ஈரோடு விவாதப் பயிற்சிப் பட்டறை
ஈரோடு விவாதப்பட்டறை – கடிதங்கள்
ஆசிரியருக்கு ,
அறிவியக்கத்தில் நாட்டமுள்ள ஒருவன் விவாதித்துக்கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது. சொல்லப் போனால் நண்பர்களுடன் அல்லது சித்தாந்த எதிரிகளுடன் விவாதிக்குக்போது அறிவு சேகரிப்பை விட நமது கொள்கையை நிலைநாட்டுவதையே பிரதானமாகக் கொள்கிறோம். ஒருவன் இவ்வளவு ஆண்டுகளாக விவாதித்து பெற்றுக் கொண்டது என்ன எனக் கேட்டால் மிக மிக சொற்பம் என தான் பதில் கிடைக்கும். என்றாவது நீங்களோ அல்லது உங்களது மறுதரப்போ உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறீர்களா அதை பொதுவில் ஒப்புக் கொண்டிருக்கிறீர்களா என்று கேட்டாலும் நீக்கமற இல்லை எனதான் பதில் கிடைக்கும், எவ்வளவு நெருங்கிய நண்பருடன் என்றாலும் நாம் விவாதித்து மாறுவதில்லை அல்லது நமது மாற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில்லை, இதை ஒரு தோல்வி எனவே காண்கிறோம். ஒரு தத்துவ தேடலில் பளபளப்பாக நமது அகங்காரத்தை கண்டுகொள்வது இங்கு தான்.
அறிவுத்தேடலில் தீவிரமற்ற மக்கள் ஒரு பொது உரையாடலில் தெடர்ந்து சில பிழைகளை செய்வதை பார்க்கிறேன், “யாரோ ஒரு அரசூழியர் லஞ்சம் வாங்குகிறார் என்பதால் அனைவரையும் அவ்வாறு சொல்ல முடியாது” போன்ற ஆயத்த ஆடை கருத்தை அணிந்துகொள்ளுதல் , “இதற்கு முன்னும் MGR , ஜெயலலிதா போன்றோர் மக்கள் பணியில் ஈடுபடாமல் நேரடியாக அரசியலுக்கு வந்தார்கள் அது போலத்தான் ரஜினியும் கமலும்” போன்ற தவறான முன்னுதாரணத்தை சரியென கொள்ளுதல், “கங்கை காவிரியை இணைக்க வக்கில்லை அத்திக்கடவு அவிநாசி திட்டம் பற்றி பேசுகிறார்கள்” போன்ற அதிகோரிக்கைகள், அது போக நிறுவப்பட்ட கருத்துகளை மீண்டும் விவாதிப்பது, தரவுகள் தேவை என்பதை அறியாமல் மேலும் மேலும் பேசிக்கொண்டே செல்வது, விதிவிலக்குகளை கருத்தில் கொள்ளமல் பேசுதல் ஆகியவைகளும் தொடரும்.
நமது அறிவுத் தேடல் தீவிரம் கொண்ட நண்பர்களின் பொது விவாதத்தங்களில் சில வாத இடர்களையம் சில சிந்தனை பிழைகளையும் அடையாளம் காணலாம். நம்மிடையே உள்ள வாத இடர்களில் பிரதானமானது 7, இந்த பிரதானமான 7 வகைகளில் அப்படி பொதுமைப்படுத்த முடியாது , அப்படி வேறுபடுத்த முடியாது, அப்படி ஒப்பிட முடியாது, அப்படி மேல் கீழ் என அடுக்கி வரிசையிட முடியாது ஆகிய 4 வகைகளை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இப்போது கூடுதலாக மூன்றை சேர்க்க விரும்புகிறேன்.
இந்த ஏழு வகை இடர்களுக்கும் காரணமாக அமைவது 2, விவாதத்தை மேலே கொண்டு செல்ல கூடுதல் மூளை உழைப்பு தேவை என்பதை முன்பே உணர்ந்து விவாதத்தை நீர்த்து போக செய்வது அல்லது தனது முற்போக்கு முகமூடி நழுவிவிடுமோ என்கிற அச்சத்தில் நழுவிவிடுவது. இனி அந்த கூடுதல் 3 இடர்கள் :
-இதனால் பெரிய பயனில்லை ஆகவே தேவையில்லை (ஒருநாளும் சாதியை , ஊழலை ஒழிக்க முடியாது ஆகவே பெயரில் சாதியை நீக்குவது ,RTI ACT போன்றவற்றால் பலனில்லை ஆகவே தேவையில்லை)
-இதுவரை செய்யாததை இனியா செய்யப் போகிறார்கள், இது தாமதமாக வருகிறது ஆகவே தேவையில்லை (சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் தேர்தலில் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை ஆகவே தேர்தல் ஆணையத்தின் பிரச்சாரத்தால் ஒன்றும் விளையாது அது தேவையில்லை)
-நிலைப்பாடு எடுப்பதை ஒத்திப்போடுவது அல்லது மறுப்பது. ( நான் முன்வைக்கும் அரசியல்வாதிகளை மறுக்கிறீர்கள் , நீங்கள் முன்வைப்பவர்கள் யார் யார் ? சுதந்திர இந்தியாவின் மக்கள் வாக்களித்து தேர்வு செய்த செயலுக்கு மதிப்பெண் இட்டால் 100 க்கு எவ்வளவு ? ஒழுக்கத்துடன் வாழ்பவர்கள் பாதிக்கும் மேலா கீழா ?)
இது போக ஒரு விவாதத்தை துவங்குவதற்கே தயங்கும் காரணம் ஒன்று உண்டு அது அரசியல் சரி. இதை இடர் எனக் கூற முடியாது வேண்டுமானால் நழுவுதல் அல்லது விலகுதல் எனக் கூறலாம். அரசியல் சரி என்பது ஒரு பொதுவெளியில் அவ்வளவாக அறியாத திரள் முன் கூர்மையான கருத்துக்களை சொல்லி அவர்களை காயப்படுத்தக்கூடாது என்கிற நோக்கில் உருவாக்கப் பட்டது அது சமூக உரையாடலில் மிக நாகரீகமான விதி , ஆனால் அதையே கற்றோர் தமது தனி உரையாடலிலும் கடைபிடித்தால் விவாதத் தேர் எங்குமே நகராது. இங்கு பெண்ணுரிமை, தலித்துகளின் இயல்பு, பொதுமக்களின் சுயநலம் போன்றவற்றை பேசாமல் தவிர்ப்பது விவாதத்தையே மழுங்க செய்துவிடும்.
அடுத்தது அறிவுத்தேடலில் அடுத்தகட்ட தீவிரம் கொண்டு மேலே கண்ட இடர்களை தாண்டியவர்கள் கூட சிக்கிக் கொள்ளும் சிந்தனை பிழைகள் சில உண்டு, இது வாதத்தில் வெளிப்படும் அதில் பிரதானமானவை
- உட் பிரிவுகள் அறிமுகமானவுடனேயே வாதத்தை கைவிடுவது (ஜனநாயகமா சர்வாதிகாரமா என்கிற வாதத்தில் ஜனநாயகத்தில் கூட மையப்படுத்தப்பட்ட அதிகாரம் பரவலாக்கப்பட்ட அதிகாரம் என்கிற பிரிவுகள் உண்டு )
- காரணம் கவர்ச்சிகரமாக தோன்றினால் அதன் விளைவை கற்பனை செய்து தற்போதைய கள யதார்த்தத்தை காண தவறுவது (தமிழகத்தில் பெண் சிசுக்கொலை பற்றி படங்கள் வந்தது, கதைகள் எழுதப்பட்டது, வழக்குகள் போடப்பட்டது, கருவில் ஆண் பெண் கண்டறிதல் பெரிதும் தடுக்கப்பட்டது ஆகவே இப்போது மக்கள் தொகையில் ஆண் பெண் சமநிலை நிலவுகிறது)
- பாதிப்பு கொள்கை பற்றி உணராமல் வாதிப்பது, அதாவது இப்போது இருக்கும் நிலை ஒரு புதிய நிலை வந்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்டும் என்ன அனுகூலங்கள் என்பதை தராசுத்தட்டில் வைக்காமல் சிந்திப்பது (இதே அரசு மீண்டும் வந்தால் என்ன பாதிப்பு, அரசு மாறினால் என்ன அனுகூலம், எது மிகுதி)
இவ்வளவையும் ஒரு விவாதத்தில் உணர்பவனுக்கு ஈரோடு விவாதப்பட்டறையின் முக்கியத்துவம் தெரியும். இந்த ஒன்றரை நாள் பயிற்சி பட்டறை அறிமுக அளவில் கிட்டத்தட்ட அதன் இலக்கை அடைந்துவிட்டது என கொள்ளலாம். தேநீர் மற்றும் உணவு இடைவேளைகளில் நண்பர்கள் ஆர்வத்ததுடன் விவாதித்துக்கொண்டிருந்தனர், அமர்வுகளில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்கள், பட்டறை முடிந்தவுடன் தாமாக வந்து இது மிகுந்த பலனளித்ததாக நிறைய பேர் சொன்னார்கள். ராஜகோபால் செந்திலும் தமது பணியை சிறப்பாக ஆற்றினார்கள், குறிப்பாக கூறியது கூறல் இல்லை, அவர்களுக்கிடையே நல்ல ஒருங்கினைப்பு இருந்தது, அவையையும் சுவாரஸ்யமாக கட்டுக்குள் வைத்திருந்தனர். உங்களின் இரண்டாம் நாள் நியாய சாஸ்திர இறுதி அமர்வு அற்புதம்.
ஆனாலும் முதல் மாதிரி விவாதத்திலேயே அவ்வளவும் பிழையாகிப்போனது எவ்வளவு தான் சொன்னாலும் அவ்வளவு தானா என்கிற அயர்ச்சியை ஏற்படுத்தியது, பின்னர் இரண்டாவது மாதிரி விவாதம் எதிர்பாராவகையில் முன்னேற்றம் கண்டது. எவ்வித பொது பேசுபொருளும் இல்லாமல் நடந்த இந்த நிகழ்வு விஷ்ணுபுரம் விழாக்களிலேயே தனித்துவம் மிக்கது, இதில் பங்கு பெறாதவர்கள் இழந்தது சற்று மதிப்புமிக்கது.
இது கடந்து சில நாட்களுக்கு பின் நான் எண்ணுகிறேன், உங்களைப்போன்ற ஒரு குருவுடன் இவ்வளவு ஆண்டுகள் பயணித்து உரையாடி நான் அடைந்தது பெருஞ்செல்வம். தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த பட்டறை அவ்வளவு ஒன்றும் மயிர்கூச்செரியவில்லை. நான் உங்களிடம் அணுகி அறிந்ததில் ஒரு பகுதியை இந்த பங்கேற்பாளர்கள் அறியக் கூட இன்னும் சில கூடுகைகள் தேவைப்படும், ஒருங்கிணைக்க எங்கள் ஈரோடு அணி எப்போதும் போல் முன்னிற்கும்.
கிருஷ்ணன், ஈரோடு.