அன்பு ஆசிரியர் அவர்களுக்கு,
என் முதல் கடிதம்.
உங்கள் தளத்தில் உங்கள் எழுத்துக்கள் உகந்தவையாக இருக்கின்றன. திரு பாலாவின் கட்டுரைகள் உங்கள் தளத்தில் வருவதால் நம்புகிறேன். ஆனால் திரு ராமச்சந்திர குகா அரசியல் சார்பு உடையவர். பாலாவும் அந்த சார்பை என் போன்ற பாமரரிடம் திணிக்கிராரோ?
தயவு செய்து உங்கள் வாசகர்களை போலிகளைக் கண்டு ஏமாராமல் பார்த்துக் கொள்ளுவது தங்கள் கடமை.
அன்புடன்,
பழ. பொன்னுசாமி.
***
அன்புள்ள பொன்னுச்சாமி
எல்லா கட்டுரைகளும் கருத்தை வாசகர்முன் வைப்பவையே. வேண்டுமென்றால் எல்லா கட்டுரைகளையுமே கருத்துத் திணிப்பு என சொல்லிக்கொள்ளலாம்
என் பார்வை ஒரு தரப்பு. பெரும்பாலும் பாலாவின் பொருளியல் கட்டுரைகள் நேர் எதிர்தரப்பு. அவர் அடிப்படையில் திராவிட இயக்க ஆதரவு கொண்டவர். அதனாலென்ன? இரு தரப்பின் சீரிய தர்க்கங்களும் உங்கள் முன் வைக்கப்படுகின்றன. எது உகந்ததோ அதை முடிவுசெய்யுங்கள். அந்த தகுதி உங்களுக்கு அமையவேண்டும் என்றுதானே இந்தத் தளம் வெளிவருகிறது?
பாலா எழுதும் நவகாந்தியர் குறித்த அறிமுகங்கள் எனக்கும் உகந்தவை. நானே எழுதியிருக்கக்கூடுபவை – அவரளவுக்குப் படிக்கமுடிந்தால்
ஜெ
***
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் பாலா என்பவரின் கட்டுரைகள் சீரான ஒரு பொருளியல்- அரசியல் தரப்பை முன்வைக்கின்றன. அவை இரண்டு அடிப்படைகள் கொண்டவை. இந்தியச்சூழலில் மையப்படுத்தப்பட்ட மத்திய அதிகாரம், மையப்பொருளியல் திட்டமிடல் ஆகியவற்றுக்கு எதிராக காந்திய வழியிலும் மாற்று அரசியல் வழியிலும் முன்வைக்கப்படும் பொருளியல் நடவடிக்கைகளையும் சமூக நடவடிக்கைகளையும் அடையாளம் காட்டி அவை அவற்றை ஆதரித்துப் பேசுகின்றன.
இந்த அடிப்படையில்தான் பாலா திராவிட இயக்கத்தின் மைக்ரோ எகனாமிக்ஸையும் காந்தியர்களின் வில்லேஜ் எகனாமிக்ஸையும் ஆதரிக்கிறார் என நினைக்கிறேன். திராவிட இயக்கம் ஒரு மாற்றுப்பொருளியலை இங்கே உருவாக்கியது என அவர் கலையரசனை ஆதாரமாகக் கொண்டு வாதிடுகிறார் என புரிந்துகொள்கிறேன். அமுல் போன்ற முயற்சிகளையும் அவ்வாறே பார்க்கிறார்
பல கட்டுரைகள் வழியாகச் சீராக அவர் ஒரு தரப்பை உங்கள் இணையதளத்திலே உருவாக்கியிருக்கிறார். அவரைப்பற்றிய செய்திகளை அறிய ஆர்வமாக இருக்கிறேன்
ஜெயராமன்
***
அன்புள்ள ஜெயராமன்
பாலா எங்கள் நண்பர் வட்டத்தால் கெவின்கேர் பாலா என அழைக்கப்படுபவர். நெடுங்காலம் கெவின்கேர் நிறுவனத்தில் முதன்மை நிர்வாகியாக இருந்தார். ஈரோடு அருகே உள்ள தளவாய்ப்பேட்டை என்னும் ஊரில் பிறந்தவர். தளவாய்ப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி; ஈரோடு காமராசர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி; இளநிலை வேளாண் அறிவியல், கிள்ளிக்குளம் வேளாண்மைக் கல்லூரி; முதுநிலை ஊரக மேலாண்மை, ஊரக மேலாண் கழகம், ஆனந்த் (Institute of Rural Management, Anand, Gujarat).
29 ஆண்டுகளாக கூட்டுறவு மற்றும் தனியார்த்துறைகளில் பணியாற்றினார். இப்போது தான்சானியாவில் இருக்கிறார்
நீட் தேர்வு – ஏன் எதிர்க்கிறது தமிழ்நாடு? என்னும் சிறு வெளியீடு முன்னரே வந்துள்ளது. அருண் மதுரா என்னும்பேரில் சொல்வனம் இதழில் பொருளியல் – அரசியல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
ஜெ
***