அழியா வண்ணங்கள்

சென்னை விடுதியில் அரைத்துயிலில் சும்மா தொலைக்காட்சியை நோண்டிக்கொண்டிருந்தபோது  ‘ஜெயகாந்தன் ஜெயமோகன் சேர்ந்து எழுதிய கதை நீ’ என்றபாடல் எங்கேயோ ஒலித்தது. திரும்ப சென்று தேடிப்பார்க்கத் தோன்றவில்லை. ஆனால் அதிலிருந்து நினைவுகள் எழத்தொடங்கின.

சினிமாப்பாடல்களுக்கு ஓர் அழிவின்மை உண்டு. அவை சினிமாவில் நிகழும் பிறிதொரு கலையைச் சார்ந்தவை. மரபிசையின் அடித்தளம் மீது மேலைச் செவ்வியல் இசையும், மேலைப் பரப்பிசையும், நாட்டாரிசையும் கலந்து ஒவ்வொரு கணமும் புதிய வாய்ப்பொன்றைத் திறப்பவை. நம் மரபிசை தேங்கிப்போன ஒன்று. அதில் மேதைகள் உள்ளனர்,புதுமை இல்லை. ஆகவே நம் இசைப்புதுமைகள் அனைத்துமே சினிமாப்பாடல்களில்தான்

சினிமாப் பாடல்கள் சென்று தொடுவன அழிவின்மை கொள்கின்றன. அவ்வளவாகப் புகழ்பெறாத பாடல்கள்கூட எப்போதும் இருந்துகொண்டிருக்கின்றன. சினிமாப்பாடல்களில் பெருங்கலைஞர்கள் இடம்பெறுவதென்பது அவர்களை இன்னொருவகையில் அழிவற்றவர்களாக ஆக்குகிறது. அவ்வகையில் மலையாளத்தில் இரு பாடல்கள் குறிப்பிடத்தக்கவை

டேஞ்சர் பிஸ்கட் என்னும் [நாலாந்தரப்] படத்திற்காக ஸ்ரீகுமாரன் தம்பி எழுதி தட்சிணாமூர்த்தி இசைமைத்து ஏசுதாஸ் பாடிய பாடல் இது.

உத்தரா ஸ்வயம்வரம் கதகளி காணுவான்
உத்ராட ராத்ரியில் போயிருந்நு
காஞ்சனக் கசவுள்ள பூஞ்சேல உடுத்து அவள்
நெஞ்செய்யும் அம்புமாய் வந்நிருந்நு

இரயிம்மன் தம்பி நல்கும் சிருங்கார பத லஹரி
இரு ஸ்வப்ன வேதிகளில் அலிஞ்ஞு சேர்ந்நு
கரளிலே களித்தட்டில் இருபது இருபது திரியிட்ட
கதகளி விளக்குகள் எரிஞ்ஞுநிந்நு

குடமாளூர் சைரந்திரியாய் மாங்குளம் பிருஹந்நளயாயி
ஹரிப்பாடு ராமகிருஷ்ணன் வலலனாயி
துரியோதன வேஷமிட்டு குரு செங்ஙன்னூரு வந்நு
வாரணாசிதன் செண்ட உணர்ந்துயர்ந்நு

ஆயிரம் சங்கல்பங்கள் தேருகள் தீர்த்த ராவில்
அர்ஜுனனாய் ஞான் அவள் உத்தரயாயி
அதுகழிஞ்ஞ்சு ஆட்டவிளக்கு அணைஞ்ஞுபோய்
எத்ர எத்ர அக்ஞாத வாசம் இந்நும் துடருந்நு ஞான்

தமிழில்

உத்தரா சுயம்வரம் கதகளி காண்பதற்கு
உத்ராட இரவில் சென்றிருந்தேன்
பொற் சரிகை போட்ட பூஞ்சேலை அணிந்து அவள்
நெஞ்சு தொடுக்கும் அம்புகளுடன் வந்திருந்தாள்

இரயிம்மன் தம்பி அளிக்கும் சிருங்கார சொற்களின் போதை
இரு கனவின் மேடைகளில் கரைந்து சேர்ந்தது
இதயத்தின் ஆட்ட அரங்கில் அறுபது திரிகள் எரியும்
கதகளி விளக்குகள் எரிந்து நின்றன

குடமாளூர் சைரந்த்ரியாக வந்தார். மாங்குளம் பிருஹந்நளையானார்
ஹரிப்பாடு ராமகிருஷ்ணன் வலலன் ஆனார்
துரியோதன வேடமிட்டு குரு செங்ஙன்னூர் வந்தார்
வாரணாசியின் செண்டை உயிர்கொண்டு எழுந்தது

ஆயிரம் கனவுகள் தேர்கள் சமைத்த இரவில்
நான் அர்ஜுனன் ஆனேன் அவள் உத்தரை ஆனாள்
அதன்பின் ஆட்டவிளக்கு அணைந்தது
எத்தனை எத்தனை தலைமறைவுகளை நான் இன்றும் தொடர்கிறேன்

இரயிம்மன் தம்பி

இதில் பேசப்பட்டுள்ள கலைஞர்கள் சென்ற காலகட்டத்தின் மாபெரும் கலையாளுமைகள். முதன்மையாக உத்தரா ஸ்வயம்வரம் கதகளியை எழுதியவராகிய இரயிம்மன் தம்பி. [இரவிவர்மன் தம்பி என்பதன் மரூஉ] சேர்த்தலைக்கு அருகிலுள்ள நடுவில் அரசகுடியில் கேரளவர்மா தம்பான் -பார்வதிபிள்ள தங்கச்சி இருவருக்கும் மகனாக 1783 ல் பிறந்தார். அன்றைய அரசர் கார்த்திகத் திருநாள் ராமவர்மாவின் இளையவர் ரவிவர்மாவின் மகள்தான் இரயிம்மன் தம்பியின் அம்மா பார்வதிபிள்ளை தங்கச்சி.

இரயிம்மன் தம்பி மலையாளத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர். மலையாள கதைகளிநாடகங்களில் தலைசிறந்தவையாகக் கருதப்படும் உத்தரா ஸ்வயம்வரம், கீசகவதம் இரண்டும் அவரால் இருபது வயதுக்குள் எழுதப்பட்டவை. புகழ்பெற்ற கர்நாடகச் சங்கீத பாடலாசிரியரான சுவாதித்திருநாள் பிறந்தபோது இரயிம்மன் தம்பி எழுதிய ‘ஓமனத்திங்கள் கிடாவோ’ மலையாளத்தின் முதன்மைப்புகழ்பெற்ற தாலாட்டுப்பாடல். 1856ல் மறைந்தார்.

குடமாளூர் கருணாகரன்நாயர்

திரௌபதியின் மாற்றுவடிவான சைரந்த்ரியாக வருபவர் குடமாளூர் கருணாகரன் நாயர்.  கோட்டயம் அருகே குடமாளூர் என்னும் ஊரில் 1916 நவம்பரில் பிறந்தார். ஏற்றுமானூர் வாசுதேவன் நம்பூதிரி குடமாளூர் நாராயணி அம்மா ஆகியோர் பெற்றோர்.குறிச்சி ராமப்பணிக்கரிடம் கதகளிக் கல்வியைத் தொடங்கினார்.  குறிச்சி குஞ்ஞன் பணிக்கர், தோட்டம் சங்கரன் நம்பூதிரி, கொச்சாப்பி ராமன் சகோதரர்கள் ஆகியோரிடம் கதகளி பயின்றார். கவளப்பாறை நாராயணன் நாயரிடம் வடக்கு பாணி கதகளியை கற்றார்

பெரும்பாலும் பெண்வேடங்களில் தோன்றிய குடமாளூர் ஒருகாலத்தில் கேரளப் பெண்ணழகின் மிகச்சிறந்த வெளிப்பாடாக கவிஞர்களால் பாடப்பட்டார். ‘கதகளியின் மோகினி’  என அவரை அழைத்தனர். கேரளத்தின் ஒவ்வொரு பெண்ணும் குடமாளூரில் வெளிப்படும் பெண்மையழகின் ஏதேனும் ஒரு படியில் நின்றுவிட்டவர் என்றார்  கவிஞர் வள்ளத்தோள் நாராயணமேனன்.

ஆனால் கதகளிக்கு வெளியே ஆண்மையான நிமிர்ந்த தோற்றமும் பாவனைகளும் கொண்டவர். அவரிடமிருந்து பெண் வெளிப்படும் தருணத்தை அறிபவர் கலை தோன்றுவதை புரிந்துகொள்வார் என்பார்கள்.  கலாமண்டலம் கிருஷ்ணன்நாயர் இவருடன் இணைந்து பல வேடங்களில் ஆடியிருக்கிறார். அவர்கள் இருவரும்தான் கேரளத்தின் மிகப்பொருத்தமான ஜோடி என்று ஒரு வேடிக்கைச்சொல்லும் உண்டு.

திருவிதாங்கூர் அரண்மனை ஆடல்கலைஞராகவும் கொச்சி ஃபாக்ட் கதகளி சபையின் கலைஞராகவும் பணியாற்றினார். 2000 அக்டோபர் 7ல் மறைந்தார். சென்ற ஆண்டு குடமாளூரின் நூற்றாண்டு ஓராண்டு முழுக்க கொண்டாடப்பட்டு பெரிய விழாவாக நிறைவுசெய்யப்பட்டது. அவர் பெயரில் விருதுகளும் கலையமைப்புக்களும் இன்று உள்ளன.

மாங்குளம் விஷ்ணு நம்பூதிரி

பாடல் வர்ணிக்கும் அந்தக் கதகளியில் அர்ஜுனனின் பெண்வேடமாகிய பிருஹந்நளையாக வருபவர் மாங்குளம் விஷ்ணு நம்பூதிரி. கார்த்திகப்பள்ளி வட்டத்தில் கண்டல்லூர் மாங்குளம் நம்பூதிரி இல்லத்தில் 1900த்தில் பிறந்தார். தந்தை மாங்குளம் கேசவன் நம்பூதிரி. கீரிக்காட்டு கறுத்த சங்கரப்பிள்ளை கதகளியின் முதல் ஆசிரியர். பின்னர் கொச்சுபிள்ள பணிக்கர், குறிச்சி குஞ்ஞன் பணிக்கர் ஆகியோரிடம் கதகளி பயின்றார். கீரிக்காட்டு கொச்சுவேலுப்பிள்ளையின் தலைமையில் அரங்கேறினார். அரைநூற்றாண்டுக்காலம் கதகளி அரங்கில் புகழுடனிருந்த மாங்குளம் சமஸ்த கேரள கதகளி வித்யாலயம் என்னும் அமைப்பை உருவாக்கினார். கதகளிக்கான மார்கி என்னும் அமைப்பில் ஆசிரியராக இருந்தார். 1981ல் மறைந்தார். .

ஹரிப்பாடு ராமகிருஷ்ண பிள்ளை

ஹரிப்பாடு ராமகிருஷ்ணபிள்ளை வலலன் ஆக தோன்றுகிறார். 1926ல் பிறந்தவர். தந்தை சங்கரப்பிள்ளை. தகழி ராமன்பிள்ளை, சென்னிதலை கொச்சுபிள்ளைப் பணிக்கர் குறிச்சி குஞ்ஞன் பணிக்கர் ஆகியோர் ஆசிரியர்கள் பின்னர் குரு செங்கன்னூரின் மாணவராக வாழ்நாள் முழுக்கவும் திகழ்ந்தார். பெரும்பாலும் அமைதியான தெய்வ வடிவங்களில் நடிப்பவர். [பச்சைவேடம்] சிருங்கார நடிப்பில் சிறந்தவர் என்பார்கள்.  1989ல் மறைந்தார்.

செங்ஙன்னூர் ராமன்பிள்ளை

துரியோதனனாக வருபவர் குரு செங்கன்னூர் ராமன் பிள்ளை. திருவனந்தபுரம் அரண்மனைக் கதகளி குழுவின் தலைமை ஆட்டராக இருந்தார். 65 ஆண்டுகள் அதில் முதன்மை வகித்தார். 1886ல் செங்ஙன்னூரில் பிறந்தார். மனோதர்மத்திற்கு முதன்மை தரும் கப்ளிங்காடு பாணியின் முதன்மை ஆசிரியராக இருந்தார். ‘தெக்கன் சிட்டையின் அப்யாசமுறைகள் [ தெற்கு பாணியின் நடிப்புப் பயிற்சி முறைகள்] என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர்.

தகழி கேசவப்பணிக்கர் மாத்தூர் குஞ்ஞுகிருஷ்ணப் பணிக்கர் முதலியவர்களிடம் ஆட்டம் பயின்றார் மங்கொம்பு சிவசங்கரப்பிள்ளை, மடவூர் வாசுதேவன் நாயர் ஹரிப்பாடு ராமகிருஷ்ண பிள்ளை போன்றவர்கள் மாணவர்கள். 1980 நவம்பர் 11 ஆம் தேதி காலமானார். பெரும்பாலும் ராவணன் துரியோதனன் நரகாசுரன் போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களை ஆற்றலுடன் நடிப்பவர் குரு செங்ஙன்னூர். அதற்கென தனி நடிப்புமுறையை உருவாக்கியவர். இன்றும் கதகளிநடிப்பின் மகத்தான முன்னோடியாகக் கருதப்படுபவர் மிக மோசமாக , அவசரமாக படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சியிலேயே அவர் பெயரைச் சொல்லும்போது பிரேம் நஸீர் கையை மேலே தூக்கி பெருமதிப்பை காட்டுகிறார்.

வாரணாசி மாதவன் நம்பூதிரி

செண்டை வாசிப்பவர் வாரணாசி மாதவன் நம்பூதிரி 1932ல் மாவேலிக்கரை வாரணாசி மடத்தில் நாராயணன் நம்பூதிரிக்கும் திரௌபதி அந்தர்ஜனத்திற்கும் மகனாகப் பிறந்தவர். அரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் மாணவராக செண்டை பயின்றார். கலாமண்டலம் கிருஷ்ணன் குட்டி பொதுவாளின் மாணவராக தேர்ச்சி அடைந்தார். வள்ளத்தோள் நாராயண மேனன் கதகளியை மீட்பதற்காக நிறுவிய கேரள கலாமண்டலத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். இளையவரான வாரணாசி விஷ்ணுநம்பூதிரியுடன் இணைந்து செண்டை வாசிப்பார். அவர்கள் வாரணாசி சகோதரர்கள் என்ற பேரில் புகழ்பெற்றிருந்தார்கள்.

வாரணாசி மாதவன் நம்பூதிரியின் மகன் வாரணாசி நாராயணன் நம்பூதிரி கதகளி ஆசிரியரும் நடிகருமாகப் புகழ்பெற்றவர். பேரர் வாரணாசி மது இன்று கதகளி நடிகரும் கதகளி காவிய ஆசிரியருமாகப் புகழ்பெற்றிருக்கிறார்.

இன்னொரு புகழ்பெற்ற பாடல்  ‘நட்சத்திர தீபங்கள் தெளிஞ்ஞு’ சுவாதித் திருநாள் மகாராஜா இதன் முதன்மை ஆளுமை.  1813 ல் அரசியான கௌரி லக்ஷ்மிபாய்க்கு மகனாகப் பிறந்தார். தந்தை சங்கனாச்சேரி  அரண்மனையில் ராஜராஜ வர்மா கோயில்தன்புரான். கருவிலேயே அரசராக்ப் பட்டம் சூட்டப்பட்டார். தன் அன்னையின் கீழ் குழந்தையாகவே அரசாண்டார். கர்னல் ஜான் மன்றோ திருவிதாங்கூரின் ரெசிடெண்ட் ஆக பொறுப்பேற்றிருந்தமையால் இது ஒரு பொம்மை ஆட்சியாகவே நீடித்தது

1829 சுவாதித்திருநாள் நேரடியாக அரசப்பொறுப்பேற்றார். 1846ல் மறைந்தார். இடைக்காலத்தில் பொம்மை அரசராக அவர் பலவகையான இன்னல்களை அடைந்தார். ஆங்கிலேயர்களால்  சிறுமைசெய்யப்பட்டார். அதனால் மனமுடைந்து இறந்தார். தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுவதுண்டு [ லெனின் ராஜேந்திரன் இயக்கிய ஸ்வாதித்திருநாள் என்னும் படம் அவரைப்பற்றிய அழகிய கலைப்படைப்பு]

சுவாதித்திருநாள் மரபிசையில் பெரும் பயிற்சி கொண்டிருந்தார். இசைக்கலைஞர்களை தன் அவைக்கு வரவழைத்துத் தங்கச்செய்தார். இந்தி, சம்ஸ்கிருதம், தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளில் இசைப்பாடல்களை இயற்றியிருக்கிறார். ஆங்கிலமும் பிரெஞ்சும் நன்கறிந்திருந்தார்.

சுவாதித் திருநாள் ராமவர்மா

சுவாதித் திருநாள் மகாராஜா தன் இறுதிக்காலத்தில் ஒன்பது கீர்த்தனைகளை எழுதி, இசையை சுவரப்படுத்தி, திருவனந்தபுரத்தில் தேவாரக்கெட்டு அரண்மனையில் ஆண்டுதோறும் நிகழும் நவராத்ரி விழாவில் பாடவேண்டுமென ஏற்பாடுசெய்தார் என்பது வரலாறு. இன்றும் திருவனந்தபுரத்தின் மாபெரும் மரபுக்கலைக் கொண்டாட்டம், இசைவிழா அரண்மனையில் நிகழும் நவராத்ரி பூஜைதான். இந்தியாவின் மாபெரும் கலைஞர்கள் பங்கெடுப்பார்கள்.

கம்பன் பூஜைசெய்ததாகச் சொல்லப்படும் மரத்தாலான சரஸ்வதிசிலை பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்தது – இப்போது வெளியே தனிக்கோயிலில் நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பத்மநாபபுரத்திலிருந்து யானைமேல் ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டு திருவனந்தபுரத்தில் பத்துநாள் பூஜைக்கு வைக்கப்பட்டு திரும்பிக்கொண்டுவரப்படும். அரசரின் பிரதிநிதியாக ஒருவர் வாளேந்திச் செல்வார். இது குமரிமாவட்டத்தின் முக்கியமான விழாக்களில் ஒன்று.

நவராத்திரி பூஜை பற்றிய சினிமாப்பாடல் இது. ஏசுதாஸ் அவரே பாடி அவரே நடித்திருக்கிறார். நிறகுடம் என்னும் படம். பிச்சு திருமலை எழுதி ஜயவிஜய இசையமைத்திருக்கிறார்கள். [ ஜயவிஜயன் செம்பையின் மாணவர்கள். மேடைப்பாடகர்கள். இவர்களின் ஜயனின் மகன்தான் நடிகர் மனோஜ் கே ஜயன்]

நக்ஷத்ர தீபங்ஙள் திளங்ஙி நவராத்ரி மண்டபம் ஒருங்ஙி
ராஜதானி வீண்டும் ஸ்வாதி திருநாளின்றே
ராகசுக சாகரத்தில் நீராடி

ஆறாட்டு கடவிலும் ஆனக்கொட்டிலிலும்
ஆஹ்ளாதக லக்ஷம் நிறஞ்ஞு நிந்நு
சதிரு துடங்ஙி சங்கீத லஹரியில்
சதஸ்யர் நிஸ்சலராய்

செம்பட தாளத்தில் சங்கராபரணத்தில்
செம்பை வாய்ப்பாட்டு பாடி
வடிவேலு திருமும்பில் பண்டு காழ்ச்ச வச்ச
வயலினில் சௌடய்யா கியாதி நேடி

மிருதங்கத்தில் பாலக்காட்டு மணி நெய்த
லயதாள தரங்கங்ஙள் உயர்ந்நெங்ஙும் பிரதித்வனிச்சு
நாலம்பலத்தினுள்ளில் நாடகசாலைக்குள்ளில்
நிசப்தராய் ஜனம் ஸ்வயம் மறந்நு நிந்நு

[தமிழில்]

நட்சத்திர தீபங்கள் மின்னின நவராத்ரி மண்டபம் அணிகொண்டது
அரசத்தலைநகர் மீண்டும் சுவாதித்திருநாளின்
ராக சுக சாகரத்தில் நீராடியது

ஆறாட்டுப் படிக்கட்டிலும் யானைக் கொட்டிலிலும்
ஆனந்தமாக லட்சம் மக்கள் நிறைந்து நின்றனர்
சதிர் தொடங்கியது சங்கீதப் போதையில்
மக்கள் அசைவிழந்தனர்

செம்படை தாளத்தில் சங்கராபரணத்தில்
செம்பை வாய்ப்பாட்டு பாடினார்
வடிவேலு அரசர் முன்னால் முன்னாளில் காணிக்கைவைத்த
வயலினில் சௌடய்யா புகழ்தேடினார்

மிருதங்கத்தில் பாலக்காட்டு மணி நெய்த
லய தாள அலைகள் எழுந்து எங்கும் எதிரொலித்தன
நாலம்பலத்திற்குள் நாடகசாலைக்குள்
அமைதியானவர்களாக மக்கள் அசைவிழந்து நின்றனர்

இதில் சொல்லப்படும் இடங்கள் திருவனந்தபுரம் தேவாரக்கெட்டு அரண்மனைக்கு சுற்றும் உள்ளவை. நீராட்டு போல ஆறாட்டு. இதில் பேசப்பட்டுள்ள கலைஞர்களும் புகழ்பெற்றவர்கள்

செம்பை வைத்யநாத பாகவதர்

செம்பை வைத்யநாத பாகவதர். 1895 ல் பாலக்காடு அருகிலுள்ள செம்பை என்னும் ஊரில் பிறந்தார். தந்தை அனந்த பாகவதர். தாய் பார்வதி அம்மாள். வழிவழியாகவே இசைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் செம்பை. தந்தையையே ஆசிரியராகக் கொண்டவர். ஏசுதாஸ், ஜயவிஜயன், டிவி.கோபாலகிருஷ்ணன் பி.லீலா போன்றவர்கள் இவருடைய புகழ்பெற்ற மாணவர்கள். இவருடைய பெயரால் இப்போது குருவாயூரில் செம்பை இசைவிழா நிகழ்கிறது. 1974ல் மறைந்தார். செம்பை கேரளத்தின் கலாச்சார அடையாளங்களில் ஒருவராக இன்று கருதப்படுகிறார்

சௌடய்யா

வயலின் கலைஞராகிய சௌடய்யா கர்நாடகத்தின் கலாச்சார முகங்களில் ஒன்று. மைசூருக்கு அருகில் திருமகுடல் நர்சிப்பூர் என்னும் ஊரில் 1895 ல் பிறந்தார். ஊரில் மைசூரின் அரசவைக் கலைஞராகிய கானவிசாரத பிடாரம் கிருஷ்ணப்பாவின் மாணவராக பத்தாண்டுகள் பயின்றார். வயலினை இன்றைய கர்நாடக இசைக்குரியதாக உருமாற்றியதிலும் சௌடய்யாவுக்கு பெரும்பங்குண்டு என்கிறார்கள். சௌடய்யா அன்று தென்னக பாடகர்கள் அனைவராலும் பெருமதிப்புடன் விரும்பப்பட்ட வயலின் கலைஞராக இருந்தார். 1967ல் மறைந்தார். அவர் பெயரில் பெங்களூரில் சௌடய்யா இசைக்கூடம் அமைந்துள்ளது. ஒரு சாலைக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

பாலக்காட்டு மணி அய்யர்

பாலக்காட்டு மணி அய்யர் கேரளத்தில், பாலக்காடு மாவட்டத்தின் பழைய கல்பாத்தி கிராமத்தில் 192ல் பிறந்தார். பெற்றோர்: டி. ஆர். சேஷம் பாகவதர் – ஆனந்தம்மா. தனது 7 ஆவது வயதில், மிருதங்க இசைப் பயிற்சியை சாத்தபுரம் சுப்பய்யரிடம் பெற ஆரம்பித்தார்; தனது தந்தையின் நண்பர் விசுவநாத ஐயரிடமும் மிருதங்கம் கற்றார்.   பதினைந்தாது வயதில் தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் மாணவர் ஆனார். செம்பை வைத்யநாத பாகவதருக்கு நிறைய வாசித்திருக்கிறார் 1940 முதல் ல் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார்.  1981ல் மறைந்தார்.

தஞ்சை நால்வர்

இதில் பெயர் சுட்டப்பட்டுள்ள இன்னொரு இசைக்கலைஞர் வடிவேலு. தஞ்சை நால்வர் என அழைக்கப்படும் சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு ஆகியோர் இன்றைய கர்நாடக இசை, பரதநாட்டியம் ஆகியவற்றை வடிவமைத்த முன்னோடிகள். பரதநாட்டியத்திற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கியவர்கள். அவர்களைப் பற்றிக் குறைவாகவே பேசப்பட்டுள்ளது. தஞ்சை சரபோஜியின் அவைக்கலைஞர்களாக இருந்தனர். சின்னய்யா பின்னர் மைசூர் அரசரின் அவைக்கலைஞராக ஆனார்

வடிவேலு, சுவாதித்திருநாள் அவையில்

சின்னய்யா, பொன்னய்யா சிவானந்தம் வடிவேலு நால்வரும் சுவாதித்திருநாளின் அவைக்கு வந்து அவைக்கலைஞர்களாக திகழ்ந்தனர். வடிவேலுவுக்கு எட்வர்ட் என்னும் கிறித்தவத் துறவி ஒரு வயலினைப் பரிசளித்ததாகவும் அவர் அதை தானே கற்று வாசிக்க தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது. வடிவேலு வயலினில் சில மாற்றங்கள் செய்து இன்று கர்நாடக இசைக்கு வாசிக்கும் வடிவுக்கு கொண்டுவந்தார். அவர் வடிவமைத்த வயலினில் ஒன்று சுவாதித்திருநாளுக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அது நெடுநாட்கள் சுவாதி சங்கீத விழாவில் வாசிக்கப்பட்டது. 1810ல் பிறந்த வடிவேலு 1845ல் மறைந்தார்.

இத்தனைச் செய்திகளும் புகழ்பெற்ற சினிமாப்பாடல்கள் வழியாக இன்றும் நினைவில் வாழ்கின்றன எனில் அவற்றை எழுதிய ஸ்ரீகுமாரன் தம்பி , பிச்சு திருமலை ஆகிய பாடலாசிரியர்களே முதன்மைக்காரணம். உகந்த இசையமைத்த தட்சிணாமூர்த்தி, ஜயவிஜயன் ஆகியோரையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் அதிலும் நக்ஷதிர தீபங்கள் பாடலின் கடைசிக் காட்சித்துளி செம்பையின் படத்தில் சென்று முடிகிறது. தமிழில் எந்த இசைமேதைக்காவது இந்த மரியாதை சினிமாவில் அளிக்கப்பட்டுள்ளதா?

ஸ்ரீகுமாரன் தம்பி

களரிக்கல் கிருஷ்ணபிள்ளை பவானிக்குட்டித் தங்கச்சி ஆகியோருக்கு மகனாக 1940 ல் பிறந்தவர் ஸ்ரீகுமாரன் தம்பி. மலையாள நாவலாசிரியர் பி.வி.தம்பி அவருடைய மூத்தவர்.அவருடைய கிருஷ்ணப்பருந்து என்னும் நாவல் தமிழில் வெளிவந்துள்ளது. திரிச்சூர் பொறியியல்கல்லூரியிலும் சென்னை ஐஐடியிலும் பொறியியல் பயின்ற ஸ்ரீகுமாரன் தம்பி கவிஞராக புகழ்பெற்றபின் திரைப்பாடலாசிரியரானார். 1966ல் காட்டுமல்லிகை என்னும் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். மூவாயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். எழுபத்தெட்டு திரைக்கதைகள் எழுதியிருக்கிறார். 1874ல் சந்திரகாந்தம் என்னும் படத்தை இயக்கினார். தொடர்ந்து 30 படங்களை இயக்கியிருக்கிறார். கானம் என்ற படத்திற்காக மாநில விருதுபெற்றார். இருபதுபடங்களைத் தயாரித்துமிருக்கிறார்.

பிச்சு திருமலா

பிச்சு திருமலா என்ற [ஏரில் எழுதிய பி.சிவசங்கரன் நாயர் சி.ஜே.பாஸ்கரன் நாயர் பாறுக்குட்டி அம்மா இருவருக்கும் மகனாக திருவனந்தபுரம் 1941ல் திருமலையில் பிறந்தார்.1972ல் பஜகோவிந்தம் என்ற படம் வழியாக பாடலாசிரியரானார். மூவாயிரம் பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார்.

ஒரு காலகட்டம் தனக்கு முன்னர் இருந்த இன்னொரு காலகட்டத்தை நினைவுகூர்வது இலக்கியத்தில் எப்போதும் நிகழ்கிறது. படைப்பாளிகள் அடுத்தகட்டப் படைப்பாளிகள் வழியாக உருவம்கொண்டு வாழ்கிறார்கள். கலைஞர்களையும் அவ்வப்போது இலக்கியம் இவ்வாறு தொட்டு வாழச்செய்துவிடுகிறது. தமிழ் சினிமாப்பாடல்கள் வழியாக இப்படி ஏதேனும் காலகட்டம், ஏதேனும் பெருங்கலைஞர்கள் நினைவுகூரப்பட்டுள்ளார்களா?

வடிவேலு ஒரு நினைவுக்குறிப்பு
முந்தைய கட்டுரைஅரூ அறிபுனை விமர்சனம்-3 ,இருப்பு சார்ந்த வினாக்கள்
அடுத்த கட்டுரை“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8