பழந்தமிழர்களின் அறிவியல்!

அன்புள்ள ஜெ

பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி தினத்தந்தியில்  சிறப்புக் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். தன்னுடைய முனைவர் பட்டத் திறனைப் பயன்படுத்தி  தமிழ் ஆசிரியர் ஒருவர் பழந்தமிழர்களின்  அறிவியல் சிந்தனையை எளிய மனிதரும் அறியும் வண்ணம் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ளார். பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி இதுவரை அறிவியல் உலகம் கண்டிராத வகையில் குறிப்பிடுவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.நவீன அறிவியல்துறைகளுக்கும் பழந்தமிழரின் சிந்தனைகளுக்கும் இடையே இருக்கும் இணைப்பை ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கின்ற விதங்கள் அவரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது.

1.சார்பியல் கொள்கை

முதலில் ஐன்ஸ்டீன் அவர்களுடைய சார்பியல் கொள்கையை இதுவரை பல அறிவியல் சிந்தனைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு சிந்தனையாளரும் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் எனும் இயற்கையின் மூலப்பொருட்களுக்கு இடையேயான சார்பியலையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை யும் இணைத்து சுட்டிக் காட்டியது இல்லை .முதல் முறையாக சார்பியல் கொள்கைக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே இருக்கும் இணைப்பை கூறியிருக்கிறார்.

//தமிழர்கள் வானியல் அறிவு பெற்றிருந்தார்கள் இந்த உலகம் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகிறது. நிலம் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது, நிலம் ஏந்திய விசும்பும், வான் என்ற விசும்பைச் சுற்றிய காற்று, காற்றை பரப்பும் தீயும், தீக்கு எதிரான நீரும் என ஐம்பூதங்களாய் கலந்தது என்ற வரையறையின் வழி புறநானூற்று பாடல்களிலேயே பஞ்சபூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம் எனக் கூறுகிறது. இதனுள் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைச் சிந்தனைக் கூறுகள் இருப்பதைக் காணலாம்.//

2.வானியல்

தமிழரின் வானியல் சிந்தனைகளாக ஆசிரியர் குறிப்பிடும் சிறப்புகளை காணும் போது என் மனம் வானில் பறக்கிறது. கதிரவனையும் சூரியனையும் பற்றி தனித்தனியே ஆசிரியர் குறிப்பிடும் செய்திகள் எங்கும் காணக் கிடைக்காதவை.

// கதிரவன் பற்றியும், சூரியன் பற்றியும், செம்மீன் என்ற செவ்வாய் கோள் பற்றியும் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன.அமாவாசை, பவுர்ணமி என இன்று குறிக்கப்படுவதினை தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது.//

3.மண்ணியல்

மண்ணியல் பற்றிய அறிவியல் சிந்தனையைச் சங்க காலத்திலேயே காதலெனும் உணர்வின் துணைகொண்டு பாடலாகப் பாடி இருக்கிறார்கள் என்பதை  விளக்கியுள்ள வகை இதுகாறும் எவ்வாசிரியரும் செய்யாதது.

//செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர்.//

4.தீர்க்க தரிசன சிந்தை

காலத்தை முன்னோக்கிப் பார்த்து பின்பு வரக்கூடிய அறிவியல் சிந்தனைகளுக்கு கூட பொருந்தும் வகையில் பெயரிடக்கூடிய தீர்க்கதரிசன சிந்தையுடைய பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை ஆசிரியர் ஆற்றுப் படுத்தும் விதம் அருமையிலும் அருமை.

// உலகத்தின் இயல்புகளை தமிழர்கள் அறிந்திருந்தனர். இன்றைய இயற்பியலில் குவாண்டம் என்ற கொள்கை நவீன இயற்பியல் கொள்கை அறிஞர் நலங்கிள்ளி என்ற அறிஞர் மெக்கானிக்க்ல் யுனிவர்ஸ் என்ற நூலினை இயந்திர அண்டம் என மொழிப்பெயர்த்துள்ளார். குவாண்டம் என்ற சொல்லுக்கு ‘அக்குவம்’ என தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். அக்கு அக்காக ஒளி உமிழப்படுவதை அக்குவம் எனக் கூறியுள்ளார். குவாண்டம் என்ற சொல்லை விடவும் கூட அறிவியல் துல்லியம் வாய்ந்தது இச்சொல் என தமிழரின் அறிவினை வியக்கிறார்//.

5.வானியல்

வானியல் பற்றிய தமிழர்களின் அறிவை நாம் அறிவோம். அதேசமயம் பக்தி இலக்கியத்தில் தமிழரின் வானியல் அறிவு வெளிப்படுவதை நாம் அறிந்திருப்பது குறைவுதான். அதிலும் திருவாதவூரார் என்று சொல்லப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில் இருக்கும் திரு அண்டப் பகுதி எனும் பாடலில் சொல்லப்படும் அண்டம் பற்றிய கருத்துக்களைக் திருநாவுக்கரசர் துணைகொண்டு ஆசிரியர் விளக்கும் விதம் சிறப்பு

//வானியல் அண்டவியல் அறிவு இருந்தமைக்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. அண்டப்பெருவெளியில் உருண்டைப் பெருக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெறும் காட்சி என திருநாவுக்கரசர் செப்புகிறார். அண்டம் என்ற பெருவெளியில் உருண்டையான கோள்களின் காட்சி அளவிட முடியாத வளமான காட்சியாக விளங்குகிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.//

6.உயிரியல்

தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும் 1520ஆம் பாடலான

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. என்பதில் உள்ள உயிரினங்கள் தமது உடற்கருவிகள் மூலம் அடையும் அறிதலை  வைத்துப் பிரித்த  பிரிவினையைச் சுட்டுகிறது.அதைச் செவி இல்லாத உயிரினங்கள்  நகர முடியாது என்பதைக் கொண்டு ஆசிரியர் தெளிவாக்கிறார்.அக்கூற்று ஆசிரியரின் கல்வி மேன்மையை நமக்கு உணர்த்துகிறது.

//ஓரறிவுயிர் தொடுதல் உணர்வுடையவை தொட்டாச்சிணுங்கி, புல் போன்றன. இரண்டு அறிவு தொடுதல் உணர்வுடன் நாவினால் சுவைத்தல் உடையவை. அவை கிளிஞ்சல்கள், சங்கு, நத்தை, சிப்பி, போன்றன. மூன்றாவது அறிவுடையவை தொடுதல் நாவினால் உண்டாகும் சுவையுடன், மூக்கினால் மோந்து பார்த்தல் இவை செல், ஈசல், பட்டுப்பூச்சி, போன்றன. இவை ஓசையிட்டாலும் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லையே ஏனென்றால் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அதற்கு செவியில்லை என விளக்கம் தருவது அவரின் நுண்ணறிவினைக் காட்டுகிறது. //

7 மானிடவியலும் மருத்துவமும்.

இனக்குழுக்களின் நடத்தைகள் பற்றிய மானுட அறிவியலையும் நவீன மருத்துவ அறிவியலையும்  இணைத்து இரு துறைகளுக்கிடையே  பெரும் புரிதலை ஏற்படுத்துகிறது அவர் கொடுத்திருக்கக்கூடிய இந்தப் பகுதி.

//பழந்தமிழரின் மருத்துவவியல் வியக்கத்தக்க ஒன்றாக இன்றும் அறியப்படுகிறது. இன்றைய அறுவைசிகிச்சைக்கான குறிப்பு அன்றே குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது. //

8.அறிவியல் சிந்தனையும் தொழில் நுட்பமும்.

அறிவியல் சிந்தனைகளின் மூலம் கருவிகள் உருவாக்கப்பட்டு பின்னர் தொழில்நுட்பம் தோன்றுகிறது. சில நேரங்களில் தற்செயலாக தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு அறிவியல் சிந்தனைகள் மூலமாக அறிவியல் பூர்வமாக அவை உறுதி செய்யப்படுகின்றன .அத்தகையஅறிவியல் சிந்தனைகளுக்கும்  தொழில்நுட்பத்துக்கும் இருக்கக்கூடிய இணைப்புகளை பற்றிக் கடைசியாக கட்டுரையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

//அறிவியல் கண்டுபிடிப்புகள் சக்கரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்களை வளைந்த குயவனின் சிறப்பை கலங்களை உருவாக்குகின்ற குயவனே என புறநானூற்றில் ஒரு மன்னனை அடக்கம் செய்யும் தாழியினை அளவு தொடர்பான செய்தி கூறப்பட்டுள்ளது. தச்சுத்தொழிலும், மட்பாண்டத்தொழிலும் தமிழரிடையே சிறந்திருந்தது. கட்டிடவியல், சிற்பக்கலை போன்றவற்றில் தமிழரின் அறிவியல் கூறுகளை காணலாம்.//

அந்தியூர் மணி

படிப்போர் அனைவரும் போற்றும் வண்ணம் எழுதிய இத்தகைய புலமை வாய்ந்த ஆசிரியரிடம் கற்காத என்னுடைய தீயூழை என் சொல்வது?.இவரிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்போதும், இத்தகைய திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகங்களின் திறனை எண்ணும்போதும் ஆனந்தத்தின் உச்சிக்கே செல்கிறேன். இத்தகைய பெரும் அறிவியல் புலமை கொண்ட தமிழ் முனைவர்கள் இன்னும் எத்தனை பேர் நம் பல்கலைக்கழகங்களில் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. அனைவரிடமும் ஆளுக்கொரு அவர்கள்துறைக்கும் மற்ற அறிவியல்துறைகளுக்குமான இணைப்புகளைப் பற்றிய  கட்டுரை வாங்கினால் மட்டுமே அவர்களுடைய அறிவும், திறனும், நுண்மாண் நுழைபுலமும்,பெற்ற கல்வியின் மாண்பும் ,கல்வியில் அவர் கொண்ட ஆய்வின் தெளிவும் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரியும். இனி அனைத்து முனைவர்களையும் அவர்களின் திறனை வெளிப்படுத்த இது போன்ற கட்டுரைகளை வனையும்படி தமிழ் அறிவுலகம் அறிவுறுத்த வேண்டும். இவரைப் போன்ற அனைத்து நல் ஆசிரியர்களின் திறனையும் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் நாள் தான் இருண்டு கிடக்கும் இன்றைய தமிழ் அறிவுலகத்தின் உண்மையான பிறப்பு நாள்.

இப்படிக்கு
அந்தியூர் மணி.

அதற்கான சுட்டி

பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகள்…!

https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/03/28074335/The-ancient-family-lived-with-the-knowledge-and-intellect.vpf

முந்தைய கட்டுரை“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10
அடுத்த கட்டுரையக்ஷிப்பாலை -கடிதங்கள்