திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்
திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…
திராவிட இயக்கம்- ராஜ் கௌதமன்
திராவிட இயக்க இலக்கியம்- கடிதங்கள் விளக்கங்கள்
அன்புள்ள ஜெ
திராவிட இயக்கம் பற்றிய விவாதங்களை வாசித்தேன். நண்பர்களுடன் விவாதித்தபோது அவர்கள் அண்ணாத்துரை புறக்கணிக்கப்பட்டார் என்றார்கள். இல்லை, அவரைப்பற்றி வேண்டுமளவு பேசியிருக்கிறார்கள் என ஆதாரத்துடன் சொன்னேன். இப்போதுகூட அறிஞர் அண்ணா என்று சொல்லமாட்டேன் என்கிறார்களே என்று ஒருவர் ஆவேசமாகக் கேட்டார். என்னால் பதில்சொல்லவே முடியவில்லை.
இவர்கள் திரும்பத்திரும்பச் சொல்லும் பொய்கள் மூன்று.
1 திராவிட இயக்கம் அறிவியக்கத்தால் புறக்கணிக்கப்பட்டது
- திராவிட இயக்க எழுத்தாளர்கள் அடித்தள வாழ்க்கையை எழுதியவர்கள்.
- சிற்றிதழ் சார்ந்த நவீன எழுத்தில் அரசியல் இல்லை.
இம்மூன்றுமே இலக்கியவாசிப்பே இல்லாதவர்கள் சொல்வது. திராவிட இயக்கம் உருவாக்கிய பரப்பரசியலின் எதிர்விசையாகவே நவீன இலக்கியம் நிலைகொண்டது. கடுமையான விமர்சன்ங்களை முன்வைத்தது. அதேசமயம் திராவிட இயக்கத்தின் முக்கியமான அத்தனை படைப்பாளிகளையும் அங்கீகரித்த்து.
உதாரணமாக க.நா.சு ஒருபோதும் பாரதிதாசனின் பெயரை விட்டுவிட்டு இலக்கியப்பட்டியல் போட்டவர் அல்ல. அவருடைய வாசித்திருக்கிறீர்களா என்ற நவீன இலக்கியப் பட்டியலில் பாரதிதாசன் உண்டு. [சொறிபிடித்த பார்ப்பான், நீசப்பார்ப்பான் என்றெல்லாம் எழுதியவர் பாரதிதாசன் என்பதை நினைவில்கொள்ளவேண்டும்] சாலை இளந்திரையன் உட்பட பல திராவிட இயக்க எழுத்தாளர்கள் நவீன இலக்கிய முன்னோடிகளால் பேசப்பட்டார்கள்.
ஆனால் பலர் விமர்சனரீதியாக புறக்கணிக்கவும் பட்டார்கள். அதற்கு அவர்களின் அரசியலோ சாதியோ காரணம் அல்ல. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளையோ கவிமணி தேசிகவினாயகம்பிள்ளையோ நவீன இலக்கியவாதிகளால் பொருட்படுத்தப்படவே இல்லை. அவர்கள் அப்போது புகழின் உச்சியில் இருந்தார்கள். அவர்களின் அரசியலைத்தான் நவீன இலக்கியவாதிகளில் பலர் ஏற்றுக்கொண்டர்கள்.
கல்கியையும் ராஜாஜியையும் நவீன இலக்கியமுன்னொடிகள் கடுமையாக நிராகரித்தார்கள். ஆனால் அவர்கள்தான் அன்றைக்கு பிராமண அறிவியக்கத்தின் முகங்களாக அறியப்பட்டிருந்தனர். நவீன இலக்கியத்தின் இந்த விமர்சன அணுகுமுறையை நம் சோட்டா ஊடகவாதிகளும் அரசியல் எழுத்தாளர்களும் புரிந்துகொள்ளவே முடியாது.
திராவிட இயக்க எழுத்தாளர்களில் அடித்தள மக்களின் வாழ்க்கையை மட்டும் எழுதிய எவருமே இல்லை. அவர்கள் எழுதிய அடித்தள வாழ்க்கைகூட நவீன எழுத்துக்களை வாசித்து அதன்படி எழுதிய நகல் எழுத்துக்கள் மட்டுமே. அடித்தள வாழ்க்கையை எழுதிய முன்னோடிகள் முழுக்க நவீன இலக்கியவாதிகளும் முற்போக்கு எழுத்தாளர்களும்தான்.
திராவிட இயக்க எழுத்தாளர்கள் பெரும்பாலும் பெரிய கல்விநிலையப் பதவியில் அரசியலதிகாரத்துடன் வாழ்ந்தவர்கள். நவீன இலக்கியவாதிகள்தான் எந்த ஆதரவும் இல்லாமல் நடுத்தெருவில் நின்றார்கள்.
திராவிட இயக்க எழுத்தாளர்கள் பெரும்பாலும் பாலியலையும் பழைய பொற்காலக் கனவுகளையும்தான் எழுதினார்கள். உண்மையான அரசியலை எழுதியவர்களே நவீன இலக்கிய இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள்தான்.
இவர்களிடமிருக்கும் ஊடகபலத்தால் சொல்லிச்சொல்லி பொய்யை நிறுவிவிடுவார்கள். ஆகவே சிறிய சூழலில் ஆனாலும் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது
சாரங்கன்
அன்புள்ள ஜெ
திராவிட இயக்க எழுத்தாளர்களை சிற்றிதழ்ச்சூழல் புறக்கணித்தது என்பவர்களிடம் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலைசீனிவாசன் உள்ளிட்ட தலித் தலைவர்களை திராவிட இயக்கம் ஏன் புறக்கணித்தது என்பது மட்டும்தான். நவீன இலக்கியம் என்பது அழகியல் இயக்கம். திராவிட இயக்கமோ அரசியல் பேசியது. அந்த அரசியலின் தொடக்கமே அயோத்திதாசர்தான். ஏன் அவர் பெயரை பேசவில்லை? ஒரு நிறுவனத்துக்காவது அவர் பெயரை போடவில்லை? ஏன் அவருடைய நூல்கள் அச்சாவதே தலித் இயக்கம் இங்கே உருவானபிறகு நிகழ்ந்தது? அய்யகோ அண்ணாவை ஏன் புறக்கணித்தீர் என கூவுபவர்கள் ஏன் அயோத்திதாசர் புறக்கணிக்கப்பட்டமைக்காக, இருட்டடிக்கப்பட்டமைக்காக வருத்தமே படவில்லை?
ஆ.கணேசன்