ஒவ்வொருநாளும் மூன்றுவேளையும் உணவுண்பதற்கு முன் தன் இல்லத்தின் நான்கு வெளிவாயில்களிலும் வந்து நின்று “எவரேனும் பசித்துளீரா? உலகீரே, பசித்தோர் எவரும் உள்ளீரா?” என்று ஏழுமுறை கேட்டு எவருமில்லை என்பதை உறுதி செய்தபின் “தெய்வங்களே, அவ்வாறே ஆகுக!” என்னும் மொழியுடன் தன் அகம் புக்கு அன்னமேடையில் அமர்வது அஸ்வரின் வழக்கம். அன்று காலைப்பொழுதில் இல்லம் தேடி வந்த அனைவருக்கும் உணவிட்டு, பொருள்தேடி வந்த அனைவரும் உளம்நிறைய அளித்துவிட்டு புறவாயிலில் வந்து நின்று “எவரேனும் பசித்துளீரா? உலகீரே, பசித்தோர் எவரும் உள்ளீரா?” என அவர் வினவியபோது “ஆம்” என்னும் ஓசை எழுந்தது.
அவர் “எவர் அது?” என்று சூழ நோக்கினார். எவரையும் காணாது திகைத்தபின் மீண்டும் கேட்டார். மீண்டும் அம்மறுமொழி எழுந்தது. “எவர்?” என்றார். இல்லத்தைச்சுற்றி நடந்து நோக்கி எவரையும் காணாதான பின் மீண்டும் கேட்டார். “ஆம்” என்ற மொழியை எழுப்பியது அங்கே மரக்கிளையில் அமர்ந்த காகம் எனக் கண்டார். முதிர்ந்து சிறகுதிர்ந்து நலிந்த காகம் கிளையில் அமர்ந்து “ஆம்” என்றது. “இப்பறவைக்கு உணவு கொண்டுவருக!” என அவர் ஆணையிட்டார். உணவை கொண்டுசென்று அதன் கீழ் வைத்தார். காகம் கீழிறங்கி வரவில்லை. பலமுறை கைதட்டி அளித்தும் பலமுறை வேறு உணவை வைத்தும் அது கீழிறங்கவில்லை. அது கீழிறங்க அஞ்சுகிறதுபோலும் என எண்ணி கிளையொன்றில் உணவை ஏந்தி அதனருகே நீட்டியு1ம் அது உணவுகொள்ளவில்லை.
“என்ன எண்ணுகிறது அது?” என்று அஸ்வர் நிமித்திகரிடம் கேட்டார். “அது தனக்காக உணவுகோரி வரவில்லை” என்று நிமித்திகர் சொன்னார். “நீங்கள் பயணத்திற்குரிய முறையில் ஆடையும் புரவியுமாக அதன் கீழே சென்று நில்லுங்கள்… அது வழிகாட்டி அழைத்துச்செல்லக்கூடும்.” அவர் அவ்வண்ணம் புரவியில் வந்து நின்றபோது காகம் எழுந்து பறந்தது. அவர் தன் ஏவலருடன், மரக்குடுவையில் இன்னுணவுடன் அதற்குக்கீழே சென்றார். மரங்களில் மாறி மாறி அமர்ந்து அது அவரை இட்டுச்சென்றது. அங்கநாட்டு எல்லையைக் கடந்து மச்சநிலத்தில் குறுங்காட்டுக்குள் நுழைந்தனர்.
அது நச்சுமரங்களாலான காடு. நிலமும் உப்பரித்து நஞ்சு பரவியிருந்தது. கங்கையில் நீரெழும்போது சதுப்பாகி கோடையில் பாறையென இறுகும் அந்த மண்ணில் பாதிபுதைந்த விலங்குகளின் எலும்புக்கூடுகளும் கொம்புகளும் நின்றிருந்தன. புரவிகள் செல்ல முடியாதான பின்னர் அவர்கள் கூர்முட்களை வகிர்ந்தும், உளைசேற்றுக் குழிகளைத் தவிர்த்தும் முன்சென்றனர். மேலே எரிந்த கதிரவனின் வெம்மையில் அவர்களின் தசையுருகுவதுபோல வியர்வை எழுந்தது. ஏவலர் ஒவ்வொருவராக தளர்ந்து விழுந்தபின்னரும் அஸ்வர் சென்றுகொண்டிருந்தார். அங்கே வெயில் பழுத்துக்கிடந்த வெளியில் அவர் வெண்ணிற ஆடை அணிந்த ஒரு பெண்மணி கிடப்பதை கண்டார்.
ஓடிச்சென்று அவளைத் தூக்கி அமரச்செய்தார். அவள் பெருவிடாய் கொண்டிருப்பதை உணர்ந்து தன்னிடமிருந்த இன்னீரை அளித்தார். அவள் ஒரு மிடறு விழுங்கியபின் விழிப்புகொண்டு அடுத்த மிடறை மறுத்தாள். “என் பல்லக்கைத் தூக்கியவர்களும், என் வழிகாட்டிக் காவலரும் அப்பால் கிடக்கிறார்கள். அவர்களுக்கு நீரும் உணவும் அளித்த பின்னர் எனக்கு அளியுங்கள்” என்றாள். அஸ்வர் எழுந்து சென்று நோக்க அப்பால் நச்சு முள் பரவிய காட்டில் ஒரு பல்லக்கு சரிந்துகிடப்பதை கண்டார். அருகே கிடந்த போகிகளில் இருவர் உயிரிழந்துவிட்டிருந்தனர். வழிகாட்டிக் காவலர் மூவரில் ஒருவரே உயிருடனிருந்தார். கையிலிருந்த நீரையும் உணவையும் அவர்களுக்கு பகிர்ந்தளித்தபின் இன்னீரை அம்முதுமகளுக்கு அளித்தார்.
அவர்களை அவர் மீட்டு மறுபக்கம் கொண்டுசென்றார். அங்கே இளைப்பாறியபின் அனைவரும் நடந்து அந்திப்போதில் ஊருக்கு மீண்டனர். நோயுற்றிருந்த முதுமகளும் உடன்வந்தோரும் நலம்பெற இரண்டு நாள் ஆகியது. அவள் தன்னை வடபுலத்து வேளாண்குடி ஒன்றின் மூத்தோள் என்றாள். அவள் மைந்தர் பொருள்தேடி கானேகி, செய்தியற்றோராகி ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. அவர்கள் அங்கே ஒரு காட்டில் இருக்கக்கூடும் என்னும் செய்தியை அவள் பெற்றாள். அதை உறுதிசெய்த பின்னர் செல்வதற்குரிய பொறுமை அவளுக்கு இருக்கவில்லை. தான் தங்கிய நகர்ப்புறத்து அரண்மனையிலிருந்து இரவிலேயே ஒரு பல்லக்கில் மூன்று காவலருடன் கிளம்பினாள்.
அறியாக் காடு இடர்மிக்கது. அவர்கள் கங்கையினூடாக வந்து இறங்கிய காட்டில் உண்ணும் பொருளென ஏதுமில்லை. நான்கு நாட்கள் அவர்கள் நீர் மட்டும் அருந்தியபடி கதிரவனை மட்டுமே அடையாளமாகக் கொண்டு நடந்தனர். பின்னர் நீரும் இல்லாமலாயிற்று. நிலம் நஞ்சென்று மாறியது. மரங்களும் செடிகளும் முட்களேந்தி மறித்தன. பல்லக்குத்தூக்கிகளில் ஒருவன் சென்றுகொண்டிருக்கையிலேயே நஞ்சு உடலில் ஏறி இறந்துவிழுந்தான். அவள் பல்லக்குடன் சரிந்து விழுந்து நோயுற்றாள். அவர்கள் வந்து காப்பாற்றவில்லை என்றால் உயிரிழந்திருப்பாள்.
அவள் அவர்களுடன் சில நாட்கள் தங்கினாள். அவள் தான் எவரென்று சொல்லவில்லை. அவள் எவரென்று அறிய அஸ்வர் முயலவுமில்லை. அச்சிற்றூர் அரசுகளின் போர்களுக்கும் வணிகர்களின் வலைகளுக்கும் அப்பால் காலமில்லாத ஒன்றெனத் தனித்திருந்தது. அந்த விலக்கம் அவளுக்கும் தேவையாக இருந்தது. அவள் ஊர்ப்பெண்களுடன் கன்றுமேய்க்கவும் வயல்பணிகளுக்கும் விறகுசேர்க்கவும் சென்றாள். மாவிடிக்கவும் நீர்சேந்தவும் உடனிருந்தாள். எளிய முதுமகளாக மாறுந்தோறும் விடுபட்டுக்கொண்டே இருந்தாள். புன்னகை எப்போதைக்குமென மறைந்ததோ எனத் தோன்றிய அவள் முகத்தில் சிரிப்பு எழுந்ததை அவர்கள் கண்டனர். நோய்முனகலின் ஒலி கொண்டிருந்த அவள் குரல் எழுந்தது. குழவியருடன் ஓடிக்களிக்கவும் தன்னோரன்ன முதுமகள்களுடன் பூசலிட்டு நகைக்கவும் இளமகளிரை ஆணையிட்டு நடத்தவும் அவளால் இயன்றது.
ஆயினும் அவளில் ஒரு பகுதி அயலென்றே இருந்தது. அவள் இரவுகளில் துயிலாது தனித்திருப்பதாக அஸ்வரின் குலமகள் ஆரதி சொன்னாள். பின்னிரவுகளில் புறவீட்டுத் திண்ணையில் பனிபெய்யும் முற்றத்தை நோக்கியபடி அவள் விழிகள் மின்ன அமர்ந்திருப்பதை, நீள்மூச்சுடன் காலத்தை உணர்ந்து மூட்டுக்கள் ஒலிக்க கையூன்றி எழுந்து மீள்வதை அவள் பலமுறை கண்டிருந்தாள். அஸ்வர் ஒருநாள் அவ்வண்ணம் அவள் அமர்ந்திருக்கையில் மெல்ல சென்று அருகே அமர்ந்தார். அவள் அவர் வருகையை நோக்கி திடுக்கிட்டு எழ முயல “அன்னையே, நான் உங்கள் அடிபணியும் மைந்தன் எனக் கொள்க! உங்கள் துயர் எதுவென என்னிடம் சொல்லுங்கள். அதை நீக்கும்பொருட்டு என் செல்வம், என் உயிர், என் குடி அனைத்தையும் அளிப்பேன். என் வீடுபேறே ஆயினும் அளிக்கவும் தயங்கமாட்டேன். அறிக தெய்வங்கள்!” என்றார்.
முகம் கனிந்து அவரை நோக்கி கைநீட்டி தொட்டு “நீ வள்ளல், மைந்தா… நான் அதில் ஐயுறவில்லை. நீ இங்கு ஆலமரமெனத் தழைக்கவேண்டும். உன் குடி ஆயிரம் தலைமுறைக்காலம் இங்கு வாழவேண்டும்” என்றாள் முதுமகள். “நான் எவரென்று உனக்கு சொன்னதில்லை. இப்போதும் சொல்லப்போவதில்லை. நான் சொல்வது மெய்யின் ஒரு பகுதியே எனக் கொள்க!” அவர் ஆம் என தலையசைத்தார். “நான் ஐவரைப் பெற்ற அன்னை என்று மட்டுமே உலகோர் அறிவர். நான் அறுவரைப் பெற்ற அன்னை. என் முதல் மைந்தனைப்பற்றி நான் மட்டுமே அறிவேன். அம்மைந்தனும் அறிவான்” என்றாள். அஸ்வர் “நான் அதை எண்ணினேன். பிழையுணர்வாலும் மந்தணம் சுமப்பதனாலும்தான் மானுடர் உளம்நலிவுறுகிறார்கள்” என்றார்.
முதுமகள் தொடர்ந்தாள். நான் இன்று அறிகிறேன், அன்னை சேற்றுநிலம். மைந்தர்கள் அங்கேதான் வேர்கொண்டு முளைக்கிறார்கள். அன்னையின் தீமையும் நன்மையும் மைந்தர்களிலும் குருதியென உறைகின்றன. என் முதல் மைந்தன் என்னுள் திரண்ட ஆணவத்தில் எழுந்தவன். என் உளம்கொண்ட அளியால் கனிந்தவன். என் அகமுணர்ந்த அறத்தால் இரண்டாமவனை பெற்றேன். அவனிடம் என் அச்சமும் குடிகொண்டது. அலைக்கழிந்த என் அகம் சென்றடைந்த வீம்பும் தருக்கும் என் மூன்றாம் மைந்தனாயின. என் மைந்தர் மேல் நான்கொண்ட குருதிப்பற்று அவன் நல்லியல்பாகியது.
என் உளம்தேடிய வினாக்களின் தவிப்பில் எழுந்தவன் நான்காமவன். என் கூர்மையனைத்தும் அவனில் கூடின. பின்னர் நான் என்மேல் சலிப்புற்றேன். என்னை உதறி பிறிதொரு உடலில் திகழ்ந்து இருவரைப் பெற்றேன். என் கட்டற்ற இளமைக்காலத்திலிருந்து ஒருவன். என் அழகிய அறியாமையிலிருந்து இன்னொருவன். முதுமகள் அத்துயரிலும் மைந்தரை எண்ணி முகம் மலர்ந்தாள். நெடுநேரம் அவர்களின் முகங்களையும் உடல்களையும் கண்முன் தீட்டிக்கொண்டு தன்மகிழ்வுடன் அமர்ந்திருந்தாள். அவளை நோக்கியபடி அன்னையெனும் பேதைமையும் அன்னை எனும் பேரறிவும் ஒன்றாகி அமர்ந்திருக்கும் விந்தையை எண்ணியபடி அஸ்வர் அமர்ந்திருந்தார்.
நான் என் முதிரா இளமையில் விழைந்தது எதை? இன்று அறிகிறேன், அனைவருமே முதிரா இளமையில் கனவுகாண்பது தங்கள் வாழும்தகவுகளையே. நான் பேரரசியென்றானேன். நிலம்வென்று அறம் செய்து வேள்விகளை பெருக்கி அழியாப் புகழ்பெற்றேன். மறுகணமே அனைத்தையும் துறந்து தவச்செல்வியாக மலைமுடிக்குகையில் வாழ்ந்தேன். நான் நான் என்று என் உள்ளம் எழுந்துகொண்டிருந்தது. என்னையன்றி பிறிதெதையும் நான் எண்ணவில்லை. நான் விழைந்த தெய்வமும் என் வடிவிலேயே என் முன் தோன்றியிருக்கக் கூடும். முதிரா இளமை நாற்புறமும் தேக்கப்பட்ட பெருநீர். அணைகளை ஆற்றலுடன் மோதிக்கொண்டிருக்கும் அடங்கா விசை.
எனக்கு ஒரு வழி கிடைத்ததும் அதனூடாக எழுந்தேன். எல்லை கடந்தேன். அது அவ்வழி என்றல்ல எவ்வழியாக இருப்பினும் அதனூடாக எழுந்திருப்பேன். நான் காமத்தை அறிந்தேன். எனக்கு ஒரு மைந்தன் பிறந்தான். அவன் என்னுள் கருக்கொண்டபோதுதான் என் பொறுப்பை உணர்ந்தேன். அன்னையின் ஊழை அவள் குழவி மீளமுடியாதபடி வகுத்துவிடும் என்னும் உண்மையே என்னை அச்சுறுத்தியது. நான் எண்ணி எண்ணி மகிழ்ந்த விரிந்துபரவும் முடிவிலா வழிகளேதும் எனக்கு இனி இல்லை. நான் கொள்ளும் ஆயிரம்பல்லாயிரம் வெற்றிகள் இல்லை. விரிந்து விரிந்து நான் இனி எழப்போவதில்லை. நான் மீண்டும் என் ஊனுடலில், என் குடியில், நான் வளர்ந்த நிலத்தில் வந்தமைந்தேன். என் எல்லைகள் அனைத்தையும் எட்டுப்புறமும் காணலானேன்.
எண்ணுந்தோறும் நான் ஏமாற்றமும் சீற்றமும் கொண்டேன். குழவி அன்னையின் கனவுகளை உறிஞ்சி உண்டு வளர்கிறது. கருவுற்ற பெண் இழப்பதென்ன என்று அவள் அறிவதில்லை. கருவென்னும் கனவில் ஆழ்த்தி அவளை அதை அறியாமல் கொண்டுசெல்கிறது இயற்கை. குழவியென்னும் கனவில் மீண்டும் பல்லாண்டுகாலம் மூழ்கடித்து வைத்திருக்கிறது. அக்கனவிலிருந்து அவள் விழித்தெழுகையில் அவள் அகவை கடந்து நெடுந்தொலைவிலென அப்பால் சென்றுவிட்டிருக்கும். தன் கன்னிக்காலகட்டத்துக் கனவுகளை எண்ணி அவள் ஏங்கி ஏங்கி விழிநீர் வடிப்பாள். அதை குழவியை அடைகையிலேயே உணரும் பெண் ஒருபோதும் அதை ஏற்கமாட்டாள். நான் என் மைந்தனைத் துறந்தது அதனாலேயே.
நான் அறிந்து அவனை துறக்கவில்லை. அவ்வாறு ஆயிரம்முறை சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவன் என் கையிலிருந்து வழுவி நீர்ப்பெருக்கில் அகன்றபோது ஒருகணம் நான் அடைந்தது விடுதலையை. அதுவே சான்று நான் அகமறிந்தே அவனை துறந்தேன் என்பதற்கு. அவன் எங்கோ நலமாக இருக்கிறான் என எண்ணிக்கொண்டேன். அவனை மெல்ல மறக்கவும் முடிந்தது. என் கனவுகளை தேடிச்சென்றேன். என்னை மேலும் மேலுமென வளர்த்துக்கொண்டேன். என் குருதியில் மைந்தர் பிறந்தார்கள். என் கனவின் ஐந்துவடிவங்கள். இப்புவியை நான் அள்ளியெடுக்க விரித்த ஐந்து விரல்கள். என் தேரின் ஐந்து புரவிகள்.
அவள் துயருடன் விழிநீர் சிந்தினாள். “அவர்களை நான் இன்று இழந்துள்ளேன். எங்குள்ளனர் என்று அறியேன். உள்ளனரா என்றும் ஐயுறுகிறேன். என் கனவில் தீக்குறிகள் எழுகின்றன. இரவுகளில் திடுக்கிட்டு எழுந்துகொள்கிறேன். இருத்தலுக்குரிய அடிப்படைகளை இழந்தவள் போலிருக்கிறேன். மீள்தலுக்குரிய வழிகள் மறைந்துள்ளன. வெறுமையை எண்ணி எண்ணி தவிக்கிறேன்” என்றாள். அஸ்வர் அவளருகே மேலும் அணுகி அமர்ந்து “சொல்க, அன்னையே! நீங்கள் வெறுமனே இவ்வாறு ஐயுறமாட்டீர்கள். இத்துயருக்கு பிறிதொரு அடிப்படையும் இருந்தாகவேண்டும்” என்றார். “இல்லை, அவ்வாறு ஏதுமில்லை” என்றாள் அன்னை.
“இல்லை, நீங்கள் எண்ணித் துயருறுவது மைந்தரின் ஊழை. அதையே சொன்னீர்கள். ஆனால் சொல்லாதது ஒன்றுண்டு. மானுடரின் துயர்களில் நிகழும் துயர்கள் எவையாயினும் அவை சிறியவையே. நிகழுமென எண்ணிக்கொள்ளும் துயர்களே பெரியவை. நிகழ்வன நிகழும் அக்கணமே உச்சமடைந்து விடுகின்றன. முழுதும் வெளிப்படுத்திவிடுகின்றன. எனவே நிகழ்ந்த கணம் முதல் அவை குறையத்தொடங்குகின்றன. அவை குறைவதே ஆறுதலை அளிக்கிறது. அவை அழிந்து நாம் விடுதலைபெறும் இடம் அப்பாலென்றாலும் அறியக்கூடுவதாக உள்ளது. ஆயின் நிகழவிருப்பவை என நாம் அஞ்சும் பெருந்துயர்கள் கணம்தோறும் வளர்பவை. மறுகரை அறியாதவை” என்றார் அஸ்வர்.
“விந்தையானதோர் தெய்வ ஆணையால் துயர்களை பெருக்கிக்கொள்ளும் இயல்பு மானுடருக்கு உள்ளது” என அஸ்வர் தொடர்ந்தார். “ஊனுண் விலங்குகள் தங்கள் புண்களை நக்கிப்பெரிதாக்கி அச்சுவையில் திளைத்து அவ்வலியையும் சுவையென்றே மயங்கி உயிர்விடுகின்றன. நீங்கள் எண்ணி எண்ணி துயர்பெருக்குகிறீர்கள். அங்கே அந்த நச்சுக்காட்டில் நீங்கள் கிடந்த கோலத்தை நினைவுறுகிறேன். உயிருக்கென தவித்தது உங்கள் உடல். உங்களுக்குள் ஓர் எண்ணம் அந்நிலையை உவந்து ஏற்றுக்கொண்டது.” “என்ன சொல்கிறாய்?” என்று அன்னை சீற்றத்துடன் கேட்டாள்.
அவளை அமைதிப்படுத்தும் புன்னகையுடன் “ஒரு தருணத்தில் மானுடர் எப்படி வெளிப்படுகிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் அகத்தை அறியமுடியும், அன்னையே” என்றார் அஸ்வர். “அச்சூழலையும் பொழுதையும் அவர்கள் முன்னரே அறிந்திருக்கவில்லை என்றால், அதில் அவர்களின் அகம் முற்றாகவே ஈடுபடவில்லை என்றால் அவர்கள் நிலைகுலைவார்கள். பொருத்தமில்லாப் பதற்றமாக, பொருளில்லாச் சொற்களாகவே வெளிப்படுவார்கள். அவர்கள் அமர்ந்திருப்பதும் விழுந்திருப்பதும்கூட பிழையாக இருக்கும். பயிலா நடிகனின் கூத்தென நம்மில் ஒவ்வாமையையே அளிக்கும். அத்தருணத்தை எங்கோ விரும்பி எவ்வண்ணமோ முன்னர் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்கள் அப்போது முழுதுறப் பொருந்துவார்கள். பிழையிலாது வெளிப்படுவார்கள்.”
“நீங்கள் அந்த நச்சுமுள்காட்டில் தேர்ந்த ஓவியன் வரைந்த ஓவியம்போல் கிடந்தீர்கள்” என்று அஸ்வர் சொன்னார். அன்னை அமைதியிழந்து உடலை அசைத்தாள். அதை பொருட்படுத்தாமல் அஸ்வர் தொடர்ந்தார். “அப்போதே ஐயம்கொண்டேன். அத்தருணத்தில் நீங்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் துயரில் நனைந்திருந்தன. உங்கள் குடிப்பெருமைக்கு உகந்தவையாக அமைந்தன. அதை நீங்கள் சுவைத்து ஆற்றுகிறீர்கள் என எண்ணியதும் உங்கள்மேல் பேரன்பு கொண்டேன். துயரை விரும்பி அணியென சூடிக்கொள்வதே இப்புவியில் மானுடர் அடையும் நிலைகளில் கீழானது. அவர்களுக்கு இன்பங்கள் இல்லை. ஏனென்றால் இன்பங்களை அவர்கள் நாடுவதில்லை. இன்பம் வந்தடைந்தால்கூட அதில் இயைய அவர்களால் இயல்வதில்லை. துயரை மீட்டி மீட்டி இன்பத்தை அறியும் உணர்வை இழந்துவிட்டிருப்பார்கள். இன்பத்தில் திகழும் பயிற்சியும் அற்றிருப்பார்கள். இன்பங்களையும் துன்பமென மாற்றியே அவர்களால் எடுத்துக்கொள்ள இயலும்.”
“ஆம்” என்றாள் அவ்வன்னை. அஸ்வர் மேலும் கனிந்த குரலில் சொன்னார் “அன்னையே, நான் இந்தச் சிற்றூரிலிருந்து வெளியே செல்வதில்லை. நான் ஈட்டிய பொருள் இங்கே பத்துமேனியெனப் பெருகுவதனால் அளிப்பதன்றி எதையும் செய்வதில்லை. என் கையிலிருப்பது என்றோ எவரோ பெருங்கொடைத்தேவனின் வடிவென்று இறங்கிவந்து அளித்த ஒரு கணையாழி. வந்தவர் கதிரவனேதான் என்று என் அன்னை நம்பினார். அந்தக் கணையாழியில் கதிர்வடிவம் உள்ளது. அது எனக்கு அனைத்து வாயில்களையும் திறக்க வைத்தது. தொட்டதெல்லாம் பெருகச்செய்தது. கொடுக்கக்கொடுக்க களஞ்சியம் நிறையவைத்தது. நான் அறிந்ததெல்லாம் கொடுப்பதனூடாக கற்றுக்கொண்டதே. இப்பொழுதும் உங்களுக்காக என் முழுதுள்ளத்தையும் அளிக்கிறேன். உங்கள் அருகணைந்து உள்ளத்தை நோக்குகிறேன்” என்றார் அஸ்வர்.
“உங்கள் உள்ளத்துயரை அணுவணுவென அறிகிறேன், அன்னையே” என அஸ்வர் தொடர்ந்தார். “துயரை பெருக்கிக்கொள்பவர்கள் பேரச்சம் கொண்டவர்கள். எல்லா துயருக்கும் அடியிலிருப்பது அச்சமே. இறப்பச்சம், நோயச்சம், பிரிவச்சம், நிலையாமை எனும் அச்சம். அறியமுடியாதவை அளிக்கும் அச்சங்களும் அறியமுடியாதவை. ஆனால் அவை மானுடருக்கு எளியவை. ஏனென்றால் அவற்றை தெய்வங்களுக்கு முன் கொண்டுசென்று படைத்துவிடமுடியும். நாம் அறிந்த அச்சங்கள் நம்மால் இயற்றப்பட்ட செயலின் விளைவுகள். அச்செயலை நாம் அறிவோம் என்பதனால் அவற்றின் விளைவான அச்சத்தையும் அறிந்திருக்கிறோம். துலாவின் இத்தட்டால் அத்தட்டை அளக்கிறோம். அந்த அச்சத்தை நாம் எந்தத் தெய்வத்திடமும் சென்று ஒப்படைக்க இயலாது. நாம் அவற்றை எதிர்கொண்டாகவேண்டும்.”
“நாம் நம்மை பெருக்கிக்கொள்பவர்கள். எண்ணி எண்ணி. தொட்டுத் தொட்டு. சொல்லிச் சொல்லி. நாம் பெருகுகையில் நம் நிழல் மும்மடங்கு, முந்நூறு மடங்கு பெருகுகிறது. நம் அச்சங்களையும் ஐயங்களையும் பெருக்கிக்கொள்கிறோம். நம் துயரை பெருக்கிக்கொள்கிறோம். அன்னையே, நம் எதிரியை பெருக்கிக்கொள்கையில் நம் ஆணவம் அகத்திருந்து நிறைவடைகிறது அல்லவா? ஆணவம் நாம் பெறுவனவற்றை சிறிதாக்கிக் காட்டுகிறது, அளிப்பவற்றை பெருக்கிக் காட்டுகிறது. நம் இன்பங்களை சுருக்குகிறது, துன்பங்களை பெருக்குகிறது” என்றார் அஸ்வர். அன்னை “ஆம், மெய்” என்றாள்.
“அன்னையே, நீங்கள் அஞ்சுவது ஒன்றை. அது நீங்கள் இயற்றிய பிழையின் நிகர்” என்று அஸ்வர் சொன்னார். அத்தனை சொற்கள் வழியாக அவர் எண்ணிய இடத்தை சென்றடைந்தார். “மெய்” என்றாள் அன்னை. “நான் அஞ்சுவது அவனை.” அஸ்வர் “அன்னை தன் மைந்தனை ஏன் அஞ்சவேண்டும்?” என்றார். “நான் அவனுக்கு தீங்கிழைத்தேன். அவனை கைவிட்டேன். அவன் குலமிலியாக சிறுவாழ்வு வாழச்செய்தேன்” என்றாள். “அவர் எங்கிருக்கிறார் என அறிவீர்களா?” என்றார் அஸ்வர். “அறிவேன்” என்று அன்னை சொன்னாள். “அவர் வஞ்சம் கொண்டிருக்கிறாரா? உங்கள் மைந்தருக்கு தீங்கிழைப்பார் என அஞ்சுகிறீர்களா?” என்றார் அஸ்வர்.
“வஞ்சம்கொண்டிருந்தால், தீங்கிழைத்தால் அது முற்றிலும் சரியே என்று எண்ணுகிறேன்” என்று அன்னை சொன்னாள். “நான் இழைத்த பிழை எழுந்து வந்து கண்முன் நின்றிருக்கிறதோ என்று ஐயம் கொள்கிறேன். அவன் வஞ்சம் கொள்ளாவிடிலும் என்ன? அவனை ஆளும் தெய்வங்கள் அவ்வஞ்சத்தை கொள்ளக்கூடுமல்லவா? அறத்தெய்வம் வஞ்சம் மறப்பதே இல்லை என்பார்கள். அது என்மேல் முனிந்திருக்கும் என்றே உணர்கிறேன்” என்று அன்னை சொன்னாள். பின்னர் நெஞ்சுலைந்து அழத்தொடங்கினாள். “என் மைந்தர்கள் உணவின்றி அலைகிறார்கள். எதிரிகளால் சூழப்பட்டிருக்கிறார்கள். அனைத்தையும் அவர்களுக்கு அளித்தவள் நானே” என புலம்பினாள்.
அஸ்வர் சொன்னார் “அன்னையே, அந்த நீர்ப்பெருக்கில் உங்கள் கையிலிருந்து அக்குழவி நழுவிய தருணத்தை நினைவுகூர்க!” அன்னை “நான் அதை நினைக்காத நாளே இல்லை” என்றாள். “நினைக்கையில் எல்லாம் அது நிகழ்ந்த அந்தச் சூழலை நீங்கள் அப்பொழுது இருந்த இடத்திலிருந்து அக்கோணத்திலேயே மீண்டும் நிகழ்த்திக்கொள்வீர்கள். அதற்கு நேர் எதிர்ப்புறம் இருந்து பிறிதொருவராக அக்காட்சியை காண்பதுபோல் எண்ணிக்கொள்ளுங்கள். அறியாதன சில தெரியவரலாகும்” என்றார் அஸ்வர். “அது எங்ஙனம்?” என எண்ணிய முதுமகள் நீள்மூச்செறிந்து “ஆம், அதுவும் இயல்வதே. நான் அவளை பார்க்கிறேன். அவள் குழவியையும்” என்றாள்.
“எங்ஙனம் அது கைவிட்டுச்சென்றது? எண்ணுக!” என்று அஸ்வர் சொன்னார். “ஒவ்வொரு அசைவையும் ஒவ்வொரு நீர்த்துளியையும் நினைவில் எடுத்தடுக்குக… நுணுகி நோக்குக!” அவள் “அந்தச் சிறுபடகு அலைகளில் அசைந்தாடியது. அதனுள் மைந்தன் கால்களை உதைத்து எம்பி எழமுயன்றுகொண்டிருந்தான். ஒழிந்த படகென்பதனால் அது நீர்ப்பரப்பின்மேல் சற்றே தொட்டுக்கொண்டிருந்தது. சிற்றலைகளிலேயே அது அலைவு கொண்டது. அவள் அதன் மூலையை பற்றியபடி நீந்திக்கொண்டிருந்தாள். அவள் ஆடைகள் கால்களிலும் கைகளிலும் சுற்றியமையால் அவளால் விரைந்து நீந்த முடியவில்லை. மூழ்கி எழுந்து மூச்சிளைத்து வாயில் மொண்ட நீரை உமிழ்ந்தாள். கால்களால் உதைத்தும் ஒற்றைக்கையால் நீரை உந்தியும் பின்னால் திரும்பி நோக்கி அவளை துரத்திவந்தவர்களின் தொலைவை கணக்கிட்டும் நீந்தினாள். அப்போது அவள் கையிலிருந்து அந்தப் படகு நழுவியது” என்றாள்.
“ஏன்?” என்று அஸ்வர் கேட்டார். “அந்தப் படகு அலைகளில் ததும்பிக்கொண்டிருந்தது. சுழல்களில் நிலைமாறியது” என்றாள். “அவள் கிளம்பியபோதே அது அலைகளில்தானே இருந்தது?” என்றார் அஸ்வர். “ஆம், அங்கே ஒரு சுழி இருந்திருக்கலாம். அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி பிரிந்திருக்கலாம்” என்றாள் அன்னை. “நன்கு எண்ணுக! நன்கு நோக்குக!” என்று அஸ்வர் சொன்னார். “அக்குழவி தன் காலால் படகின் ஒரு பகுதியை மிதித்தது. திடுக்கிட்டதுபோல் படகு சற்றே திரும்பியது. அக்கணம் அவள் மூழ்கி எழுந்தாள். மூச்சுவாங்கும்பொருட்டு வாய் திறந்தாள். கையிலிருந்து படகின் விளிம்பு நழுவியது. அவள் அறிந்தே அதை விடுவதாக அப்போது உணர்ந்தாள். அறியாது விட்டதாக பின்னர் மயங்கினாள். எஞ்சிய வாழ்நாளெல்லாம் அறிந்தே விட்டேன் என துயருற்றாள். அறியாது விட்டேன் என மீண்டுவந்தாள். இரு நிலையும் மெய்யே.”
“இரு அலைகளில் ஏறி இறங்கி அப்பால் அகன்றது அப்படகு. அவள் எழுந்து நோக்கிநின்றிருக்க மேலும் மேலும் அலைகளில் ஏறிச்சென்றது. நீரின் உள்ளோட்டத்தில் பொருந்தி விசைகொண்டது. அவள் நெஞ்சுலைய நோக்கி நின்றபின் நீரில் மூழ்கி மறுகரை நோக்கி சென்றாள். அங்கே எழுந்துநின்று நோக்கியபோது அவள் விழிகளிலிருந்து மறைந்துவிட்டிருந்தது. அதன் இறுதித்தோற்றத்தை அவள் அருமணி என விழிகளுக்குள் பொத்தி தன்னுடன் எடுத்துக்கொண்டாள். முலைப்பாலும் விழிநீரும் சோர அங்கிருந்து சென்றாள். பெருகும் நதிநீரை நோக்கியபடி நின்று ஏங்கி அழுதாள். நீள்மூச்செறிந்து மீண்டாள். மீண்டும் உளமுலைந்து அழுதாள். அவள் அந்நாளிலிருந்து மீளவேயில்லை.”
“அக்குழவி உதைத்திருக்கிறது” என்றார் அஸ்வர். அன்னை திகைப்புடன் நோக்கி அவர் சொல்வதை புரிந்துகொண்டு “ஆனால் அது உளம் உருவாகாத குழவி” என்றாள். “மானுடர் தங்களுக்குரிய தெய்வங்களுடன் பிறக்கிறார்கள். அத்தெய்வங்களே அனைத்தையும் ஆற்றுகின்றன” என்றார் அஸ்வர். “அவன் எனக்கு அளித்த கொடையா அது?” என்றாள் அன்னை. “ஆம், அவர் பெருவள்ளல். தன் அன்னைக்கு முதற்கொடையை அளித்தார். பிறிதொரு அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்த கொடைகளை அளித்தார்” என்றார் அஸ்வர். அன்னை நீர்பரவிய சிவந்த விழிகளுடன் நோக்கிக்கொண்டிருந்தாள். “வள்ளல்கள் அளிப்பதற்காகவே பிறக்கிறார்கள், அன்னையே” என்றார் அஸ்வர்.
அன்னை “ஆம்” என்றாள். பின்னர் சீறலோசையுடன் அழத்தொடங்கினாள். அவள் அழுவதை அஸ்வர் நோக்கி அமர்ந்திருந்தார். ஒரு சொல்லும் அப்போது அவளை சென்று சேராதென்று அறிந்திருந்தார். மெல்ல மெல்ல அவள் அடங்கினாள். விம்மலோசையுடன் உடலை குலுக்கினாள். “நீங்கள் அவரை எவ்வண்ணமும் அஞ்சவேண்டியதில்லை, அன்னையே. வள்ளல்களின் உள்ளத்தில் வஞ்சம் நிலைகொள்வதில்லை” என்று அஸ்வர் சொன்னார். “அவர் அளித்த கொடை உங்கள் வாழ்வும் மைந்தரும். தன் கொடை பெருகவேண்டும் என்றுதான் எந்தக் கொடையாளரும் விழைவார். என்றும் அவர் அருள் உங்களுக்கு உண்டு என்று தெளிவுறுக! உங்கள் குடிக்கு முதற்காவல்தெய்வம் வேலும் வில்லும் ஏந்தி வாயிலில் நின்றிருக்கிறது என்று நிறைவுறுக!”
“ஆம்” என்றாள் அன்னை. பின்னர் விழிநீரைத் துடைத்தபடி புன்னகை செய்தாள். “அவனை நினைத்துக்கொள்கிறேன். இப்புவியை வெல்லும் திறன்கொண்டவன். அவன் முன் முப்பெருந்தெய்வங்களும் பணிந்தாகவேண்டும்.” அஸ்வர் “இப்புவியிலேயே நல்லூழ் கொண்ட அன்னை நீங்களே. ஒரு துளி முலைப்பாலும் உளம்கனிந்து நீங்கள் அவருக்கு அளிக்கவில்லை. முழுதுலகையும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டீர்கள்” என்றார். அன்னை நகைத்தபோது இமைகளில் நீரும் இருந்தது. “ஆம், மெய்” என்றாள். “அவன் என் மடியில் வளராததே நன்று. அன்னையர் தன் மைந்தரை கைக்குழவி என எண்ணும் பிழையிலிருந்து மீளமுடியாது. இவனை ஒருபோதும் நான் குழவியென நோக்கப்போவதில்லை. என்மேல் கிளை தழைத்துப் படர்ந்திருக்கும் நிழல்மரம். நான் இறுதிநீர்த்துளி கொள்கையில் நினைவுகூரப்போகும் தெய்வமுகம்” என்றாள்.
அவள் மறுநாள் கிளம்பிச்சென்றாள். அவ்வூரையும் அஸ்வரையும் அங்குள்ள பெண்டிரையும் இளமைந்தரையும் வாழ்த்தி ஊர்த்தெய்வங்களை வணங்கி விடைகொண்டு பல்லக்கில் ஏறிக்கொண்டாள். அப்போது அவள் முகம் தெளிவுகொண்டிருந்தது.