பாதி – தடைசெய்யப்பட்ட சிங்களச் சிறுகதை

அன்பின் நண்பருக்கு,

வணக்கம்.

இத்துடன் இலங்கையில் சிங்கள எழுத்தாளரான ஷக்திக சத்குமார சிறையிலடைக்கப்படக் காரணமான சிறுகதையை தமிழில் மொழிபெயர்த்து இணைத்திருக்கிறேன்.

எம்.ரிஷான் ஷெரீப்

பாதி

ஷக்திக சத்குமார

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்

பிக்கு ஹல்வெல்ல கஸ்ஸப ஹிமி, கஸான் பலிஹவடனவாக மாறியது சமூக வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல. தவிரவும் அவருக்கு துறவு வாழ்க்கையிலும் பற்றேதுமிருக்கவில்லை. துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பிறகு தொடர்ந்தும் அப் பல்கலைக்கழகத்தின் பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருக்க அவர் விரும்பவில்லை. பல்கலைக்கழகத்துக்குள் பிக்குவாகப் பிரவேசித்து துறவு ஜீவிதத்தைக் கை விட்ட பலரும் அப்போதும் கூட பிக்குகளுக்கான விடுதியில் தங்கியிருந்தார்கள்.

பிக்கு தம்மஸ்ஸர ஹிமி, கஸான் அருகில் வரும்போது அவர் பழைய குறிப்பொன்றைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“தப்பிச்சுட்டான்… தப்பிச்சுட்டான்… கஸான் என்றால் தப்பிச்சுட்டான். நீ விடுதியில் தொடர்ந்தும் இருப்பாய்தானே…? இனி சமரிக்காக கடைக்குப் போக வர இரவாகும்வரைக்கும் காத்திருக்கத் தேவையில்லை. இல்லையா?” என்றவாறு பிக்கு தம்மஸ்ஸர ஹிமி கஸானின் அறைக்குள் நுழைந்து அருகிலிருந்த கதிரையொன்றில் அமர்ந்து கொண்டார். கட்டிலில் சாய்ந்திருந்து ‘புதுன்கே ரஸ்தியாதுவ (புத்தரின் அலைச்சல்)’ நாவலை வாசித்துக் கொண்டிருந்த பிக்கு மேதானந்த ஹிமி, பிக்கு தம்மஸ்ஸர ஹிமியின் குரலைக் கேட்டு நூலை வலது கையில் ஏந்தியவாறு எழுந்து நின்றார்.

“எங்க பௌத்த சேனா படையால் இந்தப் புத்தகத்துக்கு எதிரா ஒரு வழக்குத் தொடரவிருக்கிறோம்.. இது முற்றுமுழுதா அடிப்படைவாதிகளோட வேலை’ புதுன்கே ரஸ்தியாதுவ நூலைக் காட்டியவாறு பிக்கு மேதானந்த ஹிமி கூறினார்.

“கஸான் வேறொரு அறைக்குப் போறதாச் சொல்றான்… அவனுக்கு காவியுடை மட்டுமில்ல எங்களையும் பிடிக்கலையோ என்னமோ?” என்றவாறு அப்போதுதான் அறைக்குள் வந்த பிக்கு சுமேத ஹிமியின் குரல் கஸான் செய்து கொண்டிருந்த வேலையை சற்று இடைநிறுத்தியது.

“அப்படில்லாம் ஒண்ணுமில்ல… நான் இந்த விடுதியை விட்டுப் போனாலும் கூட அடிக்கடி உங்களையெல்லாம் பார்த்துப் போக வருவேன்” என்று கூறிய கஸானின் குரலில் கவலை நிரம்பியிருந்தது.

“சரி சரி… இதையெல்லாம் நீ பெருசா எடுத்துக்காதே… எங்க போனாலும் பரவாயில்லை பட்டப்படிப்பை கை விட்டுடாம ஒழுங்காப் படிச்சுக்கோ…”

***

திடீரென நான் துறவு வாழ்க்கையைக் கைவிட்டவனென்று வெளிப்படுத்த முடியாததால்தான் நான் இக் கதையை இவ்வாறாக ஆரம்பித்திருந்தேன். எனினும் நான் துறவு வாழ்க்கையைக் கை விட்டவன் என்பதை எல்லோரும் அறிந்திருந்தார்கள். நான் எதற்காக துறவு வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டேன் என்பதை நான் அறியேன். ஏன் அதைக் கை விட்டேன் என்பதுவும் எனக்குத் தெரியாது. தலைமைப் பிக்கு காலமானதற்குப் பிறகு, காவியுடையை தொடர்ந்தும் நான் அணிந்திருக்க வேண்டியதற்கான எந்தக் காரணமும் எனக்கிருக்கவில்லை.

லொயிட் அண்ணனின் அறைக்குச் செல்ல நான் தீர்மானித்தது, ஆழமாக யோசித்துச் செய்ததல்ல. எனினும் நான் இருந்த சூழலை விட்டும் தப்பித்துச் செல்லும் தேவை எனக்கிருந்தது. லொயிட் அண்ணனை முதன்முதலாக நான் சந்தித்தது எமது எதிரியாகத்தான். இப்போது அவர் எனது சினேகிதன் என்றபோதும், பௌத்த சேனா படைக்கு இப்போதும் கூட அவர் எதிரிதான்.

லொயிட் அண்ணன் ஒரு அரச சார்பற்ற வெளிநாட்டு நிறுவனமான N.G.O வில் வேலை பார்த்து வந்தார். ஒரு தடவை பௌத்த சேனா படையோடு நாங்கள் லொயிட் அண்ணனின் அலுவலகத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோம்.

“நீங்க எல்லோரும் வெளிநாட்டுக் காசுல வாழ்ந்த விடுதலைப் புலித் தலைவர்களோட குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கிறதாச் சொல்றாங்க… நிஜமா?”

பிக்கு ஞானசாரவின் குரலுக்கு அலுவலகத்திலிருந்த அனைவரும் ஸ்தம்பித்துப் போயிருந்தார்கள். கேமராக்கள் சூழ்ந்திருந்த ஊடகவியலாளர்கள் எம்முடனிருந்தார்கள்.

“மன்னிக்கணும் சாமி… நாங்க யுத்தத்துல வீடுகளை இழந்த ஏழைக் குடும்பங்களுக்குத்தான் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறோம்” என்றவாறு அந்த அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன் முன்னால் வந்தார்.

“நீ யாரு?”

“நான் லொயிட். இங்க வேலை செய்றேன்.”

***

“கஸான் பலமான யோசனையில் இருக்கீங்க போல… நான் வரத் தாமதிச்சுட்டேனா?” என்றவாறு லொயிட் அண்ணன் என் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். நான் பையை எடுத்துக் கொண்டு சைக்கிளின் பின்னால் ஏறிக் கொண்டேன்.

“கஸானுக்கு காவியுடுப்பை விடவும் ஜீன்ஸ் அழகாயிருக்கு” லொயிட் அண்ணன் சைக்கிளைத் திருப்பும் போது கூறினார். நான் மெலிதாகப் புன்னகைத்தேன். அக் கணத்தில் நான் ஈருலகத்திலிருந்தேன்.

“கஸான் ராத்திரிக்கு என்ன சாப்பிடுவீங்க? நான் வழமையா இடியாப்பக் கொத்து ஒரு முழுப் பார்சல் சாப்பிடுவேன்” என க்ரீன் கார்டன் ஹோட்டலுக்கருகில் சைக்கிளை நிறுத்தும் போது லொயிட் அண்ணன் கேட்டார்.

“எனக்கு அரைப் பார்சல் போதும்” என்று மெதுவாகக் கூறினேன்.

***

காவியுடையில் வாழ்ந்த காலத்தில் இந்தச் சமூகம் மிகவும் சீரழிந்து போய் விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அது அவ்வாறில்லை என இப்போது எனக்குத் தோன்றுகிறது. இச் சமூகத்தில் அனைவரும் காவியைக் கை விட்டவன் என்று என்னைப் புறந் தள்ளுவார்கள் என்ற பயம் எனக்கிருந்தது. எனினும் அவ்வாறெல்லாம் எதுவும் ஆகவில்லை. சமூகத்தில் அனைவரும் என்னை ஏற்றுக் கொண்டார்கள். பல்கலைக்கழகத்தைப் போலவே அவ் விடுதியும் ஏனைய நாட்களை விடவும் எனது விருப்பத்துக்குரியவையாக எப்போதும் இருந்தன.

“கஸான் நான் சிறுகதையொண்ணு எழுதத் தொடங்கினேன். நல்லாருக்கான்னு பாரு…” என்ற லொயிட் அண்ணன் கையால் எழுதப்பட்ட காகிதங்கள் சிலவற்றை எனது மேசை மீது வைத்தார். தலைப்பற்ற அக் கதையை நான் மெதுவாக வாசிக்கத் தொடங்கினேன்.

            யஷோதரா விம்மிக் கொண்டிருந்தாள். சன்னவின் செயலைத் தடுக்க முடியுமாக இருந்த போதிலும், தான் பொறுமையாக இருந்தது ஆழ் மனதில் அதற்கொரு இச்சையுமிருந்ததால்தான் என யஷோதராவுக்குத் தோன்றியது. சித்தார்த்தன் குடும்ப வாழ்க்கையைத் துறந்து சென்றது ராகுலன் அவரது குழந்தையல்ல என்பதை அறிந்ததாலா? சித்தார்த்தனால் நான் திருப்தியடையவில்லை என்பதை அவர் அறிந்திருந்தாரா? பெண்ணொருத்தியைத் திருப்தியடையச் செய்யும் திறமை அவருக்கு இருக்கவில்லை என்பது நிஜம்தானே? யஷோதராவின் உள்ளம் தொடுத்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு பதில்களைத் தேடுவதற்குப் பதிலாக அவள் நீண்ட பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயற்சித்தாள்.

“ஐயோ! இந்தக் காகிதங்களை எரிச்சிடுங்கண்ணா…” ஒரு பந்தியை வாசித்த நான் லொயிட் அண்ணனுக்கு விடயத்தைத் தெளிவுபடுத்த எழுந்து நின்றேன்.

“ஏன் ஒரு படைப்பாக இதை இச் சமூகம் ஏற்றுக் கொள்ளாதா? இல்லேன்னா நரகத்துக்குப் போயிடுவேனோ? இது மஹாயான பௌத்தத்துல இருக்குற ஒரு எண்ணக் கரு ” என்றவாறு சிகரெட்டொன்றைப் பற்ற வைத்துக் கொண்ட லொயிட் அண்ணனின் உதடுகளில் கேலிப் புன்னகையிருந்தது. புகை வளையங்கள் சுதந்திரமாக அந்த அறைக்குள் மிதக்கத் தொடங்கின.

“ஆனா இது ஒரு தேர வாத பௌத்த நாடு” எனத் தானாகக் கூறி விட்டேன்.

“ஆமா… பெயரளவில் மாத்திரம்.”

***

இருவரால் இழுத்துச் செல்லப்பட்ட நான் இருண்ட அறையொன்றுக்குள் தள்ளப்பட்டேன். வீசப்பட்டுப் போய் தரையில் விழுந்தேன். அத்தோடு கதவு தாழிடப்பட்டது. அரையிருளில் நான் அறை முழுவதும் நோட்டமிட்டேன். அறையின் ஒரு மூலையில் தலைமைப் பிக்கு படுத்திருப்பதை நான் அக் கணம் கண்டேன். அவர் மிகுந்த அசௌகரியமாக இருப்பது தென்பட்டது. நான் மெதுவாக அவரருகே சென்றேன். படுத்திருந்த போதும், அவர் உறங்கியிருக்கவில்லை. கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. என்னைக் கண்டதும் தலைமைப் பிக்கு சடுதியாக எழுந்து நின்றார். அவரது கால்களிரண்டின் இடையிலிருந்து இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்துப் பாய்வது கண்டு நான் மிகுந்த அச்சமுற்றேன்.

‘ஐயோ என்ன சாமி இது?’ என நான் பலமாக ஓலமிட்டேன். எனினும் ஓசை வெளிவரவில்லை. நின்றிருந்த தலைமைப் பிக்கு எனது புறமாகத் திரும்பி காவியுடையை உயர்த்திக் காட்டினார். அவரது ஆணுறுப்பு அறுத்துப் போடப்பட்டிருந்தது. அதிலிருந்து இரத்தம் பாய்ந்து கொண்டிருந்தது.

“யார் இந்தக் குற்றத்தைச் செய்தது..?”

“ஹேய் ஹேய் கஸான் ஏன் இந்த நடுச் சாமத்துல கத்துறே?” என்ற லொயிட் அண்ணனின் குரலுக்கு நான் விழித்துக் கொண்டேன். அறையில் மின்குமிழ் எரிந்து கொண்டிருந்தது.

“நான் சின்னதா ஒரு கனவு கண்டேன்” என்று கூறியவாறு நுளம்பு வலையைத் தூரமாக்கி விட்டு கட்டிலில் அமர்ந்து கொண்டேன்.

“உனக்கு ரொம்ப வியர்த்திருக்கு” என்ற லொயிட் அண்ணன் மேசை மீதிருந்த தண்ணீர் போத்தலை எடுத்து என்னிடம் எறிந்தார். போத்தலை இரு கைகளாலும் பிடித்துக் கொண்ட நான் ஒரே மூச்சில் குடித்து முடித்தேன். அறையின் கதவைத் திறந்த லொயிட் அண்ணன் என்னைச் சிரித்துக் கொண்டே பார்த்துக் கேட்டார்.

“நீ இப்பவும் நரகத்துலதான் இருக்கியா?”

பதில் எதையும் கூறாமல் நான் இருளிலேயே நீர்க் குழாயருகே சென்றேன். முகம், வாயைக் கழுவிக் கொண்ட பிறகு சற்று ஆசுவாசமாக உணர்ந்தேன். வந்து திரும்பவும் நுளம்பு வலைக்குள் புகுந்து கொண்டேன். மெல்லிய குரலில் பாடலொன்றை முணுமுணுத்தவாறு லொயிட் அண்ணன் அறையின் கதவைத் தாழிட்டு, மின்குமிழை அணைத்து விட்டு வந்து அருகே படுத்துக் கொண்டார். சற்று நேரத்துக்குப் பிறகு அவரது முனகல் ஒலி எனது காதருகே கேட்கத் தொடங்கியது. தலைமைப் பிக்குவின் உடலில் எழுந்த வியர்வை கலந்த வாசனையை லொயிட் அண்ணனின் உடலிலிருந்தும் நான் உணரத் தொடங்கினேன். மெதுவாக கண்களை மூடிக் கொண்டேன்.

—————–

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

            இலங்கை பொல்கஹவல பிரதேச சபையில் அரச அலுவலராக பணி புரியும் ஷக்திக சத்குமார நவீன தலைமுறையைச் சேர்ந்த சிங்கள இலக்கியவாதிகளில் ஒருவர். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சாகித்திய இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.

            அண்மையில் அவர் தனது முகநூலில் பகிர்ந்து கொண்ட சிறுகதையே ‘பாதி’ எனும் இச் சிறுகதை. இச் சிறுகதை வெளியானதன் பிறகு பௌத்த சங்கங்களால் பல தொந்தரவுகளுக்கு அவர் ஆளாகி வருவதோடு, அவரது எழுத்துக்கள் பௌத்த மதத்துக்கு நிந்தனையாக அமைவதாக ‘பௌத்த தர்மத்தைப் பாதுகாக்கும் இளைஞர் முன்னணி’ எனும் அமைப்பைச் சேர்ந்தவர்களால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் கைது செய்யப்பட்ட அவர் பிணையில் வெளியே வர முடியாதவாறு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

            இவர் சிறையிலடைக்கப்படக் காரணமான ‘பாதி’ எனும் இச் சிறுகதை சிறிய கதை என்றபோதிலும், இதன் ஒவ்வொரு வரிகளிலும் ஆழமான அர்த்தங்கள் உள்ளன. பௌத்த விகாரைகளில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், இலவசமாகவும் இலகுவாகவும் பட்டப்படிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டி காவியுடையை அணிந்துகொள்ளும் பௌத்த பிக்குகள், விலைமாதுக்களுடனான அவர்களது இராக் காலத் தொடர்புகள், மத நிந்தனை எனும் பெயரில் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் பௌத்த பிக்குகளால் ஆக்கிரமிக்கப்படுவது, வடக்கில் அநாதரவான மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் போன்ற பல விடயங்கள் வாசகர்களின் ஆழமான சிந்தனைக்கு வேண்டி இச் சிறுகதையின் அர்த்தங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன.

            இலங்கையில் இவ்வாறானதொரு சிறுகதைக்கு தடை விதிப்பதையும், எழுத்தாளரை பிணையில் வெளிவர விடாத சட்டங்களையிட்டு சிறையிலடைப்பதையும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பௌத்த பிக்குகளின் பாலியல் உறவுகளைக் குறித்து எழுதவே கூடாதென்றால், பௌத்த மத ஜாதகக் கதை நூலை முதலில் எரிக்க வேண்டும். தற்கால இலக்கியப் புனைவுகளை இலக்கியமாக மாத்திரம் பார்க்காது அவற்றின் மீது தீவிரவாதப் போக்கைப் பிரயோகிப்பதன் மூலம் பிற்போக்குத்தனமான அரசியலைத் திணித்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.

            இலங்கையில் அனைத்துப் பிரதேசங்களிலும் பௌத்த பிக்குகள் பரவலாகக் காணப்படுகின்றார்கள் என்பதால், அவர்களை வைத்து எழுதப்படும் புனைவுகளும் அநேகமானவை. அவற்றை எழுதுவதற்கான சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் பறித்துக் கொள்வது எந்தளவு நியாயமானது? இலங்கை இலக்கியவாதிகளின் படைப்புச் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் நீதிமன்ற முறைப்பாடுகளே தீர்மானிக்குமென்றால் அது எந்தளவு மோசமான நிலைப்பாடு?

            இலக்கியத்தில் முன்வைக்கப்படும் தர்க்க நியாயங்களை, கருத்து வேறுபாடுகளை காவல்துறைக்கோ, நீதிமன்றத்துக்கோ கொண்டு செல்லாமல், ஆரோக்கியமான இலக்கியக் கூட்டங்களில் அப் பிரதிகள் கலந்துரையாடப்பட்டால், விவாதிக்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும், இல்லையா? இத் தலைமுறை எழுத்தாளர்களாக நாம் அதைத்தான் செய்ய வேண்டும். அதுதான் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும்.

            இச் சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலமாக, இலங்கையில் படைப்புச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் நிலைநாட்ட எழுத்தாளருடன் கை கோர்க்கிறேன் – எம்.ரிஷான் ஷெரீப் (மொழிபெயர்ப்பாளர்)

முந்தைய கட்டுரைடமருகம் இசைப்பள்ளி துவக்கவிழா
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-6