மீள்தல்

மீண்டும் ஒரு தனிமை

வானோக்கி ஒரு கால் -1

வானோக்கி ஒரு கால் – 2

சென்னை மேரியட் விடுதியில் சிலநாட்கள் தங்கியிருந்தேன். நட்சத்திர விடுதிகளுக்கே உரிய எல்லா தோரணைகளும் உண்டு. கழிப்பறையை படுக்கையறையிலிருந்து பார்க்கும்படிக் கண்ணாடிச்சுவர். இது எதற்கு என இன்றுவரை எனக்குப் புரிந்ததில்லை.சென்றதுமே அதை திரையிட்டுவிடவேண்டும். பின்னர் திறக்கவே கூடாது என்பது பாடம். மறந்து அப்பால் காத்திருக்கும் விருந்தினர் முன் இப்பால் நின்று சிறுநீர் பெய்ய நேர்ந்துவிடும்.

 

சிலநாட்களுக்கு முன்னர்தான் அலைந்துவந்து எழும்பூரில் ரயில்நிலையம் முன்னால் ஒரு சிறுவிடுதியில் தங்கியிருந்தேன். ஐநூறுரூபாய் கட்டணம். பழைய கட்டிடம், காரைபெயர்ந்த சுவர்கள். ஆனால் இடவசதி இருந்தது. அப்பகுதிக்கு இப்படி ஒரு மலையாள மணம் உண்டு என அப்போதுதான் தெரிந்தது. நல்ல கேரள மீன்சாப்பாடு கிடைக்கும் இரண்டு உணவகங்கள். பல விடுதிகள் மலபார் முஸ்லீம்கள் மற்றும் நம்பியார்களுக்குச் சொந்தமானவை. நிர்வாகிகள் பணியாணிகள் எல்லாருமே மல்லுக்கள்.

 

ஆனால் தங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் நாடார்கள். தென்தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு மளிகைநோக்கங்களுடன் வந்தவர்கள். வேட்டிக்கட்டு, கரிய உடல், பவுடர், உரத்தகுரலில் மளிகையுரையாடல், மளிகைச்சிரிப்பு. பலர் கட்டுக்கட்டாக ரூபாய் வேறு வைத்து எண்ணிக்கொண்டிருந்தார்கள். குழாயில் நேரடியாக கடல்நீரே வந்தது. பல்தேய்த்தால் ‘உங்க பேஸ்டில் உப்பு இருக்கா?” என்ற கேள்வி உள்ளத்திலெழுந்தது. தேவையே இல்லை.

அன்று அந்த விடுதியில் அத்தனை கூச்சலும் தெருவிலிருந்த நெரிசலும் தேவையாக இருந்தது. மக்கள் முட்டிமோதும் எழும்பூர் சாலையில்தான் பெரும்பாலும் இருந்தேன். இரவில் துயில்கையில் பக்கத்து அறையிலிருந்து “இப்ப என்னாங்கியே? நூத்தம்பதுக்கு நாப்பதுண்ணா லாபம் நமக்கில்லாவே?” என்ற கூக்குரல் கேட்டது துணைக்கு ஆளிருக்கும் உணர்வை அளித்தது. அப்போது எனக்குள் நான் மட்டுமே இருந்தேன்

 

இந்த ஆடம்பர விடுதியறையில் என்னைத்தவிர எவருமில்லை. குளிரூட்டியின் உறுமல். ஒளிமட்டுப்படுத்தப்பட்ட கண்ணாடிச்சுவருக்கு அப்பால் சில தென்னைமண்டைகள் சோம்பலாக அசைந்துகொண்டிருந்தன. ஒவ்வொன்றும் உயர்தரம் என்று அடக்கமாக அறிவிக்கும் பொருட்கள். இங்கே என்னுள் மனிதர்கள். சினிமாக்காரர்கள், வெண்முரசுக் கதைமாந்தர். எழுதத் தொடங்கிவிட்டேன்.

 

இது விந்தைதான். வெண்முரசின் பெரும்பாலான பகுதிகளை வெவ்வேறு வேலைநெருக்கடிகள் நடுவேதான் நன்றாக எழுதியிருக்கிறேன். பயணங்களில் தங்கும் விடுதிகளில். ஐரோப்பாவின் ஒரு தங்குமில்லத்தில் பின்னிரவில் எழுந்து அமர்ந்து எழுதியதே சென்றநாவலில் நான் மிக விரும்பும் பகுதி. நெருக்கடி எழுதச் செய்கிறது.எழுதுவது நெருக்கடிகளிலிருந்து மீளவும் செய்கிறது. எழுதுகையிலேயே முழுமையாக இருக்கிறேன்

இந்த ஆடம்பரங்களை விரும்புகிறேனா? என்னைச் சந்திக்க முன்பொருமுறை ஒரு நட்சத்திரவிடுதிக்கு வந்த நண்பர் “நீங்க இங்க இருப்பீங்கன்னு நினைக்கவே இல்லை” என்றார். ”ஏன்?” என்றேன். “நீங்க காந்தியவாதி இல்ல?” என்றார். “அப்டியா?” என்றேன் குழப்பத்துடன்.

 

எனக்குக் காந்தியத்துடனான முதன்மையான முரண்பாடு அதில் அழகியலுக்கு இடமே இல்லை என்பதுதான். காந்தியத்தின் அடிப்படை என்பது துறவு. துறவு எத்தகையதானாலும் அதில் முதன்மையாகத் துறக்கப்படுவது அழகுதான். அழகு இவ்வுலகு நோக்கிய ஈர்ப்பு. அழகுணர்வுக்கும் பெருவிழைவுக்கும் மயிரிழைதான் வேறுபாடு. இங்குள்ள ஒவ்வொன்றும் தேவை என எண்ணுவது பெருவிழைவு. இங்குள்ள ஒவ்வொன்றிலும் உறையும் அழகும் உவகையும் மட்டுமே தேவை என எண்ணுவது அழகுணர்வு.

 

அழகுணர்வு முற்றிலும் உலகியல் சார்ந்தது. அதிலிருந்து மேலும் மேலும் நுண்மைதேடிச் சென்று அதனூடாகவே உலகியலைக் கடக்கலுமாகும். அதையே இந்தியக்கலை எப்போதும் இலக்காக்குகிறது. பெண்ணழகினூடாக பேரன்னையைச் சென்றடைதல். கொடுமையில் வன்மையில் இருளில் அதே பேரழகைக் கண்டுகொள்ளுதல். அழகினூடாக அழகென்றாகி நிற்கும் ஒன்றை உணர்தல்.

ஆனால் நடைமுறையில் அழகென்பது ஓர் ஆடம்பரமே. ஆடம்பரத்தைத் தவிர்த்தல் அழகைத்தவிர்த்தலே. மாதமொருமுறை கலைக்கோயில்களைக் காணச்செல்லுதல் நடுத்தரப் பொருளியலில் வாழும் ஒருவனுக்கு ஆடம்பரம். அழகான நூல்கள், அழகான இசை, அழகிய விடுதிகளும்தான். இங்கே சூழ்ந்திருப்பவை ஆடம்பரப்பொருட்கள். ஆனால் அழகியவையும்கூட. கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டவை

 

திரைப்படமே இந்த விடுதலையை, இந்த வாய்ப்பை எனக்கு அளிக்கிறது. இதோ இவ்வாண்டுமுழுக்கச் செய்யவேண்டிய பயணங்களைத் திட்டமிடுகிறோம். மலைகள், வெளிநாடுகள், தீவுகள். அரசூழியனாக இருந்திருந்தால் இவற்றை இழந்திருப்பேன். பொருளியல் நிலையின்மை. அது உருவாக்கும் உளஅலைக்கழிப்பு மேலும்.

 

ஒவ்வொரு  அலைதலுக்குப்பின்னரும் ஆடம்பரங்களுக்குத்தான் மீள்கிறேனா? இதன்பொருட்டுக் குற்றவுணர்ச்சி கொள்ள முயல்கிறேன்.ஆனால் மெய்யாக அல்ல. உள்ளூர ஒன்று மகிழ்கிறது, இனிதமைந்திருக்கிறது. இந்த அழகின்முன், சூழ்ந்திருக்கும் மென்மையின் நேர்த்தியின் முன், மிக இயல்பாகவே உணர்கிறேன்.

 

என்னை இங்கே பற்றி வைத்திருப்பது, சுழற்றி அலைக்கழிப்பது அழகே. அழகின்பொருட்டு, அழகிலிருந்து எழும் இனிய உணர்வுகளின்பொருட்டு எப்பிழையையும் செய்யக்கூடியவனாகவே இதுவரை இருந்திருக்கிறேன். இனியும் விடுபடுவேன் என நினைக்கவில்லை. வழி எனக்குத்தெரியும். போக இயலாது.

 

ஆகவேதான் கலைஞன் ஞானத்தை அறிந்தவன் – ஞானி அல்ல என்று சொல்லப்பட்டுள்ளது

 

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

முந்தைய கட்டுரைபாலாவின் கட்டுரைகள்
அடுத்த கட்டுரைஅழகியல் விமர்சனமும் ஷோபா சக்தியும்.