மரபைச் சிறுமைசெய்தல்

தேர்தல் அடிபிடிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எனக்கு அரசியல் இருக்கலாம், அதை என் எழுத்துக்களை வாசிப்பவர்களிடம் என் மீதான மதிப்பை பயன்படுத்திக் கொண்டுசெல்லவேண்டியதில்லை என்பதே என் எண்ணம். எல்லா தரப்பிலும் எனக்கு வாசகர்கள் இருக்கிறார்கள். இலக்கியத்தை நேரடி அரசியலில் இருந்து அகற்றி நிறுத்தவேண்டும் என எண்ணுபவன் நான், அது என் தெளிவு

ஆகவே எப்போதுமே அரசியல் பற்றி ஒன்றும் சொல்வதில்லை. குறிப்பாகத் தேர்தல்நேரத்தில் எல்லாக் காலத்திலும் முழு மௌனம்தான்.

ஆனால் இந்த ஓவியம் ஆழமான ஓர் ஒவ்வாமையை உருவாக்கியது. BLOOM AGAIN AND GLOW THIS WORLD என்னும் தலைப்பில் வரையப்பட்டு இது சுற்றிக்கொண்டிருக்கிறது. இதில் இந்து மதத்தின் மதக்குறியீடுகள் அப்பட்டமாகவே அரசியலுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மதக்குறியீடுகள் அரசியலுக்கும் வணிகத்திற்கும் பயன்படுத்தப்படுகையில் அவற்றின் குறியீட்டு மதிப்பு அழிகிறது. அவை உருவாக்கும் நுண்ணுணர்வுகள் மழுங்கடிக்கப்படுகின்றன. நீண்டகால அளவில் ஒரு மரபின் ஆன்மிகம், கலை அனைத்துக்கும் அழிவை உருவாக்குவது இது.

இந்த ஓவியத்தில் தாமரைமேல் யோகத்தில் அமர்ந்திருக்கிறார் மோடி. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சாயல் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மெய்ஞானியைப்போல் அவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். தாமரையில் அமர்வதென்பது தெய்வங்களுக்குரிய யோகநிலைகளில் ஒன்று. மெய்ஞானிகளை அவ்வாறு சித்தரிப்பதேகூட ஒருவகையில் பிழை. ஒரு சாதாரண அரசியல்வாதியை, அவர் அதிகாரத்திலிருக்கிறார், அதிகாரப்போட்டி அவரை நம்பியிருக்கிறது என்பதற்காக இவ்வாறு  சித்தரிப்பவர்களுக்கு இந்துமரபு மீதுள்ள மதிப்புதான் என்ன? இவர்களுக்கு இவர்களின் அடையாளமான தாமரை மேலேயே இந்த அளவுக்குத்தான் மதிப்புபோலும்.

இன்றைய கிறுக்குபிடித்த பிரச்சாரச் சூழலில் இதைச் சுட்டிக்காட்டுவது பெரும்பாலும் பொருளற்றது. இந்துக்கள் எனச் சொல்லிக்கொள்பவர்களிலேயே பெரும்பாலானவர்கள் தங்கள் மரபு, ஆன்மிகம் அனைத்துக்கும் மேலாக கட்சிகட்டும் அரசியலையும் சாதியையும் முன்வைத்து வெறிகொண்டு நின்றிருக்கும் காலம் இது. ஆனால் இச்செயல் சமீபத்தில் அரசியல்வாதிகளால் இந்து தொன்ம மரபுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரிய இழுக்குகளில் ஒன்று. இதை அனைவரும் தொடரத் தொடங்க மாட்டார்கள்,  மற்றவர்களுக்குக் கொஞ்சம் தன்மதிப்பும் கூச்சமும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்

மதத்தை அறிந்த மரபை அறிந்த பெரியவர்கள் எவருமே இன்றில்லை என்ற சூழலையே இத்தகைய செயல்கள் இயல்பாக ஏற்கப்படுவது காட்டுகிறது. இன்று இந்துமரபு சந்திக்கும் மிகப்பெரிய அபாயம் இதுவே.

முந்தைய கட்டுரைதிராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருமூலம்