அழகியல் விமர்சனமும் ஷோபா சக்தியும்.

அன்புள்ள ஜெ

இது ஷோபா சக்தி முகநூலில் எழுதியது

இலக்கியத்திற்கு விதி இருக்குமெனில் அது ‘இலக்கியத்திற்கு விதிகள் ஏதுமில்லை’ என்ற விதியாகவே இருக்கும்.

இலக்கியக் கோட்பாடுகள், சட்டகங்கள், விதிகள் இவையெல்லாம் விமர்சகர்களிற்கு உதவலாம். ஒரு பதிப்பகத்திற்கு பின்னட்டையில் வாக்கியங்கள் பொறிக்க உதவலாம். ஆனால் வாசிப்புக்கு விதிகள் கிடையாது. அது முழுக்க முழுக்க அந்தரங்க உளச் செயற்பாடு. இதை இப்படித்தான் வாசிக்க வேண்டும் என்ற கூட்டு வாசிப்பு மனநிலையை உருவாக்க முயல்வது இலக்கிய அதிகாரச் செயற்பாடு. பிரதியைக் கட்டவிழுங்கள் மாறாக விதிகளால் கட்டமைக்காதீர்கள்!

என்னைப் புதுமைப்பித்தனோ அசோகமித்திரனோ கவர்வதில்லை. கு.அழகிரிசாமியும் எஸ்.பொவும்தான் என் ஆதர்சங்கள். கவிதையில் கேட்டீர்களானால் எனக்கு முகுந்த நாகராஜனை அவ்வளவு பிடிக்கும். தேவ.. என்று ஆரம்பிக்கும் எந்தக் கவிஞர்களையும் என்னால் படிக்கவே முடிவதில்லை. இது என் தன்நிலையும் சுதந்திர வாசிப்பும்.

ஒரு புத்தகத்தை வாசித்தால் அது உங்களை எப்படிப் பாதித்தது என்பதைப் பேசுங்கள். கொண்டாடுங்கள் அல்லது கிழியுங்கள். ஆனால் தயவு செய்து இலக்கிய கோட்பாடு, விதி, முன்னோடிகள் வரிசை, அழகியல் அளவு என்றெல்லாம் சொல்லிக் குட்டிக் குட்டி இலக்கிய கமிஷார்கள் ஆகாதீர்கள். ஏனெனில் இவ்வளவு காலத்திற்குமான அழகியல், விதி, கோட்பாடு, மரபு, முன்னோடிகள் எல்லாவற்றையும் மீறவே ஒரு சுயசிந்தனையுள்ள இலக்கியவாதி முயன்றுகொண்டிருக்கிறார்.அவரை அளப்பது கடந்தகாலத்தால் அல்ல!

இதைப்பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ராஜ்

***

அன்புள்ள ராஜ்

இத்தகைய விவாதத்திலும் ஒன்றை முதலில் சொல்லியாகவேண்டும், ஷோபா சக்தி நவீனத் தமிழிலக்கியம் சென்றடைந்த உச்சங்களில் ஒன்று.  பிற இலக்கியமறியா அரசியல் மொண்ணைகளிடம் பேசுவதன் மொழி நம்மிடம் கூடிவிடலாகாது.

ஆனால் அவர் மேலே சொன்னவை  இலக்கியவிமர்சனம் என்றால் என்ன என்றே அறியாத பொதுப்புத்திப் புரிதலின் விளைவு. பரவாயில்லை, படைப்பாளிகளில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.

முதலில் சொல்லவேண்டியது ஒன்று. இலக்கிய விமர்சனம் என்பது வளர்ச்சி மற்றும் புதுமைக்கு எதிரானது, அது நேற்றைப்போல் நாளையும் இருந்தாகவேண்டும் என்று சொல்வது என எவர் சொன்னது? க.நா.சு அப்படிச் சொல்லியிருக்கிறாரா? அல்லது ஹெரால்ட் ப்ளூம் சொல்லியிருக்கிறாரா? எங்கிருந்து பிடித்தார் இதை?

அழகியல் விமர்சனம் இலக்கியத்தில் தேடும் முதல் அடிப்படை இயல்பே புதுமை [novelty] என்பதுதான். அந்தத் தேடலால்தான் அழகியல் விமர்சகன் ஷோபா சக்தி எழுதத் தொடங்கியதுமே அவரைக் கண்டடைந்தான். ஷோபா சக்தியை ஒருவர் கடந்து போனால் உடனே அவன் பெயரைச் சொல்கிறான். அந்த அழகியல் விமர்சத்தால் சுட்டிக்காட்டப்ப்பட்ட பின்னர்தான் ஷோபா சக்தி அரசியல் ஆதரவாளர்களாலெயே அடையாளம் காணப்பட்டார். அந்த அடையாளத்தைத்தான் அழகியல் விமர்சனத்திற்கு எதிராக கொண்டு வந்து நிறுத்துகிறார்.

அழகியல் விமர்சனம் நேற்றை சுட்டிக்காட்டும். அதுவரையிலான மரபை அது தொகுத்துக்காட்டும். அதன்பொருள்  ‘அதைப்போல எழுது’ என்று அல்ல. ’அதைக் கடந்துசெல்’ என்றுதான். முந்தைய எழுத்தைப்போல ஒருவர் எழுதினால் உடனே அழகியல் விமர்சனம் அவ்வெழுத்தை நிராகரிக்கும். தி.ஜானகிராமன் போல எழுதிய பாலகுமாரனையும் இன்னும் பலரையும் அது பொருட்டாகவே எண்ணியதில்லை. அந்த மரபை அது சுட்டிக்காட்டுவது இவ்வளவு வந்திருக்கிறோம், இதையெல்லாம் அடைந்திருக்கிறோம், இங்கிருந்து மேலே சொல் என்று சொல்வதற்காகவே.

அழகியல்விமர்சகராகிய க.நா.சு சொன்ன வரி.  ‘இலக்கியத்தில் இன்னதுதான் சரி என்று இல்லை. இதுதான் பாதை என்று இல்லை. அதுவரைக்கும் இல்லாத ஒன்று உண்டாகும்போதுதான் அதை கலை என்கிறோம்’ சொல்லி எழுபது ஆண்டு ஆகிறது. ஷோபா சக்தி இப்போது அந்த மெய்ஞானத்தை தானே அடைந்திருக்கிறார். இப்படி அவர் சொந்தமாகச் சிந்தித்துச் சென்றடைய இன்னும் புதுமைப்பித்தனின் எழுத்துக்கள் நிறைய இருக்கின்றன. அதன்பின் க.நா.சு. மெல்ல மெல்ல சுந்தர ராமசாமி. பரவாயில்லை. காலம் இருக்கிறது.

அழகியல் விமர்சனம் வெங்கட் சாமிநாதனானாலும் சுந்தர ராமசாமியானாலும் ‘இலக்கியத்தில் பாதை என ஒன்று இல்லை, ஒருவர் ஒருமுறை சென்ற பாதைகூட பழையதே’ என்றுதான் சொல்லி வருகிறது.  ‘மனிதனைப்பற்றி இலக்கியம்பற்றி ஒன்றுமே அறுதியாகச் சொல்லிவிடமுடியாது என்ற வரிக்குக் கீழே மட்டும்தான் இலக்கியம் கையெழுத்திடும்’ இது சுந்தரராமசாமி சொன்னது.  அழகியல் விமர்சனம் ஒருபோதும் இலக்கியத்திற்கு இலக்கணங்களை உருவாக்குவதில்லை. அப்படி ஒரு வரி எழுதிய ஒரு அழகியல் விமர்சகனைச் சுட்டிக்காட்டுங்கள். மாறாக இலக்கணங்களுக்கு எதிராகவே அது பேசிவந்திருக்கிறது. எல்லா இலக்கணங்களையும் மறுத்திருக்கிறது. எது மீறல் என்பதே அதன் பார்வை.

இலக்கணம் வகுப்பவர்கள் யார்? கல்வித்துறையாளர்கள். முற்போக்கினர். அறுபதுகளில் முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று கைலாசபதி இலக்கணம் வகுத்தார். அதை உடனே சி.சின்னப்ப்பாரதி போன்ற மெய்யான முற்போக்கு எழுத்தாளர்கள் மீறிச் சென்றனர். அவர்களை அழகியல் விமர்சகர்கள் அடையாளம் காட்டி கொண்டாடினர். தொண்ணூறுகளில் தலித் இலக்கியத்திற்கு நிறப்பிரிகை குழு இலக்கணம் வகுத்தது. அதை உடனே இமையம் சோ.தருமன் போன்றவர்கள் மீறிச்சென்றனர். அவர்களை அடையாளம் கண்டது அழகியல் விமர்சனம். மீறிச்சென்ற தலித் படைப்பாளிகளை இலக்கணம் வகுத்தவர்கள் எப்படியெல்லாம் வசைபாடினர் என நாம் அறிவோம்.

ஏன் ஷோபா சக்திக்கே அதுதான் நிகழ்ந்தது. கொரில்லா வெளிவந்தபோது அரசியல் நிலைபாட்டை மட்டுமே கொண்டு இலக்கியத்தை அளக்கும் அசட்டு விமர்சகன் அதை எப்படி எதிர்கொண்டான் என வரலாறு இருக்கிறது. இலக்கணங்களைப் பேசிக்கொண்டிருந்தவன் அவனே என ஷோபாவே அறிவார். அன்றைய நாவலின் அனைத்து இலக்கணங்க்களையும் கடந்துசென்ற அந்நாவலை ஏற்க, கொண்டாட அழகியல் விமர்சகர்களே வரநேர்ந்தது

அழகியல் விமர்சனம்  ‘இப்படி எழுது’ என ஒருபோதும் சொல்வதில்லை. ‘இது மட்டுமே எழுத்து’ என்றும் சொல்வதில்லை. இயல்புவாத எழுத்தாளராகிய பூமணியும் அதற்குக் கலைஞர்தான். உணர்வுப்பெருக்கை எழுதும் வண்ணதாசனும் கலைஞர்தான். மிகுபுனைவும் இலக்கியம்தான், யதார்த்தவாதமும் இலக்கியம்தான். அரசியலெழுத்தாளரான ஷோபா சக்தியும் நல்ல படைப்பாளிதான். அரசியலே அற்ற யுவன் சந்திரசேகரும் நல்ல படைப்பாளிதான்.

அதன் அளவுகோல்கள் அந்த ஆசிரியன் அப்படைப்பில் மெய்யாக வெளிப்படுகிறானா என்பதையே முதன்மையாக கணக்கிடுகின்றன. அவனுடைய ஆழுள்ளம் வெளிப்படுகிறதா? அது மொழியின் அடுக்குகளை தன் கருவியாகக் கொள்கிறதா? மானுட உள்ளமும் பண்பாட்டின் சொல்லப்படாத தளங்களும் வெளிப்படுகின்றனவா? அப்படைப்பு சொல்வதை விட வாசகனுக்கு உணர்த்திச் செல்வது மிகுதியாக இருக்கிறதா?  அது ஒற்றைப்படை நோக்கை முன்வைக்காமல் அனைத்தையும் உள்ளடக்கிய நோக்கை நோக்கிச் செல்கிறதா? ஒரு பகுதியின் உண்மையைச் சொல்லாமல் முழுமையை நாடுகிறதா?

இந்த வாசிப்பும் அளவீடும் அகவயமானது. ஆனால் வாசகன் அகவயமாகவே வாசிக்கிறான். அழகியல் விமர்சனம் தன்னை ஓர் இலட்சியவாசகனாக நிலைநிறுத்திக்கொள்பவனுக்குரியது. அவனுடைய தெரிவுகளே அவ்விமர்சனமாக ஆகின்றன. ஆம் தெரிவுகளேதான். அந்த தெரிவுகளை அதேபோல வாசிக்கும் இன்னொரு வாசகன் அடையாளம் கண்டுகொள்ளும்போதுதான் அழகியல் விமர்சனம் மதிப்பு கொள்கிறது. வாதிட்டு அது நிறுவுவதில்லை. அதன் பணி சுட்டிக்காட்டுவதும் பகிர்வதும் நயம்பாராட்டுவதும் மட்டுமே. ஆனால் அகவயக் கருத்துக்கள் திரண்டு ஒரு புறவயமான ஆற்றல் ஆக மாறுகின்றன. ஆகவேதான் அழகியல் விமர்சனமே விமர்சனங்களில் முதன்மையானதாக நிலைகொள்கிறது

தெரிவு எவருக்கு இல்லை? ஷோபா ஒரு தெரிவை முன்வைக்கிறார். அது அவருடைய அரசியல், ரசனை, அறிவுத்திறன் சார்ந்தது. அதை கொண்டு அவரையே அவரால் நிறைவுசெய்ய முடியாது.  வாசிப்பு அந்தரங்க உளச்செயல்பாடு என்றவரைக்கும் ஷோபா வந்திருப்பதில் மகிழ்ச்சி. வாசிப்பு என்பது ஒரு கூட்டு அரசியல் செயல்பாடு மட்டுமே என்று சொல்லும் விமர்சகர்கள் சூழ்ந்த ஈழப்பின்னணியில் இருந்து ஒருவர் இந்த மட்டுக்கும் பேசுவதற்கே தற்கொலைக்குரிய உளநிலை தேவை.

அழகியல் விமர்சனம் இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்று ஒருபோதும் சொல்வதில்லை. எப்படியும் வாசிக்கலாம், எல்லாமே அந்தரங்கக் கருத்துக்கள்தான் என்கிறது. அந்தரங்கக் கருத்துக்களை முன்வைக்கிறது. இணைமனங்களை கண்டடைகிறது, அவர்களை நிறைவுசெய்கிறது. விவாதிக்கிறது. வளர்த்துக்கொள்கிறது. மெல்ல அது ஒரு பொதுப்புரிதலாக, பொதுவான கருத்தாக நிலைகொள்கிறது. அவ்வளவே வேறுபாடு.

எங்கும், எல்லா பண்பாட்டுச்சூழலிலும் இப்படித்தான் இது நிகழும். இந்தச் செயல்பாடு நிகழாமல் பண்பாடும் கலையும் இயங்கவே முடியாது. எவர் பிக்காஸோவை பெருங்கலைஞனாக ஆக்கினார்கள்? எவர் பிலிப் ராத் முதன்மைப்படைப்பாளி என நிறுவினார்கள்? எவரும் அல்ல. அந்தரங்கமான வாசிப்புகள் அழகியல்விமர்சனமாக  இணைந்து நிகழும் கூட்டுச்செயல்பாடுதான் அதை நிறுவியது.

அந்த மதிப்பீடு நிகழாவிட்டால், எல்லாரும் எல்லாவற்றையும் வாசிப்பார்கள், எல்லாம் எல்லாவற்றுக்கும் சமம் என்ற நிலை உண்மையாகவே இருக்கும் என்றால் அன்புள்ள ஷோபா நீங்கள் எழுதவே மாட்டீர்கள். உங்களுக்கே தெரியும் உங்களுக்கும் குணா கவியழகனுக்குமான வேறுபாடு. அந்த வேறுபாட்டை நிறுவுவது அழகியல்.அந்தவேறுபாட்டில்தான் உங்கள் ஆளுமையே உள்ளது. ஓயாது உங்கள் எழுத்துக்கள் வழியாக நீங்கள் முன்வைப்பது அதைத்தான்.

ஓர் அரசியலுக்காக நீங்கள் அழகியலுக்கு எதிராக வாதிடலாம். அழகியலை நம்பியே ஆளுமை என நிலைகொள்பவர் நீங்கள்.  அழகியலை அஞ்சும் சோட்டா எழுத்தாளன் அது நிகழலாகாது என தன் சின்ன அறையிலிருந்து ஆசைப்படலாம்.  கடிகாரத்தை நிறுத்திவைத்தால் காலம் நின்றுவிடாது.

ஜெ

முந்தைய கட்டுரைமீள்தல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-1