாக்கும் வரலாற்றுத்திரிபு அவர்களின் பணபலத்தாலும் பிரச்சாரத்தாலும் நிலைகொள்ளும். வாசகர்களிடையே நிலைகொள்ளாது. அவர்களின் வழக்கமான சூழலில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இலக்கியவாசிப்பு இல்லாமல் செய்திகளை மட்டும் தெரிந்துவைத்துக்கொண்டு அரசியல் சார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களிடம் அதை நிலைநாட்டுவார்கள். அதை ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் சொல்வதுபோல நூறுபேராவது இந்த மாஸ் ஹிஸ்டீரியாவிலிருந்து வெளியே நின்றிருக்கும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் சரி

 

ஆர். எம்.அரவிந்தன்

அன்புள்ள ஜெ

 

திராவிட இயக்கம் பற்றிய சர்ச்சைகளை இப்போதுதான் வாசித்தேன். கொஞ்சம் வாசிப்புள்ளவர்களுக்குக்கூட கண்முன் மலை என தெரியும் ஓர் உண்மையைப் புரியவைக்க பக்கம் பக்கமாக எழுதித்தள்ளியிருக்கிறீர்கள். அதில் திரிபுகள் [மூவாலூர் அம்மையாரைப்பற்றி எழுதவில்லை என்பதுபோல] புரிந்துகொள்ளாத கூச்சல்கள். உணர்ச்சிமிக்க வசைகள். பெரிய சுமைதான் இந்தவேலை

 

எல்லாருக்கும் தெரியும் ஒன்றுண்டு. ஈவேரா சி.என் அண்னாத்துரை கருணாநிதி போன்றவர்கள் இங்கே எதிர்ப்பு அல்லது கலகச் சக்திகள் அல்ல. இன்றைக்கு நான்கு பத்திரிகையாளர்கள் நினைத்தால் அப்படி காட்டிவிட முடியாது. அவர்கள்தான் இங்கே எஸ்டாபிளிஷ்மெண்ட் ஆக இருந்தார்கள். அவர்கள்தான் அரசாங்கம் கல்விநிலையம் ஊடகம் எல்லாவற்றையும் கையில் வைத்திருந்தார்கள். நவீன இலக்கியம் எப்போதும் எஸ்டாபிளிஷ்மெண்டுக்கு எதிராகவே செயல்படும்

 

அதோடு அவர்கள் உருவாக்கிய இலக்கியமும் சரி அவர்கள் முன்வைத்த கூச்சலிடும் அரசியலும் சரி நவீன இலக்கியம் முன்வைத்த வேல்யூஸுக்கே எதிரானவை. அவர்களுக்கு எதிராகத்தான் நவீன இலக்கியமே உருவாகியிருக்கிறது. நவீன இலக்கியம் மிகைக்கு எதிரானது. மொழிச்சிக்கனத்தை நாடுவது. நுட்பங்களை முன்வைப்பது. தனிநபரின் அந்தரங்கம் சார்ந்தது. ஆகவே தனிநபர் வழிபாட்டுக்கு எதிரானது. திராவிட இயக்கம் நேர் எதிரானது. அதன் வழி மிகை. அது மொழியை ஊதாரித்தனமாகப் பயன்படுத்துவது. அந்தரங்கத்தன்மை இல்லாத கூச்சல் அது. தனிநபர் வழிபாடுதான் அதன் அடிப்படை

 

நவீன இலக்கியம் ஏன் அண்ணாவைக் கொண்டாடவில்லை என ஒருவர் கேட்கிறார் என்றால் அதற்கான பதில் அப்படி கொண்டாடுவதென்றால் நவீன இலக்கியமே தேவையில்லையே முட்டாள், அதை திராவிட இயக்கமும் வணிக எழுத்தும் ராப்பகலாகச் செய்துகொண்டிருந்தார்களே என்பதுதான்

 

எஸ்.டி. செந்தில் முருகன்

முந்தைய கட்டுரைசாரதாம்பரம்!
அடுத்த கட்டுரைவாசகர் கடிதமும் திறனாய்வும்