திராவிட இயக்கம்- கடிதங்கள்

 

திராவிட இயக்க இலக்கியம் – சாதனைகளும் மிகைகளும்

திராவிட இயக்க இலக்கியம்- முடிவாக…

அன்புள்ள ஜெ

திராவிட இயக்கம் பற்றிய கட்டுரைகள், குறிப்புகளில் எனக்கு மிக முக்கியமானதாகப் பட்டது நீங்கள் இடதுசாரி அறிவியக்கம் பற்றிச் சொன்னதுதான். இன்று ஊடகங்களில் பேச உண்மையான இடதுசாரியே இல்லை. அருணன் போல மாறுவேடமிட்ட திராவிட இயக்கத்தவர்களே உள்ளனர். அவர்களின் மொழி மட்டுமல்ல உடல்பாவனைகளே கூட வெற்றிகொண்டான் பாணியிலானவை.

இடதுசாரி அறிவுஜீவிகள் சென்ற இருபதாண்டுகளுக்கு முன்புவரை அவர்கள் கலாச்சார அரசியல், பொற்காலக் கனவுகளின் மோசடி ஆகியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த எல்லாவற்றையும் கூசாமல் கைவிட்டுவிட்டார்கள். முரணியக்க அணுகுமுறையே தேவையில்லை, அதெல்லாம் கவைக்குதவாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அத்தனைபேரும் இன்றைய அதிகார அரசியலில் எது விலைபோகும், இன்றைய ஊடகங்களில் எது கவனிக்கப்படும் என்பதை கணித்துப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இன்றைய சூழலின் மிகப்பெரிய கலாச்சார இழப்பு இதுதான்.

டி.ராம்குமார்

***

அன்புள்ள ஜெ

திராவிட இயக்க தலைவர்களை சிற்றிதழியக்கம் புறக்கணித்தது என்று கூச்சலிடுகிறார்கள். புறக்கணிக்கவில்லை, ஆழமான விமர்சனங்களை முன்வைத்து விவாதித்திருக்கிறது என திரும்பத்திரும்பச் சொல்லியும் அவர்களால் அதை ஏற்க முடியவில்லை.அவர்கள் சொல்வது நாங்கள் போற்றிபாடுவதுபோல நீங்கள் ஏன் ஜாலராக்களுடன் வரவில்லை என்பதை மட்டும்தான்.

நவினத்தமிழிலக்கியம் ‘அரசியல் அற்றது’ என்கிறார்கள். நீங்களே ஆதாரத்துடன் எழுதிவிட்டீர்கள். நவீனத்தமிழிலக்கியத்தில் மிகப்பெரும்பாலான படைப்புக்கள் அழுத்தமான அரசியலை முன்வைத்தவை. ஆனால் அன்றாடக் கட்சியரசியலை அல்ல. அதற்கும் அப்பால் உள்ள மக்களின் அரசியலை, கொள்கையரசியலை அவை பேசின. நவீனத்தமிழிலக்கியத்திற்குள் மட்டும்தான் உண்மையில் அரசியலே பேசப்பட்டிருக்கிறது

இவர்களுக்கு அதெல்லாம் புரியாது. இவர்கள் பேசும் நாளிதழ்ச் செய்திகளை அரசியல் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கிய வாசிப்பே இல்லாதவர்களிடம் இலக்கிய விவாதம் நிகழ்த்துவது கொடுமை

ஆர். ராஜாராம்

***


அன்புள்ள ஜெ

உங்கள் விவாதங்களைப் பார்த்துவருகிறேன். அதை எங்கும் முடிக்க முடியாது. ஒருவர் உண்மையிலேயே திராவிட இயக்கம் மாபெரும் அறிவியக்கம் என்றும் கருணாநிதி தெற்குச்சூரியன் என்றும் நம்புகிறார் என்றால் அதன்பின் பேச்சே இல்லை. அது ஒரு மதநம்பிக்கை. நம்பிக்கைகளுடன் விவாதிக்கமுடியாது என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள்.

இன்றைக்கு இவர்கள் சொல்லும் திராவிடக் கருத்தியல் நசித்துவிட்டது. எஞ்சியிருப்பது வெறும் குடும்ப அரசியல். கட்சிகட்டும் அரசியல். அது அனைவருக்கும் தெரியும். ஆகவே ஒரு கடந்தகாலப்பெருமையை சமைக்க முயல்கிறார்கள். முழுக்கமுழுக்க அரசியல் நோக்கம் கொண்டது இது. அந்த அரசியலுடன் இலக்கியம் விவாதிக்கவே முடியாது.

நீங்கள் இலக்கியத்தின் அழகியலை, குறைநிறை காணும் மதிப்பீட்டுமுறையை தொடர்ச்சியாக முன்வைக்க நினைக்கிறீர்கள். அவ்வாறு ஒன்று இங்கே ஒரு சிறிய வட்டத்தில் செயல்படுகிறது என்று வாசகர்களிக்குத் தெரிந்தாலே போது. நேற்றும் திராவிட இயக்கத்தினர் இந்த சிறிய அறிவியக்கத்தை பலவாறாக வசைபாடினார்கள்.  இழிவுசெய்தார்கள். க.நா.சுவே எப்படியெல்லாம் திராவிட இயக்கத்தவரால் வசைபாடப்பட்டார் என்பது உங்களுக்குத்தெரியாது

உதாரணமாக ராஜரங்கன் என்பவர் எழுதி கணையாழியில் வெளிவந்த வழுக்குமரம் என்னும் சிறுகதையை வாசியுங்கள். [கஸ்தூரிரங்கன் தொகுத்து நர்மதா பதிப்பகம் வெளியிட்ட கணையாழிக் கதைகள் என்னும் தொகுப்பில் அந்தக்கதை உள்ளது] அன்று சிறுபத்திரிகை சார்ந்த எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் பொதுவெளியில் அவமரியாதை செய்யப்பட்டார்கள் என்பதைக் காட்டும் கதை அது. அதைக் கடந்துதான் இங்கே வந்துள்ளது. இன்றைக்கும் சிறுமைசெய்கிறார்கள். இந்தச்சிறுமை அரசியலதிகாரத்தின் தரப்பில் இருந்து வருவது. அதை அறிவியக்கம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்

இந்த அறிவியக்கம் நீங்கள் சொல்வதுபோல ஒரு நூறுபேரால்தான் நீடிக்கும். இங்கே பணம் இல்லை. புகழ் இல்லை. அதிகாரம் இல்லை. சமஸ் மாதம் சில லட்சங்கள் பெற்றுக்கொண்டு எழுதுகிறார். உங்களுக்கு ஆண்டுக்கே அந்த அளவுக்கு ராயல்டி வராது. சமஸ் அல்லது ராஜன் குறை போன்றவர்கள் பெரிய பதவிகளில்  இருக்கிறார்கள். இன்னும் பெரிய பதவிகளுக்குச் செல்வார்கள்.  அவர்கள் நினைப்பதை எல்லாம் அடைவார்கள். உங்களுக்கு அந்த நூறு வாசகர்கள் மட்டும்தான் மிஞ்சுவார்கள். ஆனால் அவர்கள் வாழையடி வாழையாக வந்துகொண்டேதான் இருப்பார்கள்.

நீங்களே பார்க்கலாம். நீங்கள் பட்டியலிட்ட அத்தனை திராவிட இயக்க எழுத்தாளர்களும் பெரிய பதவிகளில் இருந்தார்கள். பணமும் செல்வாக்குமாக வாழ்ந்தார்கள். அவர்கள் செல்வத்திலும் புகழிலும் அதிகாரத்திலும் திளைத்த அந்தக்காலகட்டத்தில்தான் சி.சு.செல்லப்பா கையில் புத்தகப் பையுடன் தெருத்தெருவாக அலைந்து புத்தகம் விற்றார். குடும்பச்சொத்தை விற்று சிற்றிதழ் நடத்தினார்.  க.நா.சு சொத்தையெல்லாம் இலக்கியத்திற்காகச் செலவிட்டு நடுத்தெருவில் நின்றார்.ஜி.நாகராஜன் பிச்சையெடுத்து அலைந்தார். பிரமிள் நன்கொடைகளில் வாழ்ந்தார்.

இன்றைக்கு அந்த திராவிட இயக்கப் பெரியமனிதர்கள் எழுதியதை அவர்களே படிப்பதில்லை. அவர்களைப்பற்றி நீங்களே எழுதினால்தான் உண்டு. ஆனால் அவர்கள் சி.சு.செல்லப்பாவும் க.நா.சுவும் சாதிவெறியர்கள், ஆகவே அந்த திராவிட இயக்கப் பெரியமனிதர்களை புறக்கணித்தார்கள் என ‘வரலாறு’ உருவாக்குகிறார்கள். அந்தத் திராவிட இயக்கப் பெரியமனிதர்கள் கலகக்காரர்கள், அடித்தள எழுச்சியால் வந்தவர்கள் என கதைவிடுகிறார்கள். இதையும் நாம் காண்கிறோம். இதையும் கடந்தே செல்வோம்.

சுவாமி

***

 

அன்புள்ள ஜெ

உங்கள் குரலில் உள்ள ஆதங்கம் மனதை என்னவோ செய்கிறது. முக்கால்நூற்றாண்டாக முன்னோடிகள் வாழ்க்கையை தியாகம் செய்து உருவாக்கிய அறிவியக்கம் இது. இதை வெறும்சாதிக்காழ்ப்புக் குழு என ஓர் அறிவிலி அவதூறு செய்கிறார். அதற்கு இலக்கியமுன்னோடியின் நாக்கையே பயன்படுத்துகிறார். இங்கே இன்னமும்கூட சிறுபத்திரிகைச் சார்ந்தும் நவீன இலக்கியம்சார்ந்தும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் பலர். வாழ்க்கையை அதற்காகச் செலவழிக்கிறார்கள். ஒரு பயனும் பெறாமல், ஒரு அமைப்பாலும் அங்கீகரிக்கப்படாமல் எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள்கூட இந்த இயக்கத்திற்காகப் பேசவில்லை. அமைதிகாக்கிறார்கள். முன்னோடிகளுக்காக எழுந்த உங்கள் குரல் ஆத்மார்த்தமானது

ஜெ, இன்றைக்கு இப்படி முன்னோடிகளிலிருந்து நீங்கள் வரை அத்தனை நவீன எழுத்தாளர்களும் இந்தக்கும்பலால் வசைபாடப்பட்டு எள்ளி நகையாடப்பட்டு அவமானம் செய்யப்பட்டு நின்றிருக்கலாம்.அவர்களிடம் அரசாங்கம் இருக்கிறது. ஊடகம் இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால் இலக்கியம் என்பது ஒரு தவம். தவத்திற்கு செல்வத்தையும் அதிகாரத்தையும்விட கவர்ச்சி உண்டு. இதற்கும் சிலர் வந்துகொண்டுதான் இருப்பார்கள்.  எந்தப்பின்புலமும் இல்லாமல் நின்றிருக்கும் உங்களைந்நோக்கி இளைஞர்கள் வந்துசூழ்வதை கண்கூடாகக் காண்கிறோம். அவர்கள் ஒரு பெரிய கூட்டமாக ஆக மாட்டார்கள்.ஆனால் வந்துகொண்டேதான் இருப்பார்கள்

வணக்கம் ஜெ

ஆர்.செந்தில்குமார்

***

மாறுதலின் இக்காலகட்டத்தில்…

வ.வே.சு.அய்யரும் சாதிவெறியும்

 

 

முந்தைய கட்டுரைஅறிபுனை- விமர்சனப்போட்டி
அடுத்த கட்டுரைமாறுதலின் இக்காலகட்டத்தில்…